Saturday 5 June 2010

தேடிக்கொண்ட விசயங்கள்

1. செல் அமைப்புகள் 

இப்பொழுது தாவரம் மற்றும் விலங்கு செல்லின் படங்கள் காணலாம். இதில் சில விபரங்கள் குறித்துப் பார்க்கும் பொழுது சில வித்தியாசங்கள் தென்படுகிறது. 

தாவர செல்லில் செல் சுவர் இருக்கிறது ஆனால் விலங்கு செல்லில் இல்லை. தாவர செல்லில் குளோரோபிளாஸ்ட் எனப்படும் செல் காணப்படுகிறது. ஆனால் விலங்கு செல்லில் அது இல்லை. மேலும் தாவர செல்லில் மையப்பகுதி தண்ணீரால் ஆனது ஆனால் இது போன்று தனி அமைப்பு விலங்கு செல்லில் இல்லை. தனித்தனியாக செல் அமைப்பு பற்றி விபரங்கள் தெரிந்து கொள்வோம். 





இந்த செல் அமைப்புகளைப் பற்றி விளக்கிச் சொல்லும் முன்னர் நாம் நுண்ணுயிரான பாக்டீரியாவின் செல் அமைப்பை பார்த்துவிடலாம். பாக்டீரியாக்கள் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னர் தோன்றிவிட்டதாகவும் இந்த பூமியானது உயிரினங்கள் வாழ வகை செய்து தந்தது என்பது அறிந்துக் கொள்ளப்பட வேண்டிய விசயம். 

கார்பன் வாழ்க்கை சுழற்சி, நைட்ரஜன் வாழ்க்கை சுழற்சி என உதவி வரும் இந்த பாக்டீரியாக்கள் ஒரு செல் அமைப்புடன் இருப்பதும் இத்தனை வருடங்கள் கழித்தும் இனியும் அழியாமல் வாழ்ந்து கொண்டு இருக்கும் நிலை காணும்போது சற்று அதிர்ச்சி அளிக்கிறது. 

பாக்டீரியாக்கள் இல்லாத உலகம் காண்பது என்பது மிகவும் கடினமான ஒன்று. இவை சாதாரண கண்களுக்குத் தெரிவதில்லை என்பதும் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்று ஓரிரு பாக்டீரியாக்கள் தவிர. இந்த பாக்டீரியாக்களில் டிஎன்ஏவானது தனக்கென ஒரு தனி கரு, உறை என கொள்ளாமல் செல் திரவத்தில் மிதந்து இருப்பது மிகவும் யோசிக்க வேண்டிய ஒன்று. இந்த பாக்டீரியாவின் செல் அமைப்பு தாவரத்தின் செல் அமைப்பு போன்று செல் சுவர் கொண்டு உள்ளது என்பதும் மிகவும் சுவாரஸ்யம. பாக்டீரியாவிற்கு வால் அமைப்பு உள்ளது, இது சிறப்பம்சம். இதோ செல் அமைப்பு. 



இப்பொழுது வைரஸ் அமைப்பினை பார்த்துவிடுவோம். வைரஸ் பற்றி இப்படித்தான் குறிப்பிட்டு இருக்கிறேன். அடக்கப்பட்ட உயிர். ஒடுக்கப்பட்ட உயிர். தனியாய் இருந்தால் மயான நிலை. ஒன்றினுள் நுழைந்தால் உயிர்த்த நிலை. 

இந்த வைரஸ் ஒரு செல் அல்ல என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த வைரஸிடம் நியூக்ளிக் அமிலமும் அதைச் சுற்றி புரத உறை மட்டுமே உள்ளது. 


அனைத்து செல் வடிவமைப்புகளை நாம் பார்த்தாகிவிட்டது, ஆனாலும் சில குறிப்பிட்ட செல்கள் இதே விசயங்கள் பெற்று இருந்தாலும் சில மாறுபாடுகளை கொண்டு இருக்கிறது. உதாரணமாக தாவரத்தின் வேர் செல்கள், விலங்குகளின் இனப்பெருக்க செல்கள் என சொல்லலாம். இவைகளை பற்றி பின்னர் பார்ப்போம். இனி இந்த செல் உறை மட்டும் செல் சுவர் பற்றி சிந்திப்போம். அதற்குப் பின்னர் நியூக்ளிக் அமிலங்கள் பற்றி பார்ப்போம். 

Friday 4 June 2010

தெய்வப்புலவர் திருவள்ளுவர்




நான் வியக்கும் மனிதரில் முதல் நீ 
நல்ல மனைவி கொண்டால்
யுகம் எல்லாம் கைவசமாம்

வாசுகியை உந்தன் வரிகளினால்தான்
வசப்படுத்திக் கொண்டாயா?

வார்த்தைகளில் கூட அடக்கத்தின் பெருமையை
உன்னைவிட யார் அழகாக சொல்லிட முடியும்

எதை செய்தாலும் எதை சொன்னாலும்
உன்னை தொடாமல் ஒருவரும்
வாழ்க்கை உணரப் போவதில்லை
நீ இறைப்புலவர் இயம்புகிறார்
உன் வரலாறு எழுதாமல்
உலகத்து சிந்தனை ஓங்கி
ஒப்பில்லா குறள் தந்து
தன்னடக்கம் காண்பித்த
தலைச்சிறந்த தமிழ்த்தலைமகன் நீ

எடுத்ததுக்கெல்லாம் நீதான்
எல்லோர் நினைவிலும்

சொன்னபடி செய்த ஒரு பெரும்
தவபுதல்வன் நீ

புகழோடு தோன்ற சொன்ன
புகழையும் வென்ற பெரும் கவிஞன் நீ

உனக்காக ஒரு கவிதை
எழுதி முடிக்கும் போது

சொல்லுக சொல் வெல்லுஞ்சொல்
இன்மை அறிந்து அல்லவா
தழுவி கொள்கிறது.

வேடிக்கை மட்டுமே பாருங்கள்

முதன் முதலில் 1998 நவம்பர் மாதம் இலண்டனில் வந்து இறங்கிய நாள். விமான பயணம் ஒத்துக்கொள்ளவில்லை. காது இரண்டும் அடைத்துக் கொண்டது. நன்றாக காய்ச்சல் வந்து சேர்ந்தது. உடல்நிலை சரியாக மூன்று நாட்கள் மேலாகிவிட்டது.

நான் வந்து இறங்கிய இடத்துக்கும், நான் நமது ஊரில் வாழ்ந்த இடத்துக்கும் எந்தவிதமான வித்தியாசமும் தெரியவில்லை. சுற்றுலா பயணிகள் போலவே வெள்ளைக்காரர்கள் தெரிந்தார்கள். எங்கு பார்த்தாலும் இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் மற்றும் இலங்கை தமிழர்கள். 

கோவில்கள்  தென்பட்டன. மசூதிகள் தென்பட்டன. அங்கே மனிதர்கள் மிக மிக அதிகமாகவே தென்பட்டார்கள். தேவாலாயங்கள் 'தேமே' என பள்ளிக் கூடங்களாகவும், கராத்தே பயிலும் இடங்களாகவும் தம்மை மாற்றிக் கொண்டிருந்தன. 

எனது சொந்த சகோதரிகள், சகோதரர்கள் அதே இடத்தில் தான் வசித்து வந்தார்கள். சில நாட்கள் பின்னர் சாலையில் நடந்து செல்கிறேன். வழியில் சொந்த சகோதரி வருகிறார். அவரிடமிருந்து ஒரு புன்னகை. பேசுவதற்காக அருகில் செல்கிறேன். எதுவும் பேசாமல் செல்கிறார். எனக்கு மனது வலிக்கிறது. 

ஊரில் நான் தெருவில் நடந்து வீட்டுக்கு சென்றடையும் முன்னர் என்னைப் பார்த்து இப்போது தான் வருகிறாயா என ஒவ்வொரு வீட்டு வாசலில் அமர்ந்திருக்கும் பெண்மணிகள், ஆண்கள் என அனைவரின் அன்பான உபசரிப்புகள் மனதில் அந்த வலியின் ஊடே வந்து போகிறது. எப்படி இப்படி பேசாமல் செல்லலாம் என அன்று இரவே என் சகோதரி வீட்டுக்கு சென்று சண்டையிடுகிறேன். அதற்குப்பின்னர் என்னை சாலைகளிலோ எங்கோ பார்ப்பவர்கள் ஓரிரு வார்த்தை பேசித்தான் செல்கிறார்கள். நான் திட்டிவிடுவேன் எனும் அச்சம் கூட இருக்கலாம். அன்பை பிச்சையாகவாது  போடு என்பதுதான் நான் கண்கள் கலங்கி கற்றுக் கொண்ட வாசகம். 

நாற்பது வருடங்கள் முன்னர் ஒரே ஒரு தமிழ் பலசரக்கு கடை தான் இருந்தது என நினைக்கும் போது பிரமிப்பாக இருக்கிறது. அந்த இடத்தில் எங்கு பார்த்தாலும் இன்று தமிழ் கடைகள். சரவண பவன், வசந்த பவன் என பெயர் தாங்கிய உணவு கடைகள். பழக்கமில்லாதவர்கள் எதிரெதிர் பார்த்துக் கொண்டால் நமது ஊரைப் போலவே இங்கே சிரிப்பது இல்லை, பேசுவது இல்லை. 

மெல்ல மெல்ல வருடங்கள் செல்கிறது. ஒரு முறை ஆய்வகத்தில் இருந்து வீடு நோக்கி வருகிறேன். இரவு எட்டு மணி இருக்கும். சாலையில் ஒரு வாகனம் முன்னால் நின்று இருக்க அதை விலகி போகச் சொல்லி பின்னால் இருக்கும் வாகனத்தில் இருந்தவர் எச்சரிக்கை ஒலி எழுப்புகிறார். இங்கே வாகனங்களில் ஒலி எழுப்பவது மிகவும் அபூர்வம். முன்னால் இருப்பவர் நகர மறுக்கிறார். பின்னால் இருப்பவர் வாகனத்தை நிறுத்தி முன்னால் இருப்பவருடன் சண்டை போடுகிறார். வழியில் செல்பவர்கள் எல்லாம் அதை வேடிக்கை பார்த்தவண்ணம் நிற்கிறார்கள். அந்த சண்டையை விலக்கிவிடுவதற்காக நான் செல்கிறேன். ஒரு சின்ன பிரச்சினை. முன்னவர் விட்டு கொடுத்தால் பின்னவர் சென்று விடலாம். அங்கே இருந்த எனக்கு தெரிந்த நபரிடம் சொல்கிறேன். 'பேசாம வீட்டுக்கு போ' என்கிறார். 

வீட்டில் வந்து விபரங்கள் சொல்கிறேன். உயிர் தப்பி வந்தாய் என்றார்கள். விலக்கிவிட சென்று இருந்தால் அவர்கள் இருவரில் எவரிடமாவது கத்தி இருந்தால் என்ன செய்வாய் என்கிறார்கள். மனதில் என் மரணம் பற்றிய பயம் இல்லை ஆனால் மூர்க்கத்தனமான எண்ணங்கள் உடைய மனிதர்கள் பற்றிய பயம் வந்தது. காவல் அதிகாரிகள் கடமையை செய்யட்டும் என்றே நினைத்தேன். அதன் காரணமாக  சமூகத்தின் மீதான அக்கறை தொலைந்து போனது. அவரவர் அவரவரை காத்து கொள்ளும் தைரியம் வரட்டும் என்றே ஒரு எண்ணம் வந்து சேர்கிறது. 

சில வருடங்கள் கடந்து செல்கிறது. வீட்டுக்குள் திருட வந்தவனை தாக்கியதற்காக அந்த வீட்டுக்காரர் மீது வழக்கு தொடரப்பட்ட செய்தி படிக்கிறேன்.  திகைத்தேன். அதை காரணம் காட்டி என்னால் ஒரு கதை எழுத முடிந்தது. இந்த நாட்டில் இருக்கும் மனித உரிமை அமைப்புகள் மீது வெறுப்பு வந்து சேர்கிறது. இப்பொழுது சட்டம்தனை கொஞ்சம் மாற்றி இருக்கிறார்கள். அளவுக்கு அதிகமாக திருடனை தாக்க கூடாது என்பதாக. திருடன் உருவாவதில் அரசுக்கும் பங்குண்டு என்பதால் கூட இருக்கலாம். 

சமூக நல அமைப்புகளை பார்வையிடுகிறேன். அங்கே நடக்கும் அரசியல் என்னை விலகி போ என சொல்கிறது. உதவும் மனப்பானமையைவிட பெயர் வாங்கும் மனப்பான்மை பெரிதாகத் தெரிகிறது. கொடுக்கப்படும் பணம் பற்றிய அக்கறை எல்லாம் இல்லை. சமூக நல அமைப்புகள் மீது எரிச்சல் அடைகிறேன். ஏதோ ஓரளவுக்கு என எதையாவது செய்கிறார்களே என என்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. உண்டு கொழிக்கும் கூடராமாகவே தென்படுகிறது. எவருக்கு இருக்கிறது சமூக அக்கறை என்றே தோன்றுகிறது. 

வருடங்கள் செல்கிறது. சாலையில் நடந்த பிரச்சினை ஒன்றினை விலக்கிவிட முனைந்த ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு இறந்து போகிறார் எனும் செய்தி படிக்கிறேன். மனதில் கோபம் கோபமாக வருகிறது. அந்த இருவரும் முறைகேடான மனிதர்கள் என்பதை மறந்து அவர்களை விலக்கி விட முனைந்த அந்த உயிர் பரிதாபமாக போனதில் அனைவரும் 'உச்' கொட்டுகிறார்கள். இறந்து போன மனிதரின் வீரத்திற்கு பாராட்டு என்கிறார் உயர் அதிகாரி. பேசாமல் போகவேண்டியதுதானே என்கிறார்கள், வேடிக்கை பார்க்கும் மனிதர்கள்.

வேடிக்கை பார்க்கும் மனிதர்களால் இவ்வுலகம் புரட்சி என எதுவும் கண்டதில்லை. வெறும் அறிக்கைகள் மூலம் புரட்சியாளர்கள் ஒருபோதும் விளம்பரம் தேடிக் கொண்டதில்லை. மக்களுக்கு எதிராக நடக்கும் விபரீதங்களை தெருக்களில் இறங்கி எதிர்த்து போராடிய மனிதர்களால் மட்டுமே புரட்சி செய்ய முடிந்தது.  அந்த மனிதர்களால் மட்டுமே வேடிக்கை பார்க்கும் மனிதர்கள் சந்தோசமாக வாழ முடிகிறது. இதற்காக உயிர் துறந்த பல புரட்சி வீரர்களுக்கு வீர வணக்கங்கள். 

மொத்த மனிதர்களின் நலனுக்காக மனதில் உறுதியும், உண்மையும், சத்தியமும் நிறைந்த புரட்சி செய்யும் மனிதர்கள் என அவ்வப்போது தோன்றி கொண்டேதான் இருப்பார்கள். எனவே சந்தோசமாக வேடிக்கை மட்டுமே பாருங்கள். விளம்பரம் தேடும் மனிதர்களிடம் இருந்து விலகி நில்லுங்கள்.