Showing posts with label பகவத் கீதை. Show all posts
Showing posts with label பகவத் கீதை. Show all posts

Friday 24 July 2009

பகவத் கீதையைத் தீண்டியபோது - 1

முன்னுரை

பகவத் கீதை முழுவதையும் அதன் வடிவில் படிக்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை இனியும், அதாவது இன்னமும் ஏற்படுத்திக்கொள்ளவில்லை எனலாம்.

ஆனால் பகவத் கீதையின் சாரம்சத்தை சகோதரி பத்மஜாவின் எழுத்தின் மூலமாகப் படிக்கும் வாய்ப்பு நேர்ந்தது. அவ்வாறு படிக்கும்போது எனக்குள் எழுந்த கேள்விகளை நானும் எனது பார்வையில் எழுதி வைக்க அவர்களும் அதற்குப் பதில் தந்தார்கள்.

எனக்குள் எழுந்த விசயங்களைத் தொகுத்து எழுதிட வேண்டும் எனும் ஆவல் வெகு நாட்களாகவே உண்டு. இதனை இங்கிருந்தே எழுதலாம் என நினைக்கிறேன். என்னால் எழுதப்பட்ட விசயங்களை மட்டுமே தொகுத்து எழுத இருக்கிறேன். இதன் காரணமாக ஆன்மிக நம்பிக்கையாளர்களை எனது எழுத்துப் பாதிக்குமெனில் அதற்காக முதலில் எனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த எழுத்து மூலம் நான் எதையும் புதியதாகச் சாதிக்கப் போவதில்லை, புதிய புரட்சிமிக்கக் கருத்துக்களை எழுப்பப் போவதில்லை. ஒரு சராசரி மனிதனாகிய என்னுள் எழுந்த ஒரு உணர்வின் வெளிப்பாடுதான் இந்த எழுத்து.

இந்த எழுத்து மூலம் நான் பகவத் கீதைக்குக் களங்கம் கற்பிக்க முயற்சிக்கிறேன் என கருதுவீர்களேயானால் ஒருமுறை சிந்தித்துப் பார்த்துக்கொள்ளுங்கள். விமர்சிக்க முடியாதவண்ணம் பகவத் கீதை இல்லாமல் இருந்திருந்தால், பல கேள்விகளை எழுப்பும் வண்ணம் பகவத் கீதை இல்லாமல் இருந்திருந்தால் இதையெல்லாம் எனது எண்ணத்துக்குள் வந்து விழுந்திருக்க வாய்ப்பே இல்லை. மேலும் எனது அறியாமையின் வெளிப்பாடாகக் கூட இதை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.

ஒன்றைச் சொல்வதால் பல நண்பர்களைப் பெறலாம், அதன் மூலமாகவே பல நண்பர்களையும் இழக்கலாம், ஆனால் அது எனது இலக்கு அல்ல. எனது எழுத்துப் பணிக்காக மட்டுமே எப்போதும் எழுதுகிறேன்.

எனது எழுத்துக்கு நீங்கள் விளக்கம் தருவீர்களேயானால் மீண்டும் கற்றுக்கொள்கிறேன். தெளிவின் பாதைக்குச் சென்றவன் தெளிதல் எளிதில்லை என திரும்புவேனா என்ன? தெளிந்த பார்வைக்காக மட்டுமே மீண்டும் ஒரு தீண்டல்.