Friday 31 July 2009

எதுங்க மகிழ்ச்சியான வாழ்க்கை? - 2

எப்படி மகிழ்ச்சியாய் இருப்பது எனும் சிந்தனையிலேயே பலரின் பொழுதுகள் கவலையாகவேப் போகிறது. இணையதளங்களில், வலைப்பூக்களில் எல்லாம் பார்த்தீர்களேயானால் மகிழ்ச்சியாய் இருக்க முப்பது வழிகள் என வரிசையாகச் சொல்லப்பட்டு இருக்கும். அதைப் படிப்பவர்கள் மனதில் 'அடப்பாவிகளா, இத்தனையும் எப்படி ஞாபகம் வைச்சிட்டு செய்றது' என்கிற கவலைப் பிறக்கும்.

நாம் என வரும்போதே நமது உற்றார், உறவினர்கள், நண்பர்கள், பகைவர்கள், நம் மண், நம் தேசம், எதிர் மண், எதிர் தேசம் என எல்லாமே அடங்கிவிடும். ஒரு விசயம் நடப்பது குறித்து 'எனக்கென்ன வந்துவிட்டது' என வாய் சொல்லும்; ஆனால் மனம் அதனையேச் சுற்றிக்கொண்டு வரும்.

'கவலை இல்லாத மனிதன்' எனும் திரைப்படத்தை எடுத்துவிட்டு, அந்த திரைப்படம் படுதோல்வி அடைந்துவிட்டதால் கண்ணதாசன் அந்த கவலையிலிருந்து மீள பலநாட்கள் ஆகிவிட்டது எனக் குறிப்பிட்டு இருந்ததைப் படித்தபோது கவலையில்லாமல் இருக்க வேண்டும் எனும் முனைப்பே பலருக்கு கவலையைத் தந்துவிடுகிறது போலத் தெரிகிறது.

ஒருவரிடம் சென்று உங்களுக்கு வியாதி இருக்கிறதா எனக் கேட்டார் ஒரு நபர். அதற்கு ஆம் எனக்கு வியாதி இருக்கிறது எனச் சிரித்துக் கொண்டேச் சொன்னார் அவர். என்னது வியாதி இருக்கிறது எனச் சிரித்துக் கொண்டேச் சொல்கிறீர்கள், வியாதி வந்தால் விரைவில் செத்துப் போவீர்களே என கவலையுடன் அந்த நபர் சொல்ல, வியாதியில்லாதவனும்தான் விரைவாகச் செத்துப் போகிறான் எனச் சிரித்தார் அவர்.

பிறக்கும்போதே எப்படியும் ஒருநாளேனும் ஒருநாள் இறந்துவிடுவோம் என்கிற அடிப்படை உணர்வு கூட இல்லாமல் எப்படி மனிதர்களால் வாழ முடிகிறது. அடிப்படை உணர்வும் உண்டு, அதற்கான கவலையும் உண்டு.

தங்களது வாழ்க்கையினை ஒரு தினமேனும் வெறுக்காத மனிதர்கள் என இந்த உலகில் இருக்கவே இயலாது. 'என்னது இப்படியொரு அற்பத்தனமான விசயத்துக்காக உயிரைப் போக்கிட்டார்' என அசாத்தியமாகப் பேசும் மனிதர்கள் அதே அற்பத்தனமான விசயத்துக்காகக் கவலைப்படாமல் இருப்பதில்லை.

'வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களே என்னிடம் வாருங்கள் இளைப்பாறுதல் தருவேன்' என்கிற வாசகத்தைப் பார்க்கும்போதெல்லாம், நமது துன்பத்திற்கு நாமே காரணம் என்கிற எண்ணம் ஏன் மனிதர்களுக்கு இல்லாமல் போனது, பிறிதொருவர் தீர்த்து வைப்பார் என்கிற எதிர்பார்ப்பு ஏன் ஏற்பட்டது. ''சாய்வதற்கு ஒரு தோள்/தோழன்/தோழி வேண்டும்'' என்கிற மனப்பக்குவம் உடையவர்களாகவே மனிதர்கள் வாழ்க்கையை வாழத் தொடங்கினார்கள். அங்கேதான் மகிழ்ச்சியைத் தொலைக்கவும் செய்தார்கள்.

Thursday 30 July 2009

இனிய உறவுகள்

'அம்மா ! அம்மா...........'
அழுகையுடன் ஓடி வந்தான் பத்து வயது சிறுவன் அன்பு.

அழுகையை கண்ட அம்மா
'என்ன......... என்ன ஆச்சு '
என அடுப்பங்களையில் இருந்து ஓடி வந்தாள்.

'என்னோட காரை எடுத்துட்டு சீராம் தர மாட்றான்மா'

'ஓ.......
உனக்கும் அவனுக்கும் மூணு நாளா இதே வேளையாப் போச்சு.
இதுக்கா அழுவாங்க
இரு வாங்கி தரேன்'

'காரை தாப்பா'
அம்மா எட்டு வயது சீராமிடம் கேட்க
தர மனம் இல்லாவிட்டாலும்
புரிந்து கொண்டு அவனும் தந்துவிட்டான்.

காரை பெற்றுக் கொண்ட சந்தோசத்தில் அன்புவின் அழுகை மறந்தே போனது.

சீராம் வெகு நேரமாக ஏக்கத்தோடு அன்புவின் காரை பார்த்துக் கொண்டே இருந்தான்.

ஆனாலும் இந்த முறை சிறீராமுக்கு அன்புவின் காரை பறிக்கத் தோணவில்லை.

மாறாக இம்முறை அன்புவிடம் சிறீராம்
'நான் கொஞ்சம் விளையாடிட்டு தரட்டா'
என்று கேட்டான்.

'இந்தா
அஞ்சு நிமிசத்தில தந்துரனும்'

சரியென வாங்கி விளையாடிய அன்பு
ஐந்து நிமிடம் முன்னராகவே சிறீராமின் காரை திருப்பிக் கொடுத்து விட்டு
வீட்டுக்கு போவதாக கூறி வந்துவிட்டான்.

'அம்மா எதுக்குமா சீராம் என் காரையே பறிக்கிறான்?'

அன்புவின் மனதுக்குள் எழுந்த வினாவுக்கு
அவன் அம்மாவிடம் விடை தேடினான்.

'அவனுக்கு அவங்க வீட்டுல கார் வாங்கி தர காசு இல்லப்பா'

அன்பு மெளனமாக திரும்பி சிறீராம் சென்ற திசையை நோக்கி பார்வையை செலுத்தினான்.

அவன் பார்வையில் சிறீராம் தென்படவில்லை.

மனதுக்குள் எதையோ நினைத்தவனாய்
அவன் அறைக்குள் நுழைந்தான்.

தனது வீட்டில் இருந்த தேவைக்கு அதிகமான நல்ல கார்கள் எல்லாம் அவன் கண்ணில் பட்டது.

தனது தேவைக்கு அதிகமான கார்களையும் , கூடவே தான் படித்த மூன்றாம் வகுப்பு புத்தகங்களையும் கையிலெடுத்துக் கொண்டு வெளியேறினான்.

'எங்க கடையில போடப் போறியா'

'இல்லம்மா சீராமுக்கு தரப் போறேன்'
என்றவாறு சிறீராமின் குடிசையை நோக்கி நடந்தான்.

அன்புவின் அம்மாவின் மனது
பேருக்கேத்த புள்ள என்று பெருமைப்பட்டது.

அவளும் அவனோடு சேர்ந்தே நடந்தாள்.
அன்பு அம்மாவோடு சிறீராமை தேடிச் செல்லும் போது
சீராம் தன் குடிசை வீட்டின் முற்றத்தில் அம்மாவுடன் சேர்ந்து முற்றத்து மணலில் வீடு கட்டி விளையாடிக் கொண்டு இருந்தான்.

அன்பு
அம்மாவின் உதவியுடன் புத்தகங்கள் கார்கள் எல்லாம் கொண்டு வந்து சீராமிடம் தந்தான்.

அவற்றில் புத்தகங்களை மட்டும் எடுத்துக் கொண்டான் சீராம்.

'கார் வேணாம்?'

ஊகும்!
வேண்டாம் என்று தலையாட்டினான்.

வீட்டில் இருந்த மோர் கொண்டு வந்து அவர்களுக்கு தந்தார் சீராம் அம்மா.

அம்மாவுடன் திரும்பும் போது தான் கொண்டு சென்ற கார்களுடனே திரும்பினான் அன்பு.

மறுநாள் இருவரும் சேர்ந்தே விளையாடினார்கள்.

இம்முறை சீராமுக்கும் சேர்த்து கார் எடுத்துச் சென்றான் அன்பு.

முற்றும்

எதுங்க மகிழ்ச்சியான வாழ்க்கை? - 1

மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது அவரவர் மகிழ்ச்சியாக இருப்பது.

நான் என்னை மகிழ்ச்சியாக வைத்திருப்பதற்குக் காரணம் பிறரது கஷ்டங்களை முன்னிறுத்த மாட்டேன். மேலும் அடுத்தவர் கஷ்டங்கள் குறித்து அநாவசியமாக கஷ்டப்பட்டுக் கொண்டும் இருக்கமாட்டேன். தீர்க்க முடிந்தால் தீர்ப்பேன், இல்லையெனில் எனது மகிழ்ச்சியைத் தக்க வைத்துக் கொள்வேன்.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடுபவன் இல்லை நான், வாடிய பயிரைக் கண்டபோது தண்ணீர் ஊற்றி மகிழ்ந்திருப்பவனே நான்.

மகிழ்ச்சியாய் இருப்பது என்பது மனிதர்களுக்கு இயலாத காரியமாக இருக்கிறது. ஏதாவது ஒரு விசயத்தை எடுத்துக் கொண்டு அதைப் பற்றிய கவலையில் மனிதர்கள் தங்கள் பொழுதுகளை இழந்துவிடுகிறார்கள்.

நகைச்சுவையாகச் சொல்வார்கள், ''பிரச்சினைகளே எனக்கு இல்லையே, என்ன வாழ்க்கை இது'' என கவலைப்பட்டுக் கொண்டிருந்தாராம் ஒருவர்.

மகிழ்ச்சியாக இருக்கனும்னா சன்னியாசம் போ என குடும்பஸ்தர்களைச் சொல்வது போல, மகிழ்ச்சியாக இருக்கனும்னா குடும்பஸ்தனா போ என சன்னியாசிகளும் சொல்லிக்கொண்டுதான் இருப்பார்கள். அக்கரை இக்கரை எனும் அக்கறை அனைத்து மனிதர்களுக்கும் உண்டு.

மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது இதுதான் என சில விசயங்களை வரையறுப்பது என்பது தவறாகவே முடியும். எதிலும் ஆரம்பத்தைப் பார்க்காதே முடிவைப் பார் என வட்டார மொழி ஒன்று வழக்கத்தில் உண்டு.