Tuesday 5 May 2015

நுனிப்புல் பாகம் 3 - 2

நுனிப்புல் பாகம் 3 - 1

2. சுந்தரனின் இரண்டாவது காதல்

சுந்தரன் இன்று தன்னுடன் வேலைப் பார்க்கும் பிரபாவிடம் தனது விருப்பத்தைச் சொல்லிவிடலாம் என தீர்மானம் கொண்டான். பிரபா குறித்து ஓரளவுக்குத் தகவல்கள் சேர்த்து வைத்து இருந்தான். பிரபா சம்மதம் சொல்லிவிட்டால் பிரச்சினை இருக்காது என்றே திட்டமிட்டான். பாரதியுடன் நேர்ந்தது போலத் தனக்கு மீண்டும் ஒரு ஏமாற்றம் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதில் சற்று பதட்டம் இருக்கத்தான் செய்தது. வாசனின் கவிதைப் புத்தகம்தனை தேடினான். அதில் இருக்கும் சில கவிதைகளை மனப்பாடம் செய்து கொண்டான்.

சேகர், அருண் வரும் முன்னரே வேலைக்குச்  சென்று சேர்ந்தான் சுந்தரன். பிரபாவும் கொஞ்சம் தாமதமாகவே வந்து சேர்ந்தாள். பிரபா, மாநிறம். நடுத்தர உயரம். இங்கு வேலைக்குச்  சேர்ந்து ஆறு மாதங்களே ஆகிறது. எல்லோரிடம் நன்றாக பழகும் குணம்.

எப்போது பிரபாவிடம் பேசும் தருணம் கிடைக்கும் என சுந்தரன் எதிர்பார்த்துக் கொண்டு இருந்தான். மனம் வேலையில் ஒட்டவில்லை. அருண் கூட இரண்டு முறை சுந்தரனை வந்து சத்தம் போட்டுச் சென்றான். மதிய வேளையில்தான் நேரமே கிடைத்தது. எப்படியும் சொல்லிவிட வேண்டும் எனும் எண்ணத்தில் பிரபாவை நோக்கிச் சென்றான் சுந்தரன்.

''பிரபா, உன்கிட்ட ஒரு முக்கிய விஷயம் பேசணும்''

''என்ன திடீருனு''

''நீ யாரையாச்சும் காதலிக்கிறியா''

''இல்லை, எதுக்கு இந்த கேள்வி. நான் இங்க வேலைக்கு சேர்ந்ததுல இருந்து பார்க்கிறேன், உன்னோட பார்வை சரியில்லையே''

''உன்னை யாரும் காதலிக்கிறாங்களா''

''எனக்கு எப்படித்  தெரியும், இதுவரைக்கும் யாருக்கும் சொல்ல தைரியம் இருந்தது இல்லை, ஆமா என்ன இன்னைக்குப் பேச்சு ஒருமாதிரியா இருக்கு''

''உன்னை எனக்குப் பிடிச்சிருக்கு, உன்னை நான் காதலிக்கலாமா?''

இதைக் கேட்டதும் பிரபா குலுங்கி குலுங்கிச் சிரித்தாள்.

''என்ன சிரிக்கிற?''

''காதலிச்சிக்கோ, யாரு வேணாம்னு சொன்னாங்க''

''உனக்காக இந்த கவிதையை யோசிச்சி வைச்சேன், நீ கேளு''

''கவிதை எழுதுவியா, சொல்லு கேட்கலாம்''

''நான் மட்டும் இருந்தேன்
உலகம் வெறுத்தது
நீ என் உடன் வந்தாய்
உலகம் இனித்தது''

''நீதான் எழுதினியா?''

''ஆமாம், இன்னொரு கவிதை கேளு''

''சொல்லு''

''பொய் உரைக்க வருவதில்லை
ஐயம் உள்ளத்தில் எழுவதில்லை
உன்னுடன் பேசுவதாலே''

''நிசமாவே நீதான் எழுதினியா''

''இதோ இதுவும்
வலி வந்ததும் உன்னை மட்டும் நினைத்தேன்
வந்த வழி நோக்கியே வலியும்  சென்றதே''

''வாசன் அப்படின்னு ஒரு கவிஞர் உனக்குத் தெரியுமா?''

''யார் வாசன்?, என்ன கவிஞர்?''

''நீ சொன்ன கவிதை எல்லாம் நான் கவிதைப் புத்தகத்தில் படிச்சி இருக்கேன். என் வீட்டுல இந்த புத்தகம் இருக்கு. கிருத்திகா என்னோட சொந்தம்தான். தமிழரசி என்னோட அத்தை. இவங்களை உனக்குத் தெரியாதுன்னு சொல்லாதே. அவங்களோட எங்களுக்கு கொஞ்சம் மனஸ்தாபம், அதான் அவங்க யாரு நாங்க யாருனு இருக்கோம், ஆனா கிருத்திகா, பாரதி எல்லாம் என்னோட பேசுவாங்க. உன்னோட பார்வையை வைச்சி நான் உன்னை தெரிஞ்சிக்க முயற்சி பண்ணினப்ப நீ யாரு, பாரதி யாரு, இந்த கம்பெனி முதலாளி யாருனு எல்லாம் எனக்குத் தெரியும். உன்னை திட்டிகிட்டே இருப்பாரே அருண் அவர் கூட யாருனு தெரியும்''

''பிரபா அது வந்து''

''பொய் உரைக்க வருவதில்லை அதை நீ சொல்லி இருக்கக்கூடாது, உனக்கு பாரதியோட லவ் பெயிலியர், இப்போ என்கிட்டே முயற்சி பண்ற. என்கிட்டே பெயிலியர் ஆயிருச்சினா அடுத்து யாரு''

''இல்லை பிரபா, உன்னை எனக்கு நிறையப் பிடிச்சி இருக்கு''

''எதுக்கு இப்படி காதலிக்கத் துடிக்கிற''

''காதலிக்காம கல்யாணம் பண்ணினா வாழ்க்கை நல்லா இருக்காது''

''யார் சொன்னா''

''எனக்குத் தெரியும், நானாத்தான் சொல்றேன்''

''சுந்தரா அங்கே என்ன பேசிட்டு இருக்க, மணி என்ன ஆகுது. பிரபா அவனோட உனக்கு என்ன பேச்சு''

அருண் அவர்களை நோக்கி கத்தியபடியே வந்தான். சுந்தரன் பிரபாவிடம் சொல்லிவிடாதே என கண்களால் கெஞ்சினான்.

''இல்லை சார், சில புரோசெசிங் எல்லாம் இன்னைக்குள்ள பண்றதைப் பத்தி சொல்லிட்டு இருந்தார்''

''சுந்தரா, ஒழுங்கா வேலையை மட்டும் பாரு. நீ எனக்கு நிறைய உதவியா இருக்கிறனுதான் இன்னும் இங்கு இருக்க. வேலை இடத்தில இப்படி வெட்டியா நின்னு பேசிட்டு இருந்த குளத்தூருக்கு பெட்டியை கட்டு''

''வேலை பத்திதான் பேசிட்டு இருந்தேன்''

''போ, எதிர்த்துப் பேசாத''

சுந்தரனை  இது போல பலமுறை அருண் அவமானபடுத்திக்கொண்டே இருந்து வருகிறான். தனது தங்கையை காதலித்தான் என்கிற ஒருவித மன எரிச்சல் அவனுடன் இருந்து கொண்டே இருந்தது. வேறு வழியின்றி இதை எல்லாம் பொறுத்துக் கொண்டே இருப்பது சுந்தரனுக்கு பழகிவிட்டது. வாசனின் கவிதைகள் இத்தனை தூரம் பிறர் தெரிந்து இருப்பார்கள் என சுந்தரன் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.

அன்று மாலை வேலையை முடித்து கிளம்பும்போது சேகர் வந்து சுந்தரனை வீட்டுக்கு தன்னுடன் வருமாறு அழைத்தார். சுந்தரன் தான் ஓரிடம் செல்ல இருப்பதாக சொல்லி பிறகு வருகிறேன் என சொல்லி அனுப்பினான். அருண் சுந்தரனை முறைத்துப் பார்த்துவிட்டு 'வேகாம வீடு வந்து சேரு' என எச்சரித்துச் சென்றான்.

வீட்டிற்கு கிளம்பிய பிரபா சுந்தரனிடம் வந்தாள். அவர்கள் இருவரும் சேர்ந்து பக்கத்தில் இருக்கும் ஒரு காபி கடைக்கு சென்றார்கள். இவர்கள் இருவரும் இப்படி சேர்ந்து செல்வது இன்றுதான் முதல்முறை.

''சுந்தரா, சொந்தமா ஒரு கவிதை எழுதி எனக்குத்  தா, இப்படி அடுத்தவங்க கவிதையைத் திருடாதே. உன்னை அருண் சார் எப்படி அவமானப்படுத்துறார், உனக்கு வேற வேலை இந்த ஊரில கிடைக்காதா?''

''இல்லை பிரபா, வேற எங்கயாச்சும் வேலைக்குப் போனா ஊருல திட்டுவாங்க, அதுக்கு இவர்கிட்ட திட்டு வாங்கிட்டுப் போயிரலாம். உன்னை நான் காதலிக்கலாமா''

''இனிமே திட்டு வாங்காம இருக்கப்பாரு. வாரத்தில மூணு நாளு திட்டு வாங்கிருற''

''என்மேல இருக்கப் பிரியத்திலதான நீ அருண் கிட்ட சொல்லலை''

''பாவமா இருந்துச்சி, அதனால்தான் சொல்லலை, சரி நீயா யோசிச்சி ஒரு கவிதை இப்போ சொல்லு''

''சூரியன் ஒளி  தொலைத்தாலும்
உனது ஒளி
ஒருபோதும் என்னுள் தொலையாதே

நிலவு சுற்றுப்பாதை
மறந்தாலும்
உன்னை பின்தொடரும்
பாதை எனக்கு மறக்காதே

கொடுங்கனவு ஒன்றில்
நீ வந்து நின்றதும்
மகிழ்கனவாக மாறுதே

என் அழகு பன்மடங்கு
கூடிவிடும்
என் உலகு சிறந்து
மலர்ந்து விடும்
நீ மட்டும் காண்பதாலே

என் மதியும் மயங்கும்
வான் மதியும் தயங்கும்
உன் அழகை காண்பதாலே''

சுந்தரன் மடமடவென சொல்லி முடித்தான். பிரபா குலுங்கி குலுங்கி மீண்டும் சிரித்தாள்.

''என்ன சிரிக்கிற பிரபா''

''மறுபடியும் வாசன் கவிதைகளா''

''உனக்கு எப்படி இத்தனை ஞாபகமா தெரியும்''

''அப்போ அப்போ எடுத்துப் படிப்பேன், இதுமாதிரி நிறைய கவிதைகள் மனசுல பதிந்து இருக்கு. எல்லோரும் சொல்றதுதானே''

''என்னை உனக்குப் பிடிச்சி இருக்கா''

''காதலில் தோத்து இருக்க, அதனோட வலி உனக்குத் தெரியும். அதனால என்னை நீ ஏமாத்தமாட்டனு நம்பலாம்''

''அப்படின்னா என்னை நீ காதலிப்பியா''

''நீதான் என்னை காதலிக்க ஆரம்பிச்சிட்டியே''

''உனக்கு கவிதைப் பிடிக்குமா''

''ஆமாம்.

சாப்பிட்டு முடித்து இருந்தேன்,
மீண்டும் பசித்தது.
அப்போதுதான் உணர்ந்தேன்
நீ இன்னும் சாப்பிட்டு இருக்கவில்லை என''

''சூப்பர் சூப்பர்''

''இதுவும் வாசன் எழுதின கவிதைதான். நான் ஒண்ணும்  எழுதலை. இந்த கவிதையை மனப்பாடம் பண்ணலையா''

''பிரபா உங்க வீட்டுல நீ ஒரே பொண்ணுதான. உனக்கு அப்பா இல்லைதானே. உங்க அம்மா கூட பள்ளிக்கூட டீச்சர்''

''நான் யாரு என்ன பண்றேன் எங்க குடும்பம் எப்படி அப்படின்னு ஊரெல்லாம் விசாரிச்சி இருக்கப்போல''

''உங்க சொந்தம் பந்தம் எல்லாம் விசாரிக்கலை. உங்க வீடு பக்கம் கூட நிறையவாட்டி வந்து இருக்கேன்''

''கள்ளத்தனம் உன்கிட்ட நிறைய இருக்கு''

''இல்லை, உன் மேல இருக்கிற அக்கறைதான்''

''பார்க்கலாம் எப்பவுமே இருக்குமான்னு''

இருவரும் வீட்டிற்கு கிளம்பினார்கள். பிரபாவுடன் அவளது வீடு வரை வந்து விட்டுவிட்டே தனது வீடு நோக்கிச் சென்றான் சுந்தரன். அன்று இரவு சாப்பிட அனைவரும் அமர்ந்து இருந்தார்கள். சேகர் சுந்தரனை நோக்கி கேட்டார்.

''பிரபாவுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்?''

''எந்த சம்பந்தமும் இல்லை''

''சுந்தரா, என்கிட்டே நீ எதையும் மறைக்க நினைக்காதே, உண்மையை சொல்லு. என்னை நம்பித்தான் உன்னை உங்க அப்பா அம்மா இங்கே அனுப்பி இருக்காங்க''

''எங்க ரெண்டு பேருக்கும் ஒருத்தர் ஒருத்தரை பிடிச்சி இருக்கு''

''அப்பா இவனை நம்ம வீட்டை விட்டு வெளியேப் போகச்  சொல்லுங்க. இவனால நமக்குப் பிரச்சினைதான்''

அருண் சற்று கோபத்துடன் சொன்னான். பாரதி எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள்.

''இரு அருண். நீ இவனை இனிமே வேலை இடத்தில திட்டுறதை குறை. எத்தனை தடவை சொல்றது. சுந்தரா, நீ வேலை இடத்தில் வேலையில்  கவனமா இரு. நான் பிரபா அம்மாகிட்ட பேசுறேன். எதுவும் பிரச்சினை வராமல் இருக்கணும்''

''நான் எதுவும் பிரச்சினை பண்ணமாட்டேன்''

''அப்பா, என்ன நீங்க. இவனை...''

''அருண். நீ தலையிடாதே''

சுந்தரனுக்கு அன்று நிம்மதியாக இருந்தது. தன்னை சேகர் ஐயா புரிந்து இருக்கிறார் எனும்போது சற்று ஆறுதலாக இருந்தது, இல்லையெனில் இந்த அருண் பெரிய பிரச்சினை பண்ணி இருப்பான். தன்னை நிராகரித்த பாரதிக்கு இது ஒரு நல்ல பாடமாக இருக்க வேண்டும், அவளுக்குள் ஒரு வலி உண்டாகி இருக்க வேண்டும். அதனால்தானே அமைதியாக இருந்தாள்  என சுந்தரன் நினைத்தான்.

சுந்தரன் வாசனின் கவிதைப் புத்தகத்தைப் புரட்டினான்.

'எல்லாம் சொல்லிவிட்டாயா என்றாள்
ஆம் என்றேன்.
இனி நீ சொல்ல ஒன்றும் இல்லைதானே? என்றாள்.
உன்னை காதலிக்கிறேன் என்றேன்.
வெட்கித்  தலை குனிந்தாள்'

(தொடரும்)





Sunday 3 May 2015

நமது திண்ணை - சிற்றிதழ் வடிவமைப்பு

பொதுவாக ஒரு புத்தகமோ, மாத இதழோ, வார இதழோ அதன் வடிவமைப்பு மிகவும் முக்கியமானது. கைக்கு அடக்கமாகவும், தூக்குவதற்கு ஏதுவாகவும்  இருப்பவை பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் இருக்கும். ஆனால் இப்போது இணையத்தில் வெளியிடும் வகையில் புத்தகங்கள் எல்லாம் வந்துவிட்ட சூழலில் கருப்பு வெள்ளை என பழைய முறையை பின்பற்றியே வெளியிடுவது ஒரு வழக்கமாக இருந்து வருகிறது. ஒவ்வொரு பக்கத்திற்கும் மெனக்கெட்டு வண்ணம் மாற்றி செயல்படுவது அவசியமற்ற ஒன்றாகவே கருதப்படுகிறது. ஆனால் இணையதளத்தை பார்த்தோம் எனில் படிப்பவர்களின் மனதை கவரும் வண்ணம் ஒவ்வொரு பக்கமும் சிறப்பாக செய்து இருப்பார்கள். அதற்கு அவர்கள் செலவிடும் நேரம் அந்த வடிவமைப்புக்கு உரிய சிந்தனை என உடன் இருந்து பார்த்து இருப்பதால் பிரமிப்பு ஏற்பட்டது உண்டு.

மிகவும் சரியாக வண்ணக்கலவை, அந்த இணையதளம் என்ன சொல்ல வருகிறது என்பதை வெளிக்காட்டும் பாங்கு என இருக்க வேண்டும். அப்படி ஒரு விஷயத்தை இணைய இதழாக வெளிவரும் நமது திண்ணை சிற்றிதழில் முயற்சித்தால் என்ன என திரு அல்  அமீன் அவர்களின் சிந்தனை ஒரு செயல்பாட்டாக மாறி இருக்கிறது. இதழ்களின் வடிவமைப்பு பற்றி முன்னரே குறிப்பிட்டு இருந்தாலும் இந்த இதழின் வடிவமைப்பு குறித்து சற்று பார்ப்போம். அதாவது வடிவமைப்பு மெருகேற்றினால் இந்த சிற்றிதழின் அளவு அதிகமாகும் அபாயம் இருக்கிறது. அப்படி அளவு அதிகமாகும்போது தரவிறக்கம் செய்ய அல்லது பிறருக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்ப சிரமம் உண்டாகும்.

சரி வடிவமைப்புக்கு செல்வோம். முதல் பக்கம் அத்தனைத் தெளிவாக இல்லை. சமீபத்தில் மறைந்த திரு ஜெயகாந்தன் அவர்களின் படத்தை கொண்டு அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது. நான் 50% அளவில் தான் பார்க்கிறேன் ஆனால் தெளிவு இல்லை. மொபைல் மூலம் செய்வதாலோ அல்லது பெறப்பட்ட படம் அத்தனை தெளிவான ஒன்று என இல்லாததாலோ அத்தனை சிறப்பாக வரவில்லை. சற்று கவனம் செலுத்தலாம். பளிச்சென மனம் ஒட்ட  வேண்டும்.

இரண்டாவது பக்கம் சற்று நன்றாக இருக்கிறது. மிகவும் தெளிவாக வடிவமைக்கப்பட்டு வரவேற்பு இதழ் போல உள்ளது. அடுத்த பக்கம் அதே பிரச்சினை. பின்புறத்தில் என்ன இருக்கிறது (பெண் முகம்) என தெளிவாகத் தெரியவில்லை. கவிதை சோகத்தைத் தாங்கி இருப்பதால் பின்புறம் சோகமாக இருக்கட்டும் என விட்டுவிட்டார்.

அடுத்து வருகிறது எனது கதை. இங்கே தான் வண்ணமயமாக்கல் தொடங்குகிறது. கருப்பாக இருந்தபோது இல்லாத தெளிவு வண்ணத்தில் தெளிவாக இருக்கிறது. எனது கதைக்கு நான் எந்த ஒரு யோசனையும் அவரிடத்து சொல்லவில்லை. எனக்கு இந்த பின்புற படம் பார்த்தபோது பிரமிப்பு ஏற்பட்டது உண்மை. எத்தனைப் பொருத்தம். எழுத்தும் வண்ணம் கொண்டு இருப்பது படிப்பதற்கு இடைஞ்சலே இல்லை. எனது கதை என்பதால் எனக்கே ஒரு தனி கர்வம் தந்தது என்றால் மிகையாகாது.

அடுத்து அடுத்த பக்கங்கள்  மிகவும் ஜொலிக்கின்றன. நல்ல வண்ண நிறங்களுடன் கூடிய நகைச்சுவை பக்கம். நினைவலைகள் பசுமையாக இல்லாது இருப்பதை காட்டும் வண்ணம் என பக்கவாட்டில் ஒரு வண்ணம் என நன்றாகவே இருக்கிறது. அடுத்த பக்கத்தில் மரத்தின் கீழ் உள்ள ஒரு சிறுவனின் ஓவிய அமைப்பு என வண்ணங்கள் தெளித்து சிறப்பித்துவிட்டார். திருப்பூர் என்பதற்கு திரைப்படத்தில் வருவது போல பெயர்ப்பலகை மற்றும் பின்னணியில் ஒரு வாகனம் என சிறப்பாகவே இருக்கிறது. வண்ணம் நமக்கு எரிச்சல் தரவே இல்லை.

அக்ஷய திரிதி முதல் பக்கம் கருப்பு பின்புலம் சரியில்லை. தங்க நாணயங்கள் சரியாக தெரியவில்லை. இனி வரும் இதழில் இந்த சாம்பல், கருப்பு வண்ணங்களை பின்புறத்தில் இருக்குமாறு உள்ளதை தவிர்க்கலாம். அடுத்த பக்கம் மீண்டும் அருமையாக வந்து இருக்கிறது. பஜ்ஜி ரொட்டி எல்லாம் நன்றாகவே இருக்கிறது. திரு அல் அமீன் அவர்களின் உழைப்பு ஒவ்வொரு பக்கத்திலும் தெள்ளத் தெளிவாக அறிய முடிகிறது. கிளிக்ஸ் பை மீ பக்கமும் நன்றாகவே இருக்கிறது.

ஸ்ரீராமானுஜர் பக்கங்கள் மிகவும் அருமை. இப்படிப்பட்ட ஒரு தெளிவான படத்தை முதல் பக்கத்தில் திரு ஜெயகாந்தன் அவர்களுக்கு அலங்கரித்து  இருக்கலாம்.எனக்கு வண்ண வண்ண எழுத்துகள் மிகவும் பிடிக்கும். சலிப்பு ஏற்படுத்தாத வண்ணம் பின்புறத்தில் ராமானுஜர் இருப்பது வெகு சிறப்பு. திண்ணை பாடகி பக்கமும் அருமையாகவே இருக்கிறது.

பாடல் பரவசம் பின்புறம் அத்தனை தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் பெண், மாட்டுவண்டி, நிலம் என சிறப்பு படுத்தி இருக்கிறார். கருத்தம்மா என தெரிகிறது. நல்லதொரு முயற்சி. மழலையர் மன்றம் பின்புறம் நன்றாக இருக்கிறது என்றாலும் புத்தகங்கள் பற்றிய பக்கங்களில் அத்தனைத் தெளிவு இல்லை. ஆனால் வடிவமைப்பு வெகு சிறப்பு. மேடைப்பேச்சு பக்கங்கள் வடிவமைப்பு சிறப்பு. கடைசிப் பக்கத்தில் வாலி நன்றாகத் தெரிகிறது.

வண்ணமயமான இந்த சிற்றிதழ் மொத்தத்தில் 88 சதவிகிதம் வடிவமைப்பு வெகு சிறப்பாக அமைந்து இருக்கிறது. இது எத்தனை கடினம் என்பதை உழைப்பவரிடத்து மட்டுமே அறிந்து கொள்ள முடியும். நான் இதை எழுத எடுத்தக்கொண்ட நேரம் 46 நிமிடங்கள் மட்டுமே. ஆனால் இதை வடிவமைக்க எத்தனை மணி நேரங்கள் செலவிட்டு இருப்பார் என்பதை என்னால் யூகிக்க முடிகிறது. ஒவ்வொரு வரிகளுக்கும் வண்ணம் கொடுத்து பின்புறம் அந்த எழுத்துகளை பாதிக்காது இருக்கும் வண்ணம் வடிவமைத்து ஏதோ  ஒரு இணைய இதழ் வெளியிட்டோம் என இல்லாமல் இத்தனை சிறப்பாக செய்து இருக்கும் திரு அல்  அமீனுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்.

இங்கே எழுதப்பட்டவை எனது பார்வையில் தென்பட்ட சிறு சிறு குறைகள்தானே  தவிர உங்கள் உழைப்பை ஒருபோதும் குறைத்து மதிப்பிட இயலாது. ஒரு படைப்பினை வெளியிட்டு அதற்கு கிடைக்கும் பாராட்டோ, திட்டோ அது நமக்கானது என எண்ணும்  மனநிலை எனக்கு இருப்பது போல உங்களுக்கும் இருப்பது அறிவேன்.

நமது திண்ணை தமிழில் ஒரு அற்புத இணைய சிற்றிதழ் என கூறிக்கொண்டு ஆசிரியர் திரு ஆந்தைகண்ணன் மற்றும் திரு அல்  அமீன் அவர்களுக்கு எனது நன்றிகலந்த வணக்கங்களைத்  தெரிவித்துக் கொள்கிறேன். 

Friday 1 May 2015

நமது திண்ணை மே மாத இணைய சிற்றிதழ்

ஒரு விசயத்தை தனலாபம் இல்லாமல் தொடர்ந்து செய்வதற்கு ஒரு தனித்துவமிக்க ஈடுபாடு மிக மிக அவசியம். அது மட்டுமில்லாமல் மிகச் சிறந்த வரவேற்பும் அதைச் சார்ந்த மக்களிடம் இருந்து தொடர்ந்து இருக்க வேண்டும். அப்படி இல்லாதபோது ஒரு விஷயம் பெரும் தொய்வினை சந்திக்கும் என்பது வலி தரும் செய்தி. இந்த உலகத்தில் பெரிய கண்டுபிடிப்புகள் எல்லாம் தனிப்பட்ட மனிதர்களின் ஆர்வத்தினால் உண்டானவை, அவர்களது வெற்றிக்கு காரணம் அவர்களுக்குத்  தொடர்ந்து பிறரது ஆதரவு இருந்ததுதான். நல்லதொரு ஆதரவை ட்விட்டர் மக்கள் நமது திண்ணை (சிற்றிதழுக்கு இங்கே அழுத்தவும்) இணைய சிற்றிதழுக்கு வழங்கி வருவது இணைய சிற்றிதழின் ஆசிரியர் மற்றும் சிற்றிதழ் வடிவமைப்பாளர் திரு அல்  அமீன் அவர்களின் ஆர்வத்தை மென்மேலும் உற்சாகமாக வைத்து இருக்கும் என்று உறுதியாக நம்பலாம். ஆசிரியரின் கருத்தும் இதையே பிரதிபலிக்கிறது.

ஸ்ரீராமானுஜர். சுசீமா அம்மா அவர்கள் எழுதும் ஒரு புதிய தொடர். இந்த தொடர் மூலம் பல புதிய விசயங்கள் அறிய முடிகிறது. எனக்கு அதிகமாக ஸ்ரீராமானுஜர் பற்றி தெரியாது  என்பதால் இந்த தொடர் எனக்கு பேரானந்தம் தரக்கூடிய ஒன்றாக அமையும் என்பதில் ஐயம் இல்லை. இங்கொன்று அங்கொன்று என இவர் குறித்த விசயங்கள் மட்டுமே அறிந்து வைத்து இருக்கிறேன். நாலாயிர திவ்விய பிரபந்தம் தனில் இவரது புகழ் பேசப்பட்டு இருக்கிறது. சமய ஒற்றுமை, மனித ஒற்றுமை குறித்து பாடுபட்ட ஒரு நற்பண்பாளர் என்பது எத்தனை பேருக்குத் தெரியும். அரங்கனின் கண்கள். விசிட்டாத்துவைதம். எனக்கு அத்வைதம், துவைதம் அடிக்கடி குழப்பத்தைத் தரக்கூடிய ஒன்று. விசிட்டாத்துவைதம் பற்றி எனக்குத் தெரியாமல் கல்லுக்கும் உணர்வு உண்டு, உணர்வற்ற நிலையில் உன் உணர்வு உண்டு என நாராயணனை நோக்கி எழுதியவை நினைவுக்கு வருகின்றன. நல்லதொரு அற்புத தொடர் அம்மா. வாழ்த்துக்கள்.

கமலா அம்மா அவர்களின் புற்றுநோய் குறித்த பதிவு அனைவருக்கும் நல்லதொரு விழிப்புணர்வு தரும் பதிவு. சமீபத்தில் நண்பர் புகழ் அவர்கள் ஒரு சாமியார் எனது புற்றுநோயை தீர்த்து வைக்கிறேன் என்று சொன்னால் அந்த சாமியாரை நம்பமாட்டேன், எனக்கு புற்றுநோய் என்று சொன்ன வைத்தியரைத்தான் சந்தேகிப்பேன் என்று எழுத அவருடனான எனது வறட்டுத்தனமான விவாதங்களை இப்போது எண்ணிப் பார்க்கிறேன். அதை ஒட்டிய கருத்துடன் இந்த பதிவு. மிக மிக அற்புதமாக எழுதி இருக்கிறீர்கள் அம்மா. மக்கள் எப்படி ஏமாறுகிறார்கள் எப்படி மக்களின்  பலவீனத்தை வைத்து ஏமாற்றுகிறார்கள் என தான் கண்ட நண்பரின் நிகழ்வு மூலம் விரிவாக சொல்லி இருக்கிறார். முந்தைய காலத்தில் ஹோமியோபதி, மூலிகை மருத்துவம் பயன்பாட்டில் இருந்து இருக்கிறது, இப்போது தொடர்கிறது ஆனால் அவற்றின் செயல்பாடுகள் குறித்து மருத்துவ ஆராய்ச்சி உலகம் எப்போதும் ஒரு சந்தேகப்பார்வை கொண்டு இருக்கிறது என்பது உண்மைதான். இந்த புற்று நோய்க்கு மருந்து எட்டாத கனி போலத்தான். இப்போது மருத்துவ உலகம் கொண்டுள்ள முன்னேற்றம் அம்மா அவர்கள் சொன்னது போல முறையாக பரிசோதனை செய்து கொண்டு வாழ்வதே நல்லது. வாழ்த்துக்கள் அம்மா.

உமாகிருஷ் அவர்களின் பாடல் அலசல். இந்த பாடலை நான் கேட்டது உண்டு. இத்தனை உன்னிப்பாக கேட்டது இல்லை. இத்தனை விசயங்களை இந்த பாடல் சொன்னது என இன்றே இவரது பாடல் அலசல் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது. இதைத்தான் இலக்கியம் படைத்தல் என்பார்கள். அதாவது எழுதப்படும் வரிகள் அந்த மக்களின் வாழ்வைப் பிரதிபலிக்க வேண்டும். அதை இந்த பாடல் வெகு சிறப்பாக செய்து இருக்கிறது என அறிய முடிந்தது. எத்தனை கிராமத்து வார்த்தைகள். இவர் குறிப்பிட்ட வாழ்க்கை முறை எனக்கு மிகவும் பரிச்சயம். வெள்ளாமை, பொட்டக்காடு, கூழ், கஞ்சி என வாழ்ந்த வாழ்க்கையில் இருந்தது இவரது எழுத்தை அதிகம் நேசிக்க செய்தது எனலாம். வாழ்த்துக்கள். நாலு வரி நோட்டு போல இந்த தொடர் உருவாகலாம்.

சாய்சித்ரா அவர்களின் நகைச்சுவை என்றுமே என்னை குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும். அவரது பெயர் பார்க்காமல் படித்தும் கூட டிஷ் பற்றிய நகைச்சுவை சிரித்துக் கொண்டே இருக்க வைத்தது. மற்ற நகைச்சுவைகள் இம்முறை சுமார் ரகம் தான். விடுகதை இந்த முறை விடுபட்டு போய்  இருக்கிறது. சோபியா தங்கராஜ் அவர்களின் கவிதை ஒரு காதல் தொலைத்த சோகம் தான். நல்ல நல்ல வரிகள் கையாளப்பட்டு இருக்கிறது. சின்ன சின்ன விசயங்கள் என டிவிட்கள் அனைத்துமே வெகு சிறப்பு. எழுதியவர்களுக்கு மிகுந்த உற்சாகத்தைத் தரும் என நம்பலாம்.

அக்ஷ்ய திரியதை பற்றி ரவிக்குமார் வெகு சிறப்பாக எழுதி இருக்கிறார். வருடா வருடம் வீட்டில் எனக்கு இந்த நாளை ஞாபகபடுத்தி விடுவார்கள். நானும் இவரைப்போல கதை எல்லாம் சொல்லிப் பார்ப்பேன். ஆனால் வாழ்வில் சந்தோசம் என்பது சில நம்பிக்கைகள் உண்டாக்கி தருவது. எனவே எத்தனை சொன்னாலும் மக்களின் மனதில் சில விசயங்களை அகற்ற இயல்வதில்லை. இந்த வருடம் தான் அப்படி என்ன இந்த நாளுக்கு சிறப்பு எனத் தேடி அறிந்து கொண்டேன். அதைப்போல அனைத்து விசயங்களையும் சொல்லி இருக்கிறார். வாழ்த்துக்கள்.

ஒரு முழு பக்கத்தை நளபாகத்திற்கு ஒதுக்கி இருக்கலாம். நாங்கள் வீட்டில் ரொட்டியை வெட்டி பஜ்ஜி செய்வது வழக்கம். ஆனால்  இத்தனை விசயங்களை கொண்டு செய்வது என்பது இன்றுதான் அறிந்தது. சமையல் கலையை அறிந்தவர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். பசித்தால் உடனே விருப்பப்பட்ட ஒன்றை செய்து சாப்பிட்டுவிடலாம். நண்பர் ரவி வீட்டிற்கு விருந்தாளியாக சென்றால் நிச்சயம் வீட்டு சமையல் அதுவும் அவரின் சமையல் இருக்கும் என உறுதியாக நம்பலாம். எங்கள் வீட்டிற்கு வந்தால் ஏதேனும் ஒரு கடை பலகாரம் மட்டுமே.

திருப்பூர். இந்த ஊர் பற்றி மிக சிறப்பாக எழுதி இருக்கிறார் மணி. இவர் ஒரு நல்ல சிந்தனையாளர் கூட. எனக்கு கொடிகாத்த குமரன் மூலமே இந்த ஊர் அறிமுகம் என நினைக்கிறேன். பின்னர் பனியன் பற்றிய அறிமுகம். அடுத்து இந்த ஊரில் இருந்து நிறைய டிவிட்டர்கள் உண்டு என்பது தெரிய வந்தது. கோவை, திருப்பூர் போன்ற ஊர்கள் எல்லாம் தொழில் ஊர்கள் போலத்தான். தென்னிந்திய மான்செஸ்டர், குட்டி ஜப்பான் என பட்டப்பெயர்கள். இந்த ஊருக்கு இதுவரை சென்றது இல்லை. இந்த ஊரை சென்று பார்க்கும் ஆர்வத்தை உண்டுபண்ணி இருக்கிறது எழுத்து. வாழ்த்துக்கள்.

ரீவிஷாலின் ஓவியங்கள் வெகு அருமை. சிறுவர்களின் திறமையை வெளிக்கொண்டு வருவதில்  நல்லதொரு தொடக்கத்தை நமது திண்ணை உருவாக்கி இருக்கிறது. சோபியா துரைராஜ் அவர்களின் கவிதை மற்றுமொரு காதல் வலி சொல்லும் கவிதை. நல்ல நல்ல வரிகள் கையாளப்பட்டு மழையில் ஆரம்பித்து மழையில் முடிகிறது.

மழலையர் மன்றம் புகைப்படங்கள் மிகவும் அருமை. அர்விந்த் அவர்களின் நேர்காணல் வெகு சிறப்பு. மேடையில் நேரடி நகைச்சுவை சற்று கடினமான ஒன்று. பேசினால் அறுவை ஜோக் என சொல்லும் சமூகத்தில் ஒவ்வொரு வரிக்கும் சிரிப்பு என்பது எத்தனை கஷ்டம் என பல ஆங்கில நிகழ்வுகள் கண்டு எண்ணியது உண்டு.

புத்தகங்கள் குறித்தும் ஒரு எழுத்தாளனின் நிலையை குறித்தும் முத்தலிப் வெகு சிறப்பாக எழுதி இருக்கிறார். பாராட்டுக்குரிய விசயங்கள். புத்தகங்கள் பல வீணர்களை திருத்தி இருக்கிறது என்றே புத்தகத்தின் பெருமையை சொல்லும்போதே சாமி அறையை விட ஒரு நூலக அறையே வீட்டினை அலங்கரிக்க இயலும்.

பாடல் கேட்பது குறித்து ஹேமாமாலினி அவர்கள் குறிப்பிட்டு இருக்கிறார்கள். பாடல் பாடி பிறர் கேட்கும் வண்ணம் வைப்பது. அதாவது எல்லோருக்கும் பாடும் திறமை உண்டு. அதை உற்சாகப்படுத்தும் வண்ணம் இது அமையும்.

வாலி குறித்த ஆசிரியர் பார்வை வெகு சிறப்பு. ''ஒரே ஒரு விமர்சனம் மட்டும் தெளிவா வரணும்'' என தனது பணி குறித்து வடிவமைப்பாளர் அல்  அமீன் அவர்கள் கூறி இருப்பதால் அதை தனி பதிவாக வைக்கப் போகிறேன். சற்று பொறுத்துகொள்ளுங்கள் நண்பரே.

நமது திண்ணை நல்ல நல்ல விசயங்களுடன் வெகுசிறப்பாக இருக்கிறது ஆசிரியர் அவர்களே. உங்கள் நமது திண்ணை அனைவரது வீட்டிலும் வெகு விரைவில் கட்டப்பட வேண்டும் எனும் ஆசையை இங்கே எழுதி வைக்கிறேன்.

(தொடரும்)