Saturday 2 February 2013

விஸ்வரூபம்

கிட்டத்தட்ட இரண்டே முக்கால் மணிநேரம் படத்தை பார்த்துவிட்டு இறுதி காட்சி முடிந்த பின்னர் ப்பூ என்றும், படம் மண்ணு போல இருக்கிறது என்றும் வாய் முணுமுணுத்தது. இருப்பினும் இது தமிழ் பட  உலகின் ஒரு புதிய அவதாரம். ஆப்கானிஸ்தானின் வறண்ட பிரதேச மலைகள் கூட கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தது. தமிழ் பட உலகை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திட இயக்குனர் மிகவும் மெனக்கெட்டு இருக்கிறார். மிகவும் சிரமமான இடங்களில் எல்லாம், அதுவும் போர் காட்சிகள் எல்லாம் தத்ரூபமாக செதுக்கி இருக்கிறார்.

மிகவும் சிரமமான கதைக்கருவை மிகவும் நேர்த்தியாக கையாளத் தவறிவிட்டார் என்றே சொல்லலாம். முஸ்லீம்கள் பெருமைப்படுவார்கள் என்று வாய்க்கு வாய் வெளியில் சொல்லியவர் அப்படி ஒன்றும் பிரமாதமாக எதுவும் செய்துவிடவில்லை. ஒரு இந்து, அதுவும் ஆராய்ச்சியாளர், புற்று நோய் எனும் கொடிய நோயிற்கு கதிரியக்கம் மூலம் தீர்வு காண முயல்பவர்,  முஸ்லீம் தீவிரவாதத்திற்கு உதவியாக இருக்கிறார் என்பதில் இருந்து முஸ்லீம்கள் மட்டுமே தீவிரவாதிகள் அல்ல என்பது தெள்ளத் தெளிவு. மேலும் உலகில் நடைபெறும் தீவிரவாதம் அனைத்திற்கும் முஸ்லீம்கள் பொறுப்பல்ல என்பது மிகவும் கண்கூடு. எதற்கும் உதாரணத்திற்கு அமெரிக்க தீவிரவாதம் படித்து பாருங்கள்.

வானம் என்ற ஒரு திரைப்படம். அதில் முஸ்லீம்கள் பெருமைப்படும் அளவிற்கு காட்சி அமைப்புகள் இருந்தது. ஒரு முஸ்லீம் சமூகம் எப்படி தீவிரவாத சமூகமாக பார்க்கப்படுகிறது என்றும் அதே வேளையில் ஒரு முஸ்லீம் எப்படி உதவுகிறார் என்றும் காட்சி அமைப்புகள் இருக்கும். ஆனால் அந்த திரைப்படம் இந்த அளவிற்கு காசில்லாத விளம்பரம் தேடிக்கொள்ளவில்லை. எவரும் அந்த படத்தில் காட்டப்படும் தீவிரவாதம் குறித்து அதிக அளவில் கேள்வி எழுப்பவில்லை.

இந்த திரைப்படத்தில் பல காட்சிகள் மனதில் ஒட்டவே இல்லை. சிறு வயதில் தீபாவளி சமயத்தில் துப்பாக்கி வெடி வெடித்த நியாபகம் வந்து தொலைந்தது. திருடன் போலிஸ் விளையாட்டு எல்லாம் நினைவில் வந்து போனது. எப்போதுமே ஒரு சமூகம் அமைதியில் மட்டுமே திளைத்திருக்க விரும்பும். இயக்குனரின் இறைமறுப்பு எண்ணம் ஆங்காங்கே தென்படுகிறது. இந்து மதத்தையும் விட்டுவைக்கவில்லை. விநாயகரை கடலில் கரைப்பது போன்ற விசயங்கள் சிரிப்பலைகள் எழுப்பின எனலாம். இந்துக்கள் சிரித்துக்கொண்டு போய்விடுவார்கள், ஏனெனில் இந்து சமயம் ஒரு அழுத்தத்தில் இருந்து புறப்படவில்லை. அது மனதில் இருந்து கிளம்பிய ஒன்று. பகவத் கீதை எல்லாம் இந்துக்களின் புனித நூல் அல்ல.

அப்படியெனில் முஸ்லீம் சமூகம்! முகம்மது நபிகளின் வரலாறுதனை புரட்டிப் பார்த்தால் முஸ்லீம் சமூகத்தின் வளர்ச்சி எத்தகைய போராட்டத்தில் இருந்து தொடங்கியது என்பதை கண்கூடாக காணலாம். ஒரு குரான் மட்டும் இல்லையெனில் இந்த முஸ்லீம் எனும் மதம் இல்லாது ஒழிந்து போயிருக்கும் நிலைதான் அன்று இருந்தது. எப்படியெல்லாம் குரான் ஒரு சமூகத்தில் பெரிய மாற்றத்தை கொண்டு வந்தது என்பதை மற்றொரு நேரத்தில் பகிர்ந்து கொள்ளலாம். இந்த இயக்குனரின் இறைமறுப்பு கொள்கைக்கு மதிப்பு தரும் வகையில் டாகின்ஸ் எனப்படும் இறைமறுப்பாளர் பெயரை ஒரு கதாபாத்திரத்திற்கு சூட்டி பெருமைப்பட்டு கொள்கிறார். நான் சிறுமைப்பட்டு கொண்டேன்.

'டர்டி பாம்' எனப்படும் கதிரியக்க ஐசோடோப்களின் மூலம் உருவாக்கப்படும் குண்டுகளினால் பெரும் சேதம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்றும் இது அறிவியல் தொழில்நுட்பத்தின் உச்சகட்டம் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் இது குறித்து அதிகமான அதிகாரபூர்வ செய்திகள் எதுவும் இல்லை. மேலும் இது போன்ற விசயங்களால் நேரடி பாதிப்பு குறைவுதான், ஆனால் மக்களில் ஏற்படும் பய உணர்வு மிகவும் அபாயகரமானது. மனதளவில் பெரும் பாதிப்பினை இதுபோன்ற கதிரியக்க குண்டுகள் ஏற்படுத்திவிடும் என்றே கருதப்படுகிறது. பெரும்பாலும் சீசியம் எனும் உலோகத்தின் ஐசோடோப்கள் பயன்படுத்தபடுகிறது. இந்த சீசியம் பற்றியும் கதிரியக்க விளைவுகள் பற்றியும் மற்றொரு முறை பார்க்கலாம். செர்னபில் அணு உலை வெடிப்பின் போது இந்த சீசியமே அதிக அளவில் வெளிப்பட்டதாக தகவல் இருக்கிறது.

அப்படிப்பட்ட கதிரியக்க விளைவைத்தான் இந்த திரைப்படம் ஏற்படுத்திவிடுமோ எனும் அச்சம் இஸ்லாமிய அமைப்புகளின் மனதில் குறிப்பாக தமிழகத்தில் வந்து சேர்ந்து இருக்கிறது என்றே எண்ணத் தோன்றுகிறது.

தலிபான் இயக்கத்தின் தலைவர் முல்லா முகம்மது ஓமர் பற்றி பெயர் குறிப்பிட்டதோடு பல காட்சிகள் அதீத கற்பனைகளுக்கு உட்பட்டவைதான். அவருடைய அமெரிக்க வெறுப்பு ஏற்பட்டதற்கு பல காரணங்கள் உண்டு. ஆப்கானிஸ்தான் ஒரு போர் நிலமாகவே திகழ்ந்து வந்து இருக்கிறது. இதையெல்லாம் படத்தில் ஒரு சில வரிகளில் ஒரு மூதாட்டியின் சொல்லில் இருந்து முடித்து கொள்கிறார்கள். தலிபான் இயக்கத்தின் கட்டுபாட்டில் இருந்தவரை தான் பெண்கள் ஒடுக்குமுறை எல்லாம் இருந்தது எனலாம். தலிபான் இயக்கம், ஷ்ரியா விதிகள் எல்லாம் ஒரு சமூகம் தனக்கு விதித்து கொள்ளும் கட்டுபாடுகள். இதைத்தான் குரானும் செய்கிறது. தனது சமூகத்தை தன்னுள் ஒரு கட்டுப்பாட்டினை கொண்டு வரச் செய்ய அது மேற்கொண்ட முயற்சியில் வெற்றி பெற்றே இருக்கிறது. இல்லையெனில் க்வரைசி எனும் குழுக்களில் இருந்து முஸ்லீம் முன்னேறி இருக்குமா என்பது கேள்விக்குறியே!

வாமன அவதாரம் மகாபலிக்காக! கிருஷ்ண அவதாரம் கம்சனுக்காக பின்னர் பாண்டவருக்கு உதவிட. இதில் விஷ்ணு விஸ்வரூபம் எடுத்து இருப்பார் அதிலும் குறிப்பாக கிருஷ்ண அவதாரத்தில். சகோதர போராட்டத்தில் எடுக்கப்பட்ட விஸ்வரூபம் அது. விஸ்வரூபம் எல்லாம் ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை. போர் நடந்தே ஆனது.

ஆனால் இந்த நிழல் விஸ்வரூபம், குரானை மீண்டும் விஸ்வரூபம் எடுக்க வைத்து இருக்கிறது, தமிழகத்தில் மட்டும்! 

3 comments:

vimal said...

அருமையான விமர்சனம் பாராட்டுக்கள் நண்பரே

indrayavanam.blogspot.com said...

அதீத விமர்சனம்...

Radhakrishnan said...

நன்றி விமல் மற்றும் இன்றைய வானம். படத்தில் குறிப்பிடப்படும் ஜிகாத், அல்லாஹு அக்பர் போன்றவற்றை எல்லாம் எதற்கும் தேடி பாருங்கள். பல விசயங்கள் புரியும்.