Tuesday 3 August 2010

எனது பதிவுகளை தாராளமாக திருடுங்கள்

பதிவுகள் திருட்டு போவது பற்றி எனக்கு கொஞ்சம் கூட அக்கறை இல்லை என நினைக்க வேண்டாம். ஒருவர் மிகவும் சிரமப்பட்டு ஒரு விசயத்தை பற்றி எழுதியதை கொஞ்சம் கூட கவலை இல்லாமல் பல இணையதளங்களில் குறைந்தபட்சம் நன்றி என்று கூட சொல்லாமல் தாங்கள் எழுதியதை போல பதிவிட்டு இருப்பதை பார்த்து இருக்கிறேன். நன்றி என சொல்லி எழுதுங்கள் என அறிவுறுத்தப்பட்ட பின்னரும் அதை பற்றி கொஞ்சம் கூட அக்கறை இல்லாதவர்களை பற்றி எண்ணும்போது வியப்பாகத்தான் இருக்கிறது. நாங்கள் திருடவில்லை, நல்ல விஷயங்களை பகிர்கிறோம் என மிகவும் எளிதாக சொல்லிச் செல்கிறார்கள்.

எழுதியவர்களுக்குத்தான் எழுத்தின் வலியும், வலிமையும் புரியும். இது குறித்து மறுபதிப்பு என ஒரு சிறுகதை எழுதினேன். மேலும் இது போன்று எவரோ எழுதிய புத்தகங்களை தலைப்பை மாற்றி தனது பெயரில் போட்டுக்கொள்வது போல ஒரு திரைப்படத்தில் நகைச்சுவை காட்சி அமைத்து இருப்பார்கள். பிறர் எழுத்தை தனது எழுத்து என சொல்ல மனதில் தைரியம் அதிகமாகத்தான் வேண்டும். இந்த எழுத்து திருடர்கள் பற்றி என்ன சொல்வது?

தெரியாமல் தவறு செய்தவர்கள் திருந்திவிடுவார்கள். தெரிந்தே தவறு செய்பவர்கள்? ஜாக்கி சேகர் எழுதிய பதிவை பார்த்தபோது அவரின் வலி புரிய முடிகிறது. சி.பி. செந்தில்குமார் அவர்களின் செயல்பாடு, அவர் பதிவுலகில் தற்போது இருப்பதால் இது குறித்து விளக்கப்பதிவு தர முடிகிறது. இதுவே பதிவுலகிற்கு அப்பாற்பட்டவராக இருந்தால்???

உங்கள் எழுத்து திருட்டு போகாமல் பாதுகாக்கப்பட வேண்டுமெனில் அதற்கான முயற்சியில் இறங்குங்கள் பதிவர்களே. எவரும் நகல் எடுக்க முடியாதபடி வைத்திட வழி இருக்கிறது. பார்க்க சசிகுமார் அவர்களின் நமது பதிவுகளை பிறர் எடுக்காமல் முற்றிலும் தடுக்க. திருடுபவர்களுக்கு நாம் ஏன் வாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும்? ஆர்வ கோளாறில் நன்றி என பெயர் குறிப்பிடாமல் பலர் எழுதிவிடுவதுண்டு. இது தவறு என தெரியாமல் பலர் தவறி விடுவதும் உண்டு.

ஒரு எழுத்து பிரசுரமாகிறது எனில் அதற்கான அங்கீகாரம் கிடைத்துவிட்டது, எழுத்துக்கு அங்கீகாரம் எனில் எழுதியவருக்கும் அங்கீகாரம்தான். அடுத்தவர் பெயர் போட்டாலும் உண்மை என்றும் மறைந்து விடாது. பிறர் நமது எழுத்தை சுட்டும்போது 'அட' என எண்ணம் வரத்தான் செய்யும். அதுவே வேறொரு பெயரில் இருந்தால்!!!

எனது பதிவுகள் எல்லாம் திருடப்படும் என எனக்கு எந்தவித பயமும் இல்லை. அப்படி பயம் இருந்தால் இப்படி பிறர் திருடுவதற்கு ஏதுவாக அனைத்தையும் வெட்ட வெளியில் போட்டு இருக்கமாட்டேன். வீட்டை பூட்டி வைப்பது போல இந்த வலைப்பூவுக்கும் ஒரு பூட்டு போட்டு வைத்திருப்பேன். நான் அனுமதிப்பவர்கள் மட்டுமே வந்து செல்லுமாறு வைத்திருந்திருப்பேன். எவர் பெயரோ, நல்ல விசயங்கள் நாலு பேருக்கு சேரட்டும் என்றே இந்த விசயத்தில் இருக்கிறேன். நான் திருடினேன் என பிறர், எனது எழுத்தையே குறை கூறாமல் இருந்தால் அது போதும்.

இப்பொழுது கூட நான் எழுதிய கவிதையில் இருக்கும் படங்கள் எல்லாம் எனது நண்பர் ஒருவர் ஒரு தளத்தில் பதிந்த படங்கள்தான். அவர் பதிந்த படங்களுக்கு நான் எழுதிய கவிதைகளை அப்படியே இங்கே பகிர்ந்து கொண்டிருக்கிறேன், அதை அந்த தளத்திலும் சொல்லி இருக்கிறேன். இருப்பினும் அந்த படங்கள் எல்லாம் நான் திருடியது என்றாகிவிடாது. அது போலவே பதிவர்கள் போடும் படங்கள் எல்லாம் அவர்களே கஷ்டப்பட்டு எடுத்ததா? எவரோ எடுத்த படங்களை தங்கள் பதிவுகளில் போடும்போது நன்றி சொல்லி இருக்கிறார்களா? சினிமா விமர்சனம் எழுதும் பதிவர்கள் எவராவது சொந்தமாக படங்களை போட்டு இருக்கிறார்களா? தாங்கள் செய்யும் தவறுகளை ஒருபோதும் நினைத்து பார்க்காத பதிவர்கள் தங்கள் பதிவுகளுக்கு மட்டும் கவசம் போட முனைவது ஏன்?

தலைவலியும், பல்வலியும் தனக்கு வந்தால்தான் தெரியும். ஏனோ முன்னோர்கள் பல விசயங்களை தெளிவாகவே சொல்லி சென்றுவிட்டார்கள்.

என்னுடைய வேண்டுகோள் எல்லாம் வேறு எவருடைய பதிவையாவது திருடி எனது பெயர் போட்டு விடாதீர்கள் என்பதுதான். ;)

Monday 2 August 2010

பரிதாபங்கள் அவசியமோ?



இப்படம் கண்டதும்
"ஸ்" எனும் சப்தம் என்னுள்

எனது கவிதை வார்த்தைகள்
முடமாகிப் போயின

பரிதாபங்கள்
நம்பிக்கைகளை
படுகுழியில் தள்ளுமோ!

Sunday 1 August 2010

கம்யூனிசமும் கருவாடும் - 2

ஜெர்மனி எனும் நாடு உலகில் மிகவும் பிரசித்தி பெற்ற நாடு. இரண்டு உலகப் போர்களுக்கும் ஒருவிதத்தில்  காரணமான நாடு. நல்லதொரு சிந்தனையாளர்களையும், அறிவியல் அறிஞர்களையும் கண்ட நாடு. அதற்காக பிற நாடுகள் எல்லாம் சளைத்தவைகள் என்று பொருள் அல்ல. அப்படி கருதினால் கம்யூனிசம் என்பது சாத்தியம் அல்ல. கம்யூனிசம் என்பது எந்த பாகுபாடும், பிரிவினையும் இன்றி அனைவரும் சமம் என கருத வேண்டும் என்பதுதான். ஆனால் இந்த கம்யூனிசம் உருவான வரலாறு முதலாளிகளின் கையில் அல்லல்படும் தொழிலாளிகளை கண்டதன் காரணம் தான். மேலும் இந்த கம்யூனிசம் கொண்ட கருத்தையே இதற்கு முன்னர் சோசியலிசம் கொண்டிருந்தது என்பதும் கருத்தில் கொள்ள வேண்டியது.

கார்ல் மார்க்ஸ் மற்றும் ப்றேடிறிச் இங்கேல்ஸ் எனும் ஜெர்மனியில் பிறந்த இரண்டு சிந்தனையாளர்களின் எண்ணத்தில் உருவானதுதான் இந்த கம்யூனிசம் என சொன்னாலும் இவர்களுக்கு முன்னர் இருநூறு வருடங்களுக்கு முன்னரே இந்த கம்யூனிசம் உருவாகித்தான் இருந்தது என்கிறது வரலாறு.  சோசியலிசம் எனப்படும் சமத்துவ முறையானது முன்னரே கடைபிடிக்கப்பட்டு வந்ததுதான்.

இந்த கம்யூனிசம் மிகவும் சிறந்த சிந்தனை, ஆனால் இந்த உலகத்தில் கம்யூனிசம் என்பது சாத்தியம் கிடையாது. கம்யூனிச நாடுகள் என இருப்பவை, இருந்தவை எல்லாம் கம்யூனிச சிந்தனைகளை பின்பற்றியவைகளே அல்ல. கம்யூனிசவாதிகள் என சொல்லிக் கொள்வோர்கள் எல்லாம் கம்யூனிசவாதிகளே அல்ல என்பதை அவர்களும் ஏற்றுக்கொள்வார்கள்.

சோசியலிசமும் கம்யூனிசமும் ஒன்றுக்கொன்று மிகவும் தொடர்புடையவை. முதலாளித்துவ கொள்கைகளை எதிர்ப்பவை. அப்படி என்னதான் இந்த சோசியலிசம் சொன்னது.

தனி உடைமை என்பதை ஒழித்தல். அனைத்தும் பொதுவுடைமை ஆக்குதல். எல்லாவற்றிருக்கும் ஒருவரே முதலாளி, அந்த முதலாளி வேறு யாருமல்ல, அனைத்து தொழிலாளிகள், சுருங்கச் சொன்னால் அனைத்து மக்கள்.

சர்வாதிகாரம் எனும் பேச்சுக்கே இடம் கிடையாது. அனைத்துமே ஜனநாயக கட்டுபாட்டில் இருப்பதுதான். ஆனால் லெனின், ஸ்டாலின், மாவோ எல்லாம் சர்வாதிகாரத்தின் பேரில் செயல்பட்டவர்கள். ஏனெனில் காலமும் சூழ்நிலையும் அவ்வாறு செயல்பட வைத்தன. ஒன்றை எதிர்க்க சர்வாதிகாரம்தான் மிகவும் துணை நின்றது.

உபயோகத்திற்காக மட்டுமே பொருள்கள் உருவாக்கப்பட வேண்டும், லாப நோக்கத்திற்காக எதுவுமே உருவாக்கப்படக் கூடாது. இப்பொழுது சிந்தித்துப் பாருங்கள். வியாபார உலகில் லாப நோக்கம் இல்லாமல்  எது சாத்தியம்? இது சாத்தியம், எப்படி தெரியுமா?

கம்யூனிசத்தின், பொதுவுடைமையின், முழு சிந்தனையான பிரிவினையேதும் இல்லாத , இந்த ஊர், நாடு எனும் அடையாளமில்லாத ஒரு சமூகம். அதாவது ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு விசா, குடியுரிமை எனும் கொடுமை எல்லாம் இல்லாமலிருப்பது. எங்கு வாழும் மக்களும் அதே சகல வசதிகளுடன் வாழ்வது, அதன் காரணமாக ஒரு இடம் மற்றொரு இடம் என எந்த பாகுபாடும் இல்லாமலிருப்பது.

இந்த உலகில் சாத்தியமே இல்லாத இந்த சிந்தனைகள் கற்பனையில் வெளிபட்டது அல்ல.  இங்கேல்ஸ் இங்கிலாந்து நாட்டிற்கு பிரயாணம் செய்தபோது தான் கண்ட குழந்தை தொழிலாளர்கள் நிலை, வர்க்க ரீதியாக பிரிக்கப்பட்டிருந்த மக்கள் நிலை எனும் பல அவல நிலைகள் தான்.

இங்கேல்சும், கார்ல் மார்க்சும் இணைந்து முதலாளித்துவத்தை எதிர்த்து போராடினாலும் கம்யூனிசம் என்பதை அவர்களால் உறுதி செய்ய இயலவில்லை. அவர்களால் ஒரு தெளிவான பார்வையை செயல்படுத்த இயலாத நிலையே இருந்தது. அது ஏன்?

கற்கால மனிதர்களைப் போல இக்கால மனிதர்களும் வாழத் தயாரா? கம்யூனிசம், மாவோயிசம், சோசியலிசம், அந்த இசம், இந்த இசம் என எல்லா இசங்களும் நமது வசம்.

(தொடரும்)