Sunday 31 January 2010

வித்தியாசமான விடுமுறைப் பயணம் - 2009 (3)

பயணம் - 3

இரவு நன்றாக உறங்கினோம். காலை எட்டு மணி இருக்கும் என நினைக்கிறேன், தொலைபேசி அழைப்பு வந்தது. யார் என மறுமுனையில் கேட்க புவனா என சொல்லி சகோதரி சுந்தராவின் குரலை தவறாக புரிந்து கொண்டேன். 

சிறிது நேரம் பின்னர் சகோதரி சுந்தராவின் கணவர் எங்களை அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்றார். வழியில் மிகவும் சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டு சென்றோம். அடுத்தமுறை துபாய் வரும்போது வீட்டில்தான் தங்கவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டது மகிழ்வைத் தந்தது. நாங்கள் தங்கியிருக்கும் பகுதி பர் துபாய் என அழைக்கப்படுகிறது. மற்றொரு பகுதி டேரா துபாய் என அழைக்கப்படுகிறது. சகோதரியின் வீடு ஹோட்டலில் இருந்து சற்று தொலைவில் இருந்தது. முன்னர் அவர்கள் இருந்த வீடு ஹோட்டலில் இருந்து வெகு அருகில் இருந்து இருக்கிறது. 

சகோதரியின் வீட்டில் புவனா, மஞ்சு, குழந்தைகள் பட்டாளம் என சின்ன திருவிழா போன்று கூட்டமாக இருந்தார்கள். அவர்கள் சிரமப்பட்டுதான் வந்து சேர்ந்தார்கள் என்பதை அறிந்தேன். சிறப்பான விருந்தும் ஏற்பாடு செய்து இருந்தார்கள். 



சகோதரியின் கணவருடன் வியாபார விசயங்கள், துபாய் வாழ்க்கை முறை என பல விசயங்கள் பேசிக்கொண்டு இருந்தேன். ஒரு சின்ன வரைபடம் ஒன்று போட்டுத் தந்தார். நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகிலேயே எல்லாம் இருப்பதாக வரைபடத்தில் காட்டினார். பின்னர் சகோதரியின் வீட்டினைச் சுற்றிப் பார்க்கச் சென்றேன். பாரதியும், நந்தினியும் வீடுதனை சுற்றி காண்பித்தார்கள், நன்றாக பேசினார்கள். விஜய் நவீனுடன் விளையாடுவதிலேயே நேரம் செலவழித்துக் கொண்டிருந்தார். 

மிகவும் அழகிய வீடு. ஒவ்வொரு அறையிலும் குளிர்சாதனம் பொருத்தப்பட்டிருந்தது. அனைவரும் உணவருந்த அமர்ந்தோம். பிரியாணி, சிக்கன், ரைதா, சப்பாத்தி, சாதம், இரசம், தயிர்ச்சாதம், வெஞ்சனம், ஊறுகாய், பாயாசம் என மிகவும் பிரமாதமாக இருந்தது. பொதுவாக அதிகமாகச் சாப்பிடும் நான் அன்று சற்று குறைவாகவே சாப்பிட்டு முடித்துக்கொண்டேன். நிறைய சாப்பிட்டு இருக்கலாம் என மனது சொன்னது. 

கிருஷ்ண பவன் என ஒரு உணவுக் கடை இருப்பதாகவும் அங்கே வெங்காயம், பூண்டு எல்லாம் சேர்க்கமாட்டார்கள் என சொன்னபோது ஆச்சரியமாக இருந்தது. புவனா செய்த சமையலில் வெங்காயம், பூண்டு எல்லாம் சேர்க்காமல் செய்து இருந்தார்கள். செய்த விதமோ வித்தியாசம், ஆனால் மிகவும் ருசியாகத்தான் இருந்தது. அக்ஷயா அனுஷ்யா, நித்யாஸ்ரீ என மழலைகளின் பேச்சும் சுவாரஸ்யமாக இருந்தது. 

சாப்பிட்டு முடித்ததும் இலண்டன் வாழ்க்கை முறை பற்றி பேசினோம். வியாபார நுணுக்கம் எனக்குத் தெரியாது என்று பேசிக்கொண்டிருந்த நான், எனக்குப் பிரச்சினையே பேசுவதுதான் என சொன்னேன். அதற்கு சகோதரியின் கணவர் 'அரசியல்வாதி' மாதிரி பேசறீங்க என சொன்னார். அடடா நம்மைப் பற்றி அற்புதமாக கண்டுபிடித்துவிட்டாரே, இனிமேல் அடக்கம் கொள்ள வேண்டியதுதான் என நினைத்த சமயத்தில் புவனா பரஞ்சோதியாருக்கு அழைப்பு விடுத்தார். பரஞ்சோதியாரிடம் பல நிமிடங்கள் பேசினேன். ஊரில் சென்று வாழ வேண்டும் என எண்ணம் பரஞ்சோதியாரிடம் நிலை கொள்ள ஆரம்பித்து இருக்கிறது. 

பின்னர் புகைப்படங்கள், அசைபடங்கள் எடுத்துக்கொண்டோம். மிகவும் அழகான சிறப்பான பரிசுகள் தந்தார்கள். பின்னர் கேட்டபோது, புவனா அந்த அழகிய பரிசுகளை ஷார்ஜாவில் வாங்கியதாக சொன்னார். மிகவும் சிறப்பான உபசரிப்பும், அன்பும், பரிசுகளும் என சுமார் நான்கு மணி நேரத்திற்கு மேலாக அற்புதமான சொந்த உறவுகளுடன் உறவாடிய அந்த தருணங்கள் மனதில் என்றும் நிலைத்து நிற்கும். அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு கிளம்பினோம். 

சகோதரியின் கணவர் எங்களை ஹோட்டலுக்கு திரும்ப வந்து விட்டுவிட்டுச் சென்றார்கள். அன்புடன் அவர் பழகியது, பேசியது பெரும் ஆனந்தத்தைத் தந்து இருந்தது. 

சில நிமிடங்களே ஹோட்டலில் இருந்த நாங்கள் அடுத்து எங்கு செல்லலாம் என ஒரு டாக்ஸியைப் பிடித்தோம். 



(தொடரும்)

Saturday 30 January 2010

வித்தியாசமான விடுமுறைப் பயணம் - 2009 (2)

பயணம் - 2
அனைத்து ஏற்பாடுகளும் செய்து கொண்டு துபாய் பயணத்திற்குத் தயாரானோம். பொதுவாக இங்கு யாராவது ஒருவர், ஊருக்கு செல்பவரை விமானநிலையம் சென்று அனுப்பி வைத்து வருவதும், அழைப்பதும்தான் வழக்கமாக இருக்கிறது. ஆனால் அன்று வேலை நாள் ஆனதால் பலருக்கு முடியாமல் இருந்தது. அப்பொழுதுதான் கெளரிபாலன் தொடர்பு கொண்டார். ''எங்கள் வீடு வரை உங்கள் வாகனத்தில் வாருங்கள், விமான நிலையம் ஐந்து நிமிடங்கள் தான், நான் ஏற்பாடு செய்கிறேன்'' என அவர் சொன்னபோது 'அட' என மனதுக்குள் தோன்றியது என்னவோ உண்மை. 

ஆனால் உறவினர் ஒருவருக்கு இரவு வேலை என்பதால் அவர் விமான நிலையம் வருவதாக சொல்ல கெளரிபாலனின் உதவியை நாட இயலாது போனது. துபாய் எப்படி இருக்குமோ? அதுவும் நள்ளிரவு 12 மணிக்கு சென்று விமானம் தரையிறங்குகிறது, எப்படி ஹோட்டல் சென்று அடைவோம் என நினைக்கையில் சற்று பயமாகத்தான் இருந்தது. சகோதரி சுந்தராவும், புவனாவும் விமானநிலையம் வருவதாக சொன்னார்கள், நான் தான் 'நள்ளிரவு என்பதால் வர வேண்டாம், நாங்கள் ஹோட்டல் சென்று விட்டு காலையில் சந்திப்போம்' என சொல்லி இருந்தேன். 

துபாய்க்கு கிளம்பும் சில நாட்கள் முன்னர் புவனா ஒரு திட்டம் பற்றி கூறினார். அதாவது புவனாவும், அவரது தோழி மஞ்சுவும், சுந்தரா சகோதரி வீட்டுக்கு வந்துவிடுவதாகவும் அங்கே சந்திக்கலாம் எனவும் அதனால் எனக்கு சிரமம் இருக்காது என சொன்னார். நான் உடனே சரி என சொன்னேன். அவர்களுக்கு சிரமம் இருக்கும் என கொஞ்சம் கூட யோசனை வரவில்லை!!! நான் எதிர்பார்த்த துபாய் வேறு! 

இங்கே நினைத்தவுடன் வாகனத்தை எடுத்துக்கொண்டோ, பேருந்திலோ, இரயிலிலோ சென்று பழக்கப்பட்டுப் போனதால் அங்கேயும் அப்படித்தான் இருக்கும் என எண்ணினேன். ஷார்ஜாவிற்கும் துபாய்க்கும் 15-25 நிமிட பயணம் தான் என அறிந்து இருந்தேன், அதாவது போக்குவரத்து நெரிசல் இல்லாது இருந்தால்!

எனது மனைவிக்கும், மகனுக்கும் துபாய்தனை பார்க்க அதீத ஆர்வம் இருந்தது. ஒரு வித்தியாசமான பயணத்தைத் தொடங்கினோம். நாங்கள் மூவர் மட்டுமே சேர்ந்து தொடங்கிய முதல் பயணம் இதுதான் என நினைக்கிறேன். 

எமிரேட்ஸ் விமானத்தில் தான் பயணம் செய்தோம். நள்ளிரவு 12 மணியை துபாய் அடைந்தபோது விமானம் தரையிறங்க முடியாமல் வட்டமிட ஆரம்பித்தது. தரையிறங்க வாய்ப்பில்லாமல், மழை பெய்வதாக விமானி அறிவித்துக் கொண்டே இருந்தார். சுற்றிய சுற்றில் என் மகன் நவீனுக்கு வாந்தி வர ஆரம்பித்துவிட்டது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வட்டமிட்ட பின்னர் தரையிறங்கியபோது மணி 1.20 ஆகிவிட்டது. 

யாரிடம் கேட்டு ஹோட்டல் செல்வது என எண்ணிக்கொண்டே பிரமிப்புடன் அந்த விமான நிலையத்தில் நடந்து சென்றேன். அற்புதமான கட்டிட அமைப்பு. மிகவும் அழகாக இருந்தது. சிலமுறை துபாய் வழியே பயணித்து இருந்தாலும் துபாய் விமான நிலையத்திலிருந்து வெளிச் செல்ல நடந்தது இதுவே முதல் முறையாதலால் அற்புதம்தனை பார்க்க முடிந்தது.

விமான நிலையம்விட்டு வெளியே வர ஆச்சரியமூட்டும் வகையில் வரிசையாக 'டாக்ஸி' அணிவகுத்துக் கொண்டிருந்தது. அதை ஒழுங்குபடுத்தியும், வரிசையாக வந்த பயணிகளை 'டாக்ஸி' யில் ஏற்றி அனுப்பிய விதம் மிகவும் அருமை. 'டாக்ஸி' யில் நாங்கள் பதினைந்து நிமிடங்களில் எங்கள் ஹோட்டல் வந்தடைந்தோம். டாக்ஸி ஓட்டியவர் ஆங்கிலத்தில் பேசவில்லை, பொதுவாக பேசவே இல்லை. நான் காட்டிய முகவரி பார்த்தார், ஹோட்டலில் வந்து இறக்கினார். உரிய கட்டணம் மட்டுமே பெற்றுக்கொண்டுக் கிளம்பினார். ஹோட்டலில் ஆரஞ்சு பழச்சாறு தந்து வரவேற்றார்கள். வித்தியாசமாகத்தான் இருந்தது!

ஹோட்டல் அறைக்குச் சென்று பார்த்ததும் 'அப்பாடா' என இருந்தது. லதா குறிப்பிட்டபடி மிகவும் பிரமாதமான ஹோட்டலும் இல்லை, அதே வேளையில் மோசமானதும் இல்லை. துபாயில் முன் தினம் தான் நல்ல மழை எனவும் சில விமானங்கள் தரையிறங்க முடியாமல் திருப்பப்பட்டதாகவும் பின்னர் ஹோட்டல் பணியாளர்கள் மூலம் அறிந்தேன். வெயில் அடிக்கும் ஊரில் இதுவும் வித்தியாசம்!!!



(தொடரும்)

Friday 29 January 2010

வித்தியாசமான விடுமுறைப் பயணம் - 2009 (1)

பயணம் - 1


இந்தியாவுக்குச் செல்ல வேண்டும் எனும் ஆவல் அதிகரிக்க ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்னர் செல்லும் வாய்ப்பினை திடீரென ஜனவரியில் முடிவு செய்தோம். ஆனால் இம்முறை துபாய் சென்று மூன்று நாட்கள் தங்கிவிட்டுச் செல்லலாம் என முடிவு எடுத்தோம். 

துபாய்க்குச் செல்ல பல வருடங்கள் திட்டம் தீட்டினாலும் இம்முறை வாய்ப்பு அமைந்தது. ஏப்ரல் மாதத்தில் எப்பொழுதும் இரண்டு வாரங்களே பள்ளி விடுமுறை கிடைக்கும் என் மகனுக்கு இம்முறை மூன்று வாரங்கள் விடுமுறையாக அமைந்தது இந்த துபாய்-இந்தியா பயணத்திற்கு ஒரு காரணமாக அமைந்தது. 



துபாய் செல்ல முடிவெடுத்ததும் சகோதரி சுந்தராவினைத் தொடர்பு கொண்டேன். விடுதியில் தங்க இருக்கிறோம் என சொன்னதும் ''வீட்டில் வந்து தங்கலாமே'' என அன்பு அழைப்பு விடுத்தார். ஆனால் அவரது அன்பு அழைப்பினை மறுக்க வேண்டியதாகிவிட்டது. அவரிடம் சில விடுதிகள் பற்றி விசாரித்தேன், அவரும் விபரங்கள் சொன்னார். திடீரென ஒரு நாள் இணையத்தின் மூலம் விடுதிகள் பற்றி பார்த்துக் கொண்டிருக்க ''லீ மெரிடியன்'' ஹோட்டல் பார்த்ததும் உடனே முன்பதிவு செய்தோம். விமான நிலையத்துக்கு அருகில் இருந்தது மட்டுமில்லாமல் விலை குறைவாக இருந்ததுதான் காரணம்.

இந்த ஹோட்டலைச் சுற்றி என்ன இருக்கிறது எனத் தேடினால் 'வசந்த பவன்' அருகில் இருப்பது பற்றி குறிப்பிட்டு இருந்தது. மனம் உற்சாகமானது. பிரான்ஸ் நாட்டுக்கு சென்றபோது சைவச் சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டது நினைவில் வந்தது. 

அந்த ஹோட்டலில் தங்கிச் சென்றவர்கள் என்ன எழுதி இருக்கிறார்கள் எனத் தேடிப் படித்ததில் பலர் 'நல்ல ஹோட்டல்' என்றே எழுதி இருந்தார்கள். ஆனால் ஒரே ஒரு நபர் மட்டும் 'இப்படியொரு ஹோட்டலைத் தேர்ந்தெடுத்தது பெரும் தவறு எனவும் அங்கு சென்ற மறு தினமே வேறு ஹோட்டல் மாற்றியதாகவும் எழுதி இருந்தார், அதைப் படித்ததும் 'அடடா அவசரப்பட்டு விட்டோமோ' என எண்ணம் ஏற்பட்டதை தவிர்க்க இயலவில்லை. 'நன்றாகவே இருக்கும்' என நம்பிக்கைக் கொண்டோம். 

பயணம் முடிவாக புவனாவிடமும் விபரங்கள் சேகரிக்க ஆரம்பித்தேன். ஷார்ஜா கட்டாயம் வரவேண்டும் என அழைப்பும் விடுத்தார். அரைமணி நேரம் தான் என சொன்னதும் அரைநாள் செலவழிக்க வேண்டும் என சொன்னார். இப்படியாக பயணத்திட்டம் தயார் ஆக பத்மஜா மற்றும் மோகனைச் சந்திக்கவும் எண்ணம் ஏற்பட்டது. பஹ்ரைன் துபாயிலிருந்து சற்று தொலைவாக இருப்பதால் பின்னர் வேண்டாம் என முடிவு எடுத்தோம். 

பத்மஜாவின் தோழி லதா அபுதாபியில் இடம் மாற்றலாகி இருந்தார். எனவே அபுதாபி செல்லலாம் என முடிவுடன் அவரையும் தொடர்பு கொண்டேன். அவரும் துபாய் பற்றி ஒரு கட்டுரையே எழுதி அனுப்பி விட்டார். 

இப்படியாக பயணத் திட்டம் தயாராகிக் கொண்டிருக்க நாட்களும் பறந்து கொண்டிருந்தது. 



(தொடரும்)