Tuesday 13 October 2009

அடியார்க்கெல்லாம் அடியார் - 4

கதிரேசனிடம் பாடல் பற்றி பேசினார் சிவநாதன். சிவனை நோக்கி சொல்சிவனே என பாடக்கூடாது என்றார். மேலும் அவர், சிவன் யாருக்கும் எதற்கும் எதுவும் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்றார். கதிரேசனுக்கு தர்மசங்கடமாக இருந்தது. ''என்ன எதுவும் பேசமாட்டேங்கிற?'' என்றவரிடம் கதிரேசன் ''பாடுறதுல தப்பில்லையே சார்'' என்றான். ''பாடுறதுல தப்பில்லை, ஆனா சொல்சிவனே அப்படினு பாடக்கூடாதுனுதான் சொல்றேன், அதுவும் நீ பாடின பாடல் சிவனை தரம் தாழ்த்துவதாக இருக்கிறது, இப்படி அதிகபிரசங்கித்தனமாக நீ நடந்து கொள்வது சரியில்லை'' என்றார். மெளனம் சாதித்தான் கதிரேசன்.

''நீ என்ன பண்ற?'' என்றார். ''நான் உங்க காலேஜ்ல பாலிடெக்னிக் முத வருசம் சேர்ந்திருக்கேன் சார்'' என்றான். ''விடுதியிலதான் தங்கியிருக்கியா, உன் பேரு என்ன?'' என்றவரிடம் ''ஆமா சார், பேரு கதிரேசன்'' என்றான். ''நீ இப்படி பாடினதுக்கு மன்னிப்புக் கேள், இனி பாடமாட்டேனு சொல்லு'' என்றார். ''நான் பாடினதுல எந்த தப்பும் இல்லை சார், இதுபோல பாடுறதை நான் நிறுத்த வேண்டிய அவசியமும் இல்லை சார், சிவன் பொதுவானவர், சொல்சிவனே என பாடுவது மூலம் அவர் தரம் தாழ்ந்திட போவதில்லை, இதை நீங்கள் ஒரு பெரிய விசயமா எடுத்துக்கிட்டு என்னை மிரட்டுறது அந்த சிவனுக்கே அடுக்காது'' என மனதில் தோன்றியதை பயம்தனை மறந்து போன கதிரேசன் படபடவென பேசினான். சிவநாதன் அங்கிருந்து விருட்டென வெளியேறினார்.

''ஏம்ப்பா அவர்தான் பாடக்கூடாதுனு சொல்றாருல, பாடமாட்டேனு சொல்ல வேண்டியதுதான, கொஞ்சம் கூட மரியாதையில்லாம'' என்றார் அங்கிருந்த ஒருவர். அப்போது உடலெல்லாம் திருநீரு பூசியிருந்த வயதான ஒருவர் கதிரேசனையேப் பார்த்துக் கொண்டிருந்தார். கதிரேசன் கோவிலிருந்து நேராக விடுதிக்குச் சென்றான். தெய்வேந்திரன் இவனுக்காகவே காத்திருந்தது போல ''உள்ளே வா'' என கதிரேசனை தனது அறைக்குள் அழைத்தார்.

''உன்கிட்ட என்ன சொன்னேன், பெரியவங்களுக்கு மரியாதை கொடுக்கனும்னு சொன்னேன்ல. பிரின்சிபால்கிட்டயே நீ முறைச்சிட்டு நின்னுருக்க. உன்னை விடுதியை விட்டு உடனே வெளியே அனுப்பச் சொல்றார், நீ எல்லாம் எடுத்துட்டு கிளம்பு. அப்படி நீ எடுத்துட்டுப்போகலைன்னா உன்னை காலேஜ்ல இருந்து நீக்கிருவோம்னு சொல்ல சொன்னார்'' என்றார் தெய்வேந்திரன். கதிரேசனுக்கு தான் கேட்பது உண்மைதானா என தன்னைத்தானேக் கேட்டுக்கொண்டான். ''கிளம்பு, கிளம்பு, வீணா என் கோவத்தைக் கிளராதே'' என்றார் தெய்வேந்திரன்.

கதிரேசனின் மனம் பதறியது. அம்மாவை நினைக்கையில் மயக்கமே வந்தது. ''சார், இப்போ எங்கே போவேன், எனக்கு இங்க யாரும் தெரியாது சார்'' என அழ ஆரம்பித்தான் கதிரேசன். ''நீ படிக்கனும்னு நினைச்சா வெளியே போ'' என்றார். ''ஒருதரம் பிரின்ஸிபால்கிட்ட பேசிப் பாருங்க சார்'' என அழுதுகொண்டே சொல்ல ''நீ என்னை வேலையை விட்டுப் போகவச்சுரவ போலிருக்கு, அவர் ஒருதரம் முடிவா சொல்லிட்டா அவ்வளவுதான். காலேஜ்ல இருக்கச் சொல்றாரே அதை நினைச்சிட்டுப் பேசமா போ'' என அடிக்க கையை ஓங்கினார். ''போறேன் சார்'' என்றான் கதிரேசன்.

எல்லாம் எடுத்து வைத்துக்கொண்டு அழுகையுடனே கிளம்பினான். கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள் எல்லாம் கதிரேசனை பரிதாபமாகப் பார்த்தார்கள். பின்னர் பெட்டியுடன் நேராக பிரின்சிபால் அறைக்குச் சென்றான். கொஞ்ச நேரம் காத்திருக்கச் சொன்னார்கள். பின் உள்ளே அனுப்பினார்கள்.

''சார், எனக்கு இங்க யாரையும் தெரியாது சார், என்னை விடுதியில சேர்த்துக்கச் சொல்லுங்க சார்'' என அழுதான் கதிரேசன். ''நீ எங்கேயாவது தங்கிக்கோ, விடுதியில நீ தங்கக்கூடாது'' என்றார் சிவநாதன். ''பாடுனதுக்கா சார் இந்தத் தண்டனை?'' என்றான் கதிரேசன். ''நீ மரியாதையில்லாம நடந்துகிட்டதுக்குத் தான் இந்த தண்டனை, இந்த நிலைமை தொடர்ந்துச்சினா காலேஜ்ல இருந்தே உன்னை வெளியேத்த வேண்டியிருக்கும்'' என்றார் அவர். ''சொல்சிவனே னு பாடுறதல என்ன சார் தப்பு, இதெல்லாம் ஒரு காரணமா?'' என்றான் கதிரேசன் அழுகையுடன். ''பாடியதுமில்லாம எதிர்த்துப் பேசிட்டே இருக்க, நான் சொன்னா நீ கேட்கனும்'' என்றார் மேலும். ''என்னோட கருத்தைச் சொல்லக்கூடாதா சார்?'' என்றவனிடம் ''நீ சொல்ற விதம் சரியில்ல, இதோ பாரு, நீ எங்கேயாவது தங்கிக்க, விடுதியில தங்க வேண்டாம், உனக்கு நான் சொல்றது பிடிக்கலைன்னா நீ காலேஜ்ல இருந்து நின்னுக்கலாம்'' என சொல்லி வெளியேப் போகச் சொன்னார்.

கதிரேசன் இனியும் அங்கே நிற்பது கூடாது என கண்கள் கலங்கியபடியே வெளியேறினான். பெட்டியுடன் சிவன் கோவிலுக்குள் சென்றான். முதல் நாளிலேயே தனக்கு கல்லூரியில் ஏற்பட்ட அவமானம் அவனை மிகவும் வருத்தத்துக்கு உள்ளாக்கியிருந்தது. எங்கு சென்று தங்குவது, எப்படி கல்லூரிக்குச் செல்வது என குழம்பியவன் சிவனை நோக்கி கண்ணீர் மல்க பாடினான்.

''அன்னையும் தந்தையும் அறிந்த முதல் அறிவே
நின்னை யான் விளித்த பொருட்டு
ஓரிடம் இல்லை என்றே ஒதுக்கித் தள்ளினார்
பாரிடத்து யாவும் உனதிடமோ சொல்சிவனே''

பாடி முடிக்கையில் கதிரேசனின் கையை உடலெல்லாம் திருநீரு பூசியிருந்த அந்த வயதானவர் பிடித்துச் சொன்னார். ''நீ என்னோட வா, என்னோட வீட்டுல நீ தங்கிக்கிரலாம், நீ காலேஜ்க்குப் போய்ட்டு வா'' என்றார். கதிரேசன் உடல் கிடுகிடுவென ஆடியது.

(தொடரும்)

Wednesday 7 October 2009

அடியார்க்கெல்லாம் அடியார் - 3

சிறிது நேரம் கழித்துஉணவு அறைக்குச் சென்றான் கதிரேசன். அங்கே தெய்வேந்திரன் ஒருவனை அடித்துக்கொண்டு இருந்தார். அதைப்பார்த்த கதிரேசனுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. ஏன் இப்படி எடுத்ததுக்கெல்லாம் இவர் அடிக்கிறார் என்ற கேள்வி மனதில் ஓடியது. பின்னர் அவர் சமையல் அறைக்குள் சென்று அங்கு சமையல் செய்தவர்களைச் சத்தம் போட ஆரம்பித்தார்.

நேராக அந்த மாணவனை நோக்கிச் சென்ற் கதிரேசன். ''உன்னை ஏன் அவர் அடிச்சார்?'' எனக் கேட்டான். கதிரேசனை சற்று வித்தியாசமாகப் பார்த்துவிட்டு ''சாப்பாடு சரியில்லாமல் இருந்தது, அதான் ஏன் இப்படி சமைக்கிறீர்கள், சற்று அவர்களைச் சொல்லக்கூடாதா'' எனக் கேட்டேன், அதற்கு அவர் ''மற்றவங்க எல்லாம் பேசாமத்தான சாப்பிடுறாங்க, உனக்கு என்ன வந்துச்சு, சேர்ந்தன்னைக்கே இப்படியா'' என அடிக்கத் தொடங்கிவிட்டார். ''வலிக்கிறதா?'' என்றான் கதிரேசன். ''அம்மா அடிச்சாலும் வலிக்கத்தானே செய்யும், தாங்கித்தான் ஆகனும்'' என்றவன் தட்டினைக் கழுவிக்கொண்டு கதிரேசனுடன் மேலும் பேசினான். அவன் மதுசூதனன், காட்பாடி. எஞ்சினியரிங் தகவல் துறையில் இணைந்து இருக்கிறான்.

கதிரேசன் தன் பெயரை சொன்னான். ''ஓ நீ சைவ குலமோ'' என்றான் மதுசூதனன். ''ஆமாம், உன் பேரு என்ன?'' என்றான் கதிரேசன். ''நான் வைணவம், என் பேரு மதுசூதனன், அறை எண் 40ல் நான் இருக்கிறேன், நீ எந்த அறையில் இருக்கிறாய்?'' எனக் கேட்டான் மதுசூதனன். ''நான் அறை எண் 46, நான் ரசம் குடித்துவிட்டு வருகிறேன்'' என சென்றான் கதிரேசன்.

கட்டுப்பாட்டிற்குள் எதையும் கொண்டு வரவேண்டுமெனில் அச்சப்படுத்துதலும், கொடுமைப்படுத்துதலும் பெரும் ஆயுதங்களாகவேப் பயன்பட்டு வருகின்றன. இத்தனை மாணவர்களையும் ஒழுங்கில் வைத்திருக்க வேண்டுமெனில் அத்தனை சாதாரண விசயமில்லைதான் என கதிரேசன் எண்ணிக்கொண்டே உணவு அறைக்குள் நுழைந்தான். அங்கே இருந்த பணியாளாரிடம் ரசம் வேண்டும் என கேட்க அவரும் ரசம் ஊற்றிக்கொடுத்தார். ரசம் குடித்தபோது மிகவும் புளிப்பாக இருந்தது. ஊர் ஞாபகம் மனதைத் தொட்டது. புளியமரங்கள் கல்லடிபட்டு புளியம்பழங்களை உதிர்த்துக்கொள்வதும் அவைகளை சுவைத்த போது இருந்த சுவையும் நினைவுக்கு வந்தது.

'அம்மா இந்நேரம் தூங்கி இருப்பாளோ' என நினைக்கும்போதே மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. ஒவ்வொரு தினமும் ஒரு கதை சொல்வாள் அம்மா. கதை சொல்வதற்கு என்றுமே சலித்துக் கொள்ளமாட்டாள். கதைக் கேட்டுக்கொண்டே தூங்கிப்போன நாட்கள் மிகவும் அதிகம். இன்று யாருக்கு கதை சொல்வாளோ? என எண்ணியபோது கதிரேசனின் கண்கள் கலங்கியது.

அறைக்குள் வந்து பேசாமல் படுத்துக்கொண்டான். தூக்கம் துக்கமாக அன்றுதான் தோன்றியது. அதிகாலை எழுந்து குளித்தான். வரிசையில் நின்று ஒருவர் பின் ஒருவராகத்தான் குளிக்க வேண்டும். குளிப்பதற்கு என தனி அறை எல்லாம் கிடையாது. குளித்து முடித்தவன் சிவனை வணங்கிவிட்டு எதுவும் சாப்பிடாமல் சிவன் கோவில் நோக்கிச் செல்ல நினைத்து மதுசூதனனிடம் சென்று, சிவன் கோவிலுக்கு வருகிறாயா? எனக் கேட்டபொழுது, ''நான் சிவனை தொழுவதில்லை'' என அழுத்திச் சொன்னான் மதுசூதனன். அவனிடம் எதுவும் மேற்கொண்டு கேட்காது சிவன் கோவிலை அடைந்தபோது கல்லூரி முதல்வர் சிவநாதன் அங்கே வந்திருந்தார். அவரை இதற்கு முன்னர் ஒரே தடவைப் பார்த்து இருந்தாலும் அவரது முகம் பளிச்சென மனதில் பதிந்திருந்தது. வெகு சிலரே கோவிலில் இருந்தார்கள்.

''வணக்கம் சார்'' என்றான் கதிரேசன். அவரும் வணக்கம் சொன்னார். கோவிலில் உள்நுழைந்தபோது நிசப்தம் நிலவியது. பாட ஆரம்பித்தார் சிவநாதன்.

''ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி

சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான்''


பாடல் பாடி முடித்துவிட்டு சிவன் கோவிலில் இருந்து வெளியே கிளம்பினார் சிவநாதன். கதிரேசன் பாடத் தொடங்கினான்.

''முக்கண்ணனே மூவுலகமென யாவுலகமும் பரவிக் கிடப்போனே
எக்கணமும் நீங்கா நிலையைக் கொண்டோனே
உயிரோடு வைத்த உடல் ஒப்புவித்துக் கொண்டேன்
பயிரது மாண்டிடாது செழித்திடுமோ சொல்சிவனே''

அங்கிருந்த சிலர் அவனையேப் பார்த்தார்கள். பாடலைக் கேட்ட சிவநாதன் திரும்பிக் கோவிலுக்குள் வந்தார்.

புளியம்பட்டியில் களையெடுத்துக் கொண்டிருந்த செல்லாயி தனது கையில் ஏதோ ஒன்று குத்திவிடவே 'கதிரேசா' என கண்கள் கலங்கிட அவனது பெயரைச் சொன்னார். கதிரேசன் கிளம்பிச் சென்றதிலிருந்து மிகவும் மனம் வேதனையுற்றிருந்தார் செல்லாயி.

(தொடரும்)

Thursday 1 October 2009

ஒரு கட்சி ஆரம்பிக்கலாம்னு - 3

ரகுராமன் சுப்பிரமணியின் கேள்விக்கு நிதானமாகவே பதில் சொன்னான்.

''ஆமாடா சுப்பு, ஒரு கட்சி ஆரம்பிக்கத்தான் போறேன்''

''அண்ணே, நெசமாவாண்ணே, நம்ப முடியலண்ணே''

அனைவரும் ரகுராமனைச் சூழ்ந்து கொண்டார்கள்.

''இன்னைக்கு கட்சி பேரு, உடனே ஒரு கட்சி கொடி, நாளைக்கு கட்சி மாநாடுனு ஆரம்பிச்சி என்ன ஏதுனு பேசத் தெரியாம பேசப் போற கட்சியா இது இருக்காது, அதுக்கு நாளாகும், இப்ப விளையாடலாம்''

ரகுராமன் சொன்னதும் அவர்களுக்குள்ளே முணுமுணுத்துக் கொண்டார்கள். ஊருக்குத் தலைவராக வழியக் காணோம், இந்த நாட்டுக்குத் தலைவராகப் போறாராம்.

விளையாட ஆரம்பித்தார்கள். ரகுராமன் வீசிய பந்தினை சுப்பிரமணி ஓங்கி அடித்திட மட்டை உடைந்து போனது.

''இருக்கறதே ஒண்ணு, அதையும் உடைச்சிப் பூட்டியாடா, நொண்டிக்கார மவனே''

சுப்பிரமணியை பழனிச்சாமி அடிக்க ஓடி வந்தான். பிறர் தடுத்தார்கள். வேணும் என்றா அவன் செய்தான் என பழனிச்சாமியைத் திட்டினார்கள்.

''நாம சேர்த்த காசை வைச்சி ஒரு பேட் வாங்கிரலாம், பழனி, எவ்வளவு பணம் இருக்கு இப்போ?''

ரகுராமன் கேட்டதும் பழனிச்சாமியின் முகம் சற்று வித்தியாசமானது.

''ரகு, எந்த பணமும் என்கிட்ட இல்ல''

''டேய் பழனி, முன்னூறு ரூபா இருக்குனு என்கிட்ட அன்னிக்கி சொன்ன, என்ன விளையாடுறியா''

''அழபா, அன்னிக்கி சொன்னேன், இன்னிக்கி இல்ல''

''இவனிட்ட பணத்தைக் கொடுக்காதீங்கனு அன்னிக்கே நான் சொன்னேன், எவனும் கேட்கலை, இவன் சீட்டாட்டத்துக்கும், குடிக்கும் அந்த காசை தொலைச்சிருப்பான்''

''அழபா, அடிச்சேனா செவுலு பிஞ்சிரும்''

''அடிராப் பார்க்கலாம், காசை தின்னுட்டு மிரட்டுறியா''

''ரெண்டு பேரும் நிறுத்துங்க, பழனி, நீ காசை ஏற்பாடு பண்ண வழியப் பாரு, சுப்பு நீ இனிமே காசு பொறுப்பு ஏத்துக்கோ, நாளைக்கு அவங்ககிட்டயே பேட் வாங்கிக்குவோம், முடியாதுனு சொன்னா மேட்சை கேன்சல் பண்ணிருவோம்''

''ரகு, என்ன உடனே பொறுப்பில இருந்து என்னைத் தூக்குற, நீ வைச்சதா சட்டம்? அந்த காசையெல்லாம் திருப்பித் தரமுடியாது, அது போனது போனதுதான்''

பழனிச்சாமி பேசிக்கொண்டிருக்கும்போதே அழகர்பாண்டி பழனிச்சாமியை ஓங்கி அடித்தான். இருவருக்குமிடையில் சண்டை நடந்தது. ரகுராமனும் மற்றவர்களும் அவர்களை விலக்கி விட்ட பின்னரும் இருவரும் தகாத வார்த்தைகளால் திட்டிக் கொண்டார்கள்.

''பழனி, அழபா, நீங்க ரெண்டு பேரும் நாளைக்கு விளையாட வேணாம், ரமேஷூ நீயே நாளைக்கு கேப்டனா இரு''

ரகுராமன் சொன்ன முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட்டார்கள். பழனிச்சாமியும், அழகர்பாண்டியும் கோவித்துக் கொண்டுச் சென்றார்கள்.

இரவு வீட்டினில் உட்கார்ந்து ரகுராமன் கட்சிக்கான கொள்கை எது என யோசிக்கலானான். சொந்த ஊர் அணியில் நடக்கும் பிரச்சினைகளை சமாளிப்பது என்பதே எத்தனை அசெளகரியமாக இருக்கிறது என மனம் சஞ்சலம் அடைந்தான்.

அடுத்த நாள் காலையில் வக்கானங்குண்டினை அடைந்தார்கள். பழனிச்சாமியும், அழகர்பாண்டியும் வந்திருந்தார்கள். சண்டை போட்டுக் கொள்ளமாட்டோம் என இருவரும் சொன்னதும் இருவரையும் அணியில் சேர்த்துக்கொண்டான் ரகுராமன்.

போட்டி ஆரம்பித்தது. வக்கனாங்குண்டு அணியினர் முதலில் மட்டை பிடித்தனர். இருபது ஓவர்கள் என நிர்ணயித்துக் கொண்டார்கள். போட்டியில் வக்கனாங்குண்டு அணியினரே வழக்கம் போல வெற்றி பெற்றனர். பணத்தை கொடுத்துவிட்டு ரகுராமனும் மற்றவர்களும் திரும்பி நடந்தபோது பழனிச்சாமி நடுவர்களிடம் சென்று வாக்கு வாதம் செய்து கொண்டிருந்தான். என்னவென ஓடிச் சென்றுப் பார்த்தனர்.

''டேய் ரகு, இவனுங்க ரெண்டு பேரும் ஃபிக்ஸ் பண்ணி நம்மளைத் தோக்க வைச்சிட்டானுங்கடா''

இரண்டு அணியினருக்கும் கடும் வாக்குவாதம் நடந்தது. அந்த இரண்டு நடுவர்களுமே வக்கனாங்குண்டுக்காரர்கள் பணம் தருவதாக சொன்னார்கள் என ஒப்புக்கொண்டனர். பழனிச்சாமி அவர்களை மிரட்டி கொடுத்தப் பணத்தைத் திரும்ப வாங்கினான்.

''டேய் ரகு, உன்னை மாதிரி இருந்தா உன் கட்சி உருப்படாதுடா, என்னை மாதிரி அடிதடினு இருந்தாத்தான் எதையும் இந்த உலகத்தில சாதிக்க முடியும், என்னை மாதிரி ஆளுகளையும் தயார் பண்ணு''

''அண்ணே, அடாவடித்தனம் பண்ணித்தான் எதையுமே நடத்தனுமாண்ணே''

சுப்பிரமணியின் தோய்ந்த குரலைக் கேட்டபோது ரகுராமனின் முகம் சோகத்தில் மூழ்கியிருந்தது.

நேர்மை, சத்தியம், ஒழுக்கம் என்பதெல்லாம் ஒரு குறிப்பிட்ட பொறுப்பில் உள்ளவர்களுக்கு மட்டுமே உரியது என்றும், சாதாரண மக்களுக்கு அதுபற்றிய விபரங்களில் அக்கறை தேவையில்லை என சின்ன சின்ன விசயங்கள் தானே என தவறி நடக்கும் மக்கள் தங்களைத் தாங்களே எப்பொழுது திருத்திக் கொள்வது?

(தொடரும்)