Friday, 14 October 2011

தண்ணீர் வரம் ஒரு நியூட்ரினோ ராணா

நியூட்ரினோ ஒரு போங்காட்டம் அப்படினு ஒரு தலைப்புல எழுத நினைச்சேன். அதைப் பத்தி மனசுல நினைச்சிட்டே இருக்கறப்ப சவால் சிறுகதை பத்திய அறிவிப்பு பார்த்தேன். சரி போங்காட்டம் அப்படின்னு ஒரு தலைப்பு வைச்சி ஒரு சிறுகதையை எழுதி முடிச்சிட்டேன். நியூட்ரினோவுக்கு போங்காட்டம் தான்.

எப்ப பார்த்தாலும் உலகை திருத்த வந்த உத்தம சிகாமணி மாதிரி எழுத்துல வேஷம் கட்டினா எதுனாச்சும் நடக்கவாப் போகுது. வாழ்க்கைய சீரியசாப் பார்த்தா அப்புறம் ஐ சி யு ல கொண்டு போய் சேர்க்க வேண்டியதுதான் அப்படின்ற ஒரு அடிப்படை எண்ணம கூட வந்து சேரலை. என்ன செய்ய, செய்ய முடியாதவங்க சிந்திக்க மட்டும் செய்வாங்கன்னு சொல்லிக்கிற வேண்டியதுதான்.

பல மாசங்களா இந்த பதிவுலகம் பக்கமே அவ்வளவா எட்டிப் பார்க்கலை. எல்லாம் தலை போற காரியம்னு நினைச்சி, இந்த ஊரை சீர்படுத்த வந்த தியாக செம்மல்னு நினைச்சிகிட்டு அப்பப்பா ஒருவழியா ஒரு வருஷம் ஓடிப் போச்சு. இன்னும் தலை போற காரியம் நிறைய இருக்கு. அப்ப அப்ப எழுதுவோம்னு அப்ப அப்ப நினைப்பு வரும்.

சரி, என்ன என்ன எழுதி வைச்சிருக்கொம்னு பார்த்தா ரொம்ப தொடர்கள் அந்தரத்தில தொங்கிட்டு இருக்கு. ஒன்னு ஆரம்பிச்சி அதை தொடர்ந்து செய்யணும், இல்லேன்னா ஆரம்பிக்க கூடாது. அப்படி ஆரம்பிச்சிட்டா முடிச்சிரனும் அல்லது தொடர்ந்து வாரம் வாரம் எழுதணும். இப்படி எந்த நிர்பந்தம் இல்லாம, கொள்கையும் இல்லாம எழுதினா 'மொக்கை பாண்டி' அப்படின்னு ஒரு பட்டம் போட்டுக்கிரலாம்.

இப்படித்தான் ஒரு பில்டர் அங்கொரு இங்கொரு வேலைன்னு எல்லா வேலையும் வாங்கி வைச்சிகிருவானாம். ஒரு வேலையும் ஒழுங்கா முடிச்சி தரமாட்டானாம். இப்போ முடிக்கிறேன், அப்போ முடிக்கிறேனு இழுத்து அடிப்பானாம். அது மாதிரி எழுத்துல இருந்தா எழுத்து வசப்படுமா.

சரி இந்த நியூட்ரினோ எதுக்கு, தண்ணீர் வரம் தலைப்பு எதுக்கு. எல்லாம் அறிவியல் பண்ற கூத்து தான். எதையாவது சொல்லிட்டே இருந்தாத்தான் அறிவியல் பத்தி பரபரப்பா பேசுவாங்க.

ஐன்ஸ்டீன் சொன்னாராம், ஒளியை விட வேகமாக செல்லும் பொருள் எதுவுமே இவ்வுலகில் இருப்பதற்கான வாய்ப்பு இல்லை அப்படின்னுட்டு. இவர் சொன்னதை இதுவரைக்கும் யாருமே முறியடிக்க முடியலையாம். ஒளி தான் அதி வேகமாம். ஆமா இந்த ஒளி எது? இயற்பியல் பாடம் தான் எடுக்கனும். இந்த ஒளிக் கீற்றுகளில் மொத்தம் ஏழு வகையா பிரிச்சி இருக்காங்க, அதனுடைய அலை நீளத்தை கணக்கில் வைச்சி. அந்த அத்தனை ஒளியும் ஒரே வேகம் தானாம். இந்த ஒளியின் வேகம் வேறுபட்ட கனம் நிறைந்த பொருள்களில் செல்லும் போது குறையுமாம்.

சரி இந்த நியூட்ரினோ எங்கே இருந்து வந்திச்சி. என்ன பண்றது. புரோட்டான், நியூட்ரான், எலெக்ட்ரான் அப்படின்னு படிச்சி வந்தவங்க கிட்ட அதையும் தாண்டிய பல அணு துகள்கள் இருக்குன்னு சொன்னா எப்படி இருக்கும், அப்படித்தான் பல அணு துகள்கள் இருக்காம். அதுல ஒண்ணுதான் இந்த நியூட்ரினோ. இருந்துட்டு போகட்டுமே, இந்த நியூட்ரினோவா சாப்பாடு போடப் போகுது.

அது இல்லை பிரச்சினை, இந்த நியூட்ரினோ ரொம்ப வேகமாம். அதாவது ஒளியை விட மில்லி செகண்டு வேகமா போகுதாம். இதை உங்ககிட்டே விடறேன், நீங்களே அறிஞ்சி சொல்லுங்க அப்படின்னு பல வருசமா ஆராய்ச்சி பண்ணுன கூட்டம் அறிவிசிருச்சாம். சரி இப்போ அதுக்கென்ன அப்படினா, ஐன்ஸ்டீன் சொன்னது பொய், இதுவரைக்கும் சொல்லிட்டு வந்த பெரும் பிளவு கொள்கை எல்லாம் பொய் அப்படின்னு நிரூபணம் செய்யலாமாம். செஞ்சி...கால காலமா ஒன்னை சொல்லி இன்னொன்னை மாத்துரதுதானே நம்ம அறிவியலோட வேலை. அதுக்குத்தானே அறி இயல்.

இந்த செய்தி வந்த நேரம் பெரும் பரபரப்பு. இப்ப அப்படியே அடங்கி போச்சு. எதுக்குனா நாநோபார்ட்டிகில் அப்படின்னு கேள்வி பட்டுருப்போம். கடுகு சிறிசு காரம் பெரிசு அப்படிங்கிற மாதிரி ஒரு துகள் ரொம்ப சின்னதா இருந்தா அதனோட போக்குவரத்தே தனியாம். அது போல இந்த நியூட்ரினோ விதிகள் எதுவுமே பின்பற்றாதாம். நம்ம உடலுக்குள்ள கூட இப்போ இந்த நிமிஷம் பல நியூட்ரினோக்கள் கடந்து போகுதாம். ஆனா ஒளி நம்ம உடலை ஊடுருவுமா? அப்படி ஊடுருவிச்சினா எப்படி ஒருத்தரை ஒருத்தரை பார்க்கறது. இந்த நியூட்ரினோ ஒளியை விட வேகமா இருக்க வாய்ப்பு இல்லைன்னு சொன்னாலும் அறிவியல் வித்துவான்கள் வேற யாராச்சும் ஆராய்ச்சி செஞ்சி சொல்லட்டும்னு இருக்காங்க.

அப்புறம் இந்த கோமெட்டு. இது பண்ற அட்டூழியம் தாங்க முடியலை. கால் கடுக்க நடந்து தலையில ஒரு குடம், இடுப்புல ஒரு குடம் அப்படின்னு தண்ணீ சுமந்து வரக்கூடியவங்க்களை நினைச்சா எவ்வளவு கஷ்டம். அதுவும் இந்த தண்ணீர் தான் இந்த பூமியில் உயிர்கள் வாழ ஆதாரம்னு தெரியும். அந்த தண்ணீரை இந்த கோமேட்டுதான் கொண்டு வந்து கொட்டுச்சாம். பூமியில மட்டும் எதுக்கு கொட்டுச்சோ. கோமெட்டுக்கே வெளிச்சம். இந்த கோமெட்டு சூரியன் பக்கத்தில வந்ததும் தன் கிட்ட இருக்க பனிக்கட்டிய உருக்கி தண்ணியா கொட்டிருமாம். அதோடு மட்டுமா, பூமியில ஏற்பட்ட எரிமலை வெடி சிதறல் இந்த தண்ணீருக்கு காரணம் அப்படின்னு எப்படி தண்ணீர் வந்ததுனு ஒரே அலசல். போர் போட்டு தண்ணீர் எடுக்கறவங்களை நிறுத்த சொல்லனும். பூமிக்கு தண்ணீர் வரம் கொடுத்தது எங்க ஊரு மாரியாத்தா அப்படின்னு இவங்களுக்கு எப்படி புரிய வைக்கிறது.

அதோடு நிற்கிறாங்களா, உலகம் விரிவடைஞ்சிட்டே அதுவும் படு வேகமா போய்கிட்டே இருக்காம். எல்லாம் இந்த ஒளி மூலம் பண்ற ஆராய்ச்சி தான். கருந்துளை, கரும் பொருள் அப்படின்னு இந்த மொத்த உலகமே அப்படித்தான் இருக்காம். ஒளி ஊடுருவ இயலாத பொருள் ஏதேனும் வான் வெளியில் சிந்தப்பட்டு இருக்கிறதோ அப்படின்னு ஒரு ஐயம் வந்துட்டு போகுது.

இப்படி அறிவியல் எல்லாம் பேசிட்டு இருந்தா நல்லா தான் இருக்கும், ஆனா சாப்பாட்டுக்கு மம்பட்டிய எடுத்து வெட்டுனாதானே உண்டு. கிணத்துல தண்ணீ இருக்கா, வயக்காலுக்கு தண்ணீ போதுமானு வானத்தை பார்த்துட்டு இருக்கிற நமக்கு இந்த தண்ணீ எப்படி வந்துச்சுனும், இந்த உலகம் விரிவடையுதா, சுருங்கி தொலையுமானு கவலை பட தோணுமா. அவரவர் கவலை அவரவருக்கு.

அதுக்கப்பறம் ராணா படத்துக்கு ஒரு பாட்டு எழுதினா என்ன அப்படின்னு தோணிச்சி.

இணையம் இல்லாத காலத்தில்
மனிதர்களின் மனதில்
இணையே இல்லாமல்
இடம் பிடித்த அரசனே பேரரசனே

மழை பொழிய வானம் மறுத்தால்
நல்ல மனிதர்களை விதைக்கும்
வருணனே நீ தர்மனே (இணையம்)

ஒளியை விட நீ வேகம்
உன் உணர்வால் தீர்த்துவிடு தாகம்
நியூட்ரினோ அது நீதானோ
உலகம் போற்றும் அரசனே ராணா

நீ சொன்னதால் தானே பூமியில்
உயிரினம் வளர்ந்தது
பூமிக்கு பெருமை சேர்க்க
நீயும் அரசனாய் இங்கு பிறந்தது

ராணா ராணா ராணா
நீ வேணா வேணா வேணா
என சொல்வேனா (இணையம்)

கருந்துளை கரும்பொருள் எல்லாம்
உன்னில் உன்னில் ஐக்கியம்
ஒளியை மட்டுமே சிந்தும்
உனது கண்கள் உலகின் பாக்கியம் ராணா

செம்மண்ணோ, களிமண்ணோ
பசுமை போத்திடும் ரகசியம்
இந்த பாரினில் நீ தந்தாய் அதிசயம்
உண்மை மக்கள் பெற்றவனே


ராணா ராணா ராணா
நீ வேணா வேணா வேணா
என சொல்வேனா (இணையம்) 

இப்போதைக்கு நான் மொக்கைபாண்டி இல்ல, இல்ல, இல்ல. 
Thursday, 13 October 2011

போட்டியும் பொருளாதார சரிவும் -1


ஏழை பணக்காரர் பாகுபாடு இல்லாத ஒரு உலகத்தை உண்டாக்குவது என்பது வெறும் கனவு. அரசனும் ஆண்டியாவான், ஆண்டியும் அரசனாவான் என்பது கேட்பதற்கு மிகவும் நன்றாகவே இருக்கும். பணத்தின் அடிப்படையில் இயங்கும் உலகத்தில் பணத்தை பெருக்கி கொள்ள தெரிந்தவரே மிகவும் புத்திசாலி என்கிறார்கள். கண்ணாடியானது கல்லை உடைக்கும் தந்திரம் பணத்திடம் உண்டு.

இந்த பணத்தின் பெரு மதிப்பு என்பது ‘காசேதான் கடவுளடா என ஒரு இரு வார்த்தைகளில் அடக்கி விடலாம். இந்த காசு பற்றிய சிந்தனையும், காசு பற்றிய எண்ணங்களும் மட்டுமே முதன்மை வகித்து வருகிறது. பணத்தை கொண்டு எதையும் வாங்கலாம், ஆனால் சில விசயங்களை வாங்க இயலாது என சொன்னாலும், பணத்தின் முக்கியத்துவம் அறியாதவர்கள் துறவற வாழ்க்கைக்கு செல்வது சிறந்தது என்கிற பகட்டான வாழ்க்கை அத்தியாவசிய வாழ்க்கையாகி இன்று நிற்கிறது.
கடன் பட்டோர் நெஞ்சம் போல் கலங்கினான் என்பது அன்றைய வாக்கு. கடன் கொடுத்தோர் நெஞ்சம் கலங்குகிறது அது இன்றைய வாக்கு. கேட்பவர்களுக்கு, கேட்காதவர்களுக்கு என இந்தா பணம் வந்து வாங்கி கொள், நன்றாக செலவழி என சொன்ன வங்கிகள் முதற்கொண்டு தனிப்பட்ட நபர்கள் வரை இந்த பொருளாதார சரிவுக்கு முதல் புள்ளி வைத்தவர்கள்.

வரவு எட்டணா, செலவு பத்தணா என்கிற போக்கில் உலகத்தில் கடன் வாங்காத நாடே இல்லை எனலாம். எல்லா நாடுகளும் இந்த கடன் தொல்லையால் கண் விழி பிதுங்கி நிற்கிறது. எப்படி செலவினை குறைப்பது என்பது ஒவ்வொரு நாட்டிற்கும் திண்டாட்டம் ஆகிவிட்டது. ஒரு நாட்டின் கடன், அந்த நாட்டின் குடிமகன் பட்ட கடன் என்கிற நிலை தான். ஆடம்பர வாழ்க்கைக்கு ஆட்பட்ட ஒவ்வொருவரும் இந்த கடன் தொல்லையால் தவிப்பது தவிர்க்க இயலாமல் ஆகிவிடுகிறது.
இதெற்கெல்லாம் என்ன காரணம், பொருளாதார கட்டமைப்பு சரிவர இல்லாமல் இருப்பதே. ஒரு பொருள் விற்பதை பொறுத்தே அந்த பொருளில் விலை நிர்ணயிக்கப்படுகிறது, அல்லது அந்த பொருளின் தேவையை பொருத்து, இருப்பை பொருத்து எனவும் கொள்ளலாம். இந்த பணம் எல்லாம் எப்படி வந்தது. பணம் பற்றாகுறை ஏற்படும்போது ஒரு அரசு பணம் பற்றாகுறையை போக்க பணம் அச்சடித்து வெளியில் விடலாம், அப்படி செய்யும்போது அந்த நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது என்கிறார்கள்.

ஒரு உதாரணத்திற்கு எடுத்து கொள்வோம், வங்கிகள் எப்படி பணம் சம்பாதிக்கின்றன. வங்கிகளுக்கு பணம் எங்கிருந்து வருகிறது? அது முழுக்க முழுக்க மக்களின் பணம். மக்கள் தங்கள் பணத்தை பாதுகாக்க முடியாத பட்சத்தில் வங்கிகளில் பாதுகாப்பாக இருக்கும் என வைக்கிறார்கள். இந்த மக்களின் பணத்தை வங்கிகள் பிற பொருள்களின் மீது செலுத்தியோ முதலீடு செய்தோ அதன் மூலம் லாபம் பார்க்கின்றன. மிக குறைந்த அளவே இந்த வங்கிகள் தரும் பணம் மக்களுக்கு பெரிதாக தெரியலாம் அதனால் ஏற்படும் இழப்புகளையும் இந்த மக்களே தாங்கி கொள்ள வேண்டும் எனும் போதுதான் நாட்டின் பொருளாதார சீர்கேடு ஏற்படுகிறது.

மிக முக்கியமானது போட்டியாளர்களின் நம்பகத்தன்மை. வியாபார உலகத்தை எப்பொழுது அடியோடு ஒழித்துக் கட்ட நாம் செயல்பட முயல்கிறோமோ அப்பொழுதுதான் ஒரு நாட்டின் பொருளாதாரம் சீர் பெறும். இத்தனை காலமாக பொருளாதார சீர்கேட்டில்தான் எல்லா நாடுகளும் இருந்தன. எல்லாம் மூடி மறைக்கப்பட்டு இருந்தன. கிட்டத்தட்ட இதே பொருளாதார சரிவு எண்பது வருடங்கள் முன்னர் ஏற்பட்டது எனவும், இருபது வருடங்கள் முன்னால் ஏற்பட்டது எனவும் சொல்லப்படுகிறது. ஆனால் கடன் பட்ட நாடுகள் என்றுதான் இருந்து வந்தது.

எனது நிலத்தில் விளைந்த தக்காளியும், மற்றொருவர் நிலத்தில் விளைந்த தக்காளியும் ஒரே விலை தான். ஆனால் ஒரு நிறுவனத்தில் உருவாகும் வாகனமும், மற்றொரு நிறுவனத்தில் உருவாகும் வாகனமும் விலை வெவ்வேறு. இதுபோன்ற போட்டியாளர்களின் செயல்பாட்டினால் பொருளாதாரம் சீர் குலைகிறது.

இந்த விசயத்தை மிகவும் எளிதாக சொல்லிவிட இயலாது. எப்படி குவாண்டம் மெக்கானிக்ஸ் இயற்பியலில் பெரிதாக பேசப்படுகிறதோ, எப்படி இந்த பூமியில் மற்றும் உயிரினங்கள் எவ்வாறு தோன்றின என்பது குறித்த விசயங்கள் விவாதிக்கப்படுகின்றனவோ அது போல இந்த பொருளாதாரம் குறித்த விசயங்கள் பல நிபுணர்களால் அலசி ஆராயப்படுகிறது.

குவாண்டம் கொள்கையும், உயிர் தோன்றியது எவ்வாறு என்பது கடினமாக இருக்கலாம், ஆனால் இந்த பொருளாதாரம் அத்தனை கடினமானதா?

இந்த பொருளாதாரம் குறித்த முழு சிந்தனையும் அலசுவோம், வாருங்கள்.
ஒரு நாட்டின் பொருளாதாரத்தை தீர்மானிப்பது யார், எது? 

Wednesday, 12 October 2011

திருச்சியில் சுயேச்சை போட்டியாளர் வெற்றி

சட்டசபை தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் நாளான 20ம் தேதிக்கு பின்னர் இப்படியொரு செய்தியை படித்தால் தமிழகத்தில் உள்ள மக்களின் மனநிலை எப்படி இருக்கும்? 

மக்களின் நலனை மட்டுமே கருதி 'தோற்றுப் போய்விடுவோம்' என தெரிந்தும் 'தனது பணம் வீணாகும், என புரிந்தும் மக்கள் இந்த அரசியல் கட்சிகளை ஓரம் கட்டமாட்டார்களா என ஒவ்வொரு தொகுதியில் நம்பிக்கையுடன் போட்டியிடும் உண்மையான நேர்மையான சுயேச்சை வேட்பாளர்களை அடையாளம் கண்டுபிடித்து அவர்களை எல்லாம் ஒருங்கிணைத்து வெற்றி பெற செய்ய கூடிய ஒரு அமைப்பு தோன்ற வேண்டும். இது ஒரு மாநிலத்தில் மட்டுமல்ல அனைத்து மாநிலங்களிலும் பரவ வேண்டும். இதுதான் நான் கொண்டிருக்கும் கனவு. 

அப்படிப்பட்ட மக்களின் நலம் சார்ந்த ஒரு அமைப்பினை உருவாக்கும் பொறுப்பு 'அரசியல்' சாராத, குறுக்கு நெடுக்கு அரசியல் நடத்த விரும்பாத தமிழ் பதிவர்களிடம் உருவாக வேண்டும். இப்படி போன்ற அமைப்பிற்கு மக்களின் ஆதரவை திரட்ட வேண்டும். அது எப்படி சாத்தியம்? உள்குத்து இல்லாத, உண்மையாகவே சமூக அக்கறையுடன் போராடக் கூடிய, நான் பெரிதா, நீ பெரிதா என்கிற பாரபட்சம் பார்க்கும் மன நிலையில் இல்லாத பதிவர்கள் இந்த விசயத்தை தொடங்க வேண்டும்.  நமக்கெல்லாம் அரசியல் எதற்கு என்கிற மனோபாவம் தொலைத்து மக்களின் நலனுக்காக போராடும் குணம் தமிழ் பதிவர்களிடம் உருவாக வேண்டும். இப்படி தமிழ் பதிவர்களின் பார்வையானது பலமாக சமூகத்தில் படும்போது அதற்குரிய மாற்றத்தை உருவாக்கும் திறன் நிச்சயம் வளரும். 

புத்தகம் வெளியிடும் பதிவர்கள் ஒவ்வொருவரும், தங்களது இந்த முயற்சியை புத்தகத்தில் குறிப்பிட்டு மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். இதோ பதிவர்களால், பதிவர்களுடன் கூட்டு சேர்ந்துள்ள யுடான்ஸ் தொலைக்காட்சி இது போன்ற விசயங்களை மக்களுக்கு எளிதாக கொண்டு செல்ல வேண்டும். இதற்குரிய முயற்சியை, இதுவரையிலும் வேறு கட்சிகளில் தொடர்பு இருந்தாலும் அதை அறுத்து எறிந்து விட்டு, ஒரு நடிகரின், நடிகையின் ரசிகனாக இருந்தாலும் அதோடு நிறுத்திவிட்டு, கையில் எடுக்க வேண்டும். இந்த எழுத்து போராட்டம், வாசிப்பவர்களின் மனதில் புது வேகத்தை கொடுக்க வேண்டும். 

பதிவர்களிடையே இருக்கும் வேற்றுமை எண்ணங்கள் மறைந்து மக்களின் நலனுக்காக பாடுபடும் அமைப்பை இந்த உலகமெல்லாம் இருக்கும் தமிழ் பதிவர்கள் தொடங்கியே தீர வேண்டும். நோக்கம் மக்களின் நலன். போராட்டம் மக்களின் நலன். இதுதான் தீர்மானம். ஒரு விதை இருளில் இருந்துதான் முளைக்கிறது. மாபெரும் கும்மிருட்டில் இந்த விதையை தூவுகிறேன். 

 பத்து இருபது படங்களில் நடிக்கும் ஒரு நடிகரோ, நடிகையோ கட்சி ஆரம்பித்தால் அதற்கு ஆதரவு தரும் இந்த மக்கள் தங்களுக்கென போராட ஒரு அமைப்பு இருக்கிறதென உணர வேண்டும். வெறும் பேருக்கென இருக்கும் இலக்கிய அமைப்புகள் பற்றியோ, வெட்டி சவாடல் விடும் அமைப்புகள் பற்றியோ நாம் இங்கு பேசவில்லை. அது போன்ற அமைப்புகள் இருப்பவர்கள் மக்களின் நலன் கருதி உண்மையாக போராட வேண்டும். ஒரு எழுச்சியை நம்மால் உருவாக்க இயலும். 

இதோ பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் பேசுகிறார், திராவிட கட்சிகளை அழிப்பதே அவரது கட்சியின் நோக்கமாம். அட, மக்களுக்கு பாடுபடுவதுதானே கட்சியின் நோக்கமாக இருக்க வேண்டும். எந்த நோக்கத்திற்காக கட்சி ஆரம்பித்தேன் என்பது கூட இத்தனை வருசம் தெரியாமல் இப்படி உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதற்காக வீர வசனம் பேசி திரியலாமா? 

இதோ தே மு தி க தலைவர் ஊரெல்லாம் மக்களுடன் கூட்டணி என பேசுகிறார். அட, மக்களுடன் கூட்டணி, என்ன மக்களுடன் கூட்டணி, எதற்காக கட்சி ஆரம்பித்தீர், என்ன நோக்கம், என்ன கொள்கை என்பது குறித்து அல்லவா பேச வேண்டும். எதற்கெடுத்தாலும் அதை இலவசமாக தருவேன், இதை இலவசமாக தருவேன். தனியாக போட்டியிடுவேன் எனும் வீர வசனம் எதற்கு? இலவசமாக கொடுக்க பணத்தை எங்கே இருந்து எடுப்பீர்களோ? இதை கூட சிந்திக்கும் திறன் இழந்த மக்களை அல்லவா உருவாக்கி வைத்து இருக்கிறீர்கள். விசுவாத்தின், நம்பிக்கையின் அடிப்பைடயில் நலிந்து போன மக்கள் ஐயா, நலிந்து போன மக்கள். 

இவர் எப்பொழுது கட்சி தலைமைக்கு வந்தார்? எதற்கு தி மு க கட்சி தொடங்கப்பட்டது என்பதெல்லாம் பேசி பேசியே திரைப்படங்களில் ஆஹோ ஓஹோ என வசனம் எழுதியே அரசியல் நடத்திய தி மு க தலைவர். எல்லா வேலைக்கும் ஒரு குறிப்பிட்ட வயதில் கட்டாய ஓய்வு கொடுத்து விடுவார்கள். ஆனால் அரசியலில் மட்டும் அப்படிப்பட்ட ஓய்வு எல்லாம் இல்லை, எதற்கு தெரியுமா கழக தலைவரே? உங்களுக்கு கலிங்கத்து பரணி எல்லாம் அத்துப்படி, பல விசயங்கள் பசுமையாக இருக்கும் உங்கள் நினைவினை திரும்பி பாருங்கள். மக்களின் சேவைக்கு ஓய்வு என்பதே கூடாது என்பதற்காகத்தான். இதுநாள் காறும் என்ன செய்தீர்கள் என்பதை யோசித்து பாருங்கள், பல விசயங்கள் உங்களை உறுத்தும், உறுத்த வேண்டும். 

அம்மா. அட பாவமே. அம்மா என மாடு அழைத்தால் கூட இவரைத்தான் அழைக்கிறது என்கிற தோரணை எல்லாம் கட்டப்பட்டு இருந்த காலம். மக்கள் தலைவர் என போற்றப்பட்ட ஒருவரின் உதவியின் மூலம் கொள்கை பரப்பு செயலாளார் எனும் பதவி கொண்டு பல இன்னல்களுக்கு இடையில் போராடி அ தி மு க எனும் அரசியல் கட்சியை அழிந்து போகவிடாமல் இன்று முதல் அமைச்சர் எனும் முக்கிய பதவியில் அமர்ந்து இருக்கிறார்கள். கொள்கை பரப்பு செயலாளர், நிச்சயம் கொள்கைகள் தெரிந்து இருக்க வேண்டும், ஆனால் கொள்கைகள் எல்லாம் காற்றில் பறந்து கொண்டிருக்கிறது. தி மு க வை தோற்கடிக்க அமைந்த கூட்டணி. மக்களின் நலனுக்கு அமையவில்லை கூட்டணி என்பதை ஐந்து மாத கால கட்டத்துக்குள் நிரூபித்தாகி விட்டது. 

மக்களே எதற்கு இன்னமும் யோசனை? 

இனிமேல் இதுவரை சுயநலத்துக்காகவே உருவாக்கப்பட்ட இது போன்ற கட்சிகளின் சார்பில் போட்டியிடும் எந்த வேட்பாளரும் வெற்றி பெறக் கூடாது என்கிற முழு தீர்மானம் மக்களிடம் எழ வேண்டும். மக்களின் நலனே முக்கியம் என பாடுபடும், நினைக்கும் இது போன்ற அரசியல் சார்ந்த கட்சிகளில் வேட்பாளாராக போட்டியிடும் வேட்பாளர்கள் கட்சியில் இருந்து விலகி மக்களை முறையாக அணுகி வெற்றி பெற வேண்டும். அல்லது இந்த அரசியல் கட்சிகள் மக்களுக்காக உண்மையாக பாடுபடுவோம் என்கிற உறுதியை எடுத்து செயலாற்ற வேண்டும். இனிமேலாவது மக்களுக்கென பாடுபடும் மக்களை அடையாளம் கண்டு கொண்டு அவர்களை வெற்றி பெற செய்ய வேண்டும். மக்களின் நலன் குறித்த சிந்தனை உடையவர்களே உண்மையான வேட்பாளர்கள் என்கிற எண்ணம் எழ வேண்டும். 

இது போன்ற எண்ணங்கள் எல்லாம் கனவுக்கும், கற்பனைக்கும் மிகவும் நன்றாக இருக்கும் என்பதுதான் இதுவரை உலகம் கண்ட வரலாறு. இந்த மாற்றத்தை ஏற்படுத்த மாபெரும் புரட்சி ஒன்றை எழுத்து மூலம் தொடங்கி வைப்போம். பின்னர் செயல்களில் முறைப்படுத்த முனைவோம்.