Saturday 26 May 2012

எனக்கு ஏனிந்த வேலை

ந்த சாமியார், ஜோசியர், குறி சொல்பவர் என்பவர்களையெல்லாம் நீக்கிவிட்டேன். ஆச்சரியம் எனக்கு ஒரு வேலை கிடைத்து இருந்தது. ஒரு காலை முழுவதும் செய்த வேலையில் சரியான அலுப்புடன் வீடு வந்து சேர்ந்தேன். என்னால் நம்ப முடியவே இல்லை. நான் காண்பது கனவா, நினைவா எனும் கேள்விக்குறிகள் என்னுள் ஈட்டியாக பாய்ந்து கொண்டிருந்தன. கண்களை கசக்கி கொண்டு பார்த்தேன். ஆனால் பார்த்தது நிஜம் தானா என ஊர்ஜிதம் செய்து கொள்ளவே முடியவில்லை. மீண்டும் கண்களை கசக்கினேன். இப்படி கண்களை கசக்குவதால் மூளைக்கு செல்லும் நரம்புகளும் கசக்கப்படும் என ஒரு வாக்கியம் நினைவுக்கு வந்து போனது. 

வார்த்தை குளறியதால் வாய் குளறியது. நீங்கள் பரந்தாமன் நாராயணனா? என்றேன். அங்கே நின்றவர் ஒரு பெரிய புன்னகையை வீசிக்கொண்டு நின்றார். சொல்லுங்கள், நீங்கள் பரந்தாமன் நாராயணனா? என்றேன் மீண்டும். அதே புன்னகை. அருகில் சென்று உடலைத் தொட்டேன். எனது உடல் சில்லென்றது. ''உங்களைத் தொட்டதால் உலகில் உள்ள அனைத்தையும் தொட்டது என்றாகுமோ?'' என்றேன். மீண்டும் புன்னகை. 

''எனது வீட்டில் நீங்கள் எழுந்தருளியிருப்பது எனது பாக்கியம், வாருங்கள் இதோ இந்த நாற்காலியில் அமருங்கள். உனது நாற்காலி எல்லாம் எதற்கு, நானே நாற்காலி செய்து கொள்வேன் என்றெல்லாம் சொல்லி விடாதீர்கள்'' என்றேன். அதே புன்னகை. எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. வீட்டில் வேறு எவரையும் காணவில்லை. பரந்தாமன் நாராயணன் வந்தது தெரிந்தால் அம்மா எத்தனை சந்தோசம் கொள்வார் என அடுப்பங்களைக்கு ஓடினேன். ஏதாவது ஒரு பானையில் ஒரு சோறாவது ஒட்டி இருக்கிறதா என தேடினேன். 'பரந்தாமன் ஒரு சோறு உட்கொண்டால் உலகில் உள்ள ஜீவராசிகள் அனைத்தும் பசியாறிவிடும் அல்லவா'' என்று பார்க்க சட்டி நிறைய சோறு இருந்தது. இந்த சட்டி நிறைய இருக்கும் சோற்றில் எந்த ஒரு பருக்கையை மட்டும் எடுத்துக்கொண்டு செல்வது என நினைத்துக்கொண்டிருக்க, பரந்தாமன் போய்விடுவாரோ என ஓடி வந்து பார்த்தேன். அதே புன்னகையுடன் நின்று கொண்டிருந்தார். 

சரி ஆனது ஆகட்டும் என கண்களை மூடி ஒரு பருக்கையை மட்டும் எடுத்துக்கொண்டு பரந்தாமனின் கையில் வைத்தேன். எனது வயிறு நிறைந்தது போலிருந்தது. ஒவ்வொரு சோறாக எதற்கு நாட்கள் முழுக்க பரந்தாமன் உண்ணக்கூடாது என மனதில் நினைத்தேன். அதே புன்னகை. அந்த நேரம் பார்த்து மின்சாரம் போய்விட்டது. வீட்டில் எரிந்து கொண்டிருந்த ஒளி அணைந்து போனது. பரந்தாமா, நீங்கள் பேரொளியிருக்க இந்த ஒளி எல்லாம் எதற்கு என்றே சொன்ன பிறகும் இருட்டாகவே இருந்தது. இருளில் நீங்கள் இருப்பது இல்லையோ? என்றே கேட்டேன். இப்போது ஒலி மட்டும் வழி கொண்டிருக்க ஒளி தெளிவின்றி இருந்தது. பரந்தாமன் கொண்டது புன்னகையா இல்லையா என தெரியவில்லை. 

சிறிது நேரத்திற்கெல்லாம் எவர் செய்த புண்ணியமோ மின்சாரம் வந்து சேர்ந்தது, அப்படியெனில் எவர் செய்த பாவத்தினால் மின்சாரம் போனது என்றே நினைத்துக்கொண்டே பரந்தாமா இவ்வுலகில் எதற்காக ஜீவராசிகளைப் படைத்தாய்? அதுவும் என்னை எல்லாம் எதற்காக படைத்தாய்? என்றேன். அதே புன்னகை. எனக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது. இத்தனை பேசியும் எதுவுமே சொல்லாமல் இப்படி மெளனமாக நின்று கொண்டிருக்கிறாரே என மனதில் தைரியம் வரவழைத்துக்கொண்டு வீட்டில் இருந்த பூமாலைகள் எடுத்துகொண்டு வந்து அவரின் கழுத்தில் போட்டேன். மாலை சூடிய மங்கை ஆண்டாள் நான் இல்லை என்றாலும் மரியாதை செலுத்தும் பக்தனாக பரந்தாமன் கண்ணுக்குத் தெரியட்டும் என நினைத்தேன். மீண்டும் அதே புன்னகை. 

ஒரு நன்றியாவது செலுத்தமாட்டாயா என்றே கேட்டேன். அதே புன்னகை. இதோ உலகில் உள்ள பாவங்களையெல்லாம் போக்காமல் எதற்காக பார்த்து கொண்டிருக்கிறாய் என்றேன். மீண்டும் புன்னகை. இன்னும் நின்று கொண்டிருக்கிறீர்களே, அமருங்கள் பரந்தாமா என்றேன். புன்னகை மட்டுமே கண்ணுக்குத் தெரிந்தது. இந்த உலகில் மனிதர்கள் அவர்களுடைய காரண காரியங்கள் படி செயலாற்றி கொண்டிருக்க அவர்களை திருத்துவது மாற்றுவது எல்லாம் அவசியமில்லாத வேலை என்று நினைக்கிறீர்களோ பரந்தாமா? என்ற நான் அவருக்காக ஒரு பாசுரம் பாடினேன். பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு பலகோடி நூறாயிரம், மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா உன் சேவடி செல்வித்திரு காப்பு. அந்த பாடலை பாடிய பின்னரும் அதே புன்னகை. எப்படி பரந்தாமா இப்படி இருக்க முடிகிறது உங்களால், பதில் சொல்லுங்கள் பதில் சொல்லுங்கள் என கண்ணை மூடி சத்தம் போட்டேன்.

யாரோ தொட்டு எழுப்புவது போன்று இருந்தது. பரந்தாமன் தான் என்னை தொடுகிறானோ என நினைத்தேன். கண்களைத் திறந்த போது எதிரே அம்மா நின்று கொண்டிருந்தார்.

''மதிய வேளையில் கூட என்னடா தூங்கிண்டு இருக்கே, மணி நாலரையாறது. இன்னைக்குத்தான் கோவில் அர்ச்சகரா வேலைக்கு சேர்ந்தே அதுக்குள்ள இப்படித் தூக்கமா. முகத்தை அலம்பிண்டு நீர் ஆகாரம் குடிச்சிட்டு கோவிலுக்குப் போய் மாலை பூஜை எல்லாம் ஆரம்பி' என அம்மா என்னை எழுப்பி சொன்னதும் 'அம்மா, அம்மா அந்த பரந்தாமன் என் கனவுல வந்தாரும்மா' என சொல்லிக்கொண்டே அடுப்பங்களையில் இருந்த சோற்றுப்பானையை திறந்து பார்த்தேன். ஒரே ஒரு சோறு மட்டும் ஒரு ஓரத்தில் ஒட்டிக்கொண்டு இருந்தது.

என் பின்னால் வந்த அம்மாவிடம் இதோ ஒரு சோறு என்றேன். நான் பாத்திரத்தை சரியா கழுவாம வைச்சிட்டேன்டா என்றார். இருக்கட்டுமா என்று ஒரு சோற்றினை மட்டும் எடுத்துக்கொன்டு கோவில் நோக்கி புறப்பட்டேன். உலகில் உள்ள உயிர்களின் பசியை போக்குவார் என்கிற அதீத நம்பிக்கையுடன்.

2 comments:

ராஜ நடராஜன் said...

எங்கே ஆளைக்காணோமேன்னு பார்க்கவந்தால் இன்னும் தூக்க கலக்கத்திலேயே இருக்கிற மாதிரி தெரியுது.

bantlan with love said...

hii.. Nice Post

Thanks for sharing

Celeb Saree

For latest stills videos visit ..