Sunday 21 September 2014

தமிழக திரையரங்குகள் (தியேட்டர்கள்)

இந்தியாவில் சில நாட்கள் - 11

சினிமா உயிர் மூச்சு என மொழி உயிர் மூச்சு என்பதை இடம்பெயரச் செய்துவிடும் அளவிற்கு தமிழகத்தில் சினிமா மோகம் நிறையவே உண்டு. எங்கள் கிராமத்தில் எல்லாம் சினிமா கொட்டகை எல்லாம் இல்லை. ஒன்று விருதுநகர் செல்ல வேண்டும் அல்லது அருப்புகோட்டை செல்ல வேண்டும். எனக்கு விபரம் தெரிந்து சிறு வயதில் விருதுநகர் சென்று திரைப்படம் பார்ப்பதுதான் வழக்கம்.

விழாக்காலங்களில் எங்கள் ஊரில் வெள்ளை திரை கட்டி சினிமா காட்டுவார்கள். அதுவும் எம்ஜிஆர் சிவாஜி படங்கள் அப்போது நிறைய. புழுதியில் அமர்ந்து அப்படியே உறங்கி என சினிமா பார்ப்பது ஒரு அருமையான தருணங்கள். அதுமட்டுமல்லாது மில் எனும் பக்கத்து ஊரில் அவ்வப்போது போடப்படும் படத்திற்காக கம்மாய் கரை தாண்டி சென்று பார்த்துவிட்டு நடு இரவில் மயானக்கரை தாண்டி வருவது எல்லாம் ஒரு சிலிர்ப்பான அனுபவங்கள்.

விருதுநகரில் ராஜலட்சுமி, அப்சரா, அமிர்தராஜ், சென்ட்ரல் இன்னும் சில தியேட்டர்கள். சென்ட்ரலில் அமிர்தராஜில் கட்டை இருக்கைகள் என்றே நினைக்கிறேன். ராஜலட்சுமி அப்சரா புதிய தியேட்டர்கள். இருக்கைகள் நன்றாக இருக்கும்.  ஐந்தாம் திருவிழா காலங்களில் சினிமா ஒரு அங்கம். இப்படி ஒருமுறை விருதுநகர் சென்று திரைப்படம் பார்த்துவிட்டு மழை பெய்ததால் சைக்கிளில் மண்பிடித்து கண்மாய் வழி வழியாக வீடு செல்ல முடியாமல் நாங்கள் நான்கு பேர் மல்லாங்கிணர் சென்று அங்கிருந்த தெரிந்த மருத்துவர் வீட்டில் சென்று தங்கினோம். அப்போது எல்லாம் வீடுகளில் தொலைபேசி இல்லை. தபால் அலுவலக வீடு மாமா வீட்டில் மட்டும் தொலைபேசி இருக்கும். அவர்களுக்குத்தான் எல்லா தகவல்களும் வந்து சேரும். நாங்களும் அவர்களுக்கு தகவல் சொல்லி நாங்கள் காலை வருகிறோம் வீட்டில் சொல்லிவிடுங்கள் என சொல்லி வைத்தோம்.

எங்கள் காலம், அவர் வீட்டில் சொல்ல மறந்து போனார். எங்களை இரவு ஆகியும் காணாமல் தேட ஆரம்பித்துவிட்டார்கள். மல்லாங்கிணர் டிராக்டர் மூலம் வந்து சேர நாங்கள் இருக்கும் இடம் அறிந்து பின்னர் அழைத்துச் சென்றார்கள். அந்த மாமாவுக்கு அடுத்த நாள் நல்ல திட்டு விழுந்தது. பின்னர் அருப்புக்கோட்டையில் படித்தபோது ஹாஸ்டலில் இருந்து சுவர் ஏறி சென்று படம் பார்த்த நண்பர்கள் பிடிபட்டு அடி வாங்கிய நிகழ்வுகள். மகாராணி, லட்சுமி தியேட்டர்கள் பரவாயில்லாத ரகம். எனக்கு ரஜினி படமே போதும் என்று இருக்கும். அதிகம் படம் எல்லாம் பார்ப்பது இல்லை. மதுரையில் படித்தபோது ரஜினி கமல் ரசிகர்கள் சண்டைகள் எல்லாம் எனக்கு வியப்பாக இருந்தது. எப்படி இப்படி இருக்கிறார்கள் என! எனக்கு படிப்பு மட்டுமே முக்கியமாக இருந்தது. இருப்பினும் கமல் ரசிகருடன் அவ்வப்போது ரஜினி கமல் பார்க்க சென்று விடுவது உண்டு.

மதுரையில் சினிப்ரியா, மினிப்ரியா என சில தியேட்டர்கள். ஆரப்பாளையம் அருகே சில தியேட்டர்கள். எல்லாம் ஓரளவுக்கு நன்றாக இருக்கும். எப்போது படத்திற்கு கூப்பிட்டாலும் தலைவர் படம் வரட்டும் என சொல்லி எனது சினிமா ஆசையை காட்டுவேன். என்னை தனியாகவே விட்டுவிட்டு அவர்கள் படத்திற்கு செல்வார்கள். ஒத்தக்கடையில் ஒரு தியேட்டர். என்னை வலுக்கட்டாயமாக படத்திற்கு அழைத்து சென்றார்கள். என் வாழ்வில் முதன் முதலில் என்ன பார்க்கிறோம் என தெரியாமல் பார்த்த படம் அதுவாகத்தான் இருக்கும். குளியல் அறையில் பெண் என திடீரென ஒரு காட்சி வந்தது. என் நண்பன் என் அருகில் மாப்பிள்ளை அதுதான் அது என்றான். எது என்றேன் எதுவும் புரியாமல். அன்று முதல் என்னை சாமியார் என்றே அழைக்க ஆரம்பித்து விட்டான். வாழ்வில் அனுபவிக்க வேண்டியது நிறைய என்றார்கள். எனக்கு அந்த அந்த காலத்தில் அனுபவித்தால் போதாதா, இப்போது படிப்பு மட்டும் தானே என்றே சொன்னது உண்டு. அந்த தியேட்டர் கட்டை இருக்கை தான்.

சென்னையில் ஒரு வருடம் இருந்தபோது சில தியேட்டர்கள் போனது உண்டு. தியேட்டர்கள் நன்றாகவே இருக்கும். இப்படி எனது வாழ்வில் தியேட்டர்கள் மிகவும் குறைந்த பங்கே வகுத்து இருக்கின்றன அதுவும் ரஜினி, கமல், மணிரத்தினம் புண்ணியத்தில்.

இந்த முறை அருப்புகோட்டை தியேட்டர் ஒன்றில் அஞ்சான் படம் பார்க்க சென்று இருந்தோம். இருக்கைகள் கிழித்து எறியப்பட்டு இருந்தன. வெத்தலை எச்சில்கள் துப்பப்பட்டு இருந்தன. ஏசி என சொல்லிவிட்டு காத்தாடி சுற்றிக்கொண்டு இருந்தது. உள்ளே வெக்கையில் குளித்துக்கொண்டு இருந்தோம். படம் பார்க்கவே மனம் இல்லை. எப்படா படம் முடியும் வீடு போவோம் என இருந்தது. இதற்கு எங்கள் ஊர் மண்ணில் அமர்ந்து பார்த்தால் காற்றாவது நன்றாக வரும். இப்படி தியேட்டர் வைத்து இருந்தால் எப்படி மக்கள் படம் பார்க்க போவார்கள். சும்மா தியேட்டருக்கு வந்து பாருங்க பாருங்க என கத்தும் தியேட்டர் அதிபர்கள் கிராமப்புற தியேட்டர்களில் அக்கறை செலுத்துவது நல்லது, அப்படி இல்லையெனில் பேசாமல் திருமண மண்டபங்கள் கட்டிவிட்டுப் போகலாம். தியேட்டரில் படம் பார்க்க செல்பவர்கள் கொஞ்சம் கூட பொறுப்புணர்வு இல்லாமல் எச்சில் துப்புவது, இருக்கையை கிழிப்பது என நாகரிகமற்ற மனிதர்கள் மீதும் அதிக வெறுப்பு வந்தது. இவர்களுக்கு எல்லாம் கட்டை இருக்கைகள் தான் லாயக்கு.

சென்னையில் ஒரு தியேட்டர் போனோம். ஒரே இடத்தில் அங்கே கிட்டத்தட்ட பல திரையரங்குகள். அருப்புக்கோட்டையில் டிக்கெட் விலை நூறு ரூபாய், இங்கே நூற்றி இருபது ரூபாய். மிகவும் சுத்தமாக அருமையாக பராமரித்து இருந்தார்கள். மிகவும் உல்லாசமாக படம் பார்க்க முடிந்தது. எல்லா வசதிகளும் நகரங்களில் ஏற்படுத்தி கிராமப்புறங்கள் எல்லாம் கைவிடப்பட்டுவிட்டன போலவே காட்சி தந்தது. இருக்கைகள் வசதி எல்லாம் வெகு சிறப்பு. அதற்காக அருப்புகோட்டையில் இருந்து சென்னை வந்து படம் பார்த்தா செல்ல முடியும்?

திருட்டு விசிடி, படத்திருட்டு என எத்தனையோ விசயங்கள் சினிமாவை அழித்துக் கொண்டு இருக்கிறது என்பதை விட பராமரிக்கப்படாத திரையரங்குகள் கூட திரைப்படங்களை அழித்து விடும் தான்.

திரையரங்குகள் நாம் செல்லும் விருந்தினர் வீடு போல. போர்க்களம் செல்வது போலவா திரையரங்குக்கு செல்வது? திரையரங்குகள் பாதுகாக்கப்படுவது நல்ல சினிமாவை பாதுகாப்பது போலத்தான். கிராமப்புறத்து ரசிகர்கள் கவனத்தில் கொள்வார்களா?

(தொடரும்) 

Wednesday 17 September 2014

கேரள கடற்கரையில் ஓமனக்குட்டி

இந்தியாவில் சில நாட்கள் - 10

மலையாளம் என்றால் அது ஒருவகையான கிளுகிளுப்புதான். ஓமனே இந்தாளு எந்தா பறையிது என்ற வசனங்களும் கேரளா நாட்டு இளம்பெண்கள் குறித்த குறிப்புகளும் மலையாளப்படம் என்றால் இடைச்சேர்க்கைகளும் நிலவில் கூட நாயர் டீக்கடைகளும் என மலையாளம் கிளுகிளுப்புதான்.

கோவா செல்ல வேண்டும் எனும் திட்டம் அதிக விலையினால் தள்ளிப்போட்டுவிட்டு கேரளா செல்லலாம் என திட்டமிட்டோம். இந்தியா வரும் போதெல்லாம் கேரளா ஒரு இடம் பெற்று விடுகிறது. சென்ற இரண்டுமுறை படகுப்பயணம், படகு வீடு என கழித்தாகிவிட்டது. இந்த முறை கேரளா கடற்கரை செல்வோம் என செராய் கடற்கரை கொச்சின் நகர் அருகில் தெரிவு செய்தோம்.

கம்பம் வழியாக செல்வோம் என முடிவு செய்து கம்பத்தில் உள்ள உறவினர் வீடு சென்று அடைந்தோம். அப்போது மணி மதியம் ஒன்று. இரண்டு மணி போல கிளம்பி ஆறு மணிக்கு எல்லாம் செராய் கடற்கரை செல்வோம் என பயணித்தோம். மலைப்பாதை.

வாகனம் மிகவும் மெதுவாக பயணிக்கிறது. சாலையில் மலை விழுந்த சுவடுகள். பாதையை கூகிள் வழிகாட்டிக்கொண்டே வருகிறது. மலை என்பதால் அவ்வப்போது கூகிள் வழிகாட்டி தொலைந்து போகிறது. இப்படியாக மிகவும் குறுகிய பாதையில் பயணம். போகிறோம் போகிறோம் வழி வந்தபாடில்லை.

ஓரிடத்தில் வேறுபக்கம் திரும்பி சென்றிட அது மிகவும் கரடுமுரடான பாதை. அந்த பாதையில் செல்லும் வாகனம் மட்டுமே பயணிக்க இயலும். விழித்தோம். அப்போது ஒரு வாகனத்தில் வந்தவர்கள் எங்கள் வாகனத்தை நிறுத்த சொல்லி மலையாளத்தில் பேசினார்கள். குடித்து சிவந்து இருந்த கண்கள். வண்டியை நிறுத்து என என்ஜினை நிறுத்த சொல்லி எங்கே போகணும் என கொஞ்சம் கரடு முரடாகவே பேசினார்கள். என்ன கொடுமை இது என எண்ணிக்கொண்டே அவர்கள் கேட்பதற்கு பதில் சொல்ல மனம் மாறியவர்கள் செல்லுமிடத்திற்கு வழி சொன்னார்கள். அப்பாடா என நிம்மதியும் அங்கே இருந்து தப்பித்தால் போதும் என இருந்தது.

அங்கிருந்து திரும்பி மீண்டும் முக்கிய சாலையை அடைந்தபோதுதான் பெருமூச்சு வந்தது. அங்கே எல்லாம் வீடுகள் கட்டி குடியிருக்கும் மக்கள் வியப்பு அளித்தார்கள்.

ஒருவழியாய் செராய் கடற்கரை ஹோட்டல் அடைந்தபோது மணி ஒன்பது ஆகி இருந்தது. ஹோட்டல் நன்றாகத்தான் இருந்தது. இரவு சாப்பாடு அங்கேயே கிடைத்தது. ஹோட்டல் எதிரில் கடற்கரை. அலைகளின் ஆர்ப்பரிக்கும் சப்தம். இரவு கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை செய்து இருந்தார்கள். அன்று தங்கிவிட்டு அடுத்தநாள் குருவாயூர் சென்றோம்.

அங்கே கோபுர தரிசனம் மட்டுமே. உள்ளே எல்லாம் செல்லவில்லை. ஓரிடத்தில் இருந்து ஓரிடம் செல்ல எத்தனை நேரம். குருவாயூர் பிரமாண்டமாக இருந்தது. மீண்டும் ஹோட்டல் வந்தோம். வந்ததும் போவதுமாக இருக்கிறதே என நினைத்தார்கள். கடற்கரையில் அன்று விளையாடினோம். முகம் அறிமுகமற்ற மனிதர்கள். சந்தோசத்தை இந்த கடற்கரை எப்படி மனதில் விதைத்துவிட்டு போகிறது.

திடீரென ஒரு அலை வந்து எங்களை தள்ளாட செய்தது. தப்பித்தோம் என ஹோட்டல் வந்ததும் மீண்டும் ஒருநாள் இருப்போம் என ஹோட்டலில் கேட்டோம். சரி காலையில் சொல்கிறோம் என சொன்னார்கள். காலையில் சரி என சொன்னதும் அங்கிருந்து நேராக கொச்சின் நகரம் சென்றோம். கொச்சினில் இருந்து ஹோட்டல் 24 கி.மீ எத்தனை நேரம். சாலை ஒன்றும் பிரமாதமாக இல்லை. சென்னை சில்க்ஸ் சென்றபோது அங்கே நிறைய மலையாள பெண்கள். அதில் நமது தமிழ்நாட்டு பையன்கள் கூட இருந்தார்கள். எவ்வித சங்கோஜமின்றி அந்த பெண்கள் பேசியது ஆச்சர்யம் இல்லை தான். எனக்குத்தான் என்ன பேசுவது என தெரியவில்லை.

யார், என்ன விபரம் கேட்டவர்கள் சோட்டனிக்கரை பகவதி அம்மன் சென்று வாருங்கள் என சொன்னார்கள். எந்தா பகவதி அம்மே. யேசுதாஸ் குரலில் ஒரு பாடலில் சோட்டனிக்கரை பகவதி அம்மன் பாட்டு கேட்டு இருந்தது நினைவுக்கு வந்தது. அவர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு அங்கிருந்து சோட்டனிக்கரை சென்றபோது இரவு  ஆகிவிட்டது.

கோவில்கள் எல்லாம் ஒரே மாதிரி இருந்தது. இந்த கோவில்கள் வட இந்திய புத்த மத பாணியில் அமைந்து இருந்தது. நமது கோபுர அமைப்பு எல்லாம் இல்லை. உள்ளே சென்றால் ஒரே அலறல் சத்தம். பெண்கள் சிவனே சிவனே என சப்தம் மீறிய ஆண்களின் சிவனே சிவனே சப்தம்.

நானும் அங்கே சென்று நின்றேன். திடீரென் எனது வலது கையில் ஒரு பெண்ணின் கூந்தல் விரிந்த தலை முட்டியது. திடுக்கிட்டு விட்டேன். அந்த பெண்ணை இருவர் பிடித்து இருந்தார்கள்.

பேய் இங்கே விரட்டுவார்கள் என சொன்னார்கள். அடப்பாவிகளா என் மீது அந்த ஓமனக்குட்டி மோதி மோகினி என்னுள் சென்றுவிடுமோ என அருகில் இருந்தவர் அச்சம் கொண்டார்கள். மோதப்பட்ட கை ஆடியது. இப்படித்தான் மனப்பிரமை பிடித்து ஐயோ என்ன ஆகுமோ ஏது ஆகுமோ என அலறி நோய்வாய்படுபவர்கள் அதிகம்.

இறைவனை தவிர அவதாரங்களை கூட நான் நம்புவதில்லை என்பதால் இதெல்லாம் ஒரு விசயமா என சொல்லிவைத்தேன். சில மணிநேரங்கள் என்னை மோகினியாக்க பார்த்தார்கள். எந்தா பகவதி அம்மே இந்த பிள்ளையை சோதிக்கினு என எண்ணிக்கொண்டு ஹோட்டல் வந்தோம். மீண்டும் இரவில் கடற்கரை சென்றோம். அங்கே இரண்டு காதலர்கள் தனியாய் அமர்ந்து இருந்தார்கள். அலைகளை அந்த இரவில் ரசித்துக்கொண்டு இருந்தார்கள். அவள் பேசியது அலையோடு கலந்து கொண்டு இருந்தது.

அந்த இரவில் கடற்கரை கடந்தோம் அந்த காதலர்களையும். கூட்டமாக எங்கேனும் தென்படுகிறார்களா என பாதுகாவலர் பார்த்துவிட்டே எங்களை வெளியில் அனுப்பினார். பாரதியின் வரிகள் தான் எத்தனை சுகமானவை. கேரளா ஒரு இனிய மாநிலம்.

(தொடரும்) 

Monday 15 September 2014

மாணிக்கவாசகரும் கோவில் கோபுரங்களும்

இந்தியாவில் சில நாட்கள் - 9

எனக்கு மாணிக்கவாசகர் மீது ஒரு தனிப்பிரியம் உண்டு. அவரது திருவாசகம் எனக்கு நிறையவே பிடிக்கும். எல்லாவற்றையும் வாசித்து முடித்து விட வேண்டுமென ஆவல் எழுந்தது. அப்படி வாசித்தபோது உருவானதுதான் அடியார்க்கெல்லாம் அடியார் எனும் நாவல்.

நரிகள் பரிகள், பிட்டுக்கு மண் சுமந்தது என பல கதைகள் படித்தாலும் அவர் பிறப்பிடம் பற்றி எல்லாம் அக்கறை தோணவில்லை. திருவாதவூர் எனும் ஊர் தான் அவர் பிறந்தது என அறிந்தபோது அது எங்கே இருக்கிறது என தேடுகையில் மதுரை அருகே அதுவும் திருமோகூர் வழி என சொன்னதும் ஆச்சர்யமாக இருந்தது.

நான்கு வருடங்கள் உத்தங்குடியில் படித்தபோது ஒத்தக்கடையில் சென்று அவ்வப்போது சாப்பிட்டு சனி தோறும் திருமோகூர் வரை சென்று வந்த நான் திருவாதவூர் சென்றதே இல்லை. இத்தனைக்கும் திருவாதவூர் பேருந்தில் தான் திருமோகூர் சென்று இருந்து இருப்பேன்.

எனக்கு இந்த திருவாதவூர் பற்றி பெரும் அக்கறை அப்போது இல்லைதான். இந்த முறை இந்தியா சென்றபோது திருமோகூர், திருவாதவூர் சென்று வர வேண்டும் என நினைத்து இருந்தேன்.

விடுமுறை நாட்கள் நெருங்கி முடிய திருவாதவூர் செல்ல முடியாதோ எனும் எண்ணம் மேலிட்டது. திருவரங்கம் சென்று அங்கே கோவில் பணிகள் பல பார்த்து, திருவரங்கமே மாறிப்போன ஆச்சர்யம் மறையாமல் திருவாதவூர் அடுத்த நாள் சென்றோம்.

திருமோகூர் கடந்து திருவாதவூர் சென்றபோது மணி பன்னிரண்டு. கோவில் நடை சாத்திவிட்டார்கள். மீண்டும் 4 மணிக்கு தான் திறப்போம் என சொன்னதும் கோபுரம் பார்த்து வணங்கிவிட்டு அங்கிருந்து மாணிக்கவாசகர் பிறந்த இடம் சென்றோம். அங்கே கோவில் கட்டப்பட்டு இருந்தது.

பூசாரி படுத்து இருந்தார், நாங்கள் சென்றதும் கதவை திறந்து தீபம் காட்டினார். அங்கே மாணிக்கவாசகர் குறித்தும் சிவபெருமான் குறித்தும் எழுதியதைப் படித்து பார்த்துவிட்டு பூசாரியிடம் மாணிக்கவாசகரின் உறவினர்கள் இன்னும் உண்டா என கேட்க அவரும் ஆச்சரியப்படாமல் இரண்டாயிரம் வருடங்கள் முன்னர் நடந்தது இப்போ இல்லை என்றார். எனது கிராமம் எனக்கு நினைவுக்கு வந்தது. நான் இப்போது அந்த கிராமத்தில் இல்லை, எனக்கு நெருங்கிய உறவினர்கள் எல்லாம் கிராமத்தை விட்டு வெளியேறிக்கொண்டு இருக்கிறார்கள். இன்னும் இருநூறு ஆண்டுகள் பின்னர் அந்த கிராமத்தில் என் உறவினர்கள் எவர் என எவரேனும் தேடி சென்றால் இதே பதில் கிடைக்கும்.

மாணிக்கவாசகரை பற்றி பிரமித்துவிட்டு திருமோகூர் வந்தோம், அங்கேயும் கோவில் மூடி இருந்தது. கோபுர தரிசனம் பார்த்துவிட்டு திரும்பினோம். நான் அடிக்கடி சொல்லும் கோபுரங்கள் தரிசித்தால் போதும் கடவுள் எங்கும் இருக்கிறார் என்பது. ஆனால் கோவிலுக்குள் செல்லாமல் வருவது சற்று இடைஞ்சல்தான்.

எதற்கு திருவாதவூர் செல்ல இத்தனை ஆசை கொண்டேன் என்றால் எல்லாம் அந்த மாணிக்கவாசகருக்குத்தான். சிவனும், விஷ்ணுவும் நினைத்துக்கொண்டார்கள் போல என் அடியாரை நீ வணங்கினால் என்னை வணங்குவதுபோல என.

அடியார்க்கெல்லாம் அடியார் கதையை விரைவில் முடித்துவிடுவேன் மாணிக்கவாசகர் துணையுடன்.

(தொடரும்)