Monday 18 October 2010

இந்தியாவும் எழுத்துலக நண்பர்களும் 5

ஊட்டி செல்ல வேண்டாம், மூணாறு செல்லலாம் என முடிவு எடுத்தோம். கோயமுத்தூரில் உள்ள எனது சகோதரியின் வீட்டில் தான் முதன்முதலில் இந்தியாவுக்கு வந்த பின்னர் கணினியை தொட்டேன். மூணாறில் எங்கு தங்குவது என்பது குறித்தான தகவல்கள் பெற முயற்சித்தேன். அரை மணி நேரம் ஆகியும் எதுவும் முடிவு செய்ய இயலவில்லை. எனது பாவா மஹிந்திராவில் தங்கலாம் என யோசனை சொன்னார். கடைசியாக மூணாறு சென்று பார்த்து கொள்ளலாம் என கிளம்பினோம்.

இந்த கோயமுத்தூர். இந்த ஊரை சுற்றி எழுத்துலகில் இருக்கும் பல நண்பர்கள் இருக்கிறார்கள். எனது உறவுக்காரர்கள் இருக்கிறார்கள். இந்த முறையும் எவரையும் பார்க்காமல் சென்றது மனதில் வருத்தம் தான். அதிலும் குறிப்பாக நாமக்கலில் வசிக்கும் தினா. சென்றமுறை நாங்கள் இந்தியா சென்றபோது நட்பின் புதிய கோணம் பற்றி எனது மனதில் விதைத்து இருந்தார். இந்த முறை நாமக்கல்லோ, சேலமோ செல்லும் வாய்ப்பை உருவாக்கி கொள்ளவில்லை. இருப்பினும் ஒரு அழைப்பு கூடவா என்னால் அழைக்காமல் போக முடிந்தது. என்னை நானே பல கேள்விகள் கேட்டு கொள்கிறேன். அதிலும் குறிப்பாக ஏனிந்த சோம்பேறித்தனம்? ஏனிந்த புறக்கணிப்பு?

இந்த தருணத்தில் எனது மூத்த சகோதரரின் மகன் பற்றி சொல்லியாக வேண்டும். எனக்கு இந்தி தெரியாது என்பதாலும், கோவா சற்று ஆபத்துக்குரிய பகுதி என அவன் நினைத்ததாலும் நாங்கள் கோவா செல்கிறோம் என தெரிந்ததும் மும்பையின் அருகில் வேலை பார்க்கும் அவனது அலுவலகத்திற்கு விடுமுறை போட்டு நாங்கள் கோவாவில் இருந்த போது எங்களுடன் இரண்டு நாட்கள் தங்கி இருந்தான். எனது மகனுக்கு அவன் வந்து இருந்தது மிகவும் சௌகரியமாக போய்விட்டது. செல்லும் இடங்களிலெல்லாம் அவர்கள் இருவரும் சேர்ந்து கொண்டு சந்தோசமாக சுற்றினார்கள். எல்லாவிதமான சூழ்நிலைகளிலும் அவன் நடந்து கொண்ட விதம் என்னை மிகவும் ஆச்சர்யபடுத்தியது. எந்த ஒரு விசயத்துக்கும் பதட்டம் கொள்ளாமல் அவன் கையாண்டவிதம் எனக்கு வியப்பை அளித்தது. அவனது நகைச்சுவை உணர்வும், எப்பொழுதும் பேசிக்கொண்டிருக்கும் தன்மையும் அந்த விடுமுறையை மிகவும் கலகலப்பாக்கின. அவனுடன் இருந்த நாட்கள் எனது மகனின் மனதில் நிறைய சந்தோசம் கொண்டு வந்து இருந்தது. அவன் மும்பை நோக்கிய பயணம் தொடங்கிய தினம் அன்று எனது மகன் கேவி கேவி அழுதான். வாழ்க்கையின் பிரிதல் பற்றி மகனுக்கு புரிய வைத்தேன். இருந்தாலும் சில மணித் துளிகள் அழுது கொண்டேதான் இருந்தான். இப்படித்தான் சென்ற வருடமும் இந்தியாவை விட்டு நாங்கள் கிளம்பி வந்தபோது எனது மகன் அழுதான்.

இனி மூணாறு.

கோயமுத்தூரில் இருந்து மாலை நான்கு மணிக்கு கிளம்பி உடுமலைபேட்டை வழியாக பயணம். கோயமுத்தூரில் கிளம்பி கொஞ்ச தூரம் வந்தபின்னர், நாங்கள் மூணாறு செல்வது குறித்து எனது சகோதரன் மகனிடம் சொல்லி ஹோட்டல் மகிந்திராவின் விபரம் அறிய சொன்னேன். முகவரியை, தொலைபேசி இலக்கத்தை குறுஞ்செய்தி அனுப்ப சொல்லி இருந்தேன். அவனும் அனுப்பி இருந்தான். இடம் இருக்கிறது எனவும் சொன்னதாக சொன்னான். பாதை அத்தனை சீராக இல்லை. இருபுறங்களிலும் காடுகள் தென்படுகின்றன. வாகனத்தை ஓட்டிய நண்பர் யானை எல்லாம் வரும், புலி எல்லாம் வரும் என பயமுறுத்துகிறார். யானை தள்ளிவிட்ட வானகங்களை எல்லாம் நினைவுபடுத்துகிறார். பயணம் தொடர்கிறது. வாகனங்கள் மிகவும் குறைவாகவே பாதையில் தென்படுகின்றன. யாரும் அதிகமாக இந்த சாலையை உபயோக படுத்துவதில்லை என்கிறார் நண்பர்.

வாகனம் வேகமாக செல்லும் வாய்ப்பு இல்லை. பாதைகள் வளைவுகளாலும், ஆபத்துகளாலும் சூழப்பட்டு இருக்கிறது. இயற்கையை ரசித்த வண்ணம் பயணம் தொடர்கிறது. சற்று நேரத்திற்கெல்லாம் இரண்டு வாகனங்கள் எதிரில் நின்று கொண்டிருக்கின்றன. வாகனத்தில் கோளாறுதனை சரி செய்து கொண்டிருக்கிறார்கள். எங்களது வாகனத்தின் வேகம் மட்டுபடுகிறது. எங்களை நோக்கி 'அங்கே யானை நிற்கிறது, யானை நிற்கிறது' என்கிறார்கள். என்ன செய்வது என தெரியாமல் விழிக்கிறோம். வாகனத்தில் நான், எனது மனைவி, எனது மகன், வாகனத்தை ஓட்டும் நண்பர். பின்னர் அவர்களாகவே சொல்கிறார்கள். காட்டு அதிகாரிகள் இருக்காங்க, போங்க, பிரச்சினை இல்லை.

வாகனம் மெதுவாகவே செல்கிறது. சற்று தொலைவில் மூன்று சக்கர வாகனத்தில் இருந்து பயணிகள் காட்டு அதிகாரிகளின் வாகனத்துக்கு மாற்றப்படுகிறார்கள். எங்களை நோக்கி வாங்க வாங்க என சைகை செய்கிறார்கள். காட்டு அதிகாரிகளின் வாகனம் முன் செல்ல, மூன்று சக்கர வாகனம் பின் செல்ல கடைசியாக நாங்கள். சிறிது நேரத்திற்கெல்லாம் ஐந்து யானைகள் சாலையின் இடப்புறம் தென்படுகிறது. எனது மனைவி பின் இருக்கையில் இருந்தவாறு அந்த நிகழ்வினை படம்பிடித்து கொண்டிருக்கிறார். காட்டு அதிகாரிகளின் வாகனம் கடந்து செல்கிறது. மூன்று சக்கர வாகனமும் கடந்து செல்கிறது. நானும் யானைகளை கவனிக்கிறேன். சின்ன குட்டி யானைகளுடன் சில யானைகள் உணவு அருந்தி கொண்டிருக்கிறது. திடீரென ஒரு யானை.

நினைக்கும்போதே பயம் மனதில் அப்பி கொள்கிறது. எங்களை நோக்கி பாய்ந்து வந்தது. அதனுடைய சீறலை படம் பிடித்து வைத்திருந்தோம். வாகனத்தை வேகமாக செலுத்த இயலாதவண்ணம் முன்னால் மூன்று சக்கர வாகனம். அந்த யானை தொடர்ந்து வருகிறதா என்பதை கூட பார்க்க முடியாத மனநிலை. ஒலிப்பானை அழுத்துகிறார் நண்பர். என்ன செய்ய இயலும். ஆனால் யானை அப்படியே அங்கேயே நின்றுவிட்டது போல. சிறிது தூரம் சென்ற பின்னர் காட்டு அதிகாரிகள் இறங்கி வருகிறார்கள். எங்களை நோக்கி சத்தம் போடுகிறார்கள். எதற்கு ஒலிப்பானை அழுத்துகிறீர்கள் என. நிலைமையை சொன்னோம். இனிமேல் அப்படி செய்யாதீர்கள் என எச்சரித்து அனுப்பினார்கள். அதற்கு பின்னர் யானை பற்றிய பயம் அதிகமாகவே இருந்தது. இருட்ட தொடங்கியது. மழையும் பெய்ய தொடங்கியது. ஒவ்வொரு முறையும் யானை வந்துவிடுமோ என யானையை பற்றி பேசி யானை பயம் போக்கி கொண்டு இருந்தோம். மூணாறு அடைந்தோம். இனி எந்த ஹோட்டலை எப்படி தேட! மூணாறில் எந்த ஹோட்டலும் சரியாக தென்படவில்லை. ஹோட்டல் மஹிந்திரா செல்லலாம் என முடிவு எடுத்தோம். மூணாறில் இருந்து இருபத்தி மூன்று கிலோமீட்டர்கள். இரவு எட்டு மணி ஆகி இருந்தது. ஹோட்டலுக்கு அழைத்தால் எவரும் எடுக்கவில்லை. என்ன செய்வது என தெரியாமல் பாதை மாறி சிறிது தூரம் கொச்சின் செல்லும் பாதையில் சென்றோம். மனதிற்கு தவறு என தோன்றியதும் நண்பரிடம் சொல்லி விசாரித்து மதுரை செல்லும் பாதையில் விரைந்தோம்.

சரியான இருட்டு. மலைபாதை. நண்பர் மிகவும் தைரியமாகவே வாகனம் ஓட்டினார். அதெல்லாம் போயிரலாம் என நம்பிக்கையுடன் சொல்கிறார். அவர் இதற்கு முன்னர் இங்கு வந்ததில்லை. எவரிடமும் கேட்க வழியும் இல்லை. தொடர்பு எல்லாம் துண்டிக்கப்பட்டு இருக்கிறது. சென்று கொண்டிருக்கும்போதே பாதையை விட்டு தனியாக வேறொரு பாதை சூரியகனல் (நினைக்கிறேன்) வழி என பாதை தென்படுகிறது. குறுஞ்செய்தியில் வந்த முகவரி மனதில் ஆடுகிறது. இதோ இதுதான் வழி என செல்கிறோம். சில நிமிடத்தில் மஹிந்திரா தென்படுகிறது. மிக்க நன்றி சீனி. திட்டமிடாத பயணம் படு சுவாரஸ்யமாகவே இருக்கிறது. நிறையவே தைரியம் உங்களுக்கு என வாகனம் ஓட்டிய நண்பரிடம் சொன்னேன். சிரித்து கொண்டார்.

அன்று ஒரு தினம் மட்டுமே அங்கு தங்கிவிட்டு மறுநாள் மூணாறில் சில இடங்களை சுற்றி பார்த்தோம். அருப்புகோட்டை செல்லலாம் என கிளம்பினோம். வழியில் கொச்சின் 143 என ஒரு அறிவிப்பு கல் தென்பட்டது. வாகனம் கொச்சின் சென்றதா? அருப்புகோட்டை சென்றதா?

(தொடரும்)

Saturday 16 October 2010

சிந்து சமவெளி - திரைப்படம்

ஒழுக்கத்துடன் வாழ்வதுதான் சிறந்த நாகரிகம். ஆஹா, எத்தனை அட்டகாசமான வாக்கியம்.

எது எது எல்லாம் ஒழுக்கம்? இந்த ஒழுக்கம் என்பதற்கான வரையறை எது? எவரேனும் தெரிந்தால் பட்டியல் இடுங்கள். அந்த பட்டியலை படித்து தெரிந்து கொள்ள ஆசையாக இருக்கிறது.

அது இருக்கட்டும், இந்த படத்துக்கு வருவோம்.  ஒழுக்கத்தை வலியுறுத்துவதற்கு ஒழுங்கீனத்தை அல்லவா காட்ட வேண்டி இருக்கிறது!

ஒழுக்கத்தை பற்றி சொல்ல ஒழுக்கத்தின் வலிமையை அல்லவா படமாக்கி இருக்க வேண்டும். ஒழுக்கம் தவறி போன விசயம் சொன்ன சிந்து சமவெளி! இந்த படத்தை எழுதுவதன் மூலம் ஒழுக்கம் தவறி போன எனது எழுத்து.

இந்த திரைப்படம் சகித்து கொள்ள முடியாத மன வலிதனை தந்து சென்றது. இது ஒரு ரஷ்ய நாவலின் அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டதாகவும் நூறு சதவிகிதம் கற்பனை அல்ல என சொல்லும்போதே உலகில் இத்தகைய கொடுமைகள் பரவலாக நடந்து கொண்டிருப்பதை நமக்கு காட்டுவதற்குதான் என புரிந்து கொள்ள முடிகிறது. மருமகள்-மாமன் உறவு கொச்சைபடுத்தபட்டு இருக்கிறது என்பதை விட உடல் இச்சைக்கு அடிமையாகி போன இரண்டு மனிதர்களின் அலங்கோல வாழ்வு தெளிவுபடுத்தப்பட்டு இருக்கிறது. காமம் மட்டுமா ஒழுக்கம், ஒழுங்கீனத்தை சுட்டி காட்டும்  கருவி?

ஊர் உலகில் அரசால் புரசலாக நடக்கும் விசயங்களை அப்பட்டமாக படத்தில் காட்டும்போது இயக்குநர்களின் தைரியம் வெகுவாக பாராட்டபடுகிறது. உதாரணமாக பருத்தி வீரன் படத்தை சொல்லலாம். ஒரு கிராமத்தை அப்படியே கொண்டு வந்ததாக சொல்லி கொண்டார்கள். அதுவும் ஒழுக்கம் கெட்ட விசயத்தை சொன்ன ஒரு படம் தான்.

இப்பொழுது ஊர் உலகில் நடக்கிறது என்பதற்காக முழு நிர்வாண படங்களை எடுத்தால் எதற்கு அதற்கு தடை விதிக்க வேண்டும்? அது ஒழுங்கீனங்களை தானே சுட்டி காட்டுகிறது! என்ன வரையறை வைத்து கொண்டு எப்படி வாழ்க்கை அமைகிறது? விசித்திர எண்ணம். வக்கிர எண்ணம். வித்தியாச உலகம்.

இது மட்டுமல்ல. இலக்கியங்கள், காவியங்கள் எல்லாம் ஒழுக்கம் கெட்ட விசயங்களின் அடிப்படையில் தான் பிரபலமாகி இருக்கிறது. காலம் காலமாக நாம் செய்து கொண்டு வரும் தவறு இதுதான். தவறு செய்யாத மனிதனே இருக்க முடியாது என்கிற கோட்பாடுதனை வைத்து கொண்டு தவறு செய்யும்போதெல்லாம், தவறி போகும் போதெல்லாம் நான் மட்டுமா செய்கிறேன், இந்த உலகில் எத்தனை பேர் இப்படி இருக்கிறார்கள் தெரியுமா என சப்பை கட்டு கட்டும் மனிதர்கள் மிகவும் அதிகமாகவே இருக்கிறார்கள், தென்படுகிறார்கள்.

படம் தொடங்குகிறது. சிறிது நேரத்திற்கெல்லாம் கதையை யூகித்து கொள்ள முடிகிறது. எப்படி யூகம் செய்ய முடிந்தது. இதைத்தான் பல படங்களில் சின்ன சின்ன காட்சிகளாக வைப்பார்கள். ஆனால் இதுவே முழு படமாகி வந்து இருக்கிறது.

தங்கள் பாதையில், கொள்கையில் இருந்து தவறி போனபின்னர், தவறியே வாழ்பவர்கள்  அவ்வாறு வாழும் போது குற்ற உணர்வுடன் வாழ்ந்து இருந்தால் மட்டுமே அதை தவறு என உணர்வார்கள். இல்லையெனில் மீண்டும் மீண்டும் தவறு புரிந்து கொண்டேதான் இருப்பார்கள். தவறுகளுக்கு இடையில் சிறிய இடைவெளிகள் இருக்கலாம். இதனால்தான் தவறு செய்பவர்களை மொத்தமாக அழித்துவிட வேண்டும், அல்லது அவர்களாகவே அழித்து கொள்ள வேண்டும். இதில் கருணை, தாட்சண்யம் எல்லாம் பார்த்து கொண்டிருக்க கூடாது. தப்பு  என தெரிந்து செய்பவர்கள்தான் இவ்வுலகில் அதிகம் இருக்கிறார்கள்.

இந்த இரண்டு விசயத்தை படத்தில் வைத்து இருக்கிறார்கள். கதையில் வரும் மருமகள் பாத்திரம் குற்ற உணர்வுடன் இருந்தாரா என கண்டு கொள்ள இயலவில்லை. அந்த மருமகள் பாத்திரம் ஒரு கதையினை படித்த போது தனது தவறு என எப்படி தெளிந்து கொள்ள முடிகிறது என்பதுதான் பல மனிதர்கள் செய்யும் சராசரி தவறு. பிறர் சுட்டிக்காட்டும்போது தவறாக தெரியாத விசயம் தவறு என தெரிகிறதா? அல்லது இப்படி வாழ்ந்துவிட்டோமே என வேதனை உயிரை பிடுங்கி எரிகிறதா? பலருடைய வாழ்க்கையில் எதுவுமே நடக்காத மாதிரிதான் செல்கிறது.

தொடரும் பரிதாபங்கள். தொடரும் கொலைகள். படித்தவர், படிக்காதவர், அறிவில் சிறந்தவர் என அனைவரும் தடுமாறும் இந்த காமம் அத்தனை கொடுமையானதா! ஆமாம் என்றுதான் இலக்கியங்கள், பலரது வாழ்க்கை, பலரது படைப்புகள் சொல்லி செல்கின்றன.

ஒழுக்க கேடான விசயங்களில் இருந்து தப்பித்து வாழ தெரிந்தால் நாகரிகம் மிகவும் சிறப்பு உடையதாக இருக்கும் என்பதில் இருவேறு கருத்துகள் இல்லை.

எது எதுவெல்லாம் ஒழுக்கம்? பட்டியலை படிக்க ஆசையாகத்தான் இருக்கிறது.

நன்றி சாமி.

Friday 15 October 2010

கவிதா அவர்களின் பெண்ணிய ஆணாதிக்க சிந்தனை

அழகிய கட்டுரையை எழுதியமைக்கு பாராட்டுகளுடன்.

முழு விசயத்தையும் எழுதி மறுமொழி அனுப்பினேன். மிகவும் பெரிதான மறுமொழி என கூகிள் மறுத்துவிட்டது. எனவே அதை இங்கே வெளியிடுகிறேன்.

கவிதா அவர்களின் கட்டுரையில் (முழு கட்டுரை படிக்க) நான் நினைக்கும் முரண்பாடுகள்.

௧. //அவளே முதல். அவளே முடிவும்.//

இந்த வார்த்தைகள் மூலம் கட்டுரையின் மொத்த சாரமும் தொலைந்து விடுவதாக கருதுகிறேன். 

௨. //ஒரு பெண் நினைத்தால் நல்லவனை கெட்டவன் ஆக்கலாம், கெட்டவனை நல்லவனாக ஆக்க முடியும். அது தான் பெண்ணிற்குண்டான தனித்தன்மை//

இதுவும் கூட ஒரு விதத்தில் மிகவும் பொய்யான பிரச்சாரம். ஒரு ஆண்  கூட இதை எளிதாக செய்துவிட முடியும். எத்தனை மனைவிமார்கள் கணவனை புரிந்து கொண்டு வாழ்க்கையை திருத்தி அமைத்து இருக்கிறார்கள் என்பதை ஒரு படம் எடுத்துதான் சொல்ல வேண்டும். 

௩ //பெண் என்பவள் எப்படி ஆணால் ஆதிக்கம் செய்ய படுகிறாளோ அதே போன்று, ஆணும் பெண்ணால் ஆதிக்கம் செய்ய படுகிறான் என்பதில் எந்த வித மாற்று கருத்தும் இல்லை//

ஆதிக்கம் என்பதற்கும், அன்பின் வெளிப்பாடு என்பதற்கும் நிறையவே வித்தியாசம் உண்டு. பொதுவாக ஒரு விசயத்தை சொல்லும்போது இது போன்ற 'இதுதான் முடிவு' என்பது போன்ற வாசகங்கள் பெரும் சறுக்கலை ஏற்படுத்தி விடுகின்றன. பல வேளைகளில் வாழ்வில் அன்பின் வெளிப்பாடு என்றுதான் பொருள் கொள்ள வேண்டும். எங்கிருந்து ஆதிக்கம் வந்தது? புரிதலை தொலைத்து நிற்கும் கூட்டங்கள் நாம்.

௪ //ஒரு பெண் தான் இன்னொரு பெண்ணுக்கு எதிரி.//

இதுவும் ஒரு போலியான பார்வைதான். உலகில் இந்த விசயம் பரவலாகவே பேசப்படுகிறது. ஒரு பெண் மட்டுமல்ல, ஆணும சரி. அவரவர் அவரவருக்கு எதிரி. இதில் எந்த பாகுபாடும் இல்லை. 

௫. //பெண்ணிற்கு தேவையானவற்றை அறிந்து செய்பவன், அல்லது செய்ய விடுபவன் ஆணாக இருக்கிறான்.//

இங்கே பெண்ணுக்கு எனப்படும் சுதந்திரமும், ஆணுக்கு எனப்படும் சுதந்திரமும் தொலைந்து விடுகிறது. ஒரு ஆண் என்பவன் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் காரணிகள் வாழும் சூழல் பழக்க வழக்கங்கள் எனும்போது சில முரண்பாடுகள் எழும். 

௬. //குறிப்பாக மனைவியை பற்றி பேச விரும்புவதில்லை. முடிந்த அளவு தானே சமாளிக்கிறார்கள்.//

இதுவும் ஒரு பொது காரணி தான். எனக்கு தெரிந்த பலர் அவரவர் மனைவியை பற்றி சொல்வது உண்டு. உங்கள் விசயம், பார்த்து கொள்ளுங்கள் என்பதுதான் எனது பதில். 


ஒரு கணவன் மனைவி என்பவர்கள் அவர்களுக்குள் இருக்கும் பிணக்குகளை அவர்களே தீர்த்து கொள்ளும் வலிமை பெற்று இருக்க வேண்டும். இதை யார் வலியுறுத்துவது? தேவையில்லாத பிரச்சினைகளுக்கு வெளி காரணிகள் அதிகம். 

கவிதா,

//ஒவ்வொரு ஆணையும் தனியாக விசாரித்து... எனும் வரியில் இருந்து

பரிதாப நிலையில் கூட இருக்கிறார்கள். முடிக்கும் வரை//

இதற்கு என்ன காரணம் என தெரிந்து கொள்ள முயற்சி செய்து இருக்கீர்களா? 


இதற்கு ஒரு காரணம் நம்பகத்தன்மை. மறைத்து செயலாற்றுவது. உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுவது. இந்த ஆண்கள் படும் பாட்டிற்கு பெண்கள் காரணம் அல்ல, ஆண்களே காரணம். வெளிப்படையாக வாழும் எந்த ஆணும் சரி, பெண்ணும் சரி பிரச்சினைக்கு உட்படமாட்டார்கள் எனக் கொள்ளலாம். வேசம் கட்டும்போதுதான் வாழ்க்கை நாசமாகிறது. 

௬. //பெண்ணின் புலம்பல்கள் பெண்ணியமாகிறது, ஆணின் அமைதி ஆணாதிக்கமாகிறது என்று தான் என் புரிதலாக இருக்கிறது.//

இது சரியில்லாத புரிதல் என்றே கருதுகிறேன். நான் பெண்ணியம் பற்றியோ, ஆணாதிக்கம் பற்றியோ எழுதாதற்கு காரணம் ஒன்று தான். உயிரினங்கள் தன்னை நிலை நிறுத்தி கொள்ள எது வேண்டுமெனினும் செய்து தொலைக்கும். இதில் பாகுபாடு பார்ப்பது எவ்வாறு. 


சற்று சிந்தித்து பாருங்கள். 


பெண் எல்லா நேரத்திலுமா புலம்பி கொண்டே இருக்கிறார்.


ஆண் எல்லா நேரத்திலுமா அமைதியாக இருக்கிறார்.

௭. //பெண்ணால் சட்டென்று முடியாத பல விஷயங்கள் ஆணால் முடியும்.//

நீச்சல் குளம் விசயம் எனக்கு மிகவும் புதிராக இருந்தது. முதலில் உயிரை காப்பாற்ற குதித்தது ஒரு பெண் தானே! 


பெண்ணாலும் முடியும் என்பது தொலைந்து போன நம்பிக்கையா? 


இதை இதை பெண்கள் செய்தல் கூடாது என வரையறை வைத்து கொள்ள சொன்னது யார்? 


எனக்கு தெரிந்த பெண்கள் பலர் சாமர்த்தியசாலிகள், தைரியசாலிகள். 

--------------------------------

நான் பல விசயங்களை இந்த கட்டுரையில் ரசித்தேன். குறிப்பாக 

//ஆண்களின் ஆதிக்கம் பூதக்கண்ணாடி கொண்டு பார்க்கப்படுகிறது. பெண்களின் ஆதிக்கம் அவர்களின் இயல்பு//

//பெண்ணியம் பேசியும் ஆணாதிக்கவாதி என பறைசாற்றிக்கொண்டும் அவரவர் வாழ்க்கையை கெடுத்துக்கொள்ளாமல், இருவரும் அவரவர் வேலையை ஆண் பெண் ஈகோ இல்லாமல் செய்து வந்தாலே பிரச்சனை வராது//

இருவரும் என்பதில் அனைவரும் என்று சொல்லி இருக்கலாம் தான். :) 


 நன்றி கவிதா.

கடைசியாக 


முரண்பட வேண்டும் என எண்ணினால் மட்டுமே எந்த ஒரு விசயத்திலும் முரண்பட்டு கொள்ள முடியும். ஏற்று கொள்ளும் பக்குவம் வரும்போது, எதுவுமே செய்ய இயலாது என்கிற பொது எல்லாமே சரி என்றுதான் போக தோன்றும். வாழ்வில் நாம் இரு நிலைகளிலும் வாழ்ந்து விடுகிறோம் என்பதுதான் கொடுமை.