Monday, 15 August 2011

பெரிய்ய லண்டனு

சின்னஞ்சிறு பருவத்தில் வெளியூர் என்றாலே பெரிய விசயமாக இருந்தது. எட்டு வரை உள்ளூரில் பள்ளி இருந்தாலும், ஆறு படிக்க மூணு மைல் தொலைவு செல்ல முயற்சித்தபோது உள்ளூர் பள்ளி ஆசிரியர்களிடம் வாங்கிய திட்டுகள். அந்த பள்ளி ஆசிரியர்களை உங்க ஊருல இருக்கிற பள்ளிக்கூடத்துல சொல்லி தராம எதுக்கு இங்க சொல்லி தர வாறீங்க என எதிர்த்து பேச முடியாத அடக்கம் எனும் அடக்கப்பட்ட தன்மை. பழைய கால நினைவுகள் பசுமையானவையாம். பட்டுப் போன விசயங்கள் பசுமையாக இருப்பது அதிசயம் தான். 

பம்பரம், செதுக்கு முத்து, கண்ணாமூச்சி, கிரிக்கெட், குண்டு விளையாட்டு என சலிக்காமல் விளையாடித் திரிந்த பொழுதுகளில் வானத்தில் பறந்து செல்லும் பறவைகளை விட விமானங்கள் தந்த ஆச்சர்யம் பெரியவை. வரப்புகளில் பேருந்து ஓட்டியும், சுற்றிய கயிறுக்குள் நின்று கொண்டு ரயில் ஓட்டியும் திரிந்த பொழுதுகளில், காகிதத்தில் செய்யப்படும் விமானமும், கப்பலும் மிகவும் பிரசித்து பெற்றவை. மழையால் தன்னை நிரப்பி கொண்ட சாலையில் மிதந்து செல்லும் கப்பலில், கத்தி கப்பல் தரை தட்டியே நிற்கும். ஓரளவுக்கு மேல் பறக்க முடியாமல் காகித விமானம் படீரென விழும், ஆனால் ஒருபோதும் நொறுங்கியது இல்லை, தொடர்ந்து பறக்க மாட்டேன்கிறதே என மனமும் நொறுங்கிப் போனது இல்லை. 

தொழில் நுட்பம் வளர்ந்த பின்னரும், அந்த தொழில் நுட்பம் நுழைய முடியாத கிராமங்களில் இது போன்ற விசயங்களுக்கு இணை எதுவுமே இல்லை. பிளாஸ்டிக் பொம்மைகளும், பிளாஸ்டிக் கார்களும் வலம் வரும் வீட்டு தரையில் பெற்ற சுகத்தை விட, புழுதியில் புரண்டு, வெயிலில் விறுவிறுத்து பெற்ற சுகம் பன்மடங்கு என ஒப்புமை சொல்வதில் எவ்வித முரணும் இல்லை. அத்தகைய குழந்தை பருவம் மீண்டும் வேண்டுமென்று ஏங்கி தவிக்கும் பல உள்ளங்கள். தொலைந்து போனவை பற்றியே சுத்தி தெரியும் மெல்லிய மனது. 

தாத்தாவையும், பாட்டியையும் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை பற்றிய கதைகள் கேட்டு, நமது வாழ்க்கை எப்படி அமையுமோ எனும் அச்சம் அவ்வப்போது துளிர் விட்டு இருக்கையில் வேலையே இல்லாமல் வாழ்ந்து முடித்துவிட்ட சிலரையும்,  சீட்டாடியும், குடித்தும் சதா சச்சரவுடன் வாழ்ந்து கொண்டிருந்தபோதும் பிள்ளைகள் பெற்று காலத்தால் நகர்த்தப்படும் வாழ்க்கை பெற்றவர்களை பார்க்கும்போதெல்லாம் அந்த அச்சம் மிச்சம் மீதி என எதுவும் இல்லாமல் ஓடிப் போகும். பேயும் பிசாசும், சாமியும் பூசாரியும் என நடுக்கத்துடன் இருட்டில் கிடந்த வாழ்க்கையில் வெளிச்சமும் வராமல் இருந்தது இல்லை. 

வெளியூர், வெளி மாநிலம் என காலடி வைத்தபோது அனைவரும் மனிதர்கள் என்பதே மறந்து போனது கொடுமை. வெளியூர்க்காரன், வெளி மாநிலத்துகாரன் என இனம் பிரிக்கப்பட்டபோது, உள்ளூரில் சாதியால் பிரிக்கப்பட்ட கொடுமையின் வலியை விட சீரணிக்க முடியாத ஒன்றுதான். பழகி போன விசயங்களில் மனம் பேதம் பார்ப்பது இல்லையாம். பாழாய் போன பின்னரும் பதப்படுத்தி பக்குவபடுத்துவது எதற்கு என இருந்து இருக்கலாம். 

இங்கிலாந்து எனும் ஒரு நாடு என தெரிந்ததை விட லண்டன் எனும் நாடுதான் அதிகம் புழக்கத்தில் இருந்தது. லண்டன், அமெரிக்கா என்றாலே பெரிய விசயங்கள். பெரிய லண்டன் துரை இவரு என அடைமொழி எல்லாம் அதிகமாகவே உபயோகத்தில் இருப்பது உண்டு. 

வெளிநாடு செல்வது என்றாலே வெளி கிரகம் செல்வது போல என்றிருந்த நிலையில் வெளிநாடுகள் பற்றிய கனவுகள், வெளிநாடு என்றால் வர்ணிக்க முடியாத கற்பனைகள் என திரிந்த பொழுதுகளை இப்பொழுது நினைத்து பார்க்கும்போது எட்டாதவரை எதுவுமே பெரிய்ய விசயம் தான். 

குடிசைகள் இருக்கும் பகுதிகளுக்கு, மட மாளிகைகள் எப்பொழுதுமே பெரிய்ய. ஒட்டு போட்ட சட்டை டவுசர்களுக்கு, சூட்டும் கோட்டும் எப்பொழுதுமே பெரிய்ய. கருப்பு நிறங்களை விட வெள்ளை நிறங்கள் பளிச்சென இருப்பதும் பெரிய்ய. இப்படி பெரிய்ய பெரிய்ய என பல விசயங்கள் சிறுமையில் தள்ளாடும் நிலை. 

'பெரிய்ய' என கொட்டாவி விட்டு பார்த்த கண்கள். 'பெரிய்ய....' என இளக்காரமாக ஒன்று எப்போதுமே அவை கிடைக்காத பொழுதில் சொல்ல தோன்றும், அல்லது கிடைத்த பின்னர் சொல்ல தோன்றும். 

பெரிய்ய லண்டனு, ஒரு மண்ணும் இல்லை. ஆனால் பிரிந்து போக வழியும் இல்லை. காகிதம், மணல் தரைகளை விட மிக மிக வெறுமையாய்!

2 comments:

வருண் said...

***பெரிய்ய லண்டனு, ஒரு மண்ணும் இல்லை. ஆனால் பிரிந்து போக வழியும் இல்லை. காகிதம், மணல் தரைகளை விட மிக மிக வெறுமையாய்!***

எனக்கென்னவோ, "சொர்க்கமும்" இப்படித்தான் இருக்கும்னு தோனுது -once you get a chance to go, live there! :)

Radhakrishnan said...

சரிதான், நன்றி வருண்.