Wednesday 17 August 2011

அன்னா ஹசாரேவாம் உஷார்

கடையில போய் வெல்லக்கட்டி வாங்கிட்டு வாப்பா என அம்மா சொல்லும்போதே பத்து பைசாவை சரிகட்ட வேண்டும் என நினைக்கும் பிள்ளைகள் கொண்ட தேசம் இது.

தனக்கு வேலை செய்பவன் கூலி வாங்குவதோடு மட்டுமின்றி கொத்தடிமையாக இருக்க வேண்டும் என நினைக்கும் முதலாளிகள் உள்ள தேசம் இது. ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என இலவசமாக தருவதுபோல் தந்து பணம் குவிக்கும் வியாபாரிகள் கொண்ட தேசம் இது.

ஆட்சிக்கு வந்த விதமே மக்களுக்கு அடுக்கடுக்காக பணம் தந்துதான், அதை வாங்கி பதுக்கி கொண்ட மக்களா ஊழலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள்? தான் கொடுப்பதை மட்டுமே வெறுக்கும் மக்கள், தாங்கள் பெரும் போது சிந்திப்பதும் இல்லை.

ஊழல் என்பது இரண்டு பக்கமும் நடப்பது. ஒருவர் கொடுப்பது, மற்றொருவர் வாங்குவது. கொடுப்பவர் இல்லாமல் போனால் வாங்குபவர் எப்படி இருக்க இயலும்?

உண்ணாவிரதம் கூட ஒருவகை ஊழல் தான். ஒன்றை நிலைநாட்ட இன்னொரு விசயத்தை கையாள்வது ஊழல் தான். இத்தனை வருடமாக பாரத தேசத்தில் ஊழல் இல்லாமலா இருந்தது? இப்பொழுது மட்டும் ஊழல் ஊழல் என உரக்க சத்தமிட.

இந்த ஊழலை ஒழிக்க ஒரே வழி உண்டு. அந்த வழி எப்போதும் சாத்தியமும் இல்லை. பத்து ரூபாய் கொடுத்தால் வேலை நடக்கும் என தெரிந்தால் பத்து ரூபாய் தரத்தான் மக்கள் காத்து இருக்கிறார்கள், இந்த வேலை நடக்காவிட்டால் கூட பரவாயில்லை, பணம் தரமாட்டேன் என போகும் மக்கள் வெகு வெகு குறைவு. லஞ்சம் தராதவர்களை இளிச்சவாயர்கள் என பேசும் மக்கள் இருக்கும் வரை லஞ்சம் ஒழியாது.

கிசன் பாபுராவ் ஹசாரே. இவர் அன்னா ஹசாரே என அழைக்கப்படுகிறார். ஊழல் எதிர்ப்பு சட்டத்தை நிறைவேற்ற ஏப்ரலில் நான்கு நாட்கள் உண்ணாவிரதம் இருந்திருக்கிறார். ஏப்ரல் முதல் தினம் முட்டாள் தினம் என்றால் ஏப்ரல் மாதம் முழுவதுமே முட்டாள் மாதம் தான், அது எதற்கு, முன்னூற்றி அறுபத்து ஐந்து நாட்களும் முட்டாள்கள் தினம்தான் இந்தியாவில். சட்டத்தை போட்டுத்தான் ஒன்றை தடுத்து நிறுத்த வேண்டும் என நினைத்தால் ஓரளவு அவ்விசயம் குறையுமே தவிர, முற்றிலுமாக குறையாது என்பதுதான் நாட்டில் நடந்து வரும் கொலைகளும், குற்றங்களும் காட்டும் சாட்சி. ஊழல் எதிர்ப்பு சட்டம் வலிமை படுத்த வேண்டுமாம்.

உனக்கும் எனக்கும் மட்டும் தெரியட்டும் என ஊழல் நடந்தால் எவர் அதை தடுப்பது, ஆதாரமில்லாமல் நடத்தப்படும் ஊழல்களை எவர் நிறுத்துவது. ஊழல் செய்யாமலே ஊழல் செய்தார் என பொய் குற்றச்சாட்டுகள், ஊழல் செய்தார் என தெரிந்தும் பல வருடமாக நீதிக்குள் சிக்காமல் வளைந்து செல்வது என்பதெல்லாம் எப்படி? அதுதான் இந்திய தேசம். உயரத்திலும் தன்னை காண்பிக்கும், தாழ்வதிலும் தன்னை காண்பிக்கும். முரண் கொண்ட தேசம்.

கிட்டத்தட்ட நாற்பத்தி இரண்டு வருடங்கள் முன்னாள் கொண்டு வரப்பட்ட ஊழலை ஒடுக்கும் சட்டம் இன்னமும் இந்த இந்திய திருநாட்டில் நிறைவேற்றப்பட முடியவில்லையெனில் காரணம் என்ன? திருடர்களிடமே திருடாதே என சொன்னால் எந்த திருட்டு பயல் தான் காது கொடுத்து கேட்பான்.

இந்த அரசு இதை நிறைவேற்ற வில்லையென கூக்குரலிடும் பா ஜ க எனும் பசுத்தோல் போர்த்திய குரங்கு தான் அரசு நடத்திய போது இதை பற்றியே தெரியாதா?  மக்கள் மடையர்களாக இருக்கும் வரை மடையர்கள் ஆட்சியை நடத்தத்தான் செய்வார்கள். கேடு கெட்ட தேசம்.

இந்த மசோதா எத்தனை முறை மாற்றம் செய்யப்பட்டது. திருடுபவனுக்கு தோதாக ஒரு சட்டம் வேண்டுமெனில் அதை எழுதாமலே இருக்கலாமே. அப்படித்தான் பல வருடங்களாக இந்த மசோதா தள்ளப்பட்டு வந்திருக்கிறது. இப்படியொரு மசோதா இருப்பதே பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவரவர் வேலை நடக்க வேண்டும் என இருப்பவருக்கு இதெல்லாம் எதற்கு.

சாமான்ய மக்களின் குறைகளை கூறியே தனக்கு குறை இல்லாமல் பார்த்து கொண்ட தலைவர்கள் வளர்ந்து வரும் தேசம் இது. அதோடு மட்டுமின்றி தனக்கு வசதி வேண்டுமெனில் கறை படியாத கைகள் என உரைகள் கூறி , உறைகள் மாட்டி திரியும் மக்கள் கொண்ட தேசம் இது.

அன்னா ஹசாரே, நீங்கள் உண்ணாவிரதம் இருக்க எவரும் உங்களுக்கு பணம் தரவில்லையே? என கேட்கும் நாக்கு கொண்ட பூமி இது.

காசு கொடுத்ததும் கூவும் கூட்டம். காசு கொடுக்காமலே சில நேரங்களில் கூவும்.

அன்னா ஹசாரே, உங்கள் போராட்டம் எல்லாம் சரிதான், அதை அடித்தட்டு மக்களிடம் இருந்து தொடங்குங்கள். உங்கள் கூட்டத்தில் இருப்பவர்களின் மனசாட்சியை தொட்டு கேட்க சொல்லுங்கள்.

தவறு செய்யாத மனிதனே இல்லை என்பதை போல ஊழல் செய்யாத மனிதனே இருக்க இயலாது. இதை நீங்கள் உணர்ந்து போராட்டம் தொடக்குங்கள். மக்களிடம் மாற்றம் இல்லையெனில் அரசு மாறி பிரயோசனம் இல்லை.

இப்படி சிலர்,

''என்னப்பா சொன்ன வேலைய செஞ்சியா?''

''செஞ்சிட்டேன் சார்.''

''இந்தா இருநூறு ரூபா. இருவது ரூபா கூட்டித்தான் கொடுத்திருக்கேன்''.

''இன்னும் கொஞ்சம் அதிகமா கொடுங்க சார்''

''சட்டம் என்ன சொல்லுதுன்னு தெரியும்ல''

''அட போங்க சார், சட்டமும் படிச்ச பட்டமும், கொடுங்க சார்''

இப்படியும் சிலர்,

''ஒரு ஆளா எத்தனை பெரிய வேலை செஞ்சிட்ட, இந்தாப்பா பணம்''

''பணம் எல்லாம் எதுக்கு ஐயா, அது என் கடமை''

''வைச்சிக்கப்பா, உபயோகப்படும்''

''உங்க அன்பு ஒன்னு போதும் சார்''

இந்த ஊழலை ஒழிக்க ஒரே வழி உண்டு. அந்த வழி எப்போதும் சாத்தியமும் இல்லை.

அந்த அன்பின் வழி அனைவருக்குமே வலியாக இருப்பதுதான் இந்த காலத்தின் கட்டாயம்.

No comments: