Monday 4 January 2010

முயல் கறி


ஐந்தாம் வகுப்பு பள்ளித் தோழிகள் சந்தியா, விந்தியா.

சந்தியாவுக்கு ஏதாவது பிரச்சினை எனில் விந்தியா முதல் ஆளாய் நிற்பாள். சந்தியாவும் அவ்வாறே.

இருவரது ஊரும் பத்து நிமிடத்தில் நடந்து செல்லுமாறு அமைந்து இருந்தது. இரு ஊர்களுக்கும் இடையில் விவசாய நிலங்கள். அந்த விளை நிலங்கள் வீடாகிப் போனால் இரண்டு ஊர்களும் ஒரு ஊராகிப் போய்விடும். சந்தியாவின் சொந்த கிராமம் சற்று தொலைவில் இருந்தது, அங்கே அவரது பாட்டி தாத்தா வசித்து வந்தனர். முழு ஆண்டுத் தேர்வு விடுமுறைக்கு பாட்டியின் ஊருக்கு சந்தியாவின் முழுக் குடும்பமும் சென்று விடும். வேறொரு பள்ளியில் ஆசிரியர்களாகப் பணியாற்றும் அவளது பெற்றோருக்கு அதுவே செளகரியமாக இருந்தது.

யார் பள்ளித் தேர்வில், விளையாட்டுப் போட்டியில் முதல் வருவது எனும் போட்டி இருவருக்குமிடையில் மிகவும் அதிகமாகவே உண்டு. ஆனால் இவர்கள் இருவரையும் இதுவரை முதலில் வராத வண்ணம் தடுத்து வரும் கணேசனும் அந்த பள்ளியில் உண்டு.

ஐந்தாம் வகுப்பின் அரையாண்டுத் தேர்வு விடுமுறை கழிந்து பள்ளிக்குச் சென்றனர் இருவரும்.

பாட மதி்ப்பெண்கள் என அன்றே அனைத்துப் பாடங்களுக்கும் மதிப்பெண்கள் தரப்பட்டது. சந்தியா முதல் மாணவியாக முதன் முறையாக வந்தாள். விந்தியா மூன்றாம் நிலையில் இம்முறை இருந்தாள். கணேசன் தான் இரண்டாம் நிலை என அறிந்ததும் அழுதுவிட்டான்.

'இனிமே நீ அழப் பழகிக்கோடா' என சந்தியா சற்று கோபமாகவே கணேசனிடம் சொன்னாள்.

'நாங்க எத்தனை தடவை இரண்டாமிடம், மூணாமிடம்னு வந்துருக்கோம், நீ ஏண்டா அழறே' என தன் பங்குக்கு விந்தியாவும் சொல்லி வைத்தாள்.

'என்னை என் அப்பா அடிப்பாரு' என அழுதான் கணேசன்.

'என் புரோகிரஸ் ரிப்போர்ட் வந்ததும் அதை உன்கிட்ட தரவா, அதைப் பார்த்தாவது எத்தனை நான் அடி வாங்கியிருக்கனும்னு உங்க அப்பா நினைக்கட்டும்' என்றாள் சந்தியா.

'என்னதையும் சேர்த்து எடுத்துட்டுப் போ, இப்பவே புரோகிராஸ் ரிப்போர்ட் தந்து தலைவலி தராங்க' என்றாள் விந்தியா.

கணேசன் எதிர்பார்த்தது போல கணேசனின் தந்தை அவனை அடிக்கவில்லை, மாறாக நன்றாகப் படிக்குமாறு வலியுறுத்தினார்.

'சந்தியாவுக்கு என்ன வேணும்' என்று அவரது தந்தைச் செல்லமாகக் கேட்டார்.

'முயல் வேணும்' என்றாள் சந்தியா.

'முயலா? நீ சொன்னது போல முதல் ராங்க் வந்துட்ட, அதனால உனக்கு வாங்கித் தரேன்' என உறுதி தந்தார் சந்தியாவின் தந்தை சோனைமுத்து.

முயல் விற்கும் இடங்களுக்குத் தேடி அலைந்தனர். கண்கள் உருண்டையான முயல் வேண்டும் எனத் தேடினாள் சந்தியா. காதுகள் கொம்புகள் போல இருக்க வேண்டும் என அடம் பிடித்தாள். வேகமாக துள்ளிக் குதித்தோட வேண்டும் எனவும் வம்பு செய்தாள். அவள் கேட்டபடி வாங்கிட அழுத்துப் போனார் சோனைமுத்து.

கண்கள், காதுகள் சரி, ஓடும் முயல் என எப்படிக் கண்டுபிடிப்பது எனத் தவித்தவர் ஊரில் உள்ள ஒருவனிடம் சொன்னார். அவனும் சில தினங்களுக்குப் பின்னர் ஒரு முயல் ஒன்றைப் பிடித்து வந்து தந்தான். சந்தியாவுக்கு அந்த முயல் மிகவும் பிடித்துப் போனது.

தினமும் அதை தனது செல்லக் குழந்தையைப் போல பாவித்து வந்தாள். பழக்கப்பட்டு போன முயல் ஓட எத்தனிக்கவில்லை, சந்தியாவுடன் ஒட்டிக்கொண்டது. நாய் ஏதேனும் வந்தால் விரட்டி அடித்துவிடுவாள் சந்தியா. பள்ளிக்குச் செல்லும் போது அதனை பத்திரமாக ஒரு அறையில் பூட்டி வைத்துவிட்டுச் சென்றாள். மதிய உணவு, தண்ணீர் என அனைத்தும் தந்து விடுவாள்.

முயல் கொழுகொழுவென ஆகிப் போனது. ஓடும் வேலையில்லை, உணவு தேடும் தேவையில்லை. முயலுக்கு சோம்பல் அதிகமாகிப் போனது. இதைக் கவனித்த சந்தியா சனி, ஞாயிறு என மாடியில் ஓடச் சொல்லி முயலைத் தூண்டுவாள். முயலும் சொல்வதற்கிணங்க ஓடிக் காண்பிக்கும்.

முழு ஆண்டுத் தேர்வு வந்தது, விடுமுறையும் உடன் வந்தது. முயலை உடன் எடுத்துச் செல்லலாம் என சந்தியா விரும்பினாள். ஆனால் சந்தியாவின் தாய் சுகுமாரி மறுத்துவிட்டார். கிராமத்தில் கொண்டு சென்றால் பிரச்சினை எனச் சொல்லி விந்தியாவிடம் பாதுகாக்கத் தரலாம் என சொன்னாள். சந்தியாவும் விந்தியாவிடம் விபரம் சொல்லிக் கொடுத்தாள்.

விடுமுறைக்கு ஊருக்குச் சென்று ஒரு வாரம் ஆனது. நாளிதழ் ஒன்றைப் பார்த்த சந்தியாவின் முகம் வெடவெடத்தது, மனம் படபடத்தது.

'அம்மா, என் முயலுக்கு என்னாகி இருக்குமோ' என அலறினாள்.

'என்னாச்சு'

'இதோ நியூஸ் படிம்மா' எனக் காட்டினாள்.

'முயல் கறி தின்ற பள்ளித் தோழியின் குடும்பம்'

'முயலை என் தோழி வீட்டுலப் பாக்கச் சொல்லிப் போயிருந்தோம், அன்னைக்கி சாயந்திரம் வந்து பார்த்தா முயல் ஓடிப்போச்சுனு சொன்னாங்க, ஆனா முயல் கறி வாசம் அடிச்சது, நாங்க கேட்டப்ப முயல் கொழு கொழுனு இருந்திச்சி அதான் சாப்பிட்டோம்னு சொன்னாங்க' என வேதனையுடன் அந்த நாளிதழின் வரிகள் சொல்லிக் கொண்டிருந்தன.

விந்தியாவின் வீட்டுக்குப் போன் செய்தாள் சந்தியா.

'பேப்பர் நியூஸ் பார்த்து பயந்திட்டியா' எனச் சிரித்தாள் விந்தியா.

'ம்ம்' என்றாள் சந்தியா.

'உனக்கு ஒண்ணுன்னா நான் சும்மா இருப்பேனா, முயல் எப்பவும் பத்திரமாத்தான் இருக்கும், நீ சந்தோசமா பாட்டி வீட்டுல இரு, கவலைப்படாதே' என நம்பிக்கை சொன்னாள்.

இதைக் கேட்ட சந்தியாவின் அன்னை மனதில் நினைத்தாள்.

புரிந்துணர்வும், ஒருமித்த எண்ணமும் உள்ளவரை எல்லாப் பொருள்களும் இவ்வுலகில் பாதுகாப்பாகவே இருக்கும். நமது முன்னோர்கள் நம்மிடம் தந்த பூமியினை பாதுகாப்பாக வைத்திருக்கிறோமோ முயல் கறி செய்துவிட்டோமா என எண்ணுகையில் கண்களில் கண்ணீர் கோர்த்துக் கொண்டது.

(முற்றும்)

ஆன்மாவைத் தீண்ட இயலாது

ஆன்மா என்பது என்ன?

இதற்கான பதிலைத் தேடிக் களைத்து விடுவோர்தான் அதிகம். ஆன்மா என்பதை உயிர் எனக் கொள்வோரும் உண்டு. ஜீவாத்மா, பரமாத்மா, மகாத்மா என ஆன்மாதனைப் பிரித்துச் சொல்வோர் உண்டு. நாமெல்லாம் அதாவது மனிதர்கள் மட்டுமல்லாது அனைத்து உயிரினங்களும் ஜீவாத்மா எனப் பொருள் கொள்ளலாம். மகாத்மா என்பது ஜீவாத்மா கொள்ளும் உயர் பதவி என எடுத்துக் கொள்ளலாம். பரமாத்மா என்பது ஜீவாத்மா, மகாத்மா, ஆன்மா அற்றது என அனைத்தையும் உள்ளடக்கிய ஒன்றாகவே கருதப்பட்டு வந்தது. அதாவது பரமாத்மா என்பது ஆத்மா அல்லாத ஒன்றையும் (சூன்ய ஆத்மா) அடக்கிக் கொள்வது எனக் கொள்ளும் பட்சத்தில், அதெப்படி ஆத்மா அல்லாத ஒன்றும் பரமாத்மாவில் அடக்கம் என நினைத்து, உயிர் அற்ற ஜடப் பொருளுக்கும் உயிர் உண்டு என பின்னாளில் சிலர் ஏற்றுக்கொள்ளும்படி அமைய வந்தது எனலாம். இருப்பினும் பரமாத்மா தனித்தே இயங்குவதாகத்தான் கருதப்பட வேண்டும், ஜீவாத்மா, சூன்ய ஆத்மா என இவைகளை உள்ளடக்கியது என கருதுவது சரியாக இருக்காது.

ஆக ஆன்மா என்பது உயிர்! இந்த உயிர் எங்கும் நிறைந்து இருக்கிறது. அது காற்றின் வடிவினனாய் இருக்கிறது, காற்று அற்ற வடிவினனாகவும் இருக்கிறது. இப்படி எங்குமிருக்கும் உயிர் என்பதாலேயே அதுதான் இறைவன் எனச் சொல்வது முரண்பாடாகத்தான் முடியும்.

தீண்டல் என்பது என்ன?

தீண்டல் என்பது ஒருவகை உணர்வு. கண்ணும் கண்ணும் தீண்டியது எனச் சொல்வோர் உண்டு. 'நினைச்சேன் பாரு' என டெலிபதி பேசுவோர் உண்டு. தீண்டல் தொடுவது மூலம் மட்டுமின்றி தொடாமலே நடக்கக் கூடும் என அரிய தத்துவத்தைச் சொன்னவர்கள் உண்டு. எண்ணப் பரிமாற்றத்தால் ஏற்படும் தீண்டல் மனத் தீண்டல் எனச் சொல்லலாம். உயிர்த் தீண்டல் என இறைவனை வணங்கும் பொருட்டு ஏற்படுவதாகச் சொல்லப்பட்டாலும், உயிர்த் தீண்டல் என ஒன்று நடப்பதே இல்லை.

பரமாத்மா எனப்படும் ஒன்றும் சரி, பரந்து விரிந்து கிடக்கும் உயிர் எனப்படும் ஜீவாத்மா, சூன்ய ஆத்மா என்றாலும் சரி, எந்த வகையிலும் தீண்ட இயலாது. 'என் உயிரேப் போச்சு' எனச் சொல்லக் கேள்விப்படலாம். உயிர் போகும்படி நடந்து கொண்ட ஒரு செயல் ஒரு எண்ணத் தீண்டலேயன்றி உயிர்த் தீண்டல் ஆகாது.

உடலைத் தீண்டினால் உடல் சாகும். உயிர் சாகாது. கல்லைத் தீண்டலாம், கல்லின் உயிரைத் தீண்டலாகாது.

ஆன்ம பலத்திற்காக வேண்டப்படும் வேண்டுதல்களும், இந்த ஜீவாத்மா பரமாத்மாவுடன் கலக்க வேண்டும் என நினைத்து வாழும் முறைகளும் அவசியமற்றவை.

இதன் மூலம் ஆன்மாவைத் தீண்ட இயலாது என வலியுறுத்தலாம் என கருதுகிறேன்.

தேக பலம் வேண்டி உணவு உண்ணலாம், உடற்பயிற்சி செய்யலாம், தியானம் செய்யலாம். ஆன்ம பலம் வேண்டி எதையும் செய்ய வேண்டிய அவசியமில்லை. 'உடல் வளர்த்தேனே; உயிர் வளர்த்தேனே' என்பது மிகவும் ரசனையான வரிகள், ஆனால் உயிர் வளர்வதுமில்லை, உயிர் ஒடுங்குவதுமில்லை.

தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா ‍ நின்னைத்
தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா.

எத்தனையோ சுடர் எரியும், சூரியச் சுடர் முதற்கொண்டு. சூரிய வெப்பத்தைத் தீண்டும் சக்தி எவருக்கும் இல்லை. எங்கள் ஊரில் கதையாகச் சொல்வார்கள். ஒருவர் சூரியனைத் தொட்டுவிட வேண்டுமென பறவையில் மேல் அமர்ந்து சூரியனுக்கு அருகில் பறந்து சென்றாராம், ஆனால் பறவையும் அவரும் வெந்து போய் கீழே விழுந்துவிட்டார்களாம். எனக்கு ஆச்சரியமாக இருந்தது, எப்படி ஒருவர் அத்தனை தைரியத்துடன் சூரியனைத் தொட வேண்டுமென பறவையில் அமர்ந்து சென்றார் என, அதுமட்டுமின்றி எப்படி இவர்களால் இப்படியெல்லாம் ஒரு கதையை உருவாக்க முடிந்தது என. அந்த‌ கதைக்கான உண்மையான அர்த்தம் எனக்கு இதுநாள் வரையும் தெரியவில்லை, ஆனால் இப்போது புரிகிறது, ஆன்மாவைத் தொட வேண்டுமென நினைப்பவர்களின் நிலையும் அதுதான் என‌.

பாரதி பாடலைக் குறிப்பிட்டேன், அதற்கான அர்த்தம் ஒரு மகாகவிஞனுக்குள் எழுந்த ஓர் அரிய அற்புத சிந்தனை. சிந்தனையில் தீண்ட முடியும் என பாரதி முயன்றார், ஆனால் சிந்தித்துப்பார்த்தால் எந்த ஒரு சிந்தனையாலும் கூட ஆன்மாவைத் தீண்ட இயலாது.

தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா ‍ நின்னைத்
தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா

கண்கள் மட்டும் கலங்குகிறது. எனது கண்ணீரால் கூட ஆன்மாவைத் தீண்ட இயலவில்லை.

Saturday 2 January 2010

ஒரு கட்சி ஆரம்பிக்கலாம்னு - 5

கல்லூரிக்குக் கிளம்பிச் செல்ல தயார் ஆனான் ரகுராமன். ஊர் மந்தையில் ரகுராமனை கிரிக்கெட் விளையாடுபவர்கள் பலரும் சூழ்ந்து கொண்டார்கள்.

'இனி எப்போண்ணே வருவே' என்றான் சுப்பிரமணியன்.

'ரெண்டு மூணு மாசம் ஆகும்டா சுப்பு, நீயாவது ஒழுங்காப் படி, இதோ இவனுகளை மாதிரி ஆயிராதே' என்றான் ரகுராமன்.

'எங்களுக்கென்னடா குறைச்சல், நினைச்சப்போ வேலை செய்வோம், இன்னொருத்தருக்கு கைகட்டி சேவகம் பண்ற பொழப்பா எங்கது' என்றான் அழகர்பாண்டி

'அழபா, ஃபிலிம் காட்டுறியா' என்றான் பழனிச்சாமி.

'விவசாயம் பாக்குறது தப்புனு சொல்லலை, விவரமா, விவேகமா வாழனும்னுதான் சொல்றேன். பள்ளிக்கூடத்துக்கோ, காலேஜுக்குப் போயோப் படிச்சிட்டா மட்டும் அது படிப்பில்லை, ஒரு சமய சந்தர்ப்பம் வாய்க்கறப்போ எப்படி நடந்துக்குறோம்னு நமக்கு நாமச் சொல்லித்தரதும், பிறர்கிட்ட இருந்து படிக்கிறதும்தான் படிப்பு, அதை வைச்சித்தான் சொல்றேன்' என்றான் ரகுராமன்.

ரகுராமன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு கிளம்பினான். சுப்பிரமணியன் ரகுராமனிடம்

'அண்ணே, கட்சி எப்போண்ணே ஆரம்பம்' என்றான்.

'கட்டாயமா சொல்றேன்' எனச் சிரித்துக்கொண்டே விலகினான் ரகுராமன்.

கல்லூரியில் எல்லாம் அவனுக்கு புதிதாகத் தெரிந்தது. சில தினங்களாக தனக்குள் ஏற்பட்ட மாற்றத்தை சந்தானலட்சுமியிடம் சொன்னான்.

'அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போறியா?'

எனச் சந்தேகத்துடனும் சற்று வெறுப்புடன் சந்தானலட்சுமி கேட்பாள் என சற்றும் ரகுராமன் எதிர்பார்க்கவில்லை. தன்னைப் போல எண்ணம் கொண்டவள் என்றே எண்ணிக் கொண்டிருந்த ரகுராமனுக்கு ஏமாற்றமாக இருந்தது.

'நீ, நான் எது செஞ்சாலும் கூட இருப்பேனு நினைச்சேன்' என்றான் ரகுராமன்.

'எனக்குப் பிடிக்கலை' என்றாள் சந்தானலட்சுமி.

'மனசுல ஒரு பெரிய திட்டம் போட்டு வைச்சிருக்கேன், அதைச் செய்யனும், நீ பக்கபலமா இருப்பேனு மனசுல உறுதியா இருந்தேன், நீ சொல்றதப் பார்த்தா என்னால கட்சி ஆரம்பிக்க முடியாதுனு நீ நினைக்கிற‌' என்றான் ரகுராமன்.

'சரி, கட்சி ஆரம்பிச்சி என்ன செய்யப் போற?' என்றாள் சந்தானலட்சுமி.

'ம்ம்... ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்கப் போறேன், ஏழை எளியோர்கள்னு எல்லாருமே சந்தோசமா இருக்க வழி பண்ணப் போறேன், சாதி சமயம் எல்லாம் இல்லாத ஒரு சமூகமா மாத்தப் போறேன், உழைப்பே மூலதனம்னு நினைக்கிற சமுதாயம் என் லட்சியம்' என வேகமாகப் பேசினான் ரகுராமன்.

சந்தானலட்சுமி விழுந்து விழுந்து சிரித்தாள். 'ஐயோ ரகு, நீ சினிமாவுக்கு வசனம் எழுதப் போகலாம், ஒரு ஹீரோவா வேசம் போடலாம், அரசியல்வாதி கெட்டப் கூட உனக்கு நல்லா இருக்கும். நீ பேசினியே இப்படித்தான் ரொம்ப பேரு வெட்டித்தனமா கனவு கண்டுட்டு இருக்காங்க, இந்த வெட்டித்தனமான கனவை எழுதி காசு பாக்கிறவனு ஒரு பக்கம், அதே கனவை நிஜம் போல சினிமா காட்டி அதைப் பாக்குறவங்களை கனவு காண வைச்சி காசு பாக்குறவனு ஒரு கூட்டம், நம்ம சமுதாயம் ஒரு கனவு காணுறவங்க இருக்கற சமுதாயம். அதுவும் வெட்டித்தனமான கனவு'

'கனவு ஒருநா மெய்ப்படும் லட்சுமி, உலக மாற்றமே சாதாரண மனிசர்களோட கனவுகளில் இருந்துதான் தொடக்கம். நா கட்சி ஆரம்பிக்கிறதாத்தான் இருக்கேன், அதுல எந்த மாத்தமும் இல்லை. இதுக்கான வழிகளை நான் தேடப் போறேன்' என்றான் ரகுராமன்.

'இருக்கற கட்சி போதாதா?, சமூக நலத்துக்காகப் பாடுபடறவங்க கட்சில நின்னு தோத்தக் கதை எல்லாம் உனக்குத் தெரியாதா?, ஏன் இப்படி தேவையில்லாத வேலை உனக்கு'

சந்தானலட்சுமி சொன்னதைக் கேட்டதும் ரகுராமன் மனம் உடைந்தான். தனது மனதை திடப்படுத்திக் கொண்டு சந்தானலட்சுமியிடம் சொன்னான்.

'எங்க ஊருல இருந்துதான் என் கட்சியோடத் தொடக்கம் இருக்கப் போகுது, எனக்குத் தெரிஞ்சவங்க, என்னோடப் படிச்சவங்கனு எல்லார்கிட்டயும் விரிவாப் பேசப் போறேன், என்னோட முழுத்திட்டத்தையும் எழுதி வைச்சிட்டு உன்கிட்ட பேசறேன். அப்போவாவது எனக்கு நீ சப்போர்ட் பண்றியானுப் பாக்குறேன்' என்றான் ரகுராமன்.

'நீ உண்மையிலே உறுதியா இருக்கியா, எனக்குப் பிடிக்கலை... ஆனா நீ உறுதியா செய்யப் போறதா இருந்தா உன்கூட நான் எப்பவும் இருப்பேன்'

சந்தானலட்சுமியின் அந்த வார்த்தைகள் ரகுராமனுக்கு அளவில்லாத தைரியம் தந்தது.

தட்டிக் கொடுப்பவர்கள் எவரேனும் ஒருவர் இருந்தால் போதும், தைரியம் இல்லாத செயல்கள் கூட தைரியம் பெற்றுவிடுகின்றன. தட்டிக் கழிப்பவர்கள் அதிகம் இருந்த காரணத்தினாலேயே, தன்னைத் தானேத் தட்டிக் கொடுக்கும் வகையில் தனக்கு ஒரு மாபெரும் சக்தி ஒன்று உதவுதாக நினைத்துக் கொண்ட மனிதர்கள் வாழ்ந்து சாதித்து இருக்கிறார்கள். தடுமாறி, தடம் மாறி விழுந்த போதும் எழ வேண்டும் எனும் எண்ணம் இல்லாத உயிரினம் ஏதேனும் உண்டா உலகில்?

(தொடரும்)