Thursday 4 August 2011

முக்காலமும் உணர்ந்த முனிவர்களா நாம்? 3

குழந்தை பிறந்தவுடன் அந்த குழந்தை பிறந்த நேரத்தை கொண்டு கணிக்கப்படும் ஜோதிடம் எனப்படும் கலை ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு பெரும் பங்கு வகிக்கிறது என்பது பெருமளவு உண்மைதான். நம்பிக்கை இல்லாவிட்டாலும் கூட பலர் சுவாரஸ்யத்திற்காக ஜோதிடம் பார்ப்பது உண்டு, படிப்பது உண்டு. முக்காலமும் உணர்ந்த முனிவர்களை காட்டும் கண்ணாடி அல்லவா அது! பல நேரங்களில் கண்ணாடி சரிவர காமிப்பது இல்லை என்பதுதான் துரதிர்ஷ்டம்.

இந்த ஜோதிடத்தை நம்பி மோசம் போனவர்கள் உண்டு, அதே வேளையில் லாபம் அடைந்தவர்கள் உண்டு. லாபம் அடைந்தவர்கள் பெரும்பாலும் ஜோதிடம் சொல்பவர்கள்தான். இந்த ஜோதிடம் சொல்லும் பாடம் ஒன்றுதான். வாழ்க்கையானது ஒரு நிகழ்தகவு. வாழ்க்கை ஒரு வாய்ப்பு.

சிலருக்கு ஒரே மாதிரியாக, அது நல்லவிதமோ, கெட்ட விதமோ, அல்லது இரண்டு நிலைகளிலும் உட்பட்டோ அமைந்து விடுகிறது. வாழ்க்கை ஒரு சக்கரம். அது சுழன்று கொண்டே இருக்கும் என்கிறார்கள்.

எங்கு தொடங்கியதோ அங்குதான் முடியும் என்பதுதான் முக்காலம் உணர்த்தும் ஒரு செய்தி. இடுகாடோ, சுடுகாடோ எங்கு சுற்றினாலும் இங்குதான் வரவேண்டும் எனும் மொழி வழக்கு உண்டு.

'உன்னை மட்டும் என் வாழ்வில் பார்க்காது இருந்து இருந்தால் எனது வாழ்கை அஸ்தமனமாக போயிருக்க கூடும்'

'இவர் மட்டும் இல்லாது போயிருந்தால் உனது வாழ்க்கை நரகமாகி இருக்க கூடும்'

'இவரால் தான் உனது வாழ்க்கையே இப்படி நரகமாகிப் போனது'

இப்படிப்பட்ட வசனம் பேசும் பலரை நாம் காணலாம். இது போன்ற வரிகளை எல்லாம் சற்று அலசி பார்த்தால் மனிதர்களின் மனம் போடும் கணக்கு மிகவும் தவறாகவே இருக்கிறது!

அடுத்த நொடி என்ன, அடுத்த யுகத்தையே நிர்ணயிக்கும் வல்லமை முனிவர்களிடம் இருந்திருக்கிறது என்கிறது புராணங்கள். அதாவது 'பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டுவது' போல.

அவதாரங்கள் எல்லாம் பார்த்தால் ஒரு தீயவர் படைக்கப்படுவார், அல்லது உருவாகுவார், அந்த தீயவரை, தெய்வம் அவதாரம் எடுத்து திருத்தும் அல்லது பெரும்பாலும் கொல்லும்!

'மனிதன் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும்'

காலை எழுந்தவுடன் ஒரு இயந்திரம் போல் பணியாற்றும் நமது நிலையை பாருங்கள். இரவு வந்ததும் என்ன என்ன செய்தோம் என நினைத்து பாருங்கள். ஒரு நாளுக்கு மற்றொரு நாள் வித்தியாசமாக இருக்கிறதா என எழுதி வைத்து கொள்ளுங்கள்.

வாழ்க்கை ஒரு விசித்திரமா! வாழ்க்கை ஒரு சித்திரமா!

இன்று இதை இதை செய்ய வேண்டும் என பட்டியலிட்டு எதுவுமே செய்ய இயலாது போனால் வாழ்க்கை ஒரு விசித்திரம்.

என்ன செய்ய வேண்டும் என நினைத்து அதையே செய்து முடித்தால் வாழ்க்கை ஒரு சித்திரம்.

கவன குறைவு தான் பல பேராபத்துகளுக்கு காரணம். இது தவறு என்று தெரிந்து செய்யும் குணாதிசயம் உடையவன் மனிதன். முயற்சி என்பதன் அர்த்தம் பல நேரங்களில் தவறாகவே இருக்கிறது. இந்த முயற்சியினை முறையாக செயல்படுத்த தெரியாமல் அழிவுக்கு உட்பட்ட விசயங்கள் பற்பல. அதன் பொருட்டே இந்த உலகம் பொருளாதார சீரழிவுக்கோ, கலாச்சார சீரழிவுக்கோ உட்பட்டு வந்து கொண்டு இருக்கிறது.  என்ன சொல்லி வைத்தார்களாம்! கலியுகம்!

சிந்தனைகளின் வலிமை பற்றி ஒரு பெரும் கருத்து உண்டு. அதாவது ஒரு சிந்தனை வலுப்பெற அதை பின்பற்ற பலர் தேவை. அப்படி இல்லாது போனால் அந்த சிந்தனை அழிந்துவிடும்.

இதில் அந்த சிந்தனை உண்மையா, பொய்யா என்பதை நிரூபணம் செய்ய வேண்டிய அவசியம் எல்லாம் தேவை இல்லை. உலகில் உள்ள மனிதர்களில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் நம்பினாலே போதும், அது அப்படி அப்படியே பரவி அந்த சிந்தனை வலுப்பெறும் என்பதுதான் காலம் உணர்த்தும் செய்தி.

இரண்டாயிரம் வருடங்கள் முன்னர் மக்கள் தொகை எத்தனை?!

இரண்டாயிரம் வருடங்கள் முன்னர் மக்களின் சிந்தனை எத்தகையது?!

அப்படியே பெருக்கி கொண்டே போவோம். நான்காயிரம், எட்டாயிரம், பதினாறாயிரம்!

முக்காலம் உணர்ந்த முனிவர்கள் மிகவும் அதிசயிக்க வைக்கத்தான் செய்கிறார்கள்!

(தொடரும்)


Wednesday 20 July 2011

பத்திரிகை தர்மம்

தர்மம் என்றால் என்ன ?

நீதி என்றால் என்ன?

நியாயம் என்றால் என்ன?

நேர்மை என்றால் என்ன?

இதற்கான விடைகள் தெரிந்து கொள்வது மிகவும் கடினம் என்றுதான் இன்றைய கால நிலையை குறை சொல்லும் அளவுக்கு நாம் வாழ்ந்து வருகிறோம். 

'தர்மம் வெல்ல அதர்மத்தின் வழியில் நடக்கலாம்' இது பல ஆண்டு காலமாக சொல்லப்பட்டு வரும் நியதி. 

ஒரு பொய்யான செய்தியை உண்மையாக்கும் வல்லமை பத்திரிகை உலகுக்கு உண்டு. 

ஒரு உண்மையான செய்தியை பொய்யாக்கும் வல்லமை பத்திரிகை உலகுக்கு உண்டு. 

செய்தி தாள்கள் உண்மையை மட்டும் சுமந்து வருகின்றனவா என்று பார்த்தால் பாதி கலப்பட செய்திகள் உண்டு, கற்பனை விசயங்களும் உண்டு. அரை குறையாக தெரிந்து வைத்து கொண்டு திரைக்கதை எழுதும் வல்லமையும் இந்த பத்திரிக்கை நிருபர்களுக்கு உண்டு. 

இந்த பத்திரிகை நிருபர்கள் சேகரிக்கும் செய்திகளை வைத்து ஒரு பத்திரிகையின் தரத்தை நிறம் பிரித்து விடலாம். நமது ஊரில் உள்ள பத்திரிகைகளில் தினமணி சிறந்த பத்திரிக்கை எனும் பெயர் முன்னரே உண்டு. அதனால் அந்த பத்திரிகையில் வரும் செய்திகள் கட்டுரைகள் தரம் வாய்ந்தவை என பலரால் பெரிதும் நம்பப்படுபவை. 

இந்த பத்திரிக்கை நிருபர்கள் செய்திகளை சேகரிக்க என்ன என்ன பாடுபடுகிறார்கள் என்பதுதான் வெளித் தெரியாத விசயம். அதுவும் ஒவ்வொரு பத்திரிகையும் 'உலக பத்திரிகையில் இதுவரை வெளிவராத விசயம்' என மார் தட்டி கொள்ள போடும் போட்டிகள் மிக மிக அதிகம். 

பக்கங்களை நிரப்பிட பாடாய் படும் இந்த பத்திரிக்கை நிருபர்கள் பாடு திண்டாட்டம்தான். அதன் காரணமாகவே ஐம்பது சதவிகிதம் மேல் உருப்படியில்லா விசயங்களை இந்த பத்திரிக்கைகள் எழுதி தீர்த்து விடும். இதனோடு மட்டுமில்லாது மலர்கள் வேறு. 

இப்படிப்பட்ட பத்திரிக்கைகளுக்கு என்ன தர்மம் இருந்து விட முடியும்?

லண்டனில் பெரும் பரபரப்பாக பேசப்பட்ட பத்திரிக்கை ஒன்று இன்று மூடி விடப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. காரணம் இவர்கள் மற்றவர்களின் தொலைபேசியை ஒட்டு கேட்டு செய்திகளை சேகரித்ததுதான்.

அதோடு மட்டுமில்லாமல் பணம் கொடுத்து எல்லாம் பரபரப்பு செய்திகளை சேகரித்து இருக்கிறார்கள். இந்த பத்திரிகை மட்டுமா அப்படி செய்தது? எனும் கேள்விக்கு எல்லா பத்திரிகையும் குற்றவாளிகள் தான் எனும் பார்வை தான் மிஞ்சுகிறது. 

துணிச்சலாக உண்மை செய்தியை வெளியிட்டால் பத்திரிக்கை அலுவலகம் சூறையாடப்படும் அவல நிலை நமது ஊரில் உண்டு. நிருபர்கள் கொல்லப்படும்  அவல நிலையும் உண்டு. 

எத்தனை நிருபர்கள் உயிரை பணயம் வைத்து செய்திகள் சேகரித்து தருகிறார்கள் என்பதை கவனத்தில் கொள்வதும் நல்லது. 

தர்மம் என்றால் என்ன? 

விடை தெரியா கேள்விகள் பல ஊருக்குள், உலகத்துக்குள் உலாவி வருவது மிகவும் துரதிர்ஷ்டமான விசயம். 


Tuesday 5 July 2011

தமிழ்மண சேவை நிராகரிப்பு

பல வலைத்தளங்களை அடையாளப்படுத்தி வரும் தமிழ்மண சேவை மிகவும் பாராட்டுக்குரியது. 

பல வலைப்பூக்கள் பிரபலமாக இந்த திரட்டிகள் மிகவும் உபயோகமாக இருந்து இருக்கின்றன. 

ஆனால் பல நல்ல வலைதளங்கள், வலைப்பூக்கள் இந்த சேவையை பயன்படுத்துவதில்லை. நல்ல எழுத்தினை அனைவரும் தேடி கண்டு கொள்வார்கள் என இருந்து இருக்கலாம்.

இப்பொழுது கட்டண சேவையும் சிறப்பாக செயல்படுகிறது.

இந்த நேரத்தில் தமிழ்மணபதிவுப்பட்டை எனது வலைப்பூவில் இயங்கவில்லை. இதற்கு காரணம் என்னவாக இருக்கும் என தெரியவில்லை. 

இத்தனை நாள் ஆதரவு தந்த தமிழ்மண நிர்வாகிகளுக்கு மிக்க நன்றி.