Thursday 29 March 2012

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் - 7

வேனில் இருந்து பொருட்களை இறக்கி எங்கள் வீட்டிற்குள் கொண்டு வந்தார்கள். 'அப்பா என்ன நடக்கிறது' என்று கேட்டேன். அவருக்கு இறக்கிற எல்லா சொத்துகளையும் இந்த இருவரின் பெயரில் எழுதி வைத்து விட்டார் என்றார் அப்பா. அதற்குள்ளாகவா, என்றேன். ஆமாம் என்றார். அப்படியெனில் அவர் சாக முடிவு செய்துவிட்டாரா என்றேன் கலக்கத்துடன். தெரியவில்லை என சொல்லிவிட்டு வேன் டிரைவரிடம் பணத்தை கொடுத்துவிட்டு வந்தார். காயத்ரி கலக்கத்துடன் இருந்தாள். எதற்கு இந்த கல்லூரிக்கு செல்லவேண்டும், எத்தனையோ பேர் இருக்க காயத்ரி எதற்கு கண்ணில் பட வேண்டும், என்னுடன் பேச வேண்டும், பழக வேண்டும், இப்படி எல்லாம் நடக்க வேண்டும் என எண்ணிக் கொண்டிருக்கையில் 'என்ன யோசனை முருகேசு' என்றார் அம்மா. மற்ற அனைவரும் நாற்காலிகளில் அமர்ந்து இருந்தார்கள்.

'நான் இமயமலைக்கு போகப் போறேன், என்னோட வியாபாரம், இந்த பொண்ணுங்க எல்லாத்தையும் தேவேந்திரன் பாத்துகிறேனு சொல்லிட்டார்' என்றார் காயத்ரியின் அப்பா. எனது அப்பாவின் பெயரை சொன்னதும் எனக்கு திடுக்கென இருந்தது. எனது அப்பாவுக்கு என்ன தெரியும் வியாபாரம், விட்டு கொடுத்து போகும் மனப்பான்மை உடையவர். கடையில் ஐந்து ரூபாய் பொருள் என்றால் ஆறு ரூபாய் கொடுத்து வியாபாரம் நல்லா பெருகட்டும் என சொல்லிவிட்டு வரக்கூடியவர். இதுவரை எந்த பொருளுக்கும் பேரம் பேசியது இல்லை. இதனால் அம்மா அதிக கோபம் கொள்வது உண்டு. இவர் எப்படி வியாபாரம் செய்வார். கறாராக இல்லாதபட்சத்தில் வியாபாரம் எல்லாம் வீண் என நினைத்து கொண்டு 'சார், எங்க அப்பாவுக்கு வியாபாரம் பண்ண தெரியாது, நீங்க இரண்டு மாசத்தில திரும்பி வரப்ப எல்லாம் தொலைஞ்சி போயிருக்கும்' என்றேன்.

'நான் இரண்டு மாசத்தில திரும்ப வரப்போறதில, திரும்பி வர சில வருசங்கள் ஆகும், எனக்கு இந்த வியாபாரம் திரும்பவும் வேணாம்' என்றார் அவர். 'முருகேசு செத்த இப்படி வா' என அம்மா அழைத்தார். 'நீ பேசாம இரு, எல்லாம் நான் பாத்துக்கிறேன்' என்றார் அம்மா. 'என்னம்மா சொல்ற, இதெல்லாம் அப்பாவுக்கு சரிபட்டு வராது, காயத்ரியின் அக்காவை கல்யாணம் பண்ணிக்கொடுக்கணும், எதுக்கும்மா, வீண் சிரமம்' என்றேன். 'சார் நீங்க யோசிச்சி பேசுங்க, இதோ இந்த ரெண்டு பேரு உங்களை நம்பி வந்தவங்க' என்றேன். 'உங்க அப்பா எல்லாம் பாத்துக்குவார்' என்றார் அவர். 'ஒருவேளை எங்க அம்மா செத்து போய், எங்க அப்பாவும் சாக முடிவு பண்ணிட்டா, நாங்க மூணு பேரு எந்த தெருவுல போய் நிற்கிறது' என்றேன். இந்த வார்த்தைகள் எல்லாம் எப்படி என் வாயில் இருந்து வந்தது என யோசித்து முடிக்கும் முன்னர் 'என்ன பேச்சு பேசற நீ, அவரே மனசு உடைஞ்சு போயிருக்கார், அபசகுனமா பேசிட்டு' என அம்மா சில தினங்கள் பின்னர் என் மீது கோபம் கொண்டார். 'அப்படி எதுவும் நடக்காது' என்றார் அப்பா.

'சரி நான் கிளம்புறேன்' என்றார் அவர். இரண்டு பெண்களும் அமைதியாகவே இருந்தார்கள். 'காயத்ரி உங்க அப்பாவை எங்கயும் போக வேணாம்னு சொல்லு' என்றேன். காயத்ரி கலங்கிய கண்களுடன் 'அவர் கேட்கமாட்டார்; எல்லாத்தையும் விபரமா சொல்லிட்டார்' என்றாள். 'சார், நீங்க போக கூடாது சார்' என்றேன். எனது வயதுக்கு மீறிய வார்த்தைகளா, நிலையின் தன்மையை உணர்ந்து வந்ததா என்பதெல்லாம் எனக்கு தெரியாது. 'முருகேசு நீ போய் வேலைய பாரு' என அம்மா அதட்டினார். நண்பன் வீட்டிற்கு செல்வதாக  பொய் சொல்லி சேர்த்து வைத்த பணம் கொஞ்சம் எடுத்துக்கொண்டு, எனது தொப்பி ஒன்றையும், கண்ணாடி ஒன்றையும் மறைத்து எடுத்து கொண்டு நான் வீட்டை விட்டு வெளியேறினேன். உண்மை மட்டுமே பேச சொன்ன காயத்ரி நினைவில் அப்போது இல்லை. காயத்ரியின் அப்பா வெளியேறும் வரை ஓரிடத்தில் மறைந்து இருந்து காத்து இருந்தேன். அவர் வந்ததும், அவரை பின்தொடர்ந்து சென்றேன். கையில் சின்னதாய் பெட்டி. பேருந்து நிலையத்தில் நின்றார்.


அவர் ஏறிய பேருந்தில் நானும் ஏறினேன். எந்த இறக்கம் என எப்படி தெரிந்து கொள்வது என தெரியாமல் பேருந்து செல்லும் கடைசி நிறுத்தம் கேட்டு டிக்கட் வாங்கினேன். அவர் இறங்கிய இறக்கத்தில் நானும் இறங்கி பின் தொடர்ந்தேன். இமயமலை செல்வதாய் சொன்னவர் இங்கே எதற்கு இறங்கினார் என புரியாமல் இருந்தது. சில தெருக்கள் தாண்டி ஒரு வீட்டிற்கு முன்னர் நின்றார். வீட்டின் கதவு திறந்தது.  உள்ளே சென்றார். எத்தனை மணி நேரம் இப்படியே காத்து இருப்பது என சுற்றும் முற்றும் பார்த்தேன். துப்பறியும் சிம்பு போல் ஆகிவிட்டேனே என மனம் கிடந்து அடித்து கொண்டது. அந்த வீட்டினை நோட்டம் விட்டு கொண்டே இருந்தேன். அரை மணி நேரத்தில் ஒரு பெண்ணுடன் காயத்ரியின் அப்பா வெளியே வந்தார். அந்த பெண்ணின் கையில் பெட்டி. இருவரும் பேசாமல் நடந்து நான் இருக்கும் இடம் தாண்டி சென்றார்கள். அவர்களை பின் தொடர்ந்தேன்.

அவர்கள் பெங்களூர் செல்லும் வாகனத்தில் ஏறினார்கள். என்னால் அதற்கு மேல் பொறுத்து கொள்ள இயலவில்லை. வாகனத்தில் நானும் ஏறி 'சார் இந்த வாகனம் இமயமலை போகாது' என்றேன். 'யார் நீ' என்றார். தொப்பி, கண்ணாடியுடன் யாராய் இருந்தா என்ன என்றேன். கணவனே கண் கண்ட தெய்வம் என இருக்கும் பெண்கள் மத்தியில் மற்றொரு பெண்ணின் கணவனை கூட கணவனே கண் கண்ட தெய்வம் என நினைக்கும் பெண்கள் இருப்பார்களோ என அச்சம் தவிர்த்து தகராறு பண்ணுவதாகவே முடிவு செய்து இனி இவரை சும்மா விடக்கூடாது என நினைத்தேன். 'நீங்க இப்போ வீட்டுக்கு திரும்பலை, போலீசுல சொல்வேன்' என்றேன். வியாபாரியாச்சே அவர். அந்த பெண் 'இந்த சனியனை அடிச்சி விரட்டுங்க' என்றாள்.

நடத்துனரிடம் அவர் புகார் செய்ய, நடத்துனர் என்னை பேருந்தில் இருந்து கீழே வலுக்கட்டாயமாக தள்ளினார். கோபம் கொப்பளித்தது. அந்த நேரம் பார்த்து ஒரு போலிஸ்காரர் வந்தார். அவரிடம் சுருக்கமாக விபரம் சொன்னேன் என்பதைவிட ஒரு பெரிய பொய் சொன்னேன். ஒருவர் தனது மனைவியை கொலைசெய்துவிட்டு வேறொரு பெண்ணுடன் ஓடிப்போக இந்த பேரில் ஏறி அமர்ந்து இருக்கிறார் என்றேன். வந்து போலிஸ் ஸ்டேசன்ல கம்ப்ளைன் கொடு என சொல்லிவிட்டு போய்விட்டார். தொப்பி, கண்ணாடி கழற்றி மறைத்தேன். பெங்களூர் வாகனம் கிளம்பியது. ஒரு கல்லை எடுத்து அவர் அமர்ந்து இருந்த இருக்கையை நோக்கி எறிந்தேன். நான் எடுத்த வேகம், எறிந்த வேகம். எதுவுமே தெரியாதது போல மக்களுடன் மக்களாய் கலந்தேன். பேருந்தின் சத்தத்தையும் தாண்டி 'ஆ' எனும் அலறல் சத்தம் கேட்டது. பேருந்திற்கு எந்த சேதமும் இல்லை என்பதுதான் எனக்கு ஆறுதலாக இருந்தது. பேருந்து நின்றது. பயமற்ற நிலை என்னுள் பரவி இருந்தது. ஒரு கடையில் சென்று நின்று கொண்டு வேடிக்கை பார்க்கும் நபராக மாறி இருந்தேன். சிறிது நேரத்திற்கு பின்னர் பேருந்தில் இருந்து தலையில் கட்டுடன் அவரை இருவர் சேர்ந்து இறக்கினார்கள். அந்த பெண்ணும் உடன் இறங்கினாள். நிலைமை விபரீதம் ஆகி கொண்டு இருப்பது தெரிந்தது. பேருந்து கிளம்பியது.

நான் அருகில் சென்று பார்த்தேன்.  அவரது முகத்தில் தண்ணீர் தெளித்தார்கள். முழித்தவர் விழித்தார். மீண்டும் கண்களை மூடினார். மீண்டும் விழித்தார். அங்கே சுற்றி இருந்தவர்கள் 'ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போங்க' என்றார்கள். கைத்தாங்கலாக பற்றி கொண்டு ஒரு ஆட்டோவில் அவரை ஆஸ்பத்திரிக்கு ஏற்றி கொண்டு சென்றேன். தவறு செய்பவர்கள் எல்லாம் நல்லவர்களாக எப்படி உலகில் நடமாடிக் கொண்டு இருக்கிறார்கள் என்பதை அந்த கணம் உணர்ந்தேன். ஆஸ்பத்திரி வந்து இறங்கியதும் நீதான தகராறு பண்ணின பையன் என்றார் அந்த பெண். கல்லெடுத்து அடிச்சதும் நான் தான் என்றேன். பயந்து போனார்.

(தொடரும்)


Monday 26 March 2012

மறுபிறப்பு, நட்சத்திரங்கள், புரட்டல்கள்

எனது கிராமத்தில் இருந்து பக்கத்து கிராமத்துக்கு வந்திருந்த ஒரு சாமியாரை பார்க்க சென்றேன். அவர் மிகவும் சாந்தமாக இருந்தார். நீங்கள் எல்லாம் ஒரு சாமியாரா? என்னை முறைத்து பார்த்து கொண்டே இருந்தார். நானும் தான் அவரை முறைத்து பார்த்து கொண்டிருந்தேன்.

அடுத்த ஜன்மத்தில் நீ பறவையாக பிறக்க கடவது என அவர் என்னைப் பார்த்து சொன்னதும் எனக்கு அவர் மீது கடும் கோபம் வந்தது. அவரை நோக்கி நான் நீங்கள் அடுத்த ஜன்மத்தில் மனிதனாகவே பிறக்க கடவது என்றேன்.

எனக்கே சாபம் விடுகிறாயா? உனது சாபம் எல்லாம் பலிக்காது என்றார். அப்படியெனில் நீங்க விடுத்த சாபம் பலிக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம் என்றேன். எனது ஞான கண்களில் தெரிகிறது என்றார்.

வெட்கமாக இல்லை, இதோ அருகில் இருக்கும் எனது கிராமம் உங்கள் கண்ணுக்கே தெரியாது, இதில் எனது அடுத்த பிறப்பு பற்றியெல்லாம் தெரிகிறது எனும் புரட்டல் வேறு என சொன்னதும் சாந்தமாக இருந்த அவர் கோபம் கொப்பளிக்க எழுந்தார். கையில் வைத்திருந்த தண்ணீரை என் மீது தெளித்தார்.

எந்த ஊரில் திருடிய தண்ணீர் என்றேன். அவரை பார்க்க வந்திருந்த பலர் என்னை திட்டினார்கள், சத்தம் போட்டார்கள். அவர்களை நோக்கி சற்று அமைதியாக இருங்கள் என சொன்னேன். எவரும் கேட்கவில்லை. அந்த சாமியார், அவர்களை அமைதி என சொன்னதும் எல்லோரும் அடங்கினார்கள். படித்த முட்டாள்கள் மனிதர்களில் மட்டுமே இருக்கிறார்கள் என நினைத்து கொண்டேன்.

இந்த தண்ணீர் கைலாய மலையில் இருந்து கொண்டு வந்தது என்றார். எப்போது கைலாய மலையில் இருந்து கிளம்பினீர்கள் என்றேன். காலம், நேரம் எல்லாம் எனக்கு இல்லை நான் இந்த நட்சத்திரங்கள் எல்லாம் தோன்றுவதற்கு முன்னால் தோன்றியவர் என்றார். எனக்கு தலை சுற்றியது.

இந்த நட்சத்திரங்கள் எல்லாம் எப்படி மறுபிறப்பு எடுக்கின்றனவோ அது போலவே மனிதர்கள், விலங்கினங்கள், தாவரங்கள், ஊர்வன, பறப்பன எல்லாம் மறுபிறப்பு எடுக்கின்றன என்றார். நட்சத்திரங்கள் மறுபிறப்பு எடுக்கிறதா? என்றேன். ஆமாம் என்றார். சாமியார் சயின்ஸ் பேசுகிறார் என சைலன்ஸ் ஆனேன் நான்.

இந்த பிரபஞ்சம் உருவாகுவதற்கு முன்னால் நான் தூசியாகவும், துகளாகவும் இருந்தேன். அப்போதெல்லாம் காலமும் இல்லை, நேரமும் இல்லை. தூசியாய், துகளாய் இருந்த நான் இறுக்கமடைந்தபோது என்னுள் வெப்பம், அழுத்தம் எல்லாம் அதிகரித்தன. ஒளியற்று இருந்த நான் ஒலி எழுப்பி, ஒளி கொண்டேன் என்றார். நான் அப்படியே அமர்ந்துவிட்டேன். ஒரு வேளை இவர் ஏதாவது பள்ளி கூடத்தில் ஆசிரியராக இருந்துவிட்டு மாணவர்கள் தொல்லை தாங்காமல் சாமியார் ஆகிவிட்டாரா எனும் ஐயப்பாடு என்னுள் நிலவியது.

அப்படி ஒளி ஒலி கொண்டு இருந்தபோது நான் நட்சத்திரமாக உருவாகினேன். அந்த நட்சத்திரம் தான் இன்று எல்லையற்று விரிந்து கிடக்கும் அனைத்து நட்சத்திரங்களும், அனைத்து உயிர்களும் என்றவர், ஒரு நட்சத்திரத்தில் இருந்து பல்லாயிரம் நட்சத்திரங்கள் மறுபிறப்பு எடுத்து கொண்டே இருப்பது போல ஒரு உயிரில் இருந்து பல்லாயிர மறுபிறப்பு நடைபெற்று கொண்டே இருக்கிறது என்றார். உயிர்கள் எல்லாம் பூமியில் மட்டும் தானே என எனக்கு அவரது தாடியை பிடித்து இழுத்து உலக நடப்புக்கு வா என சத்தம் போட வேண்டும் போல் இருந்தது.

நட்சத்திரங்கள் மறுபிறப்பு எடுத்து வேறொரு நட்சத்திரம் தானே உருவாகிறது என்னை எதற்கு பறவையாக பிறப்பேன் என்றீர்கள் என்றேன். ஒரு நட்சத்திரம் மறு நட்சத்திரம் என்பது போல ஒரு உயிர் மற்றொரு உயிர், இதில் பறவை, மனித செயல்பாடுகள் வேறு என்பது போல நட்சத்திரங்களின் செயல்பாடு வேறு என்றார். நீங்கள் எந்த பள்ளிக்கூடத்து சயின்ஸ் வாத்தியார், பூமியில் மாத்திரம் தானே உயிர்கள் என்றேன்.

புல்லாக இருந்த போதும் சாமியார். நான் ஒவ்வொரு பிறப்பிலும் சாமியார். இந்த அண்ட சாரங்கள் எல்லாவற்றிலும் உயிர்கள் உள்ளது என்றார். உனது கேட்கும் திறன் எப்படி ஒரு அளவுக்குள் சுருங்கியதோ அதைப்போலவே உனது பார்க்கும் திறனும் ஒரு அளவுக்குள் சுருங்கியது. அதனால் தான் தொலைநோக்கி எல்லாம் வைத்து கொண்டு தேடிக்கொண்டு அலைகிறீர்கள் அதுதான் சொன்னேன் எனது ஞான கண்களில் தெரிகிறது நீ பறவையாக பிறப்பாய் என. நீங்கள் சரியான புரட்டல் சாமியார் என்றேன்.

புரட்டல்கள் என்றால் கலவை. இந்த உடல் பல கலவைகளால் ஆனது. இசையில் இந்த புரட்டல்கள் அதிகம் பேசப்படும். ஒவ்வொரு தாளத்திற்கேற்ப இந்த புரட்டல்கள் வேறுபாடு அடையும் என்றார். சலனமே இல்லாத மக்கள் கண்டு நான் சலனப்பட்டேன். நீங்கள் அதிகம் பாவம் செய்வதால் தான் அடிக்கடி பிறப்பு எடுக்கிறீர்கள் என்றேன்.

பாவம் செய்பவர்கள் தான் மறுபிறப்பு எடுப்பதில்லை. ஒரு நட்சத்திரம் தன்னில் இருந்து வேறு நட்சத்திரம் உருவாக்க முடியாத பட்சத்தில் அவை ஒன்றுமில்லாமல் போகும். அது போலவே மறுபிறப்பு எடுக்க முடியாத பிறவிகள் ஒன்றுமில்லாமல் போகும் என்றார்.

எனக்கு அவர் அப்படி சொன்னதும் ஒரு ஆசை வந்தது. அப்படியெனில் என்னை கருட பறவையாக பிறக்க வழி செய்வீர்களா என்றேன். எதற்கு என்றார். நான் ஒவ்வொரு பிறவியிலும் இறைவன் நாராயணனுக்கு பணி செய்யவே விருப்பம் என்றேன்.

சாமியார் சிரித்தார். படித்த முட்டாள்கள் மனிதர்களில் மட்டுமே இருக்கிறார்கள் என்றார்.

எனது மனதை இவர் எப்போது படித்தார்? துணுக்குற்றேன். கட்டிலில் இருந்து விழுந்த வலி இன்னும் போகாமலே இருந்தது.



Friday 23 March 2012

மௌன நிலை

உன்னைக் கண்டேன் உன்னைக் கண்டேன்
உலகம் மறக்கிறதே - துன்ப
உலகம் மறக்கிறதே

உறங்க மாட்டேன் உறங்க மாட்டேன்
மனசு துடிக்கிறதே - மனசு
கிடந்து துடிக்கிறதே

கனவு இல்லை கற்பனை இல்லை
புரிந்து கொள்வேனா
காதல் இன்றே கனிந்தது என்றே
தெரிந்து கொள்வேனா - மனதில்
உவகை கொள்வேனா

ஆசையை துறந்திட
ஆவல் வந்து பிறந்து மடிகிறதே
நேசம் மட்டும் கொண்டேனென்று
நெஞ்சம் சொல்கிறதே - கண்ணில்
தஞ்சம் கொள்கிறதே.

வாழ்வில் மௌனம் தான் எத்தனை அழகு. இந்த மௌனத்தை கடைபிடிக்க எத்தனை துணிவு வேண்டும். எவரேனும் ஏதேனும் சொல்லிவிட்டால் உடனடியாய் பேச தோன்றும் நிலையை ஒதுக்கிவிடும் இந்த மௌனம் தான் எத்தனை அழகு.

நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் எனும் பாடலில் வரும் சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை எனும் வரிகள் போல இந்த மௌனத்திற்கு என்ன விலை கொடுத்து விட இயலும். மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி என்றே அர்த்தப்படுத்தபட்டாலும் மௌனம் பேசும் மொழியை அறிந்தவர் எவரேனும் உண்டா.

இந்த மௌனம் என்ன சொல்ல வருகிறது என அவரவர் ஒன்றை நினைக்கத்தான் வாய்ப்பு உண்டு. இறைவன் மௌனியாகவே இதற்காகவே இருக்கிறானோ! நீ போட்டு வைத்த பாதையில் நான் நடந்து செல்வதை பெருமிதமாக நினைக்கிறேன். பாதை எனக்கு சொந்தமானது அல்ல என்றாலும் கூட.

உன்னை கண்டேன் இறைவா
உறங்க மாட்டேன் என மனசு துடிக்கிறது
எங்கே உறங்கினால் நீ கண்ணில் இருந்து
மறைந்து விடுவாய் என்கிற துடிப்பு இருந்து கொண்டே இருக்கிறது.

மௌனமாக உன்னிடம் பேசும்போது
எவருமே என்னை எதுவும் நினைப்பதில்லை
உன்னிடம் பேசுவதாக ஊரெல்லாம்
சொல்லிவைத்தால் ஏதேதோ சொல்லிவிடுவார்கள்.

மௌனம் தான் எத்தனை அழகு. என் மனதில் இருப்பதை இந்த மௌனம் ஒருபோதும் வெளியே சொன்னதும் இல்லை. முக பாவனைகளை கூட மறைத்துவிடும் பாக்கியம் மௌனத்திற்கு உண்டு. மௌனம் அவரவர் மனதிற்கேற்ப சம்மதத்திற்கு அறிகுறி.

உன்னைக் கண்டேன் இறைவா இனி உறங்க மாட்டேன்.