Monday 5 December 2016

பெருந்துயரம் - மரணம்

ஒரு ஆராய்ச்சியாளனின் பாதை 17

காலையில் வேலைக்குக்  கிளம்பிச் செல்லும் முன்னர் எனது வேலை இடத்து மேற்பார்வையாளர்  நோயை எதிர்த்துப் போராடி இன்று அதிகாலை மருத்துவமனையில் அமைதியாக இறந்துவிட்டார் என்று எனது மற்றோரு பேராசிரியரிடம்  இருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது.

எனக்கு தலையைச் சுற்றிக்கொண்டு வந்தது. எவருக்கு  மரணம் ஏற்படக்கூடாது என்று கடந்த ஒரு வருடமாக  வேண்டிக்கொண்டு இருந்தேனோ அவர் இப்போது மரணம் அடைந்த செய்தி என்னை பெரும் துயரத்தில் ஆழ்த்தி இருக்கிறது. ஒரு நல்ல நண்பரை, ஒரு சகோதரரை, ஒரு நல்லாசிரியரை இழந்து விட்டேன்.

நான் அவரை மார்ச் மாதம் 2003ல் சந்தித்தேன். அன்றிலிருந்து இன்று வரை அவரின் மேற்பார்வையில் தான்  வேலை செய்து வந்து இருக்கிறேன். எனது ஒவ்வொரு ஆராய்ச்சிக்கும் உறுதுணையாக இருந்தவர். அறிவிற்சிறந்தவர். சிறு வயதிலேயே கல்லூரியில் உயர் பதவி பெற்றவர் என்ற பெருமை உண்டு. அவரது சிந்தனை செயல் எல்லாம் ஆராய்ச்சிதான்.

இத்தாலியில் பிறந்து, ஆஸ்திரேலியாவில் வளர்ந்து இங்கிலாந்தில் ஆராய்ச்சிப் பயணத்தைக் தொடங்கியவர். ஆராய்ச்சி தவிர்த்து  அவ்வப்போது கிரிக்கெட் பற்றி மட்டுமே என்னிடம் பேசுவது உண்டு. சில நாட்கள் முன்னர் கூட இந்தியாவில் செல்லாத பணம் குறித்த அறிவிப்பைப் பற்றிப் பேசிக்கொண்டு இருந்தார். இவரைப் போல ஆராய்ச்சிச் செய்ய வேண்டும் எனும் ஆர்வத்தை எப்போதும் தூண்டிக்கொண்டே இருப்பார்.

பதின்மூன்று வருட காலப் பழக்கம். சென்ற வருடம் இவருக்கு கேன்சர் என்று என்னிடம் சொன்னபோது எனக்கு அழுகை வந்துவிட்டது. ஆனால் இவரது மன தைரியம் தனக்கு நோய் இருந்தது போலவே இவர் காட்டிக்கொள்ள வில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூன்று வார காலத்தில் கூட வேலை குறித்து மின்னஞ்சல் அனுப்பிக் கொண்டு இருந்தார்.

எல்லாம் சரியாகி மீண்டும் வேலைக்கு வந்து சேர்ந்தார். திடீரென சில மாதங்கள் முன்னர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். ஆராய்ச்சியைச் செய்ய உன்னைத் தனியாக விட்டுவிட்டேன் அதற்காக என்னை மன்னித்துக் கொள் என்று கூட மின்னஞ்சல் எழுதிக் கொண்டு இருந்தார். குணமாகி வாருங்கள், நான் சமாளித்துக் கொள்கிறேன் என்று மட்டுமே சொல்லத் தெரிந்தது எனக்கு அன்று.

மீண்டும் சரியாகி வந்தவர் சோர்வாகவே காணப்பட்டார். இரண்டு வாரங்கள் முன்னர் bone marrow transplant பண்ண வேண்டும் அதற்கான நபர் கிடைத்துவிட்டார் என மீண்டும் மருத்துவமனைக்குச் சென்றார்.

அவர் மூன்று மாத காலத்திற்கு ஆராய்ச்சிக்குத் தேர்ந்தெடுத்த ஒரு மருத்துவத்துறை மாணவனை கடந்த மூன்று மாதங்களாக நான் மேற்பார்வை செய்ய வேண்டியது இருந்தது. அவன் எழுதும் ரிப்போர்ட் நான் சரி பார்க்கவா என்றபோது நான் சரி பார்த்து அனுப்புகிறேன் எனக் கூறிவிட்டார். அவர் மருத்துவமனைக்குச் செல்வதற்கு முதல் நாள் கூட ஆய்வகத்தில் வந்து எனக்கு உதவி செய்து கொண்டு இருந்தார். சீக்கிரம் குணமாகி வாருங்கள் என்று சொன்னபோது கிறிஸ்துமஸ் தினத்திற்கு முன்னர் வந்து விடுவேன் என்று சொல்லிச் சென்றார்.

அவரின் முழு முயற்சியால் தான் நான் இன்னமும் இந்த ஆராய்ச்சி வேலையைச் செய்து கொண்டு இருக்கிறேன். சில வாரங்களுக்கு முன்னரே அவரது செய்முறை பயிற்சி வகுப்புகள் எல்லாம் என்னைப் பார்த்துக் கொள்ளச் சொன்னார்கள். அப்போது அதற்கான ஏற்பாடுகளை என்னை  பண்ணச் சொல்லி எனது பேராசியர் சொன்னபோது தான் எல்லாம் ஏற்பாடு பண்ணிவிட்டதாக மருத்துவமனையில் இருந்தே மின்னஞ்சல் எழுதினார்.

எல்லா மருத்துவ சிகிச்சை நல்லபடியாக முடிந்து தேறி வந்து கொண்டிருந்தார். இந்த வாரம் வீட்டிற்கு வந்து விடுவார் என்று சொல்லி இருந்தார்கள். அவருக்கு ஒரு முறை மட்டுமே மின்னஞ்சல் அனுப்பி விரைவில் குணமாகி வாருங்கள் என்று சொல்லி இருந்தேன். அவரிடம் அதற்குப் பதில் இல்லை. இன்னமும் மருத்துவமனையில் சிகிச்சைக்காகவே சென்று இருக்கிறார் என்று மனமும் நினைத்துக் கொண்டு இருக்கிறது. அவர் இப்போது உயிரோடு இல்லை என்று நினைத்தால் மனதில் பெரும் வலி உண்டாகிறது. அவரது மனம் ஒத்துழைத்த அளவிற்கு அவரது உடல் ஒத்துழைக்க வில்லை.

அவர் உயிருடன் இருந்தபோது மரணத்தை விட நோய் கொடியது என்றே நினைத்தேன். அவர் இறந்த பின்னர் மரணம் நோயை விடக் கொடியது என்றே நினைக்கிறேன்.

மிகவும் ஒரு  நல்ல மனிதரை, நல்ல ஆராய்ச்சியாளரை இத்தனை விரைவாக இழந்து நிற்கிறேன் என்பதே பெருந்துயரமாக இருக்கிறது. அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

(தொடரும்)




1 comment:

ANaND said...

நண்பரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்..!