Sunday 22 September 2019

பாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 9

9. மனிதர்களின் உலகம்

நாச்சியார் சுந்தரவேலன் சொன்ன பட்டாம்பூச்சி வளர்க்கும் பெண்ணைக் காண வேண்டும் என தன்  விருப்பம்தனைத் தெரிவித்தார். சுந்தரவேலன் தற்போது வேறு வேலையாக வேறு ஒரு இடம் செல்வதாக இருப்பதால் வேறொரு நாள் சந்திக்க ஏற்பாடு பண்ணுவதாக கிளம்பிப் போனான்.

யசோதை நன்றாகச் சமைத்து இருந்தாள். மதிய உணவு சாப்பிட்ட பிறகு மாலை வேளையில் சிம்மக்கல்லில் சென்று தான் சந்திக்க இருந்த நபர்களை பள்ளிக்கூடம் கட்டுவது குறித்துப் பேசிவிட்டு வந்தார். யசோதையும் உடன் சென்று இருந்தாள்.

''அத்தை அவ்வளவு பணம் கேட்கிறாங்க, என்ன பண்ணப் போறீங்க''

''கோவில் நிலத்தில ஒரு பகுதியை பள்ளிக்கூடம் கட்ட உபயோகிக்கலாம்னு இருக்கேன். ஊருல ஒரு ட்ரஸ்ட் மாதிரி ஆரம்பிச்சி பண்ணனும்''

''நிறைய செலவு ஆகும் அத்தை, அவங்க சொல்றது எல்லாம் பார்த்தா ஒவ்வொரு கட்டத்தில அனுமதி வாங்கி பண்றதுக்கே போதும் போதும்னு ஆயிரும், அப்புறம் பிள்ளைக வந்து சேரனும். இப்போ இருக்க பிள்ளைக காசு கொடுத்துப் படிக்கப்  போறாங்க, அவங்களை நம்ம ஊரிலேயே இருக்கச் சொல்றது இலேசான விசயம் இல்லை''

''ஆறு வகுப்பு வரை உள்ள பள்ளிக்கூடம் ஆரம்பிக்கலாம்''

''நல்லா யோசியுங்க அத்தை''

நாச்சியார் பள்ளிக்கூடம் விசயமாக சில நாட்கள் அலைந்து திரிந்தார். மனிதர்களின் உலகம் பணத்தினால் கட்டப்பட்டு இருக்கிறது. தனது கனவு பணம் என்ற ஒன்றினால் தடுத்து நிறுத்தப்படும் என்றே அவருக்குத் தோனியது.

புதன்கிழமை அன்று அவர் மாலை அங்கங்கள் வளர்ச்சி குறித்த நிகழ்வு/கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்ட போது எப்படி எல்லாம் உடல் முழு வளர்ச்சி அடையாத குழந்தைகள் பிறக்கின்றன என்பது குறித்து நிறைய அறிந்து கொண்டார். எவ்வித குறைகளும் இன்றி பிறக்கும் குழந்தைகள் நல்ல நம்பிக்கைகளோடு வளர்வது மிகவும் முக்கியம். நல்லதொரு கல்வி சீரான செல்வம் என எல்லாக் குழந்தைகளும் ஒரு ஆரோக்கியமான வாழ்வை வாழ்தலே பெரும் வரம் தான்.

தனக்கு இருக்கும் குறைகளை எண்ணி மனம் தளர்ந்து போகாத குழந்தைகளை வளர்ப்பது பெற்றோர்களின் உற்றார்களின் பங்கு அதிகம் எனவும் மருத்துவ வளர்ச்சி குறித்தும் நிறைய பேசப்பட்டது. நாச்சியார் மனம் கனத்தது.

''அத்தை உங்க பெருமாள் இந்தக் குழந்தைகளுக்கு எல்லாம் ஒன்னும் செய்ய மாட்டாரா''

''அதான் உன்னைப் போல மருத்துவர்களை உருவாக்கி இருக்காரு யசோ''

நாச்சியார் குரல் உடைந்து இருந்தது. பசியால், வறுமையால் குழந்தைப் பருவம் படுகின்றபாடு இந்த உலகம் கவனிக்கத் தவறிய, சரி பண்ணத்தவறிய ஒன்று. குழந்தைகளைத் திருடி விற்றல், காமங்களினால் சிறுவர் சிறுமியர் எனப் பாராமல் அவர்தம் வாழ்வைச் சிதைத்தல் என இந்த மனிதர்களின் உலகம் நிறையவே அல்லல்படுகிறது.

''குறையுள்ள படைப்புகள் என்ன செய்ய முடியும் அத்தை, சொல்லுங்க''

''பெருமாளை நினைக்காத பிறப்புகள் மட்டுமே குறை உள்ளவை யசோ, நல்ல எண்ணங்களும், பிறருக்கு உதவி புரிதலும், துயர் கொண்டோர் துயர் துடைத்தலும்னு மனித மற்றும் பிற உயிர்களோட நலத்துக்கும், வளத்துக்கும் உழைக்காத எந்த ஒரு பிறப்பும் மட்டுமே குறைகள் உள்ளவை யசோ. மனித வாழ்க்கை பத்தி நிறைய சொல்லி இருக்கு, அன்பின் வழி நடப்பதுனு ஆயிட்டா எதுவுமே குறையாகப் படாது, எல்லாமே குறை நீக்கிய ஒன்றாகத்தான் இருக்கும்''

நாச்சியார் சொன்ன விசயங்கள் யசோதையையும், சுந்தரவேலனையும் நிறையவே யோசிக்க வைத்தன.

''மனநிலையினைப் பாதிப்பு செய்யாத குழந்தைப் பருவத்தை நன்றாக அனுபவிக்கக் கூடிய ஒரு சூழலை நாம உருவாக்கனும் அம்மா''

சுந்தரவேலன் சொன்னபோது நாச்சியார் புன்முறுவல் செய்தார்.

பணம் மனிதர்களை நிறையவே மாற்றி அமைந்துவிட்டது. இது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இருந்தது என்பது போலவே எழுதி வைக்கப்பட்ட எழுத்துக்கள்  கூடச் சொல்லிச் செல்கிறது. உடல் உறுப்புகளை விற்பது என பல காரியங்களில் ஈடுபடும் கூட்டம் ஒன்று இருக்கவே செய்கிறது.

அன்று இரவு தூங்கப் போகும் முன்னர் நாச்சியாருக்கு மனம் என்னவோ செய்து கொண்டு இருந்தது. இந்த பட்டாம்பூச்சிகள் எத்தனை அழகாக தன்னை உருமாற்றம் செய்து கொள்கிறது. அது போல இந்த மனிதர்களும் தங்களில் உருமாற்றங்களைச் செய்து கொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும். எல்லோரும் கால் கைகளோடு சுகமாக இருப்பார்கள் என மனம் நினைத்தது.

யசோதை படுத்தவுடன் தூங்கிப் போனாள். அந்த இரவின் அமைதியில் குறை ஒன்றும் இல்லை என்ற பாடல் ஒலித்தது.

நாச்சியார் இந்த உலகம் எவ்வித குறைகளும் இன்றி இருக்க வேண்டிக் கொண்டார். அடுத்த நாள் சுந்தரவேலன் வீட்டிற்குச் சென்றார். அங்கே பட்டாம்பூச்சிகள் வளர்க்கும் பாமாவைச் சந்தித்தார்.

இருபத்தி ஒரு வயது நிரம்பிய பாமா தனக்கு சிறு வயதில் இருந்தே வண்ணத்துப் பூச்சிகள் என்றால் கொள்ளைப்பிரியம் எனவும் அதை தான் தேடி அலைந்த காலங்களை நினைவு கூர்ந்தாள். மொத்தம் இருபது வண்ணத்துப் பூச்சிகள் அங்கே இருந்தன. நிறைய செடிகள் வீட்டில் தென்பட்டன. பட்டாம்பூச்சிகளுக்கென அவை வளர்க்கப்பட்டது போல இருந்தது.

''பாமா, இந்தப் பட்டாம்பூச்சி தான் முட்டை இட்டதும்  தனது சந்ததிகளை அதன் சுதந்திரத்துக்கு விட்டுரும் வளர்க்க எல்லாம் செய்யாது ஆனா நாம அதை நம்ம கட்டுப்பாட்டுல வைக்க நினைக்கிறோம் எல்லா உயிர்களையும் நாம நம்ம கட்டுப்பாட்டுல வைச்சி வளர்க்க நினைக்கிறோம், அதன் சுதந்திரம்படி வளர நாம இடம் தரது இல்லை. நம்மோட தேவைகள் எதையுமே சுதந்திரமா இருக்க விடுறது இல்லை''

''ஆசையா இருந்துச்சும்மா எல்லாத்தையும் இங்கே வைச்சி இருக்கமாட்டேன், கொஞ்சம் கூட்டம் கூடினா அவைகளை வெளியே பறக்க விட்டுருவேன்''

''அதனோட ஆசைகளை நாம என்னனு யோசிச்சோமோ பாமா''

நாச்சியார் தான் சொன்னதில் எவ்விதப் பொருளும் இல்லை என அறிந்தவர்தான். மனிதர்களின் உலகம் பேரன்பினால் நிறைந்து இருப்பின் எல்லா உயிர்களும் அதனதன் சுதந்திரத்தை அனுபவித்துக் கொண்டு இருந்து இருக்கும்.

பாமா தான் சொன்னதை கேட்டு எவ்வித மறுப்பும் சொல்லாமல் இருந்தது, தனது கருத்துக்களோடு உடன்பட்டது என நாச்சியாருக்கு பாமாவை நிறையவே பிடித்துப் போனது. பாமாவை பெருமாள்பட்டிக்கு வருமாறு அழைத்தார். தனது படிப்பு முடிந்து விடுமுறை சில வாரங்களில் வருவதால் ஒரு மாதம் கழித்து வருவதாக பாமா உறுதி சொன்னாள்.

இந்த உலகில் நாம் நேசிக்கும் மனிதர்கள் நமது எண்ணங்களுக்கு மதிப்பு தருபவர்களாகவே இருக்க வேண்டும் என அவர்களையே நாம் தேடிக் கொள்கிறோம்.

(தொடரும்)

Saturday 21 September 2019

பாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 8

8. காதல் ஒரு கொடை

யசோதை செல்லும் முன்னர் நாச்சியார் யார் எனப் பார்க்கச் சென்றார். சுந்தரவேலனைப் பார்த்த கணம் அவருக்கு அவனை நன்றாகவே அடையாளம் தெரிந்தது. நாச்சியாரை அங்கே சற்றும் எதிர்பார்க்காத சுந்தரவேலன் உடனடியாக சுதாரித்துக் கொண்டு நிலைமையை சாதாரண நிலைக்கு கொண்டு வர முயற்சிஸ் செய்தான்.

''அம்மா, எப்போ வந்தீங்க''

''வந்து கொஞ்ச நேரம்தான் ஆகுதுப்பா, உள்ளே வா''

''யசோதை இருக்காளா?''

சுந்தரவேலன் கேட்டுக் கொண்டு இருக்கும்போதே யசோதை அங்கு வந்து நின்றாள். முகம் சற்று வியர்த்து இருந்தது. இந்த உலகில் மனிதர்கள் தாங்கள் இயல்பாகச் செய்யும் விசயங்களைக் கூட இந்தச் சமூகத்தின் சொற்களுக்கு அச்சம் கொண்டு தாங்கள் தவறு இழைப்பது போல எண்ணிக் கொள்கின்றனர்.

எப்போது ஒன்றை நாம் பிறரிடம் இருந்து மறைக்க முயற்சி செய்கிறோமோ அப்போது நாம் தவறு செய்வது போலவே உணர்கிறோம். நமது விருப்பங்கள் பல இப்படிப்பட்ட ஒரு மறைப்பு தன்மை கொண்டே இருக்கிறது. அதன் காரணமாகவே நாம் செய்யும் இயல்பான விசயங்கள் நமக்கு அச்ச உணர்வை கொண்டு வந்து சேர்க்கின்றன.

வயிற்றில் பட்டாம்பூச்சி பறப்பது எனும் சொல் வழக்கு நாம் ஒன்றை அச்சத்தோடு அணுகும் போது அது காமம் ஒத்த நிகழ்வு போன்றே இருக்கிறது. பெரும்பாலும் காமம் குறித்த நிகழ்வுகளை நாம் மறைத்தே செய்ய முயல்கிறோம். காமுறுதல் என்பது இயல்பான நிகழ்வு. இதை ஆண்டாள் வெட்ட வெளிச்சமாகவே சொல்லி இருப்பாள். அப்படி சொன்னவள் மீதான சமூக கண்ணோட்டம் பல்வேறு நிலைகளை கொண்டு இருக்கிறது, அதனை பக்தி இலக்கியம் என்றும் காதல் பக்தி என பிரித்துக் கொள்கிறோம்.

எப்போது ஒரு சமூக அச்சம் தொற்றிக் கொள்ளுமோ அப்போது நமது வயிற்றுக்குச் செல்லும் இரத்தம் குறைந்து அந்த இரத்தம் திசுக்களுக்குச் சென்று ஒருவித படபடப்பை உண்டாக்கி பட்டாம்பூச்சியின் இறகுகள் படபடவென அடிப்பது போன்று அடித்துக் கொள்ளும். இப்படி திசுக்களுக்குச் செல்லும் இரத்தம் திசுக்களுக்கு நிறைய ஆக்சிஜன் தேவைப்படும் என இதயம் வேகமாகத் துடிக்கத் தொடங்கி அதற்கென சுரப்பிகள் அட்ரீனலின் எனப்படும் சுரப்பியை சுரக்கின்றன. இப்படியான பட்டாம்பூச்சி வயிற்றில் பறந்து கொள்வது என்பது ஒரு காலகட்டத்திற்குப் பிறகு நிகழ்வது இல்லை.

''வா வேலா'' சொற்கள் சற்று குழறியபடியே வந்து விழுந்தன. தனது ஆசைகளை எப்போதும் நிறைவேற்றித் தரும் நாச்சியார் அவளுக்குள் சிறிது தைரியத்தைத் தந்து கொண்டு இருந்தாள்.

சுந்தரவேலன் வீட்டுக்குள் வந்து அமர்ந்தான்.

''அத்தை, நானும் வேலனும் காதலிக்கிறோம். அப்பா அம்மா என்ன சொல்வாங்கனு தெரியலை, வேலனும் பயப்படுறான்''

நாச்சியார் என்ன ஏது எனக் கேட்கும் முன்னர் விசயத்தை அவருக்குச் சொல்லிவிட வேண்டும் எனும் ஆர்வம் யசோதைக்கு இருந்தது, பயம் வெளித்தெரியக்கூடாது என எண்ணி படபடவென சொல்லி முடித்தாள்.

நாச்சியார் சிறிது நேரம் அமைதியாக இருந்தார்.

''நல்ல விசயம்தானே யசோ. நான் பெருமாள் மேல வைச்சிருக்கிற காதல் போல உன்னோடது ஒரு மானுடக் காதல். காதலிக்கிறது ஒரு கொடை. அன்பை பரிமாறுதல் போல பேரழகான விசயம் எதுவும் இல்லை யசோ. அதோட மாணிக்கவாசகர் ஒன்னும் இதுக்கு மறுப்பு சொல்லமாட்டாரே. என் அண்ணன், அண்ணிகிட்ட நான் பேசிக்கிறேன் அவங்க எதுக்கு மறுப்பு சொல்லப்போறாங்க. எதுக்கு தப்பு பண்றது போல நினைக்கிற''

''அதில்லைங்க அத்தை, ஊருல மத்தவங்களும் ஏத்துக்கிறனுமே, அதை நினைச்சி வீட்டுல மறுப்பு சொல்வாங்களோனு பயமா இருக்கு''

''பயப்படாதே யசோ, உன்னோட விருப்பத்தை நான் நிறைவேத்துறேன்''

இந்த உலகில் சாய்ந்து கொள்ள ஒரு தோள், நம்பிக்கை தளர்கின்ற போதெல்லாம் அரவணைத்துக் கொள்ளும் ஒரு உறவு என இதெல்லாம் அமைந்து விடுவது என்பது பெரும் வரம்.

சுந்தரவேலன் நாச்சியாரை நோக்கி கைகள் கூப்பி வணங்கினான். நம்மை புரிந்து கொள்ளும் நபர் நமக்கு எல்லாமும் ஆவது என்பதும் வரமே.

''நான் வந்த விசயமே, இந்த வாரம் புதன்கிழமை சாயந்திரம் அங்கங்கள் வளர்ச்சி குறித்த ஒரு நிகழ்வு பத்தி சொல்லி இருந்தேன் நீ எதுவும் முடிவு சொல்லாமயே இருந்த, அதுக்கு நீ வரியானு கேட்டுட்டு போக வந்தேன்''

சுந்தரவேலன் சொன்னதும் கட்டாயம் வரேன் என்றாள் யசோதை. நாச்சியார் ஆவலுடன் நானும் வரலாமா எனக் கேட்டு வைத்தார். மூவரும் அந்த நிகழ்வுக்குச் செல்வது குறித்து முடிவானது. பட்டாம்பூச்சி குறித்து நாச்சியார் சுந்தரவேலனுக்கும் சொல்லி வைத்தார்.

நமக்கு வியப்பு தரும் விசயங்களை இந்த உலகோடு பகிர்ந்து கொள்ளும் போது நமக்குள் ஒருவித மகிழ்ச்சி உண்டாகிறது. அதோடு வியப்பு தரும் விசயங்களை கேட்பதற்கென்றே சிலர் நமக்கு வாய்ப்பது எல்லாம் பேரின்பம்.

''நான் தங்கி இருக்க வீட்டுல உள்ளபொண்ணு வண்ணத்துப் பூச்சிக நிறைய வளர்க்கிறா''

நாச்சியாரின் உலகம் பட்டாம்பூச்சிகளால் வண்ணமயமாக நிறைக்கப்பட்டு கொண்டு இருந்தது.

(தொடரும்) 

Friday 20 September 2019

பாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 7

7. இடப்பெயர்ச்சி

உயிரினங்கள் பொதுவாக கால சூழலுக்கு ஏற்ப இடம் பெயர்கின்றன. இந்த இடத்திற்குச் சென்றால் தான் உயிர் பிழைத்துக் கொள்ளலாம் என்பது குறித்து ஒரு உயிரினத்திற்கு எப்படி முன் அறிவு உண்டானது என்பதை எவரும் முழுவதுமாக கண்டுபிடித்தது இல்லை. பறவைகள் இந்த இடம் பெயர்ச்சியில் முன்மாதிரியாக இருக்கின்றன. வியப்பான விசயம் என்னவெனில் இந்த பட்டாம்பூச்சிகளில் சில இடம் பெயரவும் செய்கின்றன.

வெப்ப சூழல் விரும்பும் பட்டாம்பூச்சிகள் குளிர்காலம் தொடங்குகிறது என அறிந்த மறுகணம் வெப்ப சூழல் நோக்கி பயணிக்கின்றன.  காலசூழல் மாறியதும் பறவைகள் மீண்டும் தாங்கள் பறந்து வந்த இடத்துக்கே திரும்பிச் செல்லும் அளவுக்கு வாழ்வு காலமும் நினைவுத்திறனும் கொண்டு இருக்கின்றன. ஆனால் பட்டாம்பூச்சிகள் ஓரிடத்தில் இருந்து கிளம்பிப் போனதும் மீண்டும் அதே இடத்திற்கு அவை திரும்ப முடிவது இல்லை, ஆனால் அதனுடைய சந்ததிகள் அதே கால சூழலுக்கு தனது முன்னோர் கிளம்பி வந்த இடத்திற்கே சென்று விடுகின்றன. அதன் பின் அதே சுழற்சி தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது.

மனிதர்களைப் பொருத்தவரை திரவியம் தேடுவதற்கென இடப்பெயர்ச்சி அல்லது புலம் பெயர்தல் எனும் நிலை இருந்தது. அதன்பிறகு மனிதர்களில் இனம், மொழி, நிறம், மதம் போன்ற வேற்றுமை உணர்வுகள் தலைதூக்கிய பிறகு தங்களது வாழ்வாதாரம் தேடி இடம் பெயர்ந்தார்கள். பெரும்பாலும் திரவியம் தேடிய பிறகு மீண்டும் கூடு வந்து அடையும் பறவைகள் போல திரும்பவே செய்தார்கள். அதில் பலர் வெவ்வேறு இடங்களுக்குச் சென்று அங்கே தமது குடும்பம், சந்ததி என இருக்கவும் செய்தார்கள்.

யசோதை இனி தனது சந்ததி எல்லாம் பெருமாள்பட்டி என்ற ஊரை மறக்க நிறைய வாய்ப்பு உண்டு. வசுதேவனின் சித்தப்பா ஸ்ரீரங்கம் சென்று வாழ்ந்து கொண்டு இருப்பதை போன்று இதுவும் நடக்கும் வாய்ப்பு இருக்கவே செய்கிறது.

''நம்ம ஊரில் இருந்து பறந்து வந்த வண்ணத்துப் பூச்சியா அத்தை''

''தெரியலை யசோ, என்னை பின் தொடர்ந்து வந்து இருக்கும்னு நினைக்கிறப்போ உடம்பு எல்லாம் சிலிர்க்குது''

''என் மேல உட்காந்துட்டு போச்சே அத்தை, ஒருவேளை நானும் பிள்ளைத்தாச்சி ஆயிருவேனா''

யசோதை சொல்லிவிட்டு கலகலவெனச் சிரித்தாள்.

''ஜோக் சொல்றியா யசோ, அப்படி எல்லாம் ஆகமாட்ட, அப்படி ஆனா நானும் ஒரு பட்டாம்பூச்சியை என் மேல உட்காரச் சொல்லிட்டு போறேன்'' நாச்சியார் சிரித்தபடி சொன்னார்.

''உங்களுக்கு 'வண்ணத்துப்பூச்சி விளைவு' தெரியுமா அத்தை''

''எது, பட்டாம்பூச்சி சிறகுதனை ஏதோ ஒரு ஊருல அசைச்சா இன்னொரு ஊருல பெரும் புயல் வரும்னு சொன்னதா''

''ஆமாங்க அத்தை, ஒரு சிறு விசயம் அல்லது அதிர்வு பெரும் பிரளயத்தையே உண்டு பண்ணும் அளவுக்கு அதற்கு சக்தி உண்டு, ஒரு சிறு பொறி மொத்த காட்டையும் எரிக்கும் தன்மை கொண்டது மாதிரி, இப்போ நம்ம மரபணுவில் ஒரு சிறு அதிர்வு உண்டாக்கி நம்ம உடம்புல அத்தனை மாற்றத்தையும் உண்டாக்கிரலாம்''

''யசோ நீ மரபணு மாற்றம் பத்தி எல்லாம் சொல்ற, இந்த உலக பரிணாமம் எல்லாம் அத்தனை எளிதா சொல்லிர முடியாது, செய்துரவும் முடியாதுனு நினைக்கிறேன்''

''மறுபிறப்பு தத்துவம் எல்லாம் நீங்க கொண்ட நம்பிக்கைதானே அத்தை, மரபணு கடத்தல் மறுபிறப்பு தத்துவம் போல தான், ஆனால் மறுபிறப்பு இல்லை''

யசோதையின் அறிவுதனை எப்போதுமே வியப்போடு பார்ப்பதுதான் நாச்சியாரின் வழக்கம். நாச்சியாருக்கு யசோதை ஒரு ஆண்டாள் போலவோ அல்லது மீரா போலவோ பெருமாள் மீது பயபக்தியோடு இருக்க வேண்டும் எனும் பேராசை இருந்தது உண்டு. மனிதர்களின் மூளை பொதுவாக தாங்கள் எவரிடம் எதைக் கற்றுக் கொள்கிறோமோ அதை அப்படியே மென்மேலும் கற்றுத் தெளிவு பெறும். அப்படித்தான் யசோதை தன்னிடம் பயின்றதால் வருவாள் என நாச்சியார் எண்ணிக்கொண்டு இருந்தார். ஆனால் யசோதை முற்றிலும் வேறுபட்ட மனநிலையுடன் வளரத் தொடங்கினாள்.

நாச்சியார் சிறிது நேரம் ஓய்வு எடுப்பதாகச் சொல்லி இந்த பட்டாம்பூச்சி குறித்து யோசித்தபடி இருந்தார். யசோதை சமையல் செய்ய ஆரம்பித்தாள்.

சுந்தரவேலன் பள்ளியில் ஒருமுறை சொன்னது அவளது மனதில் தற்போது நிழல் ஆடியது.

'உன்னைப் பார்க்கறப்ப எல்லாம் வண்ணத்துப்பூச்சி வயித்துக்குள்ள பறக்கிற மாதிரி இருக்கு யசோதை, உனக்கு அப்படி ஏதேனும் இருக்கா'

'எனக்கு பசிக்காக கடமுடானு வயிறு புரட்டும் சத்தம் மட்டுமே மெல்லிசா கேட்குது'

'உனக்கு எப்பவுமே விளையாட்டுதான் யசோதை'

அதன் பிறகுதான் பட்டாம்பூச்சி வயிற்றுக்குள் பறப்பது குறித்து யோசிக்கத் தொடங்கி வயிறுக்கும் இந்த பட்டாம்பூச்சிக்கும் உள்ள தொடர்பு குறித்து அறிந்தாள்.

அழகாக இருக்கிறதே என்பதற்காக எதையும் உங்களுடையது என ஆக்கி இறுக்கிக்கொள்ள முயற்சி செய்யாதீர்கள். பட்டாம்பூச்சியினை பிடித்து கைகளில் இறுக்கமாக மூடி வைத்துக் கொண்டால் அது எப்படி விரைவில் உயிரற்றுப் போகுமோ அப்படித்தான் எதையும் இறுக்கமாகப் பிடித்து வைக்க அவை அதன் நிலையிலேயே இல்லாமல் போகும்.

''யசோதை''

சுந்தரவேலன் மூடப்பட்டு இருந்த ஒரு கதவினைத் தட்டினான்.

யசோதைக்கு இப்போது பட்டாம்பூச்சிகள் வயிற்றில் பறக்கத் தொடங்கி இருந்தன.

(தொடரும்)