Tuesday 6 October 2015

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் 28

அடுத்த தினம் காவல் நிலையத்திற்கு சென்று கோரன் பற்றி விசாரித்தேன். அவர்கள் கோரன் வெளியில் சென்றுவிட்டதாக கூறியது பெரும் வருத்தம் தந்தது. அவன் மீது வழக்குப் பதிவு செய்யாமல் என்ன காரியம் பண்ணி இருக்கிறீர்கள் என சத்தம் போட்டேன். என் மீது வழக்குப் பதிவு செய்து விடுவதாக மிரட்டினார்கள்.

எங்கே இந்த கோரன் போயிருப்பான் என அவனது வீட்டிற்கு சென்று பார்த்தால் அங்கே கோரன் இருந்தான். ஆனால் நான் மறைந்து கொண்டேன். அவனது வீட்டிற்குள் சிலர் சென்றார்கள். சிறிது நேரத்தில் அவர்கள் வெளியே சிரித்த முகத்தோடு வந்தார்கள். கோரன் வாசல் வரை வந்து அவர்களை அனுப்பி வைத்தான். இந்த வயதில் இவனுக்கு எப்படி இப்படி ஒரு எண்ணம் வந்தது என்றே யோசித்துக் கொண்டு இருந்தேன். ஒருவேளை சுபத்ரா சொன்னது போல பரிணாமத்தின் கர்மவினையோ.

வீட்டிற்குள் சென்ற கோரன் கையில் ஒரு பையுடன் வெளியேறினான். என்னை எவரும் பார்த்துவிடக்கூடாது என்பது போல நடந்து கொண்டேன். அவனை மெதுவாக பின் தொடர ஆரம்பித்தேன். நிச்சயம் இவன் சுபத்ராவை நோக்கித்தான் செல்ல வேண்டும் என எண்ணியது தவறாக முடிந்தது. அவன் கரியனேந்தல் செல்லும் பேருந்தில் ஏறினான். அவனை பின் தொடர்வதா வேண்டாமா என எண்ணியபடி நின்றேன். காயத்ரியின் தந்தையை இப்படித்தான் தொடர்ந்தது நினைவில் வந்து ஆடியது. ஒன்றும் தெரியாதது போல அவன் இருந்த பேருந்து பக்கமாக நடந்தேன். அவன் அமர்ந்து இருந்த சன்னல் பக்கம் சென்று அழைத்தேன்.

''கோரன்''

பெயர் கேட்டதும் திடுக்கிட்டான். என்னைப் பார்த்தவன் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.

''கோரன், கோரன்''

அவன் என்னைத் தவிர்க்க நினைப்பது புரிந்தது. பேருந்தில் ஏறி அவனருகே சென்றேன்.

''கோரன் எங்கே போகிறாய்?''

இருக்கையில் இருந்து எழுந்தவன் வேகமாக பேருந்தில் இருந்து இறங்கி சில பேருந்துகளில் ஏறி இறங்கினான். எனது கண்ணில் இருந்து எப்படியோ மறைந்தான். அங்கே காத்து இருப்பதில் அர்த்தமில்லை என பேருந்து நிலையம் விட்டு வெளியேறினேன். கோரன் மிகவும் புதிராகவே தெரிந்தான்.

வீட்டிற்கு சென்றபோது காயத்ரி மிகவும் கோபமாக இருந்தாள் .

''என்ன விசயம் காயூ''

''எங்க போன''

''கோரன் என்ன பண்றானு பாக்கப் போனேன்''

''அந்த சனியனை விட்டுத் தொலைக்க முடியாதா''

''அவன் சுபாவை கொல்லப்போறேனு  சொல்லி இருந்தான்''

''அதான் சுபா அவனை கொல்வேனு சொன்னால''

''சுபா எங்கே''

''லைப்ரெரி போய்  இருக்கா''

''சாப்பிட்டாளா''

''சாப்பிட்டுத்தான் போனாள்''

''அம்மா எங்கே''

''கோவிலுக்குப் போனாங்க, இன்னும் வரலை''

''நீ போகலை''

''நீ எங்கே போனேனு சொல்லாம போயிட்ட, நீ வந்தா சாப்பாடு எடுத்து வைக்க சொல்லிட்டு அத்தைப் போயிட்டாங்க''

''நானா சாப்பிடமாட்டேனா''

''எனக்கு உன் மேல கோபம் தீரலை''

''சுபா எதுவும் சொன்னாளா''

''சொன்னா, உன்னை காதலிக்கிறேன்னு சொன்னா. உன்னை அவளுக்கு  விட்டுத்தரும்படி சொன்னா, எனக்கு ஆத்திரம் ஆத்திரமா வருது''

''விளையாட்டுக்கு பேசி இருப்பா''

''முருகேசு உனக்கு எது விளையாட்டு, எது உண்மைனு தெரியாதா, அவ ரொம்ப சீரியசா பேசறா, எனக்கு பயமா இருக்கு''

''என்ன பயம்''

''என்னை கொலை பண்ணிட்டா''

''என்ன பேசற நீ, அவ அப்படிபட்ட  பொண்ணு இல்ல''

''இல்லை முருகேசு, நீ அவளை வேறு வீடு பாக்கச் சொல்லு''

''எதுக்கு இப்படி பயப்படற, சொன்னா கேளு காயூ, அவ ஒன்னும் பண்ணமாட்டா''

அம்மா கோவிலில் இருந்து வந்தார்கள்.

''என்னடா சாப்பிட்டியா?''

''இல்லைம்மா''

''காயத்ரி, அவனுக்கு சாப்பாடு எடுத்து வைக்கலை''

''நான் சாப்பிட்டுக்கிறேன்மா, இப்போதான் வந்தேன்''

''அந்த பொண்ணு இங்கேதான் தங்கப்போறா''

''ஆமாம்மா, ஏன்?''

''சும்மா கேட்டேன்டா''

''காயூ சொன்னாளா, எதுவும் சுபா சொன்னாளா ?''

''இல்லையே, நீ போய்  சாப்பிடு, காயத்ரி சாப்பாடு எடுத்து வைம்மா''

சாப்பாடு எடுத்து வைக்கும்போது காயத்ரி சுபத்ராவை வெளியே போகச் சொல்லு என்பதை பலமுறை சொல்லிவிட்டாள்.

''காயூ, எல்லாம் கர்மவினை''

''ஆமா, எது நடக்கணுமோ அதுதான் நடக்கும்னு பேசிட்டு இரு''

காயத்ரி அழாத குறைதான். எனக்கு சுபத்ராவை வீட்டை விட்டு வெளியே அனுப்ப மனம் இல்லை. கோரன் பற்றிய அச்சம் எனக்கு நிறையவே இருந்தது.
மதியம்தான் சுபத்ரா வீட்டிற்கு வந்தாள்.

''டேய், ஒரு புது வீடு வாடகைக்கு எடுத்துட்டேன். ஒரு ரூம் மட்டும் தரேன்னு சொல்லி இருக்காங்க. லைப்ரெரி பக்கம் தான். அப்படியே இந்த ரெங்கநாதனை நல்லா திட்டிட்டு வந்துட்டேன். எல்லாத்தையும் என் வீட்டுல சொல்லிட்டான். நீ ஒண்ணும்  பரிணாமம் எல்லாம் ஆராய்ச்சி பண்ண வேணாம் வீட்டுக்கு வானு சொல்லிட்டாங்க. அடம் பிடிச்சி இன்னும் ஆறு மாசம்னு சொல்லிட்டு வந்து இருக்கேன். ஏன்டா  இந்த ஆம்பளை பசங்களுக்கு அறிவே இருக்காதா? அந்த கோரன் மடையன் எனக்கு போன் பண்ணி இன்னும் ஆறு மாசம் கழிச்சி உன்னை கொல்றேன்னு சொல்றான். உன் அட்ரஸ் தாடா இப்பவே வரேன் உன்னை கொல்றேன்னு சொன்னதும் போன  வைச்சிட்டான்''

சுபத்ரா மளமளவென பேசியது கண்டு என் அம்மா அப்படியே ஓரிடத்தில் தூணில் சாய்ந்து கொண்டார்கள். காயத்ரிக்கு முகமெல்லாம் சந்தோசம்.

''என்னடா ஒன்னும் பேசமாட்டேங்கிற, டேய் நான் உன்கூட இருந்தா இவ இருக்காளே அவளுக்கு இருப்பு கொள்ளாது, அதான் நான் வெளியே போய் உன்னை தொடர்ந்து காதல் பண்ணப் போறேன். உன் அம்மா கூட பாவம் ரொம்பவே இடிஞ்சி போயிட்டாங்க, இல்லையாம்மா''

''இந்த சின்ன வயசுல இப்படி இருக்கியே''

''எப்படி இருக்கேன், இல்லை எப்படி இருக்கேன், உங்க மகனுக்கு ஏத்த ஜோடி நான் தான், இவ யாரு? என்னை நீங்க மறந்து போயிட்டீங்களோ''

''ஏதோ  வீடு பாத்து இருக்கேன்னு சொன்னயில, போம்மா''

அம்மா அப்படி சொன்னதும் சுபத்ரா தனது பெட்டியை எடுத்துக் கொண்டு வரேன்டா என என்னிடம் மட்டும் சொல்லிவிட்டு வெளியேறினாள். சுபத்ராவை இருக்கச் சொல்ல எனக்கு வாய்ப்பு இன்றி போனது.

''அம்மா, அவ ஒண்ணுமே இல்லாத விஷயத்தை பெரிசு படுத்துறாமா''

''நீ பேசாம போடா, அவ எவ்வளவு திமிரா பேசுறா, காலையில காயத்ரியை ஓங்கி அடிக்கப் போயிட்டா. நான் அவளை நல்லா திட்டினேன் அதான் எங்கேயோ போயி வீடு பாத்து வந்துருக்கா''

''அம்மா அவ பாவம்மா, காயூ எதுக்கு இதை என்கிட்டே சொல்லலை''

''பாவம் அவ மேல தான் இருக்கும், அதான் சொல்லலை''

''காயூ என்ன நீ இப்படி பேசற''

''அவளை கண்டிச்சி வை''

''நீங்க ரெண்டு பேரும்  அடிச்சிக்க வேணாம்''

பல தினங்களாக சுபத்ராவை நாங்கள் பார்க்கவே இல்லை. ஒருமுறை கோரன் வீட்டுக்குப் போனபோது வேறு ஒரு குடும்பம் அங்கே குடி வந்து இருந்தது. விசாரித்துப் பார்த்ததில் வீட்டை விலைக்கு வாங்கி விட்டதாக சொன்னார்கள்.

இந்த உலகில் என்ன நடக்கிறது, எப்படி நடக்கிறது என இதுவரை எவருமே சரியாக சொன்னது இல்லை.

(தொடரும்)









No comments: