Friday 20 January 2012

உருவ வழிபாடு தப்பாங்க!



சுயநலமற்ற மனிதர்களின் கருத்துமலர்கள் சத்திய வாக்குதான். என்னைப் பொருத்தவரை அவர்கள் மனிதர்களே. வாழ்வில் இப்படித்தான் வாழ வேண்டுமெனெ சத்தியத்துக்கு கட்டுபட்டு வாழ்ந்த ஷீர்டி சாய்பாபா போன்ற வெகு சில மனிதர்கள் போற்றத்தக்கவர்கள்தான், மறுப்பதற்கில்லை. இருப்பினும் என்னைப் பொருத்தவரை அவர்கள் கூறிய கருத்துமலர்களை மட்டுமே போற்றி கொண்டு இருக்காமல் நாமும் ஒரு சாய்பாபா போல வாழ்ந்து காட்டுவதுதான் அவர் போன்றோரை பின்பற்றுபவர் செய்ய வேண்டிய அரிய செயலாகும். இது எவருக்கும் வாய்ப்பது அத்தனை எளிதில்லை, அதனால்தான் ஒரே ஒரு ஷிரிடி சாய்பாபா மட்டுமே இருக்கிறார், மற்றவர்கள் எல்லாம் அவர்களின் அடியார்களாக‌ இருக்கிறார்கள். இது நான் மக்களின் மீது சொல்லும் குற்றசாட்டு அல்ல. 

சாதாரண மக்கள் தங்களால் வாழ இயலாத வாழ்க்கையை இந்த மகான்களிடம் காண்பதால் பெரு மகிழ்ச்சி கொண்டு தங்களைத் தாங்களே முடக்கி கொள்கிறார்கள் என்பதுதான் எனது எண்ணம். இதன் காரணமாக மனிதர்களை கடவுளாக வழிபடுதல் என்பது அவரவரின் மனதுக்கு ஏற்ப நடக்கும் நம்பிக்கை எனும் செயல்பாடு. இந்த நம்பிக்கை இருக்கும் மட்டுமே ஷ்ரிடி சாய்பாபா, ரமண மகரிஷி, ராகவேந்திரர் போன்ற மகான்கள் மீதான பற்றுதல் தொடர்கிறது. இப்பொழுது சிவன், விஷ்ணு, முருகன், விநாயகர் எனும் மனித உருவில் உள்ள தெய்வங்கள் என சொல்லப்படுபவர்களை எடுத்துக் கொள்வோம். இந்த தெய்வங்கள் எல்லாம் இன்னல்களில் இருந்து காத்துவிடுவார்கள் எனும் நம்பிக்கை ஒன்றுதான் நம்மை அவர்களை வணங்க செய்கிறது. ஊரில் விளையாட்டாக சொல்வார்கள், கஷ்டம்னு ஒன்னு வந்தாத்தான் கடவுள் நமது கண்களுக்குத் தெரிவார் என்பார்கள். 

மரணமடைந்த எனது தாய் இறைவனாக இருந்து காத்து கொண்டிருக்கிறார் என எனது தந்தை அடிக்கடி சொல்வார், என்ன முட்டாள்தனம் என்றே எனக்குத் தோன்றும், ஆனால் பிறரது நம்பிக்கைகளை உதாசீனப்படுத்தும் யோக்யதை எனக்கு இல்லை, யோக்யதை இருந்தாலும் உதாசீனப்படுத்தும் எண்ணம் எனக்கு இல்லை, எனவே சிரித்து கொண்டே அமைதியாக இருப்பேன். கிராமத்து வீட்டில் எனது தாத்தா, எனது தாய் என பூஜையறையை அலங்கரித்து கொண்டிருப்பார்கள். அதே போல எனது மற்றொரு தாத்தாவுக்கு (எனது தாயின் அப்பா) கிராமத்து தோட்டத்தில் சமாதி ஒன்று உண்டு, அங்கே பூஜைகள் எல்லாம் நடக்கும். அதே போல நாச்சாரம்மாள் எனும் குழந்தை தீயில் விழுந்து இறந்து போனதால் அந்த குழந்தை நம்மை காக்கும் என அவரையும் ஒரு வீட்டில் தெய்வமாக கொண்டாடுவோம். இப்படி மனிதர்களை கடவுளாக வைத்து வணங்கிப் பார்க்கும் பழக்கம் நம்மில் தொன்று தொட்டு வந்து கொண்டிருக்கிறது. இதெல்லாம் தவறு என்று நான் சொல்லவில்லை. வாழ்க்கையில் என்ன வேண்டும்? நிம்மதி! அந்த நிம்மதி எந்த ரூபத்தில் வந்தால் என்ன என்கிற மனப்பக்குவம் உடையவர்கள் தான் நாம். 

எனக்கு இறை நம்பிக்கை கிடையாது, ஆனால் இறைவன் இருக்கிறார். எப்படி இருக்கிறார், ஏன் இருக்கிறார், எதனால் இருக்கிறார், எங்கே இருக்கிறார் என்பதெல்லாம் எனக்கு தெரியாது. தெரிந்து கொள்ள முயற்சிப்பதும் இல்லை. இறைவன் இருக்கிறார் அவ்வளவே. எனது செயல்பாடுகளுக்கே நானே காரணம். இதில் இறைவன் பங்கு கொள்வதும் இல்லை, பங்கு பெறுவதும் இல்லை. நான் என்ன புதிதாக சொல்லிவிடப் போகிறேன். நன்றும் தீதும் பிறர்தர வாரா என சொன்னவர்கள் இந்த வாழ்க்கையின் சூட்சுமத்தை அறிந்தவர்கள். 

ஏதேனும் தவறாக நடந்தால், ஏதேனும் நேர்மாறாக நடந்தால் 'தெய்வம் சும்மா விடாது' என சொல்பவர்களை கண்டு சிறுவயதில் மிகவும் பயந்தே இருக்கிறேன். இப்பொழுது கூட வாழ்வில் நடக்கும் பல விசயங்களைப் பார்க்கும்போது நமக்கு அதனதன் காரண காரியங்கள் தெளிவதில்லை தெரிவதும் இல்லை. நான் முதன் முதலில் நாவலுக்கு எழுதிய கவிதை 

நீ என் அருகினில் இருப்பினும்
உன்னை என்னுள் உணராதவரை
உன்னை தேடுதல் ஒரு தேவை.

இது எனது மனைவி அருகில் இருக்க நான் எழுதியது. இங்கே இறைவனைப் பொருத்திப் பார்க்கலாம், எனது மனைவியை நினைத்தும் பார்க்கலாம். 

மனிதர்களின் செயல்பாடுகளுக்கெல்லாம் இறைவன் பொறுப்பு ஏற்பது இல்லை, எனினும் நடக்கின்ற ஒவ்வொரு செயலுக்கும் இறைவன் ஒரு காரணியாக காட்டப்படுவதால் மனிதர்களின் நம்பிக்கை, தெய்வங்களிடம் மட்டுமின்றி மனிதர்களிடமும் பரவி இருக்கிறது என்பதுதான் நான் இதுவரை கண்டுகொண்ட விசயம். 

அவரவருக்கு எது எது பிடித்து இருக்கிறதோ அதன்படி அவர்கள் மட்டுமே நடந்து கொண்டால் பிரச்சினை இல்லை, அதை மற்றவர்களிடம் எதிர்பார்ப்பது பெரும் பிரச்சினைக்கே வழி வகுக்கும். 

நான் அவர்களின் அருகில் இல்லாத காரணத்தினால் மகான்கள் எனப் போற்றபடுபவர்கள் எல்லாம் என்னை வியக்க வைக்கிறார்கள். இதற்கு காரணம் அவர்களைப் பற்றி என்னில் பல அபிமானங்களை பிறர் திணித்துவிடுகிறார்கள், அல்லது அபிமானங்களை நானே திணித்துக் கொள்கிறேன். 

ஒரு கட்டத்துக்குள் நம்மை நாமே நுழைத்துக்கொள்ளும்போது எந்த சிந்தனையும் முழுமை பெறுவதில்லை. 

உருவ வழிபாடு தப்பும் இல்லை, வழிபாடு பண்ணாம இருப்பதும் தப்பு இல்லை. அவரவருக்கு அவரவர் செயல்கள் தப்பே இல்லையாம்! 

Thursday 19 January 2012

இது எல்லாம் கவிதைகள்

மழையில் நனையாமல் இருக்க
குடை பிடித்தேன்
குடை நனையாமல் இருக்க
மழை நிற்குமா?!

பிரச்சினைகள் கண்டு கண்டு
ஓடி ஒளிந்தேன்
நான் ஓடி ஒளிந்ததை கண்டு
பிரச்சினைகள் ஒழியுமா?!

அன்பின் அவசியம் குறித்து 
கோபம் கொண்டேன் 
கோபம் கொள்வது என்பது
அன்பில் அவசியமா?!

இறையென பலர் சொன்னதும் 
இரை என்கிறேன் 
இரையின்றி இறைவன் சரி
மனிதன் சரியா?!

ஏனோ கவிதைகள் புரிவதில்லை
வார்த்தைகள் என்றேன் 
வெறும் வார்த்தைகள் கொண்டால்
கவிதை அவையாகுமா? 

Tuesday 17 January 2012

இணையதள அறிவுகளஞ்சியங்கள் நாளை முடங்குகின்றன

அமெரிக்காவில் கொண்டுவரப்பட இருக்கும் இரண்டு சட்டங்களை எதிர்த்து இணையதளங்கள் நாளை இருபத்தி நான்கு மணிநேரம் தங்களை முடக்கி கொண்டு எதிர்ப்பினை தெரிவிக்க இருக்கின்றன. 

கிட்டத்தட்ட ஐயாயிரம்  இணையதளங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் சேர்ந்து கொண்டு எதிர்ப்பை காட்ட வேண்டும் என களத்தில் இறங்கி இருக்கின்றன. 

எப்படி நமது இணையதளத்தை முடக்குவது என்பது குறித்தான விபரங்களையும் இந்த இணையதளம் வெளியிட்டு உள்ளது. இணையதளம் வைத்திருக்காத நபர்கள் எதிர்ப்பினை ட்விட்டர், முகநூல் தனில் பதிவு செய்ய வேண்டுமென கேட்டு கொண்டிருக்கிறார்கள். சிடிசன், குடிமக்கள், என்பது போல இணையதளம் வைத்து இருப்பவர்கள் நெட்டிசன், வலைதளமக்கள், என புது பட்டம் அளித்து இருக்கிறார்கள். 

கருப்பு கொடி காட்டுவது போல எல்லா இணையதளங்களும் கருப்பாகவே இருந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும் என்பது எனது வேண்டுகோள். 

சரி, அப்படி என்ன அந்த இரண்டு சட்டங்கள் சொல்கிறது. இணையதள ரகசியங்கள் பாதுகாப்பு தடுப்பு சட்டம், அறிவுசார் சொத்து பாதுகாப்பு சட்டம். இப்படி இந்த இரண்டு சட்டங்கள் கொண்டு வந்தால் நிறைய அறிவுசார் இணையதளங்கள் எல்லாம் மூட வேண்டிய நிலை வந்து விடும். நாளை அமெரிக்காவில் கொண்டு வர இருக்கும் சட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும், நமது சுதந்திர பேச்சை, நமது முன்னேற்றத்தை தடுக்கும் இந்த சட்டங்கள் ஒடுக்கப்பட வேண்டும் என அறைகூவல் விடுத்து இருக்கிறார்கள்.  

இந்த இணையதளங்கள் செய்யும் பல விசயங்கள் கண்டனத்துக்குரியவையாக இருக்கின்றன என சொல்கிறார்கள். 

1  ஒருவர் எழுதிய நூலை அப்படியே அப்பட்டமாக பதிவது. (இது போன்று நான் எழுத நினைத்த கம்பராமாயணம், ஸ்ரீமத் பாகவதம் கிடப்பில் போடப்பட்டு விட்டன). 

2 பி டி எப் வடிவில் புதத்தகத்தையே காப்பி செய்து இணையத்தில் பதிவது. 

3 இசையை வெளியிடுவது, படங்களை வெளியிடுவது, தொடர்கள் வெளியிடுவது என பல வேலைகளை இலவசமாகவே செய்து வருகின்றன. இதன் மூலம் முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைகிறார்கள். 

எத்தனையோ அறிவு சார்ந்த விசயங்கள் இணைய தளம் மூலம் கிடைப்பதால் நூலகம் சென்று பல வருடங்கள் ஆகிவிட்டன. அப்படியெனில் நூலகங்களில் இலவசமாக கிடைக்கும் புத்தகங்கள் முடக்கப்படுமா? ஒரு படம் வாங்கி அதில் பல படங்கள் உருவாக்கி வாடகைக்கு விடப்படும் தொழில் முடக்கப்படுமா? 

இணையதள வளர்ச்சியினால்  பதிப்புரிமை, காப்புரிமை வைத்திருப்பவர்கள்  பாதிக்கப்பட்டது என்னவோ உண்மைதான். அதற்காக இணையதளத்தையே முடக்குவது அறிவை சிதைப்பது போன்றதாகும். 

காப்புரிமை, பதிப்புரிமை வைத்திருப்பவர்கள் சற்று சிந்தித்து செயல்பட வேண்டிய காலம் இது. அதே வேளையில் இணையதளம் வைத்திருப்பவர்கள் மிகவும் மனிதாபிமானத்துடன் நடக்க வேண்டிய தருணம் இது. 

இணையதளங்கள் மீது திணிக்கப்பட இருக்கும் சட்டத்தை நீங்கள் எதிர்க்கிறீர்களா?, ஆதரிக்கிறீர்களா?