Tuesday 13 October 2015

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் 29

சுபத்ராவை எப்படியாவது பார்த்துவிட வேண்டுமென்று அவளது வீட்டிற்கு சென்றேன். வாடகை வீடு கண்டுபிடிப்பது ஒன்றும் அத்தனை கடினமாக இல்லை. சுபத்ரா பற்றி கேட்டதும் மாடியினை காட்டினார்கள். பின்னர் சிறிது நேரம் யோசித்துவிட்டு அவர்களே சென்று சுபத்ராவை அழைத்து வந்தார்கள். என்னைப் பார்த்ததும் சுபத்ரா முகத்தைத் திருப்பிக் கொள்ளவில்லை. என்னோட நண்பர் தான் என அவர்களிடம் அறிமுகப்படுத்திக் கொண்டு என்னை அவள் தங்கி இருக்கும் மாடிக்கு அழைத்துச் சென்றாள்.

''சுபா, என் மீது கோபமா?''

''இல்லைடா, நான் உன் மேல சின்ன வயசில இருந்து ஆசை வைச்சது என்னமோ உண்மைதான். அது காதல்னு இன்னைக்கு வரைக்கும் நம்புறேன். இந்த ஊருக்கு வந்ததே உன்னைப் பார்க்கணும் பேசணும்னு தான். ஆனால் எல்லாம் தலைகீழா இருக்கு. கோரன் மூலம் உன்னை மிரட்டி கூட பார்த்தேன். எப்ப என்னை நீ வீட்டை விட்டு வெளியே அனுப்புனியோ அப்பவே நீ வேணாம்னு முடிவு பண்ணிட்டேன்டா.

முயற்சி செஞ்சிட்டு முடியலைன்னு செத்துரக்கூடாதுனு எங்கம்மா அடிக்கடி சொல்லும். ஆனா உன்கிட்ட என்னால முயற்சி கூட செய்ய முடியலை. ஏன்டா என்னை நீ எப்படி மறந்த? எத்தனை ஆசையா என்னோட பழகின பேசின, எப்படிடா உன்னால முடிஞ்சது. இனிமே உன் வழியில நான் குறுக்கே வரலை. நீ என்னைப் பார்க்கறது பேசறது எல்லாம் நிறுத்திக்கோ. இதுவே நம்ம கடைசி சந்திப்பா இருக்கட்டும். நான் இனிமே உன்கூட பேசவோ பழகவோ மாட்டேன்''

''சுபா''

''போடா, எத்தனை நம்பிக்கையா நான் இருந்தேன்னு உனக்கு எங்கடா தெரியப்போகுது. கோரன் உன்னை கொல்வானு சொன்னப்ப என்னால அதை தாங்கிக்க முடியலை. கிளம்பிப் போடா, அவளோட  நிம்மதியா இரு''

''சுபா, என்னை மன்னிச்சிரு, நான் நீ இப்படி நினைப்ப பழகுவேணு நான் பழகலை. ஆனா உனக்குள்ள இந்த காதல் எல்லாம் எனக்குத் தெரியாது. அப்படியே தெரிஞ்சி இருந்தாலும் உன்னோட குணத்திற்கு நான் பொருந்த மாட்டேன்''

''கிளம்பிப் போடா''

''அதில்லை சுபா''

''போடான்னு சொல்றேன்ல''

அதுக்கு மேல் அங்கிருக்க கூடாது என வீடு வந்து சேர்ந்தேன். காயத்ரியிடம் எல்லா விசயங்களையும் சொன்ன பின்னர் அவளுக்குள் உண்டான நிம்மதியை என்னால் அறிந்து கொள்ள முடிந்தது.

கர்மவினை என்பது எல்லாம் என்னவென இதுவரை கண்டு கொண்டதும் இல்லை. எதற்கு எது நடக்கிறது என இதுவரை புரிந்த பாடில்லை. அன்று இரவு சற்று நிம்மதியாக தூங்கமுடிந்தது.

மாதங்கள் கடந்து போவதில் தாமதம் ஏற்படவில்லை. கல்லூரி வாழ்க்கை வேகமாக கடந்து போய்க்கொண்டு இருந்தது. இந்த ஒரு வருடம் எவ்வித துப்பறியும் வேலை செய்ய வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தது. கல்லூரி முடியும் காலம் வந்தது. அனைவரும் பிரிந்து சென்றனர். நானும் காயத்ரியும் மேற்கொண்டு படிப்பது குறித்து யோசித்துக் கொண்டு இருந்தோம்.

எந்த ஒரு விசயமும் அப்படியே முடிந்து போவது இல்லை என்பது போல அன்று இரவு கோரன் எனது வீட்டிற்கு வந்து இருந்தான்.  இதை நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அவனை வீட்டிற்குள் அழைப்பதா வேண்டாமா என யோசித்துக் கொண்டு இருந்தபோது எனது அம்மா அவனை உள்ளே வாப்பா என அழைத்து அமரச் சொன்னார்.

''என்னடா முருகேசு எப்படி இருக்க''

''நல்லா இருக்கேன் கோரன், நீ இதுவரை எங்க போன''

''இப்போ நாங்க கரியநேந்தல் போய்ட்டோம். அங்கே ஒரு சின்ன பிசினஸ் வைச்சி நடத்திட்டு இருக்கோம். உன்னைப் பார்க்கணும்னு தோணிச்சி அதான் வந்தேன். சுபத்ரா எங்கே போயிட்டா''

''அவ சொந்த ஊருக்குப் போய்ட்டா, இங்கே வந்த வேலை முடிஞ்சதுனு கிளம்பிட்டா''

''அவளுக்கு போன் பண்ணினேன், எடுக்கலை. நம்பர் மாத்திட்டாளா''

''ஆமா''

''அவ நம்பர் கொடு''

''புது நம்பர் என்கிட்டே இல்லை, அவளோட பழக வேணாம்னு சொல்லிட்டா''

அதற்குள் என் அம்மா அவனுக்கு பலகாரங்கள், காபி கொண்டு வந்து வைத்தார். அவனும் பலகாரங்கள் சாப்பிட்டுக்கொண்டே காபி குடித்து முடித்தான்.

''இங்கே வேணும்னா தங்கிக்கப்பா''

''இல்லைம்மா, அவனுக்கு வேற வேலை இருக்கு, அவன் போகணும்''

''இல்லைடா முருகேசு, இங்கே தங்கிட்டுதான் நான் காலையில போகணும்''

''எங்கே தங்கப்போற''

''தெரிஞ்சவங்க வீட்டில''

''இங்கே தங்குப்பா''

''வேணாம்மா''

''சரிடா, நான் கிளம்பறேன்''

கோரன் அங்கிருந்து கிளம்பினான். எதற்கு வந்தான், எதற்கு சுபத்ராவை விசாரித்தான் என எனக்குப் புரியவே இல்லை. அவனை பின்தொடர நினைத்தேன். பிறகு வேணாம் என விட்டுவிட்டேன்.

அதிகாலையில் எனக்கு ஒரு அழைப்பு வந்தது. புதிய எண் கண்டு திடுக்கிட்டேன். சிறிது யோசனைக்குப் பிறகு எடுத்தேன்.

''கோரனை  நான் கொன்னுட்டேன்டா''

''சுபா''

''நேத்து உன் வீட்டுக்கு வந்துட்டு என்னைத் தேடி எங்க ஊருக்கு வந்துட்டான், என்னை கொலை பண்ண முயற்சி செஞ்சான். நான் அவனை கொலை பண்ணிட்டேன்''

''என்ன சொல்ற சுபா, போலிஸ் கேசு''

''நீ பேசமா இருடா''

சுபத்ரா இணைப்பைத் துண்டித்தாள். அவளது எண்ணுக்கு அழைத்தபோது அவள் எடுக்கவே இல்லை. தகவல் எதற்கு சொல்ல வேண்டும்.

சில மணி நேரத்தில் எனது வீட்டு வாசலில் காவல் அதிகாரிகள் வந்து நின்றனர்.

''நீதானே முருகேசு''

கை கால்கள் நடுங்க ஆரம்பித்தது.

(தொடரும்) 

Sunday 11 October 2015

வாசகி ஒருவரின் தொலைக்கப்பட்ட தேடல்கள் குறித்த விமர்சனம்


இங்கே இந்த இணைப்பில் வாசகி ஒருவரின் தொலைக்கப்பட்ட தேடல்கள் குறித்த விமர்சனம்    படிக்கவும்

நிறைய நபர்களிடம் இந்த சிறுகதை தொகுப்பை கொடுத்து இருந்தேன். இந்த சிறுகதை தொகுப்பு வெளியிட்டபின் முதல் முதலில் அது குறித்த விமர்சனம் எழுதித் தந்த வாசகி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

இந்த விமர்சனம் எனது எழுத்தை பண்படுத்த உதவும் வகையில் அமைந்து இருப்பது வெகு சிறப்பு. அடடா விமர்சனத்திற்கே விமர்சனம் எழுதுவது நல்லது இல்லை என்பதால் அப்படியே ஏற்றுக்கொள்கிறேன்.

மிக்க நன்றி.

Wednesday 7 October 2015

நமது திண்ணை அக்டோபர் மாத இணைய இதழ்

முதல் பக்கத்தைப் பார்த்ததும் பளிச்சென மனதில் ஒட்டிக்கொண்டு ஒருவித சந்தோசம் தந்துவிடுகிறது நமது திண்ணை. பொதுவாக குழந்தைகள் சுவற்றில் கிறுக்கி விளையாடுவார்கள். சுதந்திரமான வீட்டில் குழந்தைகளால் வரையப்பட்ட ஏகப்பட்ட கோடுகள் இருக்கும். ஆனால் இப்படி ஓவியம் வரையலாம் என்பது ஒரு சில குழந்தைக்களுக்கேத்  தெரியும். அருகில் இருக்கும் செடி கொடிகளால் அந்த மரம் உயிர் பெற்று இருப்பது போல உங்கள் கண்ணுக்குத் தெரிந்தால் நீங்கள் தான் ஓவியத்தில் ஜீவன் காண்பவர்கள். இலைகள், மலர்கள், பட்டாம்பூச்சிகள், பறவைகள். வெகு பிரமாதம். ஓவியர்கள் மீது எனக்கு எப்போதுமே ஒரு தனி மரியாதை உண்டு. வாழ்த்துக்கள் ஸ்ருதி. 

எமி அவர்களின் தாயகம் தேடும் உயிர் ஒரு நீண்ட வலியை சொல்லும் கவிதை. இந்த கவிதையில் வரும் ஒவ்வொரு விஷயமும் நிராகரிக்கப்பட்ட மனிதர்களின் ஓலமாகவே இருக்கும். புலம் பெயர் மக்களில் பல வகையினர் உண்டு. இந்த கவிதையில் சொல்லப்படும் புலம் பெயர் மக்களின் அவலம் இன்னும் நடந்து கொண்டே இருக்கிறது. என்னதான் இருந்தாலும் சொந்த ஊர் நாடு போல எதுவுமே இருப்பது இல்லை. பிச்சை எடுத்துப் பிழைத்துக் கொள்கிறோம் என்பதோடு அந்த புலம் பெயர் மனிதர்களின் வாழ்க்கைச் சூழலை கவிதை மனவலியுடன்  முடித்து வைக்கிறது.

ரிஸ்வான் அவர்களின் அன்புள்ள அப்பா.  பெருக்குவேன் காகிதங்கள் தினம், பணமெனும் காகிதம் வேண்டி. கல்வி நல்லதொரு வாழ்வைத் தரும் என சொல்லி மகள் மீதான எதிர்பார்ப்புடன் குப்பை பெருக்கினும் கோபுரம் தொடு என அருமையாக இருக்கிறது.

சுஷீமா அம்மா அவர்களின் ஸ்ரீராமானுஜர் தொடர் இத்தனை வேகமாக முடியும் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. சைவ மன்னன் மட்டும் கொஞ்சம் சுதாரித்து இருந்து இருந்தால் ஸ்ரீராமானுஜர் இன்று இத்தனை அளவுக்கு பேசப்பட்டு இருக்கமாட்டாரோ என்னவோ! ஆனால் நல்ல மனிதர்களுக்கு எவரேனும் உதவியாக வந்துவிடுவார்கள் என்பதுதான் காலம் காலமாக கண்டு வரும் செய்தி. கண்கள் இழப்பது, உயிர் துறப்பது என்பதெல்லாம் நல்லதொரு விசயத்திற்காக முன்னர் மனிதர்கள் துணிந்து செய்தார்கள் என அறிய முடிகிறது. பிற சமயங்களை வெல்வது அன்றைய காலகட்டத்தில் மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கலாம். ஓம் நமோ நாராயணா என்றே சொன்னால் போதும் என வாழ்ந்தவர் புகழ் இன்னும் பெருகிக் கொண்டே இருக்கிறது. பல விசயங்களை அறிந்து கொள்ளும் வண்ணம் அருமையான தொடர் தந்தமைக்கு மிக்க நன்றி அம்மா.

எம்சி அவர்களின் நண்பன் கதை ஒருவரது  சின்ன கவனக்குறைவு பிறருக்கு எத்தனை பாதிப்பு உண்டாக்கும் என சோகம் சொல்லி முடித்த கதை.

விமலா பாட்டி அவர்களின் காலக்கண்ணாடி கடிதம் பற்றிய அருமையான நினைவலைகள் எனது கடிதம் எழுதிய காலங்களை, இன்றும்  கடிதம் எழுதும் அப்பா குறித்து அருமையான வாசிப்பு அனுபவத்தைத் தந்தது. அவர் சொன்னது போல கடிதங்கள் எல்லாம் தொகுத்து வைத்து இருந்தால் ஒரு காவியமே எழுதி இருக்கலாம் தான்.

பரிசல் அவர்களின் வீட்டைக் காலி பண்ணிப்பார், அட்வான்ஸ் கேட்டுப் பார் என்பது வீட்டின் உரிமையாளரே அட்வான்சை காலி பண்ணிப்பார் என முடிந்து இருப்பது பெரும் சோகம். பணத்திற்கு ஆசைப்பட்டு நல்ல நல்ல குணங்களை மனிதர்கள் தொலைத்து விடுகிறார்கள். முன்பணம் என்பது ஒரு பாதுகாப்புக்கு எனத் தெரியாமல் அதை செலவழித்துவிடும் உரிமையாளர்கள் பலர் இதுபோல நடந்து கொள்வது உண்டு. பலர் நிலையை பிரதிபலிக்கிறது.

அவளதிகாரம், மகளதிகாரம் படங்கள் எல்லாம் அருமை.

பெண்களின் அவல நிலையைச் சொல்லும் ஒரு சோகமான கவிதை மனோவின் ஆண்  திமிர் . மனைவியை கொடுமைபடுத்தும் கணவன்  இறந்து போகவேணும் என எந்த ஒரு மனைவியும் வேண்டுவதில்லை, மாறாக தானே  இறந்து போகிறார்கள்.

சேப்பாக்கம் தொகுதி எம் எல் ஏ திரு அன்பழகன் நேர்காணல்! ஒரு மக்கள் பிரதிநிதியிடம் சினிமா குறித்து நேர்காணல் தொடங்கியதும் என்ன இது என்றே தோணியது. தமிழ் சமூகம் சினிமாவால் தான் சீரழிந்தது என்று இல்லை, சினிமாவுக்கு முன்னரே சீரழிந்த தமிழ் சமூகம் தான் அது. சில கேள்விகளுக்குப் பின்னர் அவரது அரசியல் வாழ்வு பற்றி இருந்தது. மக்களுக்கு என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள், வாரத்தில் எத்தனை முறை தொகுதிக்கு  செல்கிறீர்கள், அடிக்கடி ட்விட்டரில் தென்படுகிறீர்களே உங்கள் தொகுதியின்  தெருக்களில் அடிக்கடி தென்படுவது உண்டா, உங்கள் தொகுதி மக்களுக்கு நாட்டின் மீதான அக்கறை என்ன, குற்றங்கள் குறைந்து இருக்கிறதா என பேட்டி எடுத்து இருந்தால் கலகலப்பாக இருந்து இருக்கும். ஆசிரியரின் முதல் நேர் காணல் என்பதால் அதுவும் தமிழகத்தில் இந்த முதல்வர், அமைச்சர்கள், எம் எல் ஏக்கள் என்றால் அளவு கடந்த மரியாதை என்பதால் அதுவும் வீட்டிற்கு ஆட்டோ வரும் என்பதால் சற்று கவனம் அவசியம் தான்.

அட யானைக்கு 38 பெயர்கள். பிரமாதம்.

உமா  க்ருஷ் அவர்களின் பாடல் பரவசம்  காதல் கவிதைகள் படித்திடும் நேரம் உண்மையிலேயே பிறைசூடனின் மிகவும் அற்புதமான  பாடல். ஒரு பாடலுடன் நம் மனம் ஒன்றிவிடாது போனால் அந்த பாடலின் மீது நமக்கு ஈர்ப்பு ஏற்படுவதில்லை. ஒரு பாடல் கேட்போம் அத்தோடு போய்விடுவோம் ஆனால் அதில் உள்ள நுணுக்கங்கள் எல்லாம் ரசிப்பதற்கு தனி மனநிலை வேண்டும். இசைஞானி இசை என்றால் தரம் பிரித்து விடலாம் எனுமளவுக்கு அவரது இசை இருப்பது என்னவோ உண்மைதான். பல இசைக்கருவிகளை கொண்டு இசைக்கப்பட்ட பாடல் என்றாலும் அத்தனையும் சரியாக இணைந்து போக வைப்பதே ஒரு இசையமைப்பளாரின் வெற்றி. இவரது எழுத்தின் மூலமே  அந்த பாடலின் உன்னதம்தனை, இசையின் மேன்மையை நாம் அறிந்து கொள்ளச்  செய்து இருப்பதுதான் வெகு சிறப்பு. அதோடு காட்சிப்படுத்தலை அதில் உள்ள வேறுபாட்டை அழகாக விவரித்து இருக்கிறார். அருமை.


நண்பர் ரவி அவர்களின் சமையல். உக்காரை. எங்குதான் பெயர் கண்டுபிடிப்பு செய்வார்களோ? கேள்விபட்டதே இல்லை. வெறும் கடலைப்பருப்பு வைத்து ஒரு உணவு. வித்தியாசமாக இருக்கிறது. சட்னிக்கு பதில் இப்படியும் செய்து சாப்பிடலாம்தான்.

ஆசிரியர் மூலம் சுந்தரராஜன் அவர்கள் குறித்து அறிந்து கொள்ள முடிந்தது. நமது திண்ணை இணைய இதழ் மட்டுமல்ல இனிய இதழ்.

அழகிய வடிவமைப்பு, எண்  அழுத்தினால் பக்கம் செல்லும் நேர்த்தி எனத் தொடர்ந்து அனைவரையும் உற்சாகம் பண்ணிக்கொண்டு இருக்கும் இந்த இணைய இதழ் புதிய இணையதளம் உருவாக்க இருக்கிறது. உங்களால் முடிந்த நிதியுதவியை நமது திண்ணை ஆசிரியர் அவர்களிடம் விபரங்கள் கேட்டு செய்யுமாறு இதன் மூலம் கேட்டுக்கொள்கிறேன்.