Tuesday 18 August 2009

ஆன்மிகம் என்றால் ஒதுங்குவது ஏன்?

ஆன்மிகம் என்றாலே வேண்டாம் எனச் சொல்லி ஒதுங்குமளவிற்கு இன்றைய ஆன்மிக நிலை பலரை உள்ளாக்கியிருப்பது மிகவும் யோசிக்க வேண்டிய விசயம். அப்படி என்னதான் இந்த ஆன்மிகம் செய்தது, செய்து கொண்டிருக்கிறது?

நல்லதை வேண்டாம் என சொல்லுபவர் உண்டோ உலகில்? தமக்கேனும் இல்லாது போனாலும் பிறருக்கேனும் நன்மை வாய்த்திட வேண்டும் என வாழ்ந்த/வாழும் புண்ணியர்கள் நிறைந்த, நிறைந்திருக்கும் பூமியல்லவா இது. இதைத்தான் ஆன்மிகம் செய்ய வந்தது, இன்னும் சிலரால் செய்து கொண்டிருக்கிறது.

ஒரு சின்ன கதை உண்டு. நீங்கள் அனைவரும் அறிந்திருக்கவும் கூடும். ஒரு ஐந்து வயது சிறுவன் சாய்வு நாற்காலியில் எப்பொழுதும் சென்று அமர்ந்திருப்பான். சாப்பிடுவது, உறங்குவது, உட்கார்வது என இதுதான் அவனது வேலை. எப்பொழுதும் ஓய்வு தான். அவனை அவனது தாத்தா

''ஏன் இப்படி எப்பப் பார்த்தாலும் இப்படி இருக்க'' எனக் கேட்பார்.

அதற்கு அவன்,

''என்ன செய்யனும் தாத்தா'' என்பான்.

''நீ படிக்கனும், வேலைப் பார்க்கனும், கல்யாணம் பண்ணனும், குழந்தைக பெறனும், என்னைப் போல தாத்தா ஆகனும், அப்புறம் இப்படி உட்காரனும்'' என்பார்.

''இதெல்லாம் செஞ்சிட்டு உட்காருரதுக்கு, இப்ப இருந்தே உட்கார்ந்தா என்ன தப்பா தாத்தா'' என்பான் அந்த சிறுவன்.

தாத்தா விழிப்பார். இந்த தாத்தா நிலையில் நாம் இருந்தால் என்ன செய்வோம், அது அவரவர் விருப்பம்.

இதுதான் வாழ்க்கை. ஒன்றை பற்றிக் கொண்டு செய்தலும் சரி, பற்றிக்கொள்ளாமல் இருத்தலும் சரி, முடிவில் அத்தனை வித்தியாசம் ஒன்றும் இருக்கப்போவதில்லை. பேசாமல் சாதித்த இரமணரும் சரி, பேசி சாதித்த விவேகாநந்தரும் சரி! ஒவ்வொருவருக்கு ஒரு திசை, ஒவ்வொருவருக்கு ஒரு அனுபவம்.

ஆன்மிகத்திற்கு விளக்கம் அவசியமில்லை எனும் கருத்து எனக்குண்டு. ஆன்மிகம் ஒரு உணர்வு. அந்த உணர்வினை வெளிக்காட்டுதலின் பொருட்டு எழுந்ததே அத்தனை வேதங்களும், சத்தியங்களும், தர்மங்களும், நெறிக்கலைகளும், பாடல்களும், புராணங்களும் என்ற கருத்தும் எனக்கு உண்டு. என்னவொரு பிரச்சினை எழுந்தது எனில் எழுதியவர் தன்னை முன்னிலைப்படுத்தியதின் விளைவு பிறர் அந்த எழுத்துக்களை கொஞ்சம் சந்தேக விழிகளுடன் பார்க்கத் தொடங்கினர் எனலாம்.

ஆன்மிகத்தைப் பொதுப்படுத்தி எழுதியவர் எவரேனும் உண்டு எனில் உண்டு, மெளனத்தை மொழியாக்கிக் கொண்ட ஞானிகள். அந்த மெளன மொழியை கற்றுக்கொண்டவர்களும் உண்டு. ஆன்மிகம் பற்றி எழுதியதை, எழுதப்பட்ட விதத்தை கண்டு மெய்மறந்து ரசிப்பேன், பாடப்பட்ட பாடல் எல்லாம் படிக்கும்போது எத்தனை திறமை என உள்ளூர வியந்து கொள்வேன். அது எந்த அடையாளம் கொண்ட எழுத்தாக இருந்தாலும் சரி, எந்த ஒரு இலக்கை சுட்டுவதாக இருந்தாலும் சரி, ரசிப்பதும், விளங்கிக் கொள்வதும் தான் எனக்கு வேலை. இங்கேயும் என்னை முன்னிலைப்படுத்துவதன் காரணம் ஒவ்வொருவருக்கும் ஒன்றொன்றாக இருக்கலாம் என்பதேயாகும்.

மேலும் ஒன்றை விலக்கிட ஓராயிரம் காரணங்கள் இருந்தாலும், ஒன்றைச் சேர்த்துக் கொள்ள ஒரு காரணம் போதும், ஆனால் அந்த காரணமும் ஆன்மீகத்தில் இல்லாதிருப்பது போன்று ஆகிவருகிறது இன்றைய காலகட்ட சூழல்கள்.

எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது, என்னிடம் எவரேனும் எதையும் பிடித்திருக்கிறதா? பிடிக்கவில்லையா? எனக் கேட்டால் பிடித்திருக்கிறது அல்லது பிடிக்கவில்லை என்று மட்டுமே சொல்லிவிடுவேன். என்ன காரணம் எனக் கேட்டால் பிடித்திருக்கிறது அதனால் பிடித்திருக்கிறது, பிடிக்கவில்லை அதனால் பிடிக்கவில்லை என சொல்லி நிறுத்திவிடுவேன்.

இன்ன காரணத்துக்குத்தான் இன்னது பி்டிக்கிறது என்றும், இன்ன காரணத்துக்குத்தான் இன்னது பிடிக்காமல் போகிறது என்றும் சொல்ல மிகவும் யோசிப்பேன். காரணம் சொல்லமாட்டாயா எனக் கேட்பவர்களுக்கு என்ன பெரிய காரணம் இருந்துவிடப் போகிறது என இருந்துவிடுவேன். இப்படித்தான் ஆன்மீகத்தினை அணுகத் தொடங்கினேன். ஆன்மீகத்திற்கு எந்த ஒரு காரணமும் அவசியமில்லை என்றே உறுதி கொண்டேன்.

ஒரு காரணமும் சொல்ல மாட்டேன்கிறாயே என என்னைக் கேட்டவர்கள் உண்டு. ஆனால் காரணம் சொல்லிப் பழகிய காலமும் சரி, விசயங்களும் சரி, மனதில் பெரும் சஞ்சலத்தை ஏற்படுத்தத் தொடங்கின. காரண காரியங்கள் விருப்பு வெறுப்புகளை உள்ளடக்கி வருவன. ஆன்மீகம் என்றாலே அமைதி என்ற கொள்கையை எனக்குள் வைத்துக் கொண்டு நான் எழுதுவதும் சரி, பேசுவதும் சரி, வாழும் முறையும் சரி பெரும் முரண்பாடாகத்தான் இருக்கின்றது. இந்த முரண்பாடு ஒரு காரணமோ? ஆன்மீகம் என்றாலே அமைதி என்பது ஒரு காரணமோ? காரணம் சொல்லாமல் வாழ முயல்வதே பெரிய விசயம் தான், ஆனால் காரணமின்றி காரியங்கள் இல்லை எனப் பழகிவிட்டோம் நாம்.

மேலும் நோய் இல்லாத உடம்பைத்தான் இறைவனிடம் ஒப்புவிக்க வேண்டும் எனவும் ஆன்மீகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆதிகாலத்தில் நோய் என்பது பாவ புண்ணியங்களின் அடிப்படையில் வந்த விசயம் எனக் கருதப்பட்டு அவ்வாறே இன்றும் சில இடங்களில் சொல்லப்பட்டு வருகிறது என எண்ணுகிறேன். நோய் வந்தால் சமூகத்திலிருந்தே அவர்களை ஒதுக்கி வைத்தார்கள், இன்று கூட சில தொற்று நோய் உடையவர்களை தனித்து இருக்கச் சொல்வதுண்டு. அதேவேளையில் ஏன் நோய் வருகிறது என இவர்களுக்கு எல்லாம் அறிவுறுத்தி அதை தீர்க்க வந்தார் ஒருவர், அவரையும் அன்றைய சமூகம் விட்டுவைக்கவில்லை. அவரை கேலி பண்ணியது, உதாசீனம் செய்தது. ஆனால் அவர் போராடி வெற்றி பெற்று மருந்தினை கண்டுபிடித்தார். ஹும், நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க படும்பாடு இருக்கிறதே, இது எந்த பாவ புண்ணியத்தில் சேரும் எனத் தெரியவில்லை.

'நோய் கொல்லும் மருந்தினை உட்கொண்டு
மெய் வளர்க்கும் நிலையது கொண்டபின்
மெய்ப்பொருள் உன்னை மனமேற்றி வைத்திட
உன்மனம் சம்மதம் தந்தாய் இறைவா'

எனும் கவிதையை எழுதியது உண்டு. ஆன்மிகம் என்றாலே கசக்கும் பொருளாகிப் போனது பலருக்கு. தீண்டத்தகாத விசயமாக ஆன்மிகம் கருதப்பட்டு வருகிறது. இந்த நிலையை ஏற்படுத்த உதவிய பல சடங்குகள் சம்பிராதயங்கள் ஆன்மிகத்துக்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாதவை. ஆன்மிகத்தை இந்த சடங்குகள் சம்பிராதயங்களிலிருந்து விலக்கிப் பார்த்தால் அது ஒரு அருட்பெருஞ் சுவையாகத் தெரியும். ஆன்மிகத்திலிருந்து விசயங்களைக் கற்றுத் தெளிதல் எளிது. வேறுபாட்டினைப் பார்த்தால் எப்படி ஒற்றுமை கண்ணுக்குத் தெரியும்? மதம், கடவுள்கள் எல்லாம் ஆன்மிகத்துக்குத் தேவையில்லாதவை என்பதை அறிந்து கொள்வோம்.

இப்பொழுது சிந்தியுங்கள், ஆன்மிகம் என்றால் ஒதுங்கிப் போவோரா நீங்கள்?

ஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 2

இந்த அணுக்கள் மிகவும் விசித்திரமானவை. இவைகளை நம்மால் ஆக்கவோ அழிக்கவோ முடியாது. இனி வரும் காலங்களில் மாற்றம் எற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அறிந்து கொள்ளத்தானே அறிவியல். இத்தோடு முடிந்துவிட்டது என தூக்கிப் போடுவதற்கு எதற்கு அறிவியல்?

புரோட்டான் எலக்ட்ரான் நியூட்ரான் இவை ஒரு அணுவில் இருக்கும் துகள்கள் என அறிந்து இருப்பீர்கள். ஹைட்ரஜனுக்கு மட்டும் எதற்கு ஒரு புரோட்டான் ஒரு எலக்ட்ரான்? அதிசயம் தான், ஒரு தொடக்கம் இருக்க வேண்டுமே.

ஒரு அணுவினை எடுத்துக் கொண்டால் அந்த அணுவுக்கு என ஒரு கருவறை (neucleus) இருக்கும், அந்த கருவறையில் புரோட்டானும் நியூட்ரானும் இருக்கும், இதன் மொத்த கூட்டுத்தொகையே அந்த அணுவின் நிறை(mass number) ஆகும். நிறைக்கும் (mass) எடைக்கும் (weight) வித்தியாசம் இருக்கிறது அது பற்றி பின்னர் பார்க்கலாம். மேலும் பல துகள்கள் பின்னர் அறியப்பட்டன.

இப்பொழுதுதான் நமக்கு கற்பனை தேவைப்படுகிறது. இந்த கருவறையை சுற்றி எலக்ட்ரான்கள் சுற்றி சுற்றி வருகின்றன. இதில் ஒரு அதிசயம் என்னவென்றால் இப்படி சுற்றி வரும் எலெக்ட்ரான்கள் நாளடைவில் கருவறைக்குள் விழ வேண்டும் ஆனால் விழுவதில்லை, நமது கோள்களைப் போன்று என வைத்துக்கொள்வோம்.

கற்பனை பண்ண தயார் ஆகுங்கள். எத்தனை புரோட்டான்கள் இருக்கிறதோ அது பொருத்தே அந்த அணுவுக்கு எண்கள் (atomic number) தரப்படும். எண் ஜோதிடம் பற்றியெல்லாம் நினைக்க வேண்டாம். அதே வேளையில் எத்தனை புரோட்டான்கள் இருக்கிறதோ அத்தனை எலெக்ட்ரான்கள் வெளியில் சுற்றிக் கொண்டு இருக்கும். ஒருவனுக்கு ஒருத்தி என்ற தத்துவம் உணரப்பட்டது இங்குதான். சில மாற்றங்கள் நிகழும் அது குறித்து ஐசோடோப்களில் குறிப்பிடுகிறேன்.

சரி எப்படி இந்த எலெக்ட்ரான்கள் சுற்றி வருகின்றன என பார்த்தால் அவைகளுக்கு ஆர்பிட்டால்கள் (orbitals) என பெயரிடப்பட்டு அழைக்கப்படுகின்றன. அதாவது ஒரு அணுவினை சுற்றி ஏழு சுற்றும் அடுக்கு மாடிகள் உள்ளன. அவை முறையே கே (k) எல் (L) எம் (M) என் (N) ஓ (O) பி (P) கியூ (Q) என அணுவின் கருவறையில் இருந்து தொடங்கும். ஒவ்வொரு மாடியிலும் குறிப்பிட்ட எண்ணிக்கையான விருந்தாளிகளே அதாவது எலக்ட்ரான்கள் தங்க முடியும். சில நேரங்களில் எலக்ட்ரான்கள் மாடியில் உள்ள அறையை மாற்றம் செய்து கொள்ளவோ மாடியையே மாற்றம் செய்து கொள்ளவோ வேண்டி வரும். அதனை பின்னர் விளக்கமாக பார்ப்போம்.
ஒவ்வொரு மாடியில் எவ்வளவு எலக்ட்ரான்கள் தங்கலாம் என பார்ப்போம்.

K இந்த மாடியில் ஒரே ஒரு அறை அது s. அதில் இரண்டு பேர் தங்கலாம். ஒரு அறைக்கு இருவர் மட்டும் தான்.

L இந்த மாடியில் இரன்டு அறை. s, p எனப்படும். p அறை சற்று பெரிய அறை அதில் மூன்ரு பகுதிகள் பிரிக்கப்பட்டு அங்கு 6 எலெக்ட்ரான்களும் s அறையில் 2 எலெக்ட்ரான்களும் ஆக மொத்தம் 8 எலெக்ட்ரான்கள் தங்கலாம்.

M மாடியில் மூன்று அறைகள். s, p, d. s அறை இரன்டு. p அறை 6. d அறையும் p அறை போன்று ஐந்தாகப் பிரிக்கப்பட்டு இருக்கும் அதில் 10 எலெக்ட்ரான்கள் தங்கலாம். ஆக மொத்தம் 18.

N, இதில் நான்கு அறைகள். s,p,d, f என அழைக்கப்படும். மேற்சொன்னபடி s=2, p=6 , d=10 f ஏழு பகுதிகளாய் பிரிக்கப்பட்டு 14 எலெக்ட்ரான்கள் ஆக மொத்தம் 32

O இதில் ஐந்து அறைகள் s,p,d,f,g என அழைக்கப்படும். g க்கு 18 ஆக 50.

P இதில் ஆறு அறைகள் s,p,d,f,g,h என அழைக்கப்படும் hக்கு 22 ஆக 72.

Q மாடியில் ஏழு அறைகள் s,p,d,f,g,h,i என அழைக்கப்படும் iக்கு 26 ஆக 98.

(தொடரும்)

Monday 17 August 2009

உயிரது உணர்வற்றது

செல்கள் பொசுக்குவாய்
தசை எரிப்பாய்
உறுப்புகள் உருக்குவாய்
நெருப்பே நீ
உயிர் எரித்ததுண்டா?

உள்ளும் வெளியுமாய் செல்வாய்
ஓரிடத்தில் ஒழுங்காய் நில்லாய்
உலகதில் தொடாத பாகமில்லை
காற்றே நீ
உயிரைத் தீண்டியதுண்டா?

வாயுவாய் மாறுவாய்
பனிப்பாறையுமாக ஆகுவாய்
வாழ்வது உன்னில் தொடக்கமாம்
நீரே நீ
உயிரை உருவாக்கியதுண்டா?

எட்டாத தொலைவுக்கு உன் பாதை
எட்டும் தொலைக்கு உன் பார்வை
தொடக்கமுமின்றி முடிவுமின்றி
பால்வெளி வீதியே நீ
உயிரை உள்ளடக்குவாயா?

உணர்வில் அறிந்த உணர்வில்
உட்படாத அரியதுவாம்
பெரியதாகியும் சிறியதாகியும்
உயிரே நீ
உயிரில்லை என உணர்வாயா?