இவர்கள் ஏனோ குழுமமாய் திரிகிறார்கள். இவர்கள் நோக்கங்கள் எவரேனும் அறிந்தது உண்டா!
இணையத்தில் எழுதுகிறார்கள். எழுதியதால் இணைகிறார்கள். வருடம் ஒருமுறையோ சிலமுறையோ கூடி கழிக்கிறார்கள், களிக்கிறார்கள்.
எழுத்து பைத்தியங்கள் இவர்கள். பைத்தியகாரத்தனத்தை பதிவு செய்தும் வைக்கிறார்கள். இவரின் பராக்கிராமங்களை படித்துப் பார்த்தது உண்டா! கட்டிங், வெட்டிங், ஒட்டிங் என்றே கண்டதையும் சொல்லித் திரிகிறார்கள், பிரிகிறார்கள்.
அறியா சங்கங்கள் வைத்ததால் நாடு பலன் பெற்றது உண்டா! ஒருவர் மீது ஒருவர் துவேசம் கொண்டதை அறியாதோர் போல் நடந்தே செல்கிறார்கள். மன அழுத்தத்தில் முகம் தனை மறைத்தே உலவுகிறார்கள், உறைகிறார்கள்.
சின்னதாய் ஆரம்பித்தே பெரியதாய் மாறப்போகும் தன்மை கண்டது உண்டா! ஈக்கள் மொய்த்தால் பண்டங்கள் கெட்டுவிடும்.எங்கும் பைத்தியங்கள் மீண்டும் மீண்டும் சங்கமித்தால் இவ்வுலகம் கெட்டுவிடும். கலாச்சார சீரழிவின் கரையை தொடுகிறார்கள், ஓடுகிறார்கள்.
பாராட்டு மழையில் நனைந்ததோ சிலர். பார்த்து ரசித்ததோ பலர். தாங்கள் செல்ல முடிந்தும் இதுபோன்ற பைத்தியகாரதனத்தில் ஈடுபட மனமின்றி விலகி நின்றோரை கண்டதுண்டா! வரமுடியவில்லையே என வருத்தம் தெரிவிக்கிறார்கள், அறிவிக்கிறார்கள்.
வெளிநாட்டில் வாழ்ந்தும் உள்நாட்டில் மனம் வைத்திருப்போர். வழி தெரியாது தவித்திருப்போர். எட்டாத கனியை கண்டு ஏக்கம் கொண்டு நிற்பார்கள் பார்த்தது உண்டா! கனவுலகம் என்றே அறிந்தே காலையும், மாலையும் பாராது அலைகிறார்கள், சிலைகளாகிறார்கள்.
இன்னும் இன்னும் எப்படியோ! எவரேனும் ஏதேனும் சொல்லித் திரிவார்கள். துவண்டு போய் தொலைந்து போய்விடுவோமோ! பிறர் பார்வையில் பைத்தியங்களாகவே இருந்துவிட்டுப் போவோம். குறைந்த பட்சம் இந்த பைத்தியங்கள் மூலமாவது இந்த உலகம் சுபிட்சம் பெறட்டும்.
விதை மெதுவாய் வளரட்டும். விருட்சம் ஆகட்டும். விழி கொண்டு பார்த்தே மகிழட்டும். விடை பெறும் தருணமிது. வியக்கும் நாள் அது வருமது. கனவுகள் கலைகிறது, மனிதர்கள் கவலைகளால் கதறிக் கொண்டே இருக்கிறார்கள், மரிக்கிறார்கள்.