Sunday, 26 September 2010

ரஜினியின் எந்திரனும் அமெரிக்காவின் நாசாவும்

ரஜினியின் எந்திரனா?, சங்கரின் எந்திரனா? எனும் கேள்விக்கு  சங்கரின் எந்திரன் என  ரஜினி பதில் சொல்லிவிட்டார். ஆனால் இது ரஜினியின் எந்திரன் என சங்கருக்கும் தெரியும், இந்த படத்தை தயாரித்த கலாநிதி மாறனுக்கும் தெரியும். ரஜினி ஒரு மந்திர சொல் என்பதான மாயை எப்போதும் உண்டு.

இந்த எந்திரன் என்ன கதை? வைரமுத்து தனது பங்கிற்கு சொல்லிவிட்டார். 'இது ஒரு முக்கோண காதல் கதை'. ரஜினியின் படத்திற்கு எதற்கு கதை? யார் ரஜினியின் படத்திற்கு கதை தேடி சென்று இருக்கிறார்கள்? ரஜினி நடிக்கிறார் என்பதற்காக மட்டுமே செல்பவர்கள் அதிகம்.

எந்திரனில் அழிவில் இருந்து மீட்க எந்திரனாக வலம் வரும் ரஜினி, அறிவியலாளாரக வலம் வரும் ரஜினி. தான் உருவாக்கிய எந்திரனிடமே தனது காதலியை பறிகொடுத்துவிடும் நிலையில், எதிர்க்கும் நிலையில்  ரஜினி. மீதியை வெள்ளித்திரையில் காண்க.

ரஜினியின் திரைப்பட உலக வரலாற்றில் தோல்விப்படங்கள் பல உண்டு. ஆனால் அதில் குறிப்பிடப்பட வேண்டியவை ஸ்ரீராகவேந்திரர் மற்றும் பாபா. ரஜினிக்கு ஒரு உண்மை உரைத்து இருக்க வேண்டும். ஆன்மிகத்தை வியாபாராமாக்கும் நோக்கத்தில் எடுக்கப்பட்டவைகள் அந்த படங்கள்.

ஆன்மிகத்திற்கு எதற்கு விளம்பரம்? ஊரெல்லாம் பாபாஜி, மாதாஜி. உள்ளூர வெந்து வேகிறார் விவசாயி.

எந்திரன், மனிதன் போல பல மொழிகள் தெரிந்து வைத்து கொண்டு, மனிதன் போலவே செயல்படும் ஒரு பாத்திரம். இதை பல கதைகளில் எழுத்தாளர்கள் சித்தரித்து இருக்கிறார்கள்.

அதைப்போலவே நாசாவில் ஒரு மனிதனை போல செயல்படும் வண்ணம் ரோபோ ஒன்றை உருவாக்கி வருகிறார்கள். பத்து மொழிகள் தெரியும் அந்த ரோபோவிற்கு. அந்த ரோபோவின் நோக்கம் மனிதர்களை இடப்பெயர்ச்சி செய்வதல்ல. மனிதர்களுக்கு உதவியாய் வான்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட வைப்பது.

ரஜினியின் எந்திரனா, நாசாவின் எந்திரனா எனும்போது நாசாவின் எந்திரன் மனித குலத்திற்கு பெரும் உதவியாக இருக்கபோவது மட்டுமே உண்மை.

Friday, 24 September 2010

நுனிப்புல் பாகம் 2 (16)

16. பெருமாள் கடிதம்

திருமால் சில தினங்களாக வாசன் பற்றிய நினைவில் இருந்தார். குழந்தைகளைப் பார்க்கும்போதும் வாசன் வந்து போனான். ஆனால் இதுகுறித்து எதுவும் பேசாது இருந்தவர் செவ்வாய் மாலை தனது மனைவியிடம் தான் திருவில்லிபுத்தூர் சென்று வருவதாக கூறினார். ஆனால் அவரது மனைவியோ வேண்டாம் என்பதுபோல் பார்த்தார். திருமால் பேசினார்.

''ஒரு முக்கியமான வேலை இருக்கு, நான் போய்ட்டு கூடிய சீக்கிரம் வந்துருவேன், இதுதான் சமயம், நீயும் பிள்ளைகளும் ஆஸ்ரமத்திலேயே தங்கிக்கோங்க''

''என்ன விசயமா திருவில்லிபுத்தூருக்குப் போறீங்க, அதுவும் திடீருனு''

''வாசன்''

''திருமலைக்குப் போகப் போறீங்க, எவ்வளவு தடுத்தாலும் போய்த்தான் தீருவேனு அடம்பிடிக்கிறீங்க, இப்போ வாசன் அங்கப் போகப்போறானா, போய்ட்டு வாங்க''

''பெருமால் தாத்தா இப்போ உயிரோடில்லை''

திருமால் சொன்னதை கேட்டதும் தனது கையில் இருந்த பாத்திரத்தை தவறவிட்டார் யோகலட்சுமி.

''எப்ப நடந்தது?''

''பாரதியும் கிருத்திகாவும் வந்தப்ப சொன்னாங்க, உடனே சொல்லத் தோணலை''

நீங்க அன்னைக்கேப் பார்க்க போயிருந்திருக்கனும், நான் தான் உங்களைத் தடுத்திட்டேன்''

''ம்ம் இதை கொஞ்சமும் எதிர்பார்க்கலை, இப்போ நான் போயிட்டு வந்துருரேன்''

''சாத்திரம்பட்டிக்கும் போகப் போறீங்களா?''

''இல்லை, நாம் எல்லாம் சேர்ந்து ஒருநாள் போய்ட்டு வருவோம், குளத்தூர் போய்ட்டு போகலாமானு ஒரு எண்ணம் இருக்கு''

சிறிது நேரத்தில் யோகலட்சுமியையும், குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு திருமால் அவரது ஆஸ்ரமம் நோக்கி நடந்தார். ஆஸ்ரமம்தனை அடைந்ததும் அங்கிருந்த முக்கிய பொறுப்பாளரிடம் விபரம் கூறிவிட்டு பாதுகாப்புடன் செயல்புரியுமாறு கூறினார்.

மிகப்பெரிய பரப்பளவில் அந்த ஆஸ்ரமம் அமைந்து இருந்தது. குழந்தைகள் தங்குவதற்கான அழகான கட்டிடமும், பாடசாலையும் சுற்றியிருந்த நிலப்பரப்பில் விவசாயம் என ஒரு சிறிய ஊர் போல இருந்தது. நிலப்பரப்பைச் சுற்றி பெரும் சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டு இருந்தது. திருமாலைக் கண்டதும் குழந்தைகள் ஓடி வந்தனர். ஒரு சிறுவன் கேட்டான்.

''பிரபோ, முக்காலம் உணரும் கலைதனை எப்பொழுது ஆரம்பிக்க இருக்கிறீர்கள், நேற்று கேட்டேன் எந்த பதிலும் தராமல் புன்னகைத்தீர்கள்''

''யார் இது குறித்து இத்தனை ஆவலை உன்னில் தூண்டியது?''

''உடலுக்குள் உயிர் புகுமெனில், உயிர் வளருமெனில், உடல்விட்டு உயிர் போகுமெனில் அக்கலையை அறியத் தாருங்கள்''

மற்ற சிறுவர் சிறுமியர்களும் ஆமாம் என்பது போல் பார்த்தனர். திருமால் தான் அவசரமாக வெளியூர் செல்வதால் திரும்பி வந்தவுடன் இதுகுறித்து கலந்துரையாடுவதாக கூறினார். அனைவரும் சம்மதம் சொன்னார்கள். யோகலட்சுமி ஆஸ்ரமத்தில் இருந்து சில வரைபடங்களை எடுத்து வந்தார். அந்த வரைபடங்கள் அங்கிருந்த சிறுவர் சிறுமியர்களால் வரையப்பட்டது. சில படங்களைக் காட்டி ஆண்டாள் கோவிலில் சேர்க்குமாறு கேட்டுக்கொண்டார். திருமாலும் சரியென சில படங்கள் எடுத்துக்கொண்டார்.

பேருந்து நிலையம் வந்தடைந்தார். மதுரையை மறுநாள் புதன் காலையன்று வந்தடைந்தார். மதுரையில் காலைக் குளியல் முடித்துவிட்டு நேராக மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்றார். மீனாட்சி அம்மனை வணங்கிவிட்டு கோவில் பிரகாரம் சுற்றி வந்தபோது மாதவி அவர் முன்னர் எதிர்பட்டாள். மாதவியை திருமால் அழைத்தார்.

''குளத்தூர் இங்கே இருந்து எவ்வளவு நேரம் ஆகும், எப்படி போறதுனு கொஞ்சம் சொல்ல முடியுமா''

''எந்த குளத்தூர்?''

''நான் விசாரிச்சவரைக்கும் எல்லாரும் எந்த குளத்தூர்னுதான் கேட்கறாங்க, குளத்தூருக்கு எதுக்கு முகவரினு நினைச்சி வந்துட்டேன்''

''பக்கத்துல பெரிய ஊர் ஏதாவது தெரிஞ்சா சொல்லுங்க, சரியா சொல்வாங்க. என்னோட ஊர் குளத்தூர் தான், நாணல்கோட்டை பக்கத்துல சோலையரசபுரம் இருக்கு, அங்க இருக்கிற குளத்தூர்தான் என்னோட ஊர் அந்த ஊரை கேட்கறீங்களா''

''ஆமா அதே குளத்தூர் தான், உங்களுக்கு வாசன் அப்படிங்கிறவரைத் தெரியுமா''

மாதவி திருமால் அவர்களைப் பார்த்தாள். மனதுக்குள் பல கேள்விகள் எழுந்தது. அந்த கேள்விகளை எல்லாம் ஓரங்கட்டினாள். தெரியாத ஒருவரிடம் பேசுவதாய் அவள் மனதுக்குப்படவில்லை. பரிச்சயமானவர் போலவே இருப்பது போல் இருந்தது. சற்றும் யோசிக்கவில்லை

''தெரியும்''

''பெருமாள்''

''உயிரோட இல்லை, நீங்க யாரு? என்ன விபரமா இதையெல்லாம் கேட்கறீங்க''

திருமால் எந்த பதிலும் சொல்லாமல் தான் கிழக்கு நடைபாதை வழியில் சென்று காத்து இருப்பதாகவும் அம்மனை தரிசித்துவிட்டு வருமாறு மாதவியிடம் கூறிவிட்டு பின்னர் விபரமாக பேசுவதாக கூறிச் சென்றார். தான் இன்னும் அம்மனை தரிசிக்கவில்லை என இவருக்குத் தான் சொல்லவே இல்லையே என மனதில் மாதவி நினைத்தாள்.

மாதவி கோவிலில் சென்று வழிபட்டுவிட்டு கிழக்கு நடைபாதைக்கு வந்தாள். திருமால் அங்கு நின்று கொண்டிருந்தார். மாதவி திருமாலிடம் தான் கல்லூரி செல்வதற்கு நேரம் ஆவதால் விரைவாக கூறும்படி கேட்டுக்கொண்டாள். தனக்கும் நேரம் ஆகிறது என சுருக்கமாக கிருத்திகா, பாரதி பற்றி கூறினார் திருமால்.

''மாமா இன்னைக்கு இந்நேரம் திருவில்லிபுத்தூர் கிளம்பிப் போய்ட்டு இருப்பார், குளத்தூர் வர நாட்கள் ஆகும்'

''ம்ம் திருவில்லிபுத்தூருல எங்க தங்குவாரு, முகவரி இருக்கா, குளத்தூர் முகவரி மாதிரி தேடமுடியாது''

மாதவி நேரமாகிறது என பாவனை காட்டியவள் திருமலை முகவரியைக் கூறினாள். திருமால் சிரித்தார். மாதவியும் சிரித்தாள். விஷ்ணுப்பிரியன் பற்றி திருமால் குறிப்பிட்டார். மாதவி மீண்டும் சிரித்தாள். திருமால் அவர்களை தன்னுடன் கல்லூரிவரை வருமாறு கேட்டுக்கொண்டாள். திருமால் சரியென மாதவியுடன் நடந்தார். மாதவி திருமாலிடம் எல்லா விபரங்களையும் கூறினாள். திருமால் மாதவியிடம் தனது பைகளிலிருந்து பெருமாள் எழுதிய கடிதப் பக்கங்களை எடுத்துக் கொடுத்தார். வாங்கிக்கொண்டவள் தான் நகல் எடுத்துத் தருவதாக கூறினாள். திருமால் வேண்டாம் எனவும் தன்னிடம் நகல்கள் இருப்பதாகவும் கூறினார். திருமால் தான் திரும்பி வரும்போது மீண்டும் சந்திப்பதாக கூறி விடைபெற்றுக்கொண்டார். கடிதம்தனை தனது அறையில் பத்திரப்படுத்திவிட்டு கல்லூரிக்குச் சென்றாள். மூளை பற்றிய தனது தனிப்பட்ட ஆராய்ச்சிக்கான முழு விபரங்களையும் இன்று கல்லூரி ஆசிரியை தெய்வீகம்பாளிடம் தந்து சந்தித்துப் பேச எண்ணினாள். தெய்வீகம்பாள் மாதவியைத் தேடி வந்தார்.

(தொடரும்)

Thursday, 23 September 2010

இந்தியாவும் எழுத்துலக நண்பர்களும் - 1

ஸ்காட்லாந்து பயண கட்டுரையை பின்னர் எழுதி கொள்ளலாம் என ஒதுக்கி வைத்து விட்டேன். ஸ்காட்லாந்து பயண கட்டுரையை எழுதி இருந்தால் இந்த இந்திய பயண கட்டுரைக்கு இந்த தலைப்பு அவசியம் வந்து இருக்காது.

ஆகஸ்ட் மாதம் இந்தியாவுக்கு செல்ல வேண்டுமென பிப்ரவரி மாதம் முடிவு எடுத்தாகிவிட்டது. பயணத்திற்கான தேதி எல்லாம் குறித்து பயண சீட்டு பெற்றபோது ஏப்ரல் மாதம் ஆகி இருந்தது. அப்பொழுதுதான் தொலைக்கப்பட்ட தேடல்கள் புத்தக பணியும் நடந்து கொண்டிருந்தது. நாம் சென்றபின்னர் புத்தக வெளியீட்டு வைத்து கொள்ளலாம் என நினைத்தபோது ஏனோ மனதில் முழு சம்மதம் இல்லை. புத்தகத்தினை நான் செல்லும் முன்னரே வெளியிட்டு விடலாம் என கருதி அதற்கான ஏற்பாடுகளை அகநாழிகை திரு. பொன். வாசுதேவன் அவர்கள் மூலம் செய்து கொண்டிருந்தேன்.

எப்பொழுதுமே இந்திய பயணத்தின் போது  திட்டமிட்டு எதையும் செய்வதில்லை. அங்கே இருக்கும் சூழல்படி பயணத்தை அமைத்துக் கொள்வது வழக்கம். சென்றமுறை இந்தியா சென்றபோது துபாயில் மூன்று நாட்கள் தங்கி இருந்து சென்றோம். ஆனால் இம்முறை இந்தியாவில் சில இடங்கள் செல்லலாம் என திட்டமிட்டோம். அதன்படி பெங்களூரு, கோவா, கோயமுத்தூர் என ஒரு வார பயணம் திட்டமிட்டோம். மதுரையில் இருந்து பெங்களூரு, பெங்களூருவில் இருந்து கோவா, கோவாவில் இருந்து மறுபடியும் பெங்களூரு, அதன் பின்னர் பெங்களூருவில் இருந்து கோயமுத்தூர். இதுவரை திட்டம் மிகவும் சரியாகவே செய்தேன். இதற்கான விமான பயண சீட்டு, தங்கும் அறைகள் என எல்லாம் லண்டனில் இருந்து கிளம்பும் முன்னர் தயார் செய்துவிட்டேன். கோயமுத்தூரிலிருந்து அடுத்து எங்கு செல்வது என்ன என்பதான திட்டம் எதுவும் இல்லை. அதுவும் ஊரில் இறங்கிய ஒரு வாரம், ஊரில் இருந்து கிளம்பும் முன்னர் இருக்கும் ஒரு வாரம் எந்த திட்டமும் இல்லை.

கடைசி வாரத்தில் 'தொலைக்கப்பட்ட தேடல்கள்' புத்தக விமர்சன கூட்டம் ஒன்றை மதுரையில் நடத்தலாம் என யோசனை இருந்தது. ஆனால் தேதி குறிக்கவில்லை. சென்றபின்னர் பார்த்துக் கொள்ளலாம் என நினைத்து இருந்தேன். எனது ஆசிரியர்கள், எனது நண்பர்கள், எனது புத்தகங்களை வெளியிட்ட புத்தக வெளியீட்டார்கள் என அனைவரையும் அழைத்து சிறப்பிக்க வேண்டும் என்பதில் மிகவும் ஆவலுடன் இருந்தேன்.

பயண தினம் நெருங்க நெருங்க என்றைக்குமில்லாத ஆவல் அதிகமாகவே இருந்தது. சென்னையில் தங்கி செல்ல இயலாத வண்ணம் ஊரில் சில விசேசங்கள் திட்டமிட்டு இருந்தார்கள். அதனால் சென்னையில் இருந்து நேராக விமானம் மூலம் மதுரை செல்வதாக விமான பயண சீட்டு எல்லாம் எடுத்தாகிவிட்டது. இவ்வேளையில் முத்தமிழ்மன்ற நண்பர் ஒருவருடைய நண்பரின் மகள் லண்டனுக்கு படிக்க வரவேண்டும் அதற்கு உதவி செய்ய இயலுமா என கேட்டு இருந்தார். சரி என சொல்லி இருந்தேன்.

ஆகஸ்ட் மாதம் பதின்மூன்றாம் தேதி, காலை சரியாக எட்டு மணி. லண்டன் விமான நிலையத்துக்கு செல்ல எல்லாம் எடுத்து வைத்து கொண்டிருந்தோம். கைப்பேசி ஒன்றை சமீபத்தில் மாற்றியதால் அதில் எவருடைய  எண்களையும் சேகரிக்கவில்லை. ஆதலினால்  முந்தைய கைப்பேசி ஒன்றையும் எடுத்துக்கொண்டேன். அப்பொழுது இந்தியாவில் இருந்து தொலைபேசி வந்தது. மதுரை செல்லும் விமானம் ரத்தாகிவிட்டது மதுரைக்கு செல்ல வேறு எந்த விமானத்திலும் இடம் இல்லை  என்றார்கள்.

மாற்று திட்டம் தீட்டி கோயமுத்தூர் செல்ல நினைத்தேன். விமான பயண சீட்டு அதிக விலையாக இருந்தது. இத்தனை விலை கொடுத்து எதற்கு செல்வானேன் என கோயமுத்தூரில் இருந்த எங்களது வாகனம் ஒன்றை சென்னைக்கு வருமாறு சொல்லிவிட்டு லண்டன் விமான நிலையத்தை அடைந்தோம்.

(தொடரும்)