Wednesday 2 March 2016

மாறா மரபு - 6

8. மனிதனே மகானுபாவன் 

‘’இங்க பாரு ராம், உனக்குப் பிடிக்கலைன்னா சொல்லு நான் வேறு எங்காச்சும் போயி வேலைப் பார்த்துகிறேன், இப்படி என்னை கொலை பண்ணுவேன்னு மிரட்டுறது நல்லா இல்லை. நீ டாக்டருக்குத்தான் படிச்சியா இல்லை கொலைகாரனாகப் படிச்சியா. நீ நல்லது செய்றேன்னு நினைச்சித்தான் நான் சரின்னு சொன்னேன். வேற உள்நோக்கம் எதுவும் இல்லை. நீ இதை முறையா செஞ்சா என்ன? உனக்கு அனுமதி கிடைக்காதுன்னு தெரிஞ்சிதான் இப்படி கள்ளத்தனம் பண்ற. இனிமே என்னை மிரட்டின அப்புறம் நான் என்ன பண்ணனுமோ அதை பண்ண வேண்டி இருக்கும்’’

‘’டாக்டர் சுபா, கோபப்படாத, நான் இது என்னோட லட்சியம் மாதிரி செய்றேன். இதுக்கு இடையூறா எது வந்தாலும் அலட்சியப்படுத்த முடியாது. அதனால் தான் அப்படி ஒரு வார்த்தையை விட்டுட்டுட்டேன். உன்னை நம்பறேன். மனப்பூர்வமா நம்பறேன்’’

‘’சரி ராம், என்னை மிரட்டி அடிபணிய வைக்க மட்டும் ஒருபோதும் கனவு காணாத’’

சுபா டாக்டர் ராமிடம் சொல்லிவிட்டு தனது அறையில் சென்று அமர்ந்தாள். கண்ணீர் எட்டிப்பார்க்க எத்தனித்தது. இந்த உலகில் பிறக்கின்ற ஒவ்வொரு உயிரினமும் தான் நன்றாக வாழ வேண்டும் என ஒரு போராட்டத்தை நடத்திக் கொண்டு இருக்கின்றன. அந்த அந்த உயிரினங்கள் அதன்பாட்டுக்கு இருப்பின் எவ்வித நெருக்கடியும் இல்லை, எதனுடனும் போட்டி இடாதவரை அதன் இயல்பை தொலைப்பதும் இல்லை.

பிறரை மிரட்டி அடிபணிய வைக்கும் போக்கு இந்த உலகில் நிறையவே நடந்து வருகிறது. இதற்கு எல்லாம் எந்த மரபணு காரணம் என மருத்துவ உலகம் கண்டுபிடித்து விட்டதா என்ன. நோய் என வந்தால் மட்டுமே அதற்கு என்ன காரணிகள், அதற்கு எந்த மரபணு எனத் தேடித் திரியும் மருத்துவ உலகம் ஒவ்வொரு மனிதனின் சிந்தனைக்கும் என்ன அடிப்படை என புரியாமல்தான் இருக்கிறது. சுபா எப்படியும் இந்த வாரம் ஸ்ரீரங்கம் சென்று வர வேணும் என திட்டமிட்டாள்.

‘’டாக்டர், பேசன்ட்ஸ் வெயிட் பண்றாங்க, வரச் சொல்லட்டுமா?’’

‘’ம்ம், வரச் சொல்லுப்பா’’

ஒவ்வொருவராக பார்த்து அனுப்பி வைக்கையில் மாலை மணி ஆறு ஆகிவிட்டது. வழியில் டாக்டர் ராம் வந்து பார்த்தார்.

‘’என்ன டாக்டர் சுபா, ஆர் யூ ஆல்ரைட்?’’

‘’எஸ் ராம், நல்லா இருக்கேன்’’

‘’நான் சொன்னது எதுவும் மனசில வைச்சிகிரலையே’’

‘’ராம், அதுபத்தி பேச வேணாம், திரும்பவும் எனக்கு அதை நினைவுபடுத்தி என்னோட இரவுப்பொழுதை கெடுத்துறாத’’

‘’சரி டாக்டர் சுபா’’

சுபா வீட்டிற்கு போனதும் குளித்துவிட்டு சமையல் அறையில் அருகில் இருந்த மேசையில் அமர்ந்தாள்.

‘’சுபா, உன் அண்ணன் ரகு போன் பண்ணி இருந்தான்’’

‘’என்ன விசயம்மா’’

‘’உன் அண்ணி லட்சுமியோட சொந்தக்கார பையன் ஒருத்தன் இருக்கானாம். அவனும் டாக்டர் தானாம். உனக்கு மாப்பிள்ளை பார்க்கலாம்னு சொன்னான்’’

‘’எதுக்கும்மா இப்ப அவசரம். அப்படியே கல்யாணம் பண்ணினாலும் நான் சிவராம் கிட்ட ஒரு வார்த்தை கேட்டுத்தான் பண்ணுவேன்மா, அவன் என்னை கல்யாணம் பண்ணமாட்டேன்னு சொல்லிட்டா பிறகு யோசிக்கலாம்மா’’

‘’யாரு அந்த சயின்டிஸ்ட் பையனா’’

‘’ஆமாம்மா’’

‘’உன் அப்பாவுக்கு தெரிஞ்சது அப்புறம் என்ன ஆகும்னு நான் சொல்ல வேண்டியது இல்லை’’

‘’நான் அப்பாகிட்ட பேசிக்கிறேன்மா, நீ எதுவும் சொல்ல வேண்டாம்’’

‘’அதுக்கில்லை சுபா’’

‘’அம்மா ப்ளீஸ் என்னை விட்டுடு. எனக்கே தலை வலிக்கிற மாதிரி இருக்கு’’

‘’ஒரு நிமிஷம் இரு, சப்பாத்தி செஞ்சி தரேன், எங்களை மீறி நீ எதுவும் செய்யமாட்டல’’

‘’செய்யலைம்மா’’

மூன்றே சப்பாத்திகள் சாப்பிட்டுவிட்டு பால்கனியில் சென்று அமர்ந்தாள். இன்ட்ரான் பற்றி புரட்ட ஆரம்பித்தாள். படித்துக்கொண்டே இருந்தவள் சட்டென யோசித்தாள். எப்போது செல்லில் கரு உருவாகத் தொடங்கியதோ அப்போதுதான் இந்த இன்ட்ரான்கள் உருவாகத் தொடங்கி இருக்கும். அப்படியெனில் ஈஸ்ட்டில் இன்ட்ரான்கள் உண்டா எனும் கேள்வி அவளுக்குள் எழுந்தது. இந்த ஈஸ்ட்கள் செல்லில் கரு கொண்டுதானே இருக்கிறது. சிவராமிற்கு போன் செய்தாள்.

‘’சிவா ஈஸ்ட்ல இன்ட்ரான் இருக்கா?’’

‘’என்ன சுபா, எந்த திசைக்கு இன்ட்ரான் இருக்கு, ஒரு திசைக்கும் இன்ட்ரான் இல்லை’’

‘’இதுக்கு நான் சிரிச்சி வைக்கட்டுமா?’’

‘’ஓ நீ ஈஸ்ட் செல் பத்தி கேட்டியா, அது இருக்கட்டும். எனக்கு வீட்டில பொண்ணு பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. ஒரு பொண்ணு பார்க்கவே ரொம்ப நல்லா இருந்தா. பேரு கூட ராகினி, சாப்ட்வேர் எஞ்சினியர்’’

‘’சிவா ஈஸ்ட் செல்லுக்கு இன்ட்ரான் இருக்கா இல்லையா’’

‘’இருக்கு சுபா, ஏன் கேட்கிற?’’

‘’பாக்டீரியாவுக்கு இல்லாத இன்ட்ரான் எப்படி ஈஸ்ட்க்கு வந்துச்சி. ஈஸ்ட்ல நியூக்ளியஸ் இருக்கிறதுதானே காரணம்’’

‘’சுபா, உனக்கு எப்படி இந்த யோசனை வந்துச்சி’’

‘’கேட்கறதுக்கு பதில் சொல்லு சிவா’’

‘’ஆமா சுபா. எதுக்கும் ஜூலியோட ஆர்டிக்கில் படிச்சிப் பாரு. உனக்கு நான் லிங்க் அனுப்புறேன்’’

‘’தேங்க்ஸ் சிவா. சிவா, என்னோட அம்மாவும் எனக்கு மாப்பிள்ளை பாக்கணும்னு சொன்னாங்க. நான் உன்கிட்ட கேட்டு சொல்றேன்னு சொன்னேன். அதான் இப்ப உனக்கு பொண்ணு பாத்துட்டாங்கள வீட்டில எனக்கு மாப்பிள்ளை பாக்க சொல்லிருறேன்’’

‘’சுபா என்ன சொல்ற’’

‘’ஆமா சிவா’’

‘’சுபா நீ என்கிட்ட ஒரு வார்த்தை கூட இதுபத்தி பேசினது இல்லையே, திடீருன்னு ஏன்?’’

‘’சிவா, எனக்கு காதல் அப்படின்னு எதுவும் எண்ணம் இல்லை. கல்யாணம்னு வந்தா உன்கிட்ட கேட்டுட்டு செய்வோம்னு இருந்தேன். அதுவும் நீ ஒரு மாப்பிள்ளை இருக்கேன்னு என் வீட்டில சொல்ல சொன்ன நினைவு இருக்கா. அதிருக்கட்டும் அவ்வளவுதான், இப்போதான் எல்லாம் தெளிவாயிருச்சி’’

‘’சுபா, என்னை மன்னிச்சிரு. நான் அன்னைக்கு சொன்னது உண்மைதான்’’

‘’இதில என்ன மன்னிப்பு வேண்டி இருக்கு. என் மனசில பட்டதை சொன்னேன், மறக்காம அந்த லிங்க் அனுப்பு இப்போ’’

‘’ம்ம் அனுப்புறேன் சுபா’’

சிவராம் சுபாவிடம் பேசியபின்னர் மிகவும் மனம் சஞ்சலத்திற்கு உள்ளானான். சுபா மனதில் இப்படி ஒரு எண்ணம் இருக்கும் என அவன் ஒருபோதும் நினைத்தது இல்லை. தான் விளையாட்டாக பேசியதை அவள் மனதில் உண்மை என்றே எண்ணி இருக்கிறாள் என நினைத்தபோது சற்று கஷ்டமாக இருந்தது. எது என்றாலும் தன்னைத் தேடி வரும் சுபாவை நினைத்தபோது அவனுக்குள் ஒரு குற்ற உணர்வு வந்து உட்கார்ந்தது. வேகமாகத் தேடி அந்த இணைப்பை சுபாவுக்கு சிவராம் அனுப்பி வைத்தான்.

Deletion of Many Yeast Introns Reveals a Minority of Genes that Require Splicing for Function

எல்லாவற்றையும் படித்து பார்த்தவளுக்கு சற்று அதிர்ச்சியாகவே இருந்தது. பாலூட்டி வகையின் செல்களில் இந்த இன்ட்ரான்கள் முக்கியத்துவம் நிறைந்தது என்ற வரிகளை வாசித்தபோது தான் டாக்டர் ராம் மீது ஒரு இனம் புரியாத கோபம் வந்து சேர்ந்தது. அதோடு தனது ஆசையை தொலைந்து போகச் செய்த சிவராம் மீதும் சற்று வெறுப்பு வந்து சேர்ந்தது.

எந்த ஒரு ஆணும் எந்த ஒரு பெண்ணும் சராசாரிக்கு உட்பட்டு இருப்பார்கள் என்பதை புரியாத போது காதல் வந்துவிடுகிறது. ஆல்டர்நேடிவ் ஸ்பிலிசிங் என்பது இல்லாமல் போனால் என்ன ஆகும் எனும் பயம் மீண்டும் சுபா மனதில் வந்து அமர்ந்து கொண்டது. மேலும் மேலும் படித்துக் கொண்டே வந்த போது செல்லின் வளர்ச்சியில் இந்த இன்ட்ரான்கள் நீக்கப்படுவதால் எவ்வித மாற்றம் உண்டு பண்ணுவதில்லை என அறிந்ததும் குழப்பம் அடைந்தாள். எப்படி இருந்தாலும் இந்த இன்ட்ரான்கள் நீக்கப்படுவதால் நிச்சயம் ஒரு மாற்றம் உண்டாகவே செய்யும் என தெளிவாக முடிவு ஒன்றை எடுத்தவளாக அறைக்குள் சென்றாள். ஏதோ ஒரு ராம் தனது உறக்கத்தை இன்று கெடுக்க வேண்டும் போல் இருந்து இருக்கிறது என எண்ணினாள்.

அடுத்த நாள் அப்பாவிடம் சிவராம் குறித்து பேசினாள். அவரும் உனக்கு என்ன விருப்பமோ அதன்படி செய்மா.

‘’நாங்க ஒரு மாப்பிள்ளை பாத்து உனக்குப் பிடிக்காம போச்சுனா எங்களுக்கும் தான் கஷ்டம்’’

‘’என்ன பேசறீங்க, ஒரு பொண்ணு உங்ககிட்ட ஒரு விஷயம் சொன்னா, நாங்க பாக்கற பையனை கட்டுன்னு சொல்லாம என்ன இது’’

‘’டாக்டர் விருப்பப்படி செய்யட்டும்’’

தனக்கு தரப்பட்ட சுதந்திரம்தனை பயன்படுத்த முடியாமல் தவித்தாள் சுபா. சிவராமிடமே சென்று என்னை திருமணம் பண்ணிக்கொள் என கேட்கலாமா என்று கூட ஒரு கணம் நினைத்துவிட்டாள். பிறகு நடப்பது நடக்கட்டும் என அந்த வாரம் முழுவதுமே எப்படியோ கடத்திவிட்டாள். அந்த வாரம் முழுவதுமே சிவராமிடம் அதிகம் பேசவில்லை. இன்ட்ரான்கள் பற்றிய எண்ணம் கூட பின்னோக்கி போய் இருந்தது. வெள்ளிக்கிழமை காலையில் தான் அம்மாவிடம் தான் ஸ்ரீரங்கம் செல்ல இருப்பதாக சொன்னாள்.

‘’என்ன விஷயம்’’

‘’ஒருத்தரை வேலை விசயமா பாக்கணுமா’’

‘’எங்க தங்கப்போற?’’

‘’நாளைக்கு காலையில போயிட்டு நைட்டே வந்துருவேன்மா’’

‘’சுபா, நீ ஒரு மாதிரியா இருக்கியேம்மா’’

‘’அதெல்லாம் ஒண்ணும் இல்லைமா’’

எப்பொழுது நாம் நேசிப்பவர்கள் நம்மை நேசிக்கவில்லை என தெரிகிறதோ அப்போதே நாம் பாதி இறந்து விடுகிறோம். அதற்குப் பின்னர் நம்மை குறித்து ஒரு பெரிய கேள்விக்குறி ஒன்று எழுகிறது. இந்த உலகில் நமக்கு என்று எதுவும் இல்லை என்றது போன்ற ஒரு எண்ணம் ஏற்படுகிறது. சுபா அடுத்தநாள் ஸ்ரீரங்கம் நோக்கிப் போனாள். அவள் அதிகாலை எழுந்து கிளம்பி மதியம் ஸ்ரீரங்கம் வந்து சேர்ந்தாள். நேராக கோவில் சென்று மூடும் முன்னர் வணங்கிவிட்டு வந்தபோது அவளுக்குள் ஒருவித தெளிவு உண்டாகியது. இதே ரெங்கமன்னாரை தான் அடைய வேண்டி தவம் இருந்த ஆண்டாள் குறித்து எண்ணிப்  பார்த்தாள். தான் ஒன்றை அடைய வேண்டி இருக்கும் தவத்தின் வலிமை அந்த ஒன்றை நிச்சயம் தனக்கு கொண்டு வந்து சேர்க்கும். இந்த டாக்டர் ராம் அப்படித்தான். அவன் இருப்பது ஒரு தவம். இந்த மனித குலமே ஒவ்வொரு மாற்றத்திற்கு என ஒரு மாபெரும் தவம் இருக்கிறது. ஒன்றை புரியாது எனில் அது புரியாது என தவம் இருக்கும் மனிதர்கள் ஒதுங்கிப் போவது இல்லை. அதைப் புரியும் வரை அந்த தவத்தின் வலிமையை அதிகரித்துக் கொண்டு இருக்கிறார்களே அன்றி குறைத்துக் கொண்டது இல்லை. அதே எண்ணத்துடன் ரெங்கநாதனை தேடிச் சென்றாள்.

குடிசையின் வெளியில் அமர்ந்து இருந்தார் ரெங்கநாதன். அவர்தான் என அடையாளம் கொண்டவள் போல அவர் அருகில் சென்றாள்.

‘’நீங்க ரெங்கநாதன்’’

‘’அவனை சேவிச்சிட்டு வரேளா’’

‘’யாரை’’

‘’வேறு யாரை, அந்த ரெங்கன்தான்’’

‘’ஆமா தாத்தா’’

‘’என் வீட்டில சேரு இல்ல, இப்படி கீழ உட்காருவேளா’’

சுபா அமர்ந்தாள். சிவராம் சொன்ன அனைத்து விசயங்களையும் சொல்லி முடித்தாள்.

‘’மனுசா எல்லாம் மகானுபாவன். அவாளுக்கு எல்லாம் தெரியும். இந்த ஜீவராசிகளில் மனுசா மட்டும் தான் இந்த பிரபஞ்சத்தை அலசி ஆராய முற்பட்டா. ஒளி வைச்சி இந்த லோகத்துக்கு ஒளி கொடுக்கிறவா இந்த மனுசா தான். இதே போல ஒரு பூமியை இந்த மனுசா உருவாக்கும் அளவுக்கு திறமை  படைச்சவா, பிரசாதம் சாப்பிட்டேளா’’

‘’ம்ம், நீங்க சிவா கிட்ட சொன்னது எல்லாம் நடக்குமா தாத்தா’’

‘’அந்த இன்ட்ரான்கள் குழந்தைகளா. உம்ம கையால்தானே தொடக்கம்’’

‘’அது வந்து... உங்களுக்கு எப்படித் தெரியும்’’

‘’நான்தான் சொல்றேனில்லையோ, இந்த மனுசா மகானுபாவன்’’

‘’மகானுபாவன் அப்படின்னா?’’

‘’ஒரு பேரறிஞன்,  பிறர் போற்றிட சிறந்தவன், மாபெரும் ஞானி, தனக்கென்று இல்லாமல் பிறருக்கு என குணம் கொண்ட  கொடைப்பண்பினன்''

‘’அப்படி இருக்காங்களா?’’

‘’நிறைய இருக்கா, ஒரு வட்டத்தில் சிக்கிக்கொண்டு தவிக்கிறா. எல்லாம் இந்த இன்ட்ரான்கள் நீக்கிட்டா சரியாகிரும்’’

‘’நமது சிந்தனைக்கும் இன்ட்ரான்களுக்கும் என்ன சம்பந்தம்’’

‘’நிறைய இருக்குனு சொல்வா. நினைக்க நினைக்க நடுக்கமும், சந்தோசமும் உண்டாகும்னு எழுதி வைச்சிருப்பா. நாராயண ஸ்தோத்திரம் கேட்டது உண்டோ’’

‘’இல்லை’’

‘’ஊருக்கு திரும்பிப் போறப்ப அதை வாங்கிட்டுப் போங்கோ, தினமும் கேளுங்கோ’’

‘’ ம்ம்’’

’அச்சலோத்ருதி சஞ்சல்கரா, பக்தனுக்ரக தல்பார நாராயணா’’ இதோட அர்த்தம் என்ன தெரியுமோ. அதாவது ஒரு மலையையே தூக்கிய  வலிமை கொண்டவனே, பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் ஆர்வம் கொண்டவனே நாராயணா அப்படின்னு பொருள், மலையை தூக்கினது யாரு. அந்த பரந்தாமன். பரந்தாமன் வடிவிலா தூக்கினார். இல்லையே மனுஷ ரூபத்தில் தூக்கினார். அதான் மனுசனே மகானுபாவன். ஒரு தனிப்பட்ட மனுசாளோட உடல் வலிமையை விட மன வலிமை புத்தி கூர்மை ரொம்ப பெரிசுனு இப்ப சொல்றா’’

சுபா தன்னை அறியாமல் அவரை நோக்கி வணங்கினாள் (தொடரும்)
9. மனம் மயங்குதல்


சுபா ஸ்ரீரங்கத்தில் இருந்து கிளம்பியதில் இருந்து ரெங்கநாதன் குறித்து சிவராமிடம் நிறைய பேசிக்கொண்டே வந்தாள். எல்லாம் ஒரு யூகத்தின் அடிப்படையில் சொல்லப்படுவது குறித்தும் அவள் சொன்னதும் சிவராம் மறுத்தான். சிவராம் தனக்கு நிறைய நம்பிக்கை இருப்பதாக கூறினான்.

நாட்கள் வெகுவேகமாக நகர்ந்து கொண்டிருந்தன. சுகுமார் தீபா தம்பதிகளின் விந்தணுக்கள், அண்ட செல்களை பெற்றுக் கொண்டாகிவிட்டது. டாக்டர் ராம் முக்கிய வேலையாக இருந்தார். டாக்டர் சுபா அவற்றை நுண்ணோக்கியில் பார்த்துவிட்டு மயக்கம் போடாத குறையாக டாக்டர் ராமிடம் வந்தாள்.

‘’ராம், அந்த செல்கள் எல்லாம் உருப்படியாகவே இல்லை, வந்து பார்’’

‘’என்ன சுபா, விளையாடுறியா’’

‘’இதில் என்ன ராம் விளையாட வேண்டி இருக்கு’’

டாக்டர் ராம் அவசர அவசரமாக வந்து பார்த்தவர் நெற்றி எல்லாம் வியர்க்கத் தொடங்கி இருந்தது.

‘’தெய் டோன்ட் லுக் நார்மல்’’

‘’இப்ப என்ன பண்றது ராம்’’

‘’ஃப்யூஸ் தெம்’’

‘’நோ’’

‘’டூ வாட் ஐ சே, டோன்ட் டூ எனிதிங், ஜஸ்ட் ஃப்யூஸ் தெம். யூஸ் இன்ஜெக்சன் புரொசிஜர்’’

‘’ஐ கான்ட், தெய் வில் ஃபெயில்’’

‘’ஜஸ்ட் டூ இட். ஒன் டூ ஒன், செலக்ட் வாட் யூ தின்க் பெஸ்ட்’’

டாக்டர் ராம் தனது தலையில் அடித்துக் கொண்டார்.

‘’சுபா, சொன்னதை செய்துட்டு வா, எனக்கு மயக்கம் வருவது போல இருக்கு’’

சுபா ஒரு விந்து செல் எடுத்து ஒரு அண்ட செல்லுடன் ஊசி முறையில் இணைத்தாள். இப்படியாக மூன்று விந்து செல்களை மூன்று அண்ட செல்களுடன் தனித்தனியாக இணைத்தாள்.


ஆய்வகத்தில் அவைகளை வைத்துவிட்டு டாக்டர் ராமினை சந்திக்க வந்தாள்.

‘’ராம், இணைத்து பண்ணியாச்சு’’

‘’தீபாவுக்கு ஹார்மோன் கொடுத்தாச்சா’’

‘’இன்னும் இல்லை ராம்’’

‘’என்னதான் நடக்குது சுபா, அவங்க கிளம்பி போயிருந்தா என்ன பண்ணுவ. இன்னும் ஆறு நாளில் அவங்களுக்கு நாம இந்த கருவை உள்ளே வைச்சாகனும். நாளைக்கு வந்து கருத்தரிச்சி இருக்கான்னு பாரு’’

‘’எனக்கு நிறைய சந்தேகமா இருக்கு ராம்’’

‘’ஒன்னு நடக்கிற முன்னாடி சந்தேகம் எல்லாம் பட வேண்டாம், நீ முதல போயி தீபாவுக்கு ஹார்மோன் கொடுத்து ஆறு நாள் கழிச்சி வரச் சொல்லு’’

சுபா, தீபாவிடமும் சுகுமாரிடமும் நடந்த உண்மையை மறைத்து எல்லாமே நன்றாக நடக்கும் என்று நம்பிக்கை சொன்னவள் தீபாவின் கருப்பையை தயார் செய்ய ஹார்மோன் ஊசி போட்டாள். தீபா சுபாவின் முகத்தில் ஒருவித பயம் இருப்பதை கண்டார்.

‘’டாக்டர் உங்க முகமே சரியில்லையே, எதுவும் பிரச்சினையா?’’

‘’ஒரு பிரச்சினையும் இல்லை, ஒரு இருபது மணி நேரத்தில கரு உருவாகிரும், அப்புறம் ஒரு ஆறு நாள் அதை நல்ல முறையில் பாதுகாத்து வளர்த்து வருவோம். அப்புறம் ஆறு நாள்  பிறகு வந்தீங்கனா உங்க கருப்பையில கருவை வைச்சிரலாம்’’

‘’எத்தனை கரு உருவாக்குவீங்க டாக்டர்’’

‘’மூனு உருவாக்கி இருக்கோம், உங்க விருப்பபடி உங்க கருப்பையில வைக்கிறோம்’’

‘’மூனும் வைச்சிருங்க டாக்டர்’’

‘’மூனுமே நல்லா இருந்தா வைக்கலாம். ஆனா மூனு வேண்டாம், இரண்டு மட்டும் வைப்போம், உங்க உடம்பு தாங்கனும் இல்லையா’’

‘’சரி டாக்டர்’’

சுபா, தீபாவும் சுகுமாரும் செல்லும் வழியினைப் பார்த்துக் கொண்டே இருந்தாள். ராம் அங்கே வெகுவேகமாக வந்தார்.

‘’டாக்டர் சுபா, அவங்க போயிட்டாங்களா’’

‘’போயிட்டாங்க ராம்’’

‘’எனக்கு வந்து அந்த செல்களை காட்டு, ஐ வான்ட் டு மேக் சுயர்’’

சுபா, ராமிற்கு அந்த செல்களை காட்டினாள்.

‘’வெல் டன் சுபா, இட்ஸ் மிராக்கிள்’’

‘’என்ன ராம்’’

‘’இந்த செல்கள் எல்லாம் சாதாரண செல்களா, இல்லையே அப்புறம் எப்படி நார்மலா இருக்கும், நீ கொஞ்சம் கூட யோசனை இல்லாம என்கிட்டே வந்து சொல்ல நானும் பயந்து சே ஒரு அரைமணி நேரம் என்னை பாடாபடுத்திட்டியே டாக்டர் சுபா’’

‘’இல்லை ராம், அப்நார்மல் செல்கள் அது’’

‘’அதேதான், நாம கொடுத்த கேப்ஸ்யூல் வேலை செஞ்சி இருக்கு, நீ எதுக்கும் ஒரு கருவை நாளைக்கு எடுத்து ஜீன் டெஸ்டிங் பண்ணிரு, மீதி ரெண்டு மட்டும் வளரட்டும். அந்த ரெண்டு மட்டும் கருப்பையில் வைச்சா போதும்’’

‘’சரி ராம்’’

‘’இன்னைக்கு உன்னை நான் ஒரு ரெஸ்டாரன்ட் கூப்பிட்டு போகப் போறேன், என்னோட ஆராய்ச்சிக்கு முழு ஒத்துழைப்பு தரும் உனக்கு சின்ன பார்ட்டி’’

‘’எதுவும் வேண்டாம் ராம், எனக்கு இன்னும் திக் திக்னு மனசு அடிச்சிக்கிது’’

‘’கவலைப்படாதே சுபா, இட் வில் வொர்க். அப்போ நீ வரலை’’

‘’இல்லை ராம், நாளைக்கு இந்த கருவை வந்து பாக்கிறவரை எனக்கு நிம்மதி இல்லை. அவங்க நம்பிக்கையை நாம தகர்த்துரக்கூடாது’’

‘’சரி சுபா, நான் மட்டும் போயி இந்த நாளை கொண்டாடப் போறேன்’’

அன்று இரவு சுபா சரியாக சாப்பிடவில்லை. அம்மா அப்பாவுக்கு காரணம் சொல்வதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. சிவராமிடம் இந்த விஷயத்தை சொல்லவும் மனம் வரவில்லை.

‘’சுபா’’

‘’என்னம்மா’’

‘’அந்த பையன் கிட்ட பேசினியா’’

‘’இல்லம்மா, அவன் என்னை கல்யாணம் பண்ணிக்கமாட்டேன்னு சொல்லிட்டான், சாதாரணமா பழகினான், பேசினானாம்’’

‘’அப்போ பையன் பாக்க சொல்லவா’’

‘’இப்ப இதைப் பத்தி பேசனுமாம்மா, எனக்கு வேலை இடத்தில நடந்ததை நினைச்சே கவலையா இருக்கு’’

‘’என்னம்மா என்ன ஆச்சி’’

‘’ஒன்னுமில்லைம்மா’’

‘’சொல்லு சுபா, சரியாவும் நீ சாப்பிடலை’’

சுபா தனது அம்மாவிடம் நடந்த விஷயத்தை சொன்னதும் எல்லாம் நல்லாவே நடக்கும், அதுபத்தி கவலைப்படாதம்மா என்று ஆறுதல் சொல்லிவிட்டு கல்யாணம் குறித்து யோசிக்க சொன்னார்

இரவு மிகவும் மெதுவாக கடந்து கொண்டு இருந்தது. ரெங்கநாதன் சொன்னது போல நாராயண ஸ்தோத்திரம் கேட்க ஆரம்பித்தாள். எல்லா வரிகளுமே புரியாததாக இருந்தன. எதையாவது அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டியதுதான் என எண்ணிக்கொண்டவாறே குரலின் இனிமையை ரசித்துக் கொண்டு இருந்தாள். அப்போது அவளது செல்பேசி ஒலித்தது.

‘’டாக்டர் சுபா, எல்லாவற்றையும் பாதுகாப்பாகத்தானே வைச்சிட்டுப் போன, அது பக்கத்தில வேறு எந்த ஒரு பொருளும் இல்லையே. எனக்கு திடீருன்னு ஒரு சந்தேகம்’’

‘’இல்லை ராம், எல்லாம் நல்லபடியாகத்தான் இருக்கு’’

‘’நீ இல்லாத ஒரு குறைதான் சுபா, பார்ட்டிக்கு நாலைஞ்சி பேரு வரவைச்சிட்டேன்’’

‘’சரி ராம், குட் நைட்’’

மீண்டும் பாடல் கேட்க ஆரம்பித்தாள். தான் செய்வது சரிதானா எனும் ஒரு உணர்வு தன்னை கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தது. எவருமே இப்படி ஒரு காரியத்திற்கு துணை போயிருக்கமாட்டார்கள் என்றே எண்ணினாள். தனக்கு புகழ் அடைய விருப்பமா அல்லது ஸ்ரீரங்கம் ரெங்கநாதன் தந்த தைரியமா என தெரியாது அப்படியே அசதியில் உறங்கியவள் நடுசாமத்தில் முழித்தாள்.

பிறந்தவுடன் இறந்த குழந்தையைப் பார்த்த நினைவுகள் வந்து போயின. இப்படி இயற்கையை மீறிய செயல் ஒன்றை செய்வது சரியா என யோசித்தாள். எப்படியாகினும் நாளை விடிய வேணும் எனும் எண்ணத்தில் உறங்க நினைத்தாலும் உறங்க இயலவில்லை.
அதிகாலையில் உறங்கியவளை அவளது அம்மாதான் எழுப்பி விட்டார்.

‘’அம்மா குழந்தை குழந்தை’’

‘’என்ன சுபா’’

‘’பயமா இருக்குமா, கெட்ட கனவு ஒன்னு’’

‘’நீ மனசைப் போட்டு குழப்பாதே’’

சுபா குளிக்கும்போது அவளுக்கு அழுகை தானாக வந்தது. அவசர அவசரமாக கிளம்பினாள். மிகவும் தாமதமாகவே கிளினிக்கிற்கு சென்றாள், டாக்டர் ராம் அங்கே இருந்தார்.

‘’குட் மார்னிங் டாக்டர் சுபா’’

‘’வணக்கம் ராம்’’

‘’எவரிதிங் இஸ் சக்சஸ்’’

‘’ராம்’’

‘’ஆல் ஆர் பெர்டிளைஸ்ட், லுக்கிங் குட்’’

‘’தேங்க்ஸ் ராம்’’

‘’எல்லாம் உன்னால நடந்தது டாக்டர் சுபா’’

‘’ஜீன் டெஸ்டிங் பண்ணவா’’
‘’வேண்டாம்’’

‘’நேத்து பண்ண சொன்ன ராம்’’

‘’இல்லை வேண்டாம்’’

‘’உறுதிபடுத்திக்கிட்டா நல்லதுதானே’’

‘’இல்லை சுபா, ஆறு நாட்கள் ஆகட்டும். அன்னைக்கு பண்ணுவோம். எப்படி ஒவ்வொரு நாள் வளரும்னு நமக்கு தெரியாது. ஒன்னாவது நிச்சயம் நல்லா இருக்கனும். நாம எடுக்கிறது நல்லதா இருந்து பிரச்சினை ஆகிட்டா என்ன பண்றது. லெட் அஸ் பீ சேப்’’

‘’சரி ராம்’’

‘’யூ கேன் கோ அன்ட் லுக். அவங்களுக்கு தகவல் சொல்லிருங்க’’

சுபா அவற்றை எல்லாம் பார்த்து ஆச்சரியம் கொண்டாள். எப்படி இவை நல்ல செல்களாக மாறிக்கொண்டன என புரியாமல் இருந்தது. அப்போதே தீபா சுகுமார் தம்பதிகளுக்கு தகவல் சொன்னாள். அவர்கள் சந்தோசத்தில் நிறைய பேசினார்கள்.

தினமும் செல்களை பார்ப்பதும் அவைகள் குறித்து எழுதுவதுமாக சுபா இருந்தாள். மூன்றாம் தின மாலை அன்று சிவராம் சந்திக்க வேண்டும் என சொன்னதால் அவனை சென்று பார்த்தாள்.

‘’என்ன சிவா’’

‘’சுபா உன்னை நான் கல்யாணம் பண்ணலாம்னு நினைக்கிறேன், உனக்கு சம்மதமா’’

‘’சிவா’’

‘’பரிதாபமோ, குற்ற உணர்வோ இல்லை’’

‘’உண்மையா சிவா’’

‘’ஆமா சுபா. உன்னை அறிய முயன்றபோது என்னை அறிந்து கொண்டேன்’’

‘’கவிதையா சிவா’’

‘’உன்னை போற்றி ஆராதிக்க என்னைவிட எவரும் இந்த பிரபஞ்சத்தில் இல்லை எனும் பேரகந்தை எனக்கு எப்போதும் உண்டு’’

‘’எங்கே இதை எல்லாம் மனப்பாடம் பண்ணிக்கிட்டு வந்த’’

‘’நீ தொலைத்ததாய் நினைத்த ஒன்று நீ என்னிடத்தில் இன்னும் இருக்குமென்று நீ எதிர்பார்த்து இருக்கமாட்டாய். ஒருவேளை உன்னை மீண்டும் உள்ளுக்குள் நினைத்துப் பாத்திராவிட்டால் எனக்கு காதல் என்றால் என்னவென தெரியாமல் போயிருக்குமோ? அன்று உன்னிடம் நான் பேசியதை இன்றும் சொல்லிக்கொண்டு இருக்கவே நான் விருப்பம் கொள்கிறேன்’’

‘’வாவ் அசத்தல் சிவா. நீதான் எழுதினியா’’

‘’உண்மையானவர்கள் ஒருபோதும் ஒளிந்து கொள்வதில்லை’’

‘’போதும் போதும் சிவா, நீ சொன்னதே எனக்கு இப்போ ரொம்ப நிம்மதியா இருக்கு. எங்கே எனக்கு நீ இல்லாம போயிருவியோனு ஒருவித மனக்கலக்கம் இருந்துட்டே இருந்துச்சி. அப்புறம் மூனு கருக்கள் அருமையா வளர்ந்துட்டு இருக்கு. ராம் கூட என்னை பார்ட்டிக்கு கூப்பிட்டாரு. நான் முடியாதுன்னு சொல்லிட்டேன்’’

‘’மேற்கொண்டு என்ன செய்யலாம் என யோசித்தபோது நான் உன்னை காதலிக்கத் தொடங்கினேன்’’

‘’சிவா. இந்த உலகத்திற்கு வா’’

‘’சுபா இன்னும் நிறைய சொல்லணும் போல இருக்கு. உன்னை மாதிரி ஒரு நல்ல பொண்ணு எனக்கு துணையாக கிடைக்க நான் கொடுத்து வைச்சிருக்கணும். நல்லவேளை உன்னை இழக்க இருந்தேன். எல்லா கருவுமே நல்ல நிலையில் இருக்கா’’

‘’இருக்கு, ஜெகன் பேசினாரா’’

‘’தினமும் பேசிட்டு இருக்கோம். இன்னும் மூனு நாளுல ஆரம்பிக்க போறோம்’’

‘’சிவா நாங்களும் கருவை மூனு நாளில் வைக்கப் போறோம்’’

சந்தோசம் நிலைத்து இருக்க வேண்டி மழை பெய்யத் தொடங்கி இருந்தது. (தொடரும்)

பகுதி 10 பிரபஞ்சத்தின் கூறு 

அடுத்த இரண்டு தினங்களில் இரண்டு கருக்கள் சிதைந்து போயின. டாக்டர் ராம் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானார். சுபாவை அழைத்து கடுமையாக சத்தம் போட்டார். சுபா தான் என்ன செய்ய இயலும் என்றே வருத்தம் தெரிவித்தாள். ஆனால் டாக்டர் ராம் சுபாவின் மீது பழியை சுமத்தினார். அன்று தன்மீது சுமத்தப்பட்ட பழியை எவரிடம் சொல்வது என வாடிய முகத்துடனே இருந்தாள். மிச்சம் இருக்கிற அந்த ஒரு கரு பிழைக்க வேண்டுமே எனும் கவலை சுபாவை மிகவும் வாட்டியது. டாக்டர் ராம் சுபாவின் அறைக்கு வந்தார். 

''சுபா அந்த கருவை வேறு ஒரு மீடியாவுக்கு மாத்திரு, இந்த கரு மட்டும் சிதைஞ்சதுன்னா என்னோட கனவு எல்லாம் சிதைஞ்சிரும். உன்னை சத்தம் போட்டது எல்லாம் மனசில வைச்சிக்காதே. என்னோட கோபம் எல்லாம் உன் மேல தான் என்னால காட்ட முடியுது. சாரி சுபா. உனக்கேத் தெரியும் நான் இதற்காக எவ்வளவு போராடுறேனு. எனக்கு நிறைய படபடப்பா இருக்கு சுபா''

''ராம் நான் என்ன பண்ணுவேன். எல்லாம் சரியாத்தான் இருந்தது. எல்லாம் சிதைஞ்சி இருந்தா என்ன பண்றது. நாளைக்கு தீபா வந்துருவாங்க. இந்த கருவை இப்போ வேற மீடியாவுக்கு மாத்தி ஏதாவது ஆச்சினா என்ன செய்றது. இப்படியே இருக்கட்டும். நீ என்னை திட்டினதை எல்லாம் என்னால ஈசியா எடுத்துக்க முடியலை. நீ ஒரு டாக்டர் மாதிரி நடந்துக்கிற மாட்டேங்கிற. உனக்கு புகழ் பெருமை தான் ஒரே குறிக்கோள். தனிப்பட்ட மனுஷரோட எண்ணத்திற்கு நீ எப்போ மதிப்பு தந்து இருக்க சொல்லு''

''இல்லை சுபா. எனக்கு கைகால்கள் ஓடலை, சரி நீ சொன்னமாதிரியே மாத்த வேணாம். நான் வெளில போறேன். நாளைக்கு நல்ல முறையில் இந்த கருவை வைச்சிரு''

''எங்க போற ராம்''

''பிரார்த்தனைப் பண்ணப் போறேன்''

''நல்ல புத்தி கொடுக்கச் சொல்லி பிரார்த்தனை பண்ணு ராம். அப்படியாவது உபயோகமா இருக்கும்''

டாக்டர் ராம் எதுவும் சொல்லாமல் அங்கிருந்து கிளம்பினார். 

சுபா இந்த மூன்றாவது கரு சிதையுமோ என்றே பயந்தாள். 

சிவாவை ஜெகன் சந்தித்தான். 

''என்ன சிவா எல்லாம் தயார இருக்கா''

''எல்லாம் தயார் பண்ணிட்டேன், நீ எனக்கு பணம் கொடுத்தா நான் எல்லாம் ஆர்டர் பண்ணி இன்னும் ஒரு மாசத்தில வேலையை ஆரம்பிச்சிருவேன். நாளைக்கு நீ பணத்தை எனக்கு அனுப்பிரு''

''நான் உன்னோட யுனிவேர்சிட்டிக்கு வரேன். என் கண் முன்னால நீ ஆர்டர் பண்ணு''

''என்ன ஜெகன் என் மீது உனக்கு நம்பிக்கை  இல்லையா''

''அதில்லை சிவா, எனக்கு திருப்தியா இருக்கும். நீ சரியானதைத்தான் ஆர்டர் பண்றியானு எனக்கும் தெரியும். தப்பா நினைக்காதே''

''இப்படி இதுவரை நீ சொல்லலியே ஜெகன்''

''வேலைன்னு வந்திட்டா அப்படித்தான் சிவா''

மறுநாள் சிவாவின் ஆய்வகத்திற்குச் சென்றான் ஜெகன். சிவாவிற்கு சிறிது பணத்தை மாற்றினான் ஜெகன். அவனுக்கு முன்னாலேயே சிவா தேவையான காரணிகளை ஆர்டர் செய்தான். ஒவ்வொன்றின் விலையை பார்த்தபோது இது எல்லாம் தேவையா என்றே சிவா மனதில் நினைத்துக் கொண்டான். ஜெகனை சிவா தனது சூப்பெர்வைசரிடம் அறிமுகம் செய்து வைத்தான். இதை ஜெகன் கொஞ்சமும் விரும்பவில்லை. ஆனாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளதவன் போலவே இருந்தான். 

''இங்க பாரு சிவா, நீ இந்த காரணிகள் எல்லாம் வந்ததும் பத்திரமா எடுத்து வை. நீ எப்போ ஆரம்பிக்கப் போறியோ அப்போ சொல்லு நான் வரேன்''

''ஜெகன் நீ வந்தா நல்லதுன்னு நானே நினைச்சேன்''

''நீ ரொம்ப சந்தேகத்தோடு இருந்ததால நான் வர வேண்டி இருந்தது. இல்லைன்னா நான் இதில் தலையிட வேண்டியது இல்லை. அதுவும் என்னை அந்த டாக்டர் ராம் பார்த்தா என்னோட நிலைமை என்னாகிறது''

''எதுக்கு ஜெகன் இப்படிப் பயப்படுற''

''சிவா நான் கிளம்பறேன். எல்லா காரணிகள் வந்ததும் தகவல் சொல்லு''

''சரி ஜெகன்''

ஜெகன் சிவாவின் மீது நம்பிக்கை இல்லாதவனாக தென்பட்டான். இவன் நிச்சயம் குழப்பிவிடக்கூடும் என்றே அவனது மனம் சொல்லிக்கொண்டே இருந்தது. அவன் வெளியே சென்றபோது சிவாவின் சூப்பர்வைசர் அழைத்தார். இதை ஜெகன் எதிர்பார்க்கவில்லை. நிறைய விசாரித்தார். ஜெகன் வேறு வழியின்றி தனது பணியிடம் குறித்து சொல்ல வேண்டியதாகிவிட்டது. அதற்கு அவர் தன்னிடம் ஒரு புராஜக்ட் இருப்பதாகவும் விருப்பம் இருப்பின் சொல்லவும் கூறினார். ஜெகன் தான் பரிசீலனை செய்வதாக சொல்லிவிட்டு வெளியே வந்தான். 

இதை ஒரு நல்ல வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளவே திட்டமிட்டான். ஆனால் டாக்டர் ராம் மீதான அச்சம் அவனை யோசிக்கவிடாமல் தடுத்தது. 

சுபா வேண்டாத தெய்வம் இல்லை. அவளின் முகம் கலக்கத்துடன் இருந்தது. இரவு எல்லாம் சரியாகவே உறங்கவில்லை. சுபாவின் அம்மா சுபாவின் நிலையை எண்ணி மிகவும் வருந்தினார். அதிகாலையில் கிளம்பி கிளினிக் வந்து அடைந்தாள். அவளுக்குள் இருந்த பதட்டம் அவள் அறியாதது. தனது அறையில் எல்லாவற்றையும் வைத்துவிட்டு வேகமாக ஆய்வகத்தில் நுழைந்தாள். கரு இருந்த மீடியாவை எடுத்து நுண்ணோக்கியில் பார்த்தவள் நிம்மதி பெருமூச்சு விட்டாள்

டாக்டர் ராமை அழைத்து தகவல் சொன்னாள். டாக்டர் ராம் எவ்வித பதிலும் சொல்லாமல் இருந்தார். சுபா மீண்டும் பேசியபோது கருவை வைத்தபின்னர் அது எப்படி வளருமோ அதைப் பொறுத்தே எதுவும் சொல்ல இயலும் என்றார். டாக்டர் ராமின் குரல் உடைந்து இருந்தது. சுபாவுக்கு கொஞ்சம் இருந்த நிம்மதியும் இப்போது போய்த் தொலைந்தது. தீபா தம்பதியினர் வந்து சேர்ந்தார்கள். 

தீபாவை சுபா நன்றாக பரிசோதனை செய்துவிட்டு டாக்டர் ராம் வரட்டும் என்றே காத்து இருந்தாள். ஆனால் டாக்டர் ராம் வெகு நேரமாகியும் வரவில்லை. டாக்டர் ராமிடம் சுபா பேசியபோது தனக்கு வர விருப்பம் இல்லை அதை சுபாவையே செய்ய சொன்னார். சுபா கருவை தீபாவின் கருப்பையில் வைத்துவிட்டு கவனமாக இருக்கும்படி பல ஆலோசனைகளை வழங்கினாள். தீபாவின் எல்லையில்லா சந்தோசம் கண்டு மகிழ்ந்தாலும் உள்ளுக்குள் அச்சம் தலைவிரித்தாடியது. 

''எப்போ வரட்டும் டாக்டர்''

''ஒரு வாரம் கழிச்சி வாங்க, நிறைய கவனமா இருங்க''

''இரண்டு கருவுல ஒன்னு தப்பிச்சிரும்ல டாக்டர்''

''ம்ம் தப்பிச்சிரும்’’ தான் ஒன்றுதான் வைத்தேன் என சொல்லாமல் மறைத்தாள் சுபா.

அன்று முழுவதும் டாக்டர் ராம் வரவில்லை. சுபாவின் மனம் நிறைய வருத்தத்தில் இருந்தது. ஒவ்வொரு தினமும் எப்படி கடந்தது என அவளால் விவரிக்க இயலவில்லை. டாக்டர் ராம் சுபாவிடம் அதிகம் பேசவும் இல்லை. 

''ராம் என்ன ஆச்சு''

''டாக்டர் சுபா, நான் தப்பு பண்ணிட்டேனோ''

''என்ன ராம்''

''இதை பண்ணியிருக்கக் கூடாதுன்னு மனசில ஒரு யோசனை''

''முன்னமே சொன்னேன் ராம் நீதான் கேட்கலை''

''அந்த இரண்டு கரு சிதைஞ்சது என்னை என்னமோ பண்ணுது டாக்டர் சுபா, அதுவும் இந்த கரு நிலைக்குமானு ஒரே பயம்''

''இதுவரைக்கும் அவங்க ஒன்னும் சொல்லலை ராம்''

''நாலு நாள் தான் ஆயிருக்கு, முழு குழந்தை உருவாகி பிறந்து என்னால தோல்வியை ஏற்க முடியாது டாக்டர் சுபா''

''ராம்''

ராம் எதுவும் சொல்லாமல் அங்கிருந்து வெளியேறினார். ஒரு மனிதனின் முயற்சிக்கு ஏற்படும் தோல்வி ஒருவரை துவளவே செய்யும். 

சுபா ஸ்ரீரங்கம் புறப்பட்டுச் சென்று ரெங்கநாதனை சந்தித்தாள். ரெங்கநாதன் சுபாவை பார்த்ததும் என்னோட ஞாபகம் வந்துருச்சா என்றார். சுபா ரெங்கநாதனிடம் எல்லா விசயங்களையும் சொல்லி முடித்தாள். ரெங்கநாதன் எல்லாவற்றையும் கேட்டுவிட்டு தான் என்ன செய்ய வேணும் என்றார். 

''இந்த குழந்தை நல்லபடியா பிறக்குமா தாத்தா''

''நான் என்ன ஜோசியக்காரானா''

''நீங்க சொன்னதே எனக்கு தைரியம் தந்தது தாத்தா''

''பிறக்கும் பிறக்கும், என்னை பெரிய சாமியாரா ஆக்கிராதேள்''

''தாத்தா உங்களப் பாத்து மனசு தைரியம் அடையலாம்னு வந்தேன்''

''கவலைப்படவேணாம், எல்லாம் நல்லா நடக்கும்னு நம்புங்கோ''

அவர் அப்படி சொல்லியபடியே அங்கிருந்து கிளம்பினார். சுபா தான் எதற்கு வந்தோம் என்கிற உணர்வு எதுவும் இன்றி அப்படியே உறைந்து நின்றாள். அவரை பின் தொடர்ந்து செல்ல வேண்டும் என மனம் எண்ணி பின் தொடர்ந்தாள். ரெங்கநாதன் கோவிலுக்குள் சென்று ஓரிடத்தில் அமர்ந்து கொண்டார். 

''தாத்தா''

''நீங்க ஊருக்குப் போங்கோ, எல்லாம் நல்லபடியா நடக்கும், நான் இப்போ ரெங்கனோட பேச வந்து இருக்கேன், நீங்க ஸ்தோத்திரம் கேளுங்கோ''

''வரேன் தாத்தா''

கோவிலில் சென்று வணங்கிவிட்டு வீடு வந்து சேர்ந்தாள். சுபாவின் பெற்றோர்கள் சுபாவிடம் நிறைய நேரம் பேசினார்கள். சுபா எல்லா விபரங்களையும் சொல்ல வேண்டிய சூழல் வந்தது. ஆனால் ரெங்கநாதன் குறித்து சொல்லி விஷயத்தை மாற்றினாள். 

ஒரு வாரம் கழித்து தீபாவை பரிசோதித்தபோது எவ்வித பிரச்சினை இல்லாமல் இருந்தது சுபாவுக்கு திருப்தியாக இருந்தது. டாக்டர் ராமிடம் சொன்னபோது தான் கவலைப்படுவது போலவே ராம் காட்டிக்கொண்டார். இப்படியாக இரண்டு வாரங்கள் கழிந்தது. 

ஜெகன் சிவாவின் ஆய்வகத்தில் வேலைக்குச் சேர்ந்தான். சிவா அதிர்ச்சி அடைந்தான். 

(தொடரும்) 






 11. துரோகம் சிலரின் இயல்பு

‘’என்ன ராஜ் சொல்ற, ஜெகன் வேலையை விட்டுட்டானா? இப்போ எங்கே இருக்கான்’’

‘’டாக்டர், அவன் பஞ்சாப் போறதா சொல்லிட்டுப் போனான்ல, அப்புறம் வந்து பஞ்சாப்பில் வேலை உறுதி ஆயிருச்சினு எல்லாம் காலிபண்ணிட்டுப் போயிட்டான்’’

‘’அவனோட நம்பர் இருக்கா’’

‘’இல்லை டாக்டர்’’

‘’அவன் என்னமோ விளையாடுறான் ராஜ், நீ பஞ்சாப்புக்கு வேலை மாத்திப் போக முடியுமா?’’

‘’அவன் எங்கே இருக்கானு தெரியாம எப்படி மாத்திப் போறது டாக்டர்’’

‘’நீ அவனோட சூப்பர்வைசர்கிட்ட அவனைப்பத்தி விசாரிச்சி இப்பவே சொல்லு’’

‘’டாக்டர் இருங்க இப்பவே கேட்டுட்டு வரேன்’’

தங்கராஜ் சென்று சூப்பர்வைசரிடம் விசாரித்தபோது எதுவும் என்னால் ஜெகனைப் பற்றி சொல்ல முடியாது. அவன் ஒரு துரோகி. அவனுக்கு துரோகம் இழைப்பதே பழகிப்போய்விட்டது. விடுமுறை என போனவன் எனக்கு எந்த தகவலும் அவன் சொல்லவே இல்லை. எங்கு போனான் என்ன ஆனான் எனத் தெரியாது. எல்லாத் தொடர்புகளையும் துண்டித்து வைத்து இருக்கிறான் என்ற செய்தி தங்கராஜிற்கு அதிர்ச்சியாக இருந்தது.

‘’டாக்டர் அவன் வேலை விசயமா போகலை’’

‘’ராஜ், அப்படின்னா அவன் சொந்த ஊருக்குப் போயிருக்கனும்’’

‘’எல்லா சோசியல் நெட்வொர்க் அவன் டீஆக்டிவேட் பண்ணி இருக்கான் டாக்டர்’’

‘’நீ எதுக்கும் சென்னைக்கு கிளம்பி வா. உன்னோட வேலையை இங்கப் பாத்துக்கிரலாம்’’

‘’டாக்டர், அங்கே வேலை கிடைச்சப்பறம் சொல்றேன் டாக்டர்’’

‘’ராஜ், நீ கிளம்பி வா’’

‘’ஒரு மாசம் டைம் கொடுங்க டாக்டர்’’

‘’சரி வந்து சேரு’’

ஜெகன் தன்னை ஏமாற்றுவது போன்று உணர்ந்தார் டாக்டர் ராம். தான் உண்மையில் பயப்படுவது போல குழந்தை பிறக்கும் வரை டாக்டர் சுபாவிடம் நடிக்க வேண்டும் என முடிவு செய்தவருக்கு ஜெகனின் பிரச்சினை புதியதாக இருந்தது.

‘’ஜெகன், எப்படி நீ இந்த ஆய்வகத்தில் சேர்ந்த’’

‘’எல்லாம் நீ செய்துவைத்த அறிமுகம் சிவா’’

‘’என்ன புரோஜக்ட்’’

‘’பிறகு சொல்றேன், எல்லா வேலையும் நானே செய்துக்கிறேன். இதில் நீ தலையிட வேண்டாம்’’

‘’ஜெகன், உன்னால எப்படி இப்படி நடக்க முடியுது, டாக்டர் ராம் கண்ணில் நீ பட்டால் என்ன ஆகும்னு தெரியுமா. பயந்துட்டு இருந்தியே’’

‘’என்ன ஆகும், எல்லாத் திருட்டும் அவன் பண்ணிட்டு இருக்கான், நான் எதுக்குப் பயப்படனும்’’

‘’ஜெகன், உன்னால என்னோட வேலைக்குப் பாதிப்பு வந்துராம பாத்துக்கோ, இல்லை நான் பொல்லாதவன் ஆயிருவேன்’’

‘’அது நீ சூப்பர்வைசரிடம்தான் போய் பேசனும், என்னைப் பிடிச்சி இருந்தது சேர சொல்லிட்டார்’’

‘’உன்னோட டில்லி சூப்பர்வைசர்கிட்ட சொன்னியா’’

‘’எதுக்கு, நான் கொடுத்த ரெபெரேன்ஸ் வேற, அவருக்கு நான் எங்க இருக்கேன்னு தெரியாது. நீ என்னோட விசயத்தில் இனிமே தலையிடாத, அப்படி பண்ணின அவ்வளவுதான்’’

சிவா ஜெகனின் குணம் கண்டு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அடைந்தான்.

‘’ஜெகன் இனிமேல் இந்த விசயத்தில் நான் தலையிட மாட்டேன்’’

‘’வெல்டன் சிவா’’

சிவா சூப்பர்வைசரிடம் சென்று ஜெகன் பற்றி பேசியபோது நீ  இப்படி பொறுப்பில்லாம நடந்துகிட்டா என்ன அர்த்தம் என சிவாவையே அவர் சத்தம் போட்டார். ஜெகனுக்காக என்ன ஆர்டர் பண்ணினியோ அதெல்லாம் ஜெகன் கிட்ட கொடுத்துரு. அவரோட புரொஜக்ட்ல நீ தலையிடாத. அதற்குமேல் எதுவும் பேசுவதற்கு இல்லை என சிவா அமைதியானான்.

ஜெகன் எல்லாம் திட்டமிட்டுப் பேசித்தான் உள்ளே வந்து இருக்கிறான் என்று நினைத்தபோது சிவாவினால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. தன்னை ஒரு பகடைக்காயாக பயன்படுத்தி இருக்கிறான் என்றே நினைத்தான் சிவா. தான் எதையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருந்தான்.

டாக்டர் ராம் தான் எதிலும் நேரடியாக தலையிடக்கூடாது என்றே எல்லா விசயங்களையும் தங்கராஜ் மூலம் செய்து வந்தார். தங்கராஜ் சென்னைக்கு வந்தபின்னர் ஜெகன் பற்றித் தெரிந்து கொள்ள முயற்சித்தார். வேலையைவிட்டு வர நாட்கள் வேணும் என்றதால் உடனே விடுமுறை எடுத்துக்கொண்டு ஜெகன் பற்றி அவனது ஊரில் சென்று விசாரிக்கச் சொன்னார்.

தங்கராஜ் அதன்படியே நேராக ஸ்ரீரங்கம் சென்று தன்னை ஜெகனின் நண்பன் என அறிமுகப்படுத்திக்கொண்டு விசாரித்தான். அதற்கு ஜெகனின் பெற்றோர்கள் ஜெகன் டில்லியில் இருப்பதாக சொன்னார்கள். தங்கராஜ் விபரங்கள் எல்லாம் கூறியபின்னர் தங்களுக்கு வேறு எந்த தகவலும் வரவில்லையே என்றார்கள். இந்த ஜெகன் என்ன ஆனான் எனும் குழப்பம் தங்கராஜிற்கு வந்து சேர்ந்தது.

‘’டாக்டர் ராம், ஜெகன் பத்தின விபரங்கள் அவங்க அப்பா அம்மாவுக்கே தெரியலை’’

‘’ராஜ், அவன் என்னை ஏமாத்துறான், நீ சென்னைக்கு கிளம்பி வா, உனக்கு புது வேலை நான் இங்கே ஏற்பாடு பண்றேன்’’

‘’இல்லை டாக்டர், நான் வேலை மாறிட்டுத்தான் வர முடியும்’’

‘’சரி ராஜ்’’

டாக்டர் ராம் குழப்பம் நிறைந்தவராகத் தென்பட்டார். டாக்டர் சுபா ராமிடம் பேச வேண்டும் என அனுமதி கேட்டுக்கொண்டு சென்றாள்.

‘’என்ன டாக்டர் சுபா?’’

‘’பாலகுரு திவ்யா அவங்களுக்கு இதே மாதிரி பண்ணனும் ராம். எதுவும் மாத்தாம அப்படியே பண்ணினா பிரச்சினை இருக்காது’’

‘’டாக்டர் சுபா, நீ உன் விருப்பம்போல செய். எனக்கு இன்னும் மனசு ஒரு நிலைக்கு வரலை’’

‘’ரொம்பவும் ஒருமாதிரி இருக்கியே ராம்’’

‘’அதெல்லாம் ஒன்னுமில்லை, நீ அவங்களுக்கு இப்படியே பண்ணு’’

‘’ராம் எதுவும் உதவி தேவையா’’

‘’எதுவும் வேணாம்’’

டாக்டர் ராம் தன்னை நம்பி எல்லாம் ஒப்படைத்து விட்டதை எண்ணி மகிழ்ச்சி அடைந்தாள் சுபா. தீபாவிடம் விசாரித்தபோது தான் நன்றாக அதுவும் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறினார்.

அன்று சிவா அவசரம் அவசரமாக சுபாவை சந்திக்க வேணும் என அழைத்தான். சுபாவிடம் எல்லா விசயங்களையும் சொல்லி சிவா முடித்தபோது அந்த வேலையை மட்டும் விட்டுராதே சிவா என்று சொன்னாள் சுபா.

தினங்கள் நகர்ந்து கொண்டு இருந்தன. ஜெகன் தன்னை ஒரு முழுமூச்சுடன் ஆய்வில் ஈடுபடுத்திக் கொண்டான். சிவராம் ஜெகனின் மீது தனி வெறுப்பு வளர்க்க ஆரம்பித்தான்.

திவ்யாவின் அண்ட செல்கள், பாலகுருவின் விந்து செல்கள் எடுத்து முன்னர் போலவே ஆய்வகத்தில் இணைத்தாள் சுபா. எப்படியும் இந்த முறை நன்றாக வரவேண்டும் என வேண்டிக்கொண்டாள். டாக்டர் ராம் சுபா என்ன செய்து வைத்து இருக்கிறாள் என சுபா சென்றபின்னர் ஆய்வகத்தில் சென்று பார்த்து திருப்தி அடைந்தார்.

நாட்கள் நகர கரு எவ்வித பிரச்சினை இன்றி வளர்ந்து இருந்தது. அதில் ஒன்றை மரபணு ஆய்விற்கு உட்படுத்தினார் டாக்டர் ராம். இதை எம்ப்ரோயினிக் பிரி இம்ப்லேன்ட்சன் என சொல்வார்கள். இதன் மூலம் ஏதேனும் கருவில் பாதிப்பு இருக்கிறதா என்றெல்லாம் கண்டு கொள்ளலாம். இந்த ஆய்வின் முடிவில் இன்ட்ரான்கள் இல்லாமல் கரு வளர்ந்து இருந்தது. அதைக்கண்டு பேரின்பம் கொண்டார் டாக்டர் ராம்.

‘’ராம், ரிப்போர்ட் எப்படி இருக்கிறது’’

‘’நினைச்சது நடந்திருச்சி டாக்டர் சுபா’’

‘’இன்ட்ரான்கள் எல்லாம் இல்லையா’’

‘’இல்லை டாக்டர் சுபா, எல்லாம் திரும்பத் திரும்ப ஆய்வு செய்து உறுதிபடுத்தியாகிவிட்டது. மகிழ்ச்சியின் எல்லைக்கு அளவே இல்லை’’

‘’நேத்து வரை ஒருமாதிரி இருந்தியே ராம்’’

‘’அது நேத்து டாக்டர் சுபா. ஆனா இது இன்று. கடந்தகால இன்பத்திற்கு நிகழ்காலம் பொறுப்பாகிறது’’

‘’எனக்கும் மகிழ்ச்சி ராம். இதற்கடுத்து எப்போ அடுத்த தம்பதிக்கு பண்ணப் போறோம்’’

‘’இல்லை டாக்டர் சுபா, இன்னும் ஒரு வருஷம் கழிச்சி பண்ணலாம், இப்ப ஒன்னும் அவசரமில்லை’’
‘’சரி ராம்’’

‘’டாக்டர் சுபா, உனக்கு எப்போ கல்யாணம்’’

‘’தெரியலை ராம்’’

‘’உன்னை பொண்ணு கேட்டு வரலாம்னு யோசிக்கிறேன்’’

‘’ராம்’’

‘’உன்னை மாதிரி ஒரு நம்பிக்கையான பொண்ணுதான் வேணும் டாக்டர் சுபா’’

‘’ராம், உன்னை மாதிரி ஒரு ஆளு எல்லாம் எனக்கு கணவன் ஆக முடியாது, இதைபத்தி மேற்கொண்டு பேச வேண்டாம்’’

சந்தோசத்தில் என்ன பேச வேண்டும் என தெரியாமல் பேசிவிட்டோமோ என டாக்டர் ராம் ஒருகணம் சிந்தித்தார். மிகவும் எச்சரிக்கையுடன் இருத்தல் அவசியம். ஆனால் சில நேரங்களில் நம்மையும் அறியாமல் நாம் தடுமாறிவிடுகிறோம்.

‘’டாக்டர் சுபா, தெரியாமல் கேட்டுட்டேன்’’

சுபா பதில் எதுவும் சொல்லாமல் வெளியேறினாள். இந்த உலகம் பெண்களுக்கானதுதான். ஆனால் ஆண்கள் அதை ஒருபோதும் உணர்ந்து கொண்டது இல்லை. தானே இவ்வுலகத்தின் முதன்மை என ஒவ்வொரு ஆணும் ஒரு கணத்தில் எண்ணிவிடக்கூடும்.

அந்த வார சனிக்கிழமை அன்று ஸ்ரீரங்கம் சென்றுகொண்டு இருந்தாள் சுபா. ரெங்கநாதன் பற்றி அறிந்து கொள்ள நிறைய ஆர்வம் வந்து இருந்தது. சுபாவை கண்டதும் அடையாளம் கண்டவராக என்ன விசேசம் என்றார்.

‘’உங்க ரத்தம் பரிசோதனை பண்ணலாமா தாத்தா’’

‘’மரபணு பரிசோதனையா’’

‘’ஆமா தாத்தா’’

‘’தாராளமா பண்ணலாம்னோ’’


ரெங்கநாதனை தன்னுடன் சென்னைக்கு அழைத்துச் சென்றாள் சுபா (தொடரும்)