Tuesday, 11 October 2016

மரணத்தைவிட நோய் கொடியது 2

அம்மா நிறையவே வாதிட்டார்கள் இதோடு என் தங்கையும் சேர்ந்து கொண்டாள். எதுவும் பேசாமல் அவள் முகம் பார்த்தபடி அமர்ந்து இருந்தேன். காதல் என்பது தசைகளால் ஆனது. காதல் என்பது கவர்ச்சி என்றெல்லாம் சொன்னவர்களை நினைத்துக்கொண்டு இருந்தேன். அவள் முகம் பொலிவாக இருப்பதைப்போல எனக்குள் ஒருவித எண்ணம் ஏற்பட்டது. உனக்கு என்ன ஆச்சுனாலும் உன்னைத்தான் கட்டிப்பேன் என அவளிடம் அன்று சொன்னது இன்று நினைவில் ஆடியது. எல்லாம் என் விதி என அம்மா மீண்டும் வந்து சத்தம் போட்டுச் சென்றார். ஒரு குழந்தையைப் போல இவளது நடவடிக்கைகள் இருப்பதாக நினைத்தேன், இவளது மூளை நரம்புகளில் ஏதேனும் ஒரு பாதிப்பு ஏற்பட்டு இருக்குமோ அச்சம் ஏற்பட்டது. இத்தனை நேரம் தூங்கும் அளவுக்கு இவளது உடலில் அப்படியென்ன ஒரு மாற்றம் திடீரென வந்து இருக்கும். நான் வேலைக்கு கிளம்பும் அன்றுவரை நன்றாகத்தான் இருந்தாள், எப்போது வருவாய் எனக்கேட்டபோது ஒரு மாதம் கழித்து வருவேன் எனச் சொல்லிச்சென்றபோது சரியென்றுதானே சொன்னாள், ஊரைவிட்டுப் போய் அடுத்தநாள் என இவளது அம்மா சொன்னாரே அதற்குள் என்ன நடந்திருக்கும் நிறைய யோசித்து அயர்வாக இருந்தது.

ஊரறிந்த காதல் என்றெல்லாம் இல்லை, பழகியது பேசியது எல்லாம் ஊருக்கு சாதாரணமான ஒன்றாகவே இருந்தது. நான் மணம் முடிக்கப்போகும் பெண் பேரதிர்வை எனக்குள் தந்து கொண்டு இருந்தாள். காம இச்சையின்றி ஒரு ஆண் வாழ்வது எல்லாம் அத்தனை எளிதான ஒன்றல்ல என கதைகளில் படித்து இருக்கிறேன் அதுவும் மனைவி நோய்வாய்ப்பட்டபின்னர் அவளை காத்துவரும் கணவன் வேறொரு பெண்ணுக்கு மயங்கி அவளே தஞ்சம் என போன கதை மனதில் தைத்துக்கொண்டு இருந்தது. அதுதான் நிதர்சனம் என அந்தக் கதையை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய கல்லூரி நண்பர்களை பார்த்து இருக்கிறேன். இதோ இவள், எனக்கென்ன என என்னால் இவளை விட்டுவிட்டு நான் கடந்து போயிருக்கலாம். இவளது பெற்றோர்களும் என்னிடம் வந்து எதுவும் கேட்டு இருக்கப்போவது இல்லை, எதை நிரூபிக்க இவளை இப்போது எனது வீட்டில் தூங்க வைத்து இருக்கிறேன். அறையில் விளக்கொளி இன்னும் அணைக்கப்படாமல் இருந்தது.

''போய்த்தூங்கு ராமா''

''அம்மா நான் செய்றது சரினு படுது பணத்தை எல்லாம் இவளுக்கு செலவு பண்ணிருவேனு நினைக்காத தங்கச்சிக்கு சேர்த்து வைச்சிருக்கல்ல''

''எதுனாலும் பண்ணு போ தூங்கு''

''இங்கனயே இருக்கேன்ம்மா நீங்க தூங்குங்க''

''சொன்னா கேட்கவா போற''

மணி பன்னிரண்டு இருக்கும். புனிதா எழ முயற்சித்தாள். அவளைத் தூக்கி அமர வைத்தேன்.

''என்ன செய்து''

அவளது கண்களில் கண்ணீர் வடிந்தது. கண்ணீரைத் துடைத்தேன்.

''பேசு''

''அம்மா''

''நான் இருக்கேன்''

''ம் அம்மா''

என் அம்மாவை அழைத்தேன்.

''இவளை பாத்ரூம் கூட்டிப்போம்மா''

''நீயே பாத்துக்கிறேனு சொன்ன''

திட்டியபடி அவளை அழைத்துச் சென்றார். திரும்பவும் அமர வைத்ததும் எனது கைகளைப் பற்றிக்கொண்டாள். அவளது ஒடுங்கிய விழிகளில் எனது காதலைப் பார்த்துக் கொண்டு இருந்தேன்.

''ஆஸ்பத்திரிக்குப் போவோம்''

''ம்''

''எப்படி இப்படி ஆச்சு''

''ம்''

புதிய இடம் அவளை இப்போது எழுப்பி இருக்கக்கூடும் என நினைத்தேன். கண்களை மூட இருந்தவளுக்கு தண்ணீர் கொடுத்தேன். மெதுவாக விழுங்கினாள். இப்படியே இருந்தால் முதுகு வலி, இருதய நோய் என எல்லாம் வந்து சேரும் என அவளை நடமாட செய்தேன். தோளில் சாய்ந்து மெல்ல நடந்தாள்.

''நம் காதல் உன் உயிர் காக்கும்''

எனக்கே அபத்தமாக இருந்தது.

''ம்''

அவளது இந்த தூக்கம் ஒருவித நோய். சில மணி நேரங்கள் தூங்கியவள் எழுந்தாள்.

''அம்மா''

நானே அவளை பாத்ரூம் அழைத்துச் சென்றேன். எல்லாம் இயல்பாக நடக்கிறது இந்த தூக்கம் மட்டும் தான் அவளை செயல் இழக்கச் செய்கிறது, குறித்து வைத்தேன். அதிக தூக்கம் ஆற்றலை குறைத்து இருக்கிறது. விருதுநகரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். அவளது அப்பா அம்மா தாத்தா உடன் வந்தார்கள். என் அம்மாவும் தங்கையும் இன்னமும் கோபத்தில் இருந்தார்கள். நோயில் உள்ள எவரையும் பரிதாபமாக பார்க்க வேண்டியது இல்லை, அன்பாக நடத்தினால் போதும். டாக்டர் பரிசோதித்துவிட்டு மதுரையில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு போகச் சொன்னார். அவளது தாத்தாவை மட்டும் அழைத்துக்கொண்டுச் சென்றேன்.

மருத்துவமனையில் கல்லூரி நண்பன் சுரேந்திரனைக் கண்டேன், விபரம் சொன்னேன். அவன் என்னிடம் சொன்ன விசயம் பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

''ஏன்டா உனக்கு இந்த அக்கப்போரு, நல்ல வேலை, சம்பளம் ஊருல வேற பொண்ணா இல்லை நா சொல்றத கேளு, இவ உறுப்புகள எல்லாம் இப்பவே எடுத்து வித்துட்டா நல்ல காசு பார்க்கலாம் நாளாக நாளாக யாருக்கும் உதவாது நா எல்லாம் அரேஞ் பண்றேன் நீ ஓகே சொல்லு''

முதுகில் குத்துபவனை எல்லாம் உடனே அழிக்கும் ஒரு வரமோ அல்லது இப்படிப்பட்ட எண்ணம் ஏற்படாத மனிதர்கள் இருக்க வரமோ இருக்காதா என்றே அவனை நான் உதாசீனப்படுத்திவிட்டு உள்ளே நடந்தேன்.

''அவரு என்ன சொன்னாரு''

''ஒன்னுமில்ல தாத்தா''

மருத்துவரை சந்தித்து ஒரு அறை ஒதுக்கப்பட்டது. கண் விழித்தாள்.

''அம்மா''

மரணத்தைவிட நோய் கொடியது என கத்தவேண்டும் போலிருந்தது. என்னை மருத்துவ அறை வாசம் உலுக்கியது. பாத்ரூம் அழைத்து சென்றுவிட்டு படுக்கையில் படுக்க வைத்துவிட்டு வெளியில் சென்று பிச்சிப்பூவும் மல்லிகையும் வாங்கி வந்து அவளது தலை நிறைய வைத்தேன் விழிகள் திறந்தே இருந்தன.

''என்ன''

''ம்''

''அமுதன் இவங்களுக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்கனும் அதுக்கு முன்னால ப்ளட் டெஸ்ட் பண்ணனும்''

''சரி டாக்டர், நாளைக்குப் பண்ணலாம்''

அலுவலக மேலதிகாரி மணியனிடம் விபரங்கள் சொன்னேன்.

''எவ்வளவு பணம் வேணும்னு மட்டும் சொல்லு''

ஒரு நண்பனாகவே என்னைப் பார்த்தவருக்கு உதவுவதில் சிரமம் இல்லை.

''பணம் இருக்கு, வேலைக்கு வர நாள் ஆகலாம்''

''சரி, கவலைப்படாதே''

''தாத்தா ஊருக்குப் போங்க''

''இங்க இருக்கேன் ராமா''

''வேண்டாம்''.

வேறு வழியின்றி ஊருக்குப் போனார். நர்ஸ்களிடம் விபரங்கள் சொன்னேன். உடனே இருக்கச் சொன்னவர்கள் உதவிக்கு அழைக்கச் சொன்னார்கள். குளித்து தயார் ஆனேன். அமுதன் காலையில் வந்து ரத்த சோதனைக்கு அழைத்துச் சென்றார்.

''உங்க பொண்டாட்டியா சார்?''

''இல்ல, காதலி''

மணியனிடமிருந்து அழைப்பு வந்தது.

''எந்த வார்ட்? ஆஸ்பத்திரியிலதான் இருக்கேன். உனக்குத் துணையா ஒரு டூ டேஸ் இங்க இருக்கேன்''

மணியனை நினைக்க கண்ணீர் முட்டியது. கட்டிக்கொண்டு அழுதேன்.

''லுக் பி ஸ்ட்ராங். ஐ ஆம் வித் யூ''

புனிதாவுக்கு ரத்தம் எடுத்து வந்தபின் அவளை மணியன் பார்த்த மறுகணம் சொன்னார்.

''சிவா யூ ஆர் கிரேட்''

மணியனின் கண்களில் இருந்த கண்ணீர்த்துளிகள் எனது கண்களில் பட்டுத் தெறித்தது. என் அம்மாவும் அவளது அம்மா தாத்தா வந்து இருந்தனர். கஞ்சி கொடுத்தோம்.

''ராமா நிறைய செலவு ஆகுமேப்பா''

''அதைச் சொல்லத்தான் இங்க வந்தியாம்மா''

''பத்தாயிரம் அடுத்த மாசம் வேணும்''

''சரி''

ராமா என எனது கையைப் பிடித்து அவ்ளதானு நினைச்சேன் என குலுங்கி குலுங்கி அழுதார் அவளது அப்பா. சிலமணி நேரங்களுக்குப் பிறகு ஊருக்குச் சென்றார்கள். இரண்டு நாட்களுக்குப் பிறகு மணியன் கிளம்பினார். ரத்தப் பரிசோதனையில் ஹீமோக்ளோபின் குறைவு எனும் குறை தவிர வேறு குறை ஏதுமில்லை என்றார்கள். மருந்துகள் கொடுக்க ஆரம்பித்தனர். பழச்சாறு என தந்தார்கள். தேறிவிடுவாள் எனும் நம்பிக்கை உற்சாகம் தந்து கொண்டு இருந்தது. எல்லாம் மூளையில் ஏற்பட்ட பாதிப்பு என அறிந்து அதை சரி செய்ய சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மணியன் பண உதவி செய்தார்.

புனிதா குணமாகத் தொடங்கினாள். அமுதன் முகத்தில் கூட மகிழ்ச்சி நிலவியது.

''சார் அடுத்த வாரம் வீட்டுக்கு கூட்டிட்டுப் போகலாம்''

புனிதா பேசத் தொடங்கினாள். என் பிரபஞ்சத்தின் தேவதை. அன்று இரவு சுரேந்திரனைக் கண்டேன். விபரங்கள் சொன்னேன். என்ன நினைத்தானோ ஏது நினைத்தானோ சற்றும் எதிர்பாராதபோது ஓங்கி எனது வயிற்றில் கத்தியால் குத்தினான். எனது அலறல் கேட்டு சிலர் ஓடிவந்தார்கள்.

''நீ சாவு''

தலைதெறிக்க என்னை தள்ளிவிட்டுவிட்டு ஓடினான்.

நான் செத்துரக்கூடாது என மனதில் எண்ணிக்கொண்டே நோயை விட மரணம் கொடியது என கத்த வேண்டும் போலிருந்தது. மயக்கமானேன்.

எனது கைகளை இறுகப் பற்றிக்கொண்டு நின்று கொண்டு இருந்தாள் புனிதா. இவ்வுலகில் இவர் எப்போது இறப்பார் என பிறர் நினைக்கும்படியாய் ஒருபோதும் நாம் வாழவே கூடாது.

முற்றும்

Monday, 10 October 2016

மரணத்தைவிட நோய் கொடியது 1

பேசுவதைக் கேட்க முடியாமல் சொல்பவரைப் பார்க்க முடியாமல் ஆழ்ந்த உறக்கத்தில் அவள் இருந்தாள். நான் சிவராமன் வந்து இருக்கிறேன் என்றேன். கண்அசைப்பாள் எனும் நம்பிக்கை எனக்குள் இருந்தது. அவளது அம்மாவிடம் கேட்டேன்.

''எப்ப இப்படி ஆனா''

''நீ போன மாசம் ஊரைவிட்டுப் போன மறுநாள்''

''நல்லாதானே இருந்தா''

''யாருக்கு எப்ப என்ன வரும்னு யாருக்குத் தெரியும்'' இடைமறித்தார் தாத்தா.

வீட்டில் வெட்கையாக இருந்தது.ஓடுகளில் பதியப்பட்ட கண்ணாடி வழியே சூரிய ஒளி அவளது முகத்தின் அருகில் விழுந்து கொண்டு இருந்தது. முகம் பெரும் சோகத்தில் இருப்பது போல எனக்குத் தென்பட்டது.

செடி தனது மலர்களுடன் வாடி வதங்கி கிடப்பது போல அவளது உடல் தரையில் பாயின்மீது கிடத்தப்பட்டு இருந்தது.

''ஊருக்கு எப்ப வந்த, உட்காரு''

''இப்ப''

அவளது தலைக்கு அருகில் சென்று அமர்ந்தேன். மல்லிகைப்பூ வாசம்தனை அப்போதுதான் கவனித்தேன். மல்லிகைப்பூ தலைக்கு அடியில் நசுங்கிக் கிடந்தது. நெற்றியில் வைக்கப்பட்ட திருநீறு குங்குமம். அவளது முகத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தேன். என்னை நல்லவனாக்கிய முகம் அது எனக்குள் அகமலர்ச்சியும் முகமலர்ச்சியும் கொண்டு சேர்த்த முகம் அது.

''இந்தா மோர் குடி''

அவள் மீது சிந்திவிடாதபடிக்கு சிறிதளவு குடித்துவிட்டு வைத்துவிட்டேன்.

''தினமும் இவளை குளிப்பாட்டி துணி மாத்தி இவ பக்கத்திலேயே என்னை உட்கார வச்சுட்டா''

''சாப்பிட்டாளா?''

''கஞ்சி கரைச்சி கொடுத்தேன்''.

''எப்போ கண் முழிப்பா?''

''ஆறு மணிக்கு''.

''டாக்டர்கிட்ட காமிச்சீங்களா?''

''பணத்துக்கு எங்க போறது''

அவளது கைகளைப்ற்றிக்கொண்டு அந்த வீட்டை விட்டு வெளியே நடக்க வேண்டும் போல் இருந்தது.

''நடப்பாளா?''

''ஒரு ஆளுப் பிடிச்சிக்கனும் இது என்ன எழவு நோயுனு தெரியலை''

''பேசுவாளா?''

''அம்மானு சொல்வா''.

''எத்தனை மணி நேரம் முழிச்சிருப்பா?''

''ஒரு நாற்பது நிமிசம் அப்புறம் படுத்துருவா''.

''ஆளுக அடையாளம் தெரியுதா?''

''ம் தெரியும்''

எப்போது ஆறு மணி ஆகும் என்று இருந்தது. அவளது தாத்தா என்னைப் பார்த்துக் கொண்டே இருந்தார். பதினோரு மணி பேருந்துதனை தவறவிட்டு கண்மாய் காடு என கடந்து வீடு வந்து சேர்ந்ததும் அம்மா என்னிடம் சொன்னார்.

''ராமா புனிதா படுத்தபடுக்கையா இருக்கா''

நெஞ்சு படபடவென அடித்துக்கொண்டது.

''என்னம்மா சொல்ற?''

''அதான்டா சுந்தரமூர்த்தி மக புனிதா''

எனக்குள் ஏற்பட்ட அதிர்வுகள் இந்த பூமிக்குள் ஏற்பட்டுக்கொண்டு இருக்கும் அதிர்வுகளை விட படுபயங்கரமாக இருந்தது. என்னை நிலைப்படுத்த முடியாமல் தடுமாறினேன்.

''பார்த்துட்டு வரேன்மா''

''சாப்பிட்டு போ''

''இப்ப வேணாம்''

தெருவில் கண்டவர்களின் வரவேற்புக்கு தலையாட்டி அழுகையை அடக்கிக்கொண்டு கேள்விகளுடன் அமர்ந்து இருக்கிறேன்.

''செத்துப் போயிருவாளோனு பயமாருக்கு''

''அப்படி சொல்லாதீங்க''

''எப்பப்பாரு இப்படியே சொல்லிக்கிட்டு என் பேத்தி சாகமாட்டா சாகுற வயசா இது'' தாத்தா இடைமறித்தார்.

அவளை அப்படியே தூக்கிக்கொண்டு என்வீடு நோக்கிச் செல்ல வேண்டும் போலிருந்தது. வீட்டுக்கு வெளியில் வந்து நின்றேன். அந்த தெருவின் கடைசி வீடு இது இருபுறமும் வரிசையாக ஒரே அமைப்பினால் ஆன இருபது இருபது வீடுகளை கொண்ட நீண்ட மிகவும் சுத்தமான தெரு இது. தெருவினைப் பார்த்த போது எத்தனை எத்தனை கற்பனைகளை இந்த தெரு எனக்குத் தந்து இருந்தது என்பதெல்லாம் கொஞ்சம் கூட நினைத்துப்பார்க்க இயலவில்லை.

''ஆறு மணிக்கு வரேன்''

கனத்த மனதுடன் கண்ணீர் திட்டுகளுடன் வீட்டுக்குப் போனேன்.

''சாப்பிடுப்பா''

அம்மா என கட்டிப்பிடித்து ஓ வென அழ ஆரம்பித்தேன்.

''என்னாச்சு''

''புனிதா எப்போ நல்லா ஆவா''

கதறலில் ஊடே சொன்னேன்.

''அவளுக்கு விதிச்சது அவ்வளவுதான்''

''நல்லா ஆயிருவாம்மா''

''அழாத கண்ணைத் துடைச்சிக்கோ எத்தனை நாளு லீவுல வந்த''

''ஒரு வாரம்''

''பேய் எல்லாம் ஓட்டிப் பார்த்தாங்க தேறலை''

பேய்! எனது பிரபஞ்சத்தின் தேவதை அவள். அவளது வருகைக்குப் பின்னரே எனது கிராமத்தின் தெருக்கள் எல்லாம் அழகு பெற்றன. அவள் வசிக்கும் தெருவினைக் கடக்காமல் ஒருபோதும் எனது தெருவுக்கு சென்றது இல்லை. அவள் இந்த கிராமத்திற்கு வந்து நான்கு வருடங்கள் இருக்கும். பத்தாவது முடித்து இருந்தாள். நான் +2 முடித்து இருந்தேன். கல்லூரிக்குச் சென்று விடுமுறையில் வரும்போதெல்லாம் அவள் மீதான ஆர்வம் அதிகரித்தபடி இருந்தது. எதேச்சையாக அவளிடம் ஒருமுறை கூடப் பேசியது இல்லை. அவளது முகம் பார்த்ததில் இருந்து நல்லவனாக வாழ வேண்டும் எனும் ஆவல் அதிகரித்தபடி இருந்தது. கோபம் கொள்வது தவறு எனும் எண்ணம் புத்திக்கு ஏறி இருந்தது. எனது உலகம் அவளைச் சுற்றி அமையத் தொடங்கியது. சாப்பிட்ட பின்னரும் பசித்தது என்ன காரணம் என யோசித்தபோது அவள் சாப்பிட்டு இருக்கமாட்டாளோ என எண்ண வைத்தது +2 முடித்த பின்னர் படிப்பதை நிறுத்தி இருந்தாள். பண கஷ்டம் எனும் காரணம் போதுமானதாக இருந்தது.

விவசாயத்தில் கூலி வேலை செய்து பிழைப்பது பெரும் கடினம். பக்கத்து மில்லில் சென்று வேலை பார்க்கத் தொடங்கினார் அவளது அப்பா. யார் என்ன விபரம் இதற்குமுன்னர் எந்த ஊரில் இருந்தார்கள் ராமநாதனின் வீட்டிற்கு எப்படி குடி வந்தார்கள் எனும் கேள்விகள் பலநாட்களாக எனக்குத் தோனவில்லை. ஒருமுறை அம்மாதான் என்னிடம் மாந்தோப்புல இவங்க இருந்து இருக்காங்க. ராமநாதன் அண்ணனோட தூரத்துசொந்தம் அந்த அண்ணன் பிசிண்டிக்கு போறதால இங்க வந்துட்டாங்கன்றபோது இங்க எதுக்கு வரனும் எனும் கேள்வி என்னுள் மகிழ்ச்சியைத் தந்து இருந்தது.

''ராமா சாப்பிடுப்பா''

கொஞ்சமாக சாப்பிட்டேன், விழுங்குவதற்கு கடினமாக இருந்தது. ஆறு மணிக்கு முன்னரே புனிதாவின் வீட்டிற்குச் சென்றேன். மாலை நேரத்து இருள் சூழ்ந்து கொள்ளும் வேளையில் தெரு விளக்குகள் எரிய ஆரம்பித்தது. மனம் துடிதுடித்தது. அவளது அப்பா வேலை முடித்து வீட்டுக்கு வந்து இருந்தார்.

''வா ராமா''

அவளது நிலையை அப்படியே ஏற்றுக்கொண்டார்கள் போலத் தெரிந்தது. உள்ளே சென்று அமர்ந்தேன்.

''எழுந்தாளா?''

''இன்னுமில்ல''.

ஆறு மணி ஆனது. எழவில்லை. என்னைப் பார்த்து அடையாளம் கண்டு கொள்வாளா, வீட்டுக்குள் போதிய வெளிச்சமில்லை. நிமிடங்கள் ஓடின. முகம் பிரகாசமாகத் தெரிய மறுத்தது. அம்மா என்றபடி எழ எத்தனித்தாள். மெதுவாக அவளைத் தூக்கி சுவரோரம் அமர வைத்தார்கள். என்னைப் பார்த்துக்கொண்டே அம்மா என அழைக்க கைத்தாங்கலாக வீட்டுக்குப் பின்புறம் அழைத்துச் சென்றனர். சிறிது நேரத்திற்குப் பிறகு உள்ளே வந்தார்கள்.

''நான் சிவராமன்''

''ம்''

ஒற்றை வார்த்தை சன்னமாக கேட்டது. எனது பிரபஞ்சத்தின் தேவதை.

''நான் என்னோட கூட்டிட்டுப் போறேன்''

''சிரமம் ராமா''

என்னை அடையாளம் கண்டுகொண்டாளா எனத் தெரியாமல் தவித்தேன். அவள் மீண்டும் உறக்கத்தில் விழும் முன்னர் ஏதேனும் செய்ய வேண்டும் என மனம் பரபரத்தது. நானே அவளுக்கு ஆற்றலும் எல்லாம் என நினைத்தேன்.

''நான் கூட்டிட்டுப் போறேன், குணமாக்கிரலாம்''

'வேண்டாம் ராமா''

''புனிதா என்னோட வரியா''

''ம்''

''நான் கூட்டிட்டுப் போறேன்''

உடலில் எவ்வித தசையும் இல்லையோ எனும் அளவுக்கு ஒடுங்கிப்போயிருந்தவளின் கையைப்பிடித்தேன். இறுகப்பற்றிக் கொண்டாள். கஞ்சி கொடுத்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கினாள். இந்த கன்னங்களைத்தான் எப்படியெல்லாம் என்னுள் வர்ணித்தேன் என நினைத்தேன். அவள் படும்கஷ்டங்களைக் கண்டு எனக்கு கண்ணீர் முட்டிநின்றது இறுகப்பற்றிய கையை விடவில்லை. இறுகப்பற்றிக்கொள்ள எங்கிருந்து வந்தது இந்த ஆற்றல்? போதும் என தலையை மெதுவாக ஆட்டினாள்.

''எல்லா உணர்வுகளும் இருக்கின்றதா''

பேசுவதுப் புரிந்தது போல பார்த்தாள்.

''ம்''

என் மீது அவளை சாய்த்துக்கொண்டு நடக்கத் தொடங்கினேன். சிரமம் கொண்டாள். அப்படியே அவளைத் தூக்கிக்கொண்டு எனது வீடு நோக்கி நடந்தேன்.

''தூங்கிருவா''

விழிகள் என்னிடம் ஏதோ கெஞ்சுவது போல தென்பட்டது.

''கண்ணை மூடாதே''

''ம்''

சிரிக்க மறந்து இருப்பாள் என தோனியது.

வீட்டுக்குள் சென்றதும்தான் தாமதம்.

''என்ன காரியம் பண்ணிட்டு வந்து இருக்க''

''சொன்னா கேட்கலை''

என்னுடன் வந்து நின்றார்கள் அவளது அம்மா அப்பா தாத்தா.

''நான் பார்த்துக்கிறேன்''

அவளை அமர வைத்தேன்.

''நாளைக்கு நான் காலையில ஆஸ்பத்திரிக்கு கூப்பிட்டுப் போறேன்''

வீட்டில் பெரும் கூட்டம் கூடிவிட்டது.

''ஏன் இப்படி பண்ற''

''உனக்கு அறிவே இல்லையாண்ணா''

அம்மாவுடன் தங்கையும் சேர்ந்து கொண்டாள். பலர் திட்டத் தொடங்கினார்கள்.

''நான் கட்டிக்கப் போற பொண்ணு பேசாம போயிருங்க''

அவளின் முன் கோபம் அழுகை எல்லாம் எனக்கு வராது. மெல்ல மெல்ல கலைந்து போனார்கள். தூங்கிருவா என்றது போலவே தூங்கத் தொடங்கினாள்.

''எப்போ எந்திரிப்பா?''

''காலையில எட்டு மணி''.

தூங்காத என்றேன் தூங்கிப் போனாள்.

(தொடரும்)


Friday, 5 August 2016

போதை தரும் போதனைகள்

''பக்தா''

''சுவாமி வாருங்கள், வாருங்கள். உங்களைப் பார்த்து எத்தனை மாமாங்கம் ஆகிவிட்டது''

''ஆச்சர்யம் பக்தா''

''எதைப் பற்றி சுவாமி?''

''பயபக்தியுடன் என்னை நீ அழைப்பதுவும், வரவேற்பதுவும்''

''நீங்கள் சொல்லும் விஷயங்களை பின்பற்றினால் மோட்சம் கிட்டும் என்று கேள்விப்பட்டேன்''

''வேறு என்ன என்ன கேள்விப்பட்டாய் பக்தா?''

''நோய் உடலைத் தீண்டாது. மனம் விசாலமாக பேரமைதியுடன் இருக்கும்''

''வேறு என்னவெல்லாம் பக்தா?''

''நல்ல மனிதர்களின் தொடர்பு கிடைக்கும்''

''பக்தா உனக்கு சுயபுக்தி என்பதே கிடையாதா?''

''என்ன சுவாமி?''

''நான் சொல்வதை நீ பின்பற்றினால் இதுவே நடக்கும் எனில் நீ சொல்வதை நீ பின்பற்றினால் என்னவெல்லாம் நடக்கும் என யோசித்தாயா?''

''நான் சொல்வதை எப்படி சுவாமி?''

''உனக்கு நல்லது எது கெட்டது எது என்பதை சிந்திக்கும் அறிவு வைத்து இருப்பதற்கு காரணமே சுயபுத்தியுடன் நீ செய்லபட வேண்டும் என்பதுதான். ஆனால் நீயோ வேறு எவருடைய சொல்பேச்சு கேட்டு நடந்தால் உனக்கு நன்மை பயக்கும் என முட்டாள்தனமாக நம்பிக்கொண்டு இருக்கிறாய். ஒரு மனிதனின் அடிப்படைத் தேவைகள் என்பது உணவு, உடை, இருக்க இடம். இந்த மூன்றும் வேண்டுமெனில் பணம் அவசியம். பணம் சம்பாதிக்க வேலை அவசியம். வேலை வேண்டுமெனில் திறமை அதைச்சார்ந்த அறிவுக்கூர்மை அவசியம். இதோடு மட்டுமில்லாமல் தெளிவான நோக்கம். இப்படி எல்லாமே உனக்கே நீ செய்து கொள்ள முடியும் எனும்போது எதற்கு பக்தா இப்படி பிறர் பின்னால் சுற்றிக்கொண்டு அலைய வேண்டும் என கருதுகிறாய்''

''சுவாமி நீங்கள் சொன்ன விஷயத்தை கேட்டதும் எனக்குள் ஒரு பரவச நிலை உண்டாகிறது. இது எல்லாம் எனக்குப் புரியாமல் இருந்தது. இதை உங்களிடம் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் போல் இருக்கிறது''

''பக்தா மடத்தனமான காரியங்களில் மதி கெட்ட மடையர்களே ஈடுபடுவார்கள். நீ பள்ளிக்குச் செல்கிறாய். பாடங்கள் படிக்கிறாய். அத்தோடு அந்த பாடங்கள் உனக்குத் தரும் அறிவினை வளர்த்துக்கொண்டு இருக்க வேண்டுமேயன்றி பள்ளிதான் எல்லாம் கதி  என கிடந்தால் உன் நிலை என்னவென யோசி பக்தா''

''சுவாமி, உங்கள் போதனைகள் என்னை மெய் மறக்கச் செய்கின்றன''

''ஒரு பாடல் பரவசம் தருவதும், ஒருவரின் கருத்துக்கள் நமக்குப் பிடித்துப் போவதும் இயல்புதான் பக்தா. ஆனால் நீ சொல்கிறாயே, பரவசம் அடைதல் மெய் மறக்கச்  செய்தல் எல்லாம் நீயே உன்னை ஏமாற்றிக்கொள்வதுதான். எதற்கு இப்படி அறிவீனமாக யோசிக்கிறாய் என்றுதான் புரியவில்லை. எவருமே லாபம் இன்றி எந்த ஒரு பணியையும் செய்வது இல்லை. உடற்பயிற்சி செய்ய எதற்கு நீ ஒரு இடம் செல்ல வேண்டும். உனது வீட்டில் இருந்து செய்தால் ஆகாதா. ஆனால் நீ உனது மனதை மயக்கிச் செயல்படும்போது இது இதுதான் சரி என்கிற நிலைக்குத் தள்ளப்படுகிறாய். பின்னர் உன்னை அறியாமல் அதற்கு அடிமைத்தனம் ஆகிறாய். இதில் இருந்து நீ விடுபடவேணும் பக்தா''

''ஏன்  சுவாமி, நானா உன்னை வீட்டுக்கு வா வானு கூப்பிட்டேன். நீயே வந்துட்டு பெரிய இதாட்டம் போதனை சொல்லிட்டு இருக்க. உன்னை நான் கேட்டேனா, இல்லை கேட்டேனா. நீயும் என்னை மாதிரி ஒரு மனுஷன் தான, ஒரு நாலு ஐஞ்சி புத்தகம் படிச்சிட்டு இவ்வுலகம் அப்படி இப்படினு பேசறியே. நான் அதை எல்லாம் பிடிச்சி இருக்குனு சொன்னா கேட்டுட்டு போக வேண்டிதானே, அதைவிட்டுட்டு என்ன வியாக்கியானம் வேண்டி கிடக்கு''

''பக்தா, என்னை இப்படி பேச உனக்கு எப்படி மனம் வந்தது''

''பிறகு எப்படி பேசனும் சுவாமி? நீயே மதிகெட்டுப் போய்த்தான் ஒவ்வொருவரும் இன்னல்களில் இருக்கிறீர்கள், உங்கள் இன்னல்களை போக்குவேன் என சொல்லி மதி மயக்குற. எவனாச்சும் எதிர்த்துக் கேட்டா உடனே நான் அப்படி இல்லைனு சொல்றது. மனுசனா மனுசனா இருக்க விடு சுவாமி''

''எனது போதனைகள் உன்னில் இப்போது வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது. நீயே சுயமாக சிந்திக்க ஆரம்பித்துவிட்டாய். நான் வருகிறேன்''

''சுவாமி, கொஞ்சம் விஷம் இருக்கிறது, அருந்திவிட்டுப் போறியா?''

''வேணாம் பக்தா, நானும் ஒன்னும் ஆலகால நீலகண்டன் இல்லை''

''யாரு அது ஆலகால நீலகண்டன்?''

''எனக்கு நேரம் இல்லை, இன்னொருமுறை சொல்கிறேன்''

''ஏன் சுவாமி உனக்கு அறிவே இருக்காதா, இப்பதான் சுயமா நான் சிந்திக்கிறேன் சொல்ற அப்புறம் நேரம் இல்லை பிறகு சொல்றேன்னு சொல்ற. சுயமா சிந்திக்கவே விடமாட்டியா. நான் கேட்டதும் என்ன சொல்லி இருக்கனும். சுயமாக சிந்திக்க வேணும் பக்தானு ஆனா நீ சொன்ன''

''பக்தா, உன்னைப்போல் தெளிவான மனநிலையில் அனைவரும் இருந்துவிட்டால் எனது போதனைகள் எல்லாம் எதற்கு பக்தா. ஆனால் நிறைய மக்கள் தாங்கள் செய்வது புரியாமல் இந்த உலகில் பல ஆண்டுகள் உயிரோடு இருப்பது போல நினைத்துக்கொண்டு தங்களையேத் தொலைத்து விடுகிறார்கள். இப்படி அவர்களை தொலைய விடாமல் பாதுகாக்க நான் சில விஷயங்களை சொன்னால் எனது காலடியில் வந்து கிடக்கிறார்கள். அதற்கு நான் என்ன செய்ய இயலும் பக்தா?''

''சுவாமி, திருந்தவே மாட்டியா? இதை எல்லாம் கேட்டனா? ஆமாம்னு சொல்றதுக்கு பதில் என்ன என்னமோ பேசற''

''பக்தா இந்த உலகில் பலர் தெளிவற்ற மனோ நிலையில் இருக்கிறார்கள். பெரும் குழப்பத்தில் அவர்கள் தடுமாறுவது கண் கூடு. இதற்கு பல காரணங்கள் இருப்பதால் எந்த காரணங்கள் என புரியாமல் ஏதேனும் ஒன்றில் தஞ்சம் அடைய நினைத்து என்னவென்னவோ செய்து கொண்டு இருக்கிறார்கள். படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற பாகுபாடு எல்லாம் இல்லை. மனதுக்கு திருப்தி என்ற ஒரு சில வார்த்தைகளை அவர்கள் எடுத்துக்கொண்டு செயல்படுவது எத்தனை தவறான விஷயம் என அவர்கள் புரிந்து கொள்வது இல்லை. அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என எவரும் நினைப்பதும் இல்லை''

''சுவாமி, என்ன பேசிக்கிட்டே போற. நேரம் இல்லைனு சொன்னில கிளம்பு''

''பக்தா போதனைகள் இந்த உலகில் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகின்றன. அந்த போதனைகளை சொல்வதற்கென நான் அவதாரம் எடுத்து வந்து இருக்கிறேன். இப்படி எனது செயல்பாடுகளை நீ முடக்குவது எவ்விதத்தில் நியாயம்.''

''சுவாமி, அதுதான் சொன்னேன். பரவச நிலை என. ஆனால் நீங்கள் தான் என்னை குழப்பிவிட்டீர்கள். உங்கள் போதனைகளை கேட்டு உங்களோடு வருகிறேன் சுவாமி''

''டேய் எங்கடா தூக்கத்திலே தூங்கிட்டே நடந்து போற''

சட்டென விழித்துப் பார்த்தேன்.

''சும்மா கண்ணு மூடி நடந்து பார்த்தேனம்மா''

அப்போதுதான் தோனியது. இந்த உலகத்தில் மக்கள் தூங்கிக்கொண்டே வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். எழுப்பி விடுகிறேன் என பலர் அவர்களை ஏப்பம் விட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

இந்த சாமியார் இனிமேல் கனவில் வராமல் இருக்க விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும்.