Tuesday 28 July 2009

ஆண்டாளுக்குக் கல்யாணம் - 5

பாலரங்கன் மருத்துவர்களிடம் சென்று மேல்விபரம் கேட்டான். அப்பொழுது மருத்துவர் ''ஆண்டாள் சிஸ்டிக் பிப்ரோஸிஸ் கேரியர்'' என்றார். ''நானும் தான் சிஸ்டிக் பிப்ரோஸிஸ் கேரியர்'' என்றான் பாலரங்கன். ''அப்படின்னா நீங்க இரண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிறக்கூடாது. குறைஞ்சது 50% சதவிகிதம், உங்களுக்குப் பிறக்கப் போற குழந்தை இந்த நோய் உடையதாகவேப் பிறக்க வாய்ப்பிருக்கு'' என்றார் மருத்துவர். ''தெரிஞ்சி வைச்சிருக்கேன் சார், ஆனா ஜீன் தெரபி பண்ணலாமே?'' என்றான் பாலரங்கன். ''ஜீன் தெரபி பண்ணலாம், ஆனா இன்னும் அத்தனை தூரம் முன்னேறல எதுக்கும் என்னோட பிரண்ட் கிட்ட ரெபர் பண்றேன், அவன்கிட்ட போய் ட்ரீட்மெண்ட் பண்ணமுடியுமானுப் பாருங்க'' என்றார் அவர்.

ஆண்டாள் அன்றே மருத்துவமனையிலிருந்து வீட்டிற்குச் செல்ல அனுமதிக்கப்பட்டாள். சில தினங்கள் கழித்து ஆண்டாளின் வீட்டிற்குச் சென்ற பாலரங்கன் ஆண்டாளிடம் பேசினான். ''இருவரும் ஜீன் தெரபி செய்தால் ஒழிய திருமணம் செய்யக்கூடாது எனவும், அப்படியே திருமணம் செய்தாலும் குழந்தையைப் பெற்றுக்கொள்ளக்கூடாது'' எனவும் கூறினான்.

''அப்படி நம்ம அப்பா அம்மா நினைச்சிருந்தா நாம இப்போ இருக்கமுடியுமா'' என்றாள் ஆண்டாள். ''நான் உன்னைத் தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ணமாட்டேன்'' என்றான் பாலரங்கன். ''நான் மட்டும் என்னவாம்?'' என்றாள் ஆண்டாள். அப்படிச் சொன்னவள் ''எப்படி இந்த நோய் உனக்கும் எனக்கும் வந்துச்சு'' என்றாள் ஆண்டாள்.

''உடல் பொருள் ஆவி மனசு சந்தோசம் துக்கம் இப்படி எல்லாத்துலயும் ஒன்னா வைச்சிக்கிறச் சொல்ற காதல் இந்த நோயிலயும் வந்து வைச்சிக்கிருச்சி'' என சிரித்தான் பாலரங்கன். ''எப்படி வந்துச்சுனு சொல்லுனு சொன்னா காதல்னு சொல்ற'' என்றாள் ஆண்டாள்.

''இது ஜெனிடிக் நோய். மிகவும் மோசமான வியாதி. இது ஜீன்ல நடக்கிற ம்யூடேஷன்னால வருது. ஆனா எப்படி ம்யூடேஷன் நடக்குது, எப்படி வருது என்னங்கிறது இன்னும் தெரியலை. இந்த வியாதி நுரையீரல், கல்லீரல், கணையம், சிறுகுடல் பெருகுடல்னு பாதிச்சிரும். நாம கேரியர்ஸ், நமக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. சாதாரண வியர்வைத்துளியை வைச்சிக்கூட இந்த நோய் இருக்கானு கண்டுபிடிச்சிரலாம்'' என்றான் பாலரங்கன்.

''ம்யூடேஷன்னா என்ன?'' என்றாள் ஆண்டாள். ''இப்போ ஜீன் இருக்குனு வைச்சிக்கோ அதுபாட்டுக்கு அது வேலையை சரியாப் பார்க்கும், அதுல ஏதாவது மாற்றம் வந்துச்சுன்னா தன்னோட வேலைய மறந்துட்டு வேற ஏதாவது செஞ்சிரும், அதுமாதிரிதான் 7 வது குரோமோசோம்ல ஒரு மாற்றம் நடக்கிறதால இப்படி வருது. சாதாரணமா இந்த ஜீன் செய்ற வேலை என்னன்னா வியர்வை, சாப்பிடும்போது சுரக்கிற திரவம், அப்புறம் சளி இதெல்லாம் கட்டுப்படுத்தும். ஏதாவது மாற்றம் வந்தா இதெல்லாம் அதிகப்படியாப் போய் பெரிய பிரச்சினை ஆயிரும். ஆம்பளைங்களுக்கு ஆண் தன்மை கூட போயிரும்''.

''ஒவ்வொரு ஜீனுக்கு இரண்டு குணம் உண்டு. ஒன்னு டாமினேட்டா இருக்கும், இன்னொன்னு அடங்கிட்டு இருக்கும். டாமினேட்டுதான் வெளிப்படும், ஆனா அடங்கிட்டு இருக்கறது வெளிப்படாது. இந்த ஜீன் அடங்கிட்டு இருக்கற வகையச் சார்ந்தது. நம்ம இரண்டுபேருகிட்ட அடங்கிட்டு இருக்கற வகை நம்ம குழந்தைக்குப் போனா அந்த குழந்தையில வெளிப்பட்டு அவ்வளவுதான். இந்த வியாதி வந்தா 20 வயசுல இருந்து 30 வயசுல செத்துருவாங்க, இப்போ 50 வயசு வரைக்கும் ஆயுட்காலம் கூட்டிட்டு இருக்காங்க'' என்றான் பாலரங்கன்.

''எப்படி இவ்வளவு விசயம் தெரிஞ்சி வைச்சிருக்க?'' என்றாள் ஆண்டாள். ''இப்போ நமக்கு ஒரு நோய்னா அதைப்பத்தி அக்குவேறு ஆணிவேறா பிரிச்சி மேய்ஞ்சிரனும். அப்படித்தான் எனக்கு இந்த நோய் இருக்குனு சொன்னதும் தேடாத புத்தகம் இல்லை, படிக்காத விசயம் இல்லை, என் வீட்டுக்கு வந்தா படமெல்லாம் காமிக்கிறேன்'' என்றான் பாலரங்கன். ''ங்கோ, றேள் போட்டு பேசவே இல்லையே'' எனச் சிரித்தாள் ஆண்டாள்.

அப்பொழுது கோதைநாச்சியார் அங்கு வந்தார். ஆண்டாள் அவரிடம் பாலரங்கன் சொன்னதை சொன்னதும் பதட்டம் கொண்டார் கோதைநாச்சியார்.

''இந்த கல்யாணம் நடக்க வேணாம்'' என்றார் கோதைநாச்சியார். ''என்ன சொல்றேள் மாமி, நாங்க ஜீன் தெரபி பண்ணிக்கிறப் போறோம். கவலைப்படாதேள், எங்களுக்கு ஷேமமா கல்யாணம் நடக்கும்'' என்றான் பாலரங்கன்.

மேலும் ''குழந்தையப் பெற முன்னாடி கூட கருவை டெஸ்ட் பண்ணி குழந்தை நல்லா இருந்தா கருவை பழையபடி வைச்சி குழந்தைய உருவாக்கலாம் மாமி, நீங்க ஏன் இப்படி பதட்டப்படறேள்'' என்றான் பாலரங்கன். ''என்ன புராணம் சொல்றீங்கோ'' என்றார் கோதைநாச்சியார்.

அப்பொழுது அங்கு வந்த நாராயணன் ''ஜோசியர்கிட்ட போய்ட்டு வந்தேன், ஏதோ சனி கொஞ்சம் வேறப்பக்கம் பார்த்துட்டு நிற்கிறானாம், குரு பலமா பார்க்கிறாராம் ஆண்டாளுக்கு ஒரு வருசம் கழிச்சி நல்லாவே கல்யாணம் பண்ணலாமாம், எந்தப் பிரச்சினையும் இல்லையாம்'' என்றார். ''ஜோசியர் பரிகாரம் சொன்னா ஏத்துப்பேள், நான் சொல்ற பரிகாரம் சொன்னா ஏத்துக்கமாட்டேளா'' என்றான் பாலரங்கன். ''வந்து எல்லோரும் சாப்பிடுங்க'' என கோதைநாச்சியார் சொல்லிவிட்டு ''பெருமாளே'' என்றார்.

இவ்வேளையில் ராஜமன்னார் விசயம் கேள்விபட்டு ஆறுதல் சொன்னதோடு சரி ஆண்டாள் காதல் புரிவதால் தனது பையனுக்கு சம்மதமில்லை என்றே சொல்லிவிட்டார். ஆண்டாள் தான் மணந்தால் பாலரங்கனையே மணப்பேன் என உறுதியாக இருக்க, பாலரங்கனும் தான் மணந்தால் ஆண்டாளை மணப்பேன் என உறுதியாக இருக்க இருவரது பெற்றோர்களும் செய்வதறியாது திகைத்தனர்.

(தொடரும்)

Monday 27 July 2009

ஆண்டாளுக்குக் கல்யாணம் - 4

ஓடியாடி விளையாடி பள்ளிப்பருவமும் கடந்தாள் ஆண்டாள். பதினாறு வயது கடந்ததும் இனி எப்படி திருமணம் நடக்குமோ என கவலையில் நாட்களை கழித்தார் கோதைநாச்சியார். அதைப்பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல் தனக்கு எப்பொழுது காதல் வரும் என எதிர்பார்ப்புடன் இருந்தாள் ஆண்டாள். வருடங்கள் மெல்ல உருண்டோட ஆரம்பித்தது. கல்லூரிப்பருவத்தில் நுழைந்தாள் ஆண்டாள், ஆனால் காதல் வந்தபாடில்லை.

ஒருநாள் தனது அறையில் அமர்ந்து கொண்டு ''ஏன்டி ஆண்டாள், நீ மட்டும் எப்படிடீ திருவரங்கன் மேல காதல் கொண்ட, அதுவும் அவனைப் பார்க்காம கொள்ளாம உனக்கு மட்டும் எப்படி காதல் வந்துச்சு, சொல்லேன்டி ஆண்டாள்'' என சுவரைப் பார்த்து பேசிக்கொண்டிருந்தாள் நம் ஆண்டாள். இதைக் கவனித்த கோதைநாச்சியார் ''காதல் வரனும்னா அதுக்கான பையனைப் பார்க்கனும், நீ குனிஞ்ச தலை நிமிராம நடக்கற, இப்ப இருக்கிற பொண்ணுக மாதிரியா இருக்க, பட்டிக்காட்டுல கூட இப்படி இருக்கமாட்டாங்கம்மா கொஞ்சம் சுடிதார் ஜீன்ஸ் டி சர்ட் னு போட்டுட்டு இரு உன்னை காதலிக்க ரொம்ப பேரு நிப்பாங்க உனக்கும் யாரை காதலிக்கனும்னு தலைப் பிய்ச்சிக்கும்மா'' என கடிந்து சொல்லிவிட்டு போனார். ''நீ காதல் கல்யாணம் பண்ணினியா? தள்ளிவிட்டாங்க, போய் விழுந்துட்ட நீ'' என்றாள் ஆண்டாள். ''அது அந்தக் காலம்'' என்றார் கோதைநாச்சியார்.

அன்றைய தினத்திலிருந்து தினமும் காதலைப் பத்தி வீட்டில் பெரிய பட்டிமன்றமே நடக்க ஆரம்பித்தது. ஆண்டாள் ஒவ்வொருமுறையும் பழங்காலம் பழங்காலம்னு சொல்லாதே என அம்மாவை பேச்சில் வென்று கொண்டே இருந்தாள், ஆனால் காதல் வந்தபாடில்லை. ''அடக்கம் ஒடுக்கம் எல்லாருக்கும்தான் நான் உன்கிட்டே ரொம்பப் பேசறேனோம்மா'' என்றாள் ஆண்டாள். ஆண்டாளை உச்சி முகர்ந்து ''நீ என்னோட உசிரும்மா'' என்றார் கோதைநாச்சியார்.

இப்படியாக கல்லூரியிலும் ஒருவருடம் ஓடியது. ஒருமுறை வீட்டுக்கு வந்து கொண்டிருந்த வேளையில் வெங்கடாசலபதி ஆலயத்தில் ஒருவனைப் பார்த்தாள். அவனும் ஆண்டாளைப் பார்த்தான். மனது என்னவோ செய்தது அவளுக்கு. இதுதான் காதலா என எண்ணிக்கொண்டு நடக்க இருந்தவளை ''செத்த நிக்கிறேளா'' என்றான் அவன். ''செத்தா எங்குட்டு நிக்கிறது?'' என்றாள் ஆண்டாள். மென்மையாக சிரித்தான் அவன். ''என் பேரு பாலரங்கன்'' என்றான். ''என்ன விசயம் சொல்லுங்க'' என்றாள் ஆண்டாள். ''நீங்க எங்க குடியிருக்கேள்'' என்றான் அவன். ''உங்க மனசுலயா குடியிருக்க முடியும், அதோ செண்பகப்பூ அக்ரஹாரத்தில்தான் குடியிருக்கேன்'' என சொல்லிவிட்டு நடந்தாள் ஆண்டாள்.

முதன்முதலாக தனது அம்மாவிடம் தான் தனது காதலை சொன்னாள். ''அம்மா ஒரு பையன் என்னை காதல் பண்றான்மா'' என்றாள் ஆண்டாள். ''அது எப்படி உனக்குத் தெரியும்'' என்றாள் கோதைநாச்சியார். ''நான் காதல் பண்றேன்லம்மா அவனை'' என்றாள் ஆண்டாள். கோதைநாச்சியாருக்கு மனதில் பயமும் சந்தோசமும் நிறைந்தது.

ஆண்டாளுக்கு கோவிலின் வழியில் பாலரங்கனைப் பார்ப்பதும் ஓரிரு வார்த்தை பேசுவதுமாய் நாட்கள் கழிந்தது. ஒருநாள் உடல்நிலை சரியில்லாது போய் ஆண்டாளை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டியதாகிவிட்டது. இதற்கு முன்னர் ஆண்டாளுக்கு இவ்வாறு உடல்நிலை சரியில்லாதபோது பல பரிசோதனைகள் செய்தவர்கள் இம்முறை கொஞ்சம் அதிகப்படியான பரிசோதனை செய்தார்கள். விசயம் கேள்விப்பட்டு பாலரங்கன் தனது பெற்றோருடன் மருத்துவமனைக்குச் சென்றான். அங்கு ஆண்டாளுக்கு சிஸ்டிக் பிப்ரோசிஸ் எனும் நோய் இருப்பதாக மருத்துவர்கள் சொன்னதாக கேள்விபட்டதும் ஆடிப்போனான் பாலரங்கன்.

(தொடரும்)

திரு. ரஜினிகாந்த் படங்களும், பல பதிவுகளும்

சின்னஞ்சிறு வயதில் அ.இ.அ.தி.மு.க கட்சிக்கொடியினைத் தூக்கிக்கொண்டு கிராமத்துத் தெருக்களில் 'போடுங்கம்மா ஓட்டு, ரெட்ட இலயப் பார்த்து' எனச் சுற்றி வந்ததைப் பார்த்த எனது சகோதரர் 'இந்த வயசிலேயே என்ன கட்சி' எனக் கண்டித்த நிமிடத்திலிருந்து எந்த ஒரு கட்சியின் கொடியையும் இதுவரைத் தூக்கியதில்லை. தமிழகத்தில் எந்தவொரு கட்சிக்கும் வாக்களிக்க வாய்ப்பின்றிப் போனது. அமரர் எம்.ஜி.ஆர் அவர்கள் மிகவும் பிடித்தமானவராக இருந்தார். ஒரு வெற்றியாளர் என்பதால்தானா அவரை எனக்குப் பிடித்து இருந்தது?! தரையில் அமர்ந்து அவரது படங்களை ஆர்வமுடன் பார்த்த நாட்கள் நெஞ்சில் என்றும் நிலைத்து நிற்கும்.

'நாலுகோடி மக்களுக்குத் தலைவர்' 'உதயசூரியன் சின்னத்திலே' 'ஏறுது ஏறுது விலைவாசி' போன்ற பல பாடல்களை சிறுவயதில் கேட்கும்போது உற்சாகமும், திரு.கருணாநிதி அவர்களின் அயராத உழைப்பும், அவர் தமிழ் மேல் கொண்டிருக்கும் தீராத அன்பும் வியப்புடன் அவரைப் பார்க்க வைத்தது. இவரும் ஒரு வெற்றியாளர் என்பதால்தானா எனது பார்வை அவர் மீது விழுந்தது?!

அமரர் கண்ணதாசன்! இவரது திரைப்படப்பாடல்களும், அர்த்தமுள்ள இந்துமதமும் என்னுள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியவை என்று சொன்னால் மிகையாகாது. இவரும் ஒரு வெற்றியாளர் என்பதலா அளவிலா நேசம் இவர் மீது வந்தது. திறமையுடையவர்கள் வெற்றியாளர்கள் ஆகிறார்கள் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் அனைவருமா வெற்றியாளர்களாக பரிணாமிக்கிறார்கள். இயற்கையிலேயே ஒருவித ஈடுபாடு என்பதை நமது மனம் முடிவு செய்துவிடுகிறது.

இப்படித்தான் திரு.ரஜினிகாந்த் என்னுள் சிறுவயதிலேயே பிரவேசம் செய்தார். இவரைப் பற்றிய அறிமுகம் எல்லாம் திரைப்படங்களில் வாயிலாகத்தான். இவரது படங்களைப் பார்ப்பதில் ஒருவித ஈடுபாடு உண்டானது. கொஞ்சம் வயது அதிகமாக அதிகமாக நடிகர் என்கிற போர்வையை இவர் மீதிலிருந்து அகற்றி, நல்ல மனிதர் என்கிற போர்வையை இவர் மீது எனது மனதுப் போர்த்திக்கொண்டது. அருகில் இருந்துப் பழகியதில்லை, பேசியதில்லை ஆனால் இவரைப் பற்றிய இப்படியொரு அபிப்ராயத்தை என்னுள் விதைத்ததைக் கண்டு பலமுறை யோசித்திருக்கிறேன். இவரைப் பற்றிய தகவல் என்றால் ஆவலுடன் படிப்பது வழக்கமாகி இருந்தது. இவரைப் பற்றி அனைவருமே நல்லவிதமாகச் சொல்லவேண்டும் என்கிற ஒருவித எதிர்பார்ப்பும் என்னுள் இருந்தது என்பதை நினைக்கும்போது நாம் நேசிப்பவர்களுக்கு எவ்வித களங்கமும் ஏற்படக்கூடாது என ஒரு சராசரி எண்ணத்தினைக் கண்டும் யோசித்தது உண்டு.

திரு. ரஜினிகாந்த் அவர்களின் படங்களில் 'கதை தேவையில்லை, அவர் இருந்தால் போதும்' எனவும் 'நீ நடிக்கத் தேவையில்லை, நடந்தால் போதும்' என்கிற மனோபாவம் பலருக்கு இருந்தாலும், இவர் சின்னக் குழந்தைகளையும் வசீகரம் பண்ணியதன் காரணம் புரிந்திட முடியாதது. ஆனால் எல்லோருக்குமே இவரைப் பிடிக்கும் எனச் சொல்லிவிடவும் முடியாது. இவர் ஒரு வெற்றியாளர் என்பதாலா இவரைப் பற்றி அதிகம் அறிந்து கொண்டேன்?!

திரு.ரஜினிகாந்த் படங்களில் கதை இருக்கிறதோ இல்லையோ பலரும் அவருக்காகவேப் படங்கள் பார்ப்பவர்களாக இருந்து வந்திருக்கிறார்கள். அதுபோலவே எழுதப்படும் பல பதிவுகளில் ஆழ்ந்த நுண்ணிய கருத்து இருக்கிறதோ இல்லையோ எழுதப்படுபவருக்காகவும் பதிவுகள் ஒருவித ஈர்ப்புத்தன்மையைப் பெற்றுவிடுகின்றன. எனது பல இடுகைகளில் இன்னும் நல்லதொரு முயற்சி வேண்டும் என்கிற எண்ணம் எழாமல் இல்லை.

ஒருவேளை இந்த இடுகை பலரது கவனத்தை ஈர்க்குமானால் அதற்குக் காரணம் திரு.ரஜினிகாந்த் அவர்கள்தானேயன்றி எனது எழுத்து அல்ல! அதேவேளையில் இந்த இடுகை எவருடையப் பார்வையிலும் படாது போனால் அதற்கு காரணம் திரு.ரஜினிகாந்த அவர்கள் அல்ல, எனது எழுத்துத்தான்.

பொறாமைப் படாமல் சாதனையாளர்களாக மாறுங்கள், சாதனையாளர்களின் கண்ணும் உங்களைக் கண்டு வியந்து போற்றும்.