Wednesday 30 June 2010

காமம் - 6

கண்ணம்மா பற்றி எழுதும்போது இப்படித்தான் எழுதுகிறார் பாரதியார். இந்த பாடல்களில் இருக்கும் காதல் ஒரு சஞ்சலமாகவே பாரதிக்குத் தோணவில்லை. அது ஒரு மாபெரும் இன்பமாகவே அவருக்கு இருந்து இருக்கிறது.

1 காற்று வெளியிடைக் கண்ணம்மா - நின்றன்
காதலை யெண்ணிக் களிக்கின்றேன்; - அமு
தூற்றினை யொத்த இதழ்களும் - நில
வூறித் ததும்பும் விழிகளும் - பத்து
மாற்றுப்பொன் னொத்தநின் மேனியும் - இந்த
வையத்தில் யானுள்ள மட்டிலும் - எனை
வேற்று நினைவின்றித் தேற்றியே -இங்கொர்
விண்ணவ னாகப் புரியுமே.

2 . நின்னையே ரதியென்று
நினைக்கிறேனடி - கண்ணம்மா
தன்னையே சசியென்று
சரண மெய்தினேன்

காதல்தனை மையமாக வைத்து வேண்டும்போது மிகவும் அழகாகவே பாடுகிறார்.

பாட்டுக் கலந்திடவே - அங்கே யொரு
பத்தினிப் பெண்வேணும் - எங்கள்
கூட்டுக் களியினிலே - கவிதைகள்
கொண்டு தரவேணும்.

இந்த காதல் ஆசை மோகம் எனும் கட்டுக்குள் விழுந்துவிடும் போது பாரதியார் தள்ளாடுகிறார். ஒரு விரக்தியின் நிலையில் இருந்தே மகாசக்திக்கு விண்ணப்பம் வைக்கிறார்.

மோகத்தைக் கொன்றுவிடு - அல்லாலென்றன்
மூச்சை நிறுத்திவிடு.

இந்த பாடலை கேட்கும்போது மோகம் அத்தனை கொடியதா? என்றே கேள்வி எழுந்துவிடுகிறது. மனைவியின் விருப்பத்திற்கோ, கணவனின் விருப்பத்திற்கோ எதிராக இருவருக்குள் ஏற்படும் கலவி கள்ளத்தனம் என்கிறது சட்டம். மனைவியானவர், கணவன் தன்னை மோசம் செய்துவிட்டார் என வழக்கு போடலாம் என்கிறது அந்த சட்டம். இதோ இப்படிப்பட்ட மோகம் மிகவும் கொடியதுதான். அவரவர் சுய விருப்பத்திற்காக காதல் இங்கே பலி கொடுக்கப்படுவதுதான் உண்மை.

ஒரு பாடலை (பாடல் கீழே தரப்பட்டு உள்ளது) எழுதிய காரணத்திற்காக மட்டுமல்ல, துறவி வேடம் கொண்ட துரோகத்தனத்திற்காக பட்டினத்தார் மேல் எனக்கு கோபம் இருந்தது  உண்டு. புத்தரை  துறவி என கருதுவதில்லை, ஒரு துரோகியாகத்தான் அவர் எனது கண்ணுக்கு தென்பட்டது உண்டு.

பட்டினத்தார் ஒரு தாம்பத்ய உறவை எத்தனை கீழ்த்தரமாக எழுதிவிட்டார் என்றுதான் தோன்றியது. தான் வாழும் வாழ்க்கை முறையை உயர்த்திப் பேசி அடுத்தவர் வாழும் முறையை தாழ்த்திப் பேசும் சராசரி மனிதரை போல்தான் அந்த பாடல் தோன்றியது. இதில் காதல் எங்கே இருக்கிறது. வெறும் காமம் என்றுதான் பார்த்து இருக்கிறார் பட்டினத்தார். அதன் காரணமாக பரிதாபம் மட்டுமே அவர் மீது மிஞ்சுகிறது.

நாப்பிளக்கப் பொய் உரைத்துனவநிதியம் தேடி
நலன் ஒன்றும் அறியாத நாரியரை கூடிப்
பூப்பிளக்க வருகின்ற புற்றீசல் போலப்
புலபுலெனக் கலகலெனப் புதல்வர்களை பெறுவீர்
காப்பதற்கும் வகையறியீர் கைவிடவும் மாட்டீர்
கவர்பிளந்த மரத்துளையில் கால் நுழைத்துக் கொண்டே
ஆப்பதனை அசைத்துவிட்ட குரங்கதனை போல
அகப்பட்டீர் கிடந்துழல அகப்பட்டீரே.

இதோ பத்திரகிரியார். என்ன விளையாடுகிறாரா? கவிதையின் வரிகளுக்கு வேண்டுமெனில் மிகவும் அட்டகாசமாக இருக்கிறது.

ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனை சுட்டறுத்து
தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எக்காலம்?

வெட்டுண்ட புண்போல் விரிந்த அல்குல் பைதனிலே
தட்டுண்டு நிற்கை தவிர்வதுவும் எக்காலம்?

கஞ்சா அபினியுடன் கள்ளுண்டு வாடாமல்
பஞ்சா மிர்தம் பருகுவதும் எக்காலம்?

இந்த பாடல் எல்லாம் வந்தவிதத்திற்கான காரணம் காதல் தொலைந்து போனதுதான். காமம்தனை முன்னிறுத்தி வாழ்ந்த மன்னர் கால வழக்கம் இவருக்கு பெரும் எரிச்சலை தந்து இருக்கலாம். ஆக, காமம் அத்தனை கொடியதா?

சூர்ப்பனகை கொண்ட காம வேட்கையை கம்பர் இப்படித்தான் விவரிக்கிறார்.

நீத்தமும் வானமும் குறுக, நெஞ்சிடைக்
கோத்த அன்பு உணர்விடைக் குளிப்ப மீக்கொள
ஏத்தவும் பரிவின் ஒன்று ஈகலான் பொருள்
காத்தவன் புகழ் என தேயும் கற்பினாள்

வான்தனில் வரைந்தது ஓர் மாதர் ஓவியம்
போன்றனள் புலர்ந்தனள் புழுங்கும் நெஞ்சினள்
தோன்றல்தன் சுடர் மணித் தோளில் நாட்டங்கள்
ஊன்றினள் பறிக்க ஓர் ஊற்றம் பெற்றிலள்

நின்றனள் இருந்தவன் நெடிய மார்பகம்
ஒன்றுவென் அன்றுஎனின் அமுதம் உண்ணினும்
பொன்றுவேன் போக்கு அரிது போன்ம் எனா
சென்று எதிர் நிற்பது ஓர் செய்கை தேடுவாள்

எவர் மீதும் எப்படி வேண்டுமானாலும் ஆசை வந்து தொலையும். ஆனால் காதல் ஒரு முறையோடு வந்துதான் நிற்கும். காதல் வேறு, ஆசை வேறு. காதல் ஆசையாய் மாறாதவரை பாரதியின் மோகத்தை கொன்றுவிடு வரி அவசியமில்லை. ஆசை காதலாக மாறும்போது அங்கே நின்னை சரணடைந்தேன் என்றுதான் பாடத் தோன்றும்.

எனக்கு நின்னை சரணடைந்தேன் எனும் பாடல் மிகவும் அதிகமாகவே பிடித்து இருக்கிறது.

ஒரு கட்சி ஆரம்பிக்கலாம்னு - 7



7.

ரகுராமன் தனக்கு எவரும் ஆதரவு தரவில்லை என்பதை நினைத்து மிகவும் வேதனைப்பட்டான். இதை சந்தானலட்சுமியிடமும் சொன்னான். அதற்கு அவளும் 'நீ பட்டுதான் தெரிஞ்சுக்கவேனு இருந்தா என்ன செய்ய முடியும்' என ஒரே வாக்கியத்தில் முடித்தாள்.

எத்தனை திரைப்படங்கள் சமூக அக்கறை பற்றி வந்திருக்கிறது. எத்தனை கதைகள் சமூக அக்கறை பற்றி எழதப்பட்டு இருக்கிறது. எத்தனை சமூக அமைப்புகள் இயங்கி வருகின்றன. எத்தனை சமூக நலத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. இருப்பினும் சமூகத்தில் சில விசயங்கள் அப்படி அப்படியேதான் இருக்கின்றன.

ரகுராமனின் யோசித்துக் கொண்டிருக்கும்போதே சண்முகப்பிரியா அவனை நோக்கி வந்தாள். சண்முகப்பிரியா சமூக அக்கறையில் அதிகம் நாட்டம் கொண்டவள். ஆனால் தனது சமூக அக்கறையை பிறரிடம் சொல்லிக் கொண்டதில்லை. தலைமுடியை பின்னலிட்டு கொள்வதில் அவளுக்கு அலாதிப் பிரியம். சுடிதார் அணிவதை விட அதிகம் தாவணி அணிவதில்தான் அவளுக்கு ஈடுபாடு. தமிழ் நிறம் என்றோ வட இந்திய நிறம் என்றோ சொல்லிவிடமுடியாதபடிதான் இருந்தாள்.
 

''ரகு, உன்கிட்ட பேசனும்'' என்றாள் சண்முகப்பிரியா.
 

''சொல்லு பிரியா, என்ன விசயம்'' என்றான் ரகுராமன்.

''நீ கட்சி ஆரம்பிக்கப் போற விசயம் பத்தி நானும் கேள்விபட்டேன், ஏன் பெண்கள் இதில் ஈடுபாடோட இருக்கமாட்டாங்கனு நினைச்சிதான் எங்க யாருகிட்டயும் நீ கேட்கலையா'' என்றாள்.

''லட்சுமிகிட்ட பேசினேன்'' என்றான் ரகுராமன்.

''நான் உன் கட்சியில சேர்ந்துக்கிறேன், ஆனா ஒண்ணு இப்போ இருக்கிற எந்த கட்சியைப் பத்தியோ, அவங்களோட கொள்கையைப் பத்தியோ நீ எப்பவும் தாக்கிப் பேசக்கூடாது. நம்ம கட்சியோட கொள்கை, நாம மக்களுக்கு எப்படியெல்லாம் நல்லது செய்வோம் அப்படிங்கிற எண்ணம்தான் நமக்கு இருக்கனும்'' என்றாள்.

''பிரியா, நிசமாத்தான் சொல்றியா, உங்க வீட்டுல ஏத்துப்பாங்களா, நாளைக்கே நீ கல்யாணம் பண்ணிப் போனப்பறம் புகுந்த வீட்டுல சரினு சொல்வாங்களா, நல்லா யோசிச்சிக்கோ பிரியா'' என்றான் ரகுராமன்.

''ரகு, நீ அதைப்பத்தியெல்லாம் அநாவசியமா கவலைப்படாதே, நீ என்னை உன் கட்சியில சேர்த்துக்கோ, அவ்வளவுதான்'' என்றாள்.

''கட்சியோட பேரு பிடிச்சிருக்கா'' என்றான் ரகுராமன்.

''மக்கள் ஒற்றுமை இயக்கம், நல்லாத்தான் இருக்கு, கட்சியை எப்பத் தொடங்கலாம்'' என்றாள்.

''சீக்கிரமா, ரொம்ப தேங்க்ஸ் பிரியா'' என ரகுராமன் சொன்னபோது அவனுக்குள் நம்பிக்கை பிரகாசமிட்டது.
 

இந்த விசயத்தை சந்தானலட்சுமியிடம் பகிர்ந்து கொண்டான் ரகுராமன். 'என்னை கழட்டிவிட்டுடமாட்டியே' என்றாள் சந்தானலட்சுமி. ரகுராமன் சிரித்துக்கொண்டே 'நான் செய்றதைப் பாத்துட்டு நீ என்னை கழட்டிவிடாம இருந்தா சரி' என்றான். 'அப்படி நடந்துக்கிரமாட்டேனு நினைக்கிறேன்' என சொல்லிவிட்டு கிளம்பிப் போனாள்.
 

அன்று இரவே கட்சியின் கொள்கைகள் என எழுத ஆரம்பித்தான் ரகுராமன். முதல் கொள்கை என சண்முகப்பிரியா சொன்னதையே எழுதினான்.
 

1. சக மனிதர்களை மரியாதையுடனும், அவர்களது உணர்வுகளை புரிந்து கொள்ளும்விதமாக நடந்து கொள்வது கட்சியினரின் முதன்மை கடமை.
 

எழுதிய பின்னர் வாசித்துப் பார்த்தான். நன்றாக இருந்ததுபோல் இருந்தது. இதை சண்முகப்பிரியாவிடம் காட்டலாம் என எண்ணியவன் பாடப்புத்தகங்களை எடுத்து படிக்கலானான்.
 

கல்லூரி வாசலில் சற்று தள்ளி ஐம்பது பெண்களுடன் சண்முகப்பிரியா நின்று கொண்டிருந்தாள். அவர்களைச் சுற்றி அந்த ஊர்க்காரர்களும் நின்று கொண்டிருந்தார்கள். எவருக்கும் என்ன ஏதுவென புரியவில்லை. இவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டிருந்தார்களே தவிர யார் என்னவென சொல்லிக்கொள்ளவும் இல்லை.
 

கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், மாணவியர்களும் நின்று வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்துவிட்டனர். ரகுராமன் கல்லூரிக்கு வந்து சேர்ந்தான். வழியில் அவனை மறைத்த சண்முகப்பிரியா 'இதோ இவங்க எல்லாரும் நம்ம கட்சியில உறுப்பினரா சேர விருப்பம் தெரிவிச்சி இருக்காங்க' என்றாள். ரகுராமன் ஆச்சரியத்தில் மூழ்கிப்போனான்.
 

''பிரியா என்னதிது'' என ஆச்சரியம் விலகாமல் கேட்டு வைத்தான் ரகுராமன்.

''நம்ம கட்சி உறுப்பினர்கள், எனக்குத் தெரிஞ்ச சமூக நலனில் அக்கறை கொண்ட பெண்கள், இன்னும் இருக்காங்க'' என்றாள்.

அனைவருக்கும் வணக்கத்தைத் தெரிவித்துக் கொண்டான் ரகுராமன். இந்த வாரம் சனிக்கிழமை ஒரு சின்ன கூட்டம் போட்டு பேசலாம் என தனது எண்ணத்தைத் தெரிவித்தான் ரகுராமன். ஊரில் இருப்பவர்களில் சிலர் விபரம் கேள்விபட்டு தாங்களும் கலந்து கொள்வதாகச் சொன்னார்கள். ரகுராமன் மனதில் கட்சியின் செயல்பாட்டினை வரைய ஆரம்பித்தான்.

கல்லூரியில் பதினொரு மணியளவில் கல்லூரியின் முதல்வர் நாகராஜன் ரகுராமன், சண்முகப்பிரியா இருவரையும் தனது அறைக்கு வரச் சொல்லி உத்தரவு அனுப்பி இருந்தார். அப்போது பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர் முகம்மது இருவரையும் கல்லூரி முதல்வரை பாடம் முடிந்ததும் சென்று பார்க்கச் சொன்னார்.

மனித சக்தி என்பது அளப்பரிய சக்தி என்பது அனைவரும் அறிந்துதான் இருக்கிறார்கள். பாரதி மட்டும்தான் பாடி வைப்பாரா? நல்லதோரு வீணை செய்தே என! அனைவருமே எப்போது பாடப் போகிறார்கள் என்பது எப்போதோ?

(தொடரும்)

Tuesday 29 June 2010

அடியார்க்கெல்லாம் அடியார் - 19



பாடங்களில் அதிக கவனம் செலுத்திப் படிக்கலானான் கதிரேசன். அவ்வபோது தமிழ் பாடல்களையும் மனனம் செய்யத் தொடங்கினான். சிவனைத் தொழுவதை தவறாமல் செய்து வந்தான்.மதுசூதனன் கதிரேசனை சில தினங்கள் பின்னர் பார்த்தான். 

''உன்னைப் பத்தி நானும் வைஷ்ணவியும் நிறைய பேசுவோம், நீ வைணவத்துக்கு மாறிரு'' என்றான் மதுசூதனன். ''சமண சமயம் பத்திப் படிச்சியா?'' என்றான் கதிரேசன். ''என்கிட்ட கேட்காதே, அதான் வைஷ்ணவி அவகிட்ட கேளுனு சொன்னாலாமே'' என்றான் மதுசூதனன். ''நீ படிச்சிச் சொல்லு'' என்றான் கதிரேசன். ''நீ வைணவத்துக்கு மாறுவியா மாட்டியா?'' என்றான் மதுசூதனன் மீண்டும். ''உடலெல்லாம் நாமம் பூசிக்கிட்டா நான் வைணவம் ஆயிருவேனா?'' என்றான் கதிரேசன். ''அதுமட்டுமில்லை, நீ பெருமாளை மட்டுமே தொழனும், சிவன் கோவிலுக்குப் பக்கமே நீ போகக்கூடாது, இன்னும் ரொம்ப இருக்கு'' என்றான் மதுசூதனன். ''வைஷ்ணவி சிவனை கும்பிடுறாளே, அவ வைணவம் இல்லையா?'' என்றான் கதிரேசன். ''அவகிட்ட சொல்லி வைச்சிருக்கேன், இனிமே சிவன் கோவிலுக்குள்ள வரமாட்டா'' என்றான் மதுசூதனன். 

கதிரேசன் சிறிது நேரம் யோசித்தான். ''உனக்குத் தெரியுமா உன் ஊர் காட்பாடிக்கு பக்கத்தில ஒரு சமணர் கோவில் இருக்கு, நீ பார்த்திருக்கியா, நீ ஊருக்குப் போகறப்ப என்னை உன்னோட கூட்டிட்டுப் போறியா'' என்றான் கதிரேசன். ''நீ வைணவமா மாறு, என் வீட்டுக்கு கூட்டிட்டுப் போறேன்'' என சிரித்தான் மதுசூதனன். ''வைஷ்ணவியும் உன் ஊரு பக்கம்தானே, நீ கூட்டிட்டுப் போகாட்டா என்ன'' என்றான் கதிரேசன். 

''நீ தொண்டரடிப் பொடியாழ்வார் பத்தி எனக்குச் சொல்றியா'' என்றான் மேலும். ''ஆழ்வார் பத்தியெல்லாம் உனக்கு எதுக்கு, நீ லைப்ரரில போய்ப் படிச்சிக்கோ, நீ வைணவமா மாறு'' என மீண்டும் சிரித்தான் மதுசூதனன். 

''சிவன் என் சிந்தையுள் நின்றான், உருவ மாற்றம் கொள்ளும் உயிரினங்கள் போல, பருவ மாற்றம் கொள்ளும் காலநிலை போல, எண்ண மாற்றம் கொள்ள அவசியமில்லை, எல்லாம் சிவமயம்'' என்றே சொன்னான் கதிரேசன். ''மாற்றங்கள் இல்லைன்னா முன்னேற்றங்கள் இல்லை'' என சொல்லிய மதுசூதனன் ''நீ மாறுவ'' என்றான். 

மதுசூதனனிடம் கதிரேசன் அதற்குப் பின்னர்  அதிகமாக பேசிக் கொள்ளவில்லை, மதுசூதனன் மிகவும் மெளனமாகவே ஆகிப் போனான். வைஷ்ணவியும் சிவன் கோவிலுக்கு வரவே இல்லை. கல்லூரியில் பார்த்த நாளில் கூட மெளனமாகவே சிரித்துவிட்டுப் போனாள். கதிரேசன் தனது படிப்புண்டு, தனது சிவனுண்டு என்றே வாழத் தொடங்கினான். 

கல்லூரியில் அமைதியாகவே காலம் கழியத் தொடங்கியதுசில மாதங்களாக முகம், கை, உடல் என திருநீறு பூசி கல்லூரிக்குச் செல்ல ஆரம்பித்திருந்தான்.

கல்லூரியில் கதிரேசனை சாமியார் என்றே அழைக்கத் தொடங்கினார்கள். சிலர் மிகவும் மோசமாக கேலியும் செய்யத் தொடங்கினார்கள். தனது நடத்தை கேலிக்கூத்தாவதைக் கண்டு மனம் கலங்கினான் கதிரேசன். கல்லூரிக்குச் செல்லும்போது உடலெல்லாம் திருநீறு பூசிய கோலம் பலரை சிரிக்க வைத்தது. உண்மையான பக்தனாக இருந்தபோதிலும் அந்த உண்மை பக்தியை சக நண்பர்கள் விமர்சித்த விதம் கண்டு மனம் மேலும் கலங்கியது

இந்த கேலியும் கிண்டலும் வரம்பு மீறிய செயலாகிப்போனது. ஒருநாள் என்றைக்குமில்லாது கதிரேசன் வகுப்பறைக்குள் நுழையும்போது ''அருள்புரியுங்கள் எமது குருவே'' என சக மாணவர்கள் சிலர் அவனது காலில் விழுந்தார்கள். அதிர்ச்சி அடைந்தான் கதிரேசன். ''கதிரேசன் போற்றி போற்றி'' என்று சொல்ல ஆரம்பித்தார்கள். அடுத்த கணம் ''எங்கே மடம் ஆரம்பிக்கப் போறீங்க குருவே, எங்களை உங்க சிஷ்யர்களாச் சேர்த்துக்கோங்க'' என்றார்கள். பாட்டும் தாளமும் செய்து கொண்டே இருந்தார்கள். பாராட்டுக்கும், பரிகாசத்திற்கும் வேறுபாடு அறிந்தே  அமர்ந்திருந்தான் கதிரேசன்

ஆனால் உச்சகட்டமாக மதிய வேளையில் அந்த மாணவர்கள், தொழில்நுட்ப மாணவ மாணவியர்கள் நிற்குமிடத்தில் வைத்து கதிரேசனின் காலில் விழுந்து ''சீக்கிரம் மடம் ஆரம்பிங்க குருவே'' என்று சொன்னார்கள். தன்மீது இருந்த திருநீறு எல்லாம் அழிக்கத் தொடங்கினான் கதிரேசன். அங்கே நின்று இதைப் பார்த்துக் கொண்டிருந்த வைஷ்ணவி மனம் வருந்தினாள். நகைச்சுவைக்காக செய்த விசயம் பிரச்சினையாகக் கூடும் என அவர்கள் கதிரேசனிடம் இதை பெரிது படுத்த வேண்டாம் என கேட்டுக் கொண்டார்கள்

 நல்ல சூழலினை நல்லவிதமாக பயன்படுத்தத் தெரியாமல் வாழப் பழகிவிட்டோம், கேலிப்பொருளாகிப் போனது தனது தவறுதான் என நினைத்தான் கதிரேசன். வீட்டுக்கு வந்த பின்னர் தனது அறையில் அமர்ந்து பல தினங்கள் பின்னர் ஒரு பாடல் பாடினான்

''உள்ளிருக்கும் வெளியிருக்கும் உன்னை வெளிப்படுத்திட நானும்
முள்ளிருக்கும் இடமறியாது போர்த்திக் கொண்டேன்
வேசம் இட்டதாய் வேதனை தந்தே குறுகிப்போனார்
மோச உலகமாக்கியதேனோ சொல்சிவனே''

பாடி முடித்த வேளையில் கதிரேசனின் அறைக் கதவைத் தட்டினாள் வைஷ்ணவி

(தொடரும்)