Saturday 14 July 2012

எவருக்கு என்ன லாபம்

என் எதிர்பார்ப்புகளுக்கு உட்பட்டு 
நீ இல்லையெனில் 
நீ என் அன்னையும் இல்லை 
நீ என் தந்தையும் இல்லை 
உங்களுக்கான மகனும் நான் இல்லை 
வெற்று உறவாய் இருப்பதில் 
எவருக்கு என்ன லாபம் 

என் சிந்தனையின் கோட்டில் 
நீ இல்லையெனில் 
நீ என் தோழனும் இல்லை 
நீ என் தோழியும் இல்லை 
உங்களுக்கான தோழமை எனதில்லை 
நட்பு என சொல்லிக்கொள்வதில் 
எவருக்கு என்ன லாபம் 

நான் கேட்கும் வரங்கள் 
நீ தரவில்லையெனில் 
நீ கடவுள் இல்லை 
உனக்கு கோவில் இல்லை 
உனக்கான பக்தனும் நான் இல்லை 
இருப்பதாய் சொல்லிக் கொள்வதில் 
எவருக்கு என்ன லாபம் 

எல்லாம் இருந்தும் இருந்தும் 
நிம்மதியாய் நீ இல்லையெனில் 
இது உன் வாழ்க்கை இல்லை 
வாழ்க்கையில் பயனும் இல்லை 
பூமிக்கான மனிதனும் நீ இல்லை 
மனம் செத்த சடமாய் இருப்பதில் 
எவருக்கு என்ன லாபம் 

தெளிந்த அறிவு இன்றி 
தேடுவதில் உன்னை தொலைத்தால் 
இயற்பியல் விதிகளும் இல்லை 
இயற்கை தேர்வும் இல்லை 
இதற்கான நடைமுறையும் இல்லை 
பரிணாமமும் பகுத்தறிவும் சொல்வதால் 
எவருக்கு என்ன லாபம் 

லாபம் என்றே தொடங்கிட 
இது வியாபாரம் இல்லை 
பாபம் என்றே ஒதுங்கிட 
இது பந்தயம் இல்லை 
அன்பில் கிடந்து வாழ்ந்திடும் 
பண்பின் சிகரமாம் வாழ்க்கை இது
எவருக்கு என்ன லாபம் 
என்றே கணக்கை தவிர்த்து 
எல்லோருக்கும் லாபம் என்றே 
போற்றி வாழ்ந்திடுவோம் 

3 comments:

கோவி said...

வாழ்க்கை தொழிலாய் போய்விட்ட நேரத்தில் சுரீரென ஒரு கவிதை..

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

//லாபம் என்றே தொடங்கிட
இது வியாபாரம் இல்லை
பாபம் என்றே ஒதுங்கிட
இது பந்தயம் இல்லை
அன்பில் கிடந்து வாழ்ந்திடும்
பண்பின் சிகரமாம் வாழ்க்கை இது
எவருக்கு என்ன லாபம்
என்றே கணக்கை தவிர்த்து
எல்லோருக்கும் லாபம் என்றே
போற்றி வாழ்ந்திடுவோம் //
நல்ல கருத்துள்ள கவிதை

Radhakrishnan said...

நன்றி கோவி. நன்றி முரளிதரன்.