Monday 17 October 2016

செவ்வாய் கிரகத்தில் நான்

part 2

நான் செவ்வாய் கிரகத்திற்கு சென்றது போன்ற கனவு கண்டேன். ராக்கெட்டில் சென்று செவ்வாய் கிரகத்தில் இறங்கிய இடத்தில் சிறிது நீர். ஒரு குழந்தை போன்ற மனநிலையில் மனம் சந்தோசமானது. என்னுடன் எனது நண்பர்கள் இருவர் வந்து இருந்தனர். பாலைவனம் போன்ற செம்மண் பரப்பு எங்கும் தெரிய ஒரு பக்கத்தில் பாதுகாக்கப்பட்ட இடம் என பலகை தெரிகிறது. இதோ எங்கள் தமிழ் தமிழ் என ராக்கெட்டில் வந்த ஆங்கிலேயர் ஒருவரிடம் சொல்கிறேன். அவரும் ஆமோதிக்கிறார்.

பாதுகாக்கப்பட்ட இடம்தனில் உள்ளே நுழைய தாவரங்கள் பயிரிடப்பட்டு இருப்பது காண்கிறேன். ஆச்சரியமாக இருக்கிறது. அப்படியே நடந்தால் ஊர் வருகிறது. அங்கே மக்கள் தமிழ் நிறத்தில் தென்படுகிறார்கள். நீச்சல் குளத்தில் பலர் மகிழ்ச்சியோடு வரிசையாக அமர்ந்து குளிக்கிறார்கள். அதைத்தாண்டிச் செல்ல ஒரு சிலரிடம் பேச்சு கொடுக்கிறேன். அந்த வழியில் பழங்கால தமிழ் எழுத்து கல்வெட்டு தென்படுகிறது.

இப்படித்தான் என நினைக்கையில் சிறிது நேரத்தில் போஸ்டர் தெரிகிறது. பிரின்டர் இருக்கும் என நினைக்கிறேன். ஒருவர் எனக்கு எதுவும் தெரியாது என்கிறார். இன்னொருவர் இந்தி பேச எங்களுக்குப் புரியாது என சொல்ல பங்களா மொழி பேசி தமிழில் சொல்கிறார். அப்போது எனது மனைவி உடன் இருக்கிறார். பூமியின் வேறு ஒரு பகுதிக்கு வந்துவிட்டோமோ என சந்தேகம் ஏற்படுகிறது.

அங்கிருந்து நடக்க சுடிதார் அணிந்த ஒரு பெண் தரையில் அமர்ந்து போன் பேசிக்கொண்டு இருக்கிறார். சிறிது தூரம் நடந்து எனது மொபைல் எடுத்துப் பார்க்கிறேன். கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் கடந்ததை காட்டுகிறது. செவ்வாய் கிரகம் வர மூன்று வருடங்கள் ஆகிவிட்டதே, மூன்று வருடங்கள் இழந்து விட்டோமே திரும்பிப் போனால் மூன்று வருடங்கள் கிடைக்குமா என கணக்கிட்டு மேலும் மூன்று வருடம் ஆகுமே என நினைக்கிறேன்.

இதே போன்று இங்கு வேறு இடங்கள் உண்டா? கல்லூரி எங்கே? தொழிற்சாலைகள் எங்கே என்ற என் கேள்விகள் மனதோடு இருக்கிறது. அங்கு எவரிடமும் கேட்கவில்லை. மொபைலில் orbit என பூமி போன்ற கிரகங்கள் காட்டுகிறது. படம் எடுத்து அனுப்ப நினைக்கிறேன். ஆனால் அதற்கான signal இல்லை என மனம் சொல்கிறது.

இந்த மனிதர்கள் நம்மை தொடர்பு கொள்ளாமல் இருக்க வாய்ப்பு உண்டு என எண்ணம் உண்டாகிறது. அந்த மனிதர் பேசிய பேச்சில் அரசர் எங்கோ சென்றுவிட்டார் என்பது போன்ற வார்த்தை முழு விசயம் தெரியவில்லை. காட்சிகளின் ஊடே துப்பாக்கி ஏந்திய போலிஸ் எங்களை எவர் எனக்கேட்டுக்கொண்டே ராக்கெட் அருகில் ஆங்கிலத்தில் பேசி வந்து புன்னகையுடன் சென்ற காட்சி.

நான் எங்கு சென்றாலும் உடன் என் மனைவி இருப்பார் எனும் காட்சி, தமிழ் மீதான என் நேசம், மொபைல் போன் தாவரங்கள் என இந்த செவ்வாய் கிரக பயணம் உண்மையிலேயே நான் இதுவரை கண்ட அற்புதமான கனவுகளில் ஒன்று. இந்த கனவு சற்று தொடர்ந்து இருக்கலாம்.

(அடுத்து ஒரு கனவுடன் விரைவில்)

Wednesday 12 October 2016

தேடலும் தரிசனமும் - அகநாழிகை பொன். வாசுதேவன்

மக்கள் பண்பாட்டின் எல்லா நிலைகளிலும் மரபுகள் இயங்குகின்றன. பண்பாட்டை எடுத்துரைக்கும் பல கூறுகளில் மரபும் ஒரு கூறாகும். 

பழக்க வழக்கம் என்பது தனி மனித செயல் மட்டுமன்று. அது மரபணுக்களின் வழியாக நம் முன்னோர்களின் எச்சமாக நமக்குள் வந்து கொண்டிருப்பது. மனித இனம் எத்தனையோ அறிவியல் வளர்ச்சிகளைக் கண்டு வருகிறது. அடிப்படை மனித கூறுகளான குணங்கள் குறைந்து கொண்டே வந்தாலும் அது முற்றிலுமாக தீர்ந்து போய்விடவில்லை. மனித அடிப்படை நற்குணங்களைத் தக்க வைத்துக் கொள்வதில் மரபணுக்களின் பங்கு அதிகம்.

 'மாறா மரபு' எந்த இந்த நாவலில் மரபு என்பதைத் திருத்தியும், மாற்றியும் அமைப்பதன் வாயிலாக வளர்ச்சியை, மாற்றத்தை, முன்னேற்றத்தை எய்தலாம் என்ற நம்பிக்கையோடு மருத்துவத்தின் வாயிலாக அதைச் சாதித்துவிட முடியும் என்று நம்புகிற ஆய்வின் மர்ம முடிச்சுகளையொட்டி கதைக் கரு அமைந்துள்ளது.

 'கத்தி மேல் நடப்பது போன்ற சிக்கலான போக்குடைய இந்தக் கதைக் கருவை மிகவும் லாவகமாகவும், சுவாரசியத்துடன் அளித்துள்ளார் எழுத்தாளர் வெ. இராதாகிருஷ்ணன். அவர் ஒரு அறிவியலாளராகவும், சிந்தனையாளராகவும் இருப்பதால் இந்தத் திறன் அவருக்கு இயல்பாகவே கைகூடியிருக்கிறது. 

பொதுவாகவே, இராதாகிருஷ்ணன் எடுத்துக்கொள்கிற எல்லாக் கதைகளின் கருவும், அறிவியலையும், வாழ்வியலையும் இணைத்து அதிலிருந்து எழுகிற கேள்விகளுக்கு விடை காண முற்படுபவையாக இருந்திருக்கின்றன. ஏன், எதற்கு, எப்படி என்ற அடிப்படை மனித மனக் கேள்விகளுக்கான விடை தேடல்களே இராதாகிருஷ்ணனின் எழுத்துகளின் உள்ளாழ்ந்த பொருள். இந்தத் தத்துவத் தேடல்களினூடாக அவர் கண்டடைகின்ற தரிசனங்களை, உள்ளொளியை நாமும் அவரது படைப்புகளை வாசிப்பதன் வாயிலாக உணர்ந்தறிய முடிகிறது. 

தனித்துவமான கதை சொல்லல் பாணி, எழுத எடுத்துக்கொள்கிற பேசு பொருள், உள்ளடக்கம், எளிமையான நடை என எல்லாவிதத்திலும் நம்மை ஈர்க்கின்றன. வெ.இராதாகிருஷ்ணனின் படைப்புகளைத் தொடர்ந்து பதிப்பிக்கிற வாய்ப்பு கிடைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். தமிழ் எழுத்துலகில் அவர் தொடர்ந்து எழுதித் தடம் பதிக்க எனது நல்வாழ்த்துகள்.

மிக்க அன்புடன்

பொன்.வாசுதேவன்
அகநாழிகை பதிப்பகம்
pon.vasudevan@gmail.com

------------------

தங்களின் நல்வாழ்த்துகளுக்கு எனது பணிவான வணக்கங்களும், நன்றிகளும். நிறைய வாசிப்பு அனுபவமும், எழுத்தாளராக, தினமலரில் உதவி ஆசிரியராக, சட்ட வல்லுநராக இருக்கும் தங்களின் மூலம் எனது எழுத்துக்கள் நூல் வடிவம் பெறுவது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.