Thursday 14 February 2013

அஷ்டமாசித்திகளும் அகிலாண்டீஸ்வரியும் - 3

பகுதி  2 

மகிமா என்பது மலை போன்று பெரிதாவது என்றே குறிப்பிடபடுகிறது. விஸ்வரூபம் என்பது கூட ஒருவகையான சித்தி என்றே கணக்கில் எடுத்து கொள்ளப்படுகிறது. ஒரு சிறு விதை விருட்சமாவது என்பதை எவரும் மறுக்க இயலாது. ஆனால் விருட்சமான மரமானது மேலும் அதுவும் கணநொடியில் மேலும் விருட்சம் என்பது அபூர்வமான ஒன்றாகவும், நம்ப முடியாத விசயமாகவே நமது எண்ணத்திற்கு தோற்றம் அளிக்க கூடியவனாக இருக்கின்றன. 

ஆனால் இப்படிப்பட்ட மகிமா சக்தியை சித்தர்கள் பெற்று இருந்தார்கள் என்றே இன்னமும் சொல்லப்பட்டு வருகிறது. மகாபாரதத்தில் வரும் விஷ்ணுவின் அவதாரம், கிருஷ்ணரின் விஸ்வரூபம் கூட இந்த கணக்கில் தான் எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஆனால் இதுவரை எவரும் மனித உருவினை விஸ்வரூபம் எடுத்து பெரிதாக காட்டியதாக வரலாறு குறிக்கவே இல்லை. அப்படியெனில் இந்த மகிமா சாத்தியமா? சாத்தியம் அற்றதா? ஒன்று நம்மால் முடியாதவரை அது சாத்தியம் அற்றது என்றே கருதப்பட்டு வருகிறது. ஆனால் அதற்கான முயற்சியும் திறனும் நம்மிடம் நாம் வளர்த்து கொள்ள வேண்டும். 

இப்படிப்பட்ட முயற்சி பற்றி எண்ணிடும்போது சூரிய சித்தாந்தம் பற்றி நினைவுக்கு வந்தது. இந்த சூரிய சித்தாந்தம்தனை எழுதியவர் எவர் என்று குறிப்பில் இல்லை. இந்த சூரிய சித்தாந்தம் சூரிய கடவுள் மாயன் எனும் அசுரனுக்கு தரப்பட்டது என்று ஒரு ஐதீகம் உண்டு. தேவர்கள், அசுரர்கள் என அக்காலத்தில் இருந்து குறிப்பில் வைக்கப்பட்டு இருக்கின்றன. அசுரர்கள் அழிக்கும் கூட்டம் எனவும், தேவர்கள் காக்கும் கூட்டம் எனவும் வழக்கத்தில் இருந்து இருக்கிறது. இந்த சூரிய சித்தாந்தத்தில் மிகவும் பிரமிக்கத்தக்க வகையில் பல குறிப்புகள் சூரியன் பற்றியும், அதன் கோள்கள் பற்றியும் இருக்கின்றன. கால சூழல் வேறுபாட்டால் பல ஸ்லோகங்கள் தொலைந்து போனதாக வரலாறு குறிப்பிடுகிறது. ஒரு கோளின் அளவினை எல்லாம் இந்த சூரிய சித்தாந்தம் குறிப்பிட்டு இருப்பது, இன்றைய அளவுக்கு மிகவும் சரியாகவே இருப்பது, சைன், டேன், காஸ் டீட்டாகளை எல்லாம் கணக்கில்  வைத்தது பிரமிக்கவைக்கும் செயல் அன்றி வேறு என்னவாக இருக்க இயலும்.

பஞ்சாங்கம் என்பது இந்த சூரிய சித்தாந்தத்தின் அடிப்படையில் உருவானதுதான். எந்த எந்த நேரத்தில் எந்த கோள்கள் எங்கிருக்கும் என்றெல்லாம் கணக்கீடு செய்து வைத்து இருக்கிறார்கள். அதன் காரணமாகவே சூரிய கிரகணம், சந்திர கிரகணம் எல்லாம் தெரிந்து இருக்கிறது. இப்படிப்பட்ட பிரமிப்பில் ஒரு மலையை சூரியனும், கோள்களும் சுற்றிக்கொண்டு இருக்கின்றன என சொன்னால் எப்படி இருக்கும்?

இந்த மலைகள் எப்படி உருவானது என்பதற்கு பூமித்தட்டுகள் முட்டிக்கொண்டு மேல் எழுந்ததுதான் என்கிறார்கள் இன்றைய அறிவியல் வல்லுனர்கள். இந்த பூமியானது பல தட்டுகளால் உருவானது என்றும் ஒவ்வொரு தட்டுகளும் நகர்ந்து கொண்டே இருக்கின்றன, அப்படி நகர்தலின் காரணமாக நிலநடுக்கம், மலைகள் உருவாதல் எல்லாம் நடைபெறுகிறது என்றே சொல்கிறார்கள். தரைமட்டமாக இருந்த நிலபரப்பு திடீரென மலையாய் மாறுதல். மகிமா!

 
இது இமயமலைத் தொடர். இதற்கு பெரிய கதையே உண்டு. இப்போதைக்கு அகிலாண்டீஸ்வரியையும், சிவபெருமானையும் விட்டுவிடுவோம். நமது இந்திய நிலபரப்பு பல்வேறு வருடங்களில் நகர்ந்து வந்து மோதியதால் உருவானது இந்த இமயமலை என்பது ஒரு கணக்கீடு. நன்றி: விக்கிபீடியா 



ஆங்காங்கே இந்திய நிலபரப்பு மட்டுமல்லாது, உலகெங்கும் உள்ள மலைகள் இப்படித்தான் உருவாகி இருக்கும் என்பது ஒரு கணக்கீடு. 


இது ஆல்ப்ஸ் மலைத்தொடர். மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் என உலகில் ஆயிரக்கணக்கான மலைகள் இருப்பதாகவும் கிட்டத்தட்ட இருபத்தி ஐந்து சதவிகிதம் பூமி மலைகளால் ஆனது என்றே குறிப்பிடுகிறார்கள். 

ஆனால் மேரு மலை என்று ஒன்று குறிப்பில் உள்ளது. இந்த மேரு மலையில் தான் பிரம்மா மற்றும் அனைத்து கடவுளர்களும் குடியிருப்பதாக ஒரு ஐதீகம். இதுவரை இந்த மேரு மலையை எவருமே கண்டதில்லை. இது எங்கு இருக்கிறது என்பதற்கான ஒவ்வொருவரின் எண்ணமும் வெவ்வேறு விதமாகவே இருக்கிறது. இந்த மலையின் உயரம் கிட்டத்தட்ட பத்து லட்சம் கிலோமீட்டர் உயரம் என்றும், இதனின் குறுக்களவு பூமியைவிட எண்பத்து ஐந்து மடங்கு பெரிதாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. உயரத்தை குறிப்பிட யோஜனா என்றும் ஒரு யோஜனா பதினோரு கிலோமீட்டர் என்றும் கணக்கு சொல்கிறார்கள். 

முன்னர் குறிப்பிட்டது போல இந்த மலையை சூரியன் முதற்கொண்டு பிற கோள்கள் சுற்றி வருவதாக ஒரு ஐதீகம். இந்த மேரு மலையை சூரிய சித்தாந்தம் மத்திய பூமியில் இருப்பதாக கணக்கீடு காட்டுகிறது. ஒருவேளை பூமி  வெடித்து சிதறி அதிலிருந்து வேறு பல கோள்கள் உருவாகும் முன்னர் இந்த மலை ஒன்று பூமியில் இருந்து இருக்கலாம் என சூரிய கடவுள் மாயனுக்கு சொல்லி இருக்கலாம். பூமியை சூரியன் சுற்றிய காலமும், சூரியனுக்குள் இருந்த பூமி வெளியே எறியப்பட்ட காலமும் இருந்திருக்கலாம். எவர் கண்டது? ஆனால் இப்படி சூரிய சித்தாந்தத்தில் சொல்லப்பட்ட மேரு மலை இல்லாதது கண்டு பின் வந்தவர்கள் மேரு மலை ஒன்று முன்னர் இருந்தது ஆனால் தற்போது பூமியில் இல்லை என்றே குறிப்பிட்டு இருக்கிறார்கள். 

இந்த மேரு மலை ஒருமுறை கர்வம் கொண்டதாகவும், அந்த மேரு மலையின் கர்வத்தை போக்கிட நாரதர் வாயு பகவானின் உதவியுடன் மேரு மலையை சிதறடித்ததாகவும் அதிலிருந்துதான் இலங்கை எல்லாம் உருவானது என  ஒரு கதை எல்லாம் உண்டு. அதுவும் லெமூரியா கண்டம் பற்றி எல்லாம் பரபரப்பாக நாம் பேசித் திரிந்த காலம் கூட இங்கே குறிப்பிட வேண்டியதுதான். 

மகிமா என்று சொல்லிவிட்டு மலைகள் பற்றி சொல்லிட வேண்டிய அவசியம் என்ன? பகவான் விஷ்ணு சொல்கிறார் மலைகளில் நான் மேரு. ஒரு மனிதன் தனது எண்ணத்தால், செயலால் உயரும்போது மலையை உதாரணமாக சொல்கிறார்கள். 

உருவத்தில் மனிதன் உயர்வதல்ல மகிமா. மனிதன் தனது உள்ளத்தில், எண்ணத்தில், உணர்வில், செய்கையில் உயர்வது மகிமா. இந்த மகிமா எனும் அஷ்டசித்திகளில் ஒன்றான இதை நாம் பற்றி கொண்டால் உலகம் சுபிட்சமாகவே இருக்கும். 

(தொடரும்)

Tuesday 12 February 2013

மூர்க்க ஜந்துகள்

அரிவாளுடன் என் முன்னே
அவர் அப்படி வந்து நிற்பார்
என்று ஒருபோதும்
 நான் கனவில்
நினைத்ததும் இல்லை.

அவரது பெண்ணை
நான் இழுத்து சென்று
திருமணம் செய்வேன் என்று
அவர் ஒருபோதும் கனவில்
நினைத்து இருந்திருக்க
மாட்டார் என்றே
எண்ணிட பயமாயிருக்கிறது.

நான் மார்க்கமானவன்
எனக்கு
நான் மூர்க்கமானவன்
அவருக்கு

இப்படியாய் பல விசயங்களில்
மூர்க்கத்தனம்
இரண்டு 'கறை'களாய்
வாழ்க்கையை
அலங்கரிக்கிறது. 

Friday 8 February 2013

எந்திரனை வீழ்த்திய விஸ்வரூபம்

ரஜினி-கமல் படங்களுக்கு நேரடி போட்டி வெகுவாகவே குறைந்து போய்விட்டது. ரஜினி ரசிகர்கள், கமல் ரசிகர்கள் ஒரே நேரத்தில் விவாதிக்க முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுவிட்டார்கள். கமலின் திரைப்படங்களைவிட விஜய் திரைப்படங்கள் வசூலில் ரஜினிக்கு அடுத்த நிலை என்றெல்லாம் உருவாகிவிட்ட காலம். தமிழ் திரையுலகினை புதிய பரிமாணத்திற்கு எடுத்து செல்ல பல இயக்குனர்கள் உருவாகிவிட்டார்கள். ஆனால் இவர்களையும் தாண்டி கமல் தனது இயக்கத்தின் மூலம் வித்தியாசமான இயக்குனர் என்பதை நிரூபித்து கொண்டு வருகிறார். 

சமீபத்திய விஸ்வரூபம் சாதாரண கதைதான் எனினும் கமல் கையாண்ட தொழில்நுட்பம் படம் பார்த்த அனைவரையும் பாராட்டத்தான் செய்யும், ஒரு சிலரைத் தவிர. எந்திரனை விட மிக சிறப்பான படம் என்று விஸ்வரூபம் பெயர் எடுத்து இருக்கிறது என்பதை ரஜினி ரசிகர்கள் கூட ஏற்றுக்கொள்ள கூடிய சூழல் தான் இப்போது அமைந்து இருக்கிறது. சர்ச்சைகள் இல்லாமல் விஸ்வரூபம் வெளியாகி இருந்தால் இத்தனை அளவுக்கு பேசப்படுமா என்றால் எந்திரன் கூட அளவுக்கு அதிகமான விளம்பரத்தில் தான் வெளிவந்தது. ரஜினி தன்னை ஒரு சூழ்நிலை கைதி என அறிவிக்கவே செய்தது எந்திரன் திரைப்படம். 

ஒரு படத்தில் என்ன இருக்கிறது எனும் எதிர்பார்ப்பை தூண்டிவிடுவதே ஒரு படத்தின் வெற்றியாகும். ரஜினி நடித்தால் அந்த படமே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி விடும் சூழல் தான் தமிழகத்தில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் கமலுக்கு அப்படியல்ல. மன்மதன் அம்பு என்றொரு படம் வந்த சுவடே தெரியாமல் ஒளிந்து கொண்டது. ரஜினி கௌரவ வேடத்தில் வந்தாலும் கூட  குசேலன் ரஜினிக்கு ஒரு தோல்விப்படம் என்றே பேசப்பட்டது. 

அத்தகைய சூழலில் இப்போது விஸ்வரூபத்தின் வசூல் எந்திரனை மிஞ்சிவிட்டது எனும் செய்தி வெளியாகிவருகிறது. எந்திரன் தமிழக திரைப்பட வரலாற்றில் ஒரு மைல்கல் என்பதால் எந்த ஒரு படம் வெளியானாலும் எந்திரன் வசூலுக்கு இணையாக வைத்து பார்க்கப்படுகிறது. பல நாட்கள் ஓடிய அல்லது ஓட்டப்பட்ட சந்திரமுகியை பலரும் மறந்து போனார்கள். 

தமிழகத்தில் இந்த வசூல் கணக்கெல்லாம் ஒழுங்காகவே இருக்காது என்பது காலம் கண்டு கொண்ட செய்தியாகும். இல்லையெனில் ஒன்றரை கோடி நஷ்டம் என ஒரு கோஷ்டி எந்திரன் படத்திற்கு கணக்கு காண்பித்து இருக்காது. விஸ்வரூபம் முதல் நாளே தமிழில் பத்து கோடி சம்பாதித்து விட்டது எனும் வசூல் கணக்கு கூட அதிகாரப்பூர்வமானது அல்ல என்றே சொல்கிறார்கள். ஒரு வேளை அதற்கு அதிகமாகவும் இருக்கலாம், குறைவாகவும் இருக்கலாம். 

ஐம்பது நாள், நூறு நாட்கள், வெள்ளிவிழா என்றெல்லாம் முன்பு போல் படங்கள் இப்போது கொண்டாடுவது இல்லை. ஒரு வாரம் ஓடினாலே பெரிய விசயம் என்று ஆகிவிட்டது. கடல், டேவிட் எனும் சமீபத்திய திரைப்படங்கள் பெரும் சரிவினை அடைந்து இருக்கின்றன. 

முன்பு ரஜினி, கமல் படங்கள் எத்தனை நாட்கள் ஓடும் என்பதில் போட்டி இருக்கும். காரணம் குறிப்பிட்ட தியேட்டர்களில் மட்டுமே படம் வெளியாகும். இப்போதெல்லாம் அறுநூறு, ஆயிரம் என்று சொல்கிறார்கள். ''ஒரே காலகட்டத்தில் ரஜினி கமல் படம் வெளியாகி அப்போது வசூல் விபரங்கள் வெளிவந்தால் அப்போது யார் வசூல் சக்ரவர்த்தி என்பது தெளிவாகும். அதுவரை எந்திரன் ஒவ்வொருமுறை ஒவ்வொரு படத்தினால் வீழ்த்தப்பட்ட கதை சொல்லப்பட்டு கொண்டே இருக்கும்'' என்கிறார் ஒரு ரஜினி ரசிகர். ஆனால் என்னைப் பொருத்தவரை விஸ்வரூபம் எந்திரனை வீழ்த்திவிட்டது படம் அமைப்பில் மட்டுமல்ல, வசூலிலும் என்றுதான் மதிப்பீடு செய்ய முடிகிறது.