Friday 20 September 2019

பாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 7

7. இடப்பெயர்ச்சி

உயிரினங்கள் பொதுவாக கால சூழலுக்கு ஏற்ப இடம் பெயர்கின்றன. இந்த இடத்திற்குச் சென்றால் தான் உயிர் பிழைத்துக் கொள்ளலாம் என்பது குறித்து ஒரு உயிரினத்திற்கு எப்படி முன் அறிவு உண்டானது என்பதை எவரும் முழுவதுமாக கண்டுபிடித்தது இல்லை. பறவைகள் இந்த இடம் பெயர்ச்சியில் முன்மாதிரியாக இருக்கின்றன. வியப்பான விசயம் என்னவெனில் இந்த பட்டாம்பூச்சிகளில் சில இடம் பெயரவும் செய்கின்றன.

வெப்ப சூழல் விரும்பும் பட்டாம்பூச்சிகள் குளிர்காலம் தொடங்குகிறது என அறிந்த மறுகணம் வெப்ப சூழல் நோக்கி பயணிக்கின்றன.  காலசூழல் மாறியதும் பறவைகள் மீண்டும் தாங்கள் பறந்து வந்த இடத்துக்கே திரும்பிச் செல்லும் அளவுக்கு வாழ்வு காலமும் நினைவுத்திறனும் கொண்டு இருக்கின்றன. ஆனால் பட்டாம்பூச்சிகள் ஓரிடத்தில் இருந்து கிளம்பிப் போனதும் மீண்டும் அதே இடத்திற்கு அவை திரும்ப முடிவது இல்லை, ஆனால் அதனுடைய சந்ததிகள் அதே கால சூழலுக்கு தனது முன்னோர் கிளம்பி வந்த இடத்திற்கே சென்று விடுகின்றன. அதன் பின் அதே சுழற்சி தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது.

மனிதர்களைப் பொருத்தவரை திரவியம் தேடுவதற்கென இடப்பெயர்ச்சி அல்லது புலம் பெயர்தல் எனும் நிலை இருந்தது. அதன்பிறகு மனிதர்களில் இனம், மொழி, நிறம், மதம் போன்ற வேற்றுமை உணர்வுகள் தலைதூக்கிய பிறகு தங்களது வாழ்வாதாரம் தேடி இடம் பெயர்ந்தார்கள். பெரும்பாலும் திரவியம் தேடிய பிறகு மீண்டும் கூடு வந்து அடையும் பறவைகள் போல திரும்பவே செய்தார்கள். அதில் பலர் வெவ்வேறு இடங்களுக்குச் சென்று அங்கே தமது குடும்பம், சந்ததி என இருக்கவும் செய்தார்கள்.

யசோதை இனி தனது சந்ததி எல்லாம் பெருமாள்பட்டி என்ற ஊரை மறக்க நிறைய வாய்ப்பு உண்டு. வசுதேவனின் சித்தப்பா ஸ்ரீரங்கம் சென்று வாழ்ந்து கொண்டு இருப்பதை போன்று இதுவும் நடக்கும் வாய்ப்பு இருக்கவே செய்கிறது.

''நம்ம ஊரில் இருந்து பறந்து வந்த வண்ணத்துப் பூச்சியா அத்தை''

''தெரியலை யசோ, என்னை பின் தொடர்ந்து வந்து இருக்கும்னு நினைக்கிறப்போ உடம்பு எல்லாம் சிலிர்க்குது''

''என் மேல உட்காந்துட்டு போச்சே அத்தை, ஒருவேளை நானும் பிள்ளைத்தாச்சி ஆயிருவேனா''

யசோதை சொல்லிவிட்டு கலகலவெனச் சிரித்தாள்.

''ஜோக் சொல்றியா யசோ, அப்படி எல்லாம் ஆகமாட்ட, அப்படி ஆனா நானும் ஒரு பட்டாம்பூச்சியை என் மேல உட்காரச் சொல்லிட்டு போறேன்'' நாச்சியார் சிரித்தபடி சொன்னார்.

''உங்களுக்கு 'வண்ணத்துப்பூச்சி விளைவு' தெரியுமா அத்தை''

''எது, பட்டாம்பூச்சி சிறகுதனை ஏதோ ஒரு ஊருல அசைச்சா இன்னொரு ஊருல பெரும் புயல் வரும்னு சொன்னதா''

''ஆமாங்க அத்தை, ஒரு சிறு விசயம் அல்லது அதிர்வு பெரும் பிரளயத்தையே உண்டு பண்ணும் அளவுக்கு அதற்கு சக்தி உண்டு, ஒரு சிறு பொறி மொத்த காட்டையும் எரிக்கும் தன்மை கொண்டது மாதிரி, இப்போ நம்ம மரபணுவில் ஒரு சிறு அதிர்வு உண்டாக்கி நம்ம உடம்புல அத்தனை மாற்றத்தையும் உண்டாக்கிரலாம்''

''யசோ நீ மரபணு மாற்றம் பத்தி எல்லாம் சொல்ற, இந்த உலக பரிணாமம் எல்லாம் அத்தனை எளிதா சொல்லிர முடியாது, செய்துரவும் முடியாதுனு நினைக்கிறேன்''

''மறுபிறப்பு தத்துவம் எல்லாம் நீங்க கொண்ட நம்பிக்கைதானே அத்தை, மரபணு கடத்தல் மறுபிறப்பு தத்துவம் போல தான், ஆனால் மறுபிறப்பு இல்லை''

யசோதையின் அறிவுதனை எப்போதுமே வியப்போடு பார்ப்பதுதான் நாச்சியாரின் வழக்கம். நாச்சியாருக்கு யசோதை ஒரு ஆண்டாள் போலவோ அல்லது மீரா போலவோ பெருமாள் மீது பயபக்தியோடு இருக்க வேண்டும் எனும் பேராசை இருந்தது உண்டு. மனிதர்களின் மூளை பொதுவாக தாங்கள் எவரிடம் எதைக் கற்றுக் கொள்கிறோமோ அதை அப்படியே மென்மேலும் கற்றுத் தெளிவு பெறும். அப்படித்தான் யசோதை தன்னிடம் பயின்றதால் வருவாள் என நாச்சியார் எண்ணிக்கொண்டு இருந்தார். ஆனால் யசோதை முற்றிலும் வேறுபட்ட மனநிலையுடன் வளரத் தொடங்கினாள்.

நாச்சியார் சிறிது நேரம் ஓய்வு எடுப்பதாகச் சொல்லி இந்த பட்டாம்பூச்சி குறித்து யோசித்தபடி இருந்தார். யசோதை சமையல் செய்ய ஆரம்பித்தாள்.

சுந்தரவேலன் பள்ளியில் ஒருமுறை சொன்னது அவளது மனதில் தற்போது நிழல் ஆடியது.

'உன்னைப் பார்க்கறப்ப எல்லாம் வண்ணத்துப்பூச்சி வயித்துக்குள்ள பறக்கிற மாதிரி இருக்கு யசோதை, உனக்கு அப்படி ஏதேனும் இருக்கா'

'எனக்கு பசிக்காக கடமுடானு வயிறு புரட்டும் சத்தம் மட்டுமே மெல்லிசா கேட்குது'

'உனக்கு எப்பவுமே விளையாட்டுதான் யசோதை'

அதன் பிறகுதான் பட்டாம்பூச்சி வயிற்றுக்குள் பறப்பது குறித்து யோசிக்கத் தொடங்கி வயிறுக்கும் இந்த பட்டாம்பூச்சிக்கும் உள்ள தொடர்பு குறித்து அறிந்தாள்.

அழகாக இருக்கிறதே என்பதற்காக எதையும் உங்களுடையது என ஆக்கி இறுக்கிக்கொள்ள முயற்சி செய்யாதீர்கள். பட்டாம்பூச்சியினை பிடித்து கைகளில் இறுக்கமாக மூடி வைத்துக் கொண்டால் அது எப்படி விரைவில் உயிரற்றுப் போகுமோ அப்படித்தான் எதையும் இறுக்கமாகப் பிடித்து வைக்க அவை அதன் நிலையிலேயே இல்லாமல் போகும்.

''யசோதை''

சுந்தரவேலன் மூடப்பட்டு இருந்த ஒரு கதவினைத் தட்டினான்.

யசோதைக்கு இப்போது பட்டாம்பூச்சிகள் வயிற்றில் பறக்கத் தொடங்கி இருந்தன.

(தொடரும்)

Thursday 19 September 2019

பாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 6

6. யசோதையின் மனம்

நாச்சியார் சிம்மக்கல்லில் ஒரு வீட்டில் வாடகை எடுத்து தங்கி மதுரை மருத்தவமனையில் பயிற்சியாளர் மருத்துவராகப் பணிபுரிந்து வந்த யசோதையை முதலில் பார்க்கச் சென்றார். நாச்சியாரின் வருகை யசோதைக்கு பெரும் மகிழ்வைத் தந்து இருந்தது. தனக்கு எது எல்லாம் தேவையோ அதை எல்லாம் நாச்சியார் மூலம் நிறைவேற்றிக் கொள்வது என்பது யசோதைக்கு சிறு வயது முதல் மிகவும் எளிதாக இருந்தது.

யசோதைக்குப் பெயர் வைத்தது கூட நாச்சியார் தான். யசோதை தங்கி இருந்த மாடி வீடு எல்லா வசதிகளும் ஒரு சிறு தனிக்குடும்பத்திற்கு ஏற்றது போலவே கட்டப்பட்டு இருந்தது. மாடிப்படி வீட்டின் உள்ளே வந்து செல்லும்படியாக இருந்ததால் ஒருவகை பாதுகாப்பாகவும் இருந்தது.

''அத்தை, உங்களை நான் எதிர்பார்க்கவே இல்லை, குடிக்க மோர் கொண்டு வரேன்'' யசோதையின் ஆச்சரியம் கலந்த வரவேற்பு புரிந்துக் கொள்ளக் கூடியதுதான். நாச்சியாருக்கு மோர் கொண்டு வந்து தந்தாள். 

''சொல்லிட்டு வரனும்னுதான் இருந்தேன், இன்னைக்கு எப்படியும் நீ வீட்டுல இருப்பனு தைரியத்துல கிளம்பி வந்துட்டேன், அப்படியே நீ இல்லைன்னாலும் கூடலழகர் பெருமாள் கோவிலுக்குப் போய்ட்டு வந்து இருப்பேன், நீ ஊருக்கு எல்லாம் வரவே வேணாம்னு முடிவு பண்ணிட்ட போல அதுவும் வந்தா ஒரு நாளு கூட வீட்டுல முழுசா தங்கினது இல்லை, நான் ஒரு வாரம் இங்க தங்கலாம்னு இருக்கேன் உனக்குச் சம்மதம் தான'' என்றார்.

''தாராளமா தங்குங்க அத்தை, என்ன விசயமா வந்தீங்க''

''உனக்குத்தான் தெரியுமே, நம்ம ஊர்ல ஒரு பள்ளிக்கூடம் தொடங்கனும்னு ரொம்ப நாளா ஒரு ஆசை. எல்லாம் பாப்பநாயக்கன்பட்டியில் போய் படிச்சி பழகிட்டோம். இனி வரக்கூடிய பிள்ளைக நம்ம ஊர்ல அஞ்சு வரைக்காவதும் படிக்கட்டுமேனு தோனிகிட்டே இருக்கு, நம்ம ஊரை விட்டு ஆளுகளும் வெளியேறிட்டே இருக்காங்க, பெருமாள் கோவில் மட்டும் தான் நம்ம ஊருக்கு அடையாளம், ஒரு பள்ளிக்கூடம் இருந்தா நல்லதுதானே''

''அதான் முயற்சி பண்ணி முடியலைனு சொல்லிட்டே இருந்தீங்களே''

''முடியலைனு சொல்லலை, முடியமாட்டேங்குது, விருதுநகர் பிரயோசனப்படாதுனு மதுரையில முயற்சி பண்ணிப் பார்ப்போம்னு எனக்குத் தெரிஞ்சவங்களை பார்த்துப் பேசனும்''

''சரிங்க அத்தை, இன்னைக்கு மதியம் என்னோட சமையல்தான், சாப்பிட்டு கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்துட்டு சாயங்காலமா போகலாம், நானும் வரேன்''

''ம்ம், பட்டாம்பூச்சி பத்தி ஏதாச்சும் தெரியுமா யசோ''

''வண்ணத்துப்பூச்சியா''

''ம்ம்''

''எதுக்கு அத்தை''

பூங்கோதையின் வீட்டில் நடந்த பட்டாம்பூச்சி விசயத்தைச் சொல்லி முடித்தார் நாச்சியார். ஆர்வமாக கேட்டுக் கொண்டிருந்த யசோதை மன மகிழ்ந்தாள்.

''கோதை அக்காவுக்கு குழந்தைனு நினைச்சாலே உள்ளுக்குள்ள வண்ணத்துப்பூச்சி பறக்குது அத்தை, அதான் பள்ளிக்கூட விசயத்தை மறுபடியும் கையில் எடுத்துட்டீங்களா''

நாச்சியார் சிரித்தார். நாம் ஏதேனும் பேசிக்கொண்டு இருக்கும்போது நமது மனம் ஒன்றோடு ஒன்று தொடர்பு படுத்திக் கொள்ளும். அது நல்லதுக்கு எனில் மகிழ்வும், நல்லதுக்கு இல்லை எனில் சோகமும் தங்கிவிடும்.

''பட்டாம்பூச்சி பத்தி என்ன நினைக்கிறனு சொல்லு''

''அது ஒரு அரிய வகை பூச்சி இனம் அத்தை, உங்களுக்குத் தெரியாத ஒன்னா''

''ஒரு முட்டை உருமாற்றம் அடைஞ்சி பட்டாம்பூச்சியா மாறுறது பிரமிப்பா இல்ல''

''இந்த அண்டவெளி, நாம நம்மோட மூளை எல்லாமே பிரமிப்புதானே அத்தை''

''இல்லை யசோ, இந்த பட்டாம்பூச்சி எனக்கு இந்த எட்டு மாசமா எதையோ சொல்ல வர மாதிரி இருக்கு''

''அத்தை, எப்பவும் போல பெருமாளேனு இருங்க, அப்படி எல்லாம் பட்டாம்பூச்சி ஒன்னும் சொல்ல வராது, நீங்களே உங்களுக்கு உங்க பெருமாள் சொல்ற மாதிரி சொல்லிக்கிட்டாதான் உண்டு''

அப்போது அங்கே அறைக்குள் ஒரு பட்டாம்பூச்சி வட்டமடித்து வந்தது. யசோதை பட்டாம்பூச்சியை வியப்புடன் நோக்கினாள். யசோதையின் வலது புற தோளில் பதினைந்து வினாடிகள் மட்டுமே அமர்ந்துவிட்டு சட்டென வெளியில் பறந்தது.

''அத்தை''

நாச்சியார் பட்டாம்பூச்சி சென்ற வழியை மட்டுமே பார்த்துக் கொண்டு இருந்தார்.

(தொடரும்) 

Sunday 15 September 2019

பாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 5

5. துளசிச் செடி

நாச்சியார் சொன்ன கதை பூங்கோதையின் மனதைத்  தைத்துக் கொண்டு இருந்தது. பூங்கோதையின் தோளின் மீது அமர்ந்த பட்டாம்பூச்சி வீட்டை விட்டு எங்கும் செல்வதாக இல்லை. தானும் ஒருவேளை அம்மாவாகும் வாய்ப்பு இன்றி போகும் எனில் தனக்குப் பின் தனது சந்ததி எனச் சொல்ல ஏதும் அற்றுப் போயிருக்கும் என நினைக்கும்போது பூங்கோதைக்கு மிகவும் கவலையாக இருந்தது.

''அம்மா என் மேல அமர்ந்த இந்த பட்டாம்பூச்சி ஆணா, பெண்ணா'' பூங்கோதையின் கேள்வி எதனால் எழுந்தது என ஆராயாமல் பட்டாம்பூச்சியினை ஆராய எழுந்தார் நாச்சியார்.

அந்த பட்டாம்பூச்சி வீட்டின் அறையில் இருந்த இரண்டு சன்னல்களில் ஒரு சன்னலில் சென்று அமர்ந்து இருந்தது. பட்டாம்பூச்சியின் அருகில் சென்று அதன் வயிறுப் பகுதியைப் பார்த்தார் நாச்சியார்.

''பொண்ணு'' நாச்சியார் சொன்னபோது பெரும் மகிழ்வோடு சொன்னார்.

''கோதை, ஒரு பட்டாம்பூச்சிக்கு மொத்தம் ஆறு கால்கள் இருக்கும், நாலு கால்கள் போல தோற்றம் இருந்தாலும் ஆறுதான். அதன் வயிறு தட்டையா நேரா இருந்தா அது ஆண், கொஞ்சம் தூக்கலா வளைஞ்சி இருந்தா அது பொண்ணு. இந்த பட்டாம்பூச்சிக்கு கழிவு எல்லாம் வெளியேற்ற தனித்தனி வழிகள் எல்லாம் இல்லை. எல்லாமே நீர் ஆகாரம்தான் அதனால் சிரமம் இல்லை. நீல நிறம், மஞ்சள் நிறம்னு கலந்து கலந்து இருக்கிற இந்த பட்டாம்பூச்சி இங்கேயே இருந்து என்ன சொல்ல நினைக்குதுனு தெரியலை''

''அதுபாட்டுக்கு ஒரு ஓரத்திலே இருக்கட்டும்மா''

''சரி கோதை, கவனமா இரு. நிறைய வருசம் கழிச்சி நான் ஒரு வேலையா நாளைக்கு மதுரை வரைக்கும் போறேன், வர ஒரு வாரம் ஆகும், எது வேணும்னாலும் பாப்பாத்தி கிட்ட கேளு, நானும் போய் அவகிட்ட சொல்லிட்டுப் போறேன், உன்னை வந்து பாத்துக்குவா''

''சரிம்மா''

ஊரில் இருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் பரந்தாமனுக்கு வசுதேவன் கட்டித்தந்த வீடு. கிராமத்தில் கட்டப்படும் வீடுகளில் மொட்டைமாடி வைத்துக் கட்டுவது வழக்கம். ஏதேனும் காயப்போடுவதற்கு ஏதுவாக இருக்கும். கோவிலில் இருந்து பதினைந்து நிமிடங்களில் நடந்து செல்லும் தொலைவில் தான் வீடு கட்டப்பட்டு இருந்தது. இந்த மொட்டை மாடியில் நின்று முழுக்கோவிலையும் வெகுவாக இரசிக்கலாம்.

இரண்டு மாடிகள் கொண்ட வீடு. வீட்டுக்குள் நுழைந்ததும் காலணிகள் கழற்றி வைக்க ஒரு அறை. அங்கேயே கால், முகங்களை கழுவிக் கொள்ள தண்ணீர் வசதி கொண்ட சிறு இடம். அதைத்தாண்டி வீட்டுக்குள் நுழைந்ததும் நல்ல விசாலமான வரவேற்பு அறை. பத்து நபர்கள் கூட தாராளமாக படுத்து உறங்கலாம். அந்த அறையில் கீழேதான் அமர வேண்டும், எவ்வித நாற்காலிகளோ, கட்டில்களோ இல்லை. அங்கேதான் பெரும்பாலும் எவரேனும் வந்தாலும் கீழே அமர்ந்து பேசிச் செல்வார்கள்.

அந்த அறை முடியும் இடத்தில் வலப்புறமாக கிழக்கு நோக்கி கட்டப்பட்ட சமையல் அறை. நான்கு நபர்கள் தாராளமாக நின்று சமைக்கலாம். கோவில் அன்னதானம், நெய்வேத்தியம் எல்லாம் இங்கே செய்யப்படுவது இல்லை. பரந்தாமனுக்கும், பூங்கோதைக்கும் மட்டுமான சமையல் அறையாக இருந்தது.

வரவேற்பு அறை, சமையல் அறைக்குப் பின்புறம் உறங்குவதற்கான ஒரு அறை அதை ஒட்டிய ஒரு பூஜை அறை. முதல் மாடியில் இரண்டு அறைகள் மட்டுமே கட்டப்பட்டு இருந்தன. வீட்டினைச் சுற்றி சின்ன சின்ன மரங்கள் மா, கொய்யா ஆலிவ் என நடப்பட்டு இருந்தன. வீட்டில் இருந்து சிறிது தொலைவில் கோவிலுக்கு என சமைப்பதற்கான சமையல் அறையும், பொருட்கள் சேர்த்து வைக்கும் ஒரு அறையும் இருந்தது. இவற்றில் எல்லாம் இருந்து சற்று தள்ளி மற்றொரு பக்கத்தில் கழிப்பறை.

வீட்டின் முன்பக்கத்தில் வாசல் தாண்டி ஒரு மாடத்தில் துளசிச் செடிகள் இருந்தது. இந்த துளசிச் செடிகளை பல வருடங்களாகப் பாதுகாத்து வருகிறாள் பூங்கோதை. ஒரு துளசிச் செடி வைத்த இடத்தில் இன்று பல துளசிச் செடிகள் ஆகி இருந்தது. இந்த பெரும் அண்டவெளியில் தங்களைத் தாங்களே நட்சத்திரங்கள் முதற்கொண்டு பெருக்கிய வண்ணம் இருக்கின்றன.

நாச்சியார் கிளம்பியதும் அவரோடு துளசிச் செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற வெளியில் வந்தாள் பூங்கோதை. பட்டாம்பூச்சியும் அவள் பின்னால் வந்தது. அங்கே இருந்த ஒரு துளசிச் செடி இலையின் மீது அமர்ந்தது. அதனை பூங்கோதை வெகு ஆச்சர்யத்துடன் பார்த்தாள். நாச்சியார் கூட என்னவென ஒரு கணம் அங்கேயே நின்றார்.

தண்ணீர் ஊற்றித் திரும்பியவள் மதுரை மீனாட்சி கோவிலுக்குப் போனா எனக்கு குங்குமம் பிரசாதம் கொண்டு வாங்கம்மா என்றாள். நாச்சியார் தலையை மட்டும் ஆட்டியவர் துளசிச் செடியில் அமர்ந்து இருந்த பட்டாம்பூச்சியை பார்த்தவாறு இருந்தார்.

சிறிது நேரத்தில் பட்டாம்பூச்சி அங்கே இருந்து பறந்தது. துளசிச் செடியின் இலையின் பின்புறம் குனிந்து பார்த்தார் நாச்சியார்.

''பெருமாளே'' இரு கைகளைத் தன்  தலைக்கு மேலே தூக்கி வணங்கி நின்றார்.

''என்ன ஆச்சுமா''

''ஒரே ஒரு முட்டையை மட்டும் போட்டுட்டு அந்த பட்டாம்பூச்சி போயிருக்கு'' இலையில் ஒட்டிக்கொண்டு இருந்த முட்டையை பூங்கோதைக்கு காட்டினார் நாச்சியார்.

''எத்தனையோ முட்டைகள் போடும் வழக்கம் பட்டாம்பூச்சிகளுக்கு உண்டு அதுவும் பிரத்யோகமா இலைகள் தேடிப் போகும். இந்த துளசிச் செடியில இருந்து இதுவரைஇத்தனை வருசமா  பட்டாம்பூச்சி எதுவாச்சும் வந்து இருக்குனு நீ கவனிச்சு இருக்கியா கோதை''

''இல்லைம்மா''

''முட்டை போட்டுட்டு போறதோட சரி, அதற்கப்புறம் அந்த முட்டையை பாதுகாக்கனும், பொறிக்கனும் அப்படி எல்லாம் பட்டாம்பூச்சிக்கு வழக்கம் இல்லை. நீ இந்த இலையில் தண்ணியை ஊத்திராதே,  முட்டையை சிதைக்கமா பார்த்துக்கோ, நா அடுத்த வாரம் வந்து பாக்கிறேன்''

''சரிம்மா''

துளசிச் செடியின் இலையை பார்த்தவாறு நின்று கொன்று இருந்தாள் பூங்கோதை.

கிருஷ்ணருக்கு தானே சமம் என தன்னைத் தானே உலகுக்கு உணர்த்திய இந்த துளசிச் செடி ஒரு உயிரைத் தாங்கிக் கொண்டு இருந்தது.

(தொடரும்)