Wednesday 26 August 2009

மற்றும் இப் பொழுது. And, Now எழுதிய உறவுகளுக்கு.

மிகவும் வித்தியாசமாகத்தான் இருக்கிறது வலைப்பூ எழுதுபவர்களின் சிந்தனை. ஒருவர் மற்றொருவரை அடித்தால் மற்றொருவர் அடுத்தவரை தொடர்ந்து அடிக்க வேண்டும் எனும் விளையாட்டு போல ஒருவர் ஒரு கருத்தை வைத்து எழுதிட அதே கருத்துடைய விசயத்தை தங்களது பாணியில் எழுதி ஒவ்வொருவரும் தங்கள் கருத்தை முன் வைக்கிறார்கள்.

பெரும்பாலானவை தொலைந்து போன விசயங்களுடன் ஒட்டிய விசயங்களை முன்னிலைப்படுத்திய விதம் மிகவும் அருமையாக இருந்தது. பொதுவாக நம்மிடம் இருக்கும் பொருளுக்கு நாம் அத்தனை மதிப்பு தருவதில்லை, நம்மிடம் எப்பொழுது ஒன்று தொலைந்து போகிறதோ அது குறித்த சிந்தனை அதிகமாகவே நமக்கு இருக்கும். இது இயல்பாகவே நடப்பது. இதுகுறித்து எந்த சிந்தனையும் இல்லாமல் 'மொக்கை' என இடுகைகள் இடப்பட்டதும் சரி, 'கவுஜ, கவிதை, அனுபவம்' என இடப்பட்ட இடுகைகளும் சரி ஒருவருடைய எண்ணத்தை எடுத்துக்காட்டுகின்றன. அதாவது குறிப்பிடப்பட்ட விசயத்தைப் பற்றி சற்றும் யோசிக்காமல் திடீரென என்ன எண்ணத் தோன்றுகிறதோ அதை வைத்து எழுதப்படும் நான்கைந்து வரிகள் எனலாம்.

இதையே சற்று நேரம் சிந்தித்து எழுதினால் வரும் சந்ததிகளுக்கு நல்லதொரு விசயத்தையும், எப்படிப் போராடி வெற்றி பெற்றோம் என்கிற நல்லதொரு எண்ணத்தையும் விதைக்கும் வண்ணமாக எழுத்து இருந்தால் அது மிகவும் பயனுள்ளதாக அமைந்துவிடுகிறது, இப்போது எழுதப்பட்டவை எல்லாம் பயனற்றவை என கருத இயலாது. இது ஒரு விளையாட்டு என கொள்ளலாம். மூளை வளர்ச்சி அடையும் வகையில் கேளிக்கை செய்வோம் என்றுதான் பாடல் கூட இயற்றி இருக்கிறார்கள். அந்த வகையில் இவை திடீர் சிந்தனையின் வெளிப்பாடுகளே.

2003ல் தொடங்கப்பட்ட நுனிப்புல் பாகம் 1 எனும் நாவல் எழுதி முடிக்க மூன்று வருடங்கள் மேல் ஆனது. அதனை சொந்த செலவில் அச்சடித்து வெளியிட்டோம். இலண்டனில் உட்கார்ந்து கொண்டு எப்படிச் செய்ய வேண்டும், என்ன செய்ய வேண்டும் என புரியாமல் அச்சடிக்கப்பட்ட புத்தகத்தில் அதிகமான எழுத்துப்பிழைகள், வாக்கியப் பிழைகள், வார்த்தைப் பிழைகள். புத்தகத்தைத் திரும்பிப் படிக்கும்போது மிகவும் கஷ்டமாகப் போய்விட்டது. முதலில் எழுதப்படுவது நன்றாக இருந்தால்தான் பின்னால் எழுதப்படுவது இலகுவாக அனைவரையும் அடையும் என்றிருந்த நிலையை உணராமல் பல மாதங்கள் பின்னரே வெளிவந்தது அந்த நாவல்.

இந்த நாவலை வெளியிட எங்கு கேட்டாலும் உடனடியாக செயல்படுத்த முடியாத நிலையாகத்தான் இருந்தது. நூலகங்கள் எடுத்துக் கொள்ள வழி செய்ய முயற்சித்து கொண்டிருக்கையில் மனுவுக்கான இறுதிநாள் தவறிப்போனது. எழுதிய நான் இல்லாமலே நாவலை வெளியீடு செய்து பத்திரிகைகளுக்கு எல்லாம் செய்திகள் கொடுத்து பத்திரிகைகளில் இதுகுறித்து வெளிவந்த விசயம் மிகவும் மகிழ்வாக இருந்தது. இருப்பினும் நாவலை எப்படி எல்லோரிடமும் கொண்டு சேர்ப்பது எனப் புரியவே இல்லை.

நண்பர்களின் முயற்சியினால் பல புத்தகங்கள் பலரைச் சென்றடைந்தன. ஆனால் மொத்தமாக எவரும் எடுத்து விற்பனை செய்ய முன்வரவில்லை, முறையாக நாங்கள் முயற்சிக்க வில்லை. பின்னர் பல்லவி வெளியீட்டாளரிடம் தொடர்பு கொண்டு நூலகங்களுக்கு மனு செய்தோம். நூலகங்கள் நாவலை எடுத்துக்கொண்டால் சரி, அப்படி இல்லையெனில் விற்பனை செய்து தருவதாக அவர்கள் வாக்குறுதி அளித்தார்கள்.

நாட்கள் சென்று கொண்டே இருந்தது, எதுவும் ஒரு முடிவு கிடைத்தபாடில்லை. நூலகங்களுக்குத் தேர்வு செய்யப்பட்ட மகிழ்ச்சி செய்தி வந்தாலும், நூலகங்களிலிருந்து புத்தகங்கள் அனுப்பச் சொல்லி முறையான கடிதம் எங்களுக்கு வந்து சேரவில்லை. இருந்த நம்பிக்கையும் தொலைந்து போன நேரத்தில் நேற்று முன் தினம் நுனிப்புல் பாகம் 1 தனை அனுப்பச் சொல்லி கடிதம் வந்து சேர்ந்தது. அதைப் பார்க்கையில் நாவல் வெளியிட வேண்டும் எனும் சாதாரண ஆசை ஒரு வித்தியாசமான திசையில் பயணித்து ஒரு இலக்கை அடைந்துவிட்டதை எண்ணும்போது இப்பொழுது எவ்வளவோ மகிழ்ச்சியாக இருக்கிறது.

சென்னை கன்னிமாரா நூலகத்தில் எனது நாவலுக்கும் ஒரு இடம் கிடைத்துவிடும், மேலும் கொல்கத்தா, மும்பாய், டில்லி நகர நூலகங்களுக்கும் இந்த நாவல் பயணிக்கிறது என நினைக்கும் இப் பொழுது சிறப்பாகவே இருக்கிறது. எப் பொழுதும் சிறப்பாகவே இருக்கும் எனும் நம்பிக்கையும் பிறக்கிறது.

நிலையான நட்பு

முகம் பார்க்காமல் முதல் அறிமுகம்
வார்த்தைகளில் தொடங்கி வருடங்கள் பல கடந்து வளர்பிறையாய்
முகவரி தெரியாமல் முழு நிலவாய்
அகம் அறியாது இனம் புரியாத நட்பு

எண்ணங்கள் நினைவுகளில் இடும் அலங்காரம்
இனிய நாட்கள் இன்ப ஒளி வீசி மலர்ந்து சிரிக்கும்
நெருடல்கள் இல்லாது வணங்கி கொண்டு
நெஞ்சை வருடி நெகிழ்வு தருமது நட்பு

இடங்கள் பல மாறியது உண்டு
தொடர்ந்தே என்றும் இணைந்து வந்ததுண்டு
அன்பே உருவான இனிய இதயத்தோடு
முதுமை வரைக்கும் வருமோ இளமை மாறா நட்பு

கண்ட உண்மையில் கற்பனை மறைந்துவிடும்
கொண்ட நட்பினால் உள்ளம் அளவிலா மகிழ்ச்சி கொள்ளும்
எல்லைதனை வகுத்து புரிந்து கொண்டால்
குறையின்றி நெறியோடு நீண்டநாள் வாழ்ந்திடும் நிலையான நட்பு.

Tuesday 25 August 2009

வலைப்பூ கண்டு மிரண்டு போனேன்

உலகில் ஏதேனும் பிரச்சினைகள் இருந்து கொண்டேதான் இருக்கின்றன, பிரச்சினை இல்லாத உலகம் காண வேண்டும் என நினைப்பதெல்லாம் வெறும் கனவாகவே இருக்க முடியும். பிரச்சினைகளுடன் வாழ்ந்து அதிலிருந்து கொண்டே பிரச்சினைகளை வென்று அடுத்த பிரச்சினைகளை எதிர்நோக்கி வாழ்வதுதான் நிதர்சனம்.

நல்லது, பிரச்சினை முடிந்துவிட்டது என அமைதியாக எவராலும் இருக்க இயலாது. திறம்பட வாழ்க்கையை வாழ்வதற்கு நாம் நமது மனதில் உறுதியுடன் இருத்தல் அவசியம் என்பதை அறிவோம்.

சில மாதம் முன்னர் அன்பரின் 'நிகழ்காலத்தில்' எனும் வலைப்பூவிற்குச் சென்றபோது வலைப்பூ மால்வேரினால் பாதிக்கப்பட்டுள்ளது, மீறிச் சென்றால் உங்கள் கணினி பாதிக்கப்படும் எனும் எச்சரிக்கையைக் கண்டு பல நாட்களாக அவரது வலைப்பூவினைப் பார்க்காமலே இருந்தேன். ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது எனப் பார்த்தபோது அன்பர் சக்திவேலின் 'படிக்காத பக்கங்களில்' ஒரு இடுகை கண்டேன், எந்த எந்த திரட்டிகளில் எல்லாம் வலைப்பூவினைச் சேர்க்கக் கூடாது என. அவ்வாறு சில திரட்டிகளில் இணைக்கும்போது மால்வேர் பாதிப்பு வரும் என அறிந்தேன். அதன் காரணமாகவே பல தமிழ்திரட்டிகளினை முழுவதுமாகத் தவிர்த்தேன்.

மேலும் எனது வலைப்பூவில் முதன்முதலாக தன்னை இணைத்துக் கொண்ட ஜெஸ்வந்தி அவர்களின் வலைப்பூவும் இதே பாதிப்பு அடைந்ததைக் கண்டு அவரது படைப்புகளை படிக்க முடிவதில்லை.

இப்படியிருக்க நேற்று எனது வலைப்பூ விகடன்.காம் மூலம் மால்வேர் கொண்டுள்ளது என எனக்கு எச்சரிக்கை வர என்ன செய்வது எனத் தெரியவில்லை. இருப்பினும் கிருஷ்ணமூர்த்தி ஐயாவின் பின்னூட்டம் பார்த்தபின்னர் கூகிளைத் தொடர்பு கொண்டு மால்வேர் விசயம் பற்றி அறிவித்தேன். இன்று மால்வேர் எச்சரிக்கை இல்லாமல் வலைப்பூ திறந்தது.

இந்த மால்வேர் எச்சரிக்கை பாதிக்கப்பட்ட பிற தளங்களினால் நமது வலைப்பூக்களுக்குத் தெரிவது போலும்! இது கூகிள் குரோமினால் மட்டுமே அறிய முடிகிறது.

ஆஸ்த்மா தொடர் ஆரம்பித்த பின்னர் தான் இந்தப் பிரச்சினை வந்தது. விகடன்.காம் தளத்தின் ஆர்வம் புரிந்து கொள்ளும்படியாகத்தான் இருக்கிறது. இதுபோன்ற பிரச்சினை உங்களுக்கும் நேர்ந்தது உண்டா?