Tuesday 6 January 2015

பொய்யான மனிதர்களின் கூடாரம்

'பக்தா, பக்தா' எனும் சத்தம் கேட்டு கண் விழிக்க முடியாமல் தவித்தேன்.

'என்ன பக்தா, நிறைய உறக்கமோ?' என்றபோது கூட என்னால் விழிக்க இயலவில்லை.

'நான் தான் சாமியார் வந்து இருக்கிறேன்' என்றதும் கண்களை கசக்கியவாறே  எழுந்தேன்.

'வாருங்கள் சாமி'

'என்ன பக்தா, என்னை காண வேண்டும் எனும் அக்கறை எதுவும் உனக்கு தோணவில்லையா?'

'உங்களை எனக்குத்தான் பிடிக்காதே, பின்னர் எதற்கு உங்களை நான் தேடி வர வேண்டும்?'

'அதுதான் நான் உன்னைத் தேடி வந்தேன் பக்தா'

'என்ன விஷயம் சொல்லிவிட்டு போங்க எனது உறக்கத்தை கெடுக்க வேண்டாம். யார் உங்களுக்கு கதவு திறந்து விட்டது?'

'உனது அன்னைதான் கதவு திறந்துவிட்டார், என்னை அமர சொல்ல மாட்டாயா?'

'சரி அமருங்கள்'

'பொய்யான மனிதர்களுடன் நிறைய சகவாசம் வைத்துக்கொண்டு இருக்கிறாயே பக்தா?'

'நீங்கள்தான் போலியானவர், நான் எதற்கு பொய்யான மனிதர்களுடன் சகவாசம் கொள்ள வேண்டும்?'

'என்ன பக்தா, எனக்கு எதுவும் தெரியாது என்று நீ நினைத்தாயா?'

'இதற்குதான் உங்களை எனக்கு கொஞ்சமும் பிடிப்பதில்லை, திடீரென வருகிறீர்கள், சம்பந்தமில்லாமல் பேசுகிறீர்கள்'

'பக்தா உனது நலமே எனது நலம். நீ பொய்யான மனிதர்களுடன் சகவாசம் வைத்துக் கொண்டு இருக்கிறாய்?'

'உங்கள் உளறலை நிறுத்துங்கள், அம்மா இந்த ஆளை எதற்கு உள்ளே விட்டீங்க, கழுத்தறுக்கிறான்'

'பக்தா, உனது நல்லதுக்கு சொன்னால் என்னை நீ கோவித்துக் கொள்கிறாயே'

'என்ன நல்லது? யாரை போலியான மனிதர்கள் என சொல்கிறீர்கள்?'

'நீ இணையத்தில் தொடர்பு கொண்டுள்ள மனிதர்களைத்தான் போலியானவர்கள் என்கிறேன்'

'இதற்கு மேல் பேசினீர்கள் சாமியார் என பார்க்கமாட்டேன், வெளியே போய்விடுங்கள்'

'என்ன பக்தா நீ செய்வது எனக்குத் தெரியாது என எண்ணிவிட்டாயா? முகமே தெரியாத மனிதர்களுடன் என்ன அப்படி ஒரு பழக்கம் உனக்கு வேண்டி இருக்கிறது. உனக்கு உன் பெற்றோர்கள் நல்ல பெண்ணை மணமுடித்து வைப்பார்கள் தானே, அதை விட்டுவிட்டு நீ எதற்கு முகம் தெரியாத பொய்யான பெண்களுடன் காதல் வசனம் பேசித் திரிகிறாய். நீ உண்மையானவனாக இருக்கலாம் ஆனால் அவர்கள் எல்லாம் பொய்யானவர்கள் எனும் ஒரு எண்ணம் உனக்கு வரவில்லையா? இணையம் பொய்யான மனிதர்களின் கூடாரம் பக்தா'

'போதும் நிறுத்துங்கள், எனது உயிர் நண்பர்கள் இருக்கிறார்கள். சிலரை சிறு வயது முதல் தெரியும். கல்லூரியில் பழகியவர்கள் என சிலர் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் எப்படி பொய்யான மனிதர்கள் ஆவார்கள். உங்கள் சாமியார் வேலையை மட்டும் பாருங்கள்'

'பதறாதே பக்தா, உனது உயிர் நண்பர்கள் பற்றி நான் எதுவும் சொல்லவில்லை. முகமே அறியாத, எவ்வித அறிமுகமும் இல்லாத மனிதர்களுடன் உனக்கு என்ன பழக்கம் என்றுதானே கேட்கிறேன். அதுவும் உனக்கு இந்த பொய்யான மனிதர்களுடன் என்ன பழக்கம் வேண்டி இருக்கிறது என சொல். நீ பண்ணுவது எத்தனை குற்றம் தெரியுமா?'

'என்ன குற்றம் கண்டுவிட்டீர்கள்'

'பக்தா, அவர்கள் எல்லாம் தங்களது வாழ்வில் அக்கறை இல்லாதவர்கள், அவர்களுக்கு எல்லாம் அது ஒரு பொழுதுபோக்கு ஆனால் நீ அப்படியா? ஒவ்வொன்றும் நீ செய்வது இவ்வுலகில் எவருக்கேனும் பயன்பட வேண்டும் என எண்ணுபவன் நீ. அப்படி இருக்க நீ எப்படி பொய்யான மனிதர்களுடன் உனது நேரத்தை செலவிட்டு கொண்டு இருக்கிறாய்'

'மனதுக்கு சந்தோசம் தருவதை செய்வதில் என்ன தவறு'

'பக்தா, உனது மூடத்தனத்தை சற்று ஒதுக்கி வைத்துவிட்டுப் பார். நீ இணையத்தில் பழகும் அந்த பொய்யான மனிதர்கள் ஒருபோதும் உனது உண்மை வாழ்வில் வரப்போவது இல்லை. உனது உண்மை வாழ்வில் வரத்தயங்கும் அந்த போலிகளுக்கு நீ எதற்கு உனது நேரத்தை செலவழிக்க வேண்டும். அவர்களுக்கு பொழுதுபோக்கு அவர்கள் செலவழிப்பார்கள், ஆனால் நீ?'

'உங்களால் இணையம் பயன்படுத்த இயலாது என்பதற்காக என்னை நீங்கள் இப்படி சொல்கிறீர்கள் சாமி'

'மூடனைப் போல பேசாதே பக்தா. இந்த அகில உலகம் என்னில் இயங்கும்போது இந்த இணையம் எனக்கு எதற்கு அவசியம். நீ உண்மையான, உன்னிடம் உண்மை பேசும் மனிதர்களுடன் பழக்கம் கொள்வதை நான் தவறு சொல்லவில்லை. ஆனால் நீ கொண்டுள்ள பொய்யான மனிதர்களின் பழக்கம் தான் என்னை அச்சுறுத்துகிறது. அந்த பொய்யான மனிதர்கள் தங்களை எவர் என காட்டிக்கொள்ள தைரியம் இல்லாத கோழைகள். அவர்களுடன் எல்லாம் நீ பழகி பேசி என்ன இவ்வுலகில் சாதிக்க நினைக்கிறாய்'

'நீங்கள் அறிவிழந்து பேசுகிறீர்கள் சாமி. அவர்கள் எல்லாம் உண்மையானவர்கள் தான். அவர்கள் ஒன்றும் பொய்யானவர்கள் அல்ல. தங்களின் பாதுகாப்பு கருதி அவ்வாறு நடந்து கொள்கிறார்கள்'

'பக்தா, உன்னைப் போல முட்டாள்தனத்தில் மூழ்கி இருப்போரை நான் எப்படி திருத்த இயலும் என அச்சம்  கொள்கிறேன். ஆனால் உன்னை திருத்துவது எனது கடமை. எனது பக்தன் வழி தவறிப் போவதை என்னால் பார்த்துக் கொண்டு இருக்க இயலாது. விளையாட்டுத்தனம் நிறைந்த பொய்யான மனிதர்கள் எப்போதுமே ஆபத்தானவர்கள். அவர்கள் தவறு செய்யாதது போலவே அவர்கள் நடந்து கொள்வார்கள் ஆனால் உன்னைப் போன்ற பல அப்பாவிகள் அவர்களின் செயல்பாட்டை உண்மை என நம்பி ஏமாந்து போவார்கள். என்ன பக்தா நீ பெண் என்று நம்பிய ஒருவர் ஆண் என அறிந்தபோது நீ எத்தனை வேதனை அடைந்தாய் என்பதை சொல்லட்டுமா'

'போதும் சாமி நிறுத்துங்கள், நான் எப்படி போனால் என்ன'

'இல்லை பக்தா, நீ முட்டாள்தனத்தில் உன்னை அழித்துக் கொண்டு இருக்கிறாய். நீ எப்படியேனும் அதில் இருந்து வெளிவர வேண்டும் என்பதே எனது முயற்சி. உன்னை நான் அடிக்கடி வந்து சந்திக்க வேண்டும். என்னை விட்டு நீ விலகிப் பொய் கொண்டு இருப்பதை என்னால் ஏற்றுக் கொள்ள இயலாது'

'இப்போது என்ன செய்ய வேண்டும்'

'பொய்யான மனிதர்களிடம் இனிமேல் நீ ஒருபோதும் பேசக்கூடாது, பழகக் கூடாது என சத்தியம் செய்து கொடு. உன்மீது நம்பிக்கை வைக்காத நயவஞ்சகர்களின் பிடியில் இனிமேல் நீ சிக்கி சீரழியக் கூடாது எனவே உன் மீது நம்பிக்கை வைக்காத மனிதர்களுடன் நீ ஒருபோதும் பேசக்கூடாது. இதுவே நான் உனக்கு இடும் கட்டளை'

'சாமி, அப்படியெனில் நான் இணையம் பயன்படுத்தக்கூடாது என்கிறீர்களா, எனது நண்பர்கள் என்னை தேடுவார்களே'

'அதெல்லாம் தேடமாட்டார்கள், அவர்கள் பொழுதைப்போக்க வேறு எவரையேனும் தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள். பொழுதைப் போக்க நினைக்கும் பொய்யான மனிதர்களுக்கு நீ மட்டுமே அத்தியாவசியம் என நினைப்பதே உனது முட்டாள்தனத்தின் முதல் படி. அதை நீ முதலில் விட்டொழி பக்தா. நீ உனது உற்றார் உறவினர் என அவர்களோடு அன்போடு இரு. பாசமாக இரு. நாளை ஒரு பெண்ணை மணமுடித்த பின்னர் அந்த பெண்ணுக்கு உண்மையாய் இரு. இந்த பொய்யான மனிதர்களை விட்டு சற்று விலகியே நில். புரிந்து கொள் பக்தா இவ்வுலகில் நீ பலமுறை பிறப்பு எடுப்பதில்லை'

'எப்படி விலக இயலும் சாமி'

'எப்படி சேர்ந்தாய்  பக்தா, அப்படியே விலகிவிடு'

'சாமி நிறையே பேர் என்னை நேசிக்கிறார்களே'

'பக்தா, இதுதான் முட்டாள்தனத்தின் உச்சம். பொய்யான மனிதர்களின் நேசம் எதற்கு அவசியம் பக்தா. உனது உண்மையான நண்பர்கள் உன்னோடு எப்போதும் தொடர்பில் இருப்பார்கள். நீயாக தேடி எவரையும் தொடர்பில் வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் என்ன வந்தது. நீ சோகத்தில் இருந்தபோது அவர்கள் வந்தார்களா? அவர்களின் சோகத்தில் நீ சென்று இருந்தாயா? உண்மையான யதார்த்தம் புரிந்து கொள்ள மறுப்பதேன் பக்தா'

'எல்லாம் துறந்து இருக்கும் உங்களுக்கு சாத்தியம் ஆனால் எனக்கு'

'துறந்து விடும் விசயங்களில் பற்று வைத்திடும் உங்களுக்கு நானா தெரிகிறேன் துறவியாய் எனும் வாசகம் படித்தது உண்டா பக்தா. எதை துறக்க வேண்டுமோ அதில் நீ பற்று வைத்துக்கொண்டு திரிகிறாய். அந்த பற்று தவறு என சொல்கிறேன், கேட்க மறுத்து கேள்வி கேட்கிறாய். பெரும்பாலும் வெளி உலகின் அழுத்தம் காரணமாக மனநிலை பாதிக்கப்பட்டவர்களே இணையத்தில் பேசி மகிழ்ந்து இருப்பார்கள்  பக்தா, இதை எவரும் உண்மை என ஒப்புக்கொள்வதில்லை. மற்றவர்களுடன் எழுதி பேசுகையில் உனக்குள்ளேதான் பேசிக் கொள்கிறாய் பக்தா. எனவே எனது பேச்சைக் கேள். உனக்கு அடுத்த முறை பூமி குறித்து சொல்கிறேன்'

'என்னால் இயலாது. எனக்கு அந்த பொய்யான கற்பனையான உலகம் பிடித்து இருக்கிறது, ஆனாலும் பேசமாட்டேன் பழகமாட்டேன் என சத்தியம் செய்கிறேன்'

'பக்தா மிகவும் நல்லது, அடுத்த முறை வரும்போது நீ பொய்யான மனிதர்களுடன் தொடர்பில் இருக்க மாட்டாய் என்றே எண்ணுகிறேன்'

திடுக்கிட்டு விழித்துப் பார்த்தேன். சாமியார் அங்கே இல்லை. மொபைலில் வந்த ஒரு நோடிபிகேசனில் 'எழுந்திருடா செல்லம்' என முகமே தெரியாத, உண்மை பெயரும் தெரியாத ஒரு பெண் எழுதி இருந்தாள்.

அவளுக்கு பதில் எழுத எத்தனித்தபோது சாமியாரிடம் செய்த சத்தியம் தடுத்தது.


Sunday 4 January 2015

வெட்டித் தருணங்கள் - 3

அடுத்த நாள் சிவக்குமாரை சந்தித்தேன். ஓங்கி ஒரு குத்து விட்டேன்.

''என்னடா''

''இனிமே நீ சொல்வியா?''

''டேய் என்னடா சொன்னேன்''

''நேத்து சொல்லலை''

''அணிலா?''

திரும்பி ஓங்கி ஒரு அறைவிட்டேன். அவனுடனான சண்டை அன்று பெரும் பிரச்சினையில் முடிந்தது. அவன் என்னோடு இனிமேல் பேச மாட்டேன் என கூறினான். போடா வெங்காயம் என திட்டிவிட்டேன். என்னைக் கண்டு அங்கிருந்தவர்கள் பயந்தார்கள். நான் இப்போது கல்லூரியில் எனக்கான அடையாளம் ஒன்றை உருவாக்கிக் கொண்டேன்.

சில நாட்களில் இணைய இணைப்பு வீட்டில் வந்தது. முதலில் ட்விட்டர் திறந்தேன். www.twitter.com சென்று vijayathma என பெயரிட்டு @vijaysole என வைத்தேன். புதிய உலகம் கண்ணுக்கு பட்டது. முதலில் ஒரு விஜய் ரசிகர் டேய் அது vijaysoul என்றார். உடனடியாக அக்கவுண்ட் டெலிட் பண்ணிவிட்டு @soulvijay எனத் தொடங்கினேன்.

விஜய் ரசிகர்களாக தேடி தேடி இணைந்தேன். அவர்களும் என்னைத் தேடி தேடி இணைந்தார்கள். விஜய் படத்தை இணைத்தேன். பின் அட்டையில் பெரியார் படத்தை இணைத்தேன். முதல் நாள் மட்டுமே நூறு பேர் பாலோ பண்ணினேன். முன்னூறு பேர் பாலோ பண்ணினார்கள்.

வெளி உலகத்தை விட இந்த உலகம் மிக நன்றாக இருந்தது. தமிழில் எப்படி எழுதுவது என தெரியவில்லை. அப்போது ஒருவர் தமிழில் எழுதுவது எப்படி என சொல்லித் தந்தார். ஒரு மாதம் எதுவும் எழுதுவதில்லை என முடிவு செய்து என்ன நடக்கிறது என பார்த்தேன். (தொடரும்)

Friday 26 December 2014

கண்டு தாழிட்டேன் - 2

அவனைக் கொன்றுவிட மனம் துடித்தது. அன்றே வேலையை எழுதிக் கொடுத்துவிட்டு வந்தேன். என்னை இரு என சொல்ல எவருக்குமே தைரியம் இல்லை. எனக்கு அங்கே இருக்கப் பிடிக்கவில்லை. எப்படி சகித்துக்கொள்ள முடிகிறது. எவரேனும் நமக்குத் தேவைப்படுவார்கள் என்றுதானே நாம் கொடுமைகளை பொறுத்துக் கொள்கிறோம். கோபமாக வெளியேறினேன். வீட்டுக்கு வந்ததும் அப்பா கடுமையாகவே சத்தம் போட்டார். இதுக்குனு வேலைய விடுவியாம்மா, சுத்த அறிவுகெட்ட ஜென்மம் நீ என்றார். உங்களுக்கு ரொம்ப அறிவு, திட்டுறாராம் திட்டு. நீ செஞ்சது சரிதான் உனக்காச்சும் தைரியம் இருக்கே என்றார் அம்மா. காவ்யாவிற்கு போன் செய்தேன். அடியேய் உன்னைப்பத்தி கேவலமா பேஸ்புக்ல ஒருத்தன் எழுதி இருக்கான். நீ ஒரு வேசினு வேற எவனு தெரியலைடி. அந்த கௌதமன்தான் பண்ணி இருப்பான். ஏன்டீ? அவனை ஓங்கி ஒரு அறைவிட்டேன் அந்த கடுப்பில் பண்ணி இருப்பான் என்றேன். உன்ட்ட என்னடி சொன்னேன், பேசாம ஒதுங்கிப் போயிருக்கலாம்ல என்றாள். சரிடீ என சொல்லிவிட்டு போலிஸிடம் புகார் சொன்னேன். இனி வேலை தேட வேண்டும். சிறிது நேரத்தில் கௌதமன் போன் செய்தான். அந்த பேஸ்புக் ரிமூவ் பண்ணிட்டேன். புகாரை வாபஸ் வாங்கு என்றான். இணைப்புதனை துண்டித்தேன் இச்சமூகத்தில் மன்னிப்பு கிடைக்கும் என்ற தைரியம் பாவம் செய்யத் தூண்டுகிறது. சாவட்டும்.

எனது இன்னொரு தோழி சியாமளினி மூலம் வேறு ஒரு வேலை நான்கே நாட்களில் கிடைத்தது. காவ்யா அவளது எண்ணை மாற்றி இருந்தாள். எனக்கு புது எண் தரவில்லை . கௌதமன் என் மீது பெரும் வெறியில் இருந்து இருக்க வேண்டும் அவனை பலர் பேஸ்புக்கில் காறித்துப்பி விடும்படி ஒரு காரியம் செய்து இருந்தேன் தண்டனை தந்த திருப்தி எனக்குள் இருந்தது. ஆம்பள பசங்க அப்படித்தான் என சில பெண்களின் சப்பைக்கட்டு வேறு. வலி தாங்கிப் பழகியவர்கள். கௌதமன் வேலையை ரிசைன் பண்ணியதாக தகவல் வந்தது. அவன் வேறு எங்கேனும் சென்று திருந்தினால் சரி என இருந்தேன். முதல் நாள். புது வேலை. ஐ ஆம் ஶ்ரீதர் என வந்து நின்றவனைப் பார்த்ததும் என் கண்கள் காதல் கொள்ளத்துடித்தன. யுவர் ப்ரொஜக்ட் லீடர் காயத்ரி லெட் மீ இன்ட்ரடியூஸ் அவர் கொலீக்ஸ் டூ யூ. தேன் ஒலி ஒவ்வொருவராக அறிமுகம் முடிந்தது எனது இருக்கையில் அமர்ந்தேன். பெரிய அலுவலகம் எல்லாம் கிடையாது. ஆரம்பித்து ஒரு மூன்று வருடங்கள் ஆகி இருந்தது. எட்டு பேர் கொண்ட வேலை இடம். ஆண்கள் மூன்று பெண்கள் ஐந்து. மேலும் பத்து பேர் வீட்டில் இருந்து வேலை செய்வார்கள். மொத்தம் 18 பேர் மட்டுமே. சியாமளினி பற்றி அதிகம் சொல்ல வேண்டியதில்லை. என்னைவிட பேரழகு. சிறு வயதிலிருந்து தோழி. அவள் ஒரு டாக்டர். மாதம் ஒரு முறை சந்திக்கும் வழக்கம் உண்டு. அவளிடம் நிறைய பேசுவதுண்டு. எங்கள் வீட்டு குடும்ப டாக்டர். அப்பா அம்மாவுக்கு ஏதேனும் என்றால் அவள்தான். வயது 24. மாநிறம். நல்ல உயரம்.

அவளுக்கு ஒரு காதலன் உண்டு பெயர் டாக்டர் சியாமளன். இருவரும் ஒரே கிளினிக்கில் வேலை பார்த்தனர் சியாமளனின் நண்பரின் கம்பெனிதான் நான் வேலைக்கு சேர்ந்து இருப்பது. நல்ல சம்பளம். நல்ல மனிதர்கள். ஆனால் ஶ்ரீதர்?! கௌதமன் போல இருப்பானோ என சந்தேகம் வந்தது. அடுத்தநாள் கோவிலுக்கு சென்று இருந்தேன். இந்த கோவிலுக்குப் போனதே இல்லை. அந்த கோவிலில் வயதான அம்மாவுடன் ஶ்ரீதர் நின்று இருந்தார். என்னைப் பார்த்தவுடன் வணக்கம் சொன்னார். நானும் வணக்கம் வைத்தேன். தலை நிறைய மல்லிகைப்பூ நீல வண்ண சேலை என நான் ஜொலித்தேன். அம்மா, இவங்க காயத்ரி என சொல்ல அந்த அம்மா லேசாக சிரித்தார். @radhavenkat2: இந்த கோவிலுக்குத்தான் வருவீங்களா? என்றார் ஶ்ரீதர். இல்லை சார், இதுதான் முதல் தடவை. நம்ம கம்பெனிக்கு வந்ததால தெரிஞ்சது என்றேன். நல்ல சாமி என சொல்லிவிட்டு கும்பிட்டு வாங்க என்றார். அந்தம்மா கணவனை இழந்தவர் என்பதானா அடையாளம் இருந்தது.
சாமியை வணங்கினேன். கோவிலை சுற்றி வந்தபோது ஶ்ரீதர் அங்குதான் நின்றார். என்ன சார் இன்னும் இங்கேயே நிற்கறீங்க என்றேன். இன்னும் கொஞ்ச நேரம் தான் என்றார். வரேன்மா என சொல்லி நடந்தேன்.

சியாமளினியை அன்று சந்தித்து பேசினேன். கௌதமன் காவ்யா ரகுராமன் குறித்து சொன்னதும் அவளின் ஒரே வார்த்தை தான் பதில். உலகம். நீ தப்பு பண்ணி இருக்கியா என்ற என் கேள்விக்கு இல்லை என்றே சொன்னாள். சியாமளன் அத்தனை நல்லவரா என்றேன். சிரித்தாள். உடல் மீதில் ஆசை எல்லோருக்கும் இல்லை. என்ற பதில் எனக்குப் பிடித்து இருந்தது. கௌதமன் மீது நான் கொண்டது உடல் மீதான காதல். ஶ்ரீதர் மீது கொள்ளத்துடிப்பது மனம் மீதான காதல். காயத்ரி  எல்லா ஆண்களும் மோசம் கிடையாது சின்ன சின்ன சபலம் இருக்கும், ஆனா அறிவுள்ளவங்க அதை கட்டுபடுத்திருவாங்க சந்தேகப்படு, எல்லாரையும் இல்ல என்றாள். சியாமளனின் அறையை எட்டிப் பார்த்தேன் எனக்கொரு சியாமளன் வேண்டும் என நினைத்தேன் அங்கிருந்து வீட்டுக்கு வரும் வழியில் கௌதமனைப் பார்த்து விலகி நடந்தேன். காயத்ரி நில்லுடி என அசிங்க அசிங்கமாக பேசினான். வேடிக்கைப் பார்த்தவர்கள் அதிகம். நான் நிற்காமல் நடந்தேன். சில நிமிடத்தில் போலீஸ் வந்தது. கௌதமனை அடித்து உதைத்தார்கள். சிலர் திருந்த முனைவதே இல்லை. பெண்ணை கேவலமாகப் பேசும் கொடிய நாக்கு தானாக அறுந்து விழவேண்டும் என எனது வேண்டுதல் பலித்துவிடுவதில்லை என்றபோதும் வேண்டிக்கொண்டேன் வாழ்வை இயல்பு இயல்பற்றது என பிரித்துக்கொள்ளலாம். இயல்பாக இருப்பது கடினம். இருக்கிறதை விட இல்லாத ஒன்றின் மீது அதிகப்பற்று வரும் அதை அடைய மனம் போராடும் அந்த போராட்டம் வலியாக உருவெடுக்கும். வலி மரணத்தை உண்டுபண்ணும். (தொடரும்)