Wednesday 12 October 2011

திருச்சியில் சுயேச்சை போட்டியாளர் வெற்றி

சட்டசபை தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் நாளான 20ம் தேதிக்கு பின்னர் இப்படியொரு செய்தியை படித்தால் தமிழகத்தில் உள்ள மக்களின் மனநிலை எப்படி இருக்கும்? 

மக்களின் நலனை மட்டுமே கருதி 'தோற்றுப் போய்விடுவோம்' என தெரிந்தும் 'தனது பணம் வீணாகும், என புரிந்தும் மக்கள் இந்த அரசியல் கட்சிகளை ஓரம் கட்டமாட்டார்களா என ஒவ்வொரு தொகுதியில் நம்பிக்கையுடன் போட்டியிடும் உண்மையான நேர்மையான சுயேச்சை வேட்பாளர்களை அடையாளம் கண்டுபிடித்து அவர்களை எல்லாம் ஒருங்கிணைத்து வெற்றி பெற செய்ய கூடிய ஒரு அமைப்பு தோன்ற வேண்டும். இது ஒரு மாநிலத்தில் மட்டுமல்ல அனைத்து மாநிலங்களிலும் பரவ வேண்டும். இதுதான் நான் கொண்டிருக்கும் கனவு. 

அப்படிப்பட்ட மக்களின் நலம் சார்ந்த ஒரு அமைப்பினை உருவாக்கும் பொறுப்பு 'அரசியல்' சாராத, குறுக்கு நெடுக்கு அரசியல் நடத்த விரும்பாத தமிழ் பதிவர்களிடம் உருவாக வேண்டும். இப்படி போன்ற அமைப்பிற்கு மக்களின் ஆதரவை திரட்ட வேண்டும். அது எப்படி சாத்தியம்? உள்குத்து இல்லாத, உண்மையாகவே சமூக அக்கறையுடன் போராடக் கூடிய, நான் பெரிதா, நீ பெரிதா என்கிற பாரபட்சம் பார்க்கும் மன நிலையில் இல்லாத பதிவர்கள் இந்த விசயத்தை தொடங்க வேண்டும்.  நமக்கெல்லாம் அரசியல் எதற்கு என்கிற மனோபாவம் தொலைத்து மக்களின் நலனுக்காக போராடும் குணம் தமிழ் பதிவர்களிடம் உருவாக வேண்டும். இப்படி தமிழ் பதிவர்களின் பார்வையானது பலமாக சமூகத்தில் படும்போது அதற்குரிய மாற்றத்தை உருவாக்கும் திறன் நிச்சயம் வளரும். 

புத்தகம் வெளியிடும் பதிவர்கள் ஒவ்வொருவரும், தங்களது இந்த முயற்சியை புத்தகத்தில் குறிப்பிட்டு மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். இதோ பதிவர்களால், பதிவர்களுடன் கூட்டு சேர்ந்துள்ள யுடான்ஸ் தொலைக்காட்சி இது போன்ற விசயங்களை மக்களுக்கு எளிதாக கொண்டு செல்ல வேண்டும். இதற்குரிய முயற்சியை, இதுவரையிலும் வேறு கட்சிகளில் தொடர்பு இருந்தாலும் அதை அறுத்து எறிந்து விட்டு, ஒரு நடிகரின், நடிகையின் ரசிகனாக இருந்தாலும் அதோடு நிறுத்திவிட்டு, கையில் எடுக்க வேண்டும். இந்த எழுத்து போராட்டம், வாசிப்பவர்களின் மனதில் புது வேகத்தை கொடுக்க வேண்டும். 

பதிவர்களிடையே இருக்கும் வேற்றுமை எண்ணங்கள் மறைந்து மக்களின் நலனுக்காக பாடுபடும் அமைப்பை இந்த உலகமெல்லாம் இருக்கும் தமிழ் பதிவர்கள் தொடங்கியே தீர வேண்டும். நோக்கம் மக்களின் நலன். போராட்டம் மக்களின் நலன். இதுதான் தீர்மானம். ஒரு விதை இருளில் இருந்துதான் முளைக்கிறது. மாபெரும் கும்மிருட்டில் இந்த விதையை தூவுகிறேன். 

 பத்து இருபது படங்களில் நடிக்கும் ஒரு நடிகரோ, நடிகையோ கட்சி ஆரம்பித்தால் அதற்கு ஆதரவு தரும் இந்த மக்கள் தங்களுக்கென போராட ஒரு அமைப்பு இருக்கிறதென உணர வேண்டும். வெறும் பேருக்கென இருக்கும் இலக்கிய அமைப்புகள் பற்றியோ, வெட்டி சவாடல் விடும் அமைப்புகள் பற்றியோ நாம் இங்கு பேசவில்லை. அது போன்ற அமைப்புகள் இருப்பவர்கள் மக்களின் நலன் கருதி உண்மையாக போராட வேண்டும். ஒரு எழுச்சியை நம்மால் உருவாக்க இயலும். 

இதோ பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் பேசுகிறார், திராவிட கட்சிகளை அழிப்பதே அவரது கட்சியின் நோக்கமாம். அட, மக்களுக்கு பாடுபடுவதுதானே கட்சியின் நோக்கமாக இருக்க வேண்டும். எந்த நோக்கத்திற்காக கட்சி ஆரம்பித்தேன் என்பது கூட இத்தனை வருசம் தெரியாமல் இப்படி உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதற்காக வீர வசனம் பேசி திரியலாமா? 

இதோ தே மு தி க தலைவர் ஊரெல்லாம் மக்களுடன் கூட்டணி என பேசுகிறார். அட, மக்களுடன் கூட்டணி, என்ன மக்களுடன் கூட்டணி, எதற்காக கட்சி ஆரம்பித்தீர், என்ன நோக்கம், என்ன கொள்கை என்பது குறித்து அல்லவா பேச வேண்டும். எதற்கெடுத்தாலும் அதை இலவசமாக தருவேன், இதை இலவசமாக தருவேன். தனியாக போட்டியிடுவேன் எனும் வீர வசனம் எதற்கு? இலவசமாக கொடுக்க பணத்தை எங்கே இருந்து எடுப்பீர்களோ? இதை கூட சிந்திக்கும் திறன் இழந்த மக்களை அல்லவா உருவாக்கி வைத்து இருக்கிறீர்கள். விசுவாத்தின், நம்பிக்கையின் அடிப்பைடயில் நலிந்து போன மக்கள் ஐயா, நலிந்து போன மக்கள். 

இவர் எப்பொழுது கட்சி தலைமைக்கு வந்தார்? எதற்கு தி மு க கட்சி தொடங்கப்பட்டது என்பதெல்லாம் பேசி பேசியே திரைப்படங்களில் ஆஹோ ஓஹோ என வசனம் எழுதியே அரசியல் நடத்திய தி மு க தலைவர். எல்லா வேலைக்கும் ஒரு குறிப்பிட்ட வயதில் கட்டாய ஓய்வு கொடுத்து விடுவார்கள். ஆனால் அரசியலில் மட்டும் அப்படிப்பட்ட ஓய்வு எல்லாம் இல்லை, எதற்கு தெரியுமா கழக தலைவரே? உங்களுக்கு கலிங்கத்து பரணி எல்லாம் அத்துப்படி, பல விசயங்கள் பசுமையாக இருக்கும் உங்கள் நினைவினை திரும்பி பாருங்கள். மக்களின் சேவைக்கு ஓய்வு என்பதே கூடாது என்பதற்காகத்தான். இதுநாள் காறும் என்ன செய்தீர்கள் என்பதை யோசித்து பாருங்கள், பல விசயங்கள் உங்களை உறுத்தும், உறுத்த வேண்டும். 

அம்மா. அட பாவமே. அம்மா என மாடு அழைத்தால் கூட இவரைத்தான் அழைக்கிறது என்கிற தோரணை எல்லாம் கட்டப்பட்டு இருந்த காலம். மக்கள் தலைவர் என போற்றப்பட்ட ஒருவரின் உதவியின் மூலம் கொள்கை பரப்பு செயலாளார் எனும் பதவி கொண்டு பல இன்னல்களுக்கு இடையில் போராடி அ தி மு க எனும் அரசியல் கட்சியை அழிந்து போகவிடாமல் இன்று முதல் அமைச்சர் எனும் முக்கிய பதவியில் அமர்ந்து இருக்கிறார்கள். கொள்கை பரப்பு செயலாளர், நிச்சயம் கொள்கைகள் தெரிந்து இருக்க வேண்டும், ஆனால் கொள்கைகள் எல்லாம் காற்றில் பறந்து கொண்டிருக்கிறது. தி மு க வை தோற்கடிக்க அமைந்த கூட்டணி. மக்களின் நலனுக்கு அமையவில்லை கூட்டணி என்பதை ஐந்து மாத கால கட்டத்துக்குள் நிரூபித்தாகி விட்டது. 

மக்களே எதற்கு இன்னமும் யோசனை? 

இனிமேல் இதுவரை சுயநலத்துக்காகவே உருவாக்கப்பட்ட இது போன்ற கட்சிகளின் சார்பில் போட்டியிடும் எந்த வேட்பாளரும் வெற்றி பெறக் கூடாது என்கிற முழு தீர்மானம் மக்களிடம் எழ வேண்டும். மக்களின் நலனே முக்கியம் என பாடுபடும், நினைக்கும் இது போன்ற அரசியல் சார்ந்த கட்சிகளில் வேட்பாளாராக போட்டியிடும் வேட்பாளர்கள் கட்சியில் இருந்து விலகி மக்களை முறையாக அணுகி வெற்றி பெற வேண்டும். அல்லது இந்த அரசியல் கட்சிகள் மக்களுக்காக உண்மையாக பாடுபடுவோம் என்கிற உறுதியை எடுத்து செயலாற்ற வேண்டும். இனிமேலாவது மக்களுக்கென பாடுபடும் மக்களை அடையாளம் கண்டு கொண்டு அவர்களை வெற்றி பெற செய்ய வேண்டும். மக்களின் நலன் குறித்த சிந்தனை உடையவர்களே உண்மையான வேட்பாளர்கள் என்கிற எண்ணம் எழ வேண்டும். 

இது போன்ற எண்ணங்கள் எல்லாம் கனவுக்கும், கற்பனைக்கும் மிகவும் நன்றாக இருக்கும் என்பதுதான் இதுவரை உலகம் கண்ட வரலாறு. இந்த மாற்றத்தை ஏற்படுத்த மாபெரும் புரட்சி ஒன்றை எழுத்து மூலம் தொடங்கி வைப்போம். பின்னர் செயல்களில் முறைப்படுத்த முனைவோம். 


Monday 10 October 2011

போங்காட்டம் (சவால் சிறுகதை - 2011)


சனிக்கிழமை காலையில் எழுந்து தனது மிதி வண்டியில் வெகுவேகமாக தன்னிடம் இருந்த புகைப்படத்தை எடுத்துக் கொண்டு ரமேஷ், மனோகரின்  வீட்டிற்குப் போனான். வீடு பூட்டப்பட்டு இருந்தது. மனோகரின்  செல்பேசிக்கு பக்கத்தில் இருந்த ஒரு கடையில் இருந்து அழைப்பு விடுத்துப் பார்த்தான். செல்பேசியின் அழைப்பு சத்தம் மறுமுனையில் கேட்டுக் கொண்டே இருந்தாலும் எவரும் எடுத்து பேசவில்லை. கையில் வைத்திருந்த புகைப்படத்தை உற்று நோக்கியவாறே நின்று கொண்டிருந்தான் ரமேஷ்.

மீண்டும் செல்பேசியில் மனோகரை தொடர்பு கொண்டான் ரமேஷ். மனோகர் செல்பேசியை எடுத்தான்.

 'டேய் மனோகர், எங்க இருக்க? சீக்கிரமா வீட்டுக்கு வரியா, நான் உன் வீட்டு பக்கத்துலதான் இருக்கேன்'

'என்னடா அவசரம், இப்பதான் கடைக்கு சாப்பிட வந்தேன்'

'எந்த கடையில இருக்க'

'விஷ்ணு ஹோட்டல், மேலப்புதூர்.

'ஏண்டா, இங்க இருக்கறது எல்லாம் கடையா தெரியலையா, அங்க சாப்பிட போகனுமா?'

'நீயும் வாடா, உனக்கும் சேர்த்து ஆர்டர் பண்றேன்'

'சரி பூரியும், பொங்கலும் சொல்லு'

ரமேஷ் விஷ்ணு ஹோட்டல் சென்று அடையும் போது ஹோட்டலின் வெளியில் மனோகர் காத்துக் கொண்டிருந்தான்.

'என்னடா ஆர்டர் பண்ணலையா?'

'ஆறிப்போகும்னு ஆர்டர் பண்ணலை, என்ன என்னை தேடி வந்திருக்க என்ன விசயம்?'

'சொல்றேன், சாப்பிடலாமா?' ஹோட்டலைப் பார்த்ததும் சாப்பிட வேண்டும் எனும் வேகம் ரமேஷிடம் அதிகமாகவே இருந்தது.

'சரி வா சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்'

விஷ்ணு ஹோட்டல் மிகவும் பளிச்சென இருந்தது. இங்கே அசைவம், சைவம்  பரிமாறப்படும். இந்த ஹோட்டலுக்கு மனோகர் அவ்வப்போது வந்து சாப்பிட்டு செல்வது வழக்கம். ரமேஷ் ஹோட்டலை வெளிப்புறம் மட்டுமே பார்த்து சென்று இருக்கிறான். அருகில் ஒரு அருமையான மைதானம் இருக்கிறது, அங்கே சிறுவர்கள் விளையாடி மகிழ்வார்கள்.

ஹோட்டலுக்குள் நுழைந்ததும் ஒரு ஓரமாக இருந்த மேசைக்கு சென்று அமர்ந்தான் மனோகர்.

'உட்காருடா, இதுதான் நான் வந்தா எப்பவும் உட்காருற இடம், அதுவும் காலியா இருந்தா'

ரமேஷ் மனோகருக்கு எதிராக அமர்ந்தான். அவர்கள் அமர்ந்த அடுத்த நிமிடம் என்ன சாப்பிட வேண்டும் என பணியாளர் வந்து நின்றார். ஒவ்வொன்றாக சொல்லி அவரை அனுப்பினான் மனோகர்.

'இன்னைக்கோட உன்னோட பழகி ஆறு மாசம் ஆகப்போகுதுடா மனோகர், இந்த மதுரைக்கு வந்து இறங்கின மறு நிமிஷம் பணத்தை தொலைச்சி நின்னப்ப, யாரு என்ன அப்படினு விசாரிக்காம பணம் கொடுத்து உன்னோட செல்பேசி, அட்ரஸ் எல்லாம் கொடுத்து பழகினதை இன்னும் மறக்கமுடியலை, அந்த ஐநூறு ரூபாய நிச்சயம் திருப்பி கொடுத்துருறேன்'

'நானே இந்த ஊருக்கு வந்து ஒன்றரை வருஷம்தான் ஆகுது, ஏண்டா பாக்கறப்ப எல்லாம் இதைப் பேசி என்ன பெரிய தியாகி லெவலுக்கு கொண்டு போற, அந்த பணத்தை விடுடா, நீ என்னைய பாக்க வந்த காரணத்தை சொல்லு'

'இந்தாடா இந்த புகைப்படத்தைப் பாரு'

'அட, ரொம்ப நல்லா இருக்கே, யாருடா அந்த படத்துல, நீயா?'

'இல்லைடா, இந்த படத்தில இருக்கறதை வைச்சி கதை எழுதனுமாம், எழுதி தருவியா?'

'இதுக்குத்தான் இந்த காலையிலே என்னை தேடி வந்தியா'

'டேய் எழுதிக் கொடுடா, முதல் பரிசு பத்தாயிரம் ரூபாய்டா'

பணியாளர் தண்ணீர் கொண்டு வைத்து போனார்.

'இந்த படத்தைப் பாக்கறப்ப யாரோ ஒருத்தனை அவனுக்கே தெரியாம படம் எடுத்து இருக்காங்கடா'

'டேய் மனோகர், இது கதை எழுதுரதுக்காக எடுத்த படம்டா'

'இருக்கட்டும்டா, ஆனா இந்த படத்துல இருக்கற விசயம் சிலிர்ப்பா இருக்குடா, கவலை வேண்டாம் அப்படினு எப்பவும் உபயோகிப்பான் போலடா அந்த ஆளு'

'ஒரு கிரைம் கதை எழுதுடா, அதுல sir எஸ் பி கோகுலிடம் நான் தவறான குறியீட்டைத்தான் கொடுத்திருக்கிறேன், கவலை வேண்டாம் விஷ்ணு அப்படினும், Mr. கோகுல் S W H2 6F இதுதான் குறியீடு, கவ விஷ்ணு அப்படினு போட்டுருக்குலடா'

அப்பொழுது பணியாளர் பூரி, இட்லி பொங்கல் என கொண்டு வந்து வைத்துப் போனார்.

'சரி எழுதி தரேன், சாப்பிடு'.

ரமேஷ் இரட்டிப்பு சந்தோசத்துடன் சாப்பிட்டான். சாப்பிட்டுவிட்டு கடையில் பணத்தை கட்ட சென்றபோது கல்லாவில் இருந்த முதலாளி அதுக்கென்ன இப்போ கவலை வேண்டாம் என முன்னால் பணம் கட்டியவரிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

'இந்த படத்துக்கு நீ கதை எழுதி கொடுத்து முத பரிசு எனக்கு கிடைச்சா, ஊருக்கு அனுப்பி வைச்சிருவேண்டா' என்றான் ரமேஷ்.

'சரிடா, கவலைய விடு' என்றவன்

'விஷ்ணு ஹோட்டல் அப்படின்னு பேரு வைச்சிருக்கீங்க, என்ன காரணம் சார்' என ஹோட்டல் முதலாளியிடம் கேட்டான் மனோகர்.

'என் பேரைத்தான் வைச்சிருக்கேன், அதைப்பத்தி உங்களுக்கு கவலை வேண்டாம்' என்றார் ஹோட்டலின் முதலாளி.

'இந்தப் படத்தை பாருங்க' என்றான் மனோகர்.

'இந்தப் படம் எங்க கிடைச்சது, நீங்க யாரு' என்றார் ஹோட்டல் முதலாளி.

'நாங்க சுந்தரம் மோட்டார்ஸ்ல வேலைப் பாக்கறம். இண்டர்நெட்டுல இருக்கிற இந்தப் படத்தை வைச்சி ஒரு கதை எழுதணுமாம்' என்றான் மனோகர்.

'முத்து வந்து கல்லாவைப் பாத்துக்கோடா, யாராச்சும் வந்தா நான் வெளிய போயிருக்கேன்னு சொல்லு ' என்றவர்

'நீங்க ரெண்டு பெரும் என்னோட வாங்க' என ஹோட்டலில் மேலிருந்த மாடிக்கு அவர்களை அழைத்து சென்றார், ஹோட்டல் முதலாளி விஷ்ணுவரதன். கணினியை இயக்கினார்.

'இது ஒரு எழவு, ரொம்ப மெதுவாத்தான் திறக்கும், அந்த எஸ் பி கோகுல் எப்போ வருவானோ, சிக்கலுல மாட்டிகிட்டேனே'

'என்ன சார் சிக்கலு, சொல்லுங்க'

'இரண்டு வருஷம் முன்னாடிதான் இந்த ஹோட்டலை எஸ் பி கோகுல்கிட்ட நான் வாங்கினேன்.'

'எந்த ஊரு எஸ் பி சார்?

'அவன் எஸ் பி இல்லை, அவன் பேரு எஸ் பி கோகுல், சாத்தூர் பாலசுப்ரமணி கோகுல் அதைத்தான் அவன் சுருக்கி எஸ் பி கோகுல் அப்படினு வைச்சிகிட்டேனு சொல்வான், அதைப்பத்தி இப்போ கவலை வேண்டாம்'

கணினி திறந்தது. மின்னஞ்சல் பக்கத்துக்கு சென்றார்.

'அப்பாடா, குறியீடு பத்தி ஒன்னும் பதில் காணோம்'

'ஒன்னும் புரியலையே சார், என்ன சார் குறியீடு?'

'நீங்க பாத்த இண்டர்நெட்டு பக்கத்தை காட்டுங்க, படத்தை யார் எடுத்தது, எங்க எடுத்தது எல்லாம் தெரியணும், இந்த படத்தை நீக்க சொல்லணும்'

'சார் மொத்த விபரமும் சொன்னா நாங்க உங்களுக்கு உதவி பண்றோம்' என்றான் மனோகர்.

'என்கிட்டே கடைய வித்துட்டுப் போன எஸ் பி கோகுல் அப்போ அப்போ இந்த கடைக்கு வருவான். ஆறு மாசமா தல்லாகுளம் குமாரோட சேர்ந்து தங்கம் வியாபாரம் செய்ய ஆரம்பிச்சேன். வர கஷ்டமர்கிட்ட பேசி கலப்பட தங்கம் வித்துருவேன் நாக்கு குழருது என எச்சில் விழுங்கியவராய் கலக்கலா ரொம்ப தங்கம் வித்துருவேன்.  இதனால குமாருக்கு என் மேல மரியாதை. ரொம்ப முக்கியமானவங்களுக்கு மட்டும் ஒரு குறியீடு கொடுப்பேன், அதை சொன்னாத்தான் குமார் நல்ல தங்கம் முக்கால்வாசி விலைக்குத் தருவான்' இதை தெரிஞ்ச இந்த எஸ் பி கோகுல் போன வாரம் தங்கம் வேணும்னு கேட்டான். நான் சரினு சொன்னேன், ஆனா எனக்கு இந்த எஸ் பி கோகுல் கொஞ்சம் கூட பிடிக்காது.

நேத்துதான் நான் எஸ் பி கோகுலுக்கு, Mr. கோகுல் S W H2 6F இதுதான் குறியீடு, கவலை வேண்டாம் அப்படினு அனுப்புனேன். அதை அப்படியே குமாருக்கும்  அனுப்பிட்டு, அடுத்த மெயிலுல sir எஸ் பி கோகுலிடம் நான் தவறான குறியீட்டைத்தான் கொடுத்திருக்கிறேன், கவலை வேண்டாம் அப்படினு அனுப்பிட்டு குமாருக்கு போன் போட்டேன். அவன் 'விஷ்ணு இன்பார்மர்' அப்படினுதான் என் பேரை அவன் மொபைலுல போட்டுருப்பான்.

இந்த இரண்டு விசயத்தையும் அவன் பாத்துட்டு இருந்தப்பதான் யாரோ அவனை படம் எடுத்து இப்படி செஞ்சி இருக்காங்க. இப்ப காட்டுங்க எங்க அந்த பக்கம்'.

'ரமேஷ் காட்டுடா'

ரமேஷ் இணையம் திறந்தான். 'ஒரு பத்தாயிரம் ரூபா கொடுங்க சார், எல்லாத்தையும் அழிச்சிரலாம்' என்றான் மனோகர்.

'எதுக்கு அவ்வளவு பணம்?'

'தாங்க, இல்லைன்னா பிரச்சினை பெரிசாயிரும், சார் பாலாவை எனக்கு தெரியும், அவன்தான் இந்த இணையதள உரிமையாளர், இருங்க கூப்பிடுறேன் என செல்பேசியில் அழைத்தான் மனோகர். பாலா அப்பொழுதே வருவதாக சொன்னான்.

விஷ்ணுவரதன் பணத்தை எண்ணி கொடுத்தார். பின்னர் மூவரும் கீழே வந்தார்கள்.

இவர்கள் கீழே வருவதற்கும் பாலா அங்கே நிற்பதற்கும் சரியாக இருந்தது.

'ஐ ஆம் எஸ் பி கோகுல், சாரி ஐ ஆம் எம் எல் பாலா' என கையை நீட்டினான். விஷ்ணுவரதன் 'நான் தான் விஷ்ணு' என கையை நீட்டினார்.

மனோகர் எல்லா விபரங்களும் சுருக்கமாக சொன்னான். 'கவலை வேண்டாம் சார், எல்லாத்தையும் அழிச்சிருவோம்' என விஷ்ணுவரதன் முன்னரே அனைத்தையும் அழித்தான் பாலா.

 பின்னர் வெளியில் வந்தார்கள்.

'எப்படிடா அந்த படம் உனக்கு கிடைச்சது' என்றான் மனோகர்.

'எல்லாம் தல்லாகுளம் குமாரும், எஸ் பி கோகுலும் நானும் சேர்ந்து செஞ்சதுடா. இந்த விஷ்ணு ரொம்ப மோசமானவன், இவனால குமாருக்கு ரொம்ப கெட்ட பேரு. இவனாலதான் இந்த ஹோட்டலையே விற்கிற நிலைமைக்கு எஸ் பி கோகுலு போனான். இவனை எப்படி பிஸினஸ்ல இருந்து கழட்டி விடலாம்னு யோசனை பண்ணினப்ப நாங்க சேர்ந்து தீட்டின திட்டம் இது. நல்லாவே வொர்க் அவுட் ஆயிருச்சி. இனி குமார் மத்ததைப் பார்த்துப்பான்' என்றான் பாலா.

'படத்தை எடுத்தீட்டீங்க, கதை எழுதற நினைக்கிறவங்க கதி?' என்றான் ரமேஷ்.

'அதோகதிதான்' என சிரித்தான் பாலா.

'இந்தாடா ரமேஷ், பத்தாயிரம் வைச்சிக்கோ, கதை எழுதாமலேயே உனக்கு பரிசு கிடைச்சிருச்சி' என்றான் மனோகர்.

அருகில் இருந்த மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுவன் 'சரியான போங்காட்டம்டா' என மற்ற சிறுவர்களை நோக்கி சத்தம் போட்டு கொண்டிருந்தான்.





Friday 7 October 2011

வாகை சூட வா

தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட காலத்தில் என்ன சொல்வது? படம் வெளியாகி  அனல் குறையாத பட்சத்தில் கொஞ்சம் கூட பிசகு இல்லாமல், தரம் குறையாமல் படத்தினை இணையத்தில் வெளியிட்டுவிடுகிறார்கள். இதன் காரணமாக திரையரங்குக்கு சென்று படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறைகிறது என்பதோடு இதனால் கணிசமான லாபத்தை படத் தயாரிப்பாளர்கள் முதற்கொண்டு திரையரங்கு முதலாளிகள் என பலரும் இழந்து விடுகிறார்கள்.

அதோடு மட்டுமில்லாமல் திருட்டு குறுந்தகடு என படங்கள் வெகு எளிதாகவே கிடைத்துவிடுகின்றன. இத்தனை இடர்பாடுகளுக்கு இடையில் ஒரு நல்ல திரைப்படம் அதுவும் பெரிய பெரிய நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என இல்லாமல் உருவாக்கப்படும்போது மக்களுக்கு மத்தியில் நல்ல பெயரை எடுத்தாலும் பெரிய அளவில் வியாபாரம் செய்ய இயலாமல் போவது மிகவும் துரதிர்ஷ்டமானது. இதை தடுக்கும் முயற்சிகள் என மேற்கொண்டாலும் எப்படியாவது இந்த நிகழ்வுகள் நடந்தேறி விடுகின்றன.

இலவசமாக கிடைக்கிறது என்றால் எவருக்குத்தான் கொண்டாட்டம் இருக்காது. மேலும் இலவசம் இலவசம் என பலவற்றை கொடுத்து மனிதர்களை பிச்சைகாரர்களாக்கி வைத்திருக்கும் அரசு எல்லா நாடுகளிலும் அதிகமாகவே இருக்கத்தான் செய்கிறது. பொருளை இலவசமாக கொடுப்பதை விட, கல்வியை இலவசப்படுத்தும் வசதியை உலகில் உள்ள எல்லா நாடுகளும் கொண்டு வர இயலுமா என்றால் அது அத்தனை சாத்தியமில்லை.

கல்வியை கற்பிக்கும் ஆசிரியருக்கு பணம் எங்கிருந்து வரும்? கல்வியை கற்று தரும் பள்ளிக் கூடங்கள் கட்ட பணம் எங்கிருந்து வரும் என ஒட்டு மொத்த தமிழகமும் கல்வியை மாபெரும் வியாபார கூடங்களாக மாற்றி வைத்திருப்பது இன்று நேற்றல்ல பல வருடங்களாகவே நடந்து கொண்டுதான் வருகிறது. பணம் இருந்தால் படிப்பு என்றாகிப் போனது. கல்வியா, செல்வமா, வீரமா என கேட்கப்பட்ட நாட்களிலிருந்து ஒன்றில்லாமல் மற்றொன்று நிலைப்பது கடினம் என சொன்னாலும் பொருளாதாரத்தில் பின் தங்கிப் போனால் இவ்வுலகம் இல்லை என்பதுதானே நிதர்சனம். இரண்டாயிரம் வருடங்கள் முன்னரே இந்த நிலைமைதான், பொருளிளார்க்கு இவ்வுலகம் இல்லை.

வாகை சூட வா எனும் ஒரு அழகிய தமிழ் திரைப்படம். காலம் காலமாக சொல்லப்பட்டு வரும் 'அடிமைபட்டுப் போன மக்கள்'. இந்த மக்களின் உழைப்பை சுரண்டும் முதலாளிகள். வயிற்றுப் பிழைப்புக்காக வாழும் மக்களிடம் போராட்ட குணம் இருப்பதில்லை, அடிமைபடுத்தபட்டு இருக்கிறோம் என்கிற ஒரு எண்ணம எழுவதில்லை. ஆனால் விசுவாசம் மட்டுமே மிஞ்சி இருக்கும். அத்தகைய விசுவாசத்தினை தனது வசமாக்கி கொள்ளும் முதலாளிகள் மட்டுமே மிச்சம்.

ஒரு திரைப்படம் எப்படி எடுக்க வேண்டும், எப்படி எடுக்க கூடாது என்கிற வரைமுறை எல்லாம் எவருக்கு வேண்டும் என்கிற தமிழ் திரைப்பட உலகில் இதுபோன்ற திரைப்படங்கள் அவ்வப்போது தலைகாட்டுவது மிகவும் சிறப்பான விசயம் தான்.

இந்த படத்தை பார்க்கும்போது இது போன்ற கிராமங்கள் இன்னும் இருக்கின்றனவா என்று கேட்டால் ஆமாம் என்று தைரியமாக சொல்லலாம். அங்கொன்று இங்கொன்றுமாக அடிப்படை வசதிகள் எதுவுமின்றி இருக்கத்தான் செய்கின்றன. படத்தின் காலகட்டம் வேறாக இருந்தாலும் இன்னும் குழந்தை தொழிலாளிகளை சுமந்து கொண்டிருக்கும் கிராமங்கள் மிகவும் அதிகம். எதற்கும் பனியன் விற்கும் தொழிற்சாலை நகரத்திற்கோ, பட்டாசு தொழில் அதிபோகமாக நடக்கும் சிவகாசி சுற்றியுள்ள ஊருக்கோ சென்று வந்தால் தெரியும்.

'காசு வித்து பாத்துராதண்ணே' என ஒரு செங்கல் சுமக்கும் சிறுமியின் ஓலத்தை ஒரு கவிதையில் எழுதியது இன்னமும் ரணமாகவே இருக்கிறது. இப்படி வறுமையில், அறியாமையில் தவிக்கும் குழந்தைகளை நினைக்கும்போது ஒவ்வொரு மனமும் என்னத்த சம்பாதிச்சி சாதிச்சோம் என நினைத்தாலும் திரைப்படம் முடிந்துவிடும்போது எல்லாம் முடிந்தது போலாகி விடுகிறது.

அழகாக கதாபாத்திரங்களை கையாண்டு இருக்கும் இயக்குனரை மிகவும் பாராட்டலாம். பழைய கணக்கு எல்லாம் தொலைந்து போய்விட்டது. விடுகதை, கணக்கு கதை என மிகவும் அதி புத்திசாலிகளாக பலர் அன்றைய காலகட்டத்தில் எவ்வித தொழில் நுட்பம் இன்றி இருந்தது உண்டு. மிகவும் சிந்திக்க வைக்கும் செயல்களை செய்தார்கள். இந்த திரைப்படத்தில் காட்டப்படும் ஒரு வயதான கதாபாத்திரம் போன்ற மனிதர்கள் வாழ்ந்தார்கள், அவர்கள் இன்னமும் எங்கேனும் இருக்க கூடும் அல்லது நாம் தொலைத்து விட்டிருக்க கூடும். அரைக்கால், முக்கால், அரையணா என பல விசயங்கள் நம்மை விட்டு தொலைந்து போனது, நமது கலாச்சாரம் தொலைந்து கொண்டிருப்பதை போல.

நகைச்சுவை என திரைப்படத்தில் தனி கதாபாத்திரம் என வைக்கப்படும் பெரும்பாலான திரைப்படங்களை விட, எல்லா கதாபாத்திரங்களுக்குள் நகைச்சுவை உண்டு என்று மிகவும் அழகாக சொன்னவிதம் பாராட்டலாம். எப்பொழுதுமே சிறுவர்கள் நடிக்கும் படங்கள் பெரியவர்களின் மனதினை ஒரு ஆட்டு ஆட்டி வைத்துவிட்டு போகும். உளவுரீதியாக நாம் அனைவரும் நமது பாலர் பருவ நிலைக்கு செல்லும் மனநிலை நம்மை சேர்வது உண்டு. நான் சின்னப்பையனா இருந்தப்போ... அந்த நினைவுகள் மிகவும் தாலாட்ட கூடியவை. இப்பொழுது இருக்கும் சிறுவர்களுக்கு அதுவும் குறிப்பாக நகர வாழ் சிறுவர்களுக்கு அந்த அனுபவம் குறைந்து போனதாகவே இருக்கும்.

அறிவாளியாக இருப்பதை விட ஏமாற்றப்படாத வெகுளியாக வாழ்வதில் இருக்கும் சுகம் தனி சுகமே. கதாநாயகன், கதாநாயகி என ஒரு மெல்லிய காதலை சுகமான பாடல் மூலம் வெளிப்படுத்தும் விதம் தனிச்சிறப்பு.

கிராம வளர்ச்சி என ஒரு சிறுகதை எழுதியபோது மனதில் ஏற்பட்ட வலி இந்த திரைப்படத்தினை பார்க்கும் போது வந்து போனது. ஒவ்வொரு படைப்பாளியும் தனக்குள் மாபெரும் ஏக்கத்தினோடு வாழ்ந்து கொண்டிருக்கிறான். அவனது ஏக்கங்கள் எழுத்து வடிவாகவோ, படங்கள் மூலமாகவோ வெளிப்பட்டு கொண்டிருக்கின்றன. ஆனால் பிரச்சினைகள் அத்தனை எளிதாக தொலைவதில்லை.

ஊருக்கெல்லாம் பள்ளிகள் கட்டிய காமராசர், படிக்க வா என பசி போக்கிய காமராசர்... இப்பொழுது பெரும்பாலானோர் பணம் கட்டி படிக்க வைக்கிறார்கள் எதை எதையோ தொலைத்துவிட்டு. இதனால் படித்தவர்கள் தங்களையே தொலைத்து விடுகிறார்கள்.

படத்தில் சொல்லப்படும் ஒரு வசனம் 'விவரம் கெட்டவன்' இந்த வாசகத்திற்காகவே தைரியமாக தான் நினைப்பதை செய்ய முடியாத பலர் பயந்து ஒதுங்கிப் போனார்கள்.

படிப்பறிவு அனைவரும் பெறட்டும், படிப்பறிவு என்பது என்ன என்பதை படித்தவர்களும் தெளியட்டும்.

இவ்வுலகம் இருளால் ஆனது, பொருள் எனும் இருளால் ஆனது. இந்த இருள் போக்கவேண்டிய கல்வியும் இருளில் மூழ்கிப் போனதுதான் இவ்வுலகம் கண்ட மாபெரும் துயரம்.

பாராட்டுகள். வாகை சூட வா. அழைத்து கொண்டே இருப்போம். எவரேனும் தென்படுகிறார்களா?