Tuesday 10 February 2009

அறுபத்தி நான்காம் மொழி - 5

பழனிச்சாமிச்சியின் குடும்பமே வீட்டுக்கு வந்து சேர்ந்தது. அத்தனை பேரையும் வாங்க என அழைத்து உட்கார வைத்தேன். எனக்கு என்ன ஆச்சரியமாகவும் அதே வேளையில் பயமாகவும் இருந்தது எனில் பழனிச்சாமியின் ஒரே தங்கை சங்கரியும், அவளது கணவருடன் வந்து இருந்தாள். பேசுவாளோ மாட்டோளோ என நினைத்துக்கொண்டே ''எப்படி இருக்க சங்கரி'' என்றேன். ''நல்லா இருக்கேன் சரசு'' என புன்னகையுடன் சொன்னாள்.

பவளக்கொடியும், மிங்கி மிங்கி பாவும், அடச் சே, நாவரசனும் அப்பொழுதுதான் உள்ளே நுழைந்தார்கள். நாவரசனைக் கட்டிப்பிடித்துக் கொண்டார் பழனிச்சாமி. எனக்கு எதுவும் புரியவில்லை.அதற்குள் சின்னவள் பலகாரங்கள் எல்லாம் எடுத்து வைத்துவிட்டிருந்தாள். பல கதைகள் பேசினோம், ஆனால் பழைய கதை ஒன்றை மட்டும் பேசாமல் விட்டோம். எனது கணவரும் வந்தார். சங்கரியைப் பார்த்தவர் எனது கண்களைப் பார்த்தார். வயசானால் என்ன, எனக்கா கண்களால் பேசத் தெரியாது, எல்லாம் சுகமே என்றேன். அவரது முகத்தில் புன்னகை படர்ந்தது.

பேசிக்கொண்டே இருந்தால் போதுமா, சமைக்க வேண்டும் என எழுந்தேன். அதெல்லாம் வேண்டாம் என சொன்னார்கள். ஆனால் நான் சாப்பிட்டுத்தான் செல்ல வேண்டும் என கேட்டுக்கொண்டேன். சமையல் அறைக்குள் செல்ல நினைக்கையில் ஒரு நிமிசம் சரசு என சங்கரி சொன்னாள்.

என்னவென திரும்பிப் பார்க்க சங்கரி திருமணப் பத்திரிக்கை ஒன்றை எடுத்தாள். எனக்கு திக்கென ஆகிவிட்டது. இத்தனை நேரம் பேசியபோது திருமணம் பற்றி ஒன்றுமே மூச்சு விடவில்லை. என்ன இது பத்திரிக்கை எனப் பார்த்தேன். அப்படியே பவளக்கொடியையும் பார்த்தேன், அவளது முகம் வெட்கப்பட்டு கொண்டிருந்தது. நம்பவைத்து இப்படி செய்துவிட்டார்களே என வெகு வேகமாக மனம் பிற்காலத்துக்குச் சென்று நின்றது. ''என்னோட பையனுக்கு அடுத்த மாசம் கல்யாணம் வைச்சிருக்கேன், நீங்க எல்லாரும் கட்டாயம் வரனும்'' என பத்திரிக்கைத் தந்தாள் சங்கரி. அவளோட கணவர் சேலை, வேஷ்டி குங்குமம் எல்லாம் எடுத்து சங்கரியிடம் கொடுத்தார். ''யார் பொண்ணு'' என்று மிழுங்கி மிழுங்கி கேட்டேன். என்ன சொன்னேன், மிழுங்கி??? என்ன சொன்னேன், மிழுங்கி???

(தொடரும்)

Monday 9 February 2009

அறுபத்தி நான்காம் மொழி - 4

அந்த வேளைப்பார்த்து பழனியம்மாள் பழரசம் கொண்டு வந்து கொடுத்தார். நாங்கள் பேசிய விசயத்தை பழனியம்மாளிடம் பழனிச்சாமி சொன்னதும் ''ரொம்பச் சந்தோசமான விசயம்'' என மனம் மகிழ்ச்சியுடன் சொன்னார். வேகமாக பழரசம் குடித்துவிட்டு அங்கிருந்து ஊருக்குக் கிளம்பினோம். வந்தது வந்தீங்க தங்கிட்டுப் போகலாமே என சொன்னார்கள் ஊரில் இருந்தவர்கள். வேலை இருக்கிறது என நொண்டிச் சாக்கு சொல்லிவிட்டு கிளம்பியே விட்டோம்.

வழியில் என் கணவர் ஒரு உலகமகா கேள்வியைக் கேட்டு வைத்தார். ''நம்மை பழிவாங்குவதற்கு சரியென அவர் சொல்லி இருப்பாரோ?'' எனக்கு என்ன பதில் சொல்வது எனத் தெரியவில்லை. மனம் தேற்றி ''பேசியாச்சு, இனி நடக்கறபடி நடக்கட்டும், நாம என்ன நிச்சயதார்த்தமா பண்ணிட்டு வந்திருக்கோம்'' என ஆறுதல் சொன்னேன்.

வீட்டுக்குப் போனபோது இரவு ஆகி இருந்தது. நாவரசன் மட்டும் தூங்காமல் இருந்தான். நாங்கள் சென்றதும் கடைசிப் பெண் எழுந்துவிட்டாள். ''அம்மா, அண்ணா இன்னும் சாப்பிடலை'' என சொல்லிவிட்டு தூங்கிப் போனாள். சாப்பிடலை என்பதை கூட இவன் சொல்லமாட்டான் என நினைத்துக்கொண்டே தூங்கி இருப்பாள் போல.

சாதம் எடுத்து வைத்தேன். சாப்பிட்டான், நாங்களும் அவனுடன் சாப்பிட்டோம். அவனது முகத்தில் ஆயிரம் கேள்விகள். வாயைத் திறந்துதான் கேளேடா என கத்த வேண்டும் போலிருந்தது. என் மனதை புரிந்து கொண்டவன் போல மிங்கி மிங்கி பா என்றான். சம்மதம் சொல்லிவிட்டார்கள் என்றேன். அவன் கண்களில் இருந்து கண்ணீர் கொட்டியது. எனக்கும் அழுகையாய் வந்தது.

பவளக்கொடியிடம் விசயத்தைச் சொன்னேன். ''என்னோட வேலையை சுலபமாக்கிட்டீங்க அத்தை'' என்றாள். அவள் அத்தை என என்னை அழைத்தது எனக்கு சந்தோசமாக இருந்தது. இப்படியே நிமிடங்கள், நாட்கள், மாதங்கள் வருடங்கள் என கடந்து சென்றது. ஆனால் நாவரசன் மிங்கி மிங்கி பா மட்டுமே சொல்லிக் கொண்டு இருந்தான்.

நேற்று பவளக்கொடி வீட்டிற்கு வந்திருந்தாள். படிப்பை முடித்துவிட்டாள் எனவும், ஊருக்குச் செல்லாமல் நாவரசன் வேலைப் பார்க்கும் இடத்திலேயே கணக்காளாராக வேலைக்குச் சேர இருப்பதாகவும் சொன்னதும் எனக்கு நிம்மதியாக இருந்தது. ''எப்பொழுது திருமணம் வைத்துக்கொள்ளலாம்'' என நான் தான் அந்தச் சின்னப்பெண்ணிடம் கேட்டு வைத்தேன். ''அடுத்த முகூர்த்தத்திலேயே வைச்சிக்கிரலாம் அத்தை, ஏன்னா நான் விடுதியிலே தங்க வேண்டியிருக்காதுல்ல'' என்றாள். எனக்கு சுர்ரென்றது. உடனே பெட்டி படுக்கையோடு நேற்றே வரச் சொல்லிவிட்டேன். எங்களுடன் தான் அவள் தங்கி இருக்கிறாள்.

இன்று பழனிச்சாமியும் பழனியம்மாளும் எங்கள் வீட்டிற்கு வருவதாக சொல்லி இருந்ததாக பவளக்கொடி சொன்னாள். நானும் மிகுந்த ஆர்வத்துடனே காத்திருந்தேன்.

(தொடரும்)

Saturday 7 February 2009

அறுபத்தி நான்காம் மொழி - அத்தியாயம் 3

பவளக்கொடி பேசிவிட்டுச் சென்றுவிட்டாள். நாவரசன் வந்ததும் கேட்டுவிட வேண்டும் என நினைத்திருந்தேன். நாவரசன் வீட்டுக்குள் வந்ததும் பவளக்கொடி வந்துவிட்டுச் சென்றாள் என்றேன். அவனது முகம் மிகவும் சந்தோசமானது. என்ன சொன்னாள்? ஏது சொன்னாள் என்று கேட்கமாட்டானா என நானும் அவனையேப் பார்த்திருக்க ஒன்றுமே பேசாது முகம் அலும்பச் சென்றுவிட்டான். என்ன இது? ஒன்றுமே சொல்லாமல் செல்கிறான் என பின் தொடர்ந்தேன். அவ என்ன சொன்னாளுனு கேட்கமாட்டியா என்றேன். திரும்பிப் பார்த்தவன் புன்னகைத்தான். அவ்வளவுதான், எனக்கு ஐயோ என்றாகிவிட்டது. போடா என சொல்லிவிட்டு அப்படியே உட்கார்ந்துவிட்டேன்.

என் மற்ற பிள்ளைகள் கொஞ்சம் கூட இதில் தலையிடுவதில்லை, என் கணவரும் கூட. நான் தான் கவலை துரத்தியதில்லை என சொல்லிவிட்டு இப்படி கவலைப்படுகிறேனோ எனத் தோணியது. அன்று இரவே பவளக்கொடி பற்றி கணவரிடம் பேசினேன். நான் பயந்ததைவிட பழனிச்சாமியா என அவரும் பதறினார். நான் ஊருக்குச் செல்ல வேண்டும் என பிடிவாதமாக இருந்தேன். என்னுடன் உடன் வருவதாக அவர் சொன்னார். அப்பாடா என இருந்தது எனக்கு. பிள்ளைகளிடம் சொல்லிவிட்டு கிளம்பினோம். நாவரசன் மிகுந்த சந்தோசத்தில் இருந்தான்.

நானும் என் கணவரும் எனது பிறந்த ஊரான சிங்கம்புணரியைச் சென்றடைந்தோம். என்னை ஊரில் அடையாளம் கண்டுகொண்டவர்கள் இப்பத்தான் வழி தெரிஞ்சதோ எனக் கேட்டார்கள். வழி தெரியனும்னு வந்திருக்கேன் என்று சொல்லி எங்கள் பூர்விக வீட்டிற்குப் போனோம். கொஞ்ச நேரத்தில் பழனிச்சாமியைப் பார்க்கச் சென்றோம். எனக்கு படபடவென நெஞ்சு அடித்துக்கொண்டது.

பழனிச்சாமி வீட்டில்தான் இருந்தார். அவரது மனைவி பழனியம்மாள் என்னைப் பார்த்து உள்ளே வா சரசு என அழைத்துச் சென்றார். பழனிச்சாமி என்மேல் கோபமாகவே இருப்பார் என்று எதிர்பார்த்து வந்தது பொய்த்துப் போனது. ''வாம்மா தங்கச்சி, ஊரை விட்டு ஒரேயடியா ஒதுங்கிப் போய்ட்ட'' என்றார். எனக்குப் பழசெல்லாம் மறந்து போனது அப்போது.

என் குழந்தைகள் பற்றியெல்லாம் விசாரித்தார். மூத்தவன் இன்னும் மிங்கி மிங்கி பா மட்டுமே தான் சொல்றானா? என்றார். பின்னர் பவளக்கொடி பற்றியும் சொன்னார். அவரது தங்கை மணமுடித்த இடத்தில் சிறப்பாக இருப்பதாக சொல்லி சந்தோசப்பட்டார். எனக்கு ரொம்பவே தைரியம் வந்தது. ஆனால் மிங்கி மிங்கி பா மட்டுமே பேசும் என் மகனை மருமகனாக எப்படி இவர் ஏற்றுக்கொள்வார். சின்னவனை வேண்டுமெனில் கல்யாணம் பண்ணிக்கிரட்டும் என சொன்னால் மறுபடியும் இவரை பகைத்துக்கொள்ள முடியாது. என் கணவர் வாயேத் திறக்கவில்லை.

நான் வந்தது காரணம் என்னன்னா அண்ணே என நான் முழுவதையும் சொல்லி முடிப்பதற்குள் எனக்கு வியர்த்து கொட்டி விட்டது. ''ஓ தாராளமா பண்ணிக்குவோம்'' என்றாரேப் பார்க்கலாம். எனக்கு உடல் புல்லரித்தது. அதற்குள் அதுவரை ஒன்றுமே பேசாமல் இருந்த என் கணவர் ''நிசமாத்தான் சொல்றீங்களா'' என்றார். ''உங்களை மாதிரியா, என்னை நினைக்கிறீங்க'' என்றார் பழனிச்சாமி. எதுவும் விபரீதமாகி விடக்கூடாதே என மிங்கி மிங்கி பா தனை மனதுக்குள் பலமுறை சொல்லிக்கொண்டேன். (தொடரும்)