Monday 7 June 2010

நுனிப்புல் (பாகம் 2) 6

6. திட்டம் தொடங்கியது


விஷ்ணுப்பிரியனை கண்ட வாசன் கேள்விக்குறியுடன் அவரை வரவேற்றான். வீட்டினுள் நுழைந்தார்கள்.

‘’என்ன வாசன் ரொம்ப களைச்சிட்டீங்க, திருமணத்தை நல்லபடியா சிறப்பா முடிச்சிட்டீங்க, ரொம்ப சந்தோசம்’’

‘’நன்றி’’

‘’உங்ககிட்ட நான் கொஞ்சம் பேசனும், அதுக்கு முன்னால உங்களைப் பத்தி சொல்லுங்க’’

தனது அறைக்கு அவரை அழைத்துச் சென்று நாற்காலியில் அமர வைத்தான் வாசன்.

‘’என்னைப் பத்தி என்ன சொல்ல’’

‘’கோவிலுக்குப் போனா நீங்க ஏன் உங்க நிலையில இருக்கறதில்ல, போன தடவை வந்தப்ப இதேதான் நடந்துச்சு, இப்பவும் இதேதான் நடந்திருக்கு, நான் கேட்க வேணாம்னுதான் நினைச்சேன் , ஆனா தெரிஞ்சிக்கனும்னு தோணுது வாசன்’’

‘’எனக்குத் தெரியலை’’

‘’நல்லா யோசனை பண்ணிச் சொல்லுங்க வாசன், கோவிலுக்குப் போறதால மட்டும் நடக்குதா, இல்லை வேறு இடத்தில, வேற காரணங்களால நடக்குதா’’

‘’சின்ன குழந்தையா இருக்கறப்ப இதுமாதிரி வரும்னு அம்மா சொல்வாங்க, அப்புறம் நான் கோவிலுக்குப் போகாத காலங்களில எனக்கு இது மாதிரி எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் வந்ததில்ல, எங்கயும் வந்ததில்ல, கோவிலுக்குப் போனா மட்டும் அங்க கருவறைக்கு முன்னால நிறைய நேரம் நின்னா உடல்ல ஒரு மாதிரி உணர்றேன்’’

‘’நீங்க சொல்றது எல்லாம் உண்மையா’’

‘’எல்லாம் உண்மை இல்லை’’

‘’அப்படின்னா இதுபத்தி உண்மைய சொல்ல மாட்டீங்க’’

‘’எனக்கு சரியா சொல்லத் தெரியலை’’

‘’அப்படின்னா இனிமே இதையெல்லாம் எழுதி வைச்சிருங்க, எப்ப எப்ப எப்படி இதுமாதிரி வருதுனு எழுதி வைச்சா உபயோகமா இருக்கும்’’

‘’என்ன திடீருனு இப்படி’’

‘’தெரிஞ்சிக்கனும் வாசன்’’

‘’என்னோட செல்களை எடுக்கப் போறீங்களா’’

விஷ்ணுப்பிரியன் தனது திட்டம்தனை செயல்படுத்த இதுதான் சமயம் என அந்த அறையினை நன்றாகப் பார்த்தார்.

‘’வாசன், பூங்கோதையின் கருப்பையில கருவை வைக்க முடியல, பெருமாள் தாத்தாவோட செல்கள் எல்லாம் பயனற்றுப் போயிருச்சி, அதனால இப்படி ஒரு காரியம் நான் பண்றதா இல்ல, உங்களுக்கு இப்படி நடக்குதே அதைத் தெரிஞ்சுக்கத்தான் கேட்டேன்’’

இதைக் கேட்டதும் வாசன் அதிர்ச்சியும் பதட்டமும் அடைந்தான்.

‘’என்ன சொல்றீங்க டாக்டர்’’

‘’பதட்டப்படாதீங்க வாசன், கருவை உருவாக்க முடியல, பூங்கோதையோட நம்பிக்கையை, பார்த்தனோட எதிர்பார்ப்பை வீணாக்க விரும்பல அதான் கருவை வைச்சிட்டதா சொன்னேன், இது சுபாவுக்குத் தெரியாது, இதுதான் உண்மையிலே நடந்த விசயம் வாசன்’’

‘’இப்ப எதுக்கு சம்பந்தமில்லாம பேசறீங்க’’

‘’சம்பந்தமில்லையா, இதை வைச்சித்தானே கல்யாணம் ஏற்பாடு எல்லாம் நடந்தது, அது இருக்கட்டும் இப்பதான் கல்யாணம் நல்லபடியா நடந்துருச்சே, அவங்க தாராளமா குழந்தை பெத்துக்கலாம், நீங்க உங்களுக்கு நடந்ததை சொல்றதுக்கு கடினமா இருந்தா, ஒரு காகிதத்தில உங்களுக்கு என்ன நடந்ததுனு எழுதித் தாங்க,’’

வாசன் தான் அமர்ந்து இருந்த இடம் விட்டு எழுந்தான். தீவிரமாக யோசித்தான். ஒரு காகிதத்தில் சில விசயங்களை எழுதினான். விஷ்ணுப்பிரியன் ஆர்வத்துடன் அமர்ந்து இருந்தார். வாசன் வேக வேகமாக எழுதி முடித்தவன் விஷ்ணுப்பிரியனிடம் தந்தான். விஷ்ணுப்பிரியன் வாசன் எழுதியதை வாசிக்க ஆரம்பித்தார்.

‘என்னை அறிந்து கொள்ள முயற்சிக்கும் தங்களுக்கு எனது நன்றி. எனக்கு ஏற்படும் மாற்றங்களை நான் அத்தனை விபரமாக கவனித்தது இல்லை, இது குறித்து எதுவும் எனக்குத் தெரியாது. ஒரு கருவினை ஆய்வகத்தில் உருவாக்கிய நீங்கள், என்னை அறிதல் பொருட்டு அப்படி ஒரு நிகழ்வே நடக்கவில்லை என இப்பொழுது சொல்வது வேடிக்கை நிகழ்வாக தெரியவில்லை, வேதனை தரும் நிகழ்வாக இருக்கிறது. இது என்னை அச்சப்படுத்துகிறது.

நீங்கள் குறிப்பிட்டது போல் எனக்கு இதுபோல் சூழ்நிலை வருமெனில் அதனைப் பற்றி நான் எழுதி வருகிறேன், தயவு செய்து இனிமேல் எந்த ஒரு காரணம் கொண்டும் இக்குழந்தை விபரம்தனை இதுபோல்
விளையாட்டாக பேச வேண்டாம்...

'பூங்கோதை தாயாகிய நிலை அறிவேன்’

இந்த கடைசி வரியை மட்டும் நன்றாக இடைவெளி விட்டு ஒரு வரியாக எழுதி இருந்தான் வாசன். இது போதும் எனக்கு என்பது போல் விஷ்ணுப்பிரியன் பார்த்தார். பின்னர் வாசனிடம், தற்போது வாசன் கொண்டிருக்கும் நிலையும், அவனது சில செயல்பாடுகள் தனது கவனத்தை வெகுவாக ஈர்த்துவிட்டதாகவும் அதன் பொருட்டு பல விசயங்கள் அறிந்து கொள்ள ஆர்வம் ஏற்பட்டதாகவும், உண்மை விசயத்தை அவனிடம் சொல்லாமல் இருந்தால் நல்லதில்லை என கருதியே சொன்னதாகவும் நம்பாவிட்டால் தனக்குச் சிரமம் இல்லையெனவும் கூறிவிட்டு அறையை விட்டு வெளியேறினார் விஷ்ணுப்பிரியன். வாசன் தனது அறையின் மேசையில் அந்த காகிதம்தனை போட்டுவிட்டு அப்படியே அமர்ந்துவிட்டான்.

விஷ்ணுப்பிரியன் உடனடியாக திரும்ப வந்து, நீங்க எழுதின காகிதம் எடுத்துக்கிறேன் என எடுத்துக் கொண்டார். வாசன் அவரது செயலை ஆச்சர்யத்துடன் பார்த்தான்.

‘’காகிதம் எதற்கு’’

‘’எனக்கு இது ரொம்ப முக்கியம்’’

வாசன் குழப்பமானான். பார்த்தசாரதியிடம் இது குறித்து கேட்கலாமா என நினைத்தான். விஷ்ணுப்பிரியன் வீட்டை விட்டு வெளியே வேகமாக நடந்து சென்றார். அச்சமயம் மாதவியும் தேவகியும் வந்தனர்.

‘’என்ன மான், டாக்டர் ஒண்ணும் பேசாமப் போறார்’’

‘’தேவி நீ எல்லாம் எடுத்து வை, இதோ வரேன்’’

வாசனின் அறைக்குள் சென்றாள் மாதவி. வாசன் மேசை மீது தலையை வைத்து படுத்து இருந்தான். வாசனை தொட்டு எழுப்பினாள் மாதவி.

‘’மாமா, மாமா’’

‘’ம்’’

‘’டாக்டர் வந்துட்டுப் போறார், என்ன பிரச்சினை மாமா’’

விஷ்ணுப்பிரியன் சொன்ன விபரம்தனை கூறினான் வாசன். யோசித்தாள் மாதவி. பின்னர் ஒரு வரைபடம் வரைந்தாள். அந்த வரைபடத்தை வாசனிடம் காட்டி விளக்கினாள். வாசன் பயந்து போனான்.

‘’எப்படி இது சாத்தியம் மாதவி’’

‘’எப்படி மாமா உங்ககிட்ட இதைச் சொல்றது, இது நடக்க வாய்ப்பு இருக்கு, அதுக்குத்தான் அவர் இப்படி பேசி இருக்கார், உங்ககிட்ட எதுக்கு இதுபத்தி பேசனும், நேரா பூங்கோதைகிட்டயும், கேசவன் கிட்டயும் சொல்ல வேண்டியதுதானே, சரி கவலைய விடுங்க மாமா, அவர் என்ன வேணும்னாலும் பண்ணட்டும், அவரோட நீங்க விவாதம் பண்ண வேண்டாம். யார்கிட்டயும் நீங்களா எதுவும் சொல்ல வேண்டாம், பொறுமையா இருங்க மாமா’’

‘’ஒரு கடிதத்தில சில விசயம் எழுதச் சொன்னார், எழுதினேன்’’

‘’அந்த காகிதம் இப்போ எங்க மாமா’’

‘’அவர் எடுத்துட்டுப் போய்ட்டார்’’

‘’மாமா நீங்க இனி சொல்ல வேண்டிய தருணம் வந்தா சொல்ல வேண்டியதுதான்’’

வாசனுக்கு தைரியம் சொல்லிவிட்டு கிளம்பினாள் மாதவி. மாதவியையும் தேவகியையும் வழி அனுப்பிவிட்டு வீட்டில் வந்து அமர்ந்தான் வாசன். மாதவி வரைந்து தந்த படம்தனை பத்திரப்படுத்தினான்.

மாலை நேரம் நெருங்கியது. வாசனது வீட்டிற்கு மணமக்கள் வந்து இருந்தார்கள். அவர்களுடன் பார்த்தசாரதியும், விஷ்ணுப்பிரியனும் மேலும் சிலரும் உடன் வந்திருந்தார்கள். அவர்களை வரவேற்று அமர வைத்த வாசன், பார்த்தசாரதி கைகளில் அவன் எழுதிய காகிதத்தின் ஒரு சிறு பகுதி இருப்பதைக் கண்டான்.

(தொடரும்)

Saturday 5 June 2010

தேடிக்கொண்ட விசயங்கள்

1. செல் அமைப்புகள் 

இப்பொழுது தாவரம் மற்றும் விலங்கு செல்லின் படங்கள் காணலாம். இதில் சில விபரங்கள் குறித்துப் பார்க்கும் பொழுது சில வித்தியாசங்கள் தென்படுகிறது. 

தாவர செல்லில் செல் சுவர் இருக்கிறது ஆனால் விலங்கு செல்லில் இல்லை. தாவர செல்லில் குளோரோபிளாஸ்ட் எனப்படும் செல் காணப்படுகிறது. ஆனால் விலங்கு செல்லில் அது இல்லை. மேலும் தாவர செல்லில் மையப்பகுதி தண்ணீரால் ஆனது ஆனால் இது போன்று தனி அமைப்பு விலங்கு செல்லில் இல்லை. தனித்தனியாக செல் அமைப்பு பற்றி விபரங்கள் தெரிந்து கொள்வோம். 





இந்த செல் அமைப்புகளைப் பற்றி விளக்கிச் சொல்லும் முன்னர் நாம் நுண்ணுயிரான பாக்டீரியாவின் செல் அமைப்பை பார்த்துவிடலாம். பாக்டீரியாக்கள் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னர் தோன்றிவிட்டதாகவும் இந்த பூமியானது உயிரினங்கள் வாழ வகை செய்து தந்தது என்பது அறிந்துக் கொள்ளப்பட வேண்டிய விசயம். 

கார்பன் வாழ்க்கை சுழற்சி, நைட்ரஜன் வாழ்க்கை சுழற்சி என உதவி வரும் இந்த பாக்டீரியாக்கள் ஒரு செல் அமைப்புடன் இருப்பதும் இத்தனை வருடங்கள் கழித்தும் இனியும் அழியாமல் வாழ்ந்து கொண்டு இருக்கும் நிலை காணும்போது சற்று அதிர்ச்சி அளிக்கிறது. 

பாக்டீரியாக்கள் இல்லாத உலகம் காண்பது என்பது மிகவும் கடினமான ஒன்று. இவை சாதாரண கண்களுக்குத் தெரிவதில்லை என்பதும் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்று ஓரிரு பாக்டீரியாக்கள் தவிர. இந்த பாக்டீரியாக்களில் டிஎன்ஏவானது தனக்கென ஒரு தனி கரு, உறை என கொள்ளாமல் செல் திரவத்தில் மிதந்து இருப்பது மிகவும் யோசிக்க வேண்டிய ஒன்று. இந்த பாக்டீரியாவின் செல் அமைப்பு தாவரத்தின் செல் அமைப்பு போன்று செல் சுவர் கொண்டு உள்ளது என்பதும் மிகவும் சுவாரஸ்யம. பாக்டீரியாவிற்கு வால் அமைப்பு உள்ளது, இது சிறப்பம்சம். இதோ செல் அமைப்பு. 



இப்பொழுது வைரஸ் அமைப்பினை பார்த்துவிடுவோம். வைரஸ் பற்றி இப்படித்தான் குறிப்பிட்டு இருக்கிறேன். அடக்கப்பட்ட உயிர். ஒடுக்கப்பட்ட உயிர். தனியாய் இருந்தால் மயான நிலை. ஒன்றினுள் நுழைந்தால் உயிர்த்த நிலை. 

இந்த வைரஸ் ஒரு செல் அல்ல என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த வைரஸிடம் நியூக்ளிக் அமிலமும் அதைச் சுற்றி புரத உறை மட்டுமே உள்ளது. 


அனைத்து செல் வடிவமைப்புகளை நாம் பார்த்தாகிவிட்டது, ஆனாலும் சில குறிப்பிட்ட செல்கள் இதே விசயங்கள் பெற்று இருந்தாலும் சில மாறுபாடுகளை கொண்டு இருக்கிறது. உதாரணமாக தாவரத்தின் வேர் செல்கள், விலங்குகளின் இனப்பெருக்க செல்கள் என சொல்லலாம். இவைகளை பற்றி பின்னர் பார்ப்போம். இனி இந்த செல் உறை மட்டும் செல் சுவர் பற்றி சிந்திப்போம். அதற்குப் பின்னர் நியூக்ளிக் அமிலங்கள் பற்றி பார்ப்போம். 

Friday 4 June 2010

தெய்வப்புலவர் திருவள்ளுவர்




நான் வியக்கும் மனிதரில் முதல் நீ 
நல்ல மனைவி கொண்டால்
யுகம் எல்லாம் கைவசமாம்

வாசுகியை உந்தன் வரிகளினால்தான்
வசப்படுத்திக் கொண்டாயா?

வார்த்தைகளில் கூட அடக்கத்தின் பெருமையை
உன்னைவிட யார் அழகாக சொல்லிட முடியும்

எதை செய்தாலும் எதை சொன்னாலும்
உன்னை தொடாமல் ஒருவரும்
வாழ்க்கை உணரப் போவதில்லை
நீ இறைப்புலவர் இயம்புகிறார்
உன் வரலாறு எழுதாமல்
உலகத்து சிந்தனை ஓங்கி
ஒப்பில்லா குறள் தந்து
தன்னடக்கம் காண்பித்த
தலைச்சிறந்த தமிழ்த்தலைமகன் நீ

எடுத்ததுக்கெல்லாம் நீதான்
எல்லோர் நினைவிலும்

சொன்னபடி செய்த ஒரு பெரும்
தவபுதல்வன் நீ

புகழோடு தோன்ற சொன்ன
புகழையும் வென்ற பெரும் கவிஞன் நீ

உனக்காக ஒரு கவிதை
எழுதி முடிக்கும் போது

சொல்லுக சொல் வெல்லுஞ்சொல்
இன்மை அறிந்து அல்லவா
தழுவி கொள்கிறது.