Tuesday 2 October 2012

நான் நானாகவே இருக்க விரும்புகிறேன்

நான் நானாகவே இருக்க விரும்புகிறேன்
நீயோ என்னுள் நீயாக இருக்கத் துடிக்கிறாய்
உன்னை நான் புறந்தள்ளிச் செல்கையில்
நீ புறக்கணிக்கப்பட்டதாக புலம்புகிறாய்
நான் நானாகவே இருக்க விரும்புகிறேன்

உன்னை என்னுள் சுமக்கத் தொடங்கிவிட்டால்
என்னைத் தொலைத்த நிமிடமும் அதுதான்
நீயும் நானும் ஒன்றென்றே நன்றென்றே
குருட்டு காவியமும் பாடும் நிமிடமும் அதுதான்
நான் நானாகவே இருக்க விரும்புகிறேன்

ஒற்றை வரிக் கதை ஒன்று
உனக்காக மட்டும் சொல்கிறேன் இன்று
ஆற்றைக் கடக்க முனிவர் அவரொடு
அங்கே அப்பழுக்கற்ற அழகிய யுவதி
சேற்றை பூசியபடி சாமான்யன் ஒருவன்

யுவதியின் அவதியை கண்டான் சாமான்யன்
தன்தோளில் ஏறியே அமரச் செய்தான்
காற்றை போலவே கடந்தான் முனிவருடன்
மறுகரை தாண்டியதும்  யுவதி நன்றியுடன்
வணக்கம் சொல்லியே போயே போயினள்

பலநேரம் முனிவரும் சாமான்யனும் நடந்தே
வெகுதூரம் அடைந்தனர் காட்டினுள் இருட்டாய்
முனிவரோ யுவதியின் வதனம்பற்றி வினவவே
வேறு தலைதிருப்பி இறக்கியாச்சு அவளை
மனதில் இன்னும் சுமக்கிறீரோ நீர்முனிவரோ

சாமான்யன் வார்த்தை உரைத்தது சுரீரென்றே
தவம் கலைத்தே முடித்தனன் முனிவரும்
வேசம் தரித்து விஷம் கொண்டு
உலவித் திரிவது உலகில் எங்கனம்
நான் நானாகவே இருக்க விரும்புகிறேன்

என்னைப் போல இருந்திட நீ நினைக்கையில் 
மண்ணுக்குள் போய்விடவே மனசும் ஏங்கும்
உன்னைப் போல நீயும் இருந்தால்
உலகம் உனக்கென்றதாகவே தினமும் தோன்றும்
நான் நானாகவே இருக்க விரும்புகிறேன்

அறிவியல் சொல்லும் ஒரு கதை
சொல்லி முடிக்கிறேன் மனதில் வை
ரெட்ரோ வைரஸ் ரெட்ரோ வைரஸ்
கதையின் நாயகன் கவனமாய் கேள்
ஆர் என் ஏ கொண்ட செல்லின் அமைப்பு

அறிவியல் விதி ஒன்று
டி என் ஏ தான் ஆர் என் ஏ வாக மாறி
புரதம் உண்டாக்கும்

ரெட்ரோ வைரஸ்
உடல் செல்லுக்குள் நுழைந்தே
தன் ஆர் என் ஏவை டி என் ஏவாக்கி
உடல் செல்லை கொல்லும்

உன்னை என்னுள் பரவ விட்டால்
என்னை எனக்கு எனக்கே புரியாது
காதலி என்று சொல்லிக் கொண்டு
மனக் கதவின் ஓரம் நிற்காதே
நான் நானாகவே இருக்க விரும்புகிறேன்.

Monday 1 October 2012

மத மாற்றம் மன மாற்றம் தருமா?

எனக்கு இந்த சாமியாரின் தொல்லை பெரும் தொல்லையாக இருந்தது. என்ன செய்வது என்றே யோசித்தேன். வீட்டின் வெளியில் காலாற நடந்தேன். மழை தூறல் மேனி மேல் விழ மனம் மிகவும் லேசாக இருந்தது.

நான் இந்த மதத்துக்காரன் என்றுதானே என்னிடம் இந்த சாமியார் வந்து தொலைக்கிறார். மதம் மாறிவிட்டால் என்ன என்று யோசனை வந்தது? வேறொரு மதம் மாறிவிட்டால் அந்த மதத்து குருமார்கள் வந்து தொலைப்பார்களே என யோசித்து மதமே வேண்டாம் என விட்டுவிட்டால் என யோசித்தேன். அது  வேண்டவே வேண்டாம் தந்தை பெரியார் தாடியோடு வந்து நிற்பாரே என மிகவும் அதிகமாக யோசித்தேன். எப்படியும் புதியவன் என்பதால் வேற மதத்து குருமார்கள் வர தயங்குவார்கள், அதனால் வேறொரு மதம் மாறிவிடுவது என்ற முடிவுக்கு வந்தேன்.

எனக்கு எப்படி இந்த மதம் கிடைத்தது? அம்மாவிடமும் அப்பாவிடமும் கேட்டபோது அது அப்படித்தான்டா என்றே சொன்னார்கள். எனக்கு கோபமாக வந்தது. நான் எதற்கு இந்த  மதம் கொண்டவனாக திரிய வேண்டும்? எனக்கு வேறொரு மதம் வேண்டும் என்றேன்? எதற்கு என்றார்கள். என்னை கனவில் தினமும் சாமியார் தொல்லை செய்கிறார், அவரது தொல்லையில் இருந்து நான் விடுபட வேண்டும் என்றேன். கிளுகிளுப்பான சாமியாரா என்றார் அப்பா. அப்பாவை நோக்கி கொழுப்பா உங்களுக்கு என்றார் அம்மா. இனி அவர்கள் சண்டையில் எனது மத மாற்றம் மறந்து போகும் என நினைத்து அங்கிருந்து விலகினேன்.

எனக்குத் தெரிந்த மதம் மாறிய சிலரை சென்று சந்தித்தேன். நான் மதம் மாற வேண்டும் என நினைக்கிறேன், எந்த மதம் நல்லது என சொல்லுங்கள் என்றேன். ஒருவன், நான் அந்த மதத்தில் இருந்தவரை எனது வாழ்க்கை சீரானதாக இல்லை, ஆனால் இந்த மதம் வந்தவுடன் மிகவும் சீரான வாழ்க்கை வாழ்கிறேன் என்றான். என்ன காரணம் என்றேன். எல்லாம் மதம் சொல்லும் போதனை தான் என்றேன். அப்படி என்ன நீ மாறிய மதம் சொல்லிவிட்டது என்றேன். அன்பு, அன்பு அன்பு என்றான். யோசித்தேன். நான் இப்போது இருக்கும் மதமும் அப்படித்தானே சொல்கிறது என நினைத்து கொண்டு, வேறு என்ன சொல்கிறது என்றேன். மனம் நிம்மதியாக இருக்க வழி சொல்கிறது என்றான். என்ன என்ன வழிகள் என்றேன்? எனக்கு நேரமில்லை, நீ இந்த மதத்திற்கு மாறினால் எல்லாம் புரியும், முதலில் எனது மதத்திற்கு மாறு என்றான். வேறொருவனிடம் என்றேன்.

அவன் நான் மதம் மாறியதால் வெளிநாட்டிற்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது என்றான். ஏன்டா குப்பை, மதம் மாறாம இருந்தா கூட வெளிநாடு நீ போயிருக்கலாம் என்றேன். அவனோ அந்த மதத்தில் இருந்தவரை நான் குப்பை, இப்போ இந்த மதத்துக்கு வந்ததால நான் கோபுரம் என்றான். நீ என் மதத்துக்கு மாறு, அப்புறம் உனக்கு ஈசியா வெளிநாடு வாய்ப்பு வாங்கித் தரேன் என்றான். அவன் அவன் மதத்தை அவனது மதம் என சொந்தம் கொண்டாடுகிறார்களே என தோணியது. எனக்கு வெளிநாடு செல்ல வேண்டும் எனும் ஆசை நிறையவே உண்டு. வெளிநாடு செல்வதற்கு  மதம் மாற துணிந்துவிட்டேன். அவனிடம் எப்படி மதம் மாற வேண்டும் என விபரங்கள் கேட்டேன். அவன் சில நடைமுறைகள் சொன்னான். பெயர் மாற்றம், உருவ மாற்றம், பழக்க மாற்றம் என பல விசயங்கள். ஒவ்வொரு மதத்தில் இத்தனை கட்டுபாடுகளா என யோசித்தேன். ஆனால் அடுத்த நாள் அவனை வந்து பார்க்குமாறு சொல்லி சென்றான்.

முதலில் பார்த்தவனிடம் இது குறித்து விபரங்கள் சொன்னதும், அவனுக்கு அளவில்லாத கோபம் வந்துவிட்டது. என்ன காரணத்திற்கு அவனது மதத்திற்கு மாறுகிறாய், அதற்கு பேசாமல் உனது மதத்திலேயே நீ இருக்கலாம், இரண்டும் ஒன்றுதான். எனது மதம் மட்டுமே வேறு. எனது மதத்தில் சேர்வதாக இருந்தால் சொல் என சொல்லிவிட்டு போய்விட்டான். சாமியார் தொல்லை வேண்டாம் என நினைத்து வெளிநாட்டு ஆசை வந்து தொத்திக் கொண்டது. அன்று இரவெல்லாம் தூங்க வேண்டாம் என உறுதியாக இருந்தேன். தூங்கினால் தானே அந்த சாமியார் வந்து தொலைகிறார்.

''நாளைக்கில இருந்து உன் கனவுல நான் வரமாட்டேனு நினைச்சியா'' என்றார் சாமியார். எனக்கு தூக்கி வாரிப் போட்டது. தூங்காமல் உட்கார்ந்து இருந்தாலும் இந்த சாமியார் வந்து தொலைகிறாரே என்று எரிச்சலுடன் ''ஆமாம், நீ வரக்கூடாது, நாளையில் இருந்து நான் வேறு மதம்'' என்றேன். ''மதம் மாறினால் பெயர் மாற்ற வேண்டுமே'' என்றார் சாமியார். ''நான் நல்ல பெயரை யோசித்து வைக்கிறேன்'' என்றேன். ''நானே சொல்கிறேன், உனது பெயர் மன்சவ்'' என்றார் சாமியார்.

''இதென்ன பெயர், அந்த மதத்தின் வாசனையே இல்லை'' என்றேன் நான். ''வாசனைப் பொருட்களை பெயரில் தூவு, வாசனை வரும்'' என சாமியார் சிரித்தார். ''நான் பெயர் முதற்கொண்டு எல்லாம் எனது நண்பனிடம் கேட்டுக் கொள்வேன், நீங்கள் போகலாம்'' என்று சொன்னேன். ''மதம் மாறுவதன் மூலம் மனம் மாற்றம் வரும் என நினைக்கிறாயா?'' என்றார் சாமியார். ''சாமி, மனமாற்றத்தினால் தானே  மதமே மாறுகிறேன்'' என்றேன் எகத்தாளத்துடன். ''அப்படி என்ன மனம் மாற்றம்'' என்றார் சாமியார். ''எதோ ஒன்று'' என்றேன்.

''வெளிநாடு போனாலும் அங்கேயும் என்னால் வர இயலும், இவ்வுலகம் எனக்கு சொந்தம்'' என்றார் சாமியார். ''நான் வெளிநாடு போக இருக்கிறது, உங்களுக்கு எப்படி'' என்று குழைந்தேன். ''யாம் அறிவோம், விடிந்துவிட்டது நீ உனது நண்பனை கண்டு வா'' என்றார் சாமியார்.

''ஏம்பா , உட்கார்ந்துட்டே இப்படியா  தூங்குவ, ஒழுங்காப் போய் படு. உட்கார்ந்துட்டே கனவு காண்றது. உனக்கு ஒருத்திய கட்டி வைச்சாத்தான் நீ எல்லாம் உருப்படுவ'' என அம்மாவின் சத்தத்தில் அலறிக் கொண்டே எழுந்தேன்.

அப்போது தொலைபேசி ஒலித்தது. அம்மாவே எடுத்தார். ''ரொம்ப சந்தோசம்டி, பையனும், அம்மாவும் நல்லா இருக்காங்களா, நாளைக்கு வந்து பார்க்கிறேன், இன்னைக்கு நேரமாயிருச்சி'' என அம்மாவின் இந்த பக்க குரல் மட்டும் கேட்டது. அம்மா தொலைபேசியை வைத்ததும் கேட்டேன்.

''யாரும்மா போன்ல'' என்றேன்.

''என் பெஸ்ட் பிரண்டோட பொண்ணுக்கு பையன் பிறந்து இருக்கானாம், பேரு கூட முன்னமே செலக்ட் பண்ணிட்டாங்களாம்''

''என்ன பேரு'' என்றேன்.

''மன்சவ்''

''மன்சவ்'' என்னையும் அறியாமல் கத்தினேன்.

''எதுக்கு இப்படி கத்துற'' என அம்மா கத்தினார்.

மதம் மாற்றம் மன மாற்றம் தருமா? மன மாற்றமே மத மாற்றத்திற்கு காரணமா? விடை தெரியாமல் சாமியாரை மனமுருக அன்று வேண்டினேன். 

Friday 28 September 2012

தூக்கம் - வரம் வாங்கி வந்திருக்க வேண்டும்

மிகவும் கடுமையான உழைப்பு உழைத்தால் நன்றாக தூக்கம் வந்துவிடுகிறது. இது உடல் அயர்ச்சியை போக்க நமது உடல் தேர்ந்தெடுத்த பாதை என்கிறார்கள். மன அயர்ச்சி இருந்தால் அத்தனை எளிதாக தூக்கம் வந்து தொலைப்பதில்லை. எனக்கு மிகவும் உடல் அயர்ச்சியாக இருக்கவே நன்றாகவே உறங்கிப் போனேன். எனது குறட்டை சத்தம் கேட்டு 'கொடுத்து வைச்ச மகராசன்' என எவரோ சொன்னது காதில் விழுந்தது. உடல் உபாதைகளும், மன அழுத்தமும் இல்லாத பட்சத்தில் மிகவும் ஆழ்ந்த தூக்கம் வருமாம். 'அடிச்சிப் போட்டது போல தூங்குறான் பாரு' என இன்னொரு சத்தமும் எனது காதில் விழுந்தது. நான் தூங்குகிறேனா, அல்லது தூங்குவது போல நடிக்கிறேனா? எனக்கே மிகவும் சந்தேகமாக போய்விட்டது.

ஒருவர் நான் குறட்டை விடுகிறேன் என்கிறார், ஆனால் எனக்கு குறட்டை சத்தம் கேட்கவில்லை. அவர் பேசும் சப்தம் மட்டும் கேட்கிறது. எதைக் கேட்பது, எதை கேட்க கூடாது என்று எனது சிந்தனைகள் வரையறுத்து கொண்டுவிட்டனவா? எவருமே என்னை அடிக்கவில்லை. இன்று மிகவும் கடுமையான உழைப்பு. அந்த அலுப்பில் தூங்கிவிட்டேன். ஆனால் 'இந்த தூக்கம் உடல் அசதியை போக்க வந்தது அல்ல' என்றார் ஒருவர். விழித்து பார்க்கையில் சாமியார் நின்று கொண்டிருந்தார்.

''எதுவெல்லாம் இயற்கை தேர்வு என்று கண்டுபிடித்துவிட்டாயா'' என்றார் சாமியார்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. ''நான் என்ன டார்வினா? எல்லாம் இயற்கை தேர்வு என பறவைகளின் உடல் அமைப்பு, விலங்குகளின் உடல் அமைப்பு என சிறு வயதிலேயே தீவுகளுக்கு எல்லாம் சென்று ஆராய்ச்சி செய்து சொல்ல. எதற்கு கண்டுபிடிக்க வேண்டும்? எதுவெல்லாம் இயற்கையாக தோற்றம் கொள்கிறதோ அதுவெல்லாம் இயற்கை தேர்வு'' என்று முடித்தேன். ''

நன்றாக தூங்கினாய் போலிருக்கிறது'' என்றார்.

 ''ஆமாம் உடல் அலுப்பு'' என்றேன்.

 ''அது உடல் அலுப்பு மூலம் வருவது அல்ல, அது உனது மூளைக்கு தேவையான ஒரு இளைப்பாறுதல், பசித்தவுடன் சாப்பிடுவது போல அல்ல இந்த உறக்கம். இந்த தூக்கம் நமக்கு கிடைத்த வரப்பிரசாதம். இதை மிகவும் அதிகமாக கடைப்பிடித்தாலும் ஆபத்து, மிகவும் குறைவாக கடைப்பிடித்தாலும் ஆபத்து. கும்பகுர்ணன் அதிகம் தூங்கியதால் லங்கேஷ்வரம் ராமனால் வெல்லப்பட்டது'' என்றார் சாமியார்.

 ''சாமி இப்போ என்னதான் சொல்ல வரீங்க'' என்றேன் கலையாத தூக்கத்துடன்.

''இவ்வுலகில் உள்ள எல்லா உயிரினங்களும் துயில் கொள்கின்றன. இந்த துயில் மூலம் தங்களை உற்சாகப்படுத்திக் கொள்கின்றன. எத்தனை விதமான சோகம் இருந்தாலும் ஒரு கணத்தில் கண்களை சொக்க வைக்கும் தூக்கம்தனை எவரும் என்னிடம் வராதே என வெறுத்து ஒதுக்க இயலாது. தூக்கம் வந்தே இயலும். நாம் கொட்டாவி விடும்போதே நமது மூளை தூங்கிக் கொண்டிருக்க ஆரம்பித்து விட்டது. நமது செயல்பாட்டில் வேகமானது குறைந்து போய்விடக் கூடும். இறைவனுக்கு கூட இந்த இளைப்பாறுதல் தேவைப்படுகிறது. அதனால் தான் அவரை உறங்க வைக்கும் சமய சடங்குகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. சயன நிலையில் இருக்கும் ரங்கநாதர்'' என சொல்லி முடிக்கும் முன்னர் நான் குறுக்கிட்டேன்.

''சாமி, தூக்கம் பத்தி சொன்னீங்க சரி, இப்போ எதுக்கு இறைவன் துயில் கொள்கிறான், சயன நிலை என வம்பு செய்கிறீர்கள்'' என்றேன்.

''இறைவனே துயில் கொள்ளும்போது அவன் படைத்த ஜீவராசிகள் எங்கனம் என்பதை குறிப்பிடவே அவ்வாறு சொன்னேன். அது இருக்கட்டும். இந்த தூக்கத்தின் மூலம் நாம் சாதிப்பது என்ன? இந்த தூக்கத்தினால் நமது உடல் மூலக்கூறுகள் அளவில் என்ன நடக்கிறது என்பதை இதுவரை முழுவதுமாக கண்டு கொள்ள முடிந்தது இல்லை. பகலெல்லாம் இருமல் மூலம் பாதிக்கப்படுவர் தூங்கியபின்னர் இருமலே இல்லாமல் உறங்கிவிடுகிறார். இது போன்ற பல விசயங்கள் புரிபடமாலே இருக்கின்றன என்பதுதான் பரந்தாமனின் விளையாட்டு'' என்றார் சாமியார்.

''பரந்தாமனின் விளையாட்டு என்பதெல்லாம் நீங்கள் ஆடும் விளையாட்டு, தூங்குவதால் அப்படி என்னதான் நமது உடலில் நடக்கிறது. விளையாடாமல் சொல்லுங்கள்'' என்றேன். எனக்கு அதிகம் தூக்கம் வந்து தொலைப்பதால் அதுபற்றி கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் எனும் ஒரு எண்ணம்.

''பரந்தாமனின் விளையாட்டு பற்பல. அதை முழுவதும் கண்டுகொண்டார் எவரும் இல்லை. உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றத்தின்போது ஆக்சிஜன்  சூப்பர் ஆக்சைடாக ( O2- )  மாறிவிடுகிறது. இது நமது செல்களை பாதிக்க செய்கிறது. அப்படிப்பட்ட பாதிக்கப்பட்ட செல்களை சரி செய்யும் ஜீன்கள் தூங்கும்போது மிகவும் அதிக அளவில் தனது வேலைப்பாடுகளை செய்கின்றன. சதா இறைவன் மீது பக்தி செல்லும் தொண்டர்கள் கூட சிறிது நேரம் இளைப்பாறுதல் அவசியம். மதியம் குட்டித் தூக்கம் போடுகிறேன் என்பது நம்மை சசுறுசுறுப்பாக வைக்கத்தான். அதிகம் சாப்பிடும்போது வளர்சிதை மாற்றம் வெகுவேகமாக நடைபெறும். அப்போது இந்த சூப்பர் ஆக்சைடு அதிக அளவில் உற்பத்தி ஆகும். அதன் மூலம் ஏற்படும் சேதாரம் சரி செய்ய இந்த தூக்கம் தேவை. உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு என்பார்கள்'' என்றார் சாமியார்.

''தொண்டர், குண்டர் அப்படி எல்லாம் பேசமா விசயத்தை மட்டும் தெளிவுபடுத்தினால் போதும்'' என்றேன்.

''இதோ உனது பக்கத்தில் உறங்கி கொண்டிருக்கும் இந்த எலி இருபது மணி நேரம் அசராமல் தூங்கும். ஆனால் யானைக்கோ இரண்டு மணி நேர தூக்கம் போதும். ஏனெனில் வளர்சிதை மாற்றம் சிறிய உயிரினங்களில் வெகு வேகமாகவும், பெரிய உயிரினங்களில் மிகவும் மெதுவாகவும் நடைபெறுவதே காரணம். அளவுக்கு அதிகமாக உண்டதால் கும்பகர்ணன் ஆறு மாதம் உறங்க வேண்டியதாகிவிட்டது'' என்றார் சாமியார்.

''கும்பகர்ணன் பக்கத்தில இருந்து பாத்தீங்க'' என நான் சொன்னதும்

''''முக்காலமும், எக்காலமும் யாம் அறிவோம், ஆனாலும் தூக்கத்திற்கான இந்த காரணம் தவறு என்போர் உண்டு. வேறு சில காரணங்கள் என நமது உடல் உணவை செரிக்கும்போது உண்டாகும்  சக்தி மூலக்கூறு அளவு குறைந்துவிடும் பட்சத்தில் நமக்கு தூக்கம் வந்தவிடும். இந்த தூக்கம் மூலம் அடினோசின் ஏஎம்பி உருவாக தயாராக இருக்கும். மேலும் மூளையின் நரம்பு மண்டலமானது ஒரு நாளில் பல புதிய புதிய நரம்பியல் பாதையை உருவாக்கி வைத்து இருக்கும். அதில் எது எது அவசியமற்றதோ அதை எல்லாம் நீக்கி நம்மை புத்துணர்வுடன் வைக்கும். அதோடு மட்டுமல்லாமல் நமது மூளை நமது நினைவுகள், கற்று கொண்டவை போன்ற பல விசயங்களை பரிசீலனைக்கு உட்படுத்தவே இந்த தூக்கம் வருகிறது'' என்றார் சாமியார்.

''நீங்க சொன்னது எல்லாம் இயற்கை தேர்வு. தூக்கம் நமக்கு இயற்கை கொடுத்தது. தூக்கம் கிடக்கட்டும், நாம எதுக்கு முழிச்சிட்டு இருக்கனும்?'' நான் கேட்ட கேள்வியில் சாமியார் நிலைகுலைந்து போயிருப்பார் என்றே கருதினேன்.

''நாம முழிச்சிட்டு இருக்கிறதுக்கு எப்போதும் பரந்தாமன் புகழ் பாடத்தான். நாம சாப்பிட, நம்மை பாதுகாக்க, நமது இனத்தைப் பெருக்க நாம முழிச்சிட்டு இருக்கணும்னு சாதாரண மனுசாள் சொல்வாங்க. ஆனா எப்பவும் அவன் புகழ் பாடத்தான் நாம முழிச்சிட்டு இருக்கணும்'' என்று சாமியார் சொல்லி முடித்ததும் சட்டென விழித்தேன்.

''நல்லா குறட்டை விட்டடா'' என அப்பாவும், ''அடிச்சிப் போட்ட மாதிரி தூங்கினடா'' என அம்மா சொன்னதும் தூக்கத்தில் வரும் இந்த கனவு மூளையின் வேலையோ? என புரியாது களைத்திருந்தேன்.