Wednesday, 26 August 2009

நிலையான நட்பு

முகம் பார்க்காமல் முதல் அறிமுகம்
வார்த்தைகளில் தொடங்கி வருடங்கள் பல கடந்து வளர்பிறையாய்
முகவரி தெரியாமல் முழு நிலவாய்
அகம் அறியாது இனம் புரியாத நட்பு

எண்ணங்கள் நினைவுகளில் இடும் அலங்காரம்
இனிய நாட்கள் இன்ப ஒளி வீசி மலர்ந்து சிரிக்கும்
நெருடல்கள் இல்லாது வணங்கி கொண்டு
நெஞ்சை வருடி நெகிழ்வு தருமது நட்பு

இடங்கள் பல மாறியது உண்டு
தொடர்ந்தே என்றும் இணைந்து வந்ததுண்டு
அன்பே உருவான இனிய இதயத்தோடு
முதுமை வரைக்கும் வருமோ இளமை மாறா நட்பு

கண்ட உண்மையில் கற்பனை மறைந்துவிடும்
கொண்ட நட்பினால் உள்ளம் அளவிலா மகிழ்ச்சி கொள்ளும்
எல்லைதனை வகுத்து புரிந்து கொண்டால்
குறையின்றி நெறியோடு நீண்டநாள் வாழ்ந்திடும் நிலையான நட்பு.

Tuesday, 25 August 2009

வலைப்பூ கண்டு மிரண்டு போனேன்

உலகில் ஏதேனும் பிரச்சினைகள் இருந்து கொண்டேதான் இருக்கின்றன, பிரச்சினை இல்லாத உலகம் காண வேண்டும் என நினைப்பதெல்லாம் வெறும் கனவாகவே இருக்க முடியும். பிரச்சினைகளுடன் வாழ்ந்து அதிலிருந்து கொண்டே பிரச்சினைகளை வென்று அடுத்த பிரச்சினைகளை எதிர்நோக்கி வாழ்வதுதான் நிதர்சனம்.

நல்லது, பிரச்சினை முடிந்துவிட்டது என அமைதியாக எவராலும் இருக்க இயலாது. திறம்பட வாழ்க்கையை வாழ்வதற்கு நாம் நமது மனதில் உறுதியுடன் இருத்தல் அவசியம் என்பதை அறிவோம்.

சில மாதம் முன்னர் அன்பரின் 'நிகழ்காலத்தில்' எனும் வலைப்பூவிற்குச் சென்றபோது வலைப்பூ மால்வேரினால் பாதிக்கப்பட்டுள்ளது, மீறிச் சென்றால் உங்கள் கணினி பாதிக்கப்படும் எனும் எச்சரிக்கையைக் கண்டு பல நாட்களாக அவரது வலைப்பூவினைப் பார்க்காமலே இருந்தேன். ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது எனப் பார்த்தபோது அன்பர் சக்திவேலின் 'படிக்காத பக்கங்களில்' ஒரு இடுகை கண்டேன், எந்த எந்த திரட்டிகளில் எல்லாம் வலைப்பூவினைச் சேர்க்கக் கூடாது என. அவ்வாறு சில திரட்டிகளில் இணைக்கும்போது மால்வேர் பாதிப்பு வரும் என அறிந்தேன். அதன் காரணமாகவே பல தமிழ்திரட்டிகளினை முழுவதுமாகத் தவிர்த்தேன்.

மேலும் எனது வலைப்பூவில் முதன்முதலாக தன்னை இணைத்துக் கொண்ட ஜெஸ்வந்தி அவர்களின் வலைப்பூவும் இதே பாதிப்பு அடைந்ததைக் கண்டு அவரது படைப்புகளை படிக்க முடிவதில்லை.

இப்படியிருக்க நேற்று எனது வலைப்பூ விகடன்.காம் மூலம் மால்வேர் கொண்டுள்ளது என எனக்கு எச்சரிக்கை வர என்ன செய்வது எனத் தெரியவில்லை. இருப்பினும் கிருஷ்ணமூர்த்தி ஐயாவின் பின்னூட்டம் பார்த்தபின்னர் கூகிளைத் தொடர்பு கொண்டு மால்வேர் விசயம் பற்றி அறிவித்தேன். இன்று மால்வேர் எச்சரிக்கை இல்லாமல் வலைப்பூ திறந்தது.

இந்த மால்வேர் எச்சரிக்கை பாதிக்கப்பட்ட பிற தளங்களினால் நமது வலைப்பூக்களுக்குத் தெரிவது போலும்! இது கூகிள் குரோமினால் மட்டுமே அறிய முடிகிறது.

ஆஸ்த்மா தொடர் ஆரம்பித்த பின்னர் தான் இந்தப் பிரச்சினை வந்தது. விகடன்.காம் தளத்தின் ஆர்வம் புரிந்து கொள்ளும்படியாகத்தான் இருக்கிறது. இதுபோன்ற பிரச்சினை உங்களுக்கும் நேர்ந்தது உண்டா?

Sunday, 23 August 2009

ஆஸ்த்மா - ஒரு ஆராய்ச்சித் தொடர் (1)

கதைகளும், கவிதைகளும், கட்டுரைகளும் தமிழில் எழுதிக் கொண்டிருந்தபோது மருத்துவம் சம்பந்தமாக எழுத இயலுமா என என்னை நோக்கிக் கேட்டபோது இப்போதைக்கு அந்த எண்ணம் இல்லை என ஓரிரு வருடம் முன்னர் சொல்லி இருந்தேன். 'கதை விடுவது மிகவும் எளிது' என நினைத்துக் கொண்டு மருத்துவம் சம்பந்தமாக எழுதுவது பற்றி சிறு முயற்சி கூட எடுத்ததில்லை.

கிட்டத்தட்ட பதினெட்டு வருடங்களாக ஆங்கில மொழியிலேயே பயின்று வந்ததின் காரணமாக பல ஆங்கில சொற்களை தமிழ்படுத்துவதில் இருக்கும் சிரமம் ஒரு ஆராய்ச்சியாளனின் பாதை எனும் தொடரை எழுதும்போது அறிந்தேன். ஒரு விசயத்தை வெளியில் சொல்ல வேண்டுமெனில் இருக்கும் சிரமத்தைப் பொருட்படுத்தாது எழுதுவது மிகவும் அத்தியாவசியமாகும். அதன் பொருட்டே ஆஸ்த்மா பற்றிய ஆராய்ச்சித் தொடரை எழுத முயற்சி எடுத்து இருக்கிறேன்.

தமிழில் எழுதுவதின் மூலம் விசயங்களைத் தவறாகச் சொல்லிவிடக் கூடாது என்பதில் கவனமுடன் இருக்க முயற்சி செய்கிறேன்.

சுவாசம் நன்றாக இருந்தால்தான் இந்த பூமியில் சுகவாசம் செய்ய இயலும். அந்த சுவாசத்தில், சுவாசக் குழலில், சுவாசப் பைகளில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்தும், அது எதனால் ஏற்படுகிறது, என்னென்ன ஆராய்ச்சிகள் உலகில் செய்து வருகிறார்கள், என்னென்ன மருந்துகள் நடைமுறையில் இருக்கின்றன என்பது குறித்து விரிவாக, விளக்கமாக விரைவில் தொடர்வோம்.