Wednesday 16 October 2019

பாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 24

24. காலத்தில் காலம் இல்லை.

இந்த உலகில் எதுவுமே தெரியாமல் இருந்து கொள்வது கூட ஒரு வகையில் பேரின்பம்தான். நாம் பேசுகின்ற பல விசயங்கள் பெரும்பாலும் பிறரைப் பற்றியதாகவே இருக்கிறது. புறங்கூறுதல் போலவே புறங்கூறுதலை கேட்பதும் மோசமானது. ஒருவர் புறம் பேச ஆரம்பித்தவுடன் நாம் விலகியே இருந்தாலும் சிறிது நேரத்தில் அப்பேச்சில் ஈர்க்கப்பட்டு நாமும் அதில் இணைந்து விடுகிறோம். அதே வேளையில் அறிவியல் வளர்ச்சி, புரட்சி என ஒரு புறம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது, மறுபுறம் தங்களது நம்பிக்கைகளை எல்லாம் அத்தனை எளிதாக விட்டுத்தர முன் வராமல் மகிழ்வோடு இருந்து கொள்ளவே பலரும் விருப்பம் கொள்கின்றனர்.

பாமாவும், நாச்சியாரும் இரவு எட்டு மணிக்கு குண்டத்தூர் வந்தடைந்தனர். அங்கு இருந்த ஒரு உணவகத்தில் உணவு அருந்திவிட்டு பெருமாள்பட்டிக்கு நடக்கத் தொடங்கினர். இருள் என்பது ஒளியற்ற ஒரு நிலை. அதே இருள் மனதில் இருப்பின் அதை அறிவற்ற நிலை என்றே குறிப்பிடுகின்றனர். பாமரத்தனம் என்பது அறிவற்ற நிலை என்பதைக் காட்டிலும் தெளிவற்ற நிலை என்றே குறிப்பிடலாம். பாமரத்தனத்தை வெகுளித்தனம் என எண்ணுபவர்களும் இருக்கின்றனர். நிலாவின் வெளிச்சத்தில் சாலை தெளிவாகவே தெரிந்தது.

''பாமா, ஆழ்வார் திருநகரி பத்தி ஏதேனும் உனக்கு முன் ஞாபகம் இருக்கா'' நாச்சியாரின் பாமரத்தனமான கேள்வி அது.

''இல்லைம்மா, எனக்கு அப்படி ஒன்னும் தெரியலைம்மா. நம்மாழ்வார் பத்தி படிச்சதால தெரிஞ்சிகிட்ட ஊருதான் அது, வாழ்நாளில் கட்டாயம் போய் பாக்கனும்னு நினைச்ச ஊருல ஒன்னு அதைத் தவிர வேறு எதுவும் எனக்குத் தெரியலம்மா. அதிலயும் நான் இன்னும் திருவரங்கமோ, திருவில்லிபுத்தூரோ போனது இல்லைம்மா''

''ஒருவேளை உனக்கே தெரியாம இருக்கும், எதுக்கும் நீ ஆழ்ந்த தியானம் இருந்து பாரு''

''பண்றேன்மா, ஆனா எனக்கு நினைவு தெரிஞ்ச நாளில் இருந்து இப்படி ஒரு எண்ணம் எல்லாம் எனக்கு வந்ததே இல்லை. அப்பாதான் எனக்கு பெருமாள் அறிமுகம் பண்ணி வைச்சார். நாலாயிர திவ்விய பிரபந்தம் வாசிப்பார், அதில உண்டான ஈர்ப்புதான்ம்மா மற்றபடி என்ன சொல்றதுனு தெரியலை அதுவும் உங்களோட இந்த உறவு எல்லாம் எனக்கு நிறைய மகிழ்ச்சி தரக்கூடியதா இருக்கு''

''தியானம் இருந்து பாரு பாமா''

''சரிம்மா''

பெருமாள் கோவிலின் கோபுரத்தில் விளக்கு பிரகாசமாக எரிந்து கொண்டு இருந்தது. நாச்சியார் பாமாவின் தெய்வீகத் தொடர்பு குறித்து எண்ணிக் கொண்டு இருந்தார். ஆனால் பாமாவுக்கு பட்டாம்பூச்சிக்கு சிறகுகள் முளைத்து விட வேண்டும் என்பதிலும், நாராயணிக்கு கை கால்கள் வர வேண்டும் என்பதிலும் இருந்தது.

நல்ல மனிதர்களாக இருப்பதுவும், நல்ல மனிதர்களை அடையாளம் கண்டு கொண்டு அவர்களோடு பிரியாமல் சேர்ந்து இருப்பதுவும் இன்றைய காலத்தில் பெரிய விசயம்தான். அதே போல நமது செயல்களை எந்த ஒரு காலத்தில் நினைத்துப் பார்த்தாலும் நாம் தலை நிமிர்ந்து இருக்கும்படியாக இருக்க வேண்டும்.

இப்படிப்பட்ட ஒரு வாழ்வை பாமா சற்றும் எதிர்பார்த்து இருக்கவில்லை. படித்தோம், வேலைக்குச் சென்றோம் என்று இருக்கும் என்றுதான் எண்ணி இருந்தாள். இந்த உலகில் காலத்தின் தேவைக்கு ஏற்ப காலம் விசயங்களை நடத்திக் கொள்ளும். காலத்தின் தேவை, தேவையாகவே இருந்திருக்கவில்லை என காலமும் ஒரு கணத்தில் உணர்த்தி வைக்கும். இந்த மொத்த அண்டவெளியும் காலத்திற்கானது இல்லை, காலத்தில் காலமும் இல்லை.

சனிக்கிழமை அன்று அதிகாலையில் யசோதையின் வீட்டை அடைந்தாள் பாமா.

''சொன்ன நேரத்திற்கு சரியா வந்துட்ட பாமா''

''காலத்தில் காலம் இல்லை யசோ, வண்ணத்துப்பூச்சியை கவனிச்சிக்கிட்டதுக்கு நன்றி''

''யசோ, என்னோட அத்தை கூப்பிடற மாதிரியே இருக்கு. உன்னோட பேரழகுல நானே மயங்கிருவேன் போல. தெய்வீகக்கலையம்சம் உனக்கு பாமா''

''உங்க அத்தை உங்களுக்கு ஒருவேளை அந்த யசோதையை பார்த்துதான் பெயர் வைச்சி இருப்பாங்க போல''

''நல்லாவே பேசற பாமா''

''உங்களுக்குத்தான் நான் நன்றி சொல்லனும், எவ்வளவு பெரிய உதவி நீங்க பண்றது''

யசோதை முகம் மலர்ந்தாள். இருவரும் மருத்துவர் மாறனை சந்திக்கச் சென்றனர்.

மருத்துவர் மாறன் யசோதைக்காக காத்து இருந்தவர் போல வரவேற்றார். பட்டாம்பூச்சியைப் பார்த்தவர் வியப்பு அடைந்தார்.

''நான் கொடுக்கப்போற இந்த ட்ரீட்மென்ட்ல ஒருவேளை இந்த பட்டாம்பூச்சி இறந்து போகலாம், அதுக்காக என் மேல பழி சுமத்தக் கூடாது. இப்படி டெவெலப்மென்ட் ஆகாம இத்தனை நாட்கள் இது உயிரோட இருக்கிறதே அபூர்வம்தான்''

''என்ன சொல்றீங்க டாக்டர்''

மாறன் தான் எழுதி வைத்து இருந்த விசயத்தை அவர்களிடம் காண்பித்து விளக்கம் அளிக்க ஆரம்பித்தார். இவ்வுலகில் உருவான அத்தனை உயிரினங்களும் தங்களுக்குள் பெரும் அதிசயத்தைப் புதைத்து வைத்து இருக்கிறது. பாமா மெய் மறந்து அமர்ந்து இருந்தாள்.

(தொடரும்)

பாமரத்தியும் பட்டாம்பூச்சியும் 23


23. பாமரத்தனம்

சடகோபன் தன்னை பாமரத்தி எனக் குறிப்பிட்டுச் சென்றது குறித்து நாச்சியாரிடம் பாமா கேட்டாள். நாச்சியாருக்கு எதுவும் புரியவில்லை. நம்மை புதிதாகப் பார்க்கும் ஒருவர் நம்மைக் குறிப்பிட்டச் சொல் சொல்லும்போது அவர் எதற்காகச் சொன்னார் என்பதை அவர் உண்மையாக உரைக்காதபோது நாம் அதன் உண்மைத்தன்மையை அறிய முடிவது இல்லை.

நாச்சியார் சடகோபனிடமே கேட்டு விடுவது நல்லது என எண்ணினார். இருவரும் கோவிலுக்குள் சென்று வணங்கிவிட்டு வந்தார்கள். சடகோபனிடம் சென்று நாச்சியார்தான் கேட்டார்.

''பாமாவை நீங்க பாமரத்தினு சொன்னீங்களே, என்ன காரணம்''

''தான் யார் என்ன அப்படினு ஒரு தெளிவில்லாம இருக்காளே அதை வைச்சுத்தான் சொன்னேன்''

பாமாவுக்கு இப்போது ஒன்றும் புரியவில்லை. தான் யார், என்ன என அறியாத அளவுக்கா நான் இருக்கிறேன், தன்னைப் பற்றி அப்படி என்ன இவர் புரிந்து வைத்து இருக்கிறார் அதுவும் பார்த்து சில மணி நேரங்கள் கூட ஆகவில்லை என யோசித்தாள். 

''என்ன சொல்றீங்க, என்ன தெளிவு இல்லை பாமாகிட்ட''

''இவளுக்கும், இந்தக் கோவிலுக்கும் முன் பிறவி தொடர்பு இருக்கு, அதை இவ இன்னும் உணரலை. இதோ இந்த புளியமரம் இருக்கே அது பல ஆயிரம் ஆண்டுகளா இங்கதான் இருக்கு, அந்த மரம் சாதாரணமான ஒன்னு இல்லை, ஆனா சாதாரணமான ஒன்னாத்தான் மத்தவங்க கண்ணுக்குத் தெரியும். அதுபோலத்தான் இவளும். நம்மைப் பத்தி நிறைய தெரிஞ்சிக்க நாமதான் முயற்சி பண்ணனும்''

பாமா இதை எல்லாம் கேட்டபடி அமைதியாகவே இருந்தாள்.

''உங்களுக்கு எப்படி இது எல்லாம் தெரியும்'' நாச்சியார் கேட்டார்.

சடகோபன் கலகலவென சிரித்தார்.

''நமக்குள்ள உள்ளுணர்வுனு ஒன்னு இருக்கு, அதைக் கேட்டா எல்லாம் தெரியும், அவளுக்கு உணரணும்னு தோனுறப்ப  உணரட்டும்''

சடகோபன் அவ்வாறு சொன்னதும் நாச்சியாருக்கு பாமாவை சந்தித்தபோது உண்டான ஒருவித உணர்வு நினைவில் வந்து போனது.

''நீங்க சொல்றமாதிரி எனக்கும் அவளைப் பார்க்கிறப்ப தோனிச்சி, எனக்கு உங்களை மாதிரி இப்படிச் சொல்லத் தோனலை''

''தோனாதும்மா'' எனச் சொல்லிவிட்டு பாமாவைப் பார்த்தார். பாமா பெரும் யோசனையில் இருந்து விடுபட்டவளாகவே இல்லை.

வாழ்வில் சில மனிதர்களை அவசியம் சந்திக்க வேண்டும். சில மனிதர்களை கோடி கோடியாக கொட்டிக் கொடுத்தாலும் சந்திக்கவே கூடாது. பாமாவுக்கு சடகோபன் வாழ்வில் சந்திக்க வேண்டிய நபராகவே தென்பட்டார், ஆனால் பாமா தான் ஒரு சாதாரணமான பெண் என்பதை மட்டுமே அறிவாள். தனக்குள் எவ்வித அபூர்வ சக்தி இல்லை என்பதையும் உணர்வாள். தனக்குத் தெரிந்தது எல்லாம் எல்லோரிடத்தில் பாசத்தோடும், அன்போடும் மட்டுமே இருப்பது, பட்டாம்பூச்சிகள் வளர்ப்பது. பெருமாளை காலை மாலை எனத் தவறாமல் வணங்கி பாசுரங்கள் பாடுவது. இதைத் தாண்டி அவளால் என்ன அவளைப் பற்றி உணர இயலும் என அவள் அறிந்திருக்கவில்லை.

பாமரத்தனம் என்பது ஒருவரின் தெளிவற்ற அறிவைக் குறிப்பிடுவதுதான். ஒரு விசயத்தைக் குறித்து தெளிந்த அறிவு இல்லாதபோதும் எதையும் அப்படியே நம்பி விடுவது. உண்மை எதுவென அறியாமல் உண்மை என நம்பிக்கைக் கொள்வது. ஒன்றைக் குறித்து முழுமையாகக் கற்றுக்கொள்வதால் அந்த விசயம் குறித்த இந்த பாமரத்தனம் அகன்றுவிடும்.

பாமரத்தனம் உடையவர்களை, பாமரன், பாமரள், பாமரத்தி என்றெல்லாம் குறிப்பிடுகிறார்கள். பாமாவின் பாமரத்தன்மை என சடகோபன் நினைப்பது பாமாவின் இறை மீதான முழு உணர்வற்றத் தன்மையை. பாசுரங்கள் பாடுவதால் மட்டுமே ஒருவர் சிறந்த பக்தி கொண்டவராக ஆகி விட இயலாது. நமது வாழ்வில் நாம் நம்மை முழுமையாக உணர்வது கிடையாது. நமக்கு புற விசயங்கள் பெரிதாகப் படுகிறது, அக விசயங்களுக்கு நாம் அத்தனை முக்கியத்துவம் தருவதும் இல்லை.

''நீங்க பள்ளிக்கூடம் கட்ட உதவி பண்றதே பெரிய விசயம், அதை மட்டும் பண்ணிக் கொடுத்துருங்க''

பாமா சடகோபனிடம் சொன்னதும் வானத்தைப் பார்த்தவர்

''அதைப்பத்தி கவலைப்பட வேண்டாம், நீ என்ன வேணும்னு கேட்டாலும் நான் பண்ணித்தர ஏற்பாடு பண்றேன். உனக்குனு நான் பண்ற காரியம் எல்லாம் பெரும் புண்ணியம். ஸ்ரீ ஆண்டாளுக்கு உண்டான விருப்பத்தை ஸ்ரீ இராமானுசர் நிறைவேத்தி வைக்கலையா அது போல உன் விருப்பம் எதுவோ அதை நான் நிறைவேத்தி வைக்கிறேன்''

பாமா அவரை நோக்கி கைகள் கூப்பி வணங்கினாள்.

''அதோ அந்த பெருமாள் அவரை மட்டுமே வணங்கு'' என்றவர் நாச்சியாரிடம்  ''உங்க ஊருக்கு அடுத்த புதன்கிழமை அன்னைக்கு விருதுநகர்ல இருந்து வந்து பார்ப்பாங்க, இடம் எல்லாம் காட்டுங்க மத்த விசயங்களை நான் அதுக்கடுத்து நேர்ல வந்து பார்க்கிறேன்''

சில மனிதர்களை புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டாம். அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள். தாங்கள் அறிந்தது போல நம்மால் சாத்தியமே அற்ற விசயங்களைக் கூட சொல்வார்கள். அவர்களுக்கு எப்படி இப்படியான விசயங்கள் தெரிகிறது என்பது வியப்புக்குரிய விசயங்களில் ஒன்று. மேலும் எவ்வித பலனும் எதிர்பாராத உதவி என்பது உலகில் அரிதான விசயம் ஆனாலும் அதைச் செய்யும் மனிதர்கள் உண்டு.

அன்று மாலையே இருவரும் அங்கிருந்து கிளம்பினார்கள்.

''நான் பாமரத்தியாம்மா'' பாமா மிகவும் அப்பாவியாய் கேட்டாள்.

''நீ பாமரத்தி இல்லைம்மா, பட்டாம்பூச்சி. எல்லோரையும் மகிழ்விக்கிற பட்டாம்பூச்சி'' எனச் சிரித்துக் கொண்டே சொன்னார் நாச்சியார்.

பாமா புன்னகை புரிந்தாள்.

''நான் நானாகவே இருக்கேன்மா''

நாம் நாமாக இருப்பது ஒன்றும் பிரச்சினை இல்லை, ஆனால் பலருக்கும் நாம் நாமாகவே இருப்பது இல்லை போன்றே தெரிகிறது.

(தொடரும்)

Monday 14 October 2019

பாமரத்தியும் பட்டாம்பூச்சியும் -22

22. வயதற்ற கனவுகள்

நாச்சியார் பாமாவை தன்னுடன் ஆழ்வார் திருநகரிக்கு வருமாறு அழைத்தார். பாமாவும் சம்மதம் சொன்னாள். நாச்சியாருக்கு பாமா மீது நிறைய அன்பும், மதிப்பும் பெருகிக் கொண்டே இருந்தது. அதிகாலையிலேயே சென்றுவிட்டு அன்றே இரவே திரும்பி விடுவதாக முடிவு செய்தனர். குண்டத்தூர் வந்து விருதுநகர் செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தனர்.

''பாமா, சடகோபன் அப்படிங்கிறவரைத்தான் பார்க்கப் போறோம், இன்னைக்கு இரவுக்குள்ள திரும்பிரலாம். நீ உன்னோட திட்டம் போல சனிக்கிழமை யசோதை கூடப் போய் என்ன ஏதுனு பாரு''

''சரிங்கம்மா''

''நீ எதிர்பார்த்த சம்பளம்தான நாங்க பேசினது''

பாமா சிரித்தாள்.

''என்னாச்சு பாமா''

''இங்கே என்ன செலவு இருக்கும்மா, தங்குற வீடு, சாப்பிட சாப்பாடு முதற்கொண்டு எல்லாமே நீங்க தரது, அதோட சம்பளம்னு பணம் வேற சொல்லி இருக்கீங்க.  எங்க அப்பா நிறைய சம்பாதிக்கிறார் ஆனா மிச்சம் எதுவும் இல்லைனு சொல்லிட்டே இருப்பார். இதுக்காகவே அம்மா, அப்பா கொண்டு வர பணத்தில் எனக்குன்னு சேர்த்து வைச்சிருவாங்க, என்னதான் இருந்தாலும் கிராமம் வேற, சிட்டி வேறதானம்மா''

''உன்னோட தோழிகள் எல்லாம் உன்னோட முடிவு பத்தி எதுவும் சொல்லலையா''

''யாரு என்ன சொன்னாலும் நம்ம மனசுக்குனு பிடிக்கனும்னு நினைப்பேன், என்னமோ நீங்க என்கிட்டே பேசினதுல இருந்து எனக்கு நீங்க சொல்றத கேட்கனும்னு தோனிச்சி, இன்னைக்கு இப்படி ஒரு அற்புதமான பெருமாள் கோவிலைப் பார்க்க உங்களாலதான் கொடுத்து வைச்சி இருக்கு, நிறைய திருப்தியா இருக்கும்மா. இந்த வாழ்வை ஒரு பயனுள்ள வகையில் வாழனும்னு நினைச்சேன், நாராயணியை நினைக்கிறப்போ பயனுள்ள வாழ்வாவே இருக்கு''

''மெடிக்கல் உலகத்தில நிறைய முன்னேற்றம் வந்துருச்சி, யசோ கூட வேலன் சொல்லித்தான் இந்த கை , கால் வளர்ச்சி, உடல் உறுப்புகள் மாற்றம்னு படிக்க ஆரம்பிச்சா, வேலன் இல்லைன்னா நிச்சயம் இதை எல்லாம் படிச்சி இருக்கமாட்டேனு சொல்வா, யாராவது ஒருத்தர் ஒரு உற்சாகம், ஊக்கம் தரக்கூடியவங்களா அமைஞ்சிருறாங்க. எனக்கு எப்பவுமே பெருமாள் தான்''

''எனக்கும் எப்பவும் பெருமாள் தான்ம்மா''

நாச்சியார் அமைதியாக இருந்தார். அவரது மனம் நிறைய யோசிக்கத் தொடங்கியது. கல்லுப்பட்டி தாண்டி விருதுநகரை நோக்கி பேருந்து சென்று கொண்டு இருந்தது.

''கல்யாணம் பண்ணு பாமா''

''இரெங்கன் கிடைச்சா பண்ணிக்குவேன்ம்மா, இல்லைன்னா உங்களை மாதிரியே இருந்துக்கிறேன்''

''என்னை மாதிரியா?, இன்னொரு நாச்சியார் வேணாம்''

பாமா சிரித்தாள். அவள் சிரிக்கும்போது கண்களும், புருவங்களும், கன்னங்களும் அழகிய கதையை சொல்வது போல் இருக்கும்.

''எல்லா பாசுரமும் மனப்பாடமா தெரியுமா?''

''எல்லாம் தெரியாதும்மா, குறிப்பிட்டது மட்டும் அதுல நிறைய நம்மாழ்வாரோடது''

விருதுநகர் வந்து அடைந்தார்கள். நாச்சியாரின் பள்ளிக்கூட கனவு என்பது வயது கடந்த கனவுகள் போல தோன்றினாலும் கனவுகள் வயது அற்றவைகள். அங்கிருந்து திருச்செந்தூர் சென்று ஆழ்வார் திருநகரி அடைந்தபோது பதினோரு மணி ஆகி இருந்தது. சடகோபனைத் தேடிச் சென்றனர். அறுபது வயதுக்கும் மேலானவராக இருந்தார். காரைவீடு. நிறைய ஆட்கள் அங்கே பணிபுரிந்து கொண்டு இருந்தனர். நாச்சியார் தன்னிடம் இருந்த கடிதம் கொடுத்ததும் சடகோபன் இவர்களை வரவேற்று உபசரித்தார். பாமா தங்களது திட்டம், என்னவெல்லாம் செய்ய இருக்கிறோம் என அத்தனை அருமையாக பல எடுத்துக்காட்டுகள் மூலம் பள்ளிக்கூடம் பற்றி சொன்னதும் தன்னால் முடிந்த உதவிகள் செய்வதாக உறுதி அளித்தார். இது நாச்சியாருக்கு சற்று வியப்பாக இருந்தது. விருதுநகரில் உள்ள ஒருவர் மூலமே எல்லா அனுமதியும் பெற்று தருவதாகவும் உறுதி அளித்தார். கனவுகள் நிச்சயம் வயது அற்றவைதான்.

ஒரு விசயத்தை பல வருடங்களாக செய்ய முயற்சி செய்து எல்லாம் தடைபட்டுக் கொண்டே இருப்பதை எண்ணி மனம் தளர்ந்து போவார்கள், அதன் காரணமாக அந்த விசயத்தை வேண்டாம் என கைவிட்டு விடுவார்கள். ஒரு சிலர் மட்டுமே அந்த விசயங்கள் குறித்த கனவை தங்களுடனே சுமந்து கொண்டு இருப்பார்கள். ஒரு மரம் எப்படி பலன் தர பல ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறதோ அது போலவே சில காரியங்கள் நடக்க பல ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும். ஆனால் அதை நிறைவேற்ற தகுந்த மனிதர்கள் வரும் வரை அந்தக் கனவுகள் தங்களை இருக்கப் பிடித்துக் கொள்ளும். நாச்சியார் பாமாவை கட்டிப்பிடித்துக் கொண்டார். பாமா பேசிய முறை தன்னை மெய் சிலிர்க்க வைத்து விட்டது என புகழாரம் சூட்டினார். பாமா நம்மாழ்வாரை எண்ணி மனமுருக வேண்டிக் கொண்டாள். அவளது மனதில் கம்பர் தனது கனவினை நிறைவேற்ற சடகோபன் அந்தாதி பாடிய நிகழ்வினை எண்ணினாள்.

கம்பர் தனது இராமாயணத்தை திருவரங்கத்தில் அரங்கர் சன்னதியில் அரங்கேற்ற விருப்பம் கொள்ள அது தடைப்பட்டுக் கொண்டே இருந்தது. அப்போது இத்தடை போக்க என்ன செய்ய என நாதமுனிகளிடம் கேட்க அவர் அரங்கன் சன்னதியில் அரங்கேற்றம் பண்ண அனுமதி அளித்தார். அதன்பின்னும் தடை உண்டானது. கம்பர் ஸ்ரீரெங்கனிடம் வேண்ட, பெருமாளே அவரது எண்ணத்தில் வந்து நம் சடகோபனை பாடினாயோ எனக்கேட்க நம் சடகோபன் நம்மாழ்வார் ஆனார். இதன் காரணமாகவே கம்பர் சடகோபன் அந்தாதி இயற்றினார். அதன்பின்னரே அவரால் எவ்வித தடைகள் இல்லாமல் அரங்கேற்றம் பண்ண முடிந்தது. கம்பர் அரங்கம் இன்றும் அரங்கன் கோவிலில் உண்டு.

கம்பனின் கனவை நிறைவேற்றியவர் அச்சடகோபன். நாச்சியாரின் கனவை நிறைவேற்ற இருப்பவர் பாமாவின் மூலமாக இச்சடகோபன். கம்பர் நம்மாழ்வாருக்கு என இயற்றிய முதல் துதி.

தருகை நீண்ட தயரதன் தரும்
இருகை வேழத்தி இராகவன் தன் கதை
திருகை வேலைத் தரைமிசைச் செப்பிட
குருகை நாதன் குரைகழல் காப்பதே.

சாதாரண நிகழ்வைக் கூட நம் மனம் எத்தனையோ ஆண்டுகள் முன்னர் நடந்த நிகழ்வுகளோடு ஒப்பிட்டு பெருமிதம் கொள்ளும். பல வருடங்களாக ஒன்றின் ஒன்றாகத் தொடர்ந்து நடப்பது போல ஒரு மாயத்தோற்றம் உண்டாகும்.

சடகோபன் அவர்களை ஆழ்வார் திருநகரியில் உள்ள ஆதிசேத்திரத்திற்கு அழைத்துச் சென்றார்.  இந்த ஊரின் பழைய பெயர் திருக்குருகூர். தான் அவதரித்த இந்த ஊரை நம்மாழ்வார் பாசுரங்களில் குருகூர் என்றே குறிப்பிட்டு இருக்கிறார். பாமா அந்த ஆலயத்தில் கால் வைத்ததும் மெய் சிலிர்த்தாள். தான் இதுவரை மனதில் வேண்டிய ஒருவரின் தலத்திற்கு வந்து இருப்பது அவளுக்குள் பேரின்பத்தை உண்டு பண்ணியது. அங்கே இருந்த புளிய மரத்தின் பொந்தில் தான் நம்மாழ்வார் 16 வருடங்கள் வாசம் இருந்தார். எல்லாப் பாடல்களும் அவர் இங்கேயே இயற்றினார். இந்த புளிய மரம் கூட பெருமாளே புளிய மரமாக வந்ததாக கதை உண்டு. புளிய மரத்தைத் தொட்டு வணங்கினாள் பாமா.

''அம்மா, நீங்க இதுக்கு முன்ன இங்க வந்து இருக்கீங்களா?'' பாமா நாச்சியாரிடம் கேட்டாள்.

''இல்லை பாமா, உன்னோட நான் வரனும்னு இருந்து இருக்கு''

சடகோபன் பாமாவிடம் இந்தக் கோவிலோட பூர்வ ஜென்ம தொடர்பு உனக்கு இருக்கும்மா என்றார். பாமா வியப்பாக அவரைப் பார்த்தாள். தனக்கு அப்படி ஒரு எண்ணம் எப்போதுமே உண்டானது இல்லை என அவள் அறிவாள், ஆனால் நம்மாழ்வார் மீது அவளுக்கென தனிப்பிரியம் சிறு வயதிலேயே உண்டானது. சடகோபன் பாமாவின் யோசனையைப் பார்த்துவிட்டு ஆலயம் நோக்கி வணங்கினார்.

''நீ ஒரு பாமரத்தி''

சடகோபன் பாமாவை நோக்கி சொல்லிவிட்டுச் சென்றதும் பாமா அப்படியே புளியமரத்தைப் பற்றிக் கொண்டு நின்றாள். புளியமரத்தின் அடியில் நான்கு சுவர்களில்  நிறுவப்பட்ட முப்பத்தி ஆறு திவ்ய தேசப் பெருமாள் சிற்பங்கள் எல்லாம் அவளை நோக்கி அருளாசி வழங்குவது போல இருந்தது. இந்த நிகழ்வு ஒருவன் சொன்ன கவித்துவ நிகழ்வுக்கு ஒப்பாக இருந்தது.

'கோவிலுக்குச் செல்லும் போதெல்லாம் 
எனக்கு பெருங்குழப்பம் நேர்வது உண்டு 
நீ தெய்வங்களை கும்பிடுகிறாயா அல்லது 
உன்னை தெய்வங்கள் கும்பிடுகின்றனவா என்று'

பாமாவின் கண்களில் இருந்து அவளையும் அறியாமல் கண்ணீர் கசிந்து கொண்டு இருந்தது. ஒன்றின் மீதான காதலின் உயர்நிலையில் பாமா நின்று கொண்டு இருந்தாள்.

(தொடரும்)