Showing posts with label தொடர்கதை அ-அ. Show all posts
Showing posts with label தொடர்கதை அ-அ. Show all posts

Friday 19 November 2010

அடியார்க்கெல்லாம் அடியார் 34

மதுசூதனன் திடீரென வேறு பாதையில் சென்றதை எவருமே கவனிக்கவில்லை. சிறிது தூரம் சென்றவர்கள் மதுசூதனனை காணாமல் தேடினார்கள்.
''சொல்லாமக் கொள்ளாமப் போய்ட்டானே'' என செல்லாயி அலுத்துக்கொண்டார். வைஷ்ணவியின் மனம் வருந்தியது. அன்று இரவு சிவன் கோவிலுக்குச் செல்லலாம் என சொன்னான் கதிரேசன். வைஷ்ணவியும் ஈஸ்வரியும் சம்மதம் சொன்னார்கள். 

இரவு சிவன் கோவில் சென்றபோது அங்கே வாசலில் மதுசூதனன் நின்று கொண்டிருந்தான். அவனைப் பார்த்து ''எங்கே போனாய்?'' என்றான் கதிரேசன். ''ஒரு அன்னை எனக்காக விரதம் முடிக்க பிரசாதம் செய்து வைத்திருந்தார் அங்கே சென்றேன்'' என்றான் மதுசூதனன். 

''
நீ பேசுறது எனக்குக் கொஞ்சமும் பிடிக்கலை, ஏண்டா இப்படி மாறின?, இதோ பாரு நீ பண்ணினது பாவம்'' என்றான் கதிரேசன். ''பாவம் பண்ணியவர் எவருமில்லை பாரினில்; பண்ணுவது பாவம் என அறிந்தால் அதை பண்ணுபவர் எவருமில்லை'' என்றான் மதுசூதனன். அப்போது ''சாமி உள்ளே வாங்க, உங்களுடைய உரையைக் கேட்க எல்லாரையும் உட்கார வைச்சிருக்கேன்'' என அழைத்தார் ஒருவர். ''இதோ இவர்களையும் அழைத்துக்கொண்டு உட்கார வையுங்கள், சிவன் கோவிலில் நுழைய இவர்களுக்கு தகுதி இருக்கிறதா என சோதித்துக் கொண்டிருக்கிறார்கள்'' என மூவரையும் காட்டிச் சொன்னான் மதுசூதனன். ''வாங்க, உட்காருங்க'' என அழைத்தார் அவர். 

''
மதுசூதனா, நீ என்னதான் பேசப் போகிறேனுப் பார்க்கிறேன்'' எனச் சென்றான் கதிரேசன். ''என் உரை அந்த சிவன் ஆற்றப் போவது'' என்றான் மதுசூதனன். முறைத்துப் பார்த்தவாரே கதிரேசன் கோவிலுக்குள் சென்று அமர்ந்தான். வைஷ்ணவியும், ஈஸ்வரியும் சென்று  அமர்ந்தார்கள். மதுசூதனன் பேச ஆரம்பித்தான். 

''
பொய்யென நம்மை பிறர் சொன்னால் பொறுக்கவும் இயலாதே; பொய்யாய் போனோமே நாமே இங்கே; மெய்யாய் வீற்றிருக்கும் சிவனைத் தொழுதே மெய்யாய் ஆகவும் முடியாதே; மெய்யும் பொய்யாய் போகக்கடவது; பொய்யே வாழ்வில் சித்தம்; பொய்யனாகிப் போனேன் நானும் நித்தம்;'' எனப் பேசியவன் ''நீங்கள் பொய்யோ'' எனக் கூட்டத்தைப் பார்த்துக் கேட்டான் மதுசூதனன். 

''
ஆமாம் ஆமாம்'' என ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டே சொன்னார்கள். ''பொய் என சொல்லியே உண்மை உரைத்தீர்களே நீங்கள் இன்னமும் பொய்யோ'' என்றான் மதுசூதனன். கூட்டம் அமைதியானது. ''சிவன் அறிவீரோ இச்சிவன் ஒன்றே தான் அறிவீரோ'' எனச் சொன்ன மதுசூதனன் ''இச்சிவனுக்கு அடியார் எவரோ இவ்விடத்தில்'' என்றான் மதுசூதனன். ''நீங்கதான் சாமி'' என்றனர் கூட்டத்தில் இருந்தவர்கள். 

''
எம்மை அடியார் என சொல்லி எம் மனம் குளிர்வித்தீர்; இச்சங்கரன்கோவிலில் இச்சிவனுக்கு யாம் அடியாராய் அவதரித்தோம்; எமக்கும் ஒரு அடியார் வேண்டும்; அந்த அடியார் எவரோ இவ்விடத்தில்'' எனக் கேட்டான் மதுசூதனன். கூட்டத்தில் இருந்த சிலர் உங்கள் அடியாராக இருக்கிறோம் என சம்மதம் சொன்னார்கள். புன்முறுவலுடன் மதுசூதனன் கைகள் கதிரேசனை நோக்கியது. ''அதோ அவரே என் அடியார்'' என்றான் மதுசூதனன். கூட்டத்தில் இருந்தவர்கள் கதிரேசனை சாமியிடம் போ போ எனச் சொன்னார்கள்.

''
அவன் என் காலேஜிலப் படிச்சவன், இப்போ இப்படி வேசம் போடுறான், அவனுடைய காதலி இதோ இங்கே இருக்கா'' என வைஷ்ணவியைக் காட்டினான் கதிரேசன். ஈஸ்வரி பதட்டம் அடைந்தாள். வாங்க போயிரலாம் என சொன்னாள். கூட்டம் மதுசூதனைப் பார்த்து சாமி இது உண்மையா? என்றது. ''உண்மையாய் அது இருக்கவே யாம் பொய்யனாகிப் போனோம்'' என்றான். ''சாமிக்கு அடியாராக இருக்கிறதுல எவ்வளவு ஆனந்தம், போப்பா'' என்றது கூட்டம். ''முடியாது இப்படி ஒரு பொய்யானவனுக்கு என்னால் அடியாரா இருக்க முடியாது நான் சிவனுக்கு மட்டுமே அடியார்'' என கோபத்துடன் சொன்னான் கதிரேசன். ''நீ எப்படி சிவனுக்கு அடியார், அந்த சாமி மட்டும் தான் சிவனுக்கு அடியார், நாம வேணும்னா அந்த சாமிக்கு அடியாராக இருப்போம்'' என சிலர் சொன்னார்கள். 

கதிரேசன் எழுந்தான், சிவன் சன்னதி முன் நின்றான். பாடினான். பாடலைக் கேட்டு மொத்தக் கூட்டமும் அப்படியே எழுந்து நின்றது. ஈஸ்வரியின் கண்களில் கண்ணீர் வழிந்தது. 

''
சிவனே பொய்யாய் போவோர்க்குத்தான் இவ்வுலகம் மெய்யோ
தவம்புரிதலும் தன்னிலைமறத்தலுமே உனக்கு இதமோ
உத்தமியின் கரம்பற்றிட உன்னடியார் ஆகிடாது போவேனோ
சத்தமின்றி இனியுமிருப்பாயோ சொல்சிவனே''
எல்லோரையும் அமரச் சொன்னான் மதுசூதனன். அனைவரும் அமைதியாய் அமர்ந்தார்கள். ''குடும்ப வாழ்க்கையில் இருந்து கொண்டு சிவனின் அடியாராக இருந்திட வாய்ப்பில்லை, ஆனால் எனக்கு அடியாராக இவர் இருக்கலாம் ஆகவே இவர் என் அடியார்'' என்றான் மதுசூதனன். மதுசூதனன் சொன்னதைக் கேட்டு உடனே அமர்ந்த கூட்டத்தைக் கண்டு ஆச்சரியமடைந்தான் கதிரேசன். ஈஸ்வரியும், வைஷ்ணவியும் வெளியேச் செல்லக் காத்திருந்தனர். 

கதிரேசன் மதுசூதனின் அருகில் வந்தான். ''சிவனுக்கும் குடும்பம் உண்டு, எனவே குடும்ப வாழ்க்கையில் இருப்போரே சிவனின் அடியார், ஆகவே நானும் சிவனின் அடியார்'' என்றான் கதிரேசன். ''இதோ இவர் சிவனின் அடியாராம், எங்கே சிவனை வரச் சொல்லுங்கள் பார்க்கலாம்'' என்றான் மதுசூதனன். கூட்டத்தில் இருந்த ஒருவர் ''அவர் வரச் சொல்றது இருக்கட்டும் சாமி, எங்கே நீங்க சிவனை வரச் சொல்லுங்க'' என்றார். கதிரேசன் இதுதான் தக்க சமயம் எனக் கருதி ''எங்கே வரச் சொல் பார்க்கலாம், அப்படி அவர் வந்தால் நான் உனக்கு அடியாராக இருக்கச் சம்மதிக்கிறேன், அப்படி வராது போனால் என்ன செய்யலாம் உன்னை'' என்றான் கதிரேசன். 

மதுசூதனன் புன்னகை புரிந்தான். எந்த ஒரு கலக்கமும் இல்லாதவனாய் ''யாம் சிவனை வரச் சொல்லும் முன்னர் எங்கே நீவீர் சிவனை வரச் சொல்லும்'' என்றான் மதுசூதனன். ''என்னால் இயலாது, நீயே முயற்சி'' என்றான் கதிரேசன். ''சொல்சிவனே என பாடும் பாடலெல்லாம் எதற்காக, சிவன் சொல்வார் எனும் நம்பிக்கையா அல்லது சிவன் சொல்லமாட்டார் எனத் தெரிந்து கேட்பதா என்பதைச் சொல்லவும். இயலாது என விட்டுவிடுவது உம்மைப் போன்றோருக்கு, இயலும் என முயல்வது எம்மைப் போன்றோருக்கு'' என்றான் மதுசூதனன். 

''
சிவனைக் கூப்பிடுங்க சாமி'' என்றார் அதே நபர். ''இதோ வரச் சொல்கிறேன்'' என்றான் மதுசூதனன். கதிரேசன் ஆச்சரியமடைந்தான். ஈஸ்வரியிடம் சென்று நின்று கொண்டான். ''என்ன சொல்றான் இவன், எல்லாத்தையும் கேட்டு கூட்டமும் ஆவலா இருக்கு, என்ன ஈஸ்வரி இது'' என ஈஸ்வரியிடம் சொன்னான். ''அவன் பொய்யனாகிப் போனானு சொன்னான்ல அதை நிரூபிக்கப் போறான், வாங்க நாம போகலாம்'' என்றாள் ஈஸ்வரி. ''சிவன் வருவாரோ'' என்றான் கதிரேசன். ''பைத்தியமா உங்களுக்கு, சிவன் எல்லாம் வரமாட்டார்'' என்றாள் ஈஸ்வரி. 

மதுசூதனன் பேச ஆரம்பித்தான். ''பல்லாயிரம் கோடி காலநிலைகள் முன்னே பரம்பொருளே இவ்வுலகம் எல்லாம் உருவாக்கினாய். தோற்றம் இல்லா நிலை கொண்டோனே, நீவீர் தோன்றினீர் என்றே இவ்வுலகம் பொய்யாய் அறியும். யாம் உம்மை அழைக்கின்றோம் என்பதற்காக தோற்றம் கொள்வீரோ'' என்றான் மதுசூதனன். கூட்டம் பரபரப்பானது. கண்கள் மூடினான். பின்னர் தொடர்ந்தான். 

''
மெய்யாய் இருப்போர்க்கே மெய்யானவன் இப்பொழுது தெரிவார், நீங்கள் அனைவரும் மெய்யோ'' என்றான் மதுசூதனன். ''ஏலே என்ன காதுல பூ சுத்துதேலா, மெய்யாய் இருப்போர்க்கே மெய்யானவர் தெரிவார்னு சொல்லுறீரு, பொய்யனாய்ப் போன உம்ம பேச்சு கேட்டு எப்படிலே அந்தச் சிவன் வருவாரு, இங்கே இருக்கறவகளுக்கு புத்திகெட்டுப் போச்சுனு நினைச்சியாலே நானும் அப்பத பிடிச்சிப் பார்க்கறேன் அடியார்னு சொல்லுத அந்தப் பயலை உன் அடியாருனு சொல்லுத ஏன்லே உன்னை எவனும் கேள்வி கேட்கமாட்டானு நினைச்சியாலே'' என்றார் அவர். 

''
சாமியை மரியாதைக் குறைவா பேசாதீங்க அவர் சொன்னது சரிதானே நாம மெய்யாய் இருந்தாத்தான் மெய்யானவர் தெரிவார்'' என கூட்டம் ஏற்பாடு பண்ணியவர் சொன்னார். ''அப்போ பொய்யாய் போனவன் கூப்பிட்டா மெய்யானவர் வருவாகளோ, கோவிலுக்கு வெளியில அவன் வரட்டும்லே உசிரோட எங்கயும் போகமாட்டாம்ல அவன்'' எனப் பேசிவிட்டு கதிரேசனிடம் சென்று ''நல்லா பாடினலே, நீதாம்லே உண்மையான அடியார்'' எனச் சொல்லிவிட்டு விறுவிறுவென அவர் வெளியேறினார். வைஷ்ணவி கலக்கம் அடைந்தாள். மதுசூதனன் அந்தப் பேச்சைக் கேட்டு கலக்கமின்றி உடனே அவ்விடம் விட்டு எழுந்தான். ''யாம் வெளியே செல்கிறோம், அவரது ஆசை தீரட்டும்'' என சொல்லிவிட்டு வெளியே நடந்தான். 

கூட்டம் தவித்தது. என்ன ஆகப்போகிறதோ என அச்சத்துடன் மதுசூதனனைத் தடுத்தார்கள். வைஷ்ணவி ஓடிச்சென்று ''மதுசூதனா இதெல்லாம் வேண்டாம்டா'' என்றாள். அதையும் மீறி கோவிலுக்கு வெளியே மதுசூதனன் வந்தான். ''சாமி வேண்டாம்'' என்றது கூட்டம். சொன்ன கூட்டம் பதட்டத்துடன் பார்த்து நின்றது. மதுசூதனன் வெளியே வந்ததைப் பார்த்ததும் உள்ளே பேசிய நபர் ''உனக்கு ரொம்பத் தைரியம்லே இரும்லே வாரேன் உன்னை இந்த இராத்திரியிலேயே சிவலோகம் அனுப்புதேன்'' என வேகமாகச் சென்றார். 

வைஷ்ணவி மதுசூதனனிடம் ''உன் உயிருக்கு ஆபத்து வா போகலாம்'' என்றாள். ''வரட்டும் அந்த நபர், யாம் இங்கேயே காத்திருப்போம்'' என்றான் மதுசூதனன். மதுசூதனனின் செய்கையை கண்டு கதிரேசன் ஆச்சரியமடைந்தான். 

(தொடரும்) 

Thursday 18 November 2010

அடியார்க்கெல்லாம் அடியார் - 33

வைஷ்ணவியை தனது அறைக்கு அழைத்துச் சென்றாள் ஈஸ்வரி. மனதினை தைரியமாய் வைத்துக்கொள்ளுமாறு அறிவுரைச் சொன்னாள். வைஷ்ணவிக்கு ஈஸ்வரியின் அன்பும், ஆறுதலும் புதுத் தெம்பினைத் தந்து இருந்தது. ''நாம செஞ்ச பாவத்தை எல்லாம் போக்க பாபநாசம் போனா போதும்'' என்றாள் ஈஸ்வரி. ''பாவம்னு எதை சொல்றது, பண்ற காரியமெல்லாம் பாவ காரியம்னு தான் சொல்லி வைச்சிருக்காங்க, பாபநாசம் எல்லாம் போக வேண்டியதுல்ல'' என்றாள் வைஷ்ணவி. ''அந்த ஊருக்கு அதான் அப்படி பேரு வைச்சிருக்காங்க, நாம எல்லாரும் ஒருநாள் போய்ட்டு வருவோம்'' என்றாள் ஈஸ்வரி.

''
சந்தோசமா இரு வைஷ்ணவி'' என்றான் கதிரேசன். ''ம்ம், நீங்க எல்லாம் இருக்கறப்போ எனக்கு என்ன கவலை, சந்தோசமாகவே இருப்பேன்'' என்றாள் வைஷ்ணவி. அன்றைய தினம் கதிரேசனின் வீட்டிலேயே பொழுதைக் கழித்தாள். செல்லாயி வைஷ்ணவியின் மேல் காட்டிய அன்பு வைஷ்ணவி மேலும் சந்தோசம் கொள்ளச் செய்தது. 

நாட்கள் நகர ஆரம்பித்தன. ஒருநாள் வேலைக்குச் சென்று திரும்பிய மதுசூதனனை நோக்கி மிகவும் பயங்கரமாக சத்தம் போட ஆரம்பித்தாள் ருக்மணி. ''விவாகரத்துக்கு தயாரா இருங்கோ'' என்றாள் ருக்மணி. அதிர்ச்சியானான் மதுசூதனன். சத்தம் கேட்டு மதுசூதனனின் பெற்றோர்கள் ருக்மணியைச் சத்தம் போட்டார்கள். அந்த வேளைப் பார்த்து ருக்மணி தனது பெற்றோர்களை வரச் சொல்லி இருக்க அவர்களும் அங்கே வந்து சேர்ந்தார்கள். ''இதோ இவா ஒரு பொண்ணை காதல் பண்ணி, ஏமாத்திட்டு என்னை கல்யாணம் பண்ணி இருக்கா. நான் ஒரு நல்ல வைணவப் பொண்ணா இருக்கனும்னு ஒரு வருசம் தாம்பத்யமே கூடாதுனு எங்கிட்ட சேலஞ்ச் பண்ணினா, புரியாம நானும் ஒப்புக்கிட்டேன், இனிமே என்னால இவாவோட வாழ முடியாது, பிரிச்சிருங்கோ'' என சத்தமாகவேச் சொன்னாள் ருக்மணி. 

இருவரது பெற்றோர்களும் அதிர்ச்சியில் அப்படியே நின்றார்கள். மதுசூதனனின் உடலெல்லாம் வியர்த்துக் கொட்டத் தொடங்கியது. சப்தநாடிகளும் ஒடுங்கிப் போனவனாய் மறுவார்த்தைப் பேசாது நின்றான். ''என்னை வைணவப் பொண்ணுனு நிரூபிக்கச் சொன்னா, இவா வைணவனானு கேளுங்கோ, இனிமே இவாவோட வாழறது பொய்யான வாழ்க்கையாத்தான் இருக்கும்'' என்றாள் ருக்மணி. ''ரொம்பப் பேசாதே, இவனுக்கு ஆயிரம் பொண்ணு கிடைப்பாங்க, வெளியே போ'' என்றார் மதுசூதனனின் தந்தை. அடுத்த நிமிடமே ''ஆகிறதைப் பாருங்க'' என ருக்மணியை அழைத்துக் கொண்டு அவளது பெற்றோர்கள் வெளியேறினார்கள். 

''
நீ கவலைப்படாதேடா'' என்றார் மதுசூதனனின் தாய். ஆனால் மதுசூதனன் வீட்டை விட்டு வெளியேறினான். அவனைத் தடுத்து நிறுத்த எவ்வளவோ முயற்சித்தார்கள். ''இத்தனை நாள் நீ செஞ்சதெல்லாம் சரினு தான இருந்த இப்போ அவ சொன்னதும் என்னடா ஆச்சு உனக்கு'' என மதுசூதனனின் தாய் சத்தமிட்டார். ஊர் கூடியது. பதில் ஏதும் பேசாமல் நடக்க ஆரம்பித்தான் மதுசூதனன். ''நில்லுடா'' என அவனது தந்தை சத்தமிட்டார். ''பொய்யனாகிப் போனேன் மெய் எடுத்தும் பொய்யனாகிப் போனேன்'' என்று பெற்றோர்களை நோக்கி இருகைகள் கூப்பி வணங்கி சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தான். செய்வதறியாது திகைத்து நின்றார்கள் மதுசூதனின் பெற்றோர்கள்.

ஒவ்வொரு ஊராக செல்ல ஆரம்பித்தான். கோவில்களும், குளங்களும் அவனது உறவுகளாகின. சிவன் வேண்டாம் என்றவன் சிவனுக்கு உறவானான். வழியில் கிடைத்ததை உண்டு பசி போக்கினான். வழியில் கஷ்டபடுபவர்களை கண்டு உதவிகள் செய்தான். 

சங்கரன்கோவிலுக்குப் பயணமானான். மதுசூதனனிடம் பணம் வாங்காமலேயே பயணச்சீட்டு கிழித்துக் கொடுத்தார் நடத்துநர். ''டிக்கட்டுக்கு காசு கொடு'' என்றார் பக்கத்தில் இருந்தவர்''சாமிக்கு எதுக்கு காசுசாமிகிட்டதான் ஏது காசு'' என்றார் நடத்துநர். அவர் சிரித்துக்கொண்டே அடுத்த பயணியிடம் சென்றார். மதுசூதனன் கண்களை மூடியவாறு அமர்ந்து இருந்தான். சங்கரன் கோவிலில் சிவன் ஆலயத்தில் மதுசூதனன் பாடினான். 

''
பொய்யனாகிப் போனேன் சிவனே 
பொய்யனாகிப் போனேன்
மெய்யாய் நீயும் வீற்றிருக்க
பொய்யனாகிப் போனேன்
தையல் மனம் தைத்துப்
பொய்யனாகிப் போனேன்
மெய்யில் உயிர் கொண்டது
பொய்யனாகவோ சிவனே''

பாடிய குரல், பரிச்சயப்பட்ட குரல் போல இருப்பதைக் கேட்டு கோவிலுக்கு வந்திருந்த  கதிரேசன் பாடியவனை நோக்கி வந்தான். ''மதுசூதனா'' என்றான் கதிரேசன். கதிரேசனைப் பார்த்ததும் மதுசூதனன் கண்கள் மூடினான். ''என்ன கோலம் இது?'' என்றான் கதிரேசன். கோவிலுக்கு வந்திருந்த வைஷ்ணவி, ஈஸ்வரி, செல்லாயி அங்கே வந்தார்கள். அவர்களை விட்டு விலகி நடக்க ஆரம்பித்தான் மதுசூதனன். கதிரேசன் அவனைப் பிடித்து நிறுத்தினான். 

'நில் மதுசூதனா' என்றான் கதிரேசன். பதிலேதும் பேசாமல் நின்றான் மதுசூதனன். ''நீ எதுக்கு இப்படி வேசம் போடுற உன் மனசுல என்னதான் நினைச்சிட்டு இருக்க?'' என்றான் கதிரேசன். 

''
மனம் நாடியதை மனம் வெறுத்தது; நாடுவது எதுவென கண்டேன்; பொய்யனாகிப் போனதை புரிந்தேன்'' என்றான் மதுசூதனன். கதிரேசனுக்கு மதுசூதனனை ஓங்கி அறைய வேண்டும் போல் இருந்தது. பெரிய ஞானி போல நடந்து கொள்கிறானே என கோபமாக வந்தது. ''ஒழுங்காப் பேசப் போறியா, பல்லை உடைக்கவா'' எனக் கேட்டான் கதிரேசன். 

''
உன்னைச் சிவன் பக்தன் என எண்ணியிருக்க, உன்னுள் விஷம் ஏறிட உதவியது குடும்பமோ, சேர்ந்த குலமோ'' என்றானேப் பார்க்கலாம் மதுசூதனன். கதிரேசன் பளார் என மதுசூதனனை அறைந்தான். மதுசூதனன் சிரித்தான். 

''
உள்ளே எரியும் எரிமலையெல்லாம் வெளித்தூக்கி எறிந்திட, வெளிச்செல்லும் எரிமலையும் உன்மீது வெப்பமின்றி விழுந்து குளிர்ந்தாலன்றி நீயும்தான் சிவனுக்கு அடியார் ஆவாயோ? நானே ஆனேன் சிவனின் அடியார், அந்தச் சிவனுக்கு எம்பெருமான் திருமாலும் அடியார்'' எனச் சிரித்துக்கொண்டேச் சொன்னான் மதுசூதனன். கதிரேசன் மறுமுறை அவனை அடிக்க ஓங்க அவனது கைகளைப் பிடித்து நிறுத்தினாள் ஈஸ்வரி. 

''
என்ன காரியம் பண்றீங்க, உங்க மனசுக்கு ஏத்தமாதிரி அவர் நடந்துக்கிரலைங்கிறதுக்காக உங்க வெறுப்பை ஏன் காட்டுறீங்க, இத்தனை நாள் இல்லாத கோவம் இப்போ ஏன் வர்ரது உங்களுக்கு'' எனக் கேட்டாள் ஈஸ்வரி. 

''
வைஷ்ணவியை ஏமாத்திட்டான், இன்னொரு பொண்ணையும் கல்யாணம் பண்ணி ஏமாத்திட்டான் இப்போ அந்த சிவனுக்கே களங்கம் விளைவிக்கிறமாதிரி அடியாராம் அடியார், அடி வைச்சா எல்லாம் இவனுக்குப் புரியும், என்னை விடு ஈஸ்வரி'' என்றான் கதிரேசன். கணவனின் ஆத்திரம் காண இயலா ஈஸ்வரி சற்று மிரண்டு போனாள். இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த வைஷ்ணவி ''இந்த பாவத்தை நாம ஏன் சுமக்கனும், வாங்க'' என அழைத்தாள். 

''
பொய்யனாகிப் போவாய் நீயும், எல்லாம் புறந்தள்ளி என்போல் நீயும் ஆலயங்கள் செல்வாய் இது என் அழையாத அழைப்பு அதுவே நீ கொள்ள் இருக்கும் புதுப்பிழைப்பு'' என்றான் மதுசூதனன். கதிரேசனுக்கு ஆத்திரம் வந்தது. மதுசூதனனை நோக்கிச் சென்றான். அவனது கழுத்தைப் பிடித்து உயர்த்தினான். கூட்டம் கூட ஆரம்பித்தது. 

''
உன்னைப் போல ஊர் ஊரா சிவன் தேடுற அவசியமில்லை எனக்கு'' என கோபமாகச் சொல்ல வைஷ்ணவி கதிரேசனை ''வா கதிரேசா கூட்டம் சேருராங்க'' என வரச் சொன்னாள். ஈஸ்வரி தனது அத்தையைப் பார்த்தாள். அதுவரை பேசாமல் இருந்த செல்லாயி கதிரேசனின் கைகளைத் தட்டி விட்டுவிட்டு மதுசூதனனிடம் '' நீ சாப்பிட்டியாப்பா'' என்றார்.

''
உயிர்கொல்லும் விஷம் உட்கொண்டு உயிர்பிழைக்கும் வித்தை கொண்டோனிடம் என்பசி என்னுயிர் கிள்ளும் வழியை அடைக்கச் சொல்லியா கேட்பேன் இருநாட்கள் விரதமானேன் இன்றே விரதம் போக்குவேன்'' என்றான் மதுசூதனன். சுற்றிப்பார்த்தவர்கள் ''சாமி சாப்பிடலலே, போய் சாமிக்கு ஏதாவது வாங்கியாருங்கலே'' என சொல்லிவிட்டு ''ஏன் தம்பி சாமியோட தகராறு பண்ணுத'' என கதிரேசனை நோக்கியும் அவர் சொன்னார்.

''
இவனா சாமி?'' என சொல்லிவிட்டு கதிரேசன் விலகி நின்று கொண்டான். ''வீட்டுக்கு வாப்பா'' என செல்லாயி மதுசூதனனை அழைத்தார். மதுசூதனன் செல்லாயி பின்னால் நடக்க ஆரம்பித்தான். ''எங்களோட வராதே'' என்றான் கதிரேசன். 

''
அன்னையின் வாக்கினைத் தவறும் நீயும் ஆவாயோ சிவனின் அடியார், நானே சிவனின் அடியார், எம்பெருமான் திருமாலும் சிவனின் அடியார்'' என்றான் மதுசூதனன். ''அவன் பொல்லாதவன்மா, போகச் சொல்லும்மா'' என்றான் கதிரேசன். 

''
வெறுப்பைக் காண வெறுப்பு சுரக்கும்; அன்பைக் கொண்டால் வெறுப்பும் பறக்கும்'' என்றான் மதுசூதனன். ''வைஷ்ணவி இவன் ஏதோ ஒரு படத்தில வேசம் போட்டு இருக்கான், அப்படியே வந்துட்டான், எப்படியெல்லாம் வசனம் பேசறான் பாரு'' என்றான் கதிரேசன். ''அடுத்தவங்களை மதிச்சி நடந்துக்கோங்க'' என கதிரேசனிடம் சொன்னாள் ஈஸ்வரி. அந்த வார்த்தையைக் கேட்டதும் கதிரேசன் மெளனமானான். 

(
தொடரும்)