Monday, 26 December 2011

நானெல்லாம் ஒரு அப்பா!

பொறுப்புகளை தட்டி கழித்தே  பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்ளும்,
பிள்ளைகளை பேணி காக்கும் முறையை தவறவிட்ட சிறுபிள்ளையாய்,
ஆசையாய் பேச வரும் பிள்ளையை ஆயிரம் வேலையை காட்டி தள்ளிவிடும்
ஒரு ஆதரவற்ற நிலை செல்லும் ஆதரவற்ற நிலை காட்டும் நானெல்லாம் ஒரு அப்பா!

எடுத்ததற்கெல்லாம் சத்தம், அந்த சத்தத்தில் இதயம் உடையும் பிள்ளை,
 படுத்தி எடுத்துவிட்டு பாவமாய் பார்க்கும் பார்வை மீண்டும் மறந்து
ஏதேதோ உலகம் என எங்கெங்கோ சென்று அலைந்து தொலைந்து
மார்போடு கட்டி அணைத்து மகிழும் கதை பேசாத நானெல்லாம் ஒரு அப்பா!

தாயுமானவனாய் தவமிருக்காமல் தந்தையுமானவனாய் படியளக்காமல்
சேயின் மனமறிந்து சேவகம் செய்யாமல் செத்த நிலை கொண்டு
வேலை வேலை என ஓட்டமும் நடையுமாய் வெந்து போன காலமும்
நினைவில் வந்து மனதை அழுத்த கலங்கிடும் நானெல்லாம் ஒரு அப்பா!

என் அப்பாவை எண்ணி கலங்கியே ஏக்கத்துடன் நகரும் நாட்கள்
என் பிள்ளையை கண்டு கலங்கியே  கலக்கத்துடன் நகரும் நாட்கள்
என் அன்னையை அருகே வரவழைத்து அரவணைக்காத பொழுதுகள்
நல்ல பிள்ளையாய் இருக்க தெரியாத நானெல்லாம் ஒரு அப்பா!

தனது குழந்தையை சீராட்டி பாலூட்டி உறவாய் இருந்து வளர்த்து
ஆதரவற்ற குழந்தைகளுக்கும் அன்புடன் சேவகம் செய்து
நானெல்லாம் ஒரு அப்பா என நாணி கொள்ளாமல்
நான் தான் அப்பா என பெருமையுடன் சொல்லி மகிழ இவ்வாழ்வு போதும், எவருக்கும்!