Wednesday 13 January 2010

அரசியல்வாதிகள் (உரையாடல் கவிதைப் போட்டி)

அரசியல்வாதிகள்

வெட்டிப் பேச்சு, வீண் எழுத்து
சட்டி சட்டியாய் நிறைந்திருக்கும்

அதை செய்தோம், இதை செய்தோம்
கதை சொல்லி காலம் கடத்தும்

ஆதங்கங்கள் நிறைய கொண்டு
வாதங்கள் செய்வது மட்டும் உண்டு

நாட்டின் நிலைமையை கைகாட்டுவோமே
வீட்டின் நிலைமையை பார்த்தோமா

உற்ற உறவுகளையும், பெற்ற நட்புகளையும்,
கற்ற கல்வியையும், சிற்றறிவுடன்
விற்ற பெருமையும் நம்மை சார்ந்ததாம்

கட்சியில்லை, கொடியுமில்லை
கூட்டம் கூட்டமாய் அலைந்து திரிவோம்
மாட்சியில்லா மந்தைகளாய் மாய்ந்தும் போவோம்

எத்தனை வாக்குறுதிகள், எத்தனை உறுதிமொழிகள்
பித்தனைப் போல், எத்தனைப் போல்
வருடவேஷம் கட்டி நீசமனம் கொண்டு
திருடகோஷம் போடும் நாமும் அரசியல்வாதிகளே.



Tuesday 12 January 2010

நாச்சாரம்மாள்

நாச்சாரம்மாள் வண்ணமயமான தெருவினில் நின்று கொண்டு மனதினில் நாராயணப் பெருமாளை நினைத்து வழிபட்டு கொண்டு இருந்தாள். ஊரில் உள்ள மக்கள் எல்லாம் திரண்டு இருந்தனர்.

நடு இரவு ஆகியும் சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அந்த அதிசய நிகழ்வினை காண்பதற்கு காத்துக் கொண்டு இருந்தனர். ஊரின் நாட்டாமையும் ஊரின் பூசாரியும் தகதகவென நெருப்பாய் பிரகாசித்துக் கொண்டு இருந்த நெருப்புக் கோளங்களை ஒரு சட்டியில் எடுத்து வரச்சொன்னார்கள். எரிக்கப்பட்ட கட்டையானது நெருப்புத் துண்டுகளாய் மாறி நெருப்புக்கோளங்கள் போன்று இருந்தது. நாச்சாரம்மாள் வழிபாட்டினைத் தொடர்ந்து கொண்டு இருந்தார். மூதாட்டிகள் அவரைச் சுற்றி ஒரு வளையம் மூன்று அடிகள் தள்ளி அமைத்து இருந்தனர்.

நாச்சாரம்மாளின் கண்களில் இருந்து கண்ணீர் சொட்டாய் தரையில் விழுந்தது அது பூமியினை பெரும் குளிர்ச்சி அடையச் செய்தது. பூசாரி நெருப்புக் கோளங்களை நெருப்புக் கடத்தா பொருளின் உதவியுடன் வாங்கிக் கொண்டு வளையம்தனை விளக்கி நாச்சாரம்மாளின் முன் வந்தார். ‘’தாயே சேலையைப் பிடிச்சி மடி ஏந்து’’ என்று சொன்னதும் ஊரில் உள்ள அனைவரும் கோவிந்தா, கோவிந்தா, கோவிந்தா, நாராயணா, நாராயணா, நாராயணா, பெருமாளே பெருமாளே, பெரூமாளே என கோஷம் இட்டனர். பூசாரியின் கைகள் நடுங்கியது. அந்த அரும்பெரும் காட்சியினைக் காண ஒருவரையொருவர் முன்னும் பின்னும் தள்ளிக் கொண்டு கால்களை சிறகுகளாக மாற்றிகொண்டு இருந்தனர். முன் இருப்பவரின் தோள்களில் கைகள் வைத்து அழுத்தியது கூட உணராமல் மற்றவர்கள் தாங்கிக் கொண்டு இருப்பதைக் காணும்போது இந்நிகழ்ச்சி எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர்த்திக் கொண்டு இருந்தது.

நாச்சாரம்மாள் சேலையின் மடியினை தாங்கிப் பிடித்தார், இம்முறை ஒவ்வொருவரும் அமைதியாய் பெருமாளே பெருமாளே என வேண்டிக் கொண்டு இருந்தனர், பூசாரி நெருப்புக் கோளங்களினை சேலையின் மடியில் போட்டார். 'கோவிந்தா' என்னும் கோஷம் விண்ணைப் பிளந்தது. நெருப்புக்கோளங்களை தனது சேலையில் நாச்சாரம்மாள் இன்னும் தாங்கிக் கொண்டு இருந்தார். ஒரு நெருப்புக் கூட சேலையினை எரிக்கவில்லை தரையில் விழவும் இல்லை. அந்த நிகழ்வினைக் கண்டு அனைவரும் 'தாயே' என விழுந்து வணங்கினர். பூசாரியும் விழுந்து வணங்கினார். ‘’நம்ம ஊர்ல தெய்வம் குடி இருக்கு’’ என அனைவரும் கூறினர். பூசாரி நெருப்புக் கோளங்களினை சட்டியில் வாங்கிக் கொண்டார். ஊரெல்லாம் நாச்சாரம்மாளினை தெய்வம் என கொண்டாடியது. மறுநாள் காலையில் நாச்சாரம்மாள் வைகுண்டப் பதவி அடைந்தார். ஊரெல்லாம் சோகத்தில் மூழ்கியது.

Thursday 7 January 2010

உண்மை வேறு நம்பிக்கை வேறு

ஆன்மிகப் பாடல்கள் என்றால் மிகவும் விருப்பமாகவே பலருக்கும் இருக்கும். இறைவனை நினைத்து எழுதப்பட்ட பாடல்கள் என்றே மனம் நினைத்து நினைத்து பெருமிதம் கொள்ளும். பலரின் கண்களும் நீர் கோர்த்துக் கொண்ட தருணங்களும் அதிகம் உண்டு. மனதில் இருக்கும் மென்மை உணர்வினைத் தழுவிச் சென்ற ஆன்மிக பாடல்களைக் கேட்கும்போது பலமுறை யோசித்தது உண்டு. ஏனிந்த நிலை என?

அமைதியான சூழ்நிலையை விரும்பும் உயிரினங்கள் மிகவும் அதிகம் உலகில் உண்டு என எடுத்துக் கொள்ளலாம். அமைதியாக இருக்கும்போது நமக்கு ஆனந்தமாக இருக்கும். அதே வேளையில் விழாக்காலங்களில் ஏற்படும் சப்தங்களும் நமக்கு ஆனந்தமாக இருக்கும். ஆனால் இதே சப்தமானது சண்டைகளின் போது ஏற்பட்டால் நமது ஆனந்தம் தொலைந்து போய்விடும். இப்படி பலவிதமான உணர்வுகளை நம்மிடம் நாம் ஏற்படுத்தியதன் நோக்கம் எதுவென ஆராய்ந்து கொண்டிருக்க ஆவல் அதிகமாகவே இருந்தது. இதில் எப்படி இறை உணர்வை மட்டும் தனிமைப்படுத்திப் பார்ப்பது எனப் புரியாமலேதான் இருக்கிறது.

ஒரு விசயத்தை நமக்குப் பிடித்தமானவர் சொல்லும்போது அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவமும், நமக்குப் பிடித்தமில்லாதவர் சொல்லும்போது அதை ஒதுக்கித் தள்ளும் பக்குவமும் நமக்குள் ஏற்பட்டது எவ்வாறு எனச் சிந்தித்தபோது பல விசயங்கள் புரியப்படாமலே இருந்து ஒதுங்கிப் போவதுண்டு. இதற்கெல்லாம் ராசிகளும், நட்சத்திரங்களும் கூட கூட்டுச் சேர்ந்து கொண்ட விதம்தனை கூட படித்துப் பார்த்து அறிந்து கொள்ள அவசியம் வந்ததுண்டு.

முதலில் சொன்ன பாடலையே சிந்தித்துப் பார்க்கலாம். காதலன் காதலியை நோக்கி எழுதும் பாடல். காதலி காதலனை நினைத்து எழுதும் பாடல். இதே பாடலை இறைவனுக்கும் இணைத்துப் பார்க்கலாம். மிகவும் பொருந்தித்தான் போகிற‌து. யோசித்தேன், மனிதர்கள் செய்யும் செயல்களை நாம் எதனுடனும் இணைத்துப் பார்த்தாலும் அது போலவேத் தோற்றம் எடுத்துக்கொள்ளும்படி நமக்குள் ஒரு வித எண்ண ஓட்டம் ஓடிக்கொண்டிருந்த நிலையை கண்டு பிரமிப்பு ஏற்பட்டது.

ஒரு விசயத்தை எப்படி நீ பார்க்க நினைக்கிறாயோ அப்படியே அந்த விசயம் தன்னை மாற்றி அமைத்துக்கொள்கிறது எனச் சொல்ல இயலுமா? அந்த விசயம் மாற்றம் கொள்ளவில்லை, ஆனால் அந்த விசயத்தை மாற்றியமைத்துக் கொண்டது நமது எண்ணம். இதற்கு மூல காரணன் யார்? நம்பிக்கை.

உண்மை வேறு, நம்பிக்கை வேறு என எவரேனும் பிரித்துப் பொருளுணர்ந்து கொள்ள முனைந்திருப்போமானால் இன்று உலகில் பல்வேறு சர்ச்சைகள் இருந்திட நியாயமில்லை. ஒருமுறை இருவரிடம் நடந்த ஒரு உரையாடலைக் கேட்க நேர்ந்தது.

'கடவுளிடம் உங்களுக்கு நம்பிக்கை உண்டா?'

'இல்லை'

'அப்படியெனில் கடவுளிடம் நம்பிக்கை இல்லையா?'

'இல்லை'

'நீங்கள் கடவுளை நம்பவில்லை எனலாமா?'

'அப்படியே சொல்லலாம்'

'நீங்கள் மிகவும் சிறந்த ஆன்மிகவாதி என்று கருதியது என் தவறா?'

'அதுகுறித்து என்னால் எதுவும் சொல்ல இயலாது'

'கடவுள் இருக்கிறாரா, இல்லையா?'

'இருக்கிறார்'

'பின்னர் ஏன் கடவுள் மீது நம்பிக்கை இல்லை எனச் சொல்கிறீர்கள்?'

'இருக்கிறது எனச் சொல்வதற்கு நம்பிக்கையின் தேவை அவசியம் எனில் அங்கே இருக்கிறது எனச் சொல்லப்படுவதன் அர்த்தம் சந்தேகத்துக்கு உட்படுகிறது'

'எனக்குப் புரியவில்லையே, கடவுள் மீது நம்பிக்கை இல்லை என்கிறீர்கள், ஆனால் கடவுள் இருக்கிறார் என்கிறீர்கள்'

'ஒன்றை நம்புவது வேறு, ஒன்று இருக்கிறது என அறிந்துணர்வது வேறு. நாம் நம்பும் விசயத்தை பிறர் நம்பும்படி நாம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படுகிறது, அதன் காரணமாக நம்பிக்கையில்லாத் தன்மை ஏற்பட வாய்ப்பு அமைத்து தந்துவிடுகிறோம்'

'என்னதான் சொல்கிறீர்கள், கொஞ்சமும் விளங்கவில்லை, கடவுளை நம்புகிறீர்களா, இல்லையா?'

'கடவுளை நான் நம்பவில்லை, ஆனால் கடவுள் இருப்பதாக உணர்கிறேன்'

'புரியும்படிச் சொல்லுங்கள், என்னை நீங்கள் நம்புகிறீர்களா?'

'இல்லை'

'எனக்குப் புரிந்துவிட்டது ஐயா, நீங்கள் மிகச் சிறந்த ஆன்மிகவாதி'

இந்த உரையாடல் முடிந்ததும் எனக்குள் ஒரு பாடல் ஒலித்தது. கற்பனை என்றாலும், கற்சிலை என்றாலும்...

நானும் சிந்தித்துப் பார்த்தேன், நம்பிக்கை இல்லாத பட்சத்தில் இறைவன் இல்லாது ஒழியக்கூடும் அல்லவா? அப்போதே மனதுக்குள் ஒரு எண்ணம் எழுந்தது. நம்பிக்கை இல்லாத போதிலும் அவன் இருந்து கொண்டுதானிருக்கிறான் என்பதை எவரையும் நான் நம்ப வைக்கவேண்டிய அவசியம் எனக்கு ஒருபோதும் ஏற்படப் போவ‌தில்லை.

அது இருக்கட்டும், நம்பிக்கையினால் மட்டுமா இறைவன் இவ்வுலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறான்?