Friday 8 February 2013

எந்திரனை வீழ்த்திய விஸ்வரூபம்

ரஜினி-கமல் படங்களுக்கு நேரடி போட்டி வெகுவாகவே குறைந்து போய்விட்டது. ரஜினி ரசிகர்கள், கமல் ரசிகர்கள் ஒரே நேரத்தில் விவாதிக்க முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுவிட்டார்கள். கமலின் திரைப்படங்களைவிட விஜய் திரைப்படங்கள் வசூலில் ரஜினிக்கு அடுத்த நிலை என்றெல்லாம் உருவாகிவிட்ட காலம். தமிழ் திரையுலகினை புதிய பரிமாணத்திற்கு எடுத்து செல்ல பல இயக்குனர்கள் உருவாகிவிட்டார்கள். ஆனால் இவர்களையும் தாண்டி கமல் தனது இயக்கத்தின் மூலம் வித்தியாசமான இயக்குனர் என்பதை நிரூபித்து கொண்டு வருகிறார். 

சமீபத்திய விஸ்வரூபம் சாதாரண கதைதான் எனினும் கமல் கையாண்ட தொழில்நுட்பம் படம் பார்த்த அனைவரையும் பாராட்டத்தான் செய்யும், ஒரு சிலரைத் தவிர. எந்திரனை விட மிக சிறப்பான படம் என்று விஸ்வரூபம் பெயர் எடுத்து இருக்கிறது என்பதை ரஜினி ரசிகர்கள் கூட ஏற்றுக்கொள்ள கூடிய சூழல் தான் இப்போது அமைந்து இருக்கிறது. சர்ச்சைகள் இல்லாமல் விஸ்வரூபம் வெளியாகி இருந்தால் இத்தனை அளவுக்கு பேசப்படுமா என்றால் எந்திரன் கூட அளவுக்கு அதிகமான விளம்பரத்தில் தான் வெளிவந்தது. ரஜினி தன்னை ஒரு சூழ்நிலை கைதி என அறிவிக்கவே செய்தது எந்திரன் திரைப்படம். 

ஒரு படத்தில் என்ன இருக்கிறது எனும் எதிர்பார்ப்பை தூண்டிவிடுவதே ஒரு படத்தின் வெற்றியாகும். ரஜினி நடித்தால் அந்த படமே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி விடும் சூழல் தான் தமிழகத்தில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் கமலுக்கு அப்படியல்ல. மன்மதன் அம்பு என்றொரு படம் வந்த சுவடே தெரியாமல் ஒளிந்து கொண்டது. ரஜினி கௌரவ வேடத்தில் வந்தாலும் கூட  குசேலன் ரஜினிக்கு ஒரு தோல்விப்படம் என்றே பேசப்பட்டது. 

அத்தகைய சூழலில் இப்போது விஸ்வரூபத்தின் வசூல் எந்திரனை மிஞ்சிவிட்டது எனும் செய்தி வெளியாகிவருகிறது. எந்திரன் தமிழக திரைப்பட வரலாற்றில் ஒரு மைல்கல் என்பதால் எந்த ஒரு படம் வெளியானாலும் எந்திரன் வசூலுக்கு இணையாக வைத்து பார்க்கப்படுகிறது. பல நாட்கள் ஓடிய அல்லது ஓட்டப்பட்ட சந்திரமுகியை பலரும் மறந்து போனார்கள். 

தமிழகத்தில் இந்த வசூல் கணக்கெல்லாம் ஒழுங்காகவே இருக்காது என்பது காலம் கண்டு கொண்ட செய்தியாகும். இல்லையெனில் ஒன்றரை கோடி நஷ்டம் என ஒரு கோஷ்டி எந்திரன் படத்திற்கு கணக்கு காண்பித்து இருக்காது. விஸ்வரூபம் முதல் நாளே தமிழில் பத்து கோடி சம்பாதித்து விட்டது எனும் வசூல் கணக்கு கூட அதிகாரப்பூர்வமானது அல்ல என்றே சொல்கிறார்கள். ஒரு வேளை அதற்கு அதிகமாகவும் இருக்கலாம், குறைவாகவும் இருக்கலாம். 

ஐம்பது நாள், நூறு நாட்கள், வெள்ளிவிழா என்றெல்லாம் முன்பு போல் படங்கள் இப்போது கொண்டாடுவது இல்லை. ஒரு வாரம் ஓடினாலே பெரிய விசயம் என்று ஆகிவிட்டது. கடல், டேவிட் எனும் சமீபத்திய திரைப்படங்கள் பெரும் சரிவினை அடைந்து இருக்கின்றன. 

முன்பு ரஜினி, கமல் படங்கள் எத்தனை நாட்கள் ஓடும் என்பதில் போட்டி இருக்கும். காரணம் குறிப்பிட்ட தியேட்டர்களில் மட்டுமே படம் வெளியாகும். இப்போதெல்லாம் அறுநூறு, ஆயிரம் என்று சொல்கிறார்கள். ''ஒரே காலகட்டத்தில் ரஜினி கமல் படம் வெளியாகி அப்போது வசூல் விபரங்கள் வெளிவந்தால் அப்போது யார் வசூல் சக்ரவர்த்தி என்பது தெளிவாகும். அதுவரை எந்திரன் ஒவ்வொருமுறை ஒவ்வொரு படத்தினால் வீழ்த்தப்பட்ட கதை சொல்லப்பட்டு கொண்டே இருக்கும்'' என்கிறார் ஒரு ரஜினி ரசிகர். ஆனால் என்னைப் பொருத்தவரை விஸ்வரூபம் எந்திரனை வீழ்த்திவிட்டது படம் அமைப்பில் மட்டுமல்ல, வசூலிலும் என்றுதான் மதிப்பீடு செய்ய முடிகிறது. 


Thursday 7 February 2013

உணர்வுகளின் பரிணாமம்

இறைவனும் இறை உணர்வும் - 4

முக்காலமும் உணர்ந்த முனிவர்களா நாம் - 6

நரம்பியல் பற்றி ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய கால சூழல் அமைய வேண்டும் என்றே எண்ணுவது உண்டு. அப்படிப்பட்ட நரம்பியல் பற்றி தெரிந்து கொண்டு என்ன செய்யப் போகிறோம் எனும் கேள்வி எழுப்பும்போதே நரம்பியிலின் நுண்ணியதன்மை வெளிப்பட்டுவிடுகிறது.

ஐந்து வகையான உணர்வுகள், தொடுதல், சுவாசித்தல் , பார்த்தல், கேட்டல், சுவைத்தல்,  பற்றி பாடப்புத்தகத்தில் படித்த காலங்கள் உண்டு. பார்வைக்கு கண் என்றும், தொடுதலுக்கு தோல் என்றும், சுவாசித்தலுக்கு (வாசனைக்கு) நாசி என்றும், கேட்டலுக்கு காது என்றும் வகைப்படுத்தப்பட்டது.

ஒளி இருப்பின் பார்வையும், ஒலி இருப்பின் கேட்டலும் என்றே ஆனது. ஆனால் நமது பார்வையும் சரி, கேட்டலும் சரி ஒரு குறிப்பிட்ட அளவுக்குள் மட்டுமே இருந்து வருகிறது என்பதை நாம் அறிவோம்.

ஆனால் இந்த உணர்வுகளைத் தாண்டி மேலும் பல உணர்வுகள் இருப்பதாகவே அறிவியல் நமக்கு அறிவுறுத்துகிறது. தொடுதலில் மென்மை, வலி, காமம் என எவ்வாறு நாம் வேறுபடுத்தி கொள்கிறோம் என்பதும்  அதைப்போல நாம் பார்க்கும் பொருளின் தன்மையை வேறு வேறு விதமாக நாம் எவ்வாறு உருவகித்து கொள்கிறோம் என்பதும்  சற்றே வித்தியாசமான ஒன்றுதான். நமது எண்ணமே இந்த உணர்வுகளைத் தூண்டுகிறதா? அல்லது உணர்வுகளால் நமது எண்ணங்கள் தூண்டப்படுகிறதா? என்பது சற்றே சிந்திக்கக் கூடிய விசயம்.

ஆறாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட கதா உபதேசத்தில் ஒரு தேரானது உடம்பாகவும், அந்த தேரினை இழுத்து செல்லும் ஐந்து உணர்வுகள் ஐந்து குதிரைகளாகவும், தேரோட்டியை மனமாகவும் சித்தரித்து உள்ளதாக குறிப்பு உள்ளது.

தாயைத் தொடும்போது உள்ள தொடுதல் உணர்வுக்கும், தாரத்தைத் தொடும்போது உள்ள தொடுதல் உணர்வுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது என்பது மனம் சம்பந்தம் கொண்டதா, அல்லது உணர்வு சம்பந்தம் கொண்டதா? இந்த விசயத்தில்தான் பகுத்தறிவு என ஆறாம் உணர்வினை சொன்னார்கள். நமது மனதின் எண்ணவோட்டத்தின் பொருட்டே உணர்வுகளின் நிலை வேறுபடுகிறது என்றுதான் தொன்று தொட்ட காலம் முதல் சொல்லப்பட்டு வருகிறது.




உணர்வு நரம்பு, கடத்தும் நரம்பு, வெளிபடுத்தும் நரம்பு என மூன்று வகையாக நரம்பினைப் பிரிக்கலாம். பார்வை, கேட்டல், தொடுதல் என உணர்வு நரம்பு மூலம் கடத்தும் நரம்புக்கு சென்று பின்னர் மூளையின் செயல்பாடு, அல்லது செயல்பாடற்ற தன்மைக்கு பின்னர் வெளிப்படுத்தும் நரம்பு மூலம் ஒன்றை உணர முடிகிறது.

உதாரணமாக, ஒரு மிகவும் சூடான பாத்திரத்தை கையால் தூக்கும்போது சூடு தாங்க முடியாமல் கீழே போட்டுவிடுகிறோம். அப்படி கீழே போட வேண்டும் என மூளையின் கட்டுபாடுகளுக்கு நாம் காத்து இருப்பது இல்லை. அதே வேளையில் சூடாக இருந்தாலும் அதில் இருக்கும் பொருளின் மதிப்பை கண்டு நாம் கீழே போடாமல் இருக்க நாம் நமது மூளைக்கு கட்டுபடுகிறோம. இப்படியான ஒரு செயலை தனிச்சை செயல் என்றும் அனிச்சை செயல் என்றும் பிரிக்கலாம்.

ஏதாவது ஒன்று நம்மிடம் சொல்லும்போது சற்று கூட யோசனை செய்யாமல் பேசிவிடுவது கூட மூளைக்கு சம்பந்தம் உள்ளதா? இல்லையா என்பது குறித்து சர்ச்சைகள் உண்டு.

நன்றி: கூகிள்

இப்படி ஒவ்வொரு உணர்வும் எப்படி வேறுபாடு அடைகின்றன என சிந்திக்கும் வேளையில் இந்த ஐந்து உணர்வுகளில் எந்த உணர்வு முதலில் தோன்றி இருக்க கூடும்?

தொடுதல் என்கிறார்கள் சிலர். கேட்டல் என்கிறார்கள் சிலர். வாசம் என்கிறார்கள் சிலர். பார்த்தலும், சுவைத்தலும் இறுதியாக வந்து இருக்கலாம் என்றே சொல்கிறார்கள். இன்னும் எத்தனையோ உணர்வுகள் இருப்பதாகவும் சிலர் சொல்கிறார்கள். இது குறித்து பின்னர் பார்ப்போம். அதில் ஒன்றுதான் இறை உணர்வு, முக்காலமும் உணரும் தன்மையான உணர்வு.

(தொடரும்)

Wednesday 6 February 2013

அவள் இறங்கிவிட்டாள்

எட்டிப் பிடித்த பேருந்து ஒன்றில்
முட்டி மோதி இடம் பிடிக்கையில்
பட்டுபோன்ற கன்னம் கொண்டவள்
சிட்டாக அமர்ந்து இருந்தாள்
எதிர் இருக்கையில்

இதயத்தில் மொட்டு ஒன்று
உதயம் ஆனது போன்று
புன்னகை பூக்கள்
மென்னகையாய் விழுந்தது
எதிர் இருக்கையில்

அவள் செல்லுமிடத்து
நானும் சென்றிடவே
எண்ணம் கொண்ட வேளையில்
நடந்துவந்த நடத்துனரிடம்
நளினமாக பேசிய அவள்
கண்ணிமைக்கும் நேரத்தில்
இறங்கியே போனாள்
எவரேனும் இனி அமரக்கூடும்
எதிர் இருக்கையில்.