Thursday 26 April 2012

நமக்கெல்லாம் எதற்கு இறைவன்

இந்த முறை சாமியாரை இத்தனை விரைவில் சந்திப்பேன் என சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவரை பார்க்க குழுமியிருந்தவர்களில் நானும் ஒருவனாக அமர்ந்து இருந்தேன். என்னை உற்று நோக்கி கொண்டே இருந்தார் அவர். 

முதன் முதலாக நான் காண்பது நிஜமா, பொய்யா எனும் எண்ணம் மனதில் வந்து குடி புகுந்தது. நிஜம் தான் என மனம் சொல்லிக்கொண்டு இருக்க அந்த சாமியார் என்னை உற்று நோக்கி கொண்டே இருந்தார். 

நான் அதற்கு பின்னர் அவரை பார்க்க முயற்சிக்கவே இல்லை. அவரை பார்த்தால் தானே என்னை பார்க்கிறார் எனும் எண்ணம் எழும் எனும் ஒரு மனப்பான்மை வந்து சேர்ந்தது. ஒரு சிலர் வேறு வேறு கேள்வி கேட்க பதில் சொல்லிக் கொண்டிருந்தார் சாமியார். கேள்வியும் பதிலும் மனதில் நிற்கவே இல்லை. 

அப்போது எனது அருகில் இருந்த ஒருவர் சாமியாரை நோக்கி ஒரு கேள்வி கேட்டார். 

நமக்கெல்லாம் எதற்கு இறைவன்? 

இந்த கேள்வியானது என்னை அந்த நபரை திரும்பி பார்க்க வைத்தது. நான் நினைத்து கொண்டிருந்ததை எப்படி இவர் கேட்டு வைத்தார் எனும் எண்ணமே மேலோங்கி இருந்தது. அவரைப் பார்த்து புன்னகைத்து கொண்டேன். அவர் என்னை கவனிக்கவில்லை. 

எதற்கு இப்படி ஒரு கேள்வி வந்தது என தெரிந்து கொள்ளலாமா என கேட்டார் சாமியார். அப்போது சாமியாரை பார்த்தேன், அவர் என்னை பார்ப்பது போலிருந்தது. 

இந்த உலகம் கள்ளம், கபடம், சூது வாதுகள் போன்ற தீய சக்திகளால் சூழப்பட்டு இருக்கிறது. சக மனிதர்கள் சக மனிதர்களை மதிப்பதே இல்லை. இப்படி ஒரு இழிநிலை பிறவிகளாக நாமெல்லாம் வாழ்ந்து கொண்டும் நமக்கு இறைவன் என்ற ஒன்றை வைத்து கொண்டு நம்மை நல்வழிபடுத்த வேண்டும் என வேண்டுவது முறையாக எனக்கு தெரியவில்லை, அதனால் தான் நமக்கெல்லாம் எதற்கு இறைவன் என்று வினவினேன் என்றார் அருகில் இருந்தவர். 

கேள்வி உங்களுடையதா, அல்லது அருகில் இருப்பவருடையதா என்றார் சாமியார். எனக்கு கோவம் வந்தது, அடக்கி வைத்து கொண்டு அமைதியாகவே இருந்தேன். 

எனது கேள்வி தான் இது, ஆனால் கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களிலும் இந்த கேள்வி இருக்கலாம் என்றார் அருகில் இருந்தவர். 

இறைவன் நமக்காக மட்டுமே இல்லை என்றார் சாமியார். 

அதைக் கேட்டதும் எனக்கு மிகவும் கோபம் வந்துவிட்டது. இருப்பினும் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தேன். 

அருகில் இருந்தவர் தொடர்ந்தார். நாம் நல்லவர்களாக மாற இறைவன் அவசியம் இல்லையே, நாம் நன்றாக நடந்தால் நாம் நல்லவர்களாக இருந்துவிட்டு போகிறோம், இதில் நமக்கெல்லாம் எதற்கு இறைவன்? என்றார். 

உன் அருகில் அமர்ந்து இருக்கும் அந்த பக்தன் போன்றோருக்கு இறைவன் அவசியமாக படுகிறார். வேண்டுதல் எதுவும் இல்லை என வேண்டுதல் பல அவர் சொல்லிக்கொண்டே இருக்கிறார். தங்களை தாங்களே திருப்தி படுத்தி கொள்ள இயலாத பட்சத்தில் நமக்கு இறைவன் மிகவும் அவசியம். இந்த உலகம் இருளால் சூழப்பட்டு இருப்பதால் வெளிச்சம் கொண்டு வர இறைவன் அவசியம் என்றார் சாமியார். 

என்னை பற்றி சொன்னதும் ஏதேனும் பேச வேண்டும் போலிருந்தது, இருப்பினும் அமைதியாக இருந்தேன், என்னை பற்றி அவர் பேசவில்லை எனும் சமாதானத்தை என்னுள் விதைத்தேன்.  

நீங்கள் சொல்லும் விளக்கம் புரியவில்லை என்றார் அருகில் இருந்தவர். 

நான் எதற்கு உனக்கு விளக்கம் சொல்ல வேண்டும் என்றார் சாமியார். 

நீங்கள் அறிந்தவர், தெரிந்தவர் என்றார் அருகில் இருந்தவர். 

அப்படியெனில் நீ என்ன முட்டாளா? உன் அருகில் இருப்பவர் முட்டாளா? என்றார் சாமியார். 

எனக்கு தூக்கிவாரிப் போட்டது. இனிமேலும் அமைதியாக இருப்பதில் அர்த்தம் இல்லை. என வாய் திறந்தேன். கொட்டாவி விட்டு விட்டு மூடிவிட்டேன். எதுவும் பேசவில்லை. 

எப்படி என்னை நம்பி விசயங்கள் தெரிந்து கொள்ள முடியும் என வந்தாயோ அதைப்போலவே இறைவன் மூலம் நமது வாழ்வு நலம் அடையும் என பலரும்  உறுதியாக நம்புகிறார்கள். அதனால் நமக்கெல்லாம் இறைவன் அவசியம் என்றார் சாமியார். 

நான் மெதுவாக எழுந்து வெளியில் நடந்தேன். வழியில் ஒருவர் அடிபட்டு வலியால் துடித்து கொண்டிருந்தார். அந்த வழியாக வந்த மற்றொருவர் அவரை அழைத்து கொண்டு மருத்துவமனை செல்லலாம் என அழைத்து சென்றார். 

நமக்கெல்லாம் எதற்கு இறைவன் என சத்தமாக கேள்வியை கேட்டேன். ஒருவர் எனது தோளை தட்டினார். திரும்பினேன். சாமியார் நின்று கொண்டிருந்தார். 

என்னிடம் கேட்க நினைத்த கேள்விக்கு பதில் கிடைத்து விட்டதா என்றார். தலையை மட்டும் ஆட்டினேன். அவரிடம் எதுவுமே பேச தோணவில்லை. 

பூமி பற்றி கேட்பாய் என நினைத்தேன் என்றார் சாமியார். 

இன்னும் படுத்து இருக்கியா எனும் ஒரு சப்தம் என்னை எழுப்பிவிட்டது. 


6 comments:

ரிஷபன் said...

தங்களை தாங்களே திருப்தி படுத்தி கொள்ள இயலாத பட்சத்தில் நமக்கு இறைவன் மிகவும் அவசியம். இந்த உலகம் இருளால் சூழப்பட்டு இருப்பதால் வெளிச்சம் கொண்டு வர இறைவன் அவசியம் என்றார் சாமியார்.

Nice discussion.

'பசி'பரமசிவம் said...

அடிபட்டவரை இன்னொருவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார்.
அடிபட்டவருக்கு இன்னொருவர் உதவி செய்யத் தூண்டியது கடவுள் என்கிறார் சாமியார்?
தூண்டுகிற கடவுள், அடிபட்டவரை அடிபடாமலே தடுத்திருக்கலாமே?
அடிபட வைத்தவர் கடவுள்.காப்பாற்றுபவரும் அவரே?
கடவுள் என்ன விளையாடுகிறரா?...............
நீங்கள் இன்னும் சிந்தித்திருப்பீர்கள்.அதற்குள் கனவு கலைந்துவிட்டது?
பாராட்டுகள்.

பால கணேஷ் said...

உங்களின் படைப்பை இன்று வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். சமயமிருப்பின் பார்த்துக் கருத்திடும்படி வேண்டுகிறேன்.

http://blogintamil.blogspot.in/2012/05/blog-post_04.html

Radhakrishnan said...

நன்றி ரிஷபன்

நன்றி முனைவர் பரமசிவம். இந்த கலந்துரையாடலின் அடிப்படை தத்துவமே இறைவன் அவசியம் இல்லை என்பதுதான். அதாவது இறைவன் பற்றி பேசும் சாமியார் ஒரு மனிதர். ஆனால் அந்த சாமியாரை இறைவனாக நாம் பார்க்கிறோம். அடுத்து அடிபட்டவர் ஒரு மனிதர், அடிபட்டவரை அழைத்து செல்பவரும் மனிதர். இங்கே இறைவனுக்கு எந்த வேலையும் இல்லை. ஆனால் அடிபட்டவரை அழைத்து செல்பவரை நாம் இறைவன் என சொல்லிக்கொள்கிறோம். அதனால் தான் உங்களுக்கு இப்படியொரு சிந்தனைகள் எழுந்தது. கடவுள் விளையாடுகிறாரா என! நாம் ஆடும் ஆட்டத்திற்கு எல்லாம் இறைவன் பலியாவதுதான் நடந்து கொண்டு இருக்கிறது. எனவே 'நமக்கெல்லாம் எதற்கு இறைவன்' எனும் கேள்வி அனைவருமே சிந்திக்க வேண்டிய ஒன்று.

இப்போது எவருக்கெல்லாம் இறைவன் அவசியம் என்பதற்கான பதிலும் சொல்லப்பட்டு இருக்கிறது. மேலும் சாமியார் இறைவன் பற்றி பேசி பிழைப்பு நடத்தும் நிலையில் இருக்கிறார், எனவே அவருக்கு இறைவன் அவசியமாக இருக்கலாம்.

வலைச்சரம் மற்றும் பல வலைப்பூக்கள் படித்து பல நாட்களாகி விட்டது. நேற்றுதான் தமிழ்மணமே பார்த்தேன். அதே சச்சரவுகள் அடங்கிய பதிவுகள். ம்ம்... விரைவில் வலைச்சரம் பார்வையிடுகிறேன். பகிர்ந்தமைக்கு நன்றி கணேஷ்.

Unknown said...

//அடிபட்டவர் ஒரு மனிதர், அடிபட்டவரை அழைத்து செல்பவரும் மனிதர். இங்கே இறைவனுக்கு எந்த வேலையும் இல்லை. ஆனால் அடிபட்டவரை அழைத்து செல்பவரை நாம் இறைவன் என சொல்லிக்கொள்கிறோம். //

அது மட்டுமல்ல, இங்கு அடித்தவரும் மனிதர் (அதாவது ஆக்சிடெண்ட் செய்தவர்)அவரையும் இறைவன் என்றே சொல்லலாமே !!!ஏனெனில் அவனன்றி ஒரு அணுவும் அசையாதே :-)

Sivamjothi said...


வணக்கம்

கடவுள் ஒருவரே! நாம் கடவுளின் பிள்ளைகள். வேறு எந்த பாகு பாடும் கூடாது. இதனால் தான் நாட்டில் இத்தனை பிரச்சனைகள். மனிதனாக ஒன்று படுவோம்.வேறு பாட்டை களைவோம். எத்தனை சொல்லி கொடுத்தாலும், எத்தனை பாடம் எடுத்தாலும் நடக்காது. ஒரு சில நாளில் மறந்து போகும். தவம் செய்து நம்மில் இருக்கும் பாவ மூட்டையை அழித்து வாழ்வில் சந்தோசமாக இருப்போம். மற்றவரை சந்தோஷ படுத்துவோம்.நான் சொல்ல போகும் தகவல் அணைத்தும் சித்தர்கள் ஞானிகள் சொன்ன ஞான விளக்கம் பற்றியது. எப்படி வாழ்க்கையை நல்ல படியாக வாழ்வது என்று சொன்னது

ஞானம் என்பது பரிபூரண அறிவு. அது நம்மை அறிந்த பிறகே நடக்கும். நாம் என்பது இந்த உடலோ மனமோ கிடையாது. நான் என்பது உயிர். இதை அனுபமாக இல்லாமல் இருக்கிறது.இதை அநுபவம் ஆக்க வேண்டும். இதை எல்லா ஞானிகளும் சொல்லி சென்று உள்ளனர்.

இதுவரை நாம் மற்றவரிடம் இருந்து தான் எல்லாவற்றையும் கற்று கொண்டோம். சாம்பார் அம்மாவிடம், .... இந்த புதிய பாடத்தை கற்று கொள்ள ஒருவர் தேவை. அவர் தான் குரு. ஞான சற்குரு.

நான் உங்களுக்கு புத்தகம் கொடுக்க ஆவல். எப்படி அனுப்புவது என்று தெரியவில்லை.அதனால் இண்டநெட் இல் அனுப்புகிறேன்.

இதை தான் ஞானிகளும் சித்தர்களும் செய்து வந்தனர். இது உங்களுக்கு புதிதாக இருக்கலாம். இதை ரகசியம் என்று நிறய பேர் சொல்லி தருவது இல்லை.

திரு அருட்பிரகாஷ வள்ளலார் அவர்கள் அருளால் எல்லாம் வெளியே சொல்லி கொண்டு இருக்கிறோம்.

உலகில் பிறந்து ஒவ்வொரு மனிதனும் வாழ்வில் நல்ல படியாக வாழவேண்டும். அதற்க்கு முதலில் நான் யார் என்பதை அனுபவமாக தெரிந்து கொள்ள வேண்டும்.

அப்படி தெரிந்து கொள்ள தவம் செய்ய வேண்டும். தவம் என்பது சும்மா இருப்பது. மனதை பயன்படுத்தி செய்யும் எந்த செயலும் அல்ல.

அனைவருக்கும் சொல்லி கொடுங்க. நன்றி.

லிங்க்ஐ படியுங்க.

http://tamil.vallalyaar.com/?page_id=80


blogs

sagakalvi.blogspot.com
kanmanimaalai.blogspot.in

Video link
http://sagakalvi.blogspot.in/2013/06/2013.html


Thanks


இறைவன் ஒருவர்