Wednesday, 7 April 2010

அடியார்க்கெல்லாம் அடியார் - 5

5. கதிரேசன் கல்லூரிக்குச் சென்றான். விடுதியைவிட்டு ஏன் வெளியே அனுப்பினார்கள், இப்பொழுது எங்கே தங்கி இருக்கிறாய் என சிலர் கேட்டு வைத்தார்கள். கதிரேசன் வேறு என்ன காரணம் என்று யோசித்து வைக்கவில்லை. சிங்கமநல்லூரில் ஒரு வீட்டில் தங்க இடம் கொடுத்திருக்கிறார் ஒருவர் என்று மட்டுமே சொல்லி வைத்தான்.

கல்லூரியில் இருந்த நேரம் நன்றாகவே இருந்தது. விடுதியைவிட்டு வெளியே அனுப்பப்பட்ட விசயம் மனதில் வலியை ஏற்படுத்தி இருந்தாலும் தங்க ஓர் இடம் இருப்பது சற்று ஆறுதலைத் தந்து இருந்தது. அம்மாவுக்கு நிச்சயம் பதில் சொல்லியாக வேண்டும். மாலை வேளையில் வீட்டுக்கு கிளம்பும்போது கதிரேசனை கல்லூரி வளாகத்தில் மதுசூதனன் பார்த்தான்.

''இப்போ எங்கே இருக்க நீ'' என்றான் மதுசூதனன். ''சிங்கமநல்லூர்ல இருக்கேன்'' என்றான் கதிரேசன். ''ஏன் உன்னை வெளியே அனுப்பினாங்க, ஏன் காலையில என்கிட்ட அப்படி சொன்ன'' எனக் கேட்டான் மதுசூதனன். ''சொல்சிவனே அப்படினு சிவனை நோக்கி நான் பாடின பாட்டுதான் என்னை விடுதியை விட்டு வெளியே போக வச்சிருச்சி, என்னை அப்படி பாடக்கூடாதுனு பிரின்சிபால் சொன்னாரு'' என கதிரேசன் சொன்னதும் ''பாடமாட்டேனு சொல்ல வேண்டியதுதான, நான் சிவனைத் தொழுவதே இல்லை'' என மதுசூதனன் சொன்ன நேரம் சிவநாதன் அவர்களை கடந்தார். ''பிரின்சிபால்'' என மெதுவாக கூறியவாரே மதுசூதனனைத் தட்டினான் கதிரேசன். ''யாரா இருந்தா என்ன, நான் சிவனைத் தொழுவது இல்லை'' என அழுத்திச் சொன்னான் மதுசூதனன். சிவநாதன் திரும்பினார்.

''இங்கே வாங்க'' என அவர்களை அழைத்தார் சிவநாதன். கதிரேசன் மிகவும் பயந்து இருந்தான். மதுசூதனன் தைரியமாகவே நடந்தான். மதுசூதனனை நோக்கி ''நீ சிவனை தொழாம இருக்கிறதுனால சிவனுக்கு ஒன்னும் ஆகப்போறது இல்லை, நீ எந்த இறைவனையும் தொழுதுக்கோ, ஆனா எந்த இறைவனையும் ஒருபோதும் இப்படிச் செய், அப்படிச் செய், ஏன் இப்படி இருக்க, பதில் சொல்லுனு மட்டும் பேசாதே. நாம எல்லாம் தொழ மட்டுமே சிவன்'' என்றார் சிவநாதன். ''நான் வைணவம் ஐயா'' என்றான் மதுசூதனன். ''அதான் சொன்னேன்ல, சொன்னது புரியலையா'' என்றார் சிவநாதன். மதுசூதனன் பதில் பேசாமல் நின்றான். கதிரேசன் தலையை குனிந்தபடியே நின்றான். ''ஒழுக்கம் முக்கியம், காலேஜ்லயோ வெளியிலேயோ பிரச்சினையை உண்டுபண்ண வேண்டாம், யார் பெரியவங்க, யார் சிறியவங்கனு, போய் படிக்கிற வேலையை மட்டும் பாருங்க'' என சொல்லிவிட்டு நடக்கலானார்.

''ஏன் நீ இப்படி பேசற'' என்று கேட்டான் கதிரேசன். ''நீ ஏன் அப்படி பாடின'' எனக் கேட்டான் மதுசூதனன். கதிரேசனால் பதில் சொல்ல இயலவில்லை. அமைதியானான். ''எனக்கு என்னோட குலம் முக்கியம், என் உயிர் போகிற தருணமா இருந்து சிவனால் தான் என்னை காக்கமுடியும்னு இருக்கும் நிலை வந்தாலும் நான் சிவனைத் தொழமாட்டேன், எனது வேண்டுதல் எல்லாம் விஷ்ணுகிட்ட மட்டும் தான்'' என கண்கள் மல்கச் சொன்னான் மதுசூதனன். கதிரேசன் அதிர்ச்சி அடைந்தான். ''திருமால் முதற்கொண்டு அனைவராலும் தொழப்படுபவர் சிவன், நீ அறிஞ்சது இல்லையா'' என கதிரேசன் சொன்னதும் ''எழுதி வைச்சதெல்லாம் யார்னு போய் படி உனக்குப் புரியும் இனி அதைப்பத்தி பேச எனக்கு விருப்பமில்ல, நான் போறேன்'' என மதுசூதனன் விறுவிறுவென நடந்து சென்றான். கதிரேசன் மனம் சஞ்சலமானது.

வீட்டினை அடைந்தான் கதிரேசன். வயதானவரிடம் விசாரித்தான். நீலகண்டன், சிங்கமநல்லூர் பிறப்பிடம். மனைவி இல்லை. மகள் மட்டுமே உண்டு. திருமணமாகி மகன் பேரன் பேத்திகளுடன் சங்கரன்கோவிலில் வசித்து வருகிறார்கள் என சொன்னார். தன்னைப்பற்றி சொன்னான் கதிரேசன். அதனுடன் கல்லூரியில் நடந்த விசயத்தையும் மதுசூதனன் பற்றியும் சொன்னான்.

''அந்த காலேஜ் முதல்வரை எனக்கு நல்லாத் தெரியும், அவர் சொல்றதுல தப்பு இல்லை. ஆனா நான் நீ பாடக்கூடாதுனு சொல்லமாட்டேன். உன்னோட விருப்பம். அதுபோல மதுசூதனன் சொல்றதுலயும் தப்பு இல்லை. அது அவனோட விருப்பம். நான் பூஜை பண்ணப் போறேன், நீ படி'' என்றார் நீலகண்டன். பூஜையில் கலந்து கொள்வதாக சொன்னான் கதிரேசன். நீலகண்டன் புன்னகையுடன் அவனைப் பார்த்தார்.

(தொடரும்) 

Tuesday, 30 March 2010

யாரு நல்லவங்க? யாரு கெட்டவங்க?

இந்த வலைப்பக்கம் வந்ததும் வந்தேன், ஏதாவது ஒரு விஷயத்தை எழுதிட்டு இருக்கிறதுக்கு எப்படியெல்லாம் உதவி செய்றாங்க. எத்தனை விதமான தொடர் பதிவுகள். ஆச்சரியம் தருது. பல பதிவுகளுக்கு எழுத நினைச்சி இருக்கேன். நான் பொதுவா தமிழ்மணத்துல இருந்துதான் பல பதிவுகளை தேடி பிடிச்சி படிக்கிறது. அப்பப்போ தமிழிஷ் தமிழ் 10 பாக்குற வழக்கம் உண்டு. பின் தொடர்கிறேனு நூத்து ரெண்டு வலைப்பக்கங்களை நான் சேர்த்து வைச்சிருந்தாலும் உண்மையா பின் தொடருறது என்னவோ கொஞ்சம் தான். ஒவ்வொருத்தரும் எழுதறதை படிக்க இப்போ பாக்கிற வேலையை விட்டுரனும், அதோடு மட்டுமா குடும்பம் பிள்ளைக எல்லாரையும் மறந்துரனும். அவ்வளவு பேரு எழுதுறாங்க.

ஒரே விஷயத்தை ஒவ்வொருத்தர் பார்வையிலும் படிக்க நல்லாத்தான் இருக்கு. எல்லாரையும் நல்லவங்கதானு நம்பி ஏமாந்து போறதை விட எல்லாரும் அவங்க அவங்க அளவுல நல்லவங்கன்னு நினைச்சிட்டு பழகிட்டு போகலாம். ஆனாலும் கொஞ்சம் பயமாத்தான் இருக்கு.

நான் பழகினவங்க எல்லாரும் நல்லவங்கதான். எனக்கு என்னைப் பொருத்தவரை நான் எப்படி ஒருத்தர்கிட்ட நடந்துகிறேனோ அதுபோலவே அவங்களும் என்கிட்டே நடந்துக்குவாங்கனு எனக்கு ரொம்பவே நம்பிக்கை இருக்கு. ஒரு சில எழுத்துகளை படிக்கும் போது எழுதுரத மட்டும் செய்வோம்னு மனசு கிடந்தது அடிச்சிக்குது. ஆனாலும் ஏதாவது பதிவை படிச்சா மனசில நினைக்கிறத எழுத வேண்டி வந்துருது. நாம எழுதுறதை சரியா புரிஞ்சிக்கிட்டு இருப்பாங்கனு மனசுல நினைக்க முடியறதில்ல. எதுக்குன்னா எழுதுனவங்க மனசை புரிஞ்சா நாம படிச்சி மறு மொழி போடுறோம்?

எழுத்துக்கள் ஒரு மனிசரோட குண நலத்தை சொல்லுமானு தெரியல. சொந்த உறவுகள்கிட்ட சில காரணங்களால பகை பாராட்டும் நாம எழுத்துக்கள் மூலம் பழகினவங்களோட எப்பவுமே நட்பு பாராட்டுவோம்னு தெரியாது. ஏதாவது மன கசப்புகள் வரத்தான் செய்யும். எனக்கே சிலரது எழுத்துகள் பிடிக்கிறது இல்ல இருந்தாலும் எழுதினவங்க பார்வையிலும், என் பார்வையிலும் அந்த எழுதப்பட்ட விஷயத்தை பார்த்துட்டு அத்தோட விட்டுருவேன், எனக்கு பிடிக்காததை எழுதிட்டாங்கன்னு எழுதுரவங்களை வெறுக்க முடியுமா? எதை எழுதினாலும் அந்த எழுத்துல என்ன இருக்குன்னு ஒரு பார்வை பாக்குற பழக்கம் இருக்கு.

இப்படியே இருந்தாலும் தெரியாத்தனமா சிலரது எழுத்துல ஒரு பிடிப்பு வந்துரத்தான் செய்யுது. அது தப்புன்னு சொல்ல முடியாது. அப்படியே நட்பு வட்டம் அப்படி இப்படினு வளரத்தான் செய்யுது. இப்போ அமைப்பு அது இதுன்னு ஆரம்பிக்கிறாங்க. ரொம்ப நல்ல விசயம் தான். ஒரு சிறந்த அமைப்பா கொண்டு வரணும்னு முன்னமே வேண்டுகோள் விட்டுட்டேன். ஆனா அந்த அமைப்பில இப்போதைக்கு சேர வேணாம்னு முடிவு பண்ணிட்டேன். வெளியில இருந்து ஆதரவு தரதுதான் என்னோட முடிவு. உண்மையிலே சொல்றேன் அமைப்பின் நோக்கம் எதுவுமே எனக்குப் புரியல. உள்நாட்டுல இருக்கிறவங்களுக்கு அது சரியா இருக்கும், எனக்கு சரிப்பட்டு வராது. எழுதுறது என்னோட தொழில் இல்ல! எழுதினா மட்டுமே வலைப்பதிவர் அப்படிங்கிற தகுதி கிடைக்குது, சந்தோசம் தான்.

சக வலைப்பதிவருக்கு என்ன மரியாதை இருக்கு? ஒருத்தருக்கு ஒருத்தர் எப்படியெல்லாம் மாத்தி மாத்தி தனிப்பட்ட அளவுல தாக்கி எழுதறாங்க. அதை படிக்க்கும் போது ஒரு எச்சரிக்கை உணர்வு வந்து போறது என்னவோ உண்மைதான்.

உலகத்துல யாரு நல்லவங்க? யாரு கெட்டவங்கனு கேட்டா என்ன பதில் சொல்ல முடியும்? யாருமே நல்லவங்க இல்லை, யாருமே கெட்டவங்க இல்லைன்னு சொன்னாலும் என்ன செய்ய முடியும். ஒவ்வொருத்தரும் மாறி மாறி நடந்துக்கிறாங்க அதுதான் உலகம், இதுல எழுதுறவங்க மட்டும் நல்லவங்களாகவே இருக்கனும்னு எந்த ஊர் நியாயம்னு கேட்டாலும் ஒரு வரைமுறை இருக்கத்தான் செய்கிறது எதற்கும்.

எழுத்து ஒரு போதை. அந்த எழுத்து தரும் போதையில் எதுவும் தெளிவாகத் தெரிவதில்லை. இலக்குகள் இல்லாத பயணமும், குறிக்கோள் இல்லாத எழுத்துகளும் ஒரு போதும் காலத்திற்கு பயன் தரும்படி நிற்பதில்லை.

இதோ நான் விபரீதமான எழுத்துகளில் இருந்து என்னை விடுவித்து கொள்ள முடிவு செய்து விட்டேன். எங்கேனும் தென்படாவிட்டலும் இதோ இங்கே எப்போதும் தென்பட்டு கொண்டுதான் இருப்பேன். யாரு நல்லவங்க, யாரு கெட்டவங்க என்பதில் சரி பாதியாய் மனிதர்கள் இங்கும் அங்கும் என அலைந்து கொண்டிருக்கிறார்கள், ஓரிடத்தில் எவரும் நின்று இளைப்பாறுவதில்லை.

Monday, 29 March 2010

ரௌத்ரம் படத்துக்கு பாட்டு எழுத சொன்னான்

இசையில ஆர்வம இருக்குற ஒரு பையனை நான் பார்த்தேன், அவனை இசை அமைப்பாளர் ஒருத்தர் அவர் இசை அமைக்கிற படத்துக்கு ஒரு பாட்டு எழுத சொல்லி கேட்டு இருந்துருக்காரு, அவனும் எழுதி தரேன்னு சொல்லி இருந்துருக்கான்.

அவன் இவன் அப்படின்னு வர ஒரு பாட்டை என்கிட்டே போட்டு காமிச்சான். இது போல எழுதனும்னு சொன்னான். நா கவிதை எழுதுவேன் பாட்டு என்னடா பாட்டு, சந்தம் கொடுடானு சொன்னேன். அவன் சந்தா கொடுக்க சொல்றான்னு நினைச்சிருப்பான் போல. இல்ல வரிய வெட்டி வெட்டி பதினாலு வரி வேணும். அதை நான் அனுப்பி சரியானு கேட்கணும்னு சொல்லிட்டான்.

சரிடா எழுதி தரேன் அப்படின்னு பதினாலு வரி எழுதி கொடுத்தேன். அதுல ஒரு நாலு வரி எழுதினதை பார்த்துட்டு பயங்கரமா சிரிக்க ஆரம்பிச்சிட்டான். உன் அறிவியல் புத்தி உன்னை விட்டு போகாதானு கேட்காத குறைதான். நானே எழுதி அனுப்பி வைக்கிறேன்னு போய்ட்டான். ஒரு வாய்ப்பை நழுவ விட்டுட்டோமேனு வருத்தமா இருக்கு. மத்த வரிகளை எல்லாம் பாத்து இசை அமைப்பாளர் என்ன சொல்வாரோன்னு ஒரு பயம் வேற.

அவன் சிரிச்ச வரிகளை மட்டும் எழுதுறேன்.

ஆஸ்டிராய்டுகளை எரிப்பான்
கோமெட்டுகளை உடைப்பான்
சூரியனை எரிப்பான்
நெருப்பின் தலைவன் அவன்

பூமியை பிளந்து
மேக்மாவை மேனியில் பூசியவன்
ரௌத்ரம் ரௌத்ரம்
சொல்லும் இவன் சரித்திரம் சரித்திரம்

முத நாலு வரிதான் அவனை அப்படி சிரிக்க வைச்சது. தமிழ் படத்துக்கு பாட்டு எழுத இலக்கியம் மட்டுமே படிக்கனுமா என்ன.

ஒரு காதல் பாட்டும் கேட்டான், போடா முதல இதுக்கு ஓ கே வாங்கிட்டு வானு அனுப்பிட்டேன். நானும் பாடலாசிரியர் ஆகிருவேனு கனவு காண ஆரம்பிச்சிட்டேன். அரைகுற ஆராய்ச்சியாளர், வெறும் எழுத்தாளர், இப்போ பாடலாசிரியர்... ம்ம்ம்.