Thursday 1 October 2015

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் 27

''சுபாவை கூப்பிடுடா''

''வேண்டாம் கோரன்''

''நீ அவளை வரச் சொல்லிட்டுப் போடா''

''கோரன் நீ ஏன்டா இப்படி நடந்துக்கிற''

''நான் சொன்னதை செய்டா''

சுபத்ராவை  அழைத்தேன்.சுபத்ரா வெளியே வந்தாள். நான் அங்கிருந்து மறைந்து கொண்டேன். கோரனைப்  பார்த்த சுபத்ரா நேராக வந்து கோரன் எதிர்பார்க்காத வண்ணம் மூர்க்கமாகத் தாக்கினாள். கோரன் சுதாரிக்கும் முன்னர் நான் அவன் மீது கல் எடுத்து எறிந்தேன். நிலைகுலைந்து விழுந்தான் கோரன். எவ்வித சப்தமும் போடாமலே கோரன் இருந்தது ஆச்சரியமாக இருந்தது.

சுபத்ரா போலீசிற்கு தகவல் சொல்லிவிட்டு காத்து இருந்தாள். கோரனின் கால் கைகளை கட்டிப்போட்டேன். அதோடு நானும் உடன் இருக்க வேண்டியதாகி விட்டது. ரங்கநாதன், சுபலட்சுமிக்கு  இது கொஞ்சமும் பிடிக்கவில்லை. சுபத்ராவை நாளையே வீட்டை காலி பண்ணி வேறு எங்காவது தங்கிக் கொள்ளச் சொன்னார்கள். சுபத்ரா மறுப்பேதும் சொல்லாமல் சரி என சொல்லிவிட்டாள்.

போலிஸ் உடனடியாக வந்தது. சுபத்ரா எல்லா விபரங்களையும் சொன்னதும் கோரனை போலிஸ் அழைத்துச் சென்றது. என்னையும் சுபத்ராவையும் காலையில் காவல் நிலையத்திற்கு  வரச் சொன்னார்கள்.

''டேய் நான் உன்னோட இப்போ உன் வீட்டுக்கு வரட்டுமா?''

''சுபா''

''அவங்கதான் இங்க என்னை தங்க வேணாம்னு சொல்லிட்டாங்க, அங்க வந்து தங்கிட்டு நாளை வேற இடம் போயிக்கிறேன்''

''சரி சுபா''

சுபத்ரா தனது பெட்டியை எடுத்துக் கொண்டு என்னுடன் நடக்கலானாள். ரங்கநாதன் சுபத்ராவை தடுக்கவே இல்லை. காயத்ரி அக்காவாவது தடுப்பார் என்றால் அதுவும் இல்லை.

''சுபா, என்னை காதலிக்கிறது உண்மையா?''

''ஆமாடா, என்னடா சந்தேகமா?''

''சுபா, நான் காயூவை காதலிக்கிறேன், ப்ளீஸ் எங்க வாழ்க்கையை குழப்பாதே''

''உன்னை என்னை காதலிக்க சொன்னேனாடா''

''எத்தனை பிரச்சினை?''

''சரி செய்துடலாம்டா''

''சரி செய்துரலாம்னு சொல்லிக்கிட்டே இருக்க வேண்டியதுதான், எதையும் சரி செய்யமுடியாது''

பேசிக்கொண்டே வீடு வந்து  சேர்ந்தோம். சுபத்ராவை கண்டதும் காயத்ரி குழப்பம் அடைந்தாள். அம்மாவிடம் சொன்னதும் அம்மா சரி இருக்கட்டும் என்றார். அப்பா என்னை தனியாக அழைத்து என்னப்பா தேவையில்லாத பிரச்சினைகளோட வாழுற, படிக்கிறதுக்கு பாரு என அறிவுரை சொல்லி அனுப்பினார்.

காயத்ரியின் அறையில் தான் சுபத்ரா தூங்க வேண்டி இருந்தது. காலையில் எழுந்து கிளம்பியபோது காயத்ரிதான் சுபத்ரா இங்கேயே இருக்கட்டும் என்றாள். இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. என் அம்மாவும், அப்பாவும் காயத்ரி சொன்னாள் என்பதற்காக சம்மதம் சொன்னார்கள்.

நாங்கள் மூவரும் காவல் நிலையம் செல்ல இருந்தோம். அப்பாவும் உடன் வருகிறேன் என்றதால் நால்வரும் சென்றோம். அப்பாவுக்கு அங்கிருந்த காவல் அதிகாரியை தெரியும் என்பதால் எவ்வித பிரச்சினை இன்றி எல்லாம் முடிந்தது. ஆனால் கோரனை வெளியில் விட இயலாது என்றார் அவர்.

நாளிதழ் ஒன்றை பார்த்தபோது கோரன் சொன்னது போலவே ஆசிரியர் கொலை செய்யப்பட்ட விசயம் வெளி வந்து இருந்தது. அதை காவல் அதிகாரியிடம் தந்து கோரன் தான் இந்த கொலையை செய்தான் என நான் சொன்னதும் என்னை போகச் சொன்னவர் அவர்கள் அதைப் பார்த்துக் கொள்வதாக கூறினார்கள்.

சுபத்ரா காயத்ரியின்  நெருங்கிய தோழி ஆனது ஆச்சரியம். அன்று கல்லூரியில் எப்படி ஒரு மனிதன் கொடூர எண்ணம் கொண்டு உருவாகிறான் என பாடம் எடுத்தார் எனக்குப் பிடித்த ஆசிரியர்.

''சார், கோரன் ஒரு கொலைகாரனாக மாறியதற்கு என்ன காரணம்?''

''கொலைகாரனா?''

மொத்த வகுப்பும் என்னை பயத்துடன் பார்த்தது.

''நமது கல்லூரி ஆசிரியர் ஒருவரை கோரன் கொலை செய்து தற்போது ஜெயிலில் இருக்கிறான் சார். அவன் நிறை புத்திக்கூர்மை கொண்டவன் ஆனால் எதற்கு இப்படி நடந்து கொண்டான் என நினைக்கும்போது இந்த கொடூர எண்ணம் அவனுள் எப்படி வந்து இருக்கக் கூடும் சார்''

''நீ அதுகுறித்து இங்கு பேசுவது தேவை இல்லை, கொடூர எண்ணம் கோபத்தின் வெளிப்பாடு, இன்று வேறு பாடம் பார்க்கலாம்''

கோரன் பற்றிய பேச்சு கல்லூரி முழுக்க பரவியது. பலர் பரிதாபம் கொண்டார்கள். மாலை கல்லூரியில் இருந்து வீட்டிற்கு சென்றபோது சுபத்ராவைப் பார்த்தோம். சுபத்ராவிடம் கோரன் பற்றி கேட்டபோது ஒரே வரியில் சொன்னாள்.

''பரிணாமத்தின் கர்ம வினை''

''கர்மவினையா?''

''ஆமாடா, நமது மூளை வளர வளர நமக்கு நம்மை பாதுகாக்க வேண்டி எண்ணம் வந்தது, அதன் விளைவாக எதிரிகளை உருவாக்கிக் கொண்டோம்''

காயத்ரி குறுக்கிட்டாள்.

''சிலருக்கு அன்புள்ளமே அவர்களுக்கு பெரும் எதிரி''

நான் காயத்ரி என்ன அர்த்தத்தில் சொன்னாள் என புரிந்து கொள்ள முடியவில்லை. சுபத்ராதான் சொன்னாள்.

''கோரன் நிச்சயம் வெளியே வருவான், அவன் ஒரு ஜீனியஸ், ஆனால் முட்டாள்தனமா நடந்துக்குவான்''

''அவன் வெளியே வந்தா உன்னை கொலை பண்ணிருவான்''

''இல்லைடா, நான் அவனை கொலை பண்ணுவேன்''

காயத்ரி பயம் கொண்டாள்.

(தொடரும்)

Wednesday 30 September 2015

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் 26

அன்று மாலை கோரனின் வீட்டிற்கு நானும் காயத்ரியும் சென்றோம் ஆனால் கோரனின்  வீடு பூட்டப்பட்டு இருந்தது. எங்கு சென்று இருப்பான் என எண்ணுவதற்கு வழியில்லை. அப்படியே காயத்ரியின் அக்காவை பார்க்க ரங்கநாதன் சார் வீட்டிற்கு சென்றோம்.

காயத்ரியைப் பார்த்ததும் அவளது அக்கா அத்தனை பாசமாக வரவேற்றார்.  நாங்கள் சிறிது நேரம் அங்கு இருக்கும்போதே சுபத்ரா அங்கு வந்தாள். எங்களைப் பார்த்தவளின் முகம் அத்தனை சந்தோசமாக இல்லை. வாங்க என சொல்லிவிட்டு நேராக மாடிக்குப் போனாள். காயத்ரியின் அக்காவின் கவனத்தை என் பக்கம் திருப்பினேன்.

''சார் எப்போ வருவாங்க?''

''அவர் வர எப்படியும் மணி எட்டு ஆகும்''

''நீங்க வேலைக்குப் போறதை எதுக்கு நிறுத்தினீங்க''

''வேணாம்னு சொல்லிட்டார், நிறுத்திட்டேன், நீ சொன்னா காயத்ரியும் கேட்பா''

''வேலைக்குப் போக வேணாம்னு நான் சொல்லமாட்டேன்''

''ஆனா இது கூட நல்லா இருக்கு''

''அவங்க அம்மா எங்கே?''

''அத்தை வெளியூர் போயிருக்காங்க, வர ஒரு வாரம் ஆகும்''

பேசிக்கொண்டு இருக்கும்போதே சுபத்ரா வந்தாள்.

''சுபா, கோரன் எங்க போனான்னு தெரியுமா''

''எனக்குத் தெரியாது''

''சொல்லு சுபா, அவன் வீடு பூட்டி இருந்தது''

''எனக்குத்  தெரியாதுடா''

சுபத்ரா அவ்வாறு சொல்லிவிட்டு எழுந்து போய்விட்டாள். காயத்ரி அவளது அக்காவிடம் எல்லா விபரங்களையும் சொல்லி வைக்க காயத்ரி அக்காவோ சுபத்ராவிடம் எச்சரிக்கையாக இருக்கச் சொன்னார். நாங்கள் இருவரும் வீட்டிற்கு வந்துவிட்டோம்.

அடுத்த நாள் கல்லூரியில் கோரன் வந்து தனது மாற்று சான்றிதழ் வாங்கிச் சென்றதாக பேசிக்கொண்டார்கள். நானும் தான் கல்லூரியில் இருக்கிறேன் ஆனால் எனக்குத் தெரியாமல் என்னைப் பார்க்காமல் அவன் அவ்வாறு செய்தது ஆச்சரியமாக இருந்தது. தலைவலி என சொல்லிவிட்டு கோரன் வீட்டிற்கு சென்றேன். அவனது வீடு பூட்டப்பட்டுதான் இருந்தது. அக்கம்பக்கத்தில் விசாரித்தபோது ஒரு மணி நேரம் முன்னால வெளிய கிளம்பி போனாங்க என தகவல் சொன்னார்கள். எனக்கு இப்படி துப்பறியும் வேலையாகவே போய்விட்டது.

கல்லூரியில் படிப்பு தடைப்பட்டுக் கொண்டு இருந்தது. காயத்ரியும் படிப்பு மீது அக்கறை செலுத்த வேண்டும் என சொல்லிக்கொண்டே இருந்தாள். ஒரு வாரம், இரண்டு வாரம் என வாரங்கள் கடந்து சில மாதங்கள் கடந்தது. தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் வந்தது கண்டு கொஞ்சம் சந்தோசம் என்றாலும் கோரன் எங்கு போனான் என தெரியவில்லை. இந்த சில மாதங்களாக சுபத்ரா முகம் கொடுத்து பேசவும் இல்லை.

திடீரென எனது அலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது.

''டேய் முருகேசு, நான் கோரன் பேசறேன்''

''கோரன், எங்க இருக்க''

''நான் எங்க இருக்கேனு உனக்குத் தெரிய வேணாம், அந்த வாத்தியானை கொன்னுட்டேன், அடுத்து சுபத்ராதான்''

''என்ன சொல்ற''

''அவ உன்னை காதலிச்சேன்னு என்கிட்டே பொய் சொன்னால அதுக்கு அவளை கொலை பண்ணிட்டுதான் மறு வேலை''

''கோரன் உன்னோட புத்தி எதுக்கு இப்படி போகுது''

''நம்பிக்கைத் துரோகிகளை இந்த உலகம் சகித்துக்கிட்டு இருக்கவே கூடாதுடா, நீ காயத்ரிக்கு நம்பிக்கைத் துரோகம் பண்ணின உன்னையும் கொல்வேன்டா''

''இப்படி எத்தனை பேரை கொல்லப் போற''

''எனக்கு ஏதாவது சம்பந்தபட்டவங்க மட்டும் தான்''

''நீயே நம்பிக்கைத் துரோகம் பண்ணினா உன்னை நீயே கொல்வியா''

''மூடன் மாதிரி பேசாதடா, நான் யாருக்கும் நம்பிக்கைத் துரோகம் பண்ணமாட்டேன்டா''

''எனக்குப் பண்ணி இருக்கியே''

''என்னடா சொல்ற''

''உன்னை நல்லவன்னு நம்பினேன் ஆனா நீ கொடூர மனம் கொண்டவனா இருக்கே, நீ பதில் சொல்றது எல்லாம் நினைச்சி எவ்வளவு நினைச்சி இருந்தேன்''

''டேய் வாயை மூடுடா, நாளைக்கு அந்தாளு முகத்தோட பேப்பர்ல வரும், படிச்சிக்கோடா''

அத்துடன் அழைப்பைத் துண்டித்தான். அவனை மீண்டும் அழைத்தபோது அழைப்பில் இல்லை என்றே பதில் வந்தது. இதை காயத்ரியிடம் சொன்னபோது காயத்ரி சுபத்ராவை எச்சரிக்கைப் பண்ணலாம் என சொன்னாள் . சுபத்ராவிற்கு போன் போட்டபோது சுபத்ரா எடுக்கவே இல்லை. அன்று இரவு சுபத்ராவை சந்திக்கப் போனேன். எனது அழைப்பு கேட்டும் சுபத்ரா பேச மறுத்தாள். சிலமுறை முயற்சி செய்து கடைசியாக பேசினேன்.

''சுபா ஒரு முக்கியமான விஷயம், சொன்னா கேளு, வெளியே வா''

சுபா வீட்டை விட்டு வெளியே வந்தாள்.

''என்னடா''

''உன்னை கோரன் கொல்லப் போறதா எனக்கு போன் பண்ணினான்''

''என்னடா உளறுற''

''சொன்னான், அந்த வாத்தியானை கொன்னுட்டானாம், அடுத்து நீதான் அப்படின்னு சொன்னான்''

''எந்த நம்பர்ல இருந்து பேசினான், என்கிட்டே இருக்க நம்பருக்கு அவனை கூப்பிட முடியலையேடா''

''நம்பர் அழிச்சிட்டான்''

''நீ போடா நான் பாத்துக்கிறேன்டா, முருகேசு எனக்கு ஒரு உதவி பண்ணுவியாடா''

''என்ன உதவி''

''அடுத்தமுறை கோரன் போன் பண்ணினா எனக்கு இப்படி வந்து சொல்லாதே, அவ மேல கை வைச்சி பாருடா, உன்னை நானே கொலை பண்ணுவேன்னு சொல்லு''

''ஏன்''

''டேய், உன்னோட காதலி என்னை ஒருத்தன் கொல்லப்போறேனு சொல்றான், அதை கேட்டுட்டு என்கிட்டே வந்து தகவல் சொல்ற''

''அது இல்லை''

''என்னடா அது இல்லை, ஒழுங்கு மரியாதையா காயத்ரியை மறந்துரு''

''சுபா நீ என்னை காதலிக்கிறது பொய்னு தெரிஞ்சிதான் கோரன் உன்னை கொல்ல இருப்பதா சொன்னான்''

''சரிடா, ஆனா நான் காதலிக்கிறது உண்மைடா''

''வேணாம் சுபா''

''பாருடா என்ன நடக்குதுன்னு''

அவள் வீட்டிற்குள் சென்றுவிட்டாள். நான் வெளியில் நின்று கொண்டு இருந்தேன். என் மீது எவரின் கையோ பட்டது. திரும்பிப் பார்த்தேன். கோரன் நின்று கொண்டு இருந்தான். எனக்கு கை கால்கள் நடுங்கத் தொடங்கியது.

(தொடரும்)





Tuesday 29 September 2015

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் 25

''முருகேசு, உனக்கு சில உண்மைகளை சொல்றேன் கேளுடா, அதுக்கு அப்புறம் உனக்கும் ஒரு விஷயம் சொல்றேன்டா, அதுபடி நீ நடக்கணும்டா, இல்லை...''

''சொல்லு''

''அவனின் மனைவி எனது அம்மாவுக்கு  தங்கை முறை, என் அப்பாவுக்கும் தூரத்து சொந்தம். அவனும் சித்தியும்ஓடிப்போய்த்தான் காதல் திருமணம் பண்ணிக்கொண்டார்கள். முதலில் நன்றாகத்தான் இருந்தார்கள். சித்தி எங்கள் வீட்டுக்கு வருவார்கள், போவார்கள். பல வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்தார்கள். இதனால் இவனால் எனது சித்தி மிகுந்த மன வேதனைக்கு ஆளானார்கள். கொஞ்சம் கொஞ்சமாக மனநிலை பாதிக்கப்பட ஆரம்பித்தது. இதற்கு சற்று ஆறுதலாக இருந்த எங்களை பார்க்கக்கூடாது என அவன் கட்டளை போட்டதால் எப்போதாவது வர ஆரம்பித்தவர் சில மாதங்களாக வருவதை அடியோடு நிறுத்திவிட்டார். என் அம்மா அங்கே செல்லும்போது அவன் என் அம்மாவை கண்டபடி பேசியதை என் அம்மா எங்களிடம் சொல்லவில்லை. சித்தியைப்  பார்க்கவும் செல்லவில்லை.

மன அழுத்தம்தனை காரணம் காட்டி பலமுறை மருத்துவமனைக்கு அவன் அழைத்துச் சென்று இருக்கிறான். தான் நல்லவன் போல எல்லோரிடமும் காட்டிவிட்டு தாட் பொரசெஸ் என கதைகட்டிவிட ஆரம்பித்தான். ஒருமுறை சித்தியைப் பார்த்தபோது கோரன் எனக்கு பயமா இருக்குடா, நான் என் அம்மா வீட்டுக்குப் போறேன் என்றபோது இவன் வேறொரு மணம்  முடிக்க திட்டமிடுவதை சொன்னார். நான் அவனை முழுமையாக நம்பியதால் பார்த்துக்கொள்ளலாம் என சொல்லிவிட்டு வந்த ஒரே வாரத்தில் சித்தி தற்கொலை செய்து கொண்டதாக அவனிடம் இருந்தே தகவல் வந்தது. தற்கொலைதான் என நம்பும்படி எல்லா ஆதாரங்களும் இருந்தன அதனால் போலிஸ் ஒன்றும் செய்ய இயலவில்லை. ஆனால் நான் அப்பா அம்மா இது ஒரு கொலை என்றே எண்ணினோம். அவன் உண்மையை ஒப்புக்கொள்ளவில்லை. அதனால் அவனை கொல்வது  எனத்  திட்டமிட்டோம். ஆனால் படுபாதகன் நீ குறுக்கே வந்துவிட்டாய், உன்னை கொலை பண்ணினால்தான் அவனை கொலை பண்ண முடியும் என எனக்குள் ஒரு ஆத்திரம் இருந்து கொண்டே இருந்தது. இன்று நான் சொன்னது பொய் என்று சொன்னாய் பார் அதுதான் எனக்கு மேலும் ஆத்திரம் அதிகம் ஆனது.

இப்போது சொன்னது உண்மை. நான் அவனை எங்கேனும் தேடி கொலை பண்ணாமல் விடமாட்டேன். நீ இதற்கு மேல் இதில் தலையிடுவது என இருந்தால் இப்போதே சொல், உன்னை இங்கேயே கொன்று போட்டுவிடுகிறேன்''

''கோரன், இது எல்லாம் தப்பு என தெரியவில்லையா''

''எதுடா தப்பு, சொல்டா, இவ்வுலக உயிர்கள் எல்லாம் பிரசவிக்கின்றன, அந்த பிரசவம் என்பது பெண்ணுக்கு என உண்டானதுடா, ஒரு பெண் பிரசவிக்க முடியாமல் போனால் வேறு ஒரு பெண்ணை நாடுவது அந்த பெண்ணுக்கு இழைக்கப்படும் அநீதி, ஆனால் அப்படியே விருப்பம் கொண்டு போகட்டும் அதற்காக மனநிலை பாதிக்கப்படும்படி செய்து கொலை செய்யும் மனநிலையை எப்படியடா மன்னிப்பது''

''கோரன் சொல்வதைக் கேள், கொலை செய்தார் என்பதற்கு ஆதாரம் இல்லாமல் நீ தவறான முடிவை எடுக்காதே''

''உன்னோடு பேசினதே தப்புடா, இதோ பார் உன்னை...''

நான் சுதாரித்து எழுந்து கதவைத் திறந்து ஓட எத்தனித்தேன். ஆனால் அவன் விருப்பம்படி செய்யட்டும் என அப்படியே உட்கார்ந்து இருந்தேன். கோரன் சமையல் அறைக்குள் என நினைக்கிறேன், அங்கிருந்து ஒரு கத்தியுடன் வந்தான். எனக்கு வியர்க்க ஆரம்பித்தது.

''சொல்டா, நீ தலையிடுவாயா''

''கோரன், இனி அது உன்னோட விருப்பம், நான் விலகிக் கொள்கிறேன்''

''போலிஸ் கேட்டால் எதுவும் தகவல் சொல்வாயாடா''

''இல்லை சொல்லமாட்டேன்''

''அந்த சுபாவை நீ ஏமாற்றினால் இதே கதிதான் உனக்கும். அதென்னடா நீ நினைத்தபடி பெண் மாற்றுவது, முதலில் அவன், அடுத்து நீ. அதுக்கு ஒரு அடையாளம் உன்னில் போடவேண்டும்''

கோரன் பேசிக்கொண்டே என் அருகில் வந்தான். நான் அப்படியே அமர்ந்து இருந்தேன். என் அருகில் வந்ததும் அப்படியே எழுந்து அவனது வயிற்றில் ஓங்கி முட்டினேன் நிலைகுலைந்து கீழே விழுந்தான். எங்கிருந்து வந்த தைரியமோ அவனது உடலில் கைகளில் சரமாரியாக மிதித்தேன். அவன் கொஞ்சம் கூட கத்தவில்லை. இனி அங்கு இருப்பது ஆபத்து என கதவைத் திறந்து வேகமாக வெளியேறினேன். இனி கோரன் பரம எதிரிதான் என நினைக்கும்போது பயமாக இருந்தது.  சுபத்ராவிடம் விஷயத்தை சொல்லி நிலைமையை சரி செய்ய வேணும் என எண்ணிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.

காயத்ரி தூங்காமல் காத்துக்கொண்டு இருந்தாள். எல்லா விபரங்களையும் சொல்லி முடித்தேன். அவள் பதறினாள்.

''முருகேசு, என்ன காரியம் பண்ணி இருக்க?''

''நீ கவலைப்படாதே, அவன் எப்படியும் அந்த ஆசிரியரைத் தேடித்தான் போவான் அதுக்குள்ளாற சுபா கிட்ட பேசுவோம்''

''அவதான் எல்லாம் தூண்டி விட்டு இருக்கா, அவகிட்ட எதுக்குப் பேச்சு''

''இல்லை காயூ, நீ தூங்கு''

காயத்ரியிடம் சொல்லிவிட்டு நான்  தூங்காமல் இருந்தேன். காயத்ரியின் அம்மாவின் உடல்நிலையை காரணம் காட்டித்தான் காயத்ரியின் தந்தை இன்னொரு பெண்ணுடன் ஓடிப்போனார். அதேபோல கோரன் சொன்னது போல இருந்தால் ஆசிரியர் எதற்கு கொலை பண்ண வேண்டும். யோசித்தவாரே உறங்கினேன்.

மறுநாள் சுபத்ராவைப் பார்க்கச் சென்றேன். சுபத்ரா எங்கேயோ வெளியே கிளம்பிக் கொண்டு இருந்தாள்.

''சுபா, முக்கியமான விஷயம் பேசணும், நீ கோரன் கிட்ட என்னை காதலிக்கலை, கதைதான் சொன்னேன்னு சொல்லிரு, அவன் என்னை கொல்லணும்னு  சொல்றான்''

''இன்னும் உன்னை கொல்லலையா?, இன்னுமா விட்டு வைச்சிருக்கான், நான் எதுக்குடா பொய் சொல்லணும், நீயும் நானும் காதலிச்சோம், என்ன மறைக்கப் பாக்கிறாய, ஒழுங்காப் போயிருடா''

''நீ பரிணாமம் பத்திதான் படிக்க வந்த, எதுக்கு இப்படி என்னை வம்பில கோர்த்துவிட்ட''

அவளிடம் நேற்று நடந்த விசயங்களை சொன்னதும் அதிர்ச்சி ஆனாள்.

''என்னடா சொல்ற''

''ஆமா சுபா, இதுதான் நடந்தது''

''இருடா''

அவளது செல்பேசியை எடுத்து யாரையோ அழைத்தாள்.

''கோரன், என்ன காரியம் பண்ண இருந்த, முருகேசு என்னோட பிரெண்ட் அவனுக்கு ஏதவாது  ஆச்சு உன்னை என்ன பண்ணுவேனு எனக்கே தெரியாது. ஏன்டா  அறிவுகெட்டவனே அவனை என்ன பண்றதுனு  எனக்குத் தெரியும் உன் வேலை எதுவோ அதைமட்டும் பாரு''

பதில் கூட பேசாமல் அழைப்பைத் துண்டித்தாள். அவளது அலைபேசி மீண்டும் அழைத்தது.

''என்னடா, ஒழுங்கா இரு''

''-----''

''புரிஞ்சதுல நீ அந்த வாத்தியானை பழி வாங்கு என்னமும்  செய், என் பிரெண்ட் பக்கம் நீ தலை வைச்ச உன் தலை இருக்காது, வைடா போனை''

எனக்கு ஒன்றுமே புரியவில்லை. இவ்வுலகில் எனக்குத் தெரியாதது என்று நிறைய இருக்கிறது, அதில் மிகவும் முக்கியமான ஒன்று நான். சுபாவின் மீது எனக்கு மரியாதை ஏற்பட்டது.

''நீ தைரியமா இரு, ஆனா நீ என்னைத்தான் கல்யாணம் பண்ணிக்கிரனும், இல்லைன்னா கோரன் பண்ணவேண்டிய வேலையை நான் பண்ணுவேன்''

சொல்லிவிட்டு கலகலவென சிரித்தாள்.

''எங்கடா உன் பொய் காதலி, நான் எது சொன்னாலும் சிரிப்பாளே''

''சுபா சீரியஸா பேசு''

''ஒண்ணுமே இல்லாத விஷயத்தை ஊதி  பெரிசாக்கி விட எனக்குத் தெரியும், எவ்வளவோ பெரிய விஷயத்தை ஒண்ணுமே இல்லாம ஆக்க என்னால முடியும்''

''சுபா, நல்லா படிச்சி வேலைக்குப் போகணும்னு இருக்கேன்''

''அப்படின்னா அவளை மறந்துரு''

''சுபா''

''டேய் இந்த உலகத்தில உயிரற்றதில் இருந்து உயிர் உருவாகியதா எந்த வரலாறும் இல்லை. அதனால நான் உன்னோட உயிர். நீ என்னோட உயிர்''

சொல்லிவிட்டு வேகமாகப் போய்விட்டாள். பிறரது உணர்வுகளை மதிக்காதவர்கள் சைக்கோ என குறிப்பிடப்பட்டு இருக்கிறது . சைக்கோ! நானா? அவளா?

(தொடரும்)