Saturday 4 October 2014

அம்மா நான் சமைக்கிறேன்

ஏன்டா இப்படி உட்காந்துட்டு இருக்கே வந்து சாப்பிட்டு போ அம்மாவின் குரல் கேட்டது.

எனக்கு சாப்பாடு வேண்டாம்மா, அப்புறம் வந்து நான் சாப்பிடுறேன் என நான் மறுப்பு தெரிவித்தது அம்மாவுக்கு சங்கடமாக இருந்து இருக்கும்.

ஏன்டா இப்படி பண்ற, அப்படி என்ன தலை போற விசயம், உனக்காகத்தான் இவ்வளவு அவசரமா செஞ்சேன். இப்படி சாப்பிடாம போனா என்னடா அர்த்தம்.

அம்மா வந்து சாப்பிடுறேன் என அவசரமாக கிளம்பினேன். அம்மா அடுப்பங்கரையில் இருந்து எட்டி வந்து பார்த்தார். அவரது முகத்தில் கோபத்தை விட சோகம் இழையோடிக் கொண்டு இருந்தது. சரி கொடும்மா என வேக வேகமாக நாலு வாய் சாதம் அள்ளிப்போட்டேன். மெதுவா சாப்பிடுடா, விக்கிக்கிற போகுது.

அடுப்பங்கரையில் பெரும்பாலும் அம்மாவின் பொழுது கழியும். காலை சாப்பாடு, மதிய சாப்பாடு இரவு சாப்பாடு என அம்மா தினமும் சமைத்துக் கொண்டே இருப்பார். விறகு எரியும் அடுப்பில் அவரும் எரிந்து கொண்டு இருப்பார். அம்மாவுக்கு உதவி செய்ய வேண்டும் என நினைப்பேன் ஆனால் எனது அவசரம் எதுவும் செய்ய விடாது. எனக்கு சமைக்கத் தெரியாது. சாப்பிட மட்டுமே தெரியும். அதுவும் எனக்கு அம்மா தட்டில் சாப்பாடு எடுத்து வைத்தால் தான் நான் சாப்பிடுவேன். மறு சோறு வாங்கும் பழக்கம் இல்லை என்பதால் அம்மா நிறையவே சாப்பாடு எடுத்து வைப்பார்கள். நான் சாப்பிட்டால் தான் அவரது பசி அடங்கும்.

என்னடா விஷயம் எனும் அம்மாவின் கேள்விக்கு என்ன பதில் சொல்லலாம் என யோசிக்கும் முன்னரே ரகுராமை பார்க்கப்போறேன் என பொய் சொன்னேன். எதுவும் வேலை விசயமா என்று அம்மாவின் அடுத்த கேள்விக்கு என்னால் பதில் யோசிக்க  முடியவில்லை. வரசொல்லி இருந்தான்மா என சமாளித்து கிளம்பினேன்.

நான் சென்றபோது எதிர்பார்ப்புடன்  நின்று கொண்டிருந்தாள். என்னடா இவ்வளவு லேட்டு? வீட்டில சொன்னியா இல்லையா? எங்க அப்பாவும் அம்மாவும் நீ வேலைக்கு சேராம உன்னை கல்யாணம் பண்ணக்கூடாதுன்னு ஒரு காலுல நிக்கிறாங்க. எப்படா நீ வேலைக்கு போவ? எப்படா என்னை கல்யாணம் பண்ணுவ? என சோகமாக கேட்டாள். இப்போது பாவ்யாவின் ஊர் நகரம், எனது ஊர் இப்போதும் கிராமம்.

இன்னும் இல்லை பாவ்யா, எப்படி சொல்றதுன்னு தெரியலை. அப்பாவை நினைச்சாதான் பயமா இருக்கு என்றதும் பயப்படாதடா என்றாள்

இன்னும் ஒரு வாரத்தில் வேலை கிடைச்சிரும். அப்புறம் அப்பாகிட்ட நம்மளை பத்தி சொல்லிட்டு முடிவு சொல்றேன்.

எத்தனை வாரமா இதை சொல்லிட்டு இருக்க, எத்தனை இன்டர்வியூடா? டேய் நான் சாம்பாதிக் கிறேன்ல,  நீ சமைச்சி போடுடா  உனக்கு அதில என்னடா சிரமம். எனக்கு நீ சீக்கிரம் சொல்லு, உன்னைத்தவிர எனக்கு வேறு எவனோடயும் கல்யாணம் ஆகாது. மனசில வைச்சிக்கோ. இந்தா பணம், உன் அம்மாவோட பிறந்தநாளுக்கு சேலை வாங்கனும்னு சொன்னியே, இப்ப எனக்கு வேற வேலை இருக்கு. நாளைக்கு வந்தா கடையில வாங்கித்தாரேன். என் அம்மாவுக்கு தன்னோட பிறந்தநாள் எப்போது எத்தனை வயது என்று கூட தெரியாது.

பணத்தைக் கொடு, நானே போயி வாங்கிக்கிறேன்.

நல்ல பார்டர் போட்டது வாங்கிக்கொடு. நான் என்னோட வீட்டில சொல்லி சமாளிக்கிறேன். மனசு போட்டு குழப்பிக்காதே. சேலை வாங்கியதும் உன் அம்மாவோட ஒரு ரவிக்கை கொண்டு வா, அந்த சேலைக்கு ரவிக்கை தச்சி தரேன்.

அவள் செல்லும் பாதையை பார்த்துக் கொண்டே நின்றேன். சின்ன வயசு காதல். எனக்கு ஒன்று என்றால் துடிதுடித்து போவாள். என் மீது அவளுக்கு அத்தனை பிரியம். அவள் தைரியமாக அவளுடைய காதலை அவளது வீட்டில் சொல்லிவிட்டாள். எனக்கோ இந்த வேலையை நினைத்தால்தான் பயமாக இருக்கிறது.

கடைக்கு செல்வதற்குமுன் ரகுராமை பார்த்துவிட்டு செல்லலாம் என சென்றேன்.

உனக்கு அடுத்த வாரம் வேலை ஆர்டர் வந்துரும். எல்லாம் சரி பண்ணிட்டேன். சந்தோசமா இரு.

நிசமாவா?

என் மேல உனக்கு நம்பிக்கையே இல்லைல. அடுத்த வாரம் வந்து பேசு என சொல்லிவிட்டு போனான்.

கடையில் சென்று சேலை  வாங்கினேன். அம்மாவுக்கு முதன் முதலில் வாங்கும் சேலை அதுவும் அவள் கொடுத்த பணத்தில். சேலையை வாங்கிக்கொண்டு வீட்டில் அம்மாவுக்குத் தெரியாமல் மறைத்து வைத்தேன்.

அம்மா எனக்கு அடுத்த வாரம் வேலை கிடைச்சிரும்னு ரகுராமன் சொன்னான்.

அம்மாவுக்கு சந்தோசமாக இருந்தது. இந்த தடவையாச்சும் உனக்கு வேலை கிடைக்கணும். அப்பாவுக்கும் முடியலைடா.

அம்மா நான் சமைக்கட்டுமா என அம்மாவிடம் கேட்டேன். அதற்கு அம்மா சிரித்துக் கொண்டே என்னடா இப்படி ஒரு விபரீத ஆசை.

வரப்போற பொண்ணுக்கு சமைக்கத் தெரியலைன்னா என்னம்மா பண்றது.

கல்யாணம் பண்ணிட்டா என்னை விட்டு போயிருவியாடா?

இல்லைம்மா, வேலைக்குப் போற பொண்ணு வந்தா நீதானம்மா சமைக்கணும், உன் வாழ்க்கை சமைச்சே கழிஞ்சிரும்

எனக்கு சமைக்கிறது, தோட்டம் போறதை விட்டா வேறு என்னடா தெரியும்? ஏன்டா பொண்ணு பார்த்துட்டியாடா?

அது வந்துமா...

அதான்டா பார்த்தேன். என்னைக்குமில்லாம சமைக்கிறது பத்தி பேசறன்னு

அம்மா, நம்ம ஊருல இருந்தாங்க பாவ்யா குடும்பம் அந்த  பொண்ணைதான் சின்ன வயசில இருந்து விரும்பறேன் அவளும் விரும்புறா அவங்க வீட்டில சொல்லிட்டா எனக்கு வேலை கிடைச்சா பேசலாம்னு அவங்க  வீட்டில சொல்லிட்டாங்க. அவ வேலைக்கு போறா உனக்கு வேலை கிடைக்கலைன்னா என்னடா நான் சம்பாதிக்கிறேன் நீ சமைச்சி போடுன்னு இன்னைக்கு சொன்னா.

அப்படினா நீ ரகுராமனை பார்க்கப் போகலை.

ரகுராமனைப் பார்த்துட்டுதான் வந்தேன்மா.

சபாஷ். அப்பாவின் வார்த்தையை கேட்டு திடுக்கிட்டு திரும்பினேன்.

சிவகாமி, நீ இவனுக்கு சமையல் கத்துக்கொடு, வரப்போற பொண்டாட்டிக்கு சமைச்சிப் போடட்டும்.

அப்பா அது வந்து...

நீ வேலை தேடு அப்புறமா அந்த பொண்ணு பத்தி பேசு என அப்பா சொல்லிவிட்டு போய்விட்டார்.

அம்மா, உனக்கு அப்பா கூடமாட சமைக்க உதவியே பண்ணினது இல்லையிலம்மா

ஏன்டா இப்படி, உன்னோட அக்காக்களே எனக்கு உதவி பண்ணினது இல்லை. நான் சமைச்சாத்தான் எனக்கு திருப்தி, உங்களுக்கு திருப்தி.

அடுத்த நாள் ஒரு ரவிக்கையை எடுத்து சென்று பாவ்யாவிடம் சேலையுடன் தந்தேன். நல்ல செலக்ஷ்சன்டா என்றாள். அப்பாவின் சம்மதம் என்னை ரகுராமனை தினமும் பார்த்து வர செய்தது. எனது நச்சரிப்பு தாங்காமல் நாளைக்கு வா என சொல்லி அனுப்பினான்.

அம்மாவின் ஐம்பாதவது பிறந்தநாளுக்கு  இன்னும் நான்கு நாள் மட்டுமே இருந்தது. பாவ்யாதான் எனக்கு ஒரு யோசனை சொன்னாள்

டேய் உன்னோட அம்மாவோட பிறந்தநாளை சூப்பரா செஞ்சா என்னடா?

பணத்துக்கு எங்க போவேன்?

என்கிட்டே இருக்குடா. உங்க அம்மாவோட நெருங்கிய தோழிகள் எல்லாரையும் கூப்பிடுவோம் உங்க அம்மாவுக்கு தெரியாம சர்ப்ரைசா வைப்போம்டா.

என் அம்மா ஊரை விட்டே வரமாட்டாங்க.

உன் வீட்டிலேயே வைப்போம்டா. நீயும் நானும் சமைக்கிறோம்டா. சரி என சொல்லிவிட்டு வந்தேன்.

ரகுராமனை சென்று பார்த்தேன். ரகுராமன் இந்தா வேலை ஆர்டர் என கையில் கொடுத்தான். அவன் கையை பிடித்து வணங்கினேன். எங்க வீட்டுக்கு இந்த சனிக்கிழமை விருந்துக்கு வந்துரு என சொன்னேன்.

அம்மாவின் நெருங்கிய தோழிகள் என நான்கு பேரில் இரண்டு பேர் ஊரில் இருந்தார்கள். மற்ற இரண்டு பேர் வேறு ஊரில் இருந்தார்கள். அவர்களை குடும்பத்தோடு வரச்சொல்லி இருந்தேன். அக்காக்கள், சித்தப்பா, சித்தி பெரியப்பா பெரியம்மா என நிறைய பேரை அழைத்துவிட்டேன். எனக்கு வேலை கிடைத்த சந்தோசத்தினை கொண்டாட நானே சமைக்க இருப்பதாக சொன்னேன். அம்மாவுக்கோ ஆச்சரியம்.

எங்கடா சமைக்க கத்துக்கிட்ட?

அந்த பொண்ணு  அன்னைக்கு வந்து சமைக்கிறேன்னு சொல்லி இருக்காம்மா.

இந்தாடா பணம் என அப்பா தந்தார்.

இரண்டு தினங்கள் கழிந்தது. பாவ்யா என்னை வரச்சொல்லி இருந்தாள்.

என்னடா உங்க அப்பா எங்க வீட்டுக்கு வந்துருந்தார்டா. உன்னோட வேலை கிடைச்ச விருந்துக்கு எங்களை எல்லாம் வரச்சொல்லி இருந்தார்டா.

அம்மாவின் பிறந்த தினம் அன்றுதான் விருந்துக்கு ஏற்பாடு செய்து இருந்தேன். முன்னிரவே அம்மாவிடம் நாளை எனது நாள் என சொல்லி வைத்தேன்.  காலையில் எழுந்து கூட்டிப் பெருக்கி வாசல் தெளித்தேன். பாவ்யா அதிகாலை வந்து விட்டாள். அவளே கோலம் போட்டாள். 

நான் முதன் முதலில் வியந்த ஓவியம் கோலம்.

நானும் அவளும் சமைக்க ஆரம்பித்தோம். அம்மா உதவி செய்ய வந்தார்கள். அம்மா நீங்கள் இன்று ஓய்வு எடுக்கும் நாள் என சொல்லி வைத்தேன். நிறைய பேரு சாப்பிட வராங்கடா. ஏம்மா நீ நல்லா சமைப்பியா?

சாப்பிட்டுட்டு சொல்லுங்கத்தே என்றாள்.

சமையல் தயாராகி முடிந்தது. அம்மா வந்து ருசி பார்த்துவிட்டு பிரமாதம்டா என்றார்கள். உன் கைக்கு தங்க வளையல் போடணும்மா என்றார் அம்மா. அக்காக்கள் சொந்த பந்தங்கள் எல்லாம் வந்து சேர்ந்தார்கள். பாவ்யாவின் அப்பா அம்மாவும் வந்து இருந்தார்கள்.

ரகுராமனும் வந்து இருந்தான். எல்லோரும் அமர்ந்து இருக்க பாவ்யா என் அம்மாவை சாமி அறைக்கு அழைத்து சென்றாள். நானும் உடன் சென்று புது சேலையை ரவிக்கையை தந்தேன். அம்மா உனக்கு இன்னைக்கு ஐம்பாதவது பிறந்தநாள் அதனால்தான் இவ்வளவு ஏற்பாடும், பாவ்யாவோட யோசனை என்றேன்.

அம்மாவுக்கு இது எல்லாம் பழக்கம் இல்லை. பாவ்யா கேட்டுக்கொண்டதால் சிறிது நேரத்தில் புது சேலை ரவிக்கை அணிந்து வந்தார். அம்மாவின் ஐம்பாவது பிறந்தநாள் குறித்து அனைவருக்கும் சொன்னேன். அப்பா மெய்மறந்து நின்றார். அம்மா வெட்கம் கொண்டார்.

வேலை கிடைச்சிருக்குன்னு சொல்லி அம்மாவுக்கு சமைச்சி போட்டியா என எல்லோரும் அம்மாவை வாழ்த்திவிட்டு சாப்பிட்டுச் சென்றார்கள். அத்தனை பேரும் சாப்பாடு குறித்தும் அம்மாவின் பிறந்தநாள் குறித்தும் பேசினார்கள். அம்மாவுக்கு பெருமிதமாக இருந்தது.

------------------

எந்தவொரு பிறந்தநாளையும் கொண்டாடாமல் பிள்ளைகளுக்காக வாழ்ந்து முடித்துவிடும், தனது வாழ்க்கையை மட்டுமே முக்கியமாக்கி அம்மாவை மறந்து போகும் பிள்ளைகள் கொண்ட அம்மாக்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம். பாவ்யாவுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.









Wednesday 24 September 2014

கற்றறிந்த கயவர்கள்

ஒருவன்  தனது நண்பனிடம் சொல்லி தான் தற்கொலை செய்துகொண்டதாக செய்தி பரப்ப சொல்கிறான். அந்த நண்பனோ வற்புறுத்தலின் பேரில் அவனது நண்பன் வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக செய்தியை வெளியிடுகிறான். இதைப் படிக்கும் நபர்கள் சிலர் பதறுகிறார்கள். அவரவருக்கு எவ்வளவு வேலை இருக்கும், அதை எல்லாம் தள்ளிவைத்துவிட்டு சம்பந்தப்பட்ட நபருக்கு செல்பேசியில் அழைக்கிறார்கள். அந்த செல்பேசி ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

இதெல்லாம் ஒரு ஐந்து முதல் பத்து நிமிடங்கள் நடந்து இருக்கும். அதில் ஒரு சிலர் இப்படி நடந்து இருக்காது எனவும் சொல்கிறார்கள். எனக்கோ என்னை அறியாமல் ஒருவித படபடப்பு. எங்கள் ஊரில் எப்போதோ தற்கொலை செய்து கொண்ட அத்தனை நபர்களும் கண் முன் வந்து போகிறார்கள். இத்தனைக்கும் இந்த செய்தி வெளியிட சொல்லும் நபர் அவ்வப்போது நல்ல நல்ல விசயங்கள் எழுதக்கூடியவர்.

திடீரென் எழுத சொன்ன நபரே வந்து உண்மையை வெளியிடுகிறார். எனக்கு கோபம் அதுதான் அப்படி எழுத சொன்னேன். கோபம் வந்தால் மௌனமாக இருக்கப் பழகிக்கொள்ள வேண்டும் இல்லையென்றால் இப்படித்தான் அடுத்தவரை வருத்தம் கொள்ள வைக்கத் தோன்றும். அடப்பாவி, சே என உலகம் இது. என்ன உள்ளம் இது என்றே அந்த இடத்தை கடந்து போய்விடுகிறேன்.

இருப்பினும் அதனால் ஏற்பட்ட அந்த சில நிமிட மன அதிர்வுகளை அவன் உணர்ந்து கொள்ளப் போவதில்லை. எனக்கும் அவனுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை, எழுத்துக்கு எழுதுவதோடு சரி. முகம் தெரியாத மனிதர்களுடன் என்ன அத்தனை பிடிமானம் வேண்டி கிடக்கிறது என எண்ணியபோது நல்லவரோ கெட்டவரோ ஒரு மனிதரின் மரண செய்தி எல்லோரையும் ஒரு உலுக்கு உலுக்கிவிடும். நாம் சாதாரண மனிதர்கள், ஞானிகள் அல்ல என்றே எழுத தோணியது. எவரேனும் அடிபட்டு கிடந்தால் கண்ணை திருப்பிக் கொள்ளும் உலகம் அல்ல இது. பதறிக்கொண்டு ஓடும் பாரதம் இன்னும் உள்ளது.

இணையம் என்பது எத்தனை அபாயகரமானது என்பது பலர் உயிருடன் இருக்கும்போதே இறந்து போனதாக செய்தி வெளியிடும் வக்கிரம் எண்ணம் கொண்டது.

மனிதர்களின் மரணம் என்பது ஒரு ஈடு செய்ய முடியாத இழப்பு. மறுபிறப்பு என்பதெல்லாம் இருக்கட்டும். உடல் உறுப்புகளே வெட்டப்பட்ட பின்னர் மறுபிறப்பு எடுக்க முடியாது என்பதுதான் உண்மை.

இப்படி மரண நிகழ்வுகள் தொடர்பாக பல வதந்தி விசயங்கள் இந்த கற்றறிந்த கயவர்களால் பரப்பபடுகின்றன. இது ஒருவகையான மன வியாதி. இப்படி எத்தனையோ மனோ வியாதிகளுடன் பலர் இணையத்தில் வலம் வருகின்றனர். சிலரின் மனவியாதிக்கு பலர் அவஸ்தைபடுவதுதான் இந்த இணைய உலகம் கற்று தந்தது. 

போதும் உங்கள் வக்கிர விளையாட்டு கற்றறிந்த கயவர்களே. 


Sunday 21 September 2014

தமிழக திரையரங்குகள் (தியேட்டர்கள்)

இந்தியாவில் சில நாட்கள் - 11

சினிமா உயிர் மூச்சு என மொழி உயிர் மூச்சு என்பதை இடம்பெயரச் செய்துவிடும் அளவிற்கு தமிழகத்தில் சினிமா மோகம் நிறையவே உண்டு. எங்கள் கிராமத்தில் எல்லாம் சினிமா கொட்டகை எல்லாம் இல்லை. ஒன்று விருதுநகர் செல்ல வேண்டும் அல்லது அருப்புகோட்டை செல்ல வேண்டும். எனக்கு விபரம் தெரிந்து சிறு வயதில் விருதுநகர் சென்று திரைப்படம் பார்ப்பதுதான் வழக்கம்.

விழாக்காலங்களில் எங்கள் ஊரில் வெள்ளை திரை கட்டி சினிமா காட்டுவார்கள். அதுவும் எம்ஜிஆர் சிவாஜி படங்கள் அப்போது நிறைய. புழுதியில் அமர்ந்து அப்படியே உறங்கி என சினிமா பார்ப்பது ஒரு அருமையான தருணங்கள். அதுமட்டுமல்லாது மில் எனும் பக்கத்து ஊரில் அவ்வப்போது போடப்படும் படத்திற்காக கம்மாய் கரை தாண்டி சென்று பார்த்துவிட்டு நடு இரவில் மயானக்கரை தாண்டி வருவது எல்லாம் ஒரு சிலிர்ப்பான அனுபவங்கள்.

விருதுநகரில் ராஜலட்சுமி, அப்சரா, அமிர்தராஜ், சென்ட்ரல் இன்னும் சில தியேட்டர்கள். சென்ட்ரலில் அமிர்தராஜில் கட்டை இருக்கைகள் என்றே நினைக்கிறேன். ராஜலட்சுமி அப்சரா புதிய தியேட்டர்கள். இருக்கைகள் நன்றாக இருக்கும்.  ஐந்தாம் திருவிழா காலங்களில் சினிமா ஒரு அங்கம். இப்படி ஒருமுறை விருதுநகர் சென்று திரைப்படம் பார்த்துவிட்டு மழை பெய்ததால் சைக்கிளில் மண்பிடித்து கண்மாய் வழி வழியாக வீடு செல்ல முடியாமல் நாங்கள் நான்கு பேர் மல்லாங்கிணர் சென்று அங்கிருந்த தெரிந்த மருத்துவர் வீட்டில் சென்று தங்கினோம். அப்போது எல்லாம் வீடுகளில் தொலைபேசி இல்லை. தபால் அலுவலக வீடு மாமா வீட்டில் மட்டும் தொலைபேசி இருக்கும். அவர்களுக்குத்தான் எல்லா தகவல்களும் வந்து சேரும். நாங்களும் அவர்களுக்கு தகவல் சொல்லி நாங்கள் காலை வருகிறோம் வீட்டில் சொல்லிவிடுங்கள் என சொல்லி வைத்தோம்.

எங்கள் காலம், அவர் வீட்டில் சொல்ல மறந்து போனார். எங்களை இரவு ஆகியும் காணாமல் தேட ஆரம்பித்துவிட்டார்கள். மல்லாங்கிணர் டிராக்டர் மூலம் வந்து சேர நாங்கள் இருக்கும் இடம் அறிந்து பின்னர் அழைத்துச் சென்றார்கள். அந்த மாமாவுக்கு அடுத்த நாள் நல்ல திட்டு விழுந்தது. பின்னர் அருப்புக்கோட்டையில் படித்தபோது ஹாஸ்டலில் இருந்து சுவர் ஏறி சென்று படம் பார்த்த நண்பர்கள் பிடிபட்டு அடி வாங்கிய நிகழ்வுகள். மகாராணி, லட்சுமி தியேட்டர்கள் பரவாயில்லாத ரகம். எனக்கு ரஜினி படமே போதும் என்று இருக்கும். அதிகம் படம் எல்லாம் பார்ப்பது இல்லை. மதுரையில் படித்தபோது ரஜினி கமல் ரசிகர்கள் சண்டைகள் எல்லாம் எனக்கு வியப்பாக இருந்தது. எப்படி இப்படி இருக்கிறார்கள் என! எனக்கு படிப்பு மட்டுமே முக்கியமாக இருந்தது. இருப்பினும் கமல் ரசிகருடன் அவ்வப்போது ரஜினி கமல் பார்க்க சென்று விடுவது உண்டு.

மதுரையில் சினிப்ரியா, மினிப்ரியா என சில தியேட்டர்கள். ஆரப்பாளையம் அருகே சில தியேட்டர்கள். எல்லாம் ஓரளவுக்கு நன்றாக இருக்கும். எப்போது படத்திற்கு கூப்பிட்டாலும் தலைவர் படம் வரட்டும் என சொல்லி எனது சினிமா ஆசையை காட்டுவேன். என்னை தனியாகவே விட்டுவிட்டு அவர்கள் படத்திற்கு செல்வார்கள். ஒத்தக்கடையில் ஒரு தியேட்டர். என்னை வலுக்கட்டாயமாக படத்திற்கு அழைத்து சென்றார்கள். என் வாழ்வில் முதன் முதலில் என்ன பார்க்கிறோம் என தெரியாமல் பார்த்த படம் அதுவாகத்தான் இருக்கும். குளியல் அறையில் பெண் என திடீரென ஒரு காட்சி வந்தது. என் நண்பன் என் அருகில் மாப்பிள்ளை அதுதான் அது என்றான். எது என்றேன் எதுவும் புரியாமல். அன்று முதல் என்னை சாமியார் என்றே அழைக்க ஆரம்பித்து விட்டான். வாழ்வில் அனுபவிக்க வேண்டியது நிறைய என்றார்கள். எனக்கு அந்த அந்த காலத்தில் அனுபவித்தால் போதாதா, இப்போது படிப்பு மட்டும் தானே என்றே சொன்னது உண்டு. அந்த தியேட்டர் கட்டை இருக்கை தான்.

சென்னையில் ஒரு வருடம் இருந்தபோது சில தியேட்டர்கள் போனது உண்டு. தியேட்டர்கள் நன்றாகவே இருக்கும். இப்படி எனது வாழ்வில் தியேட்டர்கள் மிகவும் குறைந்த பங்கே வகுத்து இருக்கின்றன அதுவும் ரஜினி, கமல், மணிரத்தினம் புண்ணியத்தில்.

இந்த முறை அருப்புகோட்டை தியேட்டர் ஒன்றில் அஞ்சான் படம் பார்க்க சென்று இருந்தோம். இருக்கைகள் கிழித்து எறியப்பட்டு இருந்தன. வெத்தலை எச்சில்கள் துப்பப்பட்டு இருந்தன. ஏசி என சொல்லிவிட்டு காத்தாடி சுற்றிக்கொண்டு இருந்தது. உள்ளே வெக்கையில் குளித்துக்கொண்டு இருந்தோம். படம் பார்க்கவே மனம் இல்லை. எப்படா படம் முடியும் வீடு போவோம் என இருந்தது. இதற்கு எங்கள் ஊர் மண்ணில் அமர்ந்து பார்த்தால் காற்றாவது நன்றாக வரும். இப்படி தியேட்டர் வைத்து இருந்தால் எப்படி மக்கள் படம் பார்க்க போவார்கள். சும்மா தியேட்டருக்கு வந்து பாருங்க பாருங்க என கத்தும் தியேட்டர் அதிபர்கள் கிராமப்புற தியேட்டர்களில் அக்கறை செலுத்துவது நல்லது, அப்படி இல்லையெனில் பேசாமல் திருமண மண்டபங்கள் கட்டிவிட்டுப் போகலாம். தியேட்டரில் படம் பார்க்க செல்பவர்கள் கொஞ்சம் கூட பொறுப்புணர்வு இல்லாமல் எச்சில் துப்புவது, இருக்கையை கிழிப்பது என நாகரிகமற்ற மனிதர்கள் மீதும் அதிக வெறுப்பு வந்தது. இவர்களுக்கு எல்லாம் கட்டை இருக்கைகள் தான் லாயக்கு.

சென்னையில் ஒரு தியேட்டர் போனோம். ஒரே இடத்தில் அங்கே கிட்டத்தட்ட பல திரையரங்குகள். அருப்புக்கோட்டையில் டிக்கெட் விலை நூறு ரூபாய், இங்கே நூற்றி இருபது ரூபாய். மிகவும் சுத்தமாக அருமையாக பராமரித்து இருந்தார்கள். மிகவும் உல்லாசமாக படம் பார்க்க முடிந்தது. எல்லா வசதிகளும் நகரங்களில் ஏற்படுத்தி கிராமப்புறங்கள் எல்லாம் கைவிடப்பட்டுவிட்டன போலவே காட்சி தந்தது. இருக்கைகள் வசதி எல்லாம் வெகு சிறப்பு. அதற்காக அருப்புகோட்டையில் இருந்து சென்னை வந்து படம் பார்த்தா செல்ல முடியும்?

திருட்டு விசிடி, படத்திருட்டு என எத்தனையோ விசயங்கள் சினிமாவை அழித்துக் கொண்டு இருக்கிறது என்பதை விட பராமரிக்கப்படாத திரையரங்குகள் கூட திரைப்படங்களை அழித்து விடும் தான்.

திரையரங்குகள் நாம் செல்லும் விருந்தினர் வீடு போல. போர்க்களம் செல்வது போலவா திரையரங்குக்கு செல்வது? திரையரங்குகள் பாதுகாக்கப்படுவது நல்ல சினிமாவை பாதுகாப்பது போலத்தான். கிராமப்புறத்து ரசிகர்கள் கவனத்தில் கொள்வார்களா?

(தொடரும்)