Monday 26 December 2011

நானெல்லாம் ஒரு அப்பா!

பொறுப்புகளை தட்டி கழித்தே  பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்ளும்,
பிள்ளைகளை பேணி காக்கும் முறையை தவறவிட்ட சிறுபிள்ளையாய்,
ஆசையாய் பேச வரும் பிள்ளையை ஆயிரம் வேலையை காட்டி தள்ளிவிடும்
ஒரு ஆதரவற்ற நிலை செல்லும் ஆதரவற்ற நிலை காட்டும் நானெல்லாம் ஒரு அப்பா!

எடுத்ததற்கெல்லாம் சத்தம், அந்த சத்தத்தில் இதயம் உடையும் பிள்ளை,
 படுத்தி எடுத்துவிட்டு பாவமாய் பார்க்கும் பார்வை மீண்டும் மறந்து
ஏதேதோ உலகம் என எங்கெங்கோ சென்று அலைந்து தொலைந்து
மார்போடு கட்டி அணைத்து மகிழும் கதை பேசாத நானெல்லாம் ஒரு அப்பா!

தாயுமானவனாய் தவமிருக்காமல் தந்தையுமானவனாய் படியளக்காமல்
சேயின் மனமறிந்து சேவகம் செய்யாமல் செத்த நிலை கொண்டு
வேலை வேலை என ஓட்டமும் நடையுமாய் வெந்து போன காலமும்
நினைவில் வந்து மனதை அழுத்த கலங்கிடும் நானெல்லாம் ஒரு அப்பா!

என் அப்பாவை எண்ணி கலங்கியே ஏக்கத்துடன் நகரும் நாட்கள்
என் பிள்ளையை கண்டு கலங்கியே  கலக்கத்துடன் நகரும் நாட்கள்
என் அன்னையை அருகே வரவழைத்து அரவணைக்காத பொழுதுகள்
நல்ல பிள்ளையாய் இருக்க தெரியாத நானெல்லாம் ஒரு அப்பா!

தனது குழந்தையை சீராட்டி பாலூட்டி உறவாய் இருந்து வளர்த்து
ஆதரவற்ற குழந்தைகளுக்கும் அன்புடன் சேவகம் செய்து
நானெல்லாம் ஒரு அப்பா என நாணி கொள்ளாமல்
நான் தான் அப்பா என பெருமையுடன் சொல்லி மகிழ இவ்வாழ்வு போதும், எவருக்கும்!

Sunday 25 December 2011

பெண்ணால் பாவப்பட்டேன்

இதோ இந்த இதழை வாசிப்பீர்கள் என்கிற நம்பிக்கையில் தங்களிடம் தருகிறேன் என வீட்டு வாசற்கதவை தட்டிய முன் பின் தெரியாத இரு நபர்கள் தந்தார்கள்.

வாங்கி பார்த்தபோது எழுந்திரு என அந்த இதழின் பெயர் இருந்தது. அவர்கள் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர்கள் என புரிந்தது. இப்படி எப்போதாவது வந்து ஒரு சில தாள்களை தந்துவிட்டு போவார்கள். அதை மறுக்காமல் வாங்கி வைத்துவிடும் வழக்கம் உண்டு. சில நேரங்களில் என்ன எழுதி இருக்கிறது என மேம்போக்காக பார்ப்பது உண்டு, அவ்வளவுதான் ஆர்வம்.

சில வருடங்கள் முன்னர் என்னிடம் இது போல ஒரு காகிதம் தந்து இந்த உலகம் அமைதியாக இருக்க வாய்ப்பு இருக்கிறதா? என கேட்ட ஒருவரிடம் அதிக நேரம் பேசியது உண்டு. இறைவன் வந்துதான் இந்த உலகத்தை பாவத்தில் இருந்து காக்க வேண்டுமெனில் அந்த பாவத்தை உருவாக்கிய இறைவன் தனை நீக்கினால் எல்லாம் சரியாய் போய்விடுமே என்று சொன்னதும் அவர் என்னை ஒருமாதிரியாக பார்த்தார். வீட்டில் அன்று எனக்கு நல்ல திட்டு விழுந்தது. எவரேனும் இது போன்று வந்தால் அன்பாக உபசரிக்காவிட்டாலும் அவர்களின் மனம் நோகுமாறு பேசாமல் அனுப்பி வைப்பது நல்லது என்றே சொன்னார்கள். அன்றிலிருந்து எவரேனும் வந்தால் பேசாமல் ஒரு புன்முறுவலுடன் வாங்கி வைத்து கொள்வேன்.

பத்திரபடுத்திய அந்த இதழை படிக்க வேண்டும் என நினைத்து பல நாட்கள் கடந்து போனது. இயேசு கிறிஸ்து நினைவுக்கு வந்ததால் அந்த இதழை நேற்று எடுத்து பார்த்தேன். கார்பன் கூட்டாளி எழுதியது போன்றே அந்த இதழில் மரபணுக்கள் பற்றி எழுதி இருந்தது. எப்படி இயற்கையாக இந்த மரபணுக்கள் எழுதி இருக்க முடியும் என கேள்வி இருந்தது. விஞ்ஞானிகள் குறித்து கேலியும் இருந்தது. டி என் ஏ வில் உள்ள இன்றான் எக்சான் குறித்து நேரடியாக சொல்லாவிட்டாலும் அது குறித்து எழுதியும் இருந்தது. தமிழ் ஆக்கம் பண்ணலாம் என நினைத்தேன், எதற்கு என விட்டுவிட்டேன். அதில் ஒரு விசயம் என்னை யோசிக்க வைத்தது. இந்த உலகை ஆறு நாளில் கடவுள் படைத்தார், ஆறாயிரம் வருடங்கள் முன்னர் என்பது போன்ற வசனங்கள் இந்த இறை நூல்களின் மதிப்புதன்மையை குறைக்கின்றன என எழுதி இருந்தது. அதே வேளையில் அந்த வாசகங்கள் சரியே என வாதம் புரிந்தது. ஒரு நாள் என்பது பகலும் இரவும் கூடிய ஒரு நாள் அல்ல என்பதே பொருள் என சொன்னது. ஆறு நாள் முடிந்தது, இப்போது ஏழாம் நாள் நடந்து கொண்டிருக்கிறது என கருத்து சொன்னது. எனவே ஆறாயிரம் வருடங்கள் என்பது பல மில்லியன் வருடங்களுக்கு சமானம் என கருத வேண்டும் என சொன்னது.

உடனே எனது புத்தி வேறு விதமாக சிந்திக்க ஆரம்பித்துவிட்டது. யார் இந்த இயேசு கிறிஸ்து? என எண்ண தொடங்கிய மனது எனது பெயர் ஆபிரகாம் என வந்து நின்றது. உடனே விடுமுறையில் தானே இருக்கிறோம் இந்த கிறிஸ்துவ மதம் பற்றி சற்று தெரிந்து கொண்டால் என்ன என தொடங்கி ஆங்காங்கே தகவல்களை இணையத்தின் மூலம் வாசிக்க ஆரம்பித்தேன். ஆதாம், ஏவாள் பற்றி வாசித்தபோது கடவுள் ஆதாமை நோக்கி இந்த மரத்தை சாப்பிட்டதால் பாவி ஆகிவிட்டீர்கள் என்கிறார். அதற்கு ஆதாம் சொல்கிறான். 'இதோ எனக்கு துணையாய் இருக்க நீங்கள் என்னிடம் இருந்து உருவாக்கிய எனது மனைவி இந்த மரத்தை சாப்பிட சொன்னாள், அதனால்தான் நான் சாப்பிட்டேன்' என்கிறான். மரத்தில் இருந்த ஆப்பிள் என்பதெல்லாம் பிற்பாடு வந்த கட்டுக்கதை என்கிறார்கள் சிலர். ஆடை இல்லாமல் இருப்பது அத்தனை கேவலம் என அன்று நல்லது எது, தீயது எது என அறிவைத் தரும் மரத்தை தின்றதால் ஞானம் பிறந்து இருக்கிறது என படித்தபோது 'அட தாவரம்'. நீங்கள் என்ன உணவு சாப்பிடுகிறீர்களோ அதைப் போன்றே உங்கள் எண்ணமும் இருக்கும் என முன்னோர்கள் சொன்னது நினைவுக்கு வந்தது.

மனைவியின் பேச்சு கேட்க கூடாது என அதனால் தான் சொல்கிறார்களோ என்னவோ? ஹூம்! சரி இயேசு கிறிஸ்து உண்மையா இல்லையா என தேடினேன். இயேசு கிறிஸ்து உண்மை இல்லை, அது ஒரு கதாப்பாத்திரம் என பத்துக்கு ஆறு பேரு சொன்ன கருத்தை கேட்டு ஒரு முடிவுக்கு வர இயலவில்லை. ஆனால் கிறிஸ்துவின் பெயரால் விடுமுறை கிடைப்பது மட்டற்ற மகிழ்ச்சி. மேலும் இத்தனை வருடங்களாக பலரால் நினைவு கூறப்பட்டு வரும் கிறிஸ்து போற்றுதலுக்குரியவர் தான். சரி என எனது பெயர் ஆபிரகாம் என நினைத்தேன் அல்லவா. ஆபிரகாம் பெயரைத் தேடினேன். ஆச்சர்யம்.

இந்த ஆபிரகாம் இறைவனால் அனுப்பப்பட்டவர். இதற்கு முன்னர் நோவோ என்பவர் வாழ்ந்த போது ஏற்பட்ட பாவத்தினால் இந்த உலகை வெள்ளத்தில் அழித்து நோவோ குடும்பத்தை மட்டுமே காத்தாராம் இறைவன். அதற்கு பின்னர் மீண்டும் பாவங்கள் பெருகிய போது வெள்ளத்தினால் உலகை அழிக்கமாட்டேன் என உறுதி தந்த இறைவன் ஆபிரகாம் மூலம் ஒரு புது உலகம் உருவாக்குகிறார். இந்த ஆபிரகாம் பைபிள் மற்றும் குர்ஆனில் அதிகம் பேசப்படுகிறார். ஏறக்குறைய பல விசயங்கள் குரானிலும், பைபிளிலும் ஒன்றாகவே இருக்கிறது என ஓரிடத்தில் படித்தேன். எப்படியும் குரானையும் பைபிளையும் அடுத்த ஏப்ரலுக்குள் படித்துவிட வேண்டும் என இருக்கிறேன்.

இந்த ஆபிரகாம் கதை சுவாரஸ்யமாக இருந்தது. ஆபிரகாமுக்கு சாரா என்கிற மனைவி, சாரா என்கிற மனைவியின் மூலம் குழந்தை பாக்கியம் ஆபிரகாமுக்கு கிடைக்கவில்லை. அப்போது சாரா வீட்டில் வேலை செய்யும் ஹாஜர் எனும் பெண்ணை ஆபிரகாமுக்கு திருமணம் செய்ய முயற்சி செய்கிறார் சாரா. சம்மதம் சொல்கிறார் ஆபிரகாம். ஹாஜர் கருத்தரிக்கிறாள், அதன் மூலம் கர்வம் கொள்கிறாள். இதனால் சாராவை நிந்திக்கிறாள். கோவம் கொண்ட சாராவின் செயலால் ஹாஜர் வீட்டை விட்டு வெளியேற்ற படுகிறார். கடவுளின் உத்தரவுபடி மீண்டும் வந்து ஆபிரகாமிடம் சேர்ந்து பிள்ளை பெறுகிறார்.  குழந்தை பெரும் காலகட்டத்தை கடந்த பின்னர் சாரா கருத்தரிக்கிறார். இப்படி இவர்கள் பெற்ற குழந்தைகள் ஐசாக், இஸ்மாயில் எனப்படுகின்றனர். ஹாஜரின் குழந்தையான இஸ்மாயில் சாராவின் குழந்தை ஐசாக் தனை கேலியும் கிண்டலும் செய்ய கோபமுற்ற சாரா அவர்களை வீட்டை விட்டு வெளியேற்ற ஆபிரகாமிடம் சொல்கிறார். ஆபிரகாம் கடவுளிடம் ஆலோசனை கேட்டு அவ்வாறே செய்கிறார். ஹாஜர் தனது பையனுடன் ஆபிரகாம் தந்த ரொட்டி மற்றும் தண்ணீர் எடுத்து கொண்டு செல்கிறார் என போகிறது கதை. கடவுள் உனது பையன் ஒரு பெரிய நாடாவான் என சொல்வதாக அமைகிறது.

இந்த கதையை படித்ததும் பல சீரியல்கள் ஞாபகத்திற்கு வந்தது. எத்தனையோ வருடங்கள் முன்னர் நடந்த விசயங்கள் இன்றும் நடந்து கொண்டுதானிருக்கிறது. மேலும் மேலும் படிக்க தொடங்கினேன். அதில் ஆதாம் ஏவாளுக்கு காலையில் ஒரு பெண் ஒரு ஆண் குழந்தையும், மாலையில் ஒரு பெண் ஒரு ஆண் குழந்தையும் பிறந்ததாம். காலையில் பிறந்த ஆண் மாலையில் பிறந்த பெண்ணை மணம் முடித்ததாக அதே போல் மாலையில் பிறந்த ஆண் காலையில் பிறந்த பெண்ணை மணம் முடித்ததாக சொல்லப்பட்டு இருந்தது. இது எல்லாம் எத்தனை உண்மை என புக் ஆப் ஜெனிசிஸ் படிக்க ஆரம்பித்துவிட்டேன். இப்போது எனக்கு தரப்பட்ட இதழுக்கு திரும்புகிறேன். ஒரு நாள் என்பது எத்தனை மில்லியன் வருடம் எனில் ஒரு காலை என்பது எத்தனை வருடங்கள்? மாலை என்பது எத்தனை வருடங்கள்? புரியவில்லை.

மோசஸ் என்பவருக்கு முன்னாள் வாழ்ந்தவர்கள் 900 வருடங்கள் வாழ்ந்தார்கள் என்றெல்லாம் சொல்லப்பட்டு இருக்கிறது. அந்த 900  வருடங்கள் எந்த கணக்கு? ஏதேதோ கேள்விகள் எழுகின்றன. படித்துவிட்டு பேசலாம் என இருக்கிறேன். 


நன்றாக தெரிந்த ஒரு பெண்ணிடம் கேட்டேன். 


கடவுளை பற்றி என்ன நினைக்கிறாய்?

ஒன்றும் சொல்வதற்கு இல்லை.

பரவாயில்லை சொல், கடவுளைப் பற்றி என்ன நினைக்கிறாய்?

நான் என்ன நினைக்கிறேன் என்பது பற்றி உனக்கு என்ன அக்கறை.

சும்மா சொல், கடவுளை பற்றி என்ன நினைக்கிறாய்?

நான் உணர்வதை உன்னால் உணர இயலாது, சொல்லி என்ன பயன்.

பரவாயில்லை சொல், கடவுள்?

உன்னைப் போல நம்பிக்கை இல்லாதவர்கள் பாவப்பட்டவர்கள்.

அந்த வாக்கியத்தில் என்னை பளாரென அறைவது போலிருந்தது. ஆதாமும் ஏவாளும் இறைவனிடம் நம்பிக்கையற்று போனதால் தான் இந்த உலகம் பாவப்பட்டது என்கிறார்களே! உண்மையோ!

Saturday 24 December 2011

வாழ்க்கையில் சீரழிவது எப்படி? சுடர்மிகு அறிவும் சுரைக்காயும்

முன்பகுதி இங்கே. 

மரங்கள் ஓங்கி வளர்ந்து இருந்ததை கண்டு இந்த மரங்கள் எல்லாம் எவரால் நடப்பட்டன எனும் சிந்தனை கற்காலம் தாண்டிய மனிதனின் எண்ணத்தில் மலர்ந்தது. விலங்குகளை வேட்டையாடி திரிந்த மனிதன் ஓரிடத்தில் அமர இந்த தாவரங்கள் பெரிதும் உதவியாய் இருந்தன. ரோமங்களால் மூடப்பட்டு இருந்த உடலுக்கு இலைகள் எல்லாம் உடைகள் ஆயின.

இந்த தாவரங்கள் எப்படி உருவாகின? மதம் எனும் கோட்பாட்டிற்குள், மத நூல்கள் தரும் போதையில் சிக்கி கொண்டு இந்த உலகம் இறைவனால் படைக்கப்பட்டது எனும் வேதாந்த கருத்தில் மனம் வைத்து சுடர்மிகு அறிவுதனை எரித்து கொண்டிருப்பது எவருக்கும் பயன் அளிக்கப் போவதில்லை. இதை இப்படி பிரித்தோம், அதை அப்படி படைத்தோம் என வியாக்கியானங்கள் எல்லாம் படிப்பதற்கு சுவையாக இருக்கும். அந்த வியாக்கியானங்களை இறைவன் எனும் ஒரு பாகுபாடற்ற தன்மைக்கு அலங்காரம் சூட்டி நம்மை நாமே அடிமைபடுத்தி கொள்வது என்பது இந்த காலகட்டத்தில் தவிர்க்க இயலாத ஒன்றாகவே இருக்கலாம். ஆனால் தவிர்க்க கூடிய தைரியம் மிக்க அறிவு எவருக்கும் அத்தனை எளிதில் வாய்ப்பதில்லை. உள்ளூர பயம் இருந்து கொண்டேதான் இருக்கும். சனிப்பெயர்ச்சி பலன்கள் என படித்து பரிகாரம் தேடும் அளவுக்கு சுடர்மிகு அறிவுடன் நாமெல்லாம் படைக்கப்பட்டு இருக்கிறோம்! படைக்கப்பட்டு? ஆம், அறிவினை முட்டாள்தனமாக உபயோகிக்க தெரிந்த விதமே பல சீரழிவுகளுக்கு காரணம்.

இந்த தாவரங்கள் எல்லாம் அப்படி அப்படி முளைத்தது அல்ல, அப்படி அப்படி பிடுங்கப்பட்டு நடப்பட்டது அல்ல. எப்பொழுதாவது இந்த தாவரங்கள் கண்டு பிரமிப்பு அடைந்தது உண்டா. இவைகளுக்கு மனம் இல்லை, பேசும் வாய்ப்பு இல்லை, நடந்து திரியும் பழக்கமும் இல்லை. ஆனால் கூட்டம் கூட்டமாக நிலப்பரப்பை அழகு படுத்தி கொண்டிருக்கும். பாறைகள் உடைபட்டு அதிலிருந்து வெளிப்பட்ட தாது பொருட்கள், மண்ணின் அமிலத்தன்மை, மண்ணில் இருக்கும் தண்ணீர், நுண்ணுயிர்கள் என்பவையே தாவர வளர்ச்சிக்கான காரணிகள். நிலத்தில் உள்ள தாது பொருட்கள் உட்கொண்டு முதலில் சிறு தாவரம் உருவாகும். அந்த தாவரத்தை பின்பற்றி மற்றொரு தாவரங்கள் உருவாகும். இப்படியாக பெரிய தாவரங்கள் உருவானதும் அங்கே ஒரு மர கூட்டத்தின் நாகரிகம் முடிவடையும். இதை அழகு தமிழில் மண் தொடர் மாற்றம் என குறிப்பிடுவார்கள். இந்த மண் தொடர் மாற்றம் என்பது இரண்டு நிலைப்படும். முதல் மண் தொடர் மாற்ற நிலை, இரண்டாம் மண் தொடர் மாற்ற நிலை. இது ஒரு சுழற்சியாகவும் தொடரலாம். பாலைவனங்களில் கூட வளரும் தன்மை கொண்ட தாவரங்களை நேரில் கண்டபோது உங்களை எவர் படைத்தது என கேட்டுவிடத்தான் தோணியது!

முதல் மண் தொடர் மாற்ற நிலையில் சில தாவர வகைகள் வரும், அதற்கு பின்னர் அந்த தாவர வகைகள் மாறி இரண்டாம் மண் தொடர் மாற்ற நிலையில் வேறு தாவர வகைகள் வரும். இந்த தாவரங்களின் பயன் மூலமே விலங்கினங்கள் உருவானது என்பது பின்னர் தான் தெரிந்தது. நிலத்து தாவரங்கள் போல நீர் தாவரங்களும் உண்டு. எந்த ஒரு அவதாரமும் தாவரமாக உருவெடுத்ததாக நமது அறிவு சிந்திக்க மறுத்துவிட்டது. சுரைக்காய்!

இப்படி தாவரங்கள் உருவானது போலவே மனிதர்களும் கூட்டம் கூட்டமாக வாழ ஆரம்பித்தார்கள். இப்படியாக நாகரிகம் என தொடங்கியது  கிட்டத்தட்ட ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் என்றுதான் காலக்கணக்கீடு காட்டுகிறது. ஆறுகள் நாகரிகத்திற்கு வழிகாட்டியாக அமைந்து இருக்கலாம் என்பது மதிப்பீடு. மீசொபோடோமியா மற்றும் எகிப்து போன்ற இடங்களே மனிதர்கள் ஓரிடத்தில் முதலில் அமர்ந்தார்கள் என்கிறது வரலாறு. முதலில் ஒரு சிலர் சென்று அங்கே தங்குவார்கள், பின்னர் கூட்டமாக வந்து சேருவார்கள், அது கிராமம், நகரம், நாடு என பிரிந்தது என்பதுதான் நாகரிகத்தின் வெளிப்பாடு. இந்த மரங்களை எல்லாம் பார்த்த மனிதர்களுக்கு அவைகளை வைத்து விவசாயம் செய்ய இயலுமா எனும் சுடர்மிகு அறிவுதான் ஒரு நாகரிகத்தை உருவாக்கியது.

இந்த சிந்தனை எவர் விதைத்தது? தாவரங்களை உட்கொண்ட, வேட்டையாடி விலங்குகள் உண்ணும் பழக்கம் இல்லாத மனிதர்கள் ஒரு பிரிவாக உருவாகி இருக்கலாம். அவர்களின் சிந்தனையே இந்த மாபெரும் மாற்றத்திற்கு காரணம். ஒரு நண்பரிடம் விளையாட்டாக கேட்டேன், இன்னமும் விலங்குகள் கொன்று அதை சமைத்துதான் நமது உடலை வளர்க்க வேண்டுமா என! அதற்கு நண்பர் பதில் சொன்னார், மத நூலில் சொல்லப்பட்டிருக்கிறதாம், விலங்குகள் நீங்கள் உண்பதற்காகவே படைத்தோம் என! பிரமித்து போனேன்.  எந்த ஒரு எழுத்தையும், நூலையும், மத நூல் உட்பட, முழுவதும் படித்து பொருள் உணராமல் நாமாக கற்பனை செய்து பேசுவது, இட்டுகட்டி எழுதுவது, காலத்திற்கு ஏற்ப அதனை மாற்றியமைத்து கொள்வது போன்றவை மிகவும் மோசமான விளைவுகளை தரும். அதாவது இருக்கும் உண்மையை அப்படியே மாற்றி போட்டு விடும். அப்படிப்பட்ட சுடர்மிகு அறிவில் தான் நாம் ஜொலித்து கொண்டிருக்கிறோம். இப்படியெல்லாம் இருந்திருக்க கூடும் என கிடைக்கும் செய்திகளில், எழுதப்பட்ட விசயங்களில் அடிப்படையில் தான் நமது அறிவு மின்னி கொண்டிருக்கிறது.

மழை இல்லாத காலத்தில் தண்ணீருக்கு என்ன செய்வது என்பதுதான் ஆறுகளின் ஓரங்களில் மனிதர்கள் குடியேறினார்கள்.  இந்த நாகரிகம் ஒருவரை பார்த்து ஒருவர் தொடர்ந்ததா என தெரிந்து கொள்ள வாய்ப்பாக அமையவில்லை. தற்போது ஒரே சிந்தனை உடைய மனிதர்கள் உலகெலாம் பரவி இருப்பதை போல ஆங்காங்கே குடியமர்ந்த மக்களில் இந்த சிந்தனை எழ வாய்ப்புண்டு என்பதை மறுப்பதற்கில்லை. சிந்து சமவெளி, கிரேக்க சமவெளி, சைனா சமவெளி, இன்கா, அஜ்டேக் என ஆறுகள், கடல் ஓரங்களில் உருவான நாகரிகம் ஒன்றுக்கொன்று தொடர்புடையதா என பார்க்கும் போது சைனாவில் உருவான நாகரிகம் வெளித் தொடர்பே இல்லாமல் தான் இருந்து வந்திருக்கிறது, அதனால் தான் இன்னமும் சைனா அதே மன நிலை கொண்ட நாடாக இருக்கிறது என்பார் சிலர். இந்த நாகரிகங்கள் வளர்ந்த சமயங்களில் அவர்களது அறிவு படம் வரைவதிலும், எழுதி வைப்பதிலும் கவனம் செலுத்தியமையே பல விசயங்களை வெளிக்கொணர்ந்தது.

இப்படியான அறிவுதனில் எப்படி இறைவன் உள்ளே வந்தார் என்பது பயம் எனும் உணர்வும், இயற்கை சக்தியை போற்றி வளர்ந்த தன்மையும் என்கிறார்கள் அறிவியல் வல்லுனர்கள். ஒரு சீரற்ற சமூக அமைப்புக்கு சீரான வழிகாட்டுதல் எப்படி தருவது என்கிற சிந்தனையில் உருவானதுதான் கோட்பாடுகளும், வாழ்க்கை நெறிமுறைகளும். அவ்வாறு நெறிபடுத்தப்பட்ட போது ஏற்பட்ட பிரிவினைகள் இன்னமும் வாழ்வினை சீரழித்து கொண்டுதானிருக்கிறது.

தொலைந்த நாகரிகங்கள் மூலம் முட்டாள்தனமான அறிவு குறித்து மேலும் அறிய முயல்வோம்.